• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

நிழலை கடந்த காதல் -22

STN - 24

Member
"என்னடி, ஓவரா சத்தம் போடுற? என்னன்னு கேட்கிறேன்"

" அம்மா.. உன் பையன் அண்ணே அவரைப் பார்த்து என்ன பேசுற?"


" போதும், நிறுத்து. இப்படிப்பட்ட ஒரு சூழ்நிலையில் நீ இருந்தா, உன்கிட்ட ஒரு பையன் வந்து கல்யாணம் பண்ணிக்கிறேன்ன்னு நின்னா, நீ உடனே சரின்னு சொல்லிடுவியா? இல்ல உன் அண்ணன் தான் வேடிக்கை பார்ப்பனா?

அந்த வீட்டுல கேட்க ஆள் இல்லைன்னு நினைச்சுட்டீங்களோ?"

"அம்மா, அது அண்ணன் விருப்பப்பட்டதால..."

"உன் அண்ணன் விருப்பப்பட்டான்னு உனக்கு தான் தெரியும். இதுக்கு முன்னாடி அந்தப் பொண்ணுகிட்ட உன் அண்ணன் போய் தன்னோட விருப்பத்தைச் சொன்னானா?"

"இல்ல..."

"இல்லதானே? முதல்ல மனிதாபிமானத்துல, அக்கறையில உதவி செஞ்சான். அதை நான் தப்புன்னு சொல்ல மாட்டேன். ஆனா அதோட நிறுத்திக்கணும்.

"அப்போ என் அண்ணன் விருப்பப்பட்ட பொண்ணைக் கல்யாணம் பண்ணிக்கக் கூடாதுன்னு நினைக்கிறியா? இல்ல அவர் கல்யாணமே பண்ணாம இருக்கணும்னு நினைக்கிறியா?"

"வினி, ஃபர்ஸ்ட் நான் சொல்றத புரிஞ்சுக்கோ. ஒரு பொண்ணா இருந்து யோசி, சரியா? உன் அண்ணன் கல்யாணம் பண்றதுல எனக்கு எந்தப் பிரச்சனையும் கிடையாது. அவன் என் புள்ளடி. அவன் ஏன் கல்யாணமே பண்ணாம இருக்கணும்னு நான் நினைக்கப் போறேன்?

ஆனா நான் சொல்றது அது கிடையாது. ஒரு பொண்ணு... அந்தப் பொண்ணோட இடத்துல இருந்து ஏன் யோசிக்கவே மாட்றீங்க? நீயாகட்டும், உன் அண்ணனாகட்டும்..."என்றவர் பேசுவதை நிறுத்தினார்.

அவனும் சில நொடிகள் அமைதியாக இருந்தவன், வேகமாக எழுந்து நின்று தாயைப் பார்த்தான். ஆனால் வேறு எதுவும் பேச முடியாமல் மேலே சென்று விட்டான்.

"அம்மா, இப்போ நீ விட்டனா இன்னும் அவங்க கல்யாணமே பண்ணிக்க மாட்டாங்கம்மா. அவங்களும் இவ்வளவு தூரம் வேணாம்னு நினைக்கிறதுக்கு முழுக்க காரணம் அந்தப் பையன்தான். அந்தப் பையனுக்காகவே வாழ்றேன்னு சொல்றவங்க, கடைசி வரைக்கும் யாரையும் கல்யாணம் பண்ணிக்காம இருந்தா என்ன பண்ணுறது?

சப்போஸ், அவங்க வீட்டுல வேற மாப்பிள்ளை பார்த்தா, ஒரு வேலை அந்தப் பையனை ஏத்துக்கலைன்னா என்ன பண்ணுவாங்க?

சரி,அந்தப் பையனையும் ஏத்துக்கட்டும். ஏன்? அவங்களும் சந்தோஷமா வாழட்டும். ஆனா என் அண்ணன் விருப்பப்பட்டு வாழ முடியுமா? ஏம்மா, அதை ஏன் யோசிக்க மாட்டேங்குற?"

"சரி, விடு. அவங்க இல்லாம வேற ஒரு பொண்ணைப் பார்த்து நீ அண்ணனுக்குக் கல்யாணம் பண்ணி வச்சிர முடியுமா? இல்ல அண்ணா உனக்காக கல்யாணம் பண்ணிட்டு நிம்மதியா, சந்தோஷமா வாழ்ந்துடுவானா? அதையும் யோசிம்மா..." என்றவள் தலையைப் பிடித்துக் கொண்டு அமர்ந்து விட்டாள்.

"உனக்கு நான் சொல்றது புரிய மாட்டேங்குது..."என்று பானுமதி அமைதியாக இருக்க, அப்போது ரேகாவிடமிருந்து போன் வந்தது.

போனைப் பார்த்தவர்,"உன் அக்காதான்..." என்றபடி அழைப்பை ஏற்றார்.

"மா..."

"சொல்லுடி..."

"அண்ணா பேசுனாராம்மா..."
என்றாள் சிறு பதற்றத்துடன்.

"அப்போ உன் புருஷன் அமைதியா வேலை பார்த்துட்டு வந்தானாடி? என்ன நினைச்சிட்டு இருக்காங்க ரெண்டு பேரும்? ஒரு பொண்ணைப் பற்றி யோசிக்கவே மாட்டாங்களா?"

சில நொடிகள் அமைதிக்குப் பிறகு,"நானும் அதைத்தான் பேசுறேன். அந்தப் பொண்ணோட இடத்துல இருந்து யோசிக்கவே இல்லதானே? "

"நான் அந்தப் பொண்ணோட வீட்டுக்குப் போய்ப் பேசிட்டு வரலாம்னு இருக்கேன்டி."

"நானும் உங்க கூட வரேன்."

"வேணாம். நீ பாப்பாவைத் தூக்கிட்டு இந்த நேரத்துல அலைய வேண்டாம். நான் போயிட்டு பேசிட்டு வரேன். அந்த பொண்ணோட பெத்தவங்களையும் பார்த்துப் பேசணும். முக்கியமா அந்தப் பொண்ணைப் பார்த்துப் பேசணும். பேசிட்டு வந்து என்னன்னு சொல்றேன்.

உன் புருஷன் என்ன சொல்றான்?"

"உங்க மருமகனுக்கு என்ன?, அத்தைக்கிட்டயும் மாமாக்கிட்டயும் சொல்லிட்டு இருக்காரு. அவங்க இதான் சாக்குன்னு உடனே உனக்குக் கல்யாணம் பண்ணி வச்சிரலாம்னு சொல்லிட்டு இருக்காங்க."

"அவங்க மருமகனுக்கு தானே ஒத்து ஊதுவாங்க.இங்க உன் தங்கச்சியும் தாம் தூம்னு குதிச்சிட்டு இருக்கா."

சில நொடிகள் அமைதிக்குப் பிறகு,"சரி மா, நீங்க போயிட்டு பேசிட்டு வாங்க..."என்று கூறி போனை வைத்துவிட்டாள்.

வினி பானுமதியைப் பார்க்க, அவரும் அவளையே பார்த்தார்.

"என்னடி, அந்தப் பொண்ணு இப்போதைக்கு பெத்தவங்களுக்காக சம்மதம் சொல்லி இந்த வீட்டுக்கு கல்யாணம் பண்ணி வந்துட்டாலும், இந்த வீட்டுல நிம்மதியா இருக்க முடியுமாடி?"
என்றார்.

அதற்கு வினி எதுவும் பேசவில்லை. அமைதியாகவே அமர்ந்திருந்தாள்.

"நான் போயிட்டு அந்தப் பொண்ணைப் பார்த்து பேசிட்டு வரேன். நாளைக்கு, சரியா?"
என்றவர் எழுந்தார். ஏற்கனவே இருட்டிவிட்டதால் அதற்கு மேல் எதுவும் பேசாமல் அனைவரும் அமைதியாகிவிட்டனர்.

இரவு உணவை ஏதோ கடமைக்காகத்தான் அனைவரும் உண்டனர். வினிதாவுக்குத்தான் மேலும் வருத்தமாக இருந்தது. தன் மாமாவிற்கு ஃபோன் செய்து பேசினாள்.

"அத்தை போயிட்டு பேசிட்டு வரட்டும்...வினி" என்று அவனும் சமாதானப்படுத்தினான்.

மறுநாள் காலையில் பானுமதி சசிக்கு ஃபோன் செய்து, தன்னை அழைத்துக் கொண்டு போகுமாறு கூறினார்.

"நீங்க தனியாவே போக வேண்டியதுதானே?" என்று சசி அழைத்துச் செல்லும் போது கேட்டான்.

"நேத்து அவன் பேசும்போது மட்டும் கூட இருந்த, இன்னைக்கு மட்டும் வரதுக்கு என்னடா வலிக்குது?" என்று சிரித்துக்கொண்டே கூறியவர் அவனையும் அழைத்துக் கொண்டு சென்றார்.


சசியைப் பார்த்ததும் சங்கடத்துடனே வரவேற்றனர் பிரியாவின் பெற்றவர்கள்.

புதிதாக வந்திருப்பவரை யாரென்று இருவரும் பார்க்க, லேசாகச் சிரித்தவன்,

"பரத்தோட அம்மா... என்னோட அத்தை," என்று கூறியபடி பானுமதியின் தோளோடு அணைந்து நின்றான்.

அதைக் கண்டதும் அவர்களுக்கு இன்னும் சங்கடமாகிவிட்டது.

எதுவும் பேச முடியாமல், "உள்ளே வாங்க..." என்று மட்டும் செல்வி அழைத்துச் சென்று தண்ணீர் கொடுத்தார்.

ஹாலில் தருணுடன் அமர்ந்திருந்த பிரியாவிடம்,"பிரியா பரத்தோட அம்மா வந்திருக்காங்க..." என்று கூறினார்.

சமாளித்துக்கொண்டு எழுந்தவள்,
"வாங்க ஆன்ட்டி..." என்றாள்.

அதற்கு மேல் அங்கு நிற்பதற்கே ஒரு மாதிரியாக இருக்க, எதுவும் பேசாமல் தருணுடன் ஏதோ பேசிக்கொண்டே அவனை அழைத்துக் கொண்டு உள்ளே சென்றாள்.

அவள் சென்றவுடன் பானுமதி சசியை திரும்பிப் பார்த்தார்.

அந்தப் பார்வையில் குற்றம் சாட்டுவது போல ஒரு உணர்வு இருந்தது.

இந்தப் பெண்ணை எந்த அளவுக்கு மாற்றி இருக்கிறீர்கள் பாருங்கள்... என்று சொல்வது போல தோன்றியது அந்தப் பார்வை.

தண்ணீரைக் குடித்து முடித்தவர், செல்வியின் கையைப் பற்றிக் கொண்டார்.

"நான் முதல்ல உங்க ரெண்டு பேர்கிட்டயும் மன்னிப்பு கேட்டுக்கிறேன்."

அவரது வார்த்தையிலேயே விநாயகமும் செல்வியும் அதிர்ந்து போனார்கள்.

"என் மகன் பொண்ணு கேட்டதுல எனக்கு எந்தப் பிரச்சினையும் கிடையாது. அதுக்காக என் மகனை நான் தப்பு சொல்ல மாட்டேன். ஆனா நேத்து இருந்த சூழ்நிலையில் பொண்ணு கேட்டது ரொம்பவே தப்புன்னு எனக்குத் தோணுது.

இப்போதான் ஒரு பெரிய பிரச்சினையிலிருந்து உங்க பொண்ணு மீண்டு வெளியே வந்திருக்கா. அதுக்குள்ள என் பையன் இன்னொரு நெருக்கடியைக் கொடுத்திருக்கான்.

நீங்க பெத்தவங்களா கல்யாணம் பேசினதுல எந்தத் தப்பும் கிடையாது. அதுக்கும் முக்கியமான காரணம் இன்னும் அந்தப் பையன் வந்து தொந்தரவு கொடுத்துட்டு இருக்கிறதுதானே?

அதனால உங்க பொண்ணுக்கு சீக்கிரம் கல்யாணம் பண்ணி வச்சு, அவளுக்குனு ஒரு துணை உங்க காலத்துக்கு பின்னாடி இருக்கணும்னு நினைச்சீங்க. பெத்தவங்களா உங்க இடத்துல இருந்து பார்க்கும்போது அதுல எந்தத் தப்பும் இல்லை.

ஆனா என் பையன் சட்டுன்னு நான் கட்டிக்கிறேன்ன்னு கேட்டிருக்கக் கூடாது."என்றவர் சில நொடிகள் அமைதியாக இருந்தார்.

"ஆனா அதுக்கு ஒரு காரணமும் இருக்கு.என் பையனுக்கு உங்க பொண்ணைப் பிடிக்கும் ண்ணா, இந்தப் பிரச்சினையிலிருந்து நீங்க குடும்பத்தோட வெளியே வர உதவி செஞ்சிருக்கலாம்.

ஆனா உங்க பொண்ணைக் கல்யாணம் பண்ணிக்கிறேன்னு சொன்னது உதவியோ, அனுதாபமோ, பச்சாதாபமோ, கருணையோ கிடையாது.

அதே மாதிரி, உங்க பேரனுக்கு ஒரு உலகம் வேணும்ன்றதுக்காகவோ, அவனுக்கு ஒரு அப்பா வேணும்ன்றதுக்காகவோ அவன் கல்யாணம் பண்ணிக்கிறேன்னு சொல்லல.

அதையும் நான் இப்போ உங்களுக்கு தெளிவா சொல்லிடுறேன்.

உங்க பொண்ணு மேல முழுக்க முழுக்க விருப்பப்பட்டுத்தான் என் பையன் கல்யாணம் பண்ணிக்கிறேன்னு வந்து கேட்டிருக்கான்.

நீங்க மனசார உங்க பொண்ணை என் பையனுக்குக் கட்டிக்கொடுக்கலாம்.

ஏன்னா என் பையன் விரும்பித்தான் உங்க பொண்ணைக் கேட்டிருக்கான்."
என்றவர் தருணை நினைத்து மெதுவாகச் சிரித்தார்.

" குட்டிப் பையன் பேர் என்ன?"

"தருண்..." என்றார் செல்வி.

"இப்போ அவன் உங்க பேரனா இருக்கலாம். ஆனா அவன் என்னோட பேரனும் தான்.

என் பையனோட புள்ளதான் அவன்.அதை நான் எந்த இடத்துலயும் மறக்க மாட்டேன்.
உங்க பொண்ணை மருமகளா இல்ல, மகளா வச்சு பார்த்துப்பேன்."என்றவர் ஆழமாக மூச்சை இழுத்துக் கொண்டார்.

"இப்படி எல்லாம் எனக்குப் பேச வரல.உங்க பொண்ணை என் பையனுக்குக் கட்டிக்கொடுத்தா சந்தோஷமா இருப்பான்னு நினைச்சீங்கன்னா கட்டிக்கொடுங்க.

இதுக்கு மேல என்ன பேசறதுன்னு எனக்குத் தெரியல.நான் முக்கியமா பேச வந்தது உங்க பொண்ணுகிட்டதான்.கொஞ்சம் தனியா பேசலாமா?"என்றார்.


கண்களைச் சுருக்கி சசியைத் திரும்பிப் பார்த்தார்.

அவன் புரிந்துகொண்டு பிரியா இருந்த அறைக்குச் சென்று கதவைத் தட்டினான்.

பிரியா கதவைத் திறந்தாள்.

"தம்பியைக் கொடு பிரியா நான் கொஞ்ச நேரம் வச்சிருக்கேன். அத்தை உன் கிட்ட ஏதோ பேசணுமாம்."என்றான்.

சங்கடமாக புன்னகைத்தவள் தருணை அவனிடம் கொடுத்தாள்.

தருணை வாங்கிக்கொண்ட சசி வெளியே வந்தான்.

பானுமதி மெதுவாக அறைக்குள் நுழைந்தார்.

கதவை சற்றே சாத்திவிட்டு, அவளது முகத்தையே சில நொடிகள் உற்றுப் பார்த்தார்.

அந்தப் பார்வையைத் தாங்க முடியாமல் பிரியா தலையைக் குனிந்தாள்.

ஆனால் பானுமதி மட்டும் அமைதியாக அவளைப் பார்த்துக்கொண்டே இருந்தார்.

இவளுமே... பல வருடங்களாக தன் மனதுக்குள்ளேயே எல்லா வலியையும் பூட்டி வைத்து வாழ்ந்து கொண்டிருக்கும் இன்னொரு குழந்தைதான் என்று அவரது மனம் சொல்லிக் கொண்டிருந்தது.


அவரையே பார்த்துக்கொண்டு நின்றிருந்த பிரியாவிடம்,

"உட்காரும்மா..." என்றவர் அவளது கையைப் பிடித்துக் கொண்டார்.

"என் பையன் அப்படியே சட்டுன்னு கேட்டிருக்கக் கூடாதுதான். அது உனக்கு எந்த அளவுக்கு வலியைக் கொடுத்திருக்கும் எனக்குப் புரியுது.

இன்னும் சொல்லப் போனா... ஒரு வகையில் பார்த்தா, அவனுக்கும் விக்ரமுக்கும் வித்தியாசமே இல்லாத மாதிரி தானே?"என்றார்.

அதிர்ச்சியுடன் அவரைப் பார்த்த பிரியா,"என்ன ஆன்ட்டி இப்படி எல்லாம் சொல்றீங்க? அதுவும் விக்ரமோட உங்க பையனை கம்பேர் பண்றீங்க?உங்க பையன் தங்கம் ஆன்ட்டி.

எனக்கு உதவி வேணும்னு கேட்காமலே உதவி பண்ணாரு. என்னோட எல்லா சூழ்நிலையிலும் எனக்கு உறுதுணையா நின்னாரு.

அதுக்காக அவர் பொண்ணு கேட்டதுல எனக்கு கொஞ்சம் சங்கடம் இருக்கு, இல்லன்னு சொல்ல மாட்டேன். ஆனா அதுக்காக அந்த விக்ரமோட அவரை ஒப்பிடாதீங்க."என்றாள்.

அதைக் கேட்ட பானுமதி சிரித்துக்கொண்டார்.

"அப்போ என் பையன் நல்லவன்தான?"என்று கேட்டார்.

அதிர்வாக அவரைப் பார்த்தாள் பிரியா. தன் வாயாலேயே போட்டு வாங்கிக்கொள்கிறாரோ என்றுதான் தோன்றியது.

அவள் அமைதியாக இருக்க, மேலும் அவள் கையில் அழுத்தம் கொடுத்தவர்,"என் பையன் உண்மையாவே நேத்து அப்படி பேசியிருக்கக் கூடாது.

சப்போஸ், நாளைக்கு உங்க அப்பா அம்மாவுக்காக நீ என் பையனுக்குக் கழுத்தை நீட்டி எங்க வீட்டுக்கே வந்தாலும், உன்னால நிம்மதியா ஒரு வாழ்க்கை வாழ முடியுமா?

அந்த வீட்டில ஓடியாடி நடமாட முடியுமா? ஹால்ல உட்கார்ந்து டிவி பார்க்க முடியுமா? தருணை சுதந்திரமா விளையாட விட முடியுமா?

இப்படி நிறைய விஷயங்கள் உள்ளுக்குள்ள உனக்கு அழுத்தமா இருக்கும்.ஒரு பொண்ணோட உணர்வுகளுக்கு மதிப்பு தரணும்.
அதனாலதான் நான் இப்படி பேசுறேன்.

ஆனா என் பையன் உன் மேல விருப்பம் இல்லாம உன்னைக் கேக்கல.என் பையனுக்கு உன்னைப் பிடிக்கும்.என் பையன் உன்னை விரும்புறான்." என்றவர் அவளையே பார்த்தார்.

ஆனால் அவள் முகத்தில் எந்த அதிர்ச்சியும் தெரியவில்லை.
அதைக் கவனித்த பானுமதி குழப்பமாக பார்க்க,

லேசாகச் சிரித்தாள் பிரியா.
"நீங்க சொன்னதுதான் ஆன்ட்டி.
ஒரு பொண்ணுக்கு சுத்தி முதுகுப் பின்னாடி துளைக்கிற பார்வை தெரியாம போயிடாது.

உங்க பையனோட பார்வை எனக்கு சில நாட்களாவே புரிஞ்சிருந்தது.இருந்தாலும் அதைத் தாண்டி உங்க பையன் எனக்கு எந்தத் தொந்தரவும் பண்ணலை.

ஆனா இப்படி வந்து கேட்பார்னு நான் யோசிக்கல.அதே சமயம், உங்க பையன் என்னை விரும்பினதாலதான் எனக்கு உதவி பண்ணார்னு நான் நினைக்கலை.

அவர் உதவி பண்ணது ஒரு நல்ல மனிதனோட மனசுல இருந்து வந்தது."என்றவள்,

"ஆனா இப்போ பொண்ணு கேட்டது..." என்று நிறுத்தினாள்.

"அதுதான்மா நானும் சொல்றேன்.

நீ நீயா இருக்கணும்.இன்னொரு விஷயம்...தருணுக்காக என் பையன் வந்து உன்னைப் பொண்ணு கேட்கல.அதை நான் உறுதியா சொல்லுவேன்.

ஒருவேளை எல்லாத்தையும் தாண்டி அவன் உனக்கு கடைசி வரைக்கும் துணையா இருக்கலாம் என்று நினைச்சிருக்கலாம்.

நீயும் கல்யாணம் வேணாம்னு இருக்கலாம்.ஆனா ரெண்டு பேருமே இப்படி கடைசி வரை இருந்திட முடியாது இல்ல?

அதுக்காக என் பையன் பண்ணதெல்லாம் சரின்னு சொல்லல.ஆனா என் பையனோட விருப்பம் உண்மை.

உன்னைக் கல்யாணம் பண்ணிக்கணும்னு நினைச்சது உண்மை.சூழ்நிலை காரணமா அவன் சொல்லியிருக்கலாம்.

அதே சமயம் உன்னையும் சரி, தருணையும் சரி நல்லா பார்த்துப்பான் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கு.

அந்த நம்பிக்கை உனக்கும் இருந்தா என் பையனுக்குக் கழுத்தை நீட்டு.இல்லனா வேணாம்."என்றவர் ஆழமாக மூச்சை விட்டார்.

"என் பையனைப் பற்றி உனக்கு நான் சொல்ல வேண்டியதில்லை.
இந்த இடைப்பட்ட காலத்துல நீ அவனைப் பார்த்திருக்க. அவன் கூட சேர்ந்து பயணம் பண்ணியிருக்க. அவனை ஓரளவுக்குப் புரிஞ்சிருக்க முடியும்.
கல்யாண வாழ்க்கைக்கு ரொம்ப முக்கியமானது நம்பிக்கையும் புரிதலும்.

காதல் கூட அதுக்குப் பிறகு வர விஷயம் தான். அந்தக் காதல் உங்க வாழ்க்கையில பொறுமையா வரட்டும்.

இப்போதே வரணும்னு நான் கேட்கல.அதே சமயம் வந்தே ஆகணும்னும் இல்லை.

நானும் என் பையனும் உன்னைக் கட்டாயப்படுத்தப் போறது கிடையாது.

ஆனா முழுக்க முழுக்க உனக்கும் தருணுக்கும் என் பையன் கடைசி வரை துணையா இருப்பான்."
சில நொடிகள் அமைதியாக இருந்தவர் மீண்டும் தொடர்ந்தார்.

"இது பாதுகாப்பைப் பற்றிச் சொல்லுறது கிடையாது.
உங்க அப்பா அம்மாவோட பயம் வேற.அவங்க காலத்துக்கு அப்புறம் என்ன ஆகுமோன்னு பயப்படுறாங்க.

உடம்பு சரியில்லாம நடுராத்திரில ஹாஸ்பிடல் போகணும்னா, பச்சைப் பிள்ளை தருணையும் கூட்டிக்கிட்டு நீ எப்படி போவ?

அந்த இடத்துல உனக்கே உனக்காக நீ உடைஞ்சு போகும்போது தோள் கொடுக்க ஒரு ஜீவன் வேணும்.

உன்னை ஹாஸ்பிடல் கூட்டிட்டு போறதுக்காகன்னு நான் சொல்லல பிரியா.

நீ உடைஞ்சு உட்காரும்போது உனக்கு தோள் கொடுக்க ஒரு ஜீவன் வேணும்.

அது உன்னோட துணையால மட்டும் தான் முடியும். மத்த எல்லாரும் உனக்கு ஆறுதல் சொல்லிட முடியும்.

ஆனா உனக்கே உனக்காக எப்பவுமே தோள் கொடுத்து நிற்பது, கணவனுக்கு மனைவியோ, மனைவிக்கு கணவனோ ஆன ஒரு துணையால மட்டும்தான் முடியும்." என்றவர் மெதுவாக அவளது தலையை வருடினார்.

"இதுக்கு மேல நான் சொல்றதுக்கு எதுவும் இல்லம்மா.நீ யோசிச்சு முடிவு பண்ணு.அவசரப்படாத.
பொறுமையாவே, நிதானமா, எல்லாத்தையும் யோசிச்சு முடிவெடு."என்றுவிட்டு மெதுவாக எழுந்து நின்றார்.

பிரியாவை ஒரு முறை ஆழமாகப் பார்த்தவர், அவளது கன்னத்தை மெதுவாகத் தட்டி,"சந்தோஷமா இருக்கணும்..." என்று கூறிவிட்டு அறையை விட்டு வெளியே கிளம்பினார்.

அவரது வார்த்தைகள் மட்டும் இன்னும் பிரியாவின் மனதில் எதிரொலித்துக் கொண்டே இருந்தன.
 
Top Bottom