பதிலுரை சொல்லடி பகல் நிலவே - 28

  • நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.

    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

Vishakini

Moderator
Staff member
Nov 7, 2025
1,581
6,568
113
“இங்க பாரு பிரகாஷ் உன்னோட வருத்தம் புரியுது. இந்த மாதிரி பொண்ணுங்கள பார்த்தால் வருத்தப்படலாம்! அவங்களுக்கு பணம் கொடுத்து உதவி செய்யலாம். ஆனா அவங்களுக்கு வாழ்க்கை கொடுக்கணும்னு நினைக்கிறது ரொம்ப தப்பு! அதனால நீ ஜானுவ கல்யாணம் பண்ணிக்க! மித்ராவ மறந்துவிடு “ என்று அம்புஜம் சொல்லிக் கொண்டிருக்க,


“பாட்டி மித்ராவோட நிலைமை எனக்கு ஏற்பட்டிருந்தால், இப்படித்தான் பேசி இருப்பீங்களா?”என்று குரல் கேட்க இருவரும் குரல் வந்த திசை பார்க்க அங்கு ஜானு நின்று கொண்டிருந்தாள்.

“அது வந்து ஜானு.... என்று அம்புஜம் தடுமாற,


“எவ்வளவுதான் வயசுல பெரியவங்களா இருந்தாலும்! பொது மேடைகள்ல பெண் விடுதலை, பெண்களோட கஷ்டத்துல பங்கு எடுப்போம்னு வாய் கிழிய பேசினாலும், இப்படி ஒரு பொண்ண உங்க வீட்டு மருமகளா ஏத்துக்கிறதுக்கு உங்களால முடியல! பெண்களுக்கு ஏற்படுற அநியாயத்துக்கு அவங்களுக்கு துணையாய் இருந்து நியாயம் வாங்கி அவங்களுக்கு ஒரு நல்ல வாழ்க்கை அமைச்சு கொடுக்க முடியாத நீங்க! ஆண்கள் கிட்ட பெண்களுக்கு சமமரியாதைய குடுங்கன்னு எப்படி மனசாட்சி இல்லாம கேக்குறீங்க?
பெண்களுக்கு ஆண்கள் எதிரி கிடையாது! பெண்களுக்கு உங்கள மாதிரி பெண்கள் தான் எதிரி!

அப்புறம் பாட்டி மாமாவ கட்டாயப்படுத்தாதீங்க! மாமாவுக்கு யார புடிச்சிருக்கோ அவங்களையே கல்யாணம் பண்ணி வைங்க. அம்மாவ பத்தி பயப்படாதீங்க அம்மா கிட்ட நான் பேசி அம்மாவை சமாளிச்சுருவேன்!” என்று கூறினாள் ஜானு.


“ரொம்ப தேங்க்ஸ் ஜானு! நீயாவது என்னோட மனசு புரிஞ்சுக்கிட்டியே! நாளைக்கு தான் மித்ரா பதில் சொல்றேன்னு சொல்லி இருக்கா? கண்டிப்பா அவ என்னைய ஏத்துப்பான்னு எனக்கு நம்பிக்கை இருக்கு! என் மனச புரிஞ்சுகிட்டு பாட்டிகிட்ட பேசினதுக்கு ரொம்ப நன்றி!” என ஜானுவை பிரகாஷ் கட்டி பிடிக்க ஜானுவின் கண்களில் இருந்து கண்ணீர் வழிந்தது.


இங்கு,


சிறையில் இருந்த ஆடிட்டோரியத்தில் அனைவரும் அமர்ந்திருந்தனர். அவர்களுக்கு வழக்கமாக போடும் படத்திற்கு பதிலாக அன்று நடந்த பங்க்ஷன் நிகழ்வுகளை போட்டு காண்பிக்கலாம் என்று அசோக் முடிவு செய்திருக்க ப்ரொஜெக்டரில் வீடியோ திரையிட தயாராக இருந்தது.


காலையிலிருந்து நந்தனின் முகம் வருத்தமாக இருந்தது. மாயமித்ராவை கண்டுபிடிக்க முடியவில்லை என்று அசோக் சொல்லியிருக்க அவனால் அதை ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை. கடமைக்காக கைதிகளோடு அந்த படத்தை பார்ப்பதற்காக அமர்ந்து கொண்டிருந்தான்.


அசோக்கும் அங்கு அனைத்தையும் மேற்பார்வை இட்டுக் கொண்டிருக்க அவரின் அலைபேசி அடித்தது.


“புது நம்பரா இருக்கு? யாரா இருக்கும் என்று நினைத்துக் கொண்டு அழைப்பை ஏற்க,

“தம்பி நான் நந்தனோட அம்மா பேசுறேன்! இன்னைக்கு தான் கார்த்திக் ஊர்ல இருந்து வந்தான். அந்தப் பொண்ணோட போட்டோ தம்பியோட செல்லுல இருக்கு உங்களுக்கு இந்த நம்பருக்கு அனுப்பி விடவானு?”என்று தம்பி கேட்கிறான் என்று சொல்ல, “அம்மா அனுப்புங்க! அதுக்காக தான் வெயிட் பண்ணிட்டு இருக்கேன் “ என்று ஆவலாக கூறினார் அசோக்!

எப்படியாவது அந்தப் பெண்ணை கண்டுபிடித்து நந்தனின் கண்முன் நிறுத்தி விட வேண்டும் என்று அவர் மனம் விரும்பியது.

சிறிது நேரத்தில் அவர்கள் அனுப்பிய போட்டோ அசோக்கின் செல்போனை வந்தடைந்திருந்தது.

மெசேஜ் வந்த சத்தம் கேட்டு அவசர அவசரமாக மொபைலை திறந்து பார்க்க நெட்வொர்க் குறைவாக இருந்ததால் அந்தப் பெண்ணின் புகைப்படம் டவுன்லோட் ஆகாமல் சுற்றிக் கொண்டே இருந்தது.

‘நெட்வொர்க் கிடைக்கல போல’ என்று நினைத்துக் கொண்டு ஆடிட்டோரியத்தை விட்டு வெளியே வந்தார் அசோக்.

அவர் வந்து சென்ற சில நிமிடங்களில் அவர் அலைபேசியின் தொடுதிரையில் அந்த பெண்ணின் புகைப்படம் தெளிவாக வந்தது.

பள்ளிக்கூடம் படித்திருக்கும் போது எடுத்த புகைப்படம் என்பதால் அதில் மித்ராவின் முகம் சரியாக தெரியவில்லை. ஆனாலும் அசோக்கின் மனதில் இந்த பொண்ண எங்கேயோ பார்த்திருக்கேனே பார்த்திருக்கிறேனே என்று தோன்றியது.


யோசித்து யோசித்துப் பார்க்க கண்டுபிடித்து விட்டார், ‘இது மாயமித்ரா மாதிரி இருக்கு’ என்று நினைத்துக் கொண்டு, அவசர அவசரமாக தன்னுடைய கேபினுக்கு சென்று அங்குள்ள அவளது டைரியை எடுத்து பார்ப்பதற்காக ஓடினார்.


இங்கு அந்த வீடியோவில் அவசர அவசரமாக மாயமித்ரா உள்ளே நுழையும் காட்சி வர அதைப் பார்த்த நந்தனின் கண்கள் அதிர்ச்சியில் விரிந்தது. “இது.... அந்தப் பொண்ணுல” என்று அவன் யோசிக்க, அவளின் அன்றைய முகமும் அவள் குரலும் அவன் கண்முன் வர அவசர அவசரமாக அங்கிருந்து காவலர்களிடம் சொல்லிவிட்டு அசோக்கை தேடி ஓடி வந்தான்.


தன்னுடைய கேபினுக்குள் வந்த அசோக்கோ அவசர அவசரமாக அங்கிருந்த டிராவை திறந்து அந்த டைரியை எடுத்துப் பார்க்க, மித்ரா தான் என்பதை உறுதிபடுத்தி விட அவரும் அப்படியே நாற்காலியில் அதிர்ச்சியில் அமர்ந்து விட்டார்.


நந்தனும் அவசர அவசரமாக ஓடி வந்து அசோக்கை பார்த்து சொல்ல, “சார் சார் அங்க அந்த பொண்ணு..... “ என்று அவன் வாய் தடுமாறியது.


“என்னாச்சு தெளிவா சொல்லு, மித்ராவை பார்த்தியா?” என்று கேட்க நந்தன் அதிர்ந்து நின்றான்.


“மித்ரா வா!”


“ஆமாம் மாய மித்ரா!அந்த பொண்ணு தான் உனக்கு கவுன்சிலிங் கொடுக்கிறதுக்கு ஏற்பாடு பண்ணி இருந்தேன். ஆனால் அன்னைக்கு அந்த பொண்ண பார்க்க முடியாம போயிருச்சு”என்று அசோக் சொல்ல வியப்பில் விழியை அகல விரித்தான் நந்தன்



“சார் இப்ப நான் அந்த பொண்ண பார்க்கணும்! பார்க்க முடியுமா? எனக்கு உதவி செய்யுங்க? “ என்று நந்தன் கண்கலங்கி கொண்டே சொல்ல,


“ம்! உன்னை கூட்டிட்டு போறேன்” என்று சொல்லிவிட்டு நந்தனுக்கு பரோலில் ஒரு நாள் வெளியே சென்று வருவதற்கு அனுமதி வாங்கிவிட்டு, மித்ராவின் அட்ரஸை கண்டுபிடித்து அவனை அழைத்துக் கொண்டு போனார் அசோக்.


இங்கு,


சென்னையில் வந்ததிலிருந்து வீட்டிலே அடைபட்டு கிடந்தாள் மாயமித்ரா. ரஞ்சனாவும் அவளை எவ்வளவோ சமாதானப்படுத்தியும் மித்ரா சமாதானம் ஆகவில்லை.

மித்ராவுக்கு தனிமை கொடுக்க வேண்டும் என்று எண்ணி அவளை எந்த தொந்தரவும் செய்யாமல் அவளுடைய வேலையை பார்ப்பதற்காக வெளியே சென்றிருந்தாள் ரஞ்சனா.


திடீரென்று கதவு தட்டும் சத்தம் கேட்க கதவை திறந்தாள் மாயமித்ரா. கதவை திறந்தவுடன் அங்கு அலங்கோலமாக இருந்த மாயமித்ராவை பார்க்க அசோக்கின் மனம் கனத்தது. அந்த சிறு வயதில் அவள் மனமும், உடலும் எவ்வளவு காயப்பட்டிருக்கும் என்பதை நினைக்க அவர் உள்ளமும் கலங்கியது.


திடீரென்று அசோக்கை எதிர்பார்க்காததால் அவளும் அதிர்ச்சியாக, “ சார் நீங்க எப்படி இங்க? “ என கேட்டாள் மித்ரா.


“ உங்கள பாக்குறதுக்கு தான் வந்தேன்? மித்ரா எப்படி இருக்கீங்க எப்ப ஊர்ல இருந்து வந்தீங்க? “என்று அசோக் சாதாரணமாக கேட்க,

“கோயம்புத்தூர்ல இருந்து வந்து ரெண்டு நாளாச்சு “என்று அமைதியாக பதில் கூறினாள் .

“என்னாச்சு உடம்பு எதுவும் சரியில்லையா ஒரு மாதிரியா இருக்கீங்க?” என்று அசோக் விசாரிக்க,

“ஆமா சார் கொஞ்சம் உடம்புக்கு சரியில்லை” என்று கூறினாள் மாயமித்ரா.

“ஹாஸ்பிடல் போனீங்களா?” என்று அசோக் கேட்க, “ போகல சார் கொஞ்சம் ரெஸ்ட் எடுத்தா மாறிடும்!” என கூறினாள் மாயமித்ரா.

“ம்! மித்ரா, உங்கள பாக்க ஒரு நபர் வந்து இருக்காங்க!” என்று அசோக் மெதுவாக சொல்ல,


“என்ன பார்க்க வா, யாரு சார் அது?” என்று மித்ரா கேட்க, “நந்தன் உள்ள வா “என்று அசோக் சொல்ல வாசலில் மறைந்து நின்று கொண்டிருந்த நந்தன் உள்ளே நுழைந்திருந்தான்,


அவனைப் பார்க்கவும் மாயமித்ரா அதிர்ச்சியில் அப்படியே உறைந்து நிற்க, “ என்னைய மன்னிச்சிருங்க மாயா!”என்று அவளின் காலில் வந்து விழுந்தான் நந்தன்!

திடீரென்று நந்தன் செய்த செயலில் அதிர்ந்தவள் தன் காலை நகற்ற,


“புரியுது மாயா! உங்க கால்ல விழகூட எனக்கு தகுதி இல்ல தான். கோவத்துல எங்க அக்காவுக்கு நடந்த அநியாயத்துக்கு பழி வாங்கணும்னு உங்ககிட்ட தப்பா நடந்துகிட்டேன் என்னைய மன்னிச்சிருங்க! நான் எதையும் வேணும்னு பண்ணல!” என்று அவன் கதறி அழுதான்.

நந்தன் கதறியதை பார்க்கவும் அசோக்கின் கண்களிலும் கண்ணீர் சுரந்தது.

மாயமித்ரா, நந்தன் பேசுவதை கேட்டு அதிர்ந்து நின்றாள்.

மித்ரா? என அசோக் அழைக்க, தன்னிலை திரும்பினாள் மித்ரா.

“இதுதான் நான் கவுன்சிலிங் கொடுக்கணும்னு சொன்ன கைதி!” என்று அசோக் சொல்லவும் எல்லாம் புரிந்து விட்டது மித்ராவிற்கு...!

அப்படின்னு அமர்ந்து விட்டாள் அந்த இடத்திலேயே....!

சம்பவம் நடந்து எட்டு வருடங்கள் ஆனாலும் அதன் ரணங்கள் இன்று நடந்தது போலவே வலியை தந்தது இருவருக்கும்...

இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்தனர் சில வினாடிகள்...

அங்கு பெருத்த மவுனம் நிலவியது.

அதை நீடிக்க விடாமல் பேச தொடங்கினார் அசோக்.

“மித்ரா! தன்னால பாதிக்கப்பட்ட உன்கிட்ட மன்னிப்பு கேட்கணும்னு நினைச்ச நந்தனோட ஆசைக்காக, நந்தனை இப்ப நான் கூட்டிட்டு வந்து இருக்கேன்.

நந்தனும் அவன் பண்ணுன தப்ப உணர்ந்து பாதிக்கப்பட்ட உன்கிட்ட மன்னிப்பு கேட்கணும்னு வந்திருக்கான்.

நீயும் எல்லாத்தையும் மறந்து அவனை மன்னிச்சிடுன்னு நான் சொல்ல மாட்டேன். காரணம் எந்த தப்பும் பண்ணாம, மனசளவுலையும் உடலளவிலும் பாதிக்கப்பட்டது நீ. உனக்கு எப்படி ஆறுதல் சொல்றதுன்னு எனக்கு தெரியல!” என்று அசோக் சொல்ல விரக்தியாக புன்னகைத்தாள் மித்ரா.

“ சரி மித்ரா! நாங்க கிளம்புறோம்!” என்று சொல்ல, ம்! என்ற ஒற்றை வார்த்தையில் பதில் அளித்தாள் மாயமித்ரா.


நந்தன், மாயமித்ரா தன்னை மன்னித்து விட்டேன் என்று சொல்லுவாள் என்று எதிர்பார்த்துக் கொண்டிருக்க, அவனைப் பார்க்காமல் தன் பார்வையை அசோக்கிடம் மட்டுமே பதித்திருந்தாள்.


தான் செய்தது மன்னிக்க முடியாத தவறு என்று நந்தனுக்கு புரிந்தாலும் அவன் மனம் ‘மன்னித்து விட்டேன்’ என்று மாயமித்ரா சொல்லும் ஒற்றை வார்த்தைக்காக காத்திருந்தது!

நந்தனுடைய எண்ணத்தை அசோக் உணர்ந்திருந்தாலும், நந்தனுக்காக பேசுவதற்கு அவர் மனம் ஒத்துக் கொள்ளவில்லை மாறாக அவன் மித்ராவுக்கு செய்தது மிகப்பெரிய அநீதி! என்று அவர் மனம் உரைத்துக் கொண்டிருந்தது. அதனால் எதுவும் சொல்லாமல் அமைதியாக,


“நந்தன் போகலாமா?” என்று அசோக் கேட்க,மாயமித்ராவை பார்த்தான் நந்தன்.

அவளோ எதேர்ச்சையாகக் கூட அவனை பார்க்க விரும்பவில்லை என்பது அவளுடைய நடவடிக்கைகளில் புரிந்தது! இனி இங்கு நிற்பதில் எந்த அர்த்தமும் இல்லை என்பதை புரிந்து கொண்ட நந்தன் அங்கிருந்த நகன்றான்.

அசோக்கும் மித்ராவிடம் சொல்லிவிட்டு நந்தனோடு நடக்க, இருவரும் வாசலுக்கு சென்றனர்.

வாசலில் நின்று ஒருமுறை நந்தன் பின்னால் திரும்பி அங்கே நின்று கொண்டிருந்த மித்ராவை பார்க்க அவளும் அவனை தான் பார்த்துக் கொண்டிருந்தாள்.

சில நொடிகள் இருவரின் விழிகளும் எதேர்ச்சியாக ஒன்றோடு ஒன்று சந்தித்து மீண்டது.

தன்னோடு நடந்து வந்தவனின் காலடி ஓசை கேட்காமல் இருக்கவும் அசோக் திரும்பி பார்க்க, இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டிருக்கும் காட்சி அவர் கண்ணில் பட்டது.


நந்தன் தன் பார்வையை மித்ராவின் விழிகளிடமிருந்து விலக்காமல் “ நான் உங்களை கல்யாணம் பண்ணிக்கனும்னு ஆசைப்படுறேன் மாயா? “என்று சொல்ல, அசோக்கும் மித்ராவும் அதிர்ந்து ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.

இனி நடக்கும் என்பதை தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள் பதிலூரை சொல்லடி பகல் நிலவே

















 

Author: Vishakini
Article Title: பதிலுரை சொல்லடி பகல் நிலவே - 28
Source URL: NithaniPrabu Novels-https://nidhaniprabunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
  • Like
Reactions: ஷமீம்

Gowri Karthikeyan

Well-known member
May 5, 2026
1,289
383
83
Chennai
அட நந்தன் என்ன இப்படி டக்குனு கேட்டுட்ட?????
அவ மனசில் யார் இருக்காங்கனு நினைப்பு இல்லையா