• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

நிழலை கடந்த காதல் - 27

STN - 24

Member
இன்று மகிழினியின் முதல் பிறந்தநாள் கொண்டாட்டம்.

வீட்டிலிருந்த அனைவரும் காலையிலேயே கிளம்பிச் சென்றிருந்தார்கள். மாலை நேரத்தில் பிறந்தநாள் விழா என்பதால், நெருங்கிய உறவினர்களையும் அக்கம் பக்கத்தினரையும் மட்டும் அழைத்திருந்தார்கள்.

காலையிலேயே சென்று வீட்டின் அலங்கார வேலைகளில் பரத் மூழ்கி இருந்தான். மாலை மூன்று மணி அளவில்தான் வீட்டிற்கு வந்து, தன்னைச் சுத்தப்படுத்திக் கொண்டு மனைவி, மகனை அழைத்துக் கொண்டு செல்வதாக இருந்தது.

வினியும், பானுமதியும் முன்னதாகவே சென்று விடுவார்கள் என்பதால், அவன் வீட்டிற்கு வந்தபோது வினி கிளம்பிக் கொண்டிருந்தாள்.

"என்ன வினி, அதுக்குள்ள கிளம்பிட்ட? நான் வந்ததும் சேர்ந்து போகலாம்னு நினைச்சேன்," என்றான்.

" நீ வரும்போது வா. நான் போயிட்டு குட்டிக்கூடயும் அக்கா கூடயும் இருக்கேன். அக்காவை ரெடியாக பாப்பா விடுவாளோ மாட்டாளோ. அத்தையும் வந்தவங்களையெல்லாம் கவனிப்பாங்க," என்று கூறினாள்.

"சரி," என்று தலையசைத்துக் கொண்டான்.

அவன் அறைக்குள் நுழைந்தபோது, பிரியா கண்ணாடி முன் நின்று தலைமுடியை வாரிக் கொண்டிருந்தாள்.

கதவை பாதியாகத் திறந்து உள்ளே பார்த்தவன், ஷாக் அடித்தது போல அப்படியே நின்று விட்டான்.

அவன் வாங்கிக் கொடுத்த அனார்கலியைத்தான் அணிந்திருந்தாள்.

முதல் முதலாக அவளை சுடிதாரில் பார்க்கிறான்.

மொத்தமாக அவளிடம் விழுந்து விட்டான் என்றுதான் சொல்ல வேண்டும்.

இத்தனை நாட்களாக அவளிடம் காதல் பார்வையை வீசாமல் இருந்தவன், இன்று முதல்முறையாக தன்னையும் மீறி காதலாக அவளைப் பார்க்க ஆரம்பித்திருந்தான்.

அவளது அழகு இன்னும் நேர்த்தியாகத் தெரிந்தது.

தலைக்குக் குளித்திருந்ததால், தலைமுடியை ஃப்ரீ ஹேராக விட்டுக் கிளிப் போட்டிருந்தாள்.

அவளைப் பார்க்கும் போதே அப்படியே அள்ளிக் கொஞ்ச வேண்டும் போலத் தோன்றியது.

தனது உணர்வுகளைக் கட்டுப்படுத்த படாதபாடு பட்டான்.

அந்த நேரத்தில்,"அப்பா, நம்ம மகிழ் பாப்பாவைப் பார்க்கப் போலாமா?" என்று தருண் குதூகலமாகக் கேட்டான்.

அதன் பிறகுதான் சுற்றுப்புறத்தை உணர்ந்தான் பரத்.

தலையை உலுக்கிக் கொண்டு மீண்டும் பிரியாவை ஒரு பார்வை பார்த்தான்.

தருணின் குரலில் திரும்பிப் பார்த்தவள், அப்போதுதான் அவனை கவனித்தாள்.
"டீ போடட்டா. குடிக்கிறீங்களா?" என்று கேட்டாள்.

"இல்ல... அது..." என்று தடுமாறினான்.

முதல்முறையாக அவனது தடுமாற்றத்தைப் பார்க்கிறாள்.

அவளுக்கு ஒன்றும் புரியவில்லை.

"என்னாச்சு பரத்? ரொம்ப சோர்வா இருக்கீங்க போல. தலைவலியா? எதுவும்..." என்று கூறியபடி அவனது நெற்றியைத் தொட்டுப் பார்க்க வந்தாள்.

ஆனால் அவளது கை தன்னைத் தொடும் முன்பே, வேகமாக விலகி விட்டான்.

'ஏன்? நான் தொட்டுக் கூட பார்க்கக் கூடாதா?'என்ற கேள்வி அவளுக்குள் எழுந்தது.

அவனோ வேகமாகக் குளியலறைக்குள் புகுந்து கொண்டான்.

அவனது நடவடிக்கை அவளுக்கு ஒன்றும் புரியவில்லை.சிறிது வருத்தமாகவும் இருந்தது.

'என்னாச்சு இவருக்கு? அவ்வளவு வேகமா என் கையைத் தவிர்த்துட்டு உள்ள போறாரே...'
என்று யோசித்துக் கொண்டே நின்றாள்.

டீ குடிப்பார் என்று நினைத்தவள், அவனுக்காக டீயும், சாப்பிட கொஞ்சம் கார வகைகளையும் எடுத்து வைத்தாள்.

அதே நேரத்தில் தருணுக்கும் சிற்றுண்டி கொடுத்துக் கொண்டிருந்தாள்.

பிறகு பரத்துக்கான டீயை எடுத்துக் கொண்டு அறைக்குள் நுழைந்தாள்.

அப்போதுதான் குளித்துவிட்டு வந்து தலைமுடியைத் துடைத்துக் கொண்டிருந்தான்.

அவள் அருகில் வந்து டீயை நீட்டியதும், அறியாமலே மீண்டும் அவளைப் பார்த்தான்.

அவளையும்...அவள் கழுத்தில் இருந்த ஓம் டாலர் செயினையும்...

அவள் அசைந்தபோது நிமிடத்திற்கு ஒருமுறை ஆடிய காதணிகளையும்... எல்லாவற்றையும் ரசித்துக் கொண்டிருந்தான்.

அவள் முகத்திலிருந்து தனது பார்வையை அகற்ற முடியாமல் படாதபாடு பட்டான்.

இன்று முதல் முறையாக, அவளை தனது மனைவியாக மட்டுமல்ல...

தான் காதலிக்கத் தொடங்கிய பெண்ணாகவும் பார்த்துக் கொண்டிருந்தான்.

"பரத்... என்னங்க... பரத்..." என்று மூன்று முறை அழைத்த பிறகுதான்,

"ஆங்..." என்று சுயநினைவிற்கு வந்தான்.

"தலை வலிக்குது போல, ரொம்ப சோர்வா இருக்கீங்க. அதான் டீ குடிப்பீங்கன்னு எடுத்துட்டு வந்தேன்."

"இல்ல, எனக்கு வேண்டாம்," என்றான்.

உடனே அவளது முகம் வாடிவிட்டது.

அவளது முகவாட்டத்தைப் பார்த்ததும் அவனுக்கு ஒரு மாதிரியாக இருந்தது.

"சரி, குடு..." என்று கூறியவன் கட்டிலில் அமர்ந்து டீயை வாங்கிக் குடித்தான்.

அவளோ ஒன்றும் புரியாமல் அவனைப் பார்த்துவிட்டு, அங்குக் கலைந்து கிடந்த பொருட்களை ஒழுங்குபடுத்த ஆரம்பித்தாள்.

ஆனால் இவனோ முழுவதுமாக அவளையே பார்த்துக் கொண்டிருந்தான்.

அந்தத் துளைக்கும் பார்வையை பிரியா முதல்முறையாக உணர்ந்தாள்.

அவனைத் திரும்பிப் பார்த்தால், அவனும் சட்டென்று பார்வையை வேறு பக்கம் திருப்பி விடுவான்.

இரண்டு மூன்று முறை இதே நடக்க, பிரியாவிற்கு ஒரு மாதிரியாக ஆகிவிட்டது.

கூச்சமும் நாணமும் முதல்முறையாக அவளுக்குள் போட்டி போட்டுக் கொண்டன.

அப்போதுதான் ஸ்னாக்ஸ் தின்றுவிட்டு அறைக்குள் வந்த தருண்,"அப்பா, கிளம்பிட்டீங்களா? போலாமா? நானும் அம்மாவும் ரெடி!" என்று குதூகலமாகக் கேட்டான்.

அதன் பிறகுதான் இவ்வளவு நேரம் கிளம்பாமல் இருந்ததை உணர்ந்தான் பரத்.

தலையை உலுக்கிக் கொண்டான்.

பிரியாவோ அவனது செயலில் நாணத்துடன் சிரித்துக் கொண்டே,"அப்பா டிரஸ் மாத்திட்டு வருவாங்க. நீ வாடா கண்ணா.

அதுக்குள்ள தலையைக் கலைச்சு வச்சிருக்க பாரு. அம்மா சரி பண்ணி விடுறேன்," என்று கூறினாள்.

அவனை அருகில் அமர வைத்தவள், சட்டையைச் சரி செய்து, தலைமுடியை ஒழுங்குபடுத்தி, நெற்றியில் சந்தனக்கீற்றையும் வைத்துவிட்டாள்.

அதைப் பார்த்த பரத்திற்குள் திடீரென்று ஒரு ஏக்கம் தோன்றியது.'தனக்கும் இப்படிச் செய்து விட மாட்டாளா?' என்ற எண்ணம் முதல்முறையாக அவன் மனதில் எழுந்தது.

அடுத்த நொடியே தலையில் தானே தட்டிக் கொண்டவன்,
'டேய் பரத்! இன்னைக்கு நீ ஆளே சரியில்லடா.

இவ்வளவு நேரம் சுடிதார்ல அவளைப் பார்த்ததுல இருந்து உனக்கு ஏதோ ஆகிடுச்சு!'என்று தனது மனசாட்சியே அவனை கிண்டல் செய்ய ஆரம்பித்தது.

அதன்பிறகு வேகமாக உடை மாற்றிக் கொண்டு வெளியே வந்தான்.

ஓரக்கண்ணால் அவனது ஒவ்வொரு செயலையும் பிரியா கவனித்துக் கொண்டிருந்தாள்.

'இன்னைக்கு இவர் கொஞ்சம் சரியில்லையே...' என்று மனதிற்குள் குறித்துக் கொண்டாள்.

'இரவு வீட்டுக்கு வந்த பிறகு பார்த்துக்கலாம்...' என்று எண்ணியவள், தருணை அழைத்துக் கொண்டு கிளம்பத் தயாரானாள்.


மூவரும் கிளம்பி சசி வீட்டில் வந்து இறங்கினர்.

வரும் வழியெங்கும் பைக் மிரர் வழியாக அடிக்கடி தனது மனைவியைப் பார்வையால் வருடிக் கொண்டுதான் இருந்தான் பரத்.

அதை உணர்ந்தாலும், உணராதது போலவே இருந்தாள் பிரியா.

ஆனால் அவளுக்குள்ளும் ஒரு சிறிய குறுகுறுப்பு தோன்ற ஆரம்பித்திருந்தது.

ஆகையால் அமைதியாகவே இருந்தாள்.

பிறந்தநாள் கொண்டாட்டமும் நன்றாக முடிந்தது.

அனைவரும் சிரித்துப் பேசிக் கொண்டிருந்தனர்.

உறவினர்களைக் கவனிப்பதில் வினி பிஸியாக இருந்தாள்.

இரவு நேரமாகி விட்டதால், தருண் தூக்கத்திற்கு சிணுங்க ஆரம்பித்தான்.

அப்போது பானுமதி, சாப்பாட்டை ஒரு தட்டில் போட்டு எடுத்து வந்து பிரியாவிடம் கொடுத்தார்.

"தருணுக்கு ஊட்டி விடு. அவன் தூக்கத்துக்கு சிணுங்குறான் பாரு. நம்ம வீட்டுக்குப் போறதுக்குள்ள சாப்பிட வைக்க முடியாது.

எல்லாரும் போனதுக்கு அப்புறம் சாப்பிட வைக்கிறதும்கூட சரியா இருக்காது.

நான் இங்க இருக்கிறவங்களைப் பார்க்குறதுல அவனுக்கு ஊட்ட முடியல. நீ இப்பவே ஊட்டி விடு," என்று கூறிவிட்டு சென்றார்.

"சரிங்க அத்தை," என்று வாங்கிக் கொண்டாள்.

பரத் அருகிலேயே இருந்தான்.

"தருண், வாடா சாப்பிடலாம்," என்று அழைத்தாள்.

"இல்ல. நான் அப்பா கிட்டதான் இருப்பேன்," என்று அடம்பிடித்தான்.

"சரி, கொடு. நான் ஊட்டி விடுறேன்," என்றான் பரத்.

உடனே,"இல்ல! அம்மாதான் ஊட்டி விடணும்," என்று தருண் மீண்டும் அடம்பிடித்தான்.

இருவருக்குமே,"இது என்னடா நமக்குத் திடீர்னு வந்த சோதனை?"என்றுதான் தோன்றியது.

என்றும் இல்லாமல் இன்று மட்டும் அவன் தன்னிடம் ஒட்டிக் கொண்டிருந்தான்.

அதுவும் பிரியா ஊட்ட வேண்டும் என்று பிடிவாதம் பிடிக்கிறான்.

ஏற்கனவே மாலை முழுவதும் அவளிடமிருந்து பார்வையைத் திருப்ப முடியாமல் தவித்துக் கொண்டிருந்தான் பரத்.

இப்போது அவள் அருகிலேயே அமர்ந்து தருணுக்கு ஊட்டிக் கொண்டிருந்தாள்.

சிரித்துக் கொண்டே பிரியாதான் ஊட்டி விட ஆரம்பித்தாள்.

அப்படியே ஊட்டிக் கொண்டிருந்தபோது, திடீரென்று போதும் என்பதற்காக தருண் முகத்தைத் திருப்பிக் கொண்டான்.

அவன் திரும்பிய வேகத்தில், அவள் "ஆ..." என்று உணவை நீட்டிய கை நேராக பரத்தின் உதட்டருகே வந்து நின்றது.

ஒரு நொடி இருவருமே அதிர்ச்சியில் உறைந்து போனார்கள்.

தூரத்தில் இருந்து தருணின் சேட்டைகளைப் பார்த்துக் கொண்டிருந்த வினி, மாலையிலிருந்து தனது அண்ணனின் பார்வை அடிக்கடி அண்ணியையே தேடுவதை கவனித்திருந்தாள்.

அதனால் அவளது கவனமும் அடிக்கடி அவர்கள் மீதே இருந்தது.

இப்போது கிடைத்த வாய்ப்பை விட்டுவிடக் கூடாது என்று நினைத்தாள்.

இருவரும் சிலை போல நின்றிருப்பதைப் பார்த்தவள்,

"அண்ணா என்னண்ணா, வேடிக்கை பார்த்துட்டு இருக்கீங்க?

அண்ணி ஊட்டுறாங்கல்ல! எவ்வளவு நேரம் கை நீட்டி இருப்பாங்க?

ஒரு வாய் வாங்கிக்கிட்டா என்ன வந்துச்சு? குறைஞ்சா போயிடுவ?" என்று பரத்தின் தோளைத் தட்டிக் கேட்டாள்.

பிரியாவோ கூச்சத்தில் சிவந்து போனாள்.

"இல்ல... அது..." என்று தடுமாறினாள்.

" ஊட்டுங்க அண்ணி." என்று வினி மேலும் வம்பிழுத்தாள்.

அப்போதுதான் அனைவரும் தங்களைப் பார்த்துக் கொண்டிருப்பதை உணர்ந்தனர்.

அதே நேரத்தில் அருகில் வந்த சசி,

"வாங்கு டா மச்சான்! நீயும் ஒரு வாய் வாங்கிக்கோ. பிரியா, குடு!" என்று சிரித்தான்.

அனைவரும் தங்களைச் சுற்றி நிற்பதை உணர்ந்த பிரியா, வேகமாக அந்த ஒரு வாய் உணவை பரத்துக்கு ஊட்டி விட்டாள்.

பரத்தோ அவளைப் பார்த்துக் கொண்டே அதை வாங்கிச் சாப்பிட்டான்.

உணவை வாங்கும்போது லேசாக அவளது விரலைத் தனது உதட்டால் தொட்டுவிட்டான்.

அவளோ உடனே கையை இழுத்துக் கொண்டு, அவசரமாகத் தலையைத் திருப்பிக் கொண்டாள்.

கன்னங்கள் முழுவதும் சிவந்து போயிருந்தன.

அவளைப் பார்த்த பரத், தலையைக் கோதிக் கொண்டான்.

நண்பனின் பார்வையைப் பார்த்த சசி நிலைமையைப் புரிந்து கொண்டான்.

"தருணுக்கு தூக்கமா இருக்கும். நான் ரூம்ல போய் அவனை படுக்க வைக்கிறேன்," என்று கூறி தருணைத் தூக்கிக் கொண்டு உள்ளே சென்று விட்டான்.

வினியும்,"எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு," என்று கூறிவிட்டு அங்கிருந்து நகர்ந்தாள்.

அதன்பிறகு இருவர் மட்டுமே அங்கே இருந்தார்கள்.

வார்த்தைகள் இல்லை.

ஆனால் பார்வைகள் பேசிக் கொண்டிருந்தன.

ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டும், விலகிக் கொண்டும் இருந்தார்கள்.

சிறிது நேரம் அப்படியே சென்றது.

அங்கு விளையாடிக் கொண்டிருந்த குழந்தைகளின் சத்தத்தில்தான் இருவரும் மீண்டும் நிகழ்காலத்திற்கு வந்தனர்.

அதன்பிறகு பரத்தால் சுத்தமாகவே அவளை விட்டு விலக முடியும் என்று தோன்றவில்லை.

இன்று முழுவதும் அவனுக்குள் நடந்த மாற்றம் ஒன்றை மட்டும் தெளிவாக உணர வைத்தது.

பிரியா அவனுக்கு வெறும் மனைவி மட்டுமில்லை.

அவளை காதலிக்க ஆரம்பித்து விட்டான்.

அந்த உண்மையை இனியும் மறைக்க முடியாது என்று புரிந்தவனுக்கு, சீக்கிரமே தனது காதலை அவளிடம் வெளிப்படுத்த வேண்டும் என்ற முடிவும் உறுதியாக உருவாகி இருந்தது.


இருக்கும் சூழலைக் கருத்தில் கொண்டு இருவரும் விலகி, அவரவர் வேலையைப் பார்க்கச் சென்று விட்டார்கள்.

ஆனால் ஒருவனின் பார்வை வினியையே வட்டமிட்டுக் கொண்டிருந்ததை அவள் கவனிக்கவில்லை என்பதுதான் உண்மை.

அவளது முழு கவனமும் அண்ணன், அண்ணி மீதே இருந்ததால், தன்னைச் சுற்றி நடப்பதை கவனிக்கவில்லை.

அந்த நேரத்தில் ஒரு பெண்மணி சசியிடம் வந்து பேசினார்.

"டேய் சசி, உன்கிட்ட கொஞ்சம் பேசணும் டா," என்றார்.

"என்ன சித்தி?" என்று கேட்டான்.

"சங்கருக்குப் பொண்ணு பார்த்துட்டு இருக்கோம். உனக்குத் தெரியும் தானே?" என்றார்.

"பொண்ணு பார்க்கணுமா? இல்ல பார்த்து வச்சிருக்கீங்களா? பேசி முடிக்கணுமா?" என்று சசி சிரித்தபடி கேட்டான்.

"இப்போதான் டா. இங்கதான் உன் தம்பி ஒரு பொண்ணைப் பார்த்து பிடிச்சிருக்குன்னு சொல்லி இருக்கான்.

இதுவரைக்கும் எந்தப் பொண்ணைக் காட்டினாலும் வேணாம்னு சொன்னவன், இப்போதான் ஒருத்தியைப் பிடிச்சிருக்குன்னு சொல்றான்.

அதான் அதைப் பற்றி உன்கிட்ட பேசலாம்னு வந்தேன்," என்றார்.

புன்னகையுடன் கேட்டுக் கொண்டிருந்த சசிக்கு,

'நம்ம குடும்பத்துல அப்படி யாரை பார்த்திருப்பான்?'என்ற எண்ணம் வந்தது.

"யாரு சித்தி?" என்று கேட்டான்.

"நீ இவ்வளவு நேரம் ஒரு பொண்ணு கிட்ட பேசிட்டு இருந்தல்ல... அந்தப் பொண்ணுதான்டா," என்றார்.

'நான் பேசிட்டு இருந்த பொண்ணா?'என்று யோசித்துக் கொண்டிருந்தான்.

அப்போது தூரத்தில் நின்ற வினியை நோக்கிக் கை காட்டினார்.

ஒரு நொடி சசிக்கு அதிர்ச்சியாக இருந்தது.

அதே நேரத்தில் மகிழ்ச்சியும் கூட.

"ஓ... அதுவா சித்தி?

வினி... நம்ம வினிதா?

நம்ம பானுமதி அத்தையோட பொண்ணு.

என்னோட ஃப்ரெண்ட் பரத்தோட தங்கச்சி," என்றான்.

"ஆமாம்டா. அவளைத்தான் சொல்றேன்.

பேசி முடிச்சிடணும் டா.

உனக்கு நம்ம சங்கரைப் பத்தி சொல்ல வேண்டியதே இல்லை. நல்ல பையன்.

பேசி முடிச்சிட்டா போதும்," என்று கூறினார்.

சசி ஒரு மாதிரி சிரித்தான்.

"என்னடா ஒரு மாதிரி சிரிக்கிற?" என்று கேட்டார்.

"ஐயோ சித்தி, அப்படி எல்லாம் இல்லை.

சங்கரை விட வேற நல்ல மாப்பிள்ளை எங்க தேடினாலும் கிடைக்க மாட்டான்.

அவன் நல்ல பையன்தான்.

நான் பேசுறேன்.

இதையே இப்பவே பேசுறேன்.

நீங்க கொஞ்சம் பொறுமையா இருங்க," என்று கூறினான்.

அவர் நிம்மதியாகச் சென்றதும், சசி நேராக நடந்துச் சென்றது பானுமதி இருந்த இடத்திற்குத்தான்.

ஏனெனில் இந்த விஷயத்தை முதலில் அவரிடம்தான் பேச வேண்டும் என்று அவனுக்குத் தோன்றியது. அதோடு, வினியின் மனதிலும் ஏதாவது விருப்பம் இருக்கிறதா என்பதை அறியாமல் எந்த முடிவையும் எடுக்கக் கூடாது என்பதையும் அவன் நன்றாகவே அறிந்திருந்தான்.


பானுமதியிடம் சென்ற சசி,
"அத்தை, அம்மாவோட ஒண்ணு விட்ட தங்கச்சி சுமதி இருக்காங்களே... அவங்க பையன் சங்கருக்கு நம்ம வினியைக் கேக்குறாங்க.

இங்கதான் வந்திருக்கான். அவனுக்கு வினியை பிடிச்சிருக்காம். பொண்ணு கேக்குறாங்க.நீங்க என்ன சொல்றீங்க?" என்று கேட்டான்.

பானுமதி அவனைப் பார்த்து சிரித்தார்."இவ்வளவு தூரம் வந்து என்கிட்ட பேசுறேன்னா, எனக்கு தெரியாதா?

வினிக்கு இல்ல, நம்ம வீட்டுக்கு சரிப்பட்டு வராத மாப்பிள்ளையா இருந்தா, நீ இவ்வளவு தூரம் பேசுவியா?அத்தை கிட்ட கொண்டு வந்து இருப்பியா?

நீயே பேசி முடிச்சிருப்ப மாட்டேன்னு எங்களுக்குத் தெரியாதா?" என்றார்.

சசி சிரித்தான்.

"ஆனா இதை நான் முடிவு பண்ண முடியாது இல்லடா.

கட்டிக்கப் போறது வினி.

அவ அண்ணனும், அவளும் என்ன சொல்றாங்கன்னு பார்க்கணும் இல்ல?" என்றார்.

"அத்தை, வினிகிட்டயும் அவன் கிட்டயும் பேசுறது என் பொறுப்பு.

நீங்க சொல்லுங்க," என்றான்.

"எனக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை.

நம்ம வீட்டுப் பொண்ணை கட்டிக் கொடுக்க எனக்கு சம்மதமா இல்லையா என்பதை விட, வினிக்குச் சம்மதமா என்பதுதான் முக்கியம்.

நீ அவகிட்ட பேசுடா.

அதுக்கப்புறம் பாத்துக்கலாம்," என்றார்.

"சரி அத்தை," என்றவன் நேராக வினியிடம் சென்றான்.

அவனைப் பார்த்ததும்,

"என்ன மாமா? சொல்ற.

யாராவது வந்து பொண்ணு கேட்டாங்கன்னா, இப்படித்தான் வந்து என்கிட்ட பேசிட்டு இருப்பியா?" என்று வினி கிண்டலாகக் கேட்டாள்.

"வினி, உனக்கு அவனைப் பிடிக்கலையா?" என்று கேட்டான்.

"மாமா, நீ சொல்ற ஆளு யாருன்னே எனக்குத் தெரியாது.

நீ மாட்டும் சொல்ற. என்ன இருந்தாலும் உன்னை மாதிரி மாப்பிள்ளை கிடைக்குமா?

வேணும்னா உன்னையே கட்டிக்கிறேன்," என்று விளையாட்டாகச் சொன்னாள்.

"அதுக்கு உன் அக்கா சம்மதம் சொல்லணும் இல்ல?" என்றான்.

"நான் எதுக்குடி சம்மதம் சொல்லணும்?" என்று கேட்டபடியே ரேகா அங்கு வந்தாள்.

"மாமாவைக் கட்டிக்கத்தான்!" என்று வினி சிரித்தாள்.

"கட்டிக்கோ, கட்டிக்கோ!

நானும் கொஞ்சம் நிம்மதியா இருப்பேன். உன் மாமா தொல்லை தாங்கல!" என்று ரேகாவும் கலாய்த்தாள்.

"அக்கா!" என்று வினி சிணுங்கினாள்.

"கொய்யால! சக்களத்தி சண்டை போட வர்றியா?" என்று சசி சிரித்தான்.

அதன்பிறகு முழு விஷயத்தையும் ரேகாவிடமும் கூறினான்.

வினியை இருவரும் ஆர்வமாகப் பார்த்தார்கள்.

"நீ இதைப் பற்றி அண்ணன் கிட்ட பேசு மாமா.

என்கிட்ட பேசுறதை விட, அம்மாகிட்டயும் ,அண்ணா, அண்ணிகிட்டயும் பேசு," என்றாள் வினி.

"நான் கேட்டது உனக்கு கல்யாணம் பண்ணிக்க சம்மதமா என்பதைத்தான்."

" எனக்கு அவர் யாருன்னு தெரியாதே? பின்ன எப்படி?"

சிறிய எதிர்பார்ப்புடன் சங்கரை நோக்கிக் கைகாட்டினான்.

வினியும் அந்தத் திசையைப் பார்த்தாள்.

அந்த ஒரு நொடியில் ஏனோ அவளுக்கு சங்கரை பிடித்துவிட்டது போல ஒரு உணர்வு தோன்றியது.

அவள் அமைதியாகி விட்டாள்.

அதைப் பார்த்த ரேகா, தன் கணவனைப் பார்த்து சைகையிலேயே,"அவளுக்கு ஓகே போல..."என்று கூறினாள்.

அதைப் புரிந்து கொண்ட சசி, நேராகப் பரத்திடம் சென்றான்.

அவன் அப்போது சில வேலைகளைப் பார்த்துக் கொண்டிருந்தான்.
"என்னடா?" என்று கேட்டான் பரத்.

"அம்புட்டு வேலையை வச்சுக்கிட்டு இங்க என்னோட முகத்தையே பார்த்துட்டு நிக்கிற.என்ன விஷயம்?" என்று சிரித்தபடி கேட்டான்.

சசி ஒரு நொடி அவனைப் பார்த்துவிட்டு, "வந்தவங்களைக் கவனிக்கிறது இருக்கட்டும். உன்கிட்ட ஒரு விஷயம் பேசணும்," என்றான் சசி.

"என்ன விஷயம்?" என்று பரத் கேட்டான்.

அவனும் முழு விஷயத்தையும் கூறி முடித்தான்.

அதைக் கேட்ட பரத்,"சரி, என்ன பண்ணலாம்னு சொல்லு?" என்றான்.

"என்னடா, என்ன பண்ணலாம்னு என்ன கேட்கிற?

நான் தான் இந்த மாதிரி வந்து கேக்குறாங்கன்னு சொல்றேன்ல.

நீதான் சொல்லணும்," என்றான் சசி.

பரத் சிரித்துக் கொண்டே,

"முடிவு பண்ணாமவா என்கிட்ட வந்து இவ்வளவு தூரம் பேசிட்டு இருக்க?

ஏன்? வினி வாழ்க்கையில முடிவு எடுக்கிற உரிமை உனக்கு இல்லையா?

எப்படியும் அம்மாகிட்ட, வினிகிட்ட எல்லாம் பேசிருப்ப.

இப்ப மட்டும் வந்து என் விருப்பத்தை ஏன் கேட்க நின்னுட்டு இருக்க?

நான் என்ன வேணாம்னா சொல்லப் போறேன்.பேசியே முடிச்சிட்டு. இவன்தான் மாப்பிள்ளைன்னு சொல்லிட்டு தானே வந்து நிக்கிற?" என்று சிரித்தான்.

நண்பனின் தோளில் அடித்த சசி,

"டேய்..." என்றான்.

அதைக் கேட்டு அருகில் இருந்தவர்கள் சிரிக்க, சசியும் சத்தமாகச் சிரித்தான்.

"உன் தங்கச்சிக்கிட்ட பேசினியா?"

"ஃபர்ஸ்ட்டா பேசினதே தங்கச்சிக்கிட்டதான்," என்றான்.
அதிர்வாக பானுமதியும், மற்றவர்களும் அவனைப் பார்த்தனர்.

பரத் பிரியாவைப் பார்த்தான்.

அவளும் தலையசைத்துச் சிரித்தாள்.

"என்ன சொன்னா?" என்று பரத் கேட்டான்.

"என்ன பண்றான், எங்க வேலை செய்றான், இனி இங்கதான் இருப்பானா, குடும்பம் எப்படி என்று எல்லாத்தையும் விசாரிச்சா.

அத்தை கூட இவ்வளவு கேட்கல.

ஆனா என் தங்கச்சி ஒண்ணும் விடாம, அவ வாழப் போற வீட்டைப் பற்றி எல்லாம் கேட்டுட்டா.

அதுக்கப்புறம்தான்,

நீங்க அவர்கிட்டயும் அத்தைகிட்டயும் பேசுங்க.

முக்கியமா வினிக்குச் சம்மதம்னா மேற்கொண்டு பேசுங்க அண்ணா.

அவங்க கிட்ட பேசாம ஏன் என்கிட்ட வந்து இருக்கீங்க?ன்னு கேட்டா," என்று கூறினான்.

அந்த நேரத்தில் வினி வேகமாக வந்து பிரியாவைக் கட்டிக் கொண்டாள்.

அதைப் பார்த்த பரத்திற்கும் அளவில்லாத மகிழ்ச்சியாக இருந்தது.

அனைவருக்கும் இந்தச் சம்பந்தம் பிடித்திருந்தது.

அப்போது சுந்தரம்,"சரி சொல்லுடா. உனக்கு ஓகேவா?" என்று பரத்திடம் கேட்டார்.

"மாமா, நீங்க பார்த்து வளர்ந்த பிள்ளைங்க.

சசி, நம்ம வினிக்குத் தோதுப்படாத பையன்னு தெரிஞ்சிருந்தா, அம்மாகிட்டயோ, பிரியாகிட்டயோ, ஏன் வினி வரைக்கும் கொண்டு போய் இருப்பானா?

அவனுக்குச் சரின்னு பட்டதாலதான் இவ்வளவு தூரம் கொண்டு வந்து இருக்கான்," என்றான் பரத்.

உடனே வினி,"உனக்கு ஏன் மாமா பார்த்தவுடனே சரின்னு சொல்லிட்ட?" என்று கேட்டாள்.

சசி சிரித்துவிட்டு,

"இது என்ன வினி?உன்னை வெளிய எங்கயும் கட்டிக் கொடுக்க வேண்டியது இல்லை.

அரை மணி நேர டிராவல்தான்.

அவனை சின்ன வயசுல இருந்து பார்த்து வளர்ந்து இருக்கேன்.

நீதான் அவனை பார்த்திருக்க மாட்ட.எங்க கல்யாணத்தப்ப அவன் வெளிநாட்டுல இருந்தான்.

அதனால உனக்குத் தெரியாது.
இப்போ ஒரு மாசம் முன்னாடிதான் வந்தான்.

இனிமே இங்கேதான் இருக்கப் போறேன்னு சொல்லிட்டான்.

அதையும் கேட்டுட்டுத்தான் நான் பிரியா கிட்டயே பேச ஆரம்பித்தேன்," என்றான்.

அனைவரும் சந்தோஷமாகத் தலையசைத்தனர்.

அப்போது பானுமதி,
"இன்னும் புள்ள படிச்சிட்டு இருக்கே..." என்று கூறினார்.

உடனே சசி,"இப்போ நிச்சயம் மட்டும் வச்சுக்கலாம். கல்யாணத்தை வினி படிப்பு முடிஞ்சு, அதுக்கப்புறம் மூணு மாசம் கழிச்சு வச்சுக்கலாம்," என்றான்.

அந்த யோசனை அனைவருக்கும் சரியாகவே பட்டது.

வினிக்கும் சங்கருக்கும் பேசி முடித்துவிட்டு, பிறந்தநாள் விழாவையும் மகிழ்ச்சியாக முடித்தார்கள்.

அதன்பிறகு அனைவரும் மனநிறைவுடனும் சந்தோஷத்துடனும் அவரவர் வீடுகளை நோக்கிக் கிளம்பினர்.
 
Top Bottom