• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

பதிலுரை சொல்லடி பகல் நிலவே - 14

Vishakini

Moderator
Staff member
கண்களை மூடி இருந்தவன் பயணத்தில் அப்படியே தூங்கியும் விட்டான். மாயமித்ராவும் பக்கத்தில் அமர்ந்திருந்த காயத்ரியிடம் அவ்வப்போது அனுசரணையாகவும் வேலை சம்பந்தப்பட்டதையும் பேசிக்கொண்டே வந்தாள்.

ரஞ்சனாவோ ப்ளூடூத்தில் இளையராஜா பாடல்களை போட்டுவிட்டு கண்களை மூடி ரசித்து கொண்டே வந்தாள்.

வண்டியில் இருந்த ஐந்து பேரும் தங்களின் வேலைகளை பார்த்துக் கொண்டு பயணத்தை மேற்கொண்டனர்.

சிறிது நேர பயணத்திற்குப் பிறகு ஒரு ஹோட்டலை பார்த்து நிறுத்தினார் டிரைவர். அனைவரும் எழுந்து வண்டியிலிருந்து இறங்கி சாப்பிடுவதற்காக அந்த ஹோட்டலுக்குள் நுழைந்தனர்.


“சரி எல்லாருக்கும் என்ன வேணும்னு சொல்லுங்க, நான் ஆர்டர் பண்ணிட்டு வரேன்!” என்று பிரகாஷ் கண்ணா சொல்ல தங்களுக்கு வேண்டியவைகளை அனைவரும் கூறினர்.

மாயமித்ராவும், ரஞ்சனாவும் நாற்காலியில் அமர்ந்து பேசிக் கொண்டிருக்க ரிசப்ஷனில் ஆர்டர் செய்துவிட்டு வந்த பிரகாஷ் கண்ணா, மித்ராவின் பக்கத்தில் அமர்வதற்கு இடம் இருப்பதை கண்டு சந்தோஷத்தோடு அதில் அமர நினைக்க,


“காயு நீ இதுல உட்காரு, சார் இதுல உட்காரட்டும், நான் சார் பக்கத்துல உட்காருறேன்!” என ரெஸ்ட் ரூம் போய்விட்டு வந்த காயத்ரியிடம் கீர்த்தி கூறினாள்.

திடீரென்று கீர்த்தி அப்படி கூறவும் எல்லோரும் கீர்த்தியை சந்தேகமாக பார்த்தனர்,

திடீரென்று என்ன சொல்லி சமாளிப்பது என்று நினைத்த கீர்த்தி,

“மத்த எல்லா சீட்லயும் குஷன் சரியில்லாம இருக்கு, இதுல மட்டும் தான் நல்லா இருக்கு, ஏற்கனவே காயுவுக்கு உடம்பு சரியில்ல! அதான் இந்த குஷன் சீட்டில் உட்கார்ந்தா இன்னும் பெட்டரா பீல் பண்ணுவான்னு தான் உட்கார சொன்னேன்!” என்று சமாளித்தாள்.

காயத்ரி எதுவும் சொல்லாமல் அமைதியாக அமர, கீர்த்தியும் அவள் பக்கத்தில் அமர வேறு வழியில்லாமல் பிரகாஷ் கண்ணா கீர்த்தியின் பக்கத்திலேயே அமர்ந்து கொண்டான்.

வண்டியில் வரும்போதும் தன் பக்கத்தில் மித்ரா அமராததற்கு காரணம் கீர்த்தி தான் என நினைத்து ஏற்கனவே அவள் மேல் கோபம் கொண்டிருந்தவனுக்கு கீர்த்தியின் இந்த செய்கை இன்னும் அதிக கோபத்தை ஏற்படுத்தியது.

ரஞ்சனாவிற்கோ கீர்த்தி வேண்டுமென்று இதையெல்லாம் செய்வது போல் தோன்றியது. மாயமித்ராவோ இதையெல்லாம் கண்டு கொள்ளாமல் இருந்தாள்.


பிரகாஷ் கண்ணா ஆர்டர் செய்த சாப்பாட்டை சர்வர் வந்து கொடுத்திட, “ சரி எல்லாரும் சாப்பிடுங்க!” என சொல்ல அனைவரும் சாப்பிட தொடங்கினர்.


அங்கு ஆர்டர் பண்ணி இருந்த அனைத்து உணவு பொருட்களையும் முதல் முதலாக ரஞ்சனாவிடம் கொடுத்து “மித்ராவுக்கு வை” என்று பிரகாஷ் கண்ணா சொல்ல, ரஞ்சனாவுக்கு சிரிப்பு வந்தது.

மித்ராவிற்கோ பிரகாஷ் நடந்து கொள்வதை எல்லாம் பார்க்க கொஞ்சம் அசவுகரியமாக இருந்தது.

பிரகாஷ் கண்ணா மாயமித்ராவை ஒருதலையாக காதலிக்கிறான் என்று ஆபீஸில் இருந்த அனைவருக்கும் தெரிந்ததால் அவர்களுக்கு எதுவும் தவறாக தெரியவில்லை. மாறாக அவர்களும் புன்னகைத்தனர்.

ஆனால் மாயமித்ராவிற்காக பிரகாஷ் கண்ணா ஒவ்வொரு முறையும் மெனக்கிடல் செய்யும்போது இங்கு கீர்த்தியின் கண்கள் கோபத்தில் சிவந்து கொண்டிருந்தது.


“மித்ரா எடுத்து சாப்பிடுங்க, சிக்கன் லாலிபாப் நல்லா இருக்கும்!” என பிரகாஷ் கண்ணா சொல்ல

“ம்!” என சொல்லிவிட்டு வாயில் லேசாக எடுத்து வைக்க, அவளின் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தான் பிரகாஷ் கண்ணா.

அவளின் முகத்தில் ஏற்படும் உணர்வுகளை நுணுக்கமாக ஆராய்ந்தவன்

“என்னாச்சு மித்ரா நல்லா இல்லையா? அப்போ இத ட்ரை பண்ணுங்க” என்று ஸ்மோக்கி சிக்கனை தள்ளி வைத்தான்.


மாயமித்ராவோ, சிறு பின்னகையோடு பிரகாஷ் கண்ணா கொடுத்தான் என்பதற்காக தன் தட்டில் எடுத்து வைத்தாள்.


பிரகாஷ் கண்ணா, இரண்டு வருடங்களாக தன் மனதில் உள்ள காதலை மறைமுகமாக மாயமித்ராவிற்கு உணர்த்திக் கொண்டே இருப்பதை மித்ரா உணர்ந்தாலும், அமைதியாகவே இருந்தாள்.

தன் கடந்த கால அவளின் வடுக்கள் அவளை மௌனமாகவே இருக்க வைத்தது.

பிரகாஷ் கண்ணாவில் காதலை நிராகரித்து அவனை காயப்படுத்தவும் அவள் விரும்பவில்லை அதே சமயம் ஊக்குவித்து அவனை சந்தோஷப்படுத்தவும் விரும்பவில்லை. அவனுடைய காதலை அவள் உணரவில்லை என்பதை போலே அமைதியாக இருக்கிறாள்.

அனைவரும் சாப்பிட்டு முடித்து விட்டு வண்டியில் ஏறியதும், மித்ராவுக்கு என்று வாங்கி வைத்த ஸ்பெஷல் ஸ்வீட் பாக்ஸ் ஒன்றை மித்ராவின் கையில் கொடுத்தான்.

“ இது என்னது? “ என்று மித்ரா கேட்க,

“வாங்கி பிரிச்சு பாரு” என்று கூறினான் பிரகாஷ் கண்ணா.


மாயமித்ராவோ என்ன செய்வது என்று தெரியாமல் திணறிக் கொண்டிருக்க “வாங்கிக்கங்க மித்ரா உங்களுக்காக தான் வாங்கினேன்!” என்று உங்களுக்காக என்ற வார்த்தையில் அதிக அழுத்தத்தை கொடுக்க,

வேண்டாம் என்று சொன்னால் வருத்தப்படுவான் என்று நினைத்து வாங்கியவள் சாதுரியமாக,

“நன்றி சார்! நீங்க எங்க எல்லாரும் மேலயும் இவ்வளவு கேரிங்கா இருக்கிறத பார்க்கும்போது ரொம்ப சந்தோசமா இருக்கு. நீங்க இவ்வளவு கேரிங்கா இருந்தால் நாங்க இன்னும் சூப்பரா வேலை பாப்போம், நம்ம டீம்ல உள்ள மத்த நாலு பேருக்கும் ஷேர் பண்ணுங்க!”என சொல்லிவிட்டு பக்கத்தில் இருந்த காயத்ரியின் கையில் கொடுத்துவிட்டு அதில் ஒரே ஒரு ஸ்வீட்டை மட்டும் எடு கொஞ்சமாக கடித்துவிட்டு,


“தேங்க்ஸ் ஃபார் த ட்ரீட் சார்!” என அவனின் தனிப்பட்ட அன்பை ட்ரீட்டாக மாற்றி அவனின் காதல் அம்பு தன்னை தாக்கவில்லை என காட்டினாள்.

“மித்ரா உங்களுக்குத்தான்....” என பிரகாஷ் சொல்லிக் கொண்டிருக்கும்போதே வேகமாக அதில் ஒன்னை எடுத்த

“கீர்த்தி சார்... செமையா இருக்கு” என சொல்லிக்கொண்டு எடுத்து சாப்பிட காயத்ரியும் அதிலிருந்து எடுத்து சாப்பிட்டாள் .

இப்படி எல்லோரும் ஒன்று எடுத்து சாப்பிட்டு அதன் சுவையைப் பற்றி பெருமையாக பேசினர்.


அதையெல்லாம் கேட்ட பிரகாஷ் வெளியில் சிரித்தாலும், அவனுடைய கவலையை அவன் முகமே காட்டி கொடுத்தது.


பிரகாஷ் கண்ணாவின் உணர்வுகளை புரிந்து கொண்ட ரஞ்சனா,

அவன் அருகில் வந்து அவனை அழைத்துக்கொண்டு வண்டியை விட்டு கீழ இறங்கினாள்.


“இது என்ன புதுசா கண்ணா உனக்கு! இத தான அவன் ரெண்டு வருஷமா பண்றா?” எனச் சிரித்தாள்.

“ம்! வழக்கமா நடக்கிற விஷயங்களா இருந்தாலும் சில நேரம் வருத்தப்படுற மாதிரி இருக்கே?”


“இதுக்கே இப்படின்னா இன்னும் எவ்வளவோ பாக்கணும் கண்ணா நீ! கண்ணன் பின்னாடி தான் எல்லாரும் சுத்துவாங்க. ஆனால் இந்த கண்ணனையே ஒருத்தி சுத்த வைக்கிறத பார்க்கும்போது யானைக்கும் அடி சறுக்கும் போலன்னு தோணுது!” என சிரித்தாள்.


“என்னைய பார்த்தா உனக்கு சிரிப்பா இருக்கா, வீட்டில எவ்வளவு பிரஷர் தெரியுமா? இன்னைக்கு காலைல நம்ம பேசிக்கிட்டு இருக்கும்போது எனக்கு போன் கால் வந்துச்சுல அது பாட்டி தான். அத்தை ஒரு மாசம் ஆஸ்திரேலியாவுல இருந்து வந்து இந்தியாவுல தங்க போறாங்களாம். லீவு முடியறதுக்குள்ள எனக்கும் ஜானுவுக்கும் கல்யாணத்தை பண்ணி வைக்கணும்னு சொல்லி இருக்காங்களாம்!” என பிரகாஷ் கண்ணா சொல்ல,


“சூப்பர் கண்ணா ! என்ஜாய்” என சிரித்தாள் ரஞ்சனா.


“உனக்கு என் நிலைமை சிரிக்கிற மாதிரி இருக்கா?” என பிரகாஷ் கண்ணா கேட்க,

“வேற என்ன செய்ய சொல்ற! நீ எவ்வளவுதான் சுத்தி சுத்தி வந்தாலும், உன்னைய விட்டு விலகி விலகி போறவள என்ன செய்ய முடியும்! நான் ஏற்கனவே அவள விட்டு விலகிருன்னு சொல்லிட்டேன். நீ தான் கேட்காம ஒவ்வொரு முறையும் அவ பின்னாடி சுத்துற. உன் மேல கொஞ்சம் கூட இன்ட்ரஸ்ட் இல்லாதவ பின்னாடி நீ எவ்வளவு சுத்தினாலும் அது வேலைக்கு ஆகாது!”என்று ரஞ்சனா சொல்ல,


“அவளுக்கு என் மேல இன்ட்ரஸ்ட் இல்லைன்னு யாரு சொன்னது! உன்கிட்ட அன்னைக்கே சொன்னேன், நான் அவளை காதலிக்கிறதை விட அவ என்னைய அளவுக்கு அதிகமாக காதலிக்கிறா!” என பிரகாஷ் கூறினான்.


“ப்ளீஸ் பிரகாஷ், நீ சொல்றத பார்த்தால் உன்மேல கோபப்படுறதா? இல்ல பரிதாபப்படுறதா? என்று எனக்கு தெரியல, அவ உன்னைய காதலிக்கிறானு நீ தேவையில்லாத கற்பனைய உன் மனசுல வளர்த்து வச்சிருக்க, ஒரு நாள் அது உடையும்போது அதோட வலியை உன்னால தாங்கிக்க முடியாது,

ஒருவேளை உன் மேல அவளுக்கும் விருப்பம் இருந்தால் கட்டாயம் ஏதாவது ஒரு இடத்துல அதை வெளிப்படுத்தி இருப்பா, சரி நீ சொல்லு அப்படியே ஏதாவது ஒரு இடத்துல நடந்திருக்காளா?” என ரஞ்சனா கேட்க,


ம்ஹும், என தலையசைத்தான் பிரகாஷ் கண்ணா.


“அப்ப எத வச்சு அவ உன்னைய காதலிக்கிறானு குருட்டுத்தனமா நம்பிகிட்டு இருக்க?” என ரஞ்சனா தன் சந்தேகத்தை கேட்க,


“அவ கண்ணுல அவ என்மேல வச்சிருக்கிற காதலை எத்தனையோ முறை நான் பார்த்து இருக்கேன்” என ரசித்து கூறினான் பிரகாஷ் கண்ணா.

“கண்ணுல பார்த்தேன், கனவுல பார்த்தேன்னு சொல்லி உன்னைய நீயே ஏமாத்திக்கிட்டு இருக்காத! ஒருவேளை உன்னை அவ விரும்புறான்னு தோணுச்சுன்னால் நேரா அவ கிட்ட போய் உன் காதலை சொல்லு, அவள் ஏத்துக்கிட்டா ஓகே,அவ ஏத்துக்கலைனால், அவ பின்னாடி சுத்துறத விட்டுட்டு நீ ஜானுவ கல்யாணம் பண்ணிக்க. அத விட்டுட்டு கற்பனை கனவுன்னு காலத்தையும் நேரத்தையும் வேஸ்ட் ஆக்கிவிட்டு இருக்காத,

சில நேரம் நானே உன்னை பத்தி அவகிட்ட பேசி இருக்கேன், அப்படி பேசும் போதெல்லாம் உன்னோட திறமையையும் வேலையையும் பத்தி மட்டும் தான் பேசுவாளே தவிர வேறு எதையும் பேசினது கிடையாது!


“உனக்கு தெரியாது ரஞ்சு, அவ என்னைய காதலிக்கிறா. ஒவ்வொரு முறையும் என்னை பார்க்கும் போதெல்லாம் நான் அதை உணர்றேன்.

ஆனால் அவளுடைய உணர்வுகளை நான் எந்த இடத்திலையும் கண்டுபிடித்துவிட கூடாதுன்னு ரொம்ப அழுத்தமா நிக்கிறதையும், மேற்படி நான் ஏதாவது சொன்னா அவ என்னைய பார்த்து விரக்தியா ஒரு சிரிப்பு சிரிக்கிறதையும் நான் அடிக்கடி பார்த்து இருக்கேன். ஆனா அவளோட அந்த எக்ஸ்பிரஷனுக்கு அர்த்தம் என்னனும் எனக்கு இன்னும் புரியவே இல்லை!” என்று பிரகாஷ் கண்ணா சொல்ல,


“ஒரு நிமிஷம் !”என்று நேற்று மாயமித்ராவுக்கும் அவளுக்கும் நடந்த உரையாடலை கூறினாள் ரஞ்சனா.

“உயிரோட வேல்யூ தெரிஞ்சனால தான் நான் இன்னும் சாகாம வாழ்ந்து கிட்டு இருக்கேன்னு சலிப்பா சொன்னா, ஒருவேளை அவ உன்னுடைய காதல தெரிஞ்சும், தெரியாத மாதிரி கடந்து போறதுக்கு அவளோட கடந்த கால வாழ்க்கை தான் காரணமா இருக்குமோன்னு எனக்கு தோணுது” என்று ரஞ்சனா சொல்ல, திகைத்தான் பிரகாஷ் கண்ணா.


கதையை படித்து விட்டு கதையின் போக்கு எப்படி இருக்கிறது என்று உங்களுடைய விமர்சனங்களை கமெண்ட்டுகளாக பதிவேற்றிச் செல்லுங்கள் வாசகப் பெருமக்களே...!






 
Top Bottom