• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

நிழலை கடந்த காதல் -26

STN - 24

Member
பிரியா இப்பொழுதெல்லாம் தினமும் அவனுக்குத் தேவையானவற்றை இவளே செய்ய ஆரம்பித்து விட்டாள். அவன் வேலைக்குச் செல்வதற்கு முன்பு, அவனது துணிகளை அயன் செய்து வைப்பது முதல் அனைத்தையும் இவளே செய்து வைத்தாள். ஒரு புருவத்தை உயர்த்தி அவளைப் பார்த்துவிட்டு அவன் கடந்து சென்று விடுவான்.

அவளிடம் மாற்றம் உண்டாகி இருப்பதை பரத் உணராமல் இல்லை. ஆனால் அமைதியாகக் கடந்து சென்றான். "எவ்வளவு தூரம் செல்கிறாள் என்று பார்ப்போம்" என்ற எண்ணம் அவனுக்கு இருந்தது.

இதற்கு முன்பு, அதிகபட்சமாக அவனுக்குச் சாப்பாடு பரிமாறி இருப்பாளா என்று கேட்டால், ஞாபகத்தில் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். பானுமதி, வினிக்கு பரிமாறி விடுவாள். ஆனால் இப்பொழுதெல்லாம் தானே முன்னின்று அவனுக்குப் பரிமாறுகிறாள். அவனுடன் பேச்சுக் கொடுத்துக் கொண்டே அவனுடன் சேர்ந்து சாப்பிடுகிறாள்.

அவன் வேலை முடித்து வீட்டிற்கு வந்தவுடன், "அப்பாவிடம் கொண்டு போய் டீ கொடு" என்று சொல்லி டீ கொடுத்து அனுப்புகிறாள். அவன் குளித்து முகம் கழுவிக் கொண்டு வரும்போது துண்டு எடுத்துக் கொடுப்பது, அவனது உடைகளை நேர்த்தியாக அடுக்கி வைப்பது என்று ஒவ்வொன்றாக அவனுக்குத் தேவையான அனைத்தையும் இவளே பார்த்துக் கொள்கிறாள்.

இதற்கு முன்பும் வீட்டில் உள்ள அனைவரையும் கவனித்துக் கொள்வாள். தன் வீடு போலவே பாவித்தாள். வீட்டில் உள்ளவர்களுக்கு என்ன தேவையோ அதைச் செய்து கொடுப்பாள். வீட்டு வேலைகளையும் இழுத்துப் போட்டு செய்வாள். வினியுடனும் பானுமதியுடனும் நன்றாக ஒட்டிப் பழகுவாள்.

ஆனால் அறைக்குள் நுழைந்த பிறகு, அவனிடம் மட்டும் ஏதோ ஒரு ஒட்டாத தன்மையுடன் வலம் வந்து கொண்டிருந்தாள். சுமுகமான பேச்சுவார்த்தைகள் மட்டுமே இருக்கும். தோழமையாகத்தான் பேசுவாள். ஆனால் இப்பொழுது அதைத் தாண்டிய உணர்வு அவளை ஆட்டிப்படைத்தது என்பதுதான் உண்மை.

ஆகையால், அவனது சிறு சிறு விஷயங்களையும் கவனித்து, அவனுக்காகவே செய்ய ஆரம்பித்திருந்தாள். அதை பரத் கண்டாலும், கண்டும் காணாதது போலக் கடந்து சென்று விடுவான்.

நாட்கள் நகர்ந்தன.

அன்று வேலை முடிந்து வீட்டிற்கு வந்தவுடன், பிரியாவிடம், "நாம கொஞ்சம் வெளியே போயிட்டு வரலாமா?" என்று முதல்முறையாகக் கேட்டான்.

அவளுக்கு ஒன்றுமே புரியவில்லை.

குழந்தையுடன் சென்று இருக்கிறார்கள்.ஆனால் தனியாகச் சென்றதில்லை.

"நம்ம வர முன்ன பின்ன ஆகலாம். அதனால தம்பி வீட்டுல இருக்கட்டும்" என்றான்.

அதில்தான் அவளுக்கு ஆச்சரியம். மற்றபடி அவன் வெளியே அழைத்ததில் அவளுக்கு அதிர்ச்சி இல்லை. இதற்கு முன்பு வெளியே கிளம்பினால், அதிகபட்சம் தருண் உடன் வருவான். தருண் இல்லாமல் அவர்கள் எங்கும் சென்றதில்லை.

அப்படி இருக்க, முதல்முறையாக தனியாகச் செல்வதால் ஒரு சிறு குறுகுறுப்பு அவளுக்குள் எழுந்தது.

தன்னிடம் தனது விருப்பத்தைக் கூறுவானோ என்று கூட உள்ளுக்குள் குதூகலித்தாள் என்றுதான் சொல்ல வேண்டும்.

சிறிது சிறிதாக மனம் அவன் பக்கம் சாய ஆரம்பித்து, முழுவதுமாக அவனுக்காகவே ஏங்க ஆரம்பித்து விட்டது.அவனது காதலுக்காகத் தவிக்கிறாள் என்றுதான் சொல்ல வேண்டும். அவன் தன்னிடம் தனது காதலை உரைத்து விட மாட்டானா என்ற ஏக்கம் அவளுக்குள் அதிகரித்தது.

அப்பொழுதுதான் அவளுக்கு ஒன்று புரிந்தது.

தான் அவனை விரும்ப ஆரம்பித்து விட்டோம் என்பதை உணர்ந்தாள்.

உணர்ந்த நொடியே நாணத்தில் அவளது முகம் குபீரென்று சிவந்துவிட்டது என்றுதான் சொல்ல வேண்டும்.

இவனோ பேசிக் கொண்டே இருக்க, இவளோ இத்தனை யோசனைகளில் மூழ்கியிருந்தாள்.

இரண்டு மூன்று முறை அழைத்தவன்,"பிரியா... பிரியா..." என்று அவளது தோளைத் தொட்டான்.

அதன் பிறகுதான் நிகழ்வுகளுக்குத் திரும்பி வந்தாள்.

"என்னங்க?" என்றாள்.

"இவ்வளவு நேரம் நான் பேசினதை கேட்டியா இல்லையா? என்ன யோசிச்சிட்டு இருக்க பலமா?" என்று கேட்டான்.

"எதுவும் இல்லை..." என்று வேகமாகக் கூறியவள், உடனே எழுந்து கிளம்பத் தயாராக ஆரம்பித்துவிட்டாள்.

அவள் அங்கிருந்து நகர்ந்ததும், அவளைப் பார்த்தபடி,'இவள் போக்கே சரியில்ல. வர வர அடிக்கடி எதையோ யோசிச்சிட்டு இருக்கிறா. எனக்காக எல்லாம் இவளா செஞ்சா பிரச்சனை இல்லை. ஆனால் யாராவது சொல்லி செய்யக் கூடாது. அம்மா சொல்லி இருக்க மாட்டாங்க... அத்தையும் அப்படி செஞ்சிருக்க மாட்டாங்க...'என்றுதான் பரத் யோசித்தான்.


அதன் பிறகு கிளம்பிய இருவரும் ஒரு துணிக்கடைக்குத்தான் சென்றிருந்தார்கள்.

சுற்றிப் பார்த்துவிட்டு,"இங்கே எதுக்கு வந்திருக்கோம், பரத்?" என்று கேட்டாள் பிரியா.

அவளை மேலும் கீழுமாகப் பார்த்தவன்," துணிக்கடைக்கு எதுக்காக வருவாங்க, பிரியா?" என்று கேட்டான்.

"இல்ல... அது... இப்போ எதுவும் நமக்கு வேலை இல்லையே இங்கே..." என்றாள்.

லேசாகச் சிரித்தவன், "இன்னும் ஒரு வாரத்துல மகிழுக்கு ஃபர்ஸ்ட் பர்த்டே வரப்போகுது. அதனால டிரஸ் வாங்கலாம்னு வந்தேன். பாப்பாவுக்கு.. உன் அண்ணனும் ஒரு அளவுக்கு கிராண்டா பண்ணற ஐடியாவுலதான் இருக்கான். ரொம்ப க்ளோஸ் ரிலேட்டிவ்ஸ் மட்டும் கூப்பிடலாம்னு நினைக்கிறான்," என்றான்.

"அப்படியா? அண்ணி கூட சொன்னாங்கதான். நான் மறந்தே போயிட்டேன், பரத்," என்று தலையைச் சொறிந்தாள்.

சிரித்துக் கொண்டே, "சரி, வா..." என்று அவளை அழைத்துக் கொண்டு சென்றான்.

முதலில் மகிழுக்கான உடைகளைத் தேர்வு செய்தார்கள். அதன் பிறகு தருணுக்கும், உடைகள் எடுத்தார்கள்.

"அவனுக்கு எதுக்குங்க? ஏற்கனவே நிறைய டிரஸ் இருக்கு. புதுசா வாங்கினதுல கூட ஒன்னு ரெண்டு இன்னும் போடாம இருக்கே..." என்றாள் பிரியா.

அவளை ஒரு பார்வை பார்த்தவன்,
"அவனுக்கு ஒரு டிரஸ் எடுக்கிறதுல இப்போ என்ன ஆகிடப் போகுது? எடு..." என்றான்.

அந்த ஒற்றைப் பார்வையிலேயே அமைதியாகிவிட்டாள் அவள்.

தருணுக்கும் உடை எடுத்த பிறகு, பரத் சுடிதார் பிரிவில் நின்று சுடிதார்களைப் பார்த்துக் கொண்டே இருந்தான்.

ரொம்ப நேரமாக அவன் சுடிதார்களைப் பார்ப்பதை அமைதியாகக் கவனித்துக் கொண்டிருந்தவள், அவன் அருகில் நெருங்கி வந்தாள்.

அவளைப் பார்த்து புன்னகைத்தவன்,

"இந்த சுடிதார் பாரு... நல்லா இருக்கான்னு சொல்லு," என்றான்.

அவன் காட்டிய சுடிதாரை மேலும் கீழுமாகப் பார்த்தவள்,

"நல்லாத்தான் இருக்கு...வினிக்கா" என்றாள்.

"நல்லா இருக்கான்னு கேட்டா நல்லா இருக்குன்னு சொல்லு, இல்ல இல்லன்னு சொல்லு அத விட்டுட்டு நோண்டி நோண்டி கேள்வி கேட்டுட்டே இருக்கு வந்ததுல இருந்து"என முறைத்தான்.

"நான் இப்ப என்ன கேட்டுட்டேன்? நீங்க என்ன பதில் சொல்றீங்க? வந்ததுல இருந்து மூணு தடவை முறைத்துக் காட்டுறீங்க," என்றாள்.

அவளது குரலில் இப்பொழுதெல்லாம் உரிமை கலந்திருந்தது.

அதை உணர்ந்த பரத்தின் இதழ்களில் தானாகவே ஒரு மெல்லிய புன்னகை மலர்ந்தது. அவளுக்கே தெரியாமல், அவள் தன் மனதின் இடத்தை அவனுக்குக் கொடுத்துக் கொண்டிருந்தாள்.


அவனும் அதன் பிறகு சிரித்துவிட்டு,"வினிக்கில்லை... உனக்குத்தான்," என்றான்.

"எனக்கா? எதுக்கு?" என்று கேட்டாள்.

"இது என்ன கேள்வி? எதுக்குன்னா...?"

"இல்ல... நான் சுடிதார்..." என்று தயக்கமாக இழுத்தாள்.

அவள் பேசுவதை அமைதியாகக் கேட்டவன்,"நான் உன்னை சுடிதார்ல பார்த்ததே இல்லை, பிரியா. உனக்கு என்ன வயசு பெருசா ஆயிடுச்சு? எல்லா நேரமும் சேலையில்தான் இருக்க. வீட்ல இருந்தா கூட எப்பவாவது நைட்டி. மத்தபடி வீட்ல கூட சேலையில்தான் இருக்க.

ஏன் சுடிதார் போட மாட்டே? ஒரு விஷயம் பிரியா... உங்க அண்ணன் இருந்த வரைக்கும் உனக்குனு ஒரு வாழ்க்கை இருந்திருக்கும் இல்லையா?

சுடிதார் போடக்கூடாதுன்னு ஏதாவது இருக்கா? இல்ல சுடிதார் போடணும்னு இருந்த ஆசையெல்லாம் மறந்துட்டியா?" என்று கேட்டான்.

"அப்படி எதுவும் இல்லை..." என்று மெதுவாகச் சொன்னாள்.

"இல்லை பிரியா. தருண் பொறக்குறதுக்கு முன்னாடி உனக்கு சின்ன சின்ன ஆசைகள் இருந்திருக்கும். தருண் பொறந்ததுக்கப்புறம் அந்த ஆசைகளையெல்லாம் மூட்டை கட்டி வைச்சிருப்ப.

அவனை வளர்க்கணும் என்பதற்காக எல்லாத்தையும் மறந்திருப்ப. ஆனா அதுக்கு முன்னாடி வரைக்கும் நீயும் ஒரு சாதாரண பொண்ணுதானே?

சின்ன சின்ன ஆசைப்படுவ, உனக்குப் பிடிச்சதை செய்வ, உனக்காக வாழ்வ.இப்போ அதெல்லாம் இல்லாம போயிடுச்சு.

நீ நீயா இருக்கணும், பிரியா. அது எனக்கு ரொம்ப முக்கியம்.

உன்னுடைய சின்ன சின்ன ஆசைகளைக் கூட நிறைவேத்திக்கோ. உனக்கு என்ன பிடிக்கும், என்ன பிடிக்காது, உனக்கு என்ன தேவைன்னு கேளு. நான் இருக்கேன்.

உனக்கு ஏன் என்கிட்ட கேட்கத் தயக்கமா?" என்று எதிர்பார்ப்புடன் பார்த்தான்.

அவளோ இல்லை என்பது போல் தலையசைத்தாள்.

"எனக்கு உன்னை சுடிதார்ல பார்க்கணும் போல இருக்கு, பிரியா. எனக்காக சுடிதார் எடுத்துக்கோ..." என்றான்.

அவன் கூறிய வார்த்தைகளில் அவளது கண்கள் லேசாகக் கலங்கின.

தனக்காக யாராவது இவ்வளவு யோசித்தது எத்தனை வருடங்களுக்குப் பிறகு என்று அவளுக்கே தெரியவில்லை.

அதனால் மறுப்பு தெரிவிக்காமல்,

"சரி..." என்று தலையசைத்தாள்.

அதன் பிறகு இன்னும் நான்கு சுடிதார்களை எடுத்தான்.

"இல்லை பரத்... இதுவே போதும்," என்றாள்.

" வாங்கிக் கொடுக்கிறப்போ அமைதியா வாங்கிக்கோ.

வீட்ல போடு. வெளியே போகும்போது போடறதும், போடாததும் உன்னோட விருப்பம்.

வீட்ல போடலாம். பங்க்ஷன் போனா போடலாம். ஓகேவா?

ஆபீஸுக்கு போட்டுப் போறதும், போகாததும் உன்னோட விருப்பம். நான் எதுவும் கேட்க மாட்டேன்," என்று புன்னகைத்தான்.

பிறந்தநாளுக்கென்று ஒரு அழகான அனார்கலியையும் எடுத்துக் கொடுத்தான்.

மற்றபடி நான்கு ஐந்து சாதாரண சுடிதார்களையும் தேர்வு செய்தான்.

"அத்தைக்கும் வாங்குங்க," என்றாள் பிரியா.

உடனே அவன் சிரித்துவிட்டு,

"அம்மா மேக்சிமம் சின்ன சின்ன விஷயத்துக்கெல்லாம் புதுசா எடுக்க மாட்டாங்க. வினிக்கு எடுக்கலாம். அடுத்தது குடும்பத்துக்கே எடுக்கச் சொல்லப் போற மாதிரி இருக்கு," என்று கிண்டலடித்தான்.

அவளும் சிரித்துக் கொண்டாள்.

அதன் பிறகு வினிக்காக ஒரு சுடிதார் எடுத்துக் கொண்டிருந்தபோது, பிரியா வேகமாக ஒரு காட்டன் புடவையை எடுத்துக் கொண்டு வந்தாள்.

"இதையும் பில் போட்டுருங்க," என்றாள்.

அவளை கேள்வியாகப் பார்த்தான்,

"எல்லாருக்கும் எடுத்துட்டு அத்தைக்கு மட்டும் எடுக்காம இருக்கலாமா? இந்தப் புடவை எனக்குப் பிடிச்சிருக்கு. அத்தைக்கும் பிடிக்கும். நல்லா இருக்கும்," என்றாள்.

அவளது ஆசை நிறைந்த குரலைக் கேட்டவன் சிரித்துக் கொண்டே அதையும் பில்லில் சேர்த்தான்.

அதன் பிறகு அருகில் இருந்த ஒரு ஹோட்டலுக்கு அவளை அழைத்துச் சென்றான்.

"வீட்டுக்குப் போய்ச் சாப்பிட்டுக்கலாம். எதுக்கு இங்கே?" என்றாள்.

"அம்மா எதுவும் சொல்ல மாட்டாங்க. இவ்வளவு தூரம் வந்துட்டு சாப்பிடாம எப்படி போக முடியும்?" என்றான்.

அவளுக்குப் பிடித்தமான உணவுகளையே ஆர்டர் செய்து, அவளை நன்றாகச் சாப்பிட வைத்தான்.

சாப்பாடு முடிந்ததும் அவளுக்குப் பிடித்த ஐஸ்கிரீமையும் வாங்கிக் கொடுத்தான்.

அதன்பிறகு இருவரும் வெளியே வந்தபோது, கையில் ஐஸ்கிரீமுடன் மெதுவாக நடந்து கொண்டிருந்தார்கள். அந்தச் சிறிய நேரம் கூட, பிரியாவிற்கு மனதிற்குப் பிடித்தவருடன் செலவிடும் மிக அழகான நேரமாகத் தோன்றியது.


இரவு நேரம் கழித்துத்தான் இருவரும் வீட்டிற்கு வந்தார்கள்.

அவர்கள் வீட்டிற்குள் நுழைந்தபோது, தருண் வினியுடன் விளையாடிக் கொண்டிருந்தான்.

அவனுக்காக வாங்கி வந்த உடைகளையும், ஐஸ்கிரீமையும் கொடுத்தவுடன்,"எனக்கா?" என்று ஆர்வமாகக் கேட்டான்.

"ஆமாம்," என்று சிரித்தபடி பரத் கூற, வாங்கி வந்த அனைத்தையும் ஆர்வமாகப் பார்த்தான்.

அப்போது வினி,"அண்ணி, உங்களை நான் இதுவரைக்கும் சுடிதார்ல பார்த்ததே இல்ல. இனிமேல் சூப்பர் ஜாலி! அண்ணியும் சுடிதார் போடுவாங்க!" என்று சிரித்தாள்.

ஆதரவாக அவளது தலையை வருடிய பானுமதி,

"சரி சரி... எல்லாத்தையும் எடுத்துவைச்சிட்டு படுங்க. நேரம் ஆகுது. தம்பியும் தூங்கிட்டான் பாருங்க," என்று கூறிவிட்டு வினியையும் பார்த்து புன்னகைத்தபடி தன் அறைக்குச் சென்று விட்டார்.

பரத்தை ஒரு பார்வை பார்த்த பிரியாவும் அமைதியாக அனைத்தையும் எடுத்துக் கொண்டு அறைக்குள் சென்று விட்டாள்.

அந்தப் பார்வையில் என்ன இருந்தது என்பது பிரியாவிற்கு மட்டும்தான் தெரியும்.

அதைப் பார்த்த வினியும் சிரித்துக் கொண்டே அங்கிருந்து நகர்ந்தாள்.

ஆனால் அவளுக்குள் ஒரு கேள்வி தொடர்ந்து இருந்து கொண்டே இருந்தது.

அண்ணி, அண்ணனைப் பார்க்கும் பார்வையில் ஏதோ ஒன்று இருப்பதை அவள் தெளிவாக உணர்ந்தாள்.

ஆனால் தனது அண்ணன் மட்டும் ஒரு நாள் கூட காதலாக அண்ணியைப் பார்த்து அவள் கண்டதில்லை.

அது மட்டுமல்லாமல், ஏதோ ஒரு சிறிய விலகலும் அவனிடம் இருப்பது போல அவளுக்குத் தோன்றியது.

"இன்னும் எந்த அளவிற்கு இறங்கி வர வேண்டும் என்று அண்ணன் நினைக்கிறான்?" என்று கூட யோசித்தாள்.

இந்த யோசனை அவளை விடவில்லை.

அன்றிரவே ரேகாவிற்கு ஃபோன் செய்து விட்டாள்.

தான் நினைத்ததையெல்லாம் இடைவிடாமல் புலம்பித் தீர்த்தவள்,

"இப்போ என்ன டி பண்ணலாம்?" என்று கேட்டாள்.

"என்னைய கேளு அக்கா?" என்று சிரித்தாள்.

"அண்ணன்தான் பிடிகொடுக்கிற மாதிரி தெரியல. எனக்குத் தெரிஞ்சு அண்ணி கூட ரொம்ப இறங்கி வந்துட்டாங்க.

அவங்க மனசுல இருக்கிறதை எப்படி வெளிப்படுத்தணும்னு தெரியாம இருக்காங்கன்னு நினைக்கிறேன்.

ஒவ்வொரு செயலாலயும் தன்னோட விருப்பத்தை நிரூபிக்கிற மாதிரிதான் இருக்கு.

அண்ணன் வர வரைக்கும் வெயிட் பண்ணிட்டு உட்கார்ந்திருக்காங்க தெரியுமா?

முன்னாடி ஏதாவது வேலை செய்வாங்க. கிச்சன்ல இருப்பாங்க. துணி மடிப்பாங்க. ஏதாவது பண்ணிட்டு இருப்பாங்க.

ஆனா இப்போ எல்லாம் டாண்னு அண்ணா வர நேரத்துக்கு ஹால்ல வந்து உட்கார்ந்திருக்காங்க.

முன்னெல்லாம் ரூம்குள்ள ஒளிஞ்சு இருப்பாங்க. அண்ணனும் ஃப்ரெஷ் ஆயிட்டு வந்து ஹால்ல உட்காருவான்.

ஆனா இப்போ ஒரு கொஞ்ச நேரம் கூட அண்ணனை விட்டு நகராம, அண்ணன் எங்க இருக்கானோ அங்கதான் இருக்காங்க.

ஆனா இந்த அண்ணா, அதைப் புரிஞ்சும் புரியாத மாதிரி ஏன் ஒதுங்கிப் போறான்னு எனக்கு புரியல," என்று தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினாள்.

அனைத்தையும் அமைதியாகக் கேட்டாள் ரேகா,.

"நீ நாளைக்கு இங்க வா. எதா இருந்தாலும் நேர்ல பேசிக்கலாம்.

எப்படியாவது அண்ணனையும் அண்ணியையும் பிடிச்சு வைத்து ஒண்ணா இருக்கப் பழக்கணும்.

முதல்ல அவங்க ரெண்டு பேரையும் சகஜமா மனசு விட்டு பேச வைக்கணும்.

அதுக்கப்புறம் தான் அடுத்தது என்னன்னு யோசிக்க முடியும்," என்றாள்.

அதைக் கேட்ட ரேகாவுக்கும் கொஞ்சம் நிம்மதியாக இருந்தது. ஏனெனில் அவளுக்குப் பிடித்த இரண்டு பேரும் சந்தோஷமாக வாழ வேண்டும் என்பதுதான் அவளது ஆசையாகவும் இருந்தது.


"சரிடி, வரேன். நானும் அங்க வந்து எவ்வளவு நாள் ஆகுது இல்லையா? வரேன், வந்து ஏதாவது முடிவு பண்ணிக்கலாம்."

"நான் வந்து உன்னைக் கூட்டிட்டு வரட்டுமா அக்கா?" என்றாள் வினி.

"இல்ல, நான் வரேன்," என்று கூறிவிட்டு அவள் ஃபோனை வைத்துவிட்டாள்.

இரவு இதைப் பற்றிக் கணவனிடம் சொல்லுவதற்கு ரேகாவிற்கு நேரம் இல்லை என்பதுதான் உண்மை.

மறுநாள் விடியலில், ஆறு மணி அளவில் வினியிடமிருந்து சசிக்கு ஃபோன் வந்திருந்தது.

"என்ன வினி, காலையிலேயே ஃபோன் பண்ணி இருக்க? என்ன விஷயம்?" என்றான்.

பொதுவாக அவள் இவ்வளவு காலையில் அழைக்க மாட்டாள் என்பதால் ஏதோ விஷயம் இருக்கிறது என்று அவனுக்குத் தெரிந்தது.

"அக்காவையும் பாப்பாவையும் கூட்டிட்டு வீட்டுக்கு வா மாமா, இன்னைக்கு," என்றாள்.

"என்ன புதுசா உன் அக்காவையெல்லாம் கூப்பிடுற?உனக்கு உன் அண்ணியும் அண்ணன் பிள்ளையும் வந்ததும், அக்காவையும் அக்கா பிள்ளையையும் கண்டுக்கறதே இல்ல," என்றான்.

"மாமா, உன்னைக் கொன்றுவேன்! நான் தான் அங்க வந்து பார்த்துட்டு இருக்கேன். நீங்கதான் ஆரம்பத்துல அக்காவை இங்க விட மாட்டேன்னு சொன்னீங்க. அதுக்கப்புறம் ஒண்ணு மாத்தி ஒண்ணு பிரச்சனை வந்துட்டே இருந்ததால அக்காவும் இங்க வரவே இல்ல.

நீ இதான் சாக்குனு, அக்காவையும் பாப்பாவையும் மறந்துட்டேன்ன்னு சொல்லி அக்காவை எனக்கு எதிரா திருப்பி விடுவ போல!" என்று புலம்பினாள்.

பிறகு நேற்று ரேகாவிடம் பேசியதை சசியிடமும் கூறினாள்.

அதைக் கேட்டவன், "ஓஹோ! சேர்ந்து பிளான் பண்ணிட்டீங்களா?" என்று சிரித்தான்.

"நீ வா மாமா."

"சரி வந்தா என்ன பண்ணுவ? என்ன விருந்து வைக்கப் போற?" என்று கேட்டான்.

"உனக்கு என்ன வேணும்னு சொல்லு."

"ஒரு பெரிய வெள்ளாட்டைப் பிடிச்சு அடிச்சு குழம்பு வை," என்று சிரித்தான்.

"விட்டா சொத்தையே எழுதி கேட்ப போல இருக்கே!"

"எனக்கு இல்லாத சொத்தா?" என்று சிரித்தவன்,

"சரி, வரேன் வினி," என்றான்.

"சரி, வா. பேசிட்டே இருந்தா எங்க இருந்து கிளம்பி வருவ?" என்று அவளும் ஃபோனை வைத்துவிட்டாள்.

அதன்பிறகு வெளியே வந்த சசி, தன் தாயிடம்,

"இன்று சமைக்க வேண்டாம். நாம அங்க போயிடலாம்," என்று கூறினான்.

அவரும் சரி என்றார்.

அப்போது அதைக் கேட்டபடியே வந்த ரேகா,"அப்போ இப்பவே கிளம்பலாம் வாங்க!" என்றாள்.

சட்டென்று அவளை குறுகுறுவெனப் பார்த்தவன்,
"என்ன அவசரம்?" என்றான்.

"நாங்க போய் ரொம்ப நாள் ஆகுது இல்ல. கிட்டத்தட்ட ஒரு வருஷமே ஆகுது," என்று குறைப்பட்டுக் கொண்டாள்.

"அதுக்காக இப்படி குளிக்காமலேயே கிளம்பிடுவியா?"

"அங்க போய் குளிச்சிக்கலாம்," என்றாள்.

சிரித்தபடியே,"அடியே, காலையிலேயே கொன்றுவேன்! இன்னும் நானும் அம்மாவும் கூட குளிக்கல. புள்ளையப் பாரு!"
என்று கூறிவிட்டு,

"நீ குளிச்சிட்டு வா. நான் பாப்பாவைக் குளிக்க வைக்கிறேன். பொறுமையா போகலாம். என்ன அவசரம் இங்க இருக்க வீட்டுக்குப் போறதுக்கு?" என்றான்.

முகத்தைத் திருப்பிக் கொண்டாலும், மாமியாரிடம் சிரித்தபடி சென்று விட்டாள்.

தெய்வா சிரித்துக் கொண்டே,

"ரொம்ப நாள் கழிச்சு அண்ணனைப் பார்க்கப் போறாளே! எம்புட்டு குஷியில குதிக்கிறா பாரு!" என்றார்.

அதன்பிறகு குடும்பத்தோடு கிளம்பினார்கள்.

தனது மாமா குடும்பத்தோடு வர இருப்பதாக வினி தன் அண்ணனிடம் கூறியிருந்தாள்.

அதைக் கேட்ட பரத்,

"உன் மாமா கெடா என்ன? ஒரு ஊரையே விலைக்கு வாங்கச் சொல்லி கூட கேப்பான். அவனுக்கு என்ன வந்துச்சு?" என்று கேலி செய்துவிட்டு சென்றாலும், நண்பனுக்குப் பிடித்தவற்றை வாங்க நினைத்தான்.

பெரிய தங்கைக்கு பிடிக்கும் இறால், தாய்க்குப் பிடிக்கும் நாட்டுக்கோழி, வினிக்குப் பிடிக்கும் நெத்திலி மீன் என அனைத்தையும் வாங்க கிளம்பினான்.

அப்போது திடீரென்று அவனுக்கு ஒரு யோசனை வந்தது.

'எனக்கு என் மனைவிக்கு என்ன பிடிக்கும்னு தெரியாதே...'

அந்த எண்ணத்தில் சில நொடிகள் நின்றவன்,"பிரியா, உனக்கு என்ன பிடிக்கும்?" என்று கேட்டான்.

அவளோ ஒன்றும் புரியாமல் அவனைப் பார்த்தாள்.

' என்ன இப்படி எதுக்குக் கேட்கிறார்?' என்று யோசித்தாள்.

அதற்குள் வினி, "அண்ணி, உங்களுக்கு அண்ணே என்ன நான்வெஜ்ல பிடிக்கும்னு கேட்கிறார்!" என்று கூறிவிட்டாள்.

"ஏன்டா! இத்தனை நாள் கழிச்சு இப்போதான் என்ன பிடிக்கும்னு கேக்குறான் பாரு!" என்று பானுமதி மகனைத் திட்டினார்.

பிறகு பிரியாவைப் பார்த்து,

"பிள்ளைக்கு நண்டு ரசம் நல்லா பிடிக்கும் டா. தொக்கு செஞ்சாலும் சாப்பிடுவா. அதையும் வாங்கிட்டு வா. பாத்துக்கலாம்," என்றார்.

"சரி," என்று தலையசைத்தவன், ஒரு நொடி பிரியாவை ஆழமாகப் பார்த்துவிட்டு அங்கிருந்து நகர்ந்தான்.

அவளும் புன்னகையுடன் அவனைத்தான் பார்த்துக் கொண்டிருந்தாள்.

வார்த்தைப் பரிமாற்றம் எதுவும் இல்லை.

ஆனால் அந்தப் பார்வையே பல கதைகளைப் பேசிக் கொண்டிருந்தது.

போகும் பரத்தை அழைத்தாள் வினி,

"எனக்கு வரும்போது ஐஸ்கிரீமும் ஸ்வீட்டும் வாங்கிட்டு வரணும்," என்றாள்.

"அவ்வளவுதானே? வாங்கிட்டு வரேன்," என்றவன் அவளது தலையைக் கலைத்துவிட்டு புன்னகையுடன் வாங்க வேண்டிய அனைத்தையும் வாங்க கிளம்பிவிட்டான்.


அதன் பிறகு மூவரும் சேர்ந்து வெங்காயம் உரிப்பது போன்ற வேலைகளைப் பார்த்து, சமையலுக்குத் தேவையான அனைத்தையும் தயார் செய்து கொண்டிருந்தார்கள்.

அன்று விநாயகம், செல்வியையும் ஃபோன் செய்து வரவைத்து விட்டான். அவன் அசைவம் வாங்கச் செல்வதற்கு முன்பாகவே, தாங்களும் கிளம்பி வருவதாகக் கூறியிருந்தார்கள்.

அன்று வீட்டில் மொத்தக் குடும்பமும் ஒன்றுகூடி இருந்தது.

அனைவரும் சிரித்துப் பேசி, காலை உணவை முடித்துவிட்டு, மதிய உணவிற்குத் தேவையான வேலைகளைச் செய்து கொண்டிருந்தார்கள்.

அப்போது ரேகாவின் கையைச் சுரண்டிய வினி,

"நீயே பார்த்துட்டே இருக்க. அண்ணன் அம்மா கிட்ட பேசுவாரு, தருண் கிட்ட பேசுவாரு, இல்லன்னா அவன் கூட விளையாடுவாரு, இல்ல ஏதாவது வேலை பார்ப்பாரு, டிவி பார்ப்பாரு. ஆனா அண்ணியை மட்டும் ..." என்று புலம்பினாள்.

அவள் சொல்வது போலத்தான் பரத்தும் நடந்து கொண்டிருந்தான்.

ரேகாவிற்குமே சிறிது எரிச்சலாகத்தான் இருந்தது.

"உனக்கு ஒரு நாளைக்கே இப்படி இருக்கா? எனக்கு தினமும் இப்படித்தான் இருக்கும். இதெல்லாம் ஏன் இப்படி இருக்கோ?" என்று சலித்துக் கொண்டாள்.

இருவரின் புலம்பலையும் கேட்டு கொண்டிருந்த சசி, அவர்களருகே வந்து அமர்ந்தான்.

"அக்காவும் தங்கச்சியும் இப்போ எந்த நாட்டுக் கோட்டையைப் பிடிக்கிறதுக்காக கூட்டுச் சேர்ந்து இருக்கீங்க?" என்று சிரித்தபடி கேட்டான்.

"நீயே பாரு மாமா," என்று வினி மீண்டும் புலம்பினாள்.

அவன் அவர்கள் பார்வை சென்ற திசையைப் பார்த்துவிட்டு,

"நான் என்ன செய்யறது? நானும் பல நாள் கேட்டுப் பார்த்துட்டேன். வாயவே திறக்க மாட்டேங்குறான்," என்றான்.

"ஏதாவது பண்ணு மாமா. இப்படியே விட்டா எப்படி?" என்றாள் வினி.

"இதுக்கு ஏதாவது பண்ணணும்னா உன் அண்ணன்தான் மனசு வைக்கணும்.

என் தங்கச்சியே இவ்வளவு இறங்கி வந்து செயல் மூலம் எல்லாத்தையும் காட்டுறா.

ஆனா இந்த மரமண்டை, அதைப் புரியாம இல்லை. புரிஞ்சும் புரியாத மாதிரி கடந்து போறான்.

அதுதான் எனக்கே புரிய மாட்டேங்குது," என்று சசி புலம்பிக் கொண்டான்.

அதன் பிறகு முடிந்த அளவிற்கு இருவரையும் ஒன்றாகவே இருக்க வைத்தார்கள்.

ஏதேதோ பேசி, ஒன்றாக உட்கார வைத்தும், சின்னச் சின்ன வேலைகளைச் சேர்த்துக் கொடுத்தும் பார்த்தார்கள்.

ஆனால் அவர்களால் அதற்கு மேல் எதுவும் செய்ய முடியவில்லை.

இருவரும் மனம் திறந்து பேச வேண்டும் என்பதுதான் அனைவரின் ஆசையாக இருந்தது. ஆனால் அந்த முதல் அடியை யார் எடுத்து வைப்பார்கள் என்பதுதான் இன்னும் கேள்வியாகவே இருந்தது.
 
Top Bottom