பிரகாசும் ரஞ்சனாவும் நின்று கொண்டிருக்க அசோக்கும் நந்தனும் அந்த அறைக்குள் நுழைந்திருந்தார்கள்.
ரஞ்சனா சொன்னதை கேட்டு பிரகாஷ் அதிர்ச்சியாகி நிற்க,” கவலைப்படாத! மித்ரா உனக்குத்தான். நேத்தே அவருக்கு மித்ரா பதில் சொல்லி இருப்பா! அவர் கேட்ட உடனேயே சொன்னால் அவர் முகத்துல அடிச்ச மாதிரி இருக்கும்னு நெனச்சு நாளைக்கு பதில் சொல்றேன்னு சொல்லிட்டா! அதனாலதான் அவரும் இன்னைக்கு வந்து இருக்காரு!” என்று ரஞ்சனா சொன்னாலும் பிரகாஷின் மனம் பதபதைத்தது.
நந்தனும் அங்கு நின்ற பிரகாசை பார்க்க பிரகாசும் நந்தனை தான் பார்த்துக் கொண்டிருந்தான்.
“இதுதான் பிரகாஷ் ரெண்டு வருஷமா இவரோட கம்பெனில தான் நான் வேலை பார்க்கிறேன். ரொம்ப நல்ல மனுஷன் பொண்ணுங்கள எப்படி மதிக்கணும்னு இவர்கிட்ட தான் கத்துக்கணும்!” என்று மித்ரா பிரகாஷை பார்த்து சொல்ல, நந்தனின் முகம் வாடியது.
பிரகாஷோ உள்ளுக்குள் குத்தாட்டம் போடத் தொடங்கினான்.
நந்தனை அழைத்து வந்த அசோக்கு,
“ஒருவேளை இவங்க முன்னாடி நந்தன மட்டம் தட்டி அசிங்கப்படுத்துவதற்குதான் வரச் சொல்லி இருப்பாளோ ‘ என சந்தேகம் வந்தது.
ஏற்கனவே தான் பண்ணினது தப்புனு குற்ற உணர்ச்சியில் கூனி குறுகி நிக்கிறவன இவங்க முன்னாடி அவன பத்தி குறைச்சு சொல்லி இன்னும் சங்கடப்படுத்திருவாளோ என்று பயந்தார் அசோக்.
“பிரகாஷ் இவர் யாருன்னு தெரியுமா இவர்தான் நந்தன், என்னோட கடந்த கால வாழ்க்கையில நடந்த நிகழ்வுகளுக்கு காரணமானவர்!” என்று சொல்ல, அமைதியாக பிரகாஷ் நந்தனை பார்த்தான். நந்தனின் முகம் வெட்கத்தில் சுருங்கி போனது. அதைப் பார்த்துக் கொண்டிருந்த அசோக்,
“மித்ரா தேவையில்லாத பத்தி பேச வேண்டாம்! உன்னோட முடிவு என்னன்னு மட்டும் சொல்லு நாங்க கிளம்புறோம்!” என்று கூறினார்.
“கண்டிப்பா சார், அத சொல்றதுக்காகத்தான உங்கள வர சொன்னேன்!” என்று மித்ரா கூறினாள்.
மித்ரா உடைய பேச்சிலேயே மித்ரா என்ன சொல்லப் போகிறாள் என்பதை புரிந்து கொண்ட அசோக், “ நந்தா இங்க இருந்து கிளம்பு நம்ம போவோம்!” என்று சொல்ல,
“ கொஞ்ச நேரம் சார் மித்ரா என்ன சொல்றாங்கன்னு கேட்டுட்டு போயிடுவோம்” என்று கண் கலங்கி கொண்டே கூறினான் நந்தன்.
“அவ என்ன சொல்ல போறான்னு உனக்கு தெரியாதா? அந்த வார்த்தையை கேட்டு நீ வருத்தப்படணுமா? என்று அசோக் கேட்க, “ஆமா சார் கண்டிப்பா கேட்டுட்டு போகணும்னு நினைக்கிறேன்” என்று நந்தன் கூறினான்.
“அப்போ ஒன்னு பண்ணுங்க நந்தன், கொஞ்ச நேரம் வெளில நில்லுங்க!” என்று மித்ரா சொல்ல நந்தனும் அசோக்கும் ஒருவரை ஒருவர் பார்த்துவிட்டு இருவரும் அவ்விடத்தை விட்டு வெளியேறினார்கள்.
அவர்கள் செல்லவும், “மித்ரா சீக்கிரம் சொல்லு! உன் வாயிலயிருந்து நீ என்னைய காதலிக்குறனு சொல்ற ஒத்த வார்த்தைய கேக்குறதுக்கு ரொம்ப ஆர்வமா இருக்கேன்!” என்று சொல்லி விட்டு பிரகாஷ் மித்ராவை பார்க்க,
“ஆமா பிரகாஷ், நான் உங்கள காதலிக்கிறேன்!” என்று முதல் முறையாக மித்ரா தன் வாயை திறந்து சொல்ல சந்தோஷத்தில் அவன் முகம் மலர்ந்தது.பக்கத்தில் இருந்த ரஞ்சனாவும் சந்தோஷத்தில் புன்னகைத்தாள்.
பிரகாஷ் சந்தோஷத்தில் மித்ராவை கட்டிப்பிடிக்க வர, “ ஒரு நிமிஷம்! பிரகாஷ் நான் இன்னும் சொல்லி முடிக்கல!” என்று மித்ரா இடைநிறுத்த அவளை சந்தேகமாக பார்த்தான் பிரகாஷ்.
“என்னோட கடந்த கால வாழ்க்கை உங்களுக்கு தெரியும். ஏண்டா வாழறோம் ரெண்டு தடவை தற்கொலைக்கு முயற்சி பண்ணியிருக்கேன். நல்லவேளை என்னைய சுத்தி இருந்தவங்க என்ன ஹாஸ்பிடல் கூட்டிட்டு போயி என் உயிரை காப்பாத்திட்டாங்க.
அப்போ எனக்கு கவுன்சிலிங் கொடுக்க வந்தவங்க உனக்காக வாழ்வதற்கு உனக்கு விருப்பம் இல்லைனாலும் , மத்த பேருக்காகவாவது நீ வாழலாமேன்னு கேட்டாங்க,
முதல்ல அவங்க சொன்னதோட அர்த்தம் எனக்கு புரியலைன்னு அவங்க கிட்ட கேட்டப்ப,
உனக்காக வாழ்றதுக்கு உனக்கு புடிக்கலைன்னால், வாழனும்னு ஆசைப்பட்டு இந்த உலகத்துல வாழ்றதுக்கு முயற்சி பண்றவங்களுக்கு உறுதுணையா வாழலாமேனு சொன்னாங்க, அதாவது மத்த பேருக்கு நம்மளால முடிஞ்ச தொண்ட செஞ்சு வாழலாமேன்னு கேட்டாங்க. அவங்க சொன்ன அந்த வார்த்தை, என்ன யோசிக்க வச்சது,
அதுக்கப்புறம் தான், நம்மளால முடிஞ்ச அளவுக்கு எல்லாருக்கும் உதவி செஞ்சிட்டு வாழ்க்கை போற போக்குல நம்மளும் வாழ்ந்துட்டு போயிறணும்னு வாழ ஆரம்பிச்சேன். அப்படி ஏனோ தானோன்னு போய்கிட்டு இருந்த என்னோட வாழ்க்கையில தான் நீங்க வந்தீங்க!
எனக்கு நடந்த அநியாயத்துக்கு அப்புறம் ஆண்கள்னாலே ஒரு வெறுப்பு, பயம் இருந்துச்சு. ஆனால் என்னைக்கு நான் நம்ம ஆபீஸ்ல உங்களை பார்த்தேனோ, அன்னைக்கு இந்த உலகத்துல இப்படியும் நல்ல ஆண்கள் இருக்காங்களான்னு வியந்து பார்த்தேன்.
நாட்கள் போகப்போக நீங்க என் மேல காட்டுன அக்கறை பாசம் எல்லாமே எனக்கு புடிச்சி இருந்துச்சு. ஏன் என்னோட வாழ்க்கையில உங்கள முன்னாடியே சந்திக்கவில்லைனு நான் ரொம்ப வருத்தப்பட்டு இருக்கேன்.
ஆனாலும் என்னோட உணர்வுகளை நான் ஒரு நாளும் காட்டினது கிடையாது. அதுக்கும் காரணம் இருக்கு. உங்களோட அன்புக்கும் பாசத்துக்கும் நான் தகுதியானவ இல்லைன்னு எனக்கு ஒவ்வொரு முறையும் தோணிக்கிட்டே இருந்துச்சு! அதனாலதான் உங்ககிட்ட நெருங்காம என்னைய தள்ளியே நிறுத்தி வச்சிருந்தேன். ஆனாலும் நீங்க என்னைய விடல, உங்க அக்கறையிலையும் காதலையும் என்னைய ஒவ்வொரு நாளும் திணறடிச்சுக்கிட்டு தான் இருந்தீங்க. ஆனா ஒரு கட்டத்துல உங்க உயிரைக் கூட துச்சமா நெனச்சு என்னைய காப்பாத்துனப்ப நான் முழுசா நீங்க என் மேல வச்சிருக்கற ஒட்டுமொத்த காதலையும் நான் புரிஞ்சுகிட்டேன்.
“இப்பதான் நான் எந்த அளவுக்கு உன்னைய நேசிக்கிறேன்னு நீ புரிஞ்சுகிட்டேல்ல அது போதும்! இனிமேல் நமக்குள்ள இந்த ஒளிஞ்சி விளையாடுற விளையாட்டு வேண்டாம்! உன்னைய எங்க பாட்டி கிட்ட கூட்டிட்டு போறேன்! அவங்க நம்ம ரெண்டு பேருக்கும் கல்யாணம் பண்ணி வைப்பாங்க நம்ம காதலோட சந்தோஷமா இனிமேல் வாழலாம்!”என்று பிரகாஷ் சிலாகித்து சொல்ல,”அப்போ தான் பிரச்சனையே ஆரம்பம் ஆகும்”என்று சொல்லி விட்டு விரக்தியாய் சிரித்தாள் மாயமித்ரா.
“புரியல என்னைய காதலிக்கிறேன்னு சொல்லிட்ட, அப்புறம் எதுக்கு நம்ம கல்யாணத்துல பிரச்சனை!” வரப்போகுது என்று பிரகாஷ் கேட்க,
“என் மேல வச்ச அதீத காதல்னால நீங்க என்னை கல்யாணம் பண்ணிப்பீங்க. நானும் உங்கள கல்யாணம் சந்தோஷமா பண்ணிக்குவேன். ஆனா அதோட முடிஞ்சிடுமா இல்ல? அங்க தான் எல்லா பிரச்சினையுமே ஆரம்பமாகும்!
இவ்வளவு வசதியான நீங்க யாரை கல்யாணம் பண்ணி இருக்கீங்கன்னு மீடியாலயிருந்து உங்க சொந்தக்காரங்க வரை எல்லாரும் தேடுவாங்க.
அப்போ நான் யாரு, எந்த குடும்பம் என்ன படிச்சிருக்கேன்னு எல்லா விவரத்தையும் எடுப்பாங்க! அப்படி எடுக்கும் போது என்னைய பத்தி எல்லாம் தெரியும்!”என்று மித்ரா சொல்ல,
“உன்னைய பத்தி தெரிஞ்சா என்ன? எனக்கு உன்னைய புடிச்சிருக்கு உனக்கு என்னை புடிச்சிருக்கு அவ்வளவுதான் நம்ம வாழ்க்கையை நம்ம தான் வாழனும்!” என்று பிரகாஷ் சொல்ல,
“இது பேசுறதுக்கு நல்லா இருக்கும்! நம்ம வாழ்ற வாழ்க்கை நம்ம ரெண்டு பேரையும் சார்ந்தது மட்டும் கிடையாதே. நம்ம சுத்தி இருக்கிற சமூகத்தை சேர்ந்தது. இதே சமூகத்தில் தான் நம்ம வாழ்ந்தாகணும். ஆனால் இந்த சமுதாயம் நம்மள வாழ விடுமா? கட்டாயம் வாழ விடாது,
அன்னைக்கி என்ன காதலிச்ச பாவத்துக்காக நீங்க படுற கஷ்டத்தை என்னால பாக்க முடியாது! அதுக்கு நான் தயாரா இல்லை. அதனால,
நீங்க எனக்கு வேண்டாம்!” என்று மித்ரா சொல்ல அதிர்ந்து போனான் பிரகாஷ்!
“ஏ மித்ரா!உனக்கு புத்தி கெட்டு போச்சா? என்ன லூசு மாதிரி பேசுற?” என்று பிரகாஷ் கேட்க,
“இல்ல பிரகாஷ்! நல்லா யோசிச்சு முடிவெடுத்துட்டேன்.. நான் உங்களை வேண்டான்னு சொன்னால் கூட கொஞ்ச நாள் தான் நீங்க வருத்தப்படுவீங்க. ஆனால் நான் உங்கள வேணும்னு சொன்னால் உங்க ஆயுள் முழுக்க என்னை கட்டுன பாவத்துக்கு இந்த சொசைட்டில நீங்க கஷ்டப்படுவீங்க! அத நான் விரும்பல!” என கதறி அழுதாள் மித்ரா.
“ப்ளீஸ் மித்ரா, நீ ஓவர் திங்க் பண்ற மாதிரி எனக்கு தெரியுது! சரி ஒரு வேளை நீ சொன்னது நடக்கிறதுக்கு வாய்ப்பு இருக்குமே வச்சுக்கிருவோம், அதுக்கும் சொல்யூஷன் இருக்கு, வேணா இந்த ஊரை விட்டு இல்ல இல்ல வேற நாட்டுக்கு கூட நம்ம போய் வாழலாம் ஆனால் நீ எனக்கு வேணும்! நீ தப்பா யோசிக்கிற?”என்று பிரகாஷ் அவளிடம் சொல்ல,
“எனக்காக உங்க குடும்பம் சொந்த பந்தம் எல்லாத்தையும் விட்டுட்டு வருவீங்களா? “ பிரகாஷ் என்று கேட்டாள் மாயமித்ரா.
“கண்டிப்பா உன்னைய விட எனக்கு இந்த உலகத்துல எதுவும் பெருசு இல்ல! உன் சந்தோஷத்துக்காக எல்லாத்தையும் நான் விட்டுட்டு வர தயாரா இருக்கேன் இந்த பணம் பதவி என் சொந்த பந்தம் எக்ஸ்டரா எக்ஸட்ரா...” என்று பிரகாஷ் சொல்ல,
“இதுதான் பிரகாஷ், நீங்க என் மேல வச்ச இந்த அன்பு தான் என்னைய உங்க கிட்ட நெருங்க விடாமல் தடுக்குது! என் வாழ்க்கையில நிறைய கஷ்டத்தை நான் பாத்துட்டேன், நான் ஒரு ராசி இல்லாத ஆளு! நீங்க என்னைய உங்க கூட வச்சு இருந்தா உங்க சந்தோசம் எல்லாமே பறிபோயிடும்! நான் உங்களுக்கு வேண்டாம், வேண்டாம்!” என்று கதறி அழுதாள் மாய மித்ரா.
மித்ரா நான் சொல்றதை கேளு, என்று சொல்லிவிட்டு அவளை தொடவர அவனிடமிருந்து ஒரு அடி விலகி விட்டு,
“இப்ப கூட பாருங்க பிரகாஷ், நீங்க கிட்ட வந்தா கூட என்னை அறியாமலேயே நான் ஒரு அடி தூரம் விலகி போறேன்! காரணம் தெரிஞ்சோ தெரியாமையோ நான் வேற ஒருத்தருக்கு ஒரு தடவை சொந்தமாயிருக்கேன், அப்படி இருக்கும்போது உங்ககிட்ட என்னால சாதாரணமா இருக்க முடியுமான்னு பயமா இருக்கு!” என்று சொல்ல அப்படியே நின்று விட்டான் பிரகாஷ்.
“அதெல்லாம் போக போக சரியாயிடும்!” என்று பிரகாஷ் சொல்ல, “அதுக்கு வாய்ப்பில்லை பிரகாஷ் சொன்னா புரிஞ்சுக்கங்க,
தெரிஞ்சோ தெரியாமலோ ஒரு நாள் அவர் கூட இருந்திருக்கேன். தப்பிக்கிறதுக்கு வாய்ப்பு இருந்தும் தான் பண்ணுன தப்புக்கு கண்டிப்பா தண்டனை அனுபவிக்காமல் வெளியில வரக்கூடாதுன்னு நினைச்சு எட்டு வருஷம் சிறையில தண்டனை அனுபவிச்சு இருக்காரு!
ஒரு பொண்ணுக்கு துரோகம் பண்ணிட்டோம்னு ரொம்ப மனசு வருத்தப்பட்டு குற்ற உணர்ச்சியில வாழ்ந்துக்கிட்டு இருக்கான்னு கமிஷனர் சார் ஏற்கனவே என்கிட்ட சொன்னாங்க.
அதனால, அவங்கள கல்யாணம் பண்ணி அவங்களோட வாழலாம்னு ஆசைப்படறேன்! என்று மித்ரா சொல்ல அவளை அப்படியே பார்த்தான் பிரகாஷ்.
“உண்மையிலேயே இது நீயா எடுத்த முடிவு தானா இல்ல உன்னை யாராவது இந்த முடிவு எடுக்க போர்ஸ் பண்ணுனாங்களா?” என்று பிரகாஷ் கேட்க,
“ இது என்னோட முடிவு தான்! யாரால என்னோட வாழ்க்கை முடிஞ்சுச்சுன்னு நினைச்சேனோ, அவரோடையே என் வாழ்க்கையோட இரண்டாவது அத்தியாயத்தை எந்த குற்ற உணர்ச்சியும் இல்லாம தொடங்கலாம்னு ஆசைப்படுறேன்!” என்று மித்ரா சொல்ல
“என்னோட வாழ்ந்தால் குற்ற உணர்ச்சியா இருக்கும்னு நீ சொன்னதுக்கு அப்புறம் நான் உன்னைய வற்புறுத்த விரும்பல! நீ முடிவெடுத்த மாதிரி நந்தனையே கல்யாணம் பண்ணி குற்ற உணர்ச்சி இல்லாமல் சந்தோஷமா வாழு! ஆல் த பெஸ்ட் “ என்று சொல்லிவிட்டு பிரகாஷ் அங்கிருந்து நகர கதறி அழ ஆரம்பித்து விட்டாள் மித்ரா.
“ஏண்டி உண்மை சொல்லு! நீ அழுகிறத பார்த்தால் எனக்கு சந்தேகமா இருக்கு நந்தன கல்யாணம் பண்ணனும்னு நெனச்சது நீ எடுத்த முடிவு தானா? “ என்று ரஞ்சனா தன் சந்தேகத்தை கேட்க, “என் வாழ்க்கையில நான் ஆசைப்பட்டது இதுவரை எதுவுமே நடந்ததில்ல! இப்பவும் அப்படித்தான்” என்று விரக்தியாய் சிரிக்க ரஞ்சனாவிற்கும் புரிந்து விட்டது... என்ன நடந்திருக்கும் என்பது..!
மித்ராவின் மனக்கண்ணில் நேற்று அவளிடம் பேசிவிட்டு சென்ற அம்புஜம் பாட்டியின் முகம் வந்து சென்றது.
“பிரகாஷ் நல்லா வாழனும்னு நெனச்சா நீ அவன விட்டு விலகிரு! அவன் நாசமா போகணும்னு நீ நெனச்சால் அவனோட காதல நீ ஏத்துக்க! அப்புறம் உனக்கு பிடிக்குதோ புடிக்கலையோ, சீக்கிரத்துல நீ யாரையாவது கல்யாணம் பண்ணிரு! அதுதான் அவனுக்கு நல்லது “ என்று அம்புஜம் சொன்ன வார்த்தைகள் அவள் நினைவில் வந்து சென்றனர்.
“நான் காதலிக்கிற ஒருத்தர் எப்படி கஷ்டப்படணும் நினைப்பேன். நான் உங்களை வேண்டான்னு சொன்னது இன்னைக்கு வருத்தமா இருக்கலாம் பிரகாஷ். ஆனால் கொஞ்ச நாள் கழிச்சு எல்லாமே மாறிடும். நான் உங்க கூட இல்லை என்றாலும் நீங்க சந்தோசமா வாழ்றத என் கண்ணால நான் தூரத்துல இருந்து கூட பார்த்தாலே போதும் ‘ என தனக்குள் சொல்லிக் கொண்டாள் மித்ரா.
வெளியே சென்ற பிரகாஷ் அங்கு நின்று கொண்டிருந்த நந்தனை பார்த்து, “ மித்ரா உங்கள தான் கல்யாணம் பண்ணிக்க போறேன்னு என்கிட்ட சொல்லிட்டா? அவள நல்லபடியா பார்த்துக்குங்க! நான் ஏன் நந்தனா பொறக்கலைன்னு இப்ப எனக்கு தோணுது!” என்று சொல்லிவிட்டு பிரகாஷ் அந்த இடத்தை விட்டு நடந்து சென்றான்.
பிரகாஷ் சொல்லி சென்ற வார்த்தைகளில் அவனது காதலின் ஆழத்தை இருவரும் உணர்ந்து இருந்தனர்.
“சார்! மித்ரா ஏன் இப்படி ஒரு முடிவு எடுத்தாங்க!” என்று நந்தன் கேட்க, “எல்லாம் பிரகாஷ் மேல வச்ச காதலா தான் இருக்கும், காதலுக்காக காதலையும் விட்டுக் கொடுக்கும் காட்சிகள் இந்தக் காதலில்தான் மட்டும் தான் சாத்தியம்” என்று புன்னகைத்தார் அசோக்.
(முற்றும் )