• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

நெஞ்சோரம் துஞ்சும் நினைவுகளே - 1

நிதனிபிரபு

Administrator
Staff member
நெஞ்சோரம் துஞ்சும் நினைவுகளே!



அத்தியாயம் 1



அன்று குட்டி மிளிருக்கு ஆறாவது பிறந்தநாள். காலையிலேயே தன் முத்தங்களால் குளிப்பாட்டித்தான் மகளை எழுப்பியிருந்தாள் சத்யவாணி.

அழகான பட்டுப் பாவாடை சட்டையில் வாணி அவளைத் தயார் செய்துவிட, அவளின் அம்மம்மா குணவதி, அவர்கள் வீட்டுக்கு அருகில் இருக்கும் கோயிலுக்குக் கூட்டிச் சென்றுவிட்டு வந்தார். தாத்தா சிவமூர்த்தி, அவள் பெயரில் பெரும் தொகைப் பணத்தை நிலையான வைப்பில் இட்டிருந்தார்.

வாணியின் அண்ணா பவன், தங்க(gold)ச் சங்கிலி ஒன்றைத் தன் மருமகளுக்குப் பரிசளித்திருந்தான்.

காலை உணவோடு மகிழ்ச்சியான ஆரவாரங்களும் அடங்க, நேரத்தைப் பார்த்துவிட்டு எழுந்து தயாராகச் சென்றாள் வாணி.

அதைக் கவனித்த பெரியவர்கள் இருவரினதும் முகங்கள் மாறின.

“நாலு வருசமா நீங்க இலங்கைலயே இல்ல பிள்ளை. அப்பவே உங்களுக்கு வெளி உலகம் தெரியாது. துணைக்கு ஒரு ஆள் வேணும். இப்ப இஞ்ச இன்னும் மோசம். சின்னவாவோட உங்களை அனுப்பிப்போட்டு நாங்க பயந்துகொண்டு இருக்கேலாது. நீங்க பேசாம நில்லுங்கோ. முந்தி மாதிரி அண்ணாவே கூட்டிக்கொண்டு போகட்டும்.” அவள் அறை வரைக்கும் பின்னாலேயே வந்து சொன்னார் குணவதி.

வாணி அதற்கு மறுப்பாகவோ இசைவாகவோ எதுவுமே சொல்லாமல் அலமாரியைத் திறந்து மாற்றுடைகளை எடுக்க ஆரம்பித்தாள்.

“வெயில் வேற எறிக்க ஆரம்பிச்சிட்டுது. இந்த நேரம் ஏனம்மா அலைய? இனி வாகன நெரிசலும் கூடிடும்.” என்று அவளைத் தடுப்பதிலேயே குறியாக இருந்தார் குணவதி.

“பிள்ளக்குஞ்சு, அம்மா சொன்னது கேக்கேல்லையா? அங்க எல்லாம் நீங்க போக வேண்டாம். அண்ணாக்குச் சொல்லிட்டன். இப்ப வருவான்.” என்றார் சிவமூர்த்தி.

அவர் அப்படிப் பாசமாக அழைத்தால் அத்தனைக்கும் தலையாட்டிவிடுவாள் வாணி. ஆனால் இன்று, அவருக்கும் பதிலேதும் சொன்னாள் இல்லை.

குளியலறை சென்று குளித்துவிட்டு வந்து, மென் சாம்பலில் பல வர்ணப் பூக்கள் தூவிய, பின்னால் வெட்டு வைத்த, முழு நீள கௌன் அணிந்து, அதற்குக் கறுப்பில் ஒரு பெல்ட்டை இடுப்பில் கட்டிக்கொண்டாள். தலைவாரி, நெற்றியில் சிவப்பா கறுப்பா என்று பிரித்தறிய முடியா ஸ்டிக்கர் பொட்டு ஒன்றை எடுத்து ஒட்டிக்கொண்டாள்.

கழுத்தில் எப்போதும் அவள் அணிந்திருக்கும் சற்றே தடிமனான ஒரு செயின். ஒரு பக்கக் கையில் மணிக்கூடு. கைப்பேசியை எடுத்து மறக்காமல் கைப்பையில் வைத்துக்கொண்டு தயாராகி வந்தாள்.

இதற்குள் அவள் தமையன் பவன் வந்திருந்தான். திருமணமாகி மனைவி வீட்டில் இருக்கிறான். இப்போது அவர்களின் பலசரக்குக் கடையைக் கவனித்துக்கொள்வது அவன்தான்.

“அம்மா அப்பா அவ்வளவு சொல்லியும் எங்க வெளிக்கிடுறாய் வாணி? நீ நில்லு. நான் கூட்டிக்கொண்டு போறன்.” எப்போதுமே அவனுடைய அந்த அதட்டல் தொனிக்கு அவள் தலை சரி என்று மட்டும்தான் ஆடும். இன்றும் பழக்கதோசத்தில் அதைத்தான் செய்ய நினைத்தாள்.

ஆனால், பழக்கதோசத்தை விடவும் பட்டறிவின் பலமும் பலனும் அதிகமாயிற்றே. “நானே போறன் அண்ணா.” என்று சுருக்கமாக உரைத்தாள்.

“என்ன நானே போறன்? முதல் இது என்ன புதுசா, சொல்லுறதைக் கேக்காம நடக்கிற பழக்கம்?” என்று இப்போதும் கண்களில் கோபம் மின்ன அதட்டினான் அவன்.

அவளுக்கு விழிகள் கரிக்கும் போலிருந்தது. ஆனாலும் ஆழ்ந்த மூச்சை இழுத்துவிட்டுத் தன்னை நிதானப்படுத்திக்கொள்ள முனைந்தாள்.

“இப்ப என்னத்துக்கு அவனுக்கு முன்னால போய் நிக்கோணும் எண்டு நிக்கிறாய்? அவனும் அவனின்ர அம்மாவுமா சேந்து உன்னப் போட்டுப் படுத்தின பாடு காணாதா? இல்ல, நீயே போய்ப் பாக்கிற அளவுக்கு அவன் என்ன பெரிய இவனா?”

சட்டென்று நிலைகுலைந்துபோனாள் வாணி. தமையனின் வார்த்தைகள் கூர் ஈட்டியாக அவள் இதயத்தைத் தாக்கிற்று. அப்படி அவன் முன்னால் போய் நின்று என்ன செய்துவிடப் போகிறாள்? இல்லை, இனி என்ன செய்துவிட முடியும்? அதுதான் எல்லாம்… எல்லாமே முடிந்து போயிற்றே.

பதிலுக்குப் பதில் என்று பேசிப் பழக்கமில்லாதவள் அமைதியாகக் கேட்டுக்கொண்டாலும் தன் முடிவிலிருந்து மாறவில்லை. மகளுக்கும் தேவையானவற்றை எடுத்துக்கொண்டு வாசலுக்கு வந்து செருப்பை மாட்டினாள்.

“வாணி!” என்றான் தமையன் அதட்டலாக. அவனுக்கு அவள் நடத்தை கொஞ்சமும் பிடிக்கவில்லை. “என்னப்பா நீங்களும் பேசாம இருக்கிறீங்க? இதுக்குத்தான் திரும்ப இஞ்ச கூப்பிடாதீங்க, கட்டாரிலேயே இருக்கட்டும் எண்டு சொன்னனான். நீங்கதான் கேக்கல்லை!” என்று தகப்பனிடமும் பாய்ந்தான்.

அவர் மகனுக்குப் பதில் எதுவும் சொல்லாமல் புதிதாகத் தெரியும் மகளையே பார்த்திருந்தார்.

“இஞ்ச இருந்து டவுன் வரைக்கும் போகோணும். உன்னத் தனியா அனுப்பிப்போட்டு எங்களால பயந்துகொண்டு இருக்கேலாது. சின்னவா வேற இருக்கிறா. அண்ணா அவ்வளவு சொல்லியும் கேக்காம என்னம்மா இது?” என்று படபடத்துக்கொண்டு வந்த குணவதியை வாசலில் நின்றவள் நிமிர்ந்து நோக்கினாள்.

“நீங்க எல்லாரும் சொன்னதக் கேட்டுத்தானம்மா இந்த நிலமைல இருக்கிறன். இனியாவது என்னை என்ர பாட்டுக்கு விடுங்க. ஒண்டும் தெரியாட்டி என்ன? பட்டுத் தெரிஞ்சுகொள்ளுறன்.” என்று சொல்லிவிட்டுப் புறப்பட்டாள் அவள்.

அப்படியே நின்றுவிட்டார் குணவதி. தன் மகள்தானா இது என்று பார்த்தார். அவர் அறிந்த மகளுக்கு இப்படி எல்லாம் பேசவே தெரியாது.

ஆற்றாமையுடன் கணவரின் புறம் திரும்பி, “பாத்தீங்களாப்பா, என்ன சொல்லிப்போட்டுப் போறா எண்டு? எங்களாலதானாம் அவாக்கு இந்த நிலை? இவவால தினம் தினம் நாங்க அழுறோமாம். ஆசையா பெத்த மகள் எண்டு கண்ணுக்க வச்சுப் பாத்ததுக்கு நல்ல பலன் கிடைச்சிருக்குப் பாத்தீங்களா?” என்று குமுறினார்.

குணவதியைப் போல் புலம்பாவிட்டாலும் அவருமே மகளின் இந்த மாற்றத்தைப் பற்றித்தான் யோசித்துக்கொண்டிருந்தார். முக்கியமாக அவள் சொல்லிவிட்டுப் போனதைப் பற்றி.

“தம்பிக்கு அங்க கடைல நிம்மதியா இருக்கத் தெரியாமயோ இந்த வெயிலுக்க ஓடி வந்தவன்? கூடப் பிறந்தவள அலைய வைக்கக் கூடாது எண்டு அவன் வந்தா என்ன சொல்லிப்போட்டு போறா? நீங்களும் கேட்டுக்கொண்டு பேசாம இருக்கிறீங்கப்பா.”என்று மகள் மீதான ஆதங்கத்தைக் கணவரின் இறக்கினார் குணவதி.

“விடு குணம்!” என்றார் சிவமூர்த்தி மெல்லிய சலிப்புடன்.

மகள் பக்கத்தில் இல்லாத இந்த நான்கு வருடங்களில் அவர் எதையும் பெரிதாக உணரவில்லை. இன்னும் சொல்லப்போனால் நடந்த அனைத்திலிருந்தும் வெளியே வந்திருந்தார்.

ஆனால் இப்போது, மகளையும் பேத்தியையும் பக்கத்திலிருந்து பார்க்கையில் பல விடயங்கள் முகத்தில் அறைந்தன.

“என்னத்தையப்பா விடுறது? எல்லாம் உங்களால. ஆர எங்க வைக்கோணுமோ அங்க வச்சிருந்தா இதெல்லாம் நடந்திருக்குமா? எவ்வளவு சொன்னன், கேட்டீங்களா?” என்று சினந்தான் பவன்.

அவர் ஒன்றுமே சொல்லவில்லை. விழிகளை மூடியபடி அமர்ந்திருந்தார். இவர்கள் இருவரினதும் கோபம், குமுறல் எதுவும் அவர் செவிகளைத் தாண்டி நுழையவில்லை. ஆனால், வாணி சொன்ன, ‘நீங்க எல்லாரும் சொன்னதக் கேட்டுத்தானம்மா இந்த நிலமைல இருக்கிறன்.’ என்ற வார்த்தைகள் அவர் நெஞ்சைப் பதம் பார்த்துக்கொண்டே இருந்தன.

“அப்பாவப் பாக்கத்தானே அம்மா போறம்?” அவளின் தலைக்கு ஏற்ற அளவிலான சின்ன தலைக்கவசம் அணிந்து, அன்னையின் இடுப்பை மிக இறுக்கமாகக் கட்டிக்கொண்டு ஸ்கூட்டியில் அமர்ந்திருந்த மிளிர், ஆர்வமும் ஆசையுமாக வினவினாள்.

“ஓம் செல்லம்!” எனும்போதே அவளுக்குக் குரலடைத்தது.

கடந்த நான்கு வருடங்களாக அவள் இந்த நாட்டிலேயே இல்லை. கட்டாரில் இருக்கும் சித்தியோடு சென்று தங்கியிருந்தாள்.

ஆரம்பத்தில் பெரும் விடுதலையாக இருந்தாலும் கடந்த இரு வருடங்களாக அவளுக்குள் பல மாற்றங்கள். எந்தத் தொந்தரவுகளும் இல்லாத அமைதியான பொழுதுகள் கிட்டியதாலோ என்னவோ அவள் நடத்திய சுய பரிசீலனை பெரும் கண் திறப்பாகத்தான் அமைந்து போயிற்று.

தன்னைத் தானே ஆராய்ந்து, தனது செயல்கள், எண்ணங்கள், முடிவுகள், பயங்கள், தயக்கங்கள், நடத்தைகள் பற்றிச் சிந்தித்து, தான் விட்ட தவறுகளை எல்லாம் புரிந்துகொள்ள ஆரம்பித்தபோது பதறிப்போனாள்.

உண்மையில் பதறித்தான் போனாள். கையில் கிடைத்த வைரத்தை வைரம் என்று தெரிந்தே தொலைத்தால் பதறாமல் என்ன செய்வாள்? அவளால் அவளையே மன்னிக்க முடியவில்லை. தனக்குள் அழுது அழுது இன்னும் அவள் அழுது முடிக்கவில்லை.

அது போதாது என்று இப்படியே இருந்து, இனியும் மற்றவர்களில் தங்கி வாழும் வாழ்க்கையைத்தான் வாழப்போகிறாயா என்கிற கேள்வி அவளை அரிக்க ஆரம்பித்திருந்தது.

அதற்குப் பெருமளவில் காரணம், அவள் சித்தி ஜெயமதி.

குணவதியை விடவும் இரண்டு வயதுதான் சின்னவர். ஆனாலும் இப்போதும் சிக்கென்று இருப்பது மட்டுமல்லாமல் அனைத்தையும் தானேதான் பார்ப்பார். சுயமாய் நிற்பதை அத்தனை வலியுறுத்துவார்.

இன்னும் சொல்லப்போனால் அவள் சித்தப்பா கூடச் சித்திக்குப் பிறகுதான். அந்தளவில் ஜெயமதியின் கை அவர்கள் வீட்டில் ஓங்கி நிற்கும். ஆணவமாக இல்லாமல் ஆளுமையாக.

உன் முடிவுகளை நீயே எடுக்கப் பழகு என்று அவள் கற்றுக்கொண்டதும் அவரிடம் இருந்துதான். என்ன அதற்கென்று அவள் கொடுத்த விலை? அவளின் சகலதுமாய் இருந்தவனை.

அவரைப் பார்க்கையில், அவர் சொல்கிறவற்றைக் கேட்கையில், அவர் ஒவ்வொன்றையும் கையாளும் விதத்தைக் கவனிக்கையில் சுய அலசல் அவளுக்குள் அவளை அறியாமலேயே நடக்க ஆரம்பித்திருந்தது.

அதன் முடிவுதான் அவள் திரும்ப இலங்கை வந்தது.

வந்ததும் திரும்பவும் அவளைப் பழைய கூட்டுக்குள் அடைக்கும் வேலையைத்தான் அவள் வீட்டினர் பார்க்க முயன்றனர். அவள்தான் திமிறிக்கொண்டு வந்திருக்கிறாள்.
 
Last edited:
Top Bottom