• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

பனி இரவும் கனல் மழையும் - 33

Vishakini

Moderator
Staff member
மழை - 33

விஷயத்தை அறிந்த காமாட்சி கோபத்தில் வார்த்தைகளை நெருப்பென கக்கி பார்த்து விட்டார். அடம்பிடித்து, உண்ணாவிரதம் இருந்தும் பார்த்து விட்டார்.

தன் மகனிடம் பாசப் போராட்டமும் நடத்தி பார்த்து விட்டார். எதற்கும் யாரும் மசிவதாய் இல்லை. அவர் இங்கேதான் இருப்பார் என திட்டவட்டமாய் கூறிவிட்ட பிறகு, எதுவும் செய்ய முடியாமல் அமைதியாகி போய்விட்டார்.

ஆனாலும், அவரின் ஜாடை மாடையான குத்தல் பேச்சுகளும், வார்த்தைகளும் குறைந்தபாடில்லை. அவரின் பிறவி குணத்தை யாரால் மாற்ற முடியும்.

செங்கேணிக்கு கீதாவின் வீட்டில் அப்படி ஒரு உபசரிப்பு. செந்நிலா அகமகிழ்ந்து கீதாவின் கைகளைப் பற்றிக்கொண்டு கண்கள் கலங்க தன் நன்றியை தெரிவித்திருந்தாள்.

"என்னத்தா நீ, சொந்தத்துக்குள்ள இதெல்லாம் ஒரு விஷயமா.. இதுக்கு போய் இப்படி கண்ண கசக்கிக்கிட்டு. போத்தா, சீக்கிரமா நாங்க பாட்டி ஆயிட்டோம்ன்ற சந்தோஷமான விஷயத்த சொல்லு, எங்களுக்கு அது போதும். உன் பாட்டி இங்கதான் இருப்பாங்க. எப்ப வேணும்னாலும் நீ அவங்கள வந்து பாத்துக்கலாம்".

செங்கேணிக்குமே இவர்கள் குடும்பத்தாரின் மேல் ஒருவித பற்றுதலுடன் அத்தனை மதிப்பும், மரியாதையும் கூடிப் போனது அவர்களின் நடவடிக்கையில்.

*****
செந்நிலா தன்னை சுத்தலில் விட்டதற்கெல்லாம் சேர்த்து வீட்டிற்கு வந்த பிறகும் அவளை கண்டுகொள்ளாமல் சுத்தலில் விட்டிருந்தான் பொற்செல்வன்.

பொறுத்து பார்த்தவள் பொங்கி எழுந்து விட்டாள்.

"என்ன நினைச்சிட்டு இருக்கீங்க, என்கிட்ட பேச மாட்டீங்களா?".

"மேடம் தான் எப்பவுமே ரொம்ப பிசியாச்சே, அப்புறம் என்ன பேசுறது?".

"முக்கியமா ஒரு விஷயம் பேசணும் அதுக்காவது பேச முடியுமா?".

"நீங்க ஃப்ரீயா இருந்தா சொல்லுங்க மேடம் நான் கேட்டுக்குறேன்".

"ரொம்ப பண்ணாதீங்க. நான் மாசமா இருந்தாலும் இப்படித்தான் என்கிட்ட முகத்தை திருப்பிக்கிட்டு போவீங்களா?".

"நீ மாசமா இருக்கும்போது இந்த கேள்வியை கேளு பதில் சொல்றேன்".

"அதுக்கு தானே இப்ப கேக்குறேன். இப்பவே சொல்லுங்க" என்றவள் அவனுக்கு முன்னே வந்து வழியை மறைத்து நிற்கவும்.

அவளின் கூற்றில் புருவம் சுருங்க அவளைப் பார்த்தவனின் விழிகள் பெரிதாய் விரிய, "ஹே! நிஜமாவா?".

"ம்ம்" என்றவள் கண்கள் கலங்க தலையை மேலும் கீழுமாய் ஆட்டினாள்.

"உங்ககிட்ட தான் முதல்ல சொல்லணும்னு வெயிட் பண்றேன். ஆனா, நீங்க என்னை கொஞ்சம் கூட கண்டுக்கவே இல்ல. இனிமே என்கிட்ட பேசாதீங்க போங்க" என்று கோபமாய் அவள் தன் முகத்தை திருப்பிக் கொள்ளவும்.

"சாரி.. சாரி டி. கொஞ்சம் கோவம் அதான் சாரி" என்றவனோ அவளின் முகத்தை தன் கரத்தில் தாங்கி அவளின் முகம் முழுவதும் முத்த மழையை வெளுவெளுவென வெளுத்து விட்டான்.

"ரொம்ப சந்தோஷம் நிலா" என்றவனுக்கு மகிழ்ச்சி நெஞ்சை முட்டியது.

விஷயம் வீட்டினருக்கும் தெரிய வர அத்தனை ஆனந்தம், ஆர்ப்பாட்டம்.

தன் பேரன் தந்தையாகியதில் அப்பத்தாவுக்குமே ஒருவித பெருமையாக தான் இருந்தது. தன் அடுத்த தலைமுறையையும் பார்க்கப் போகிறார் அல்லவா. ஆனாலும், அதை காண்பித்துக் கொள்ளவில்லை. அவ்வப்பொழுது செந்நிலாவை கவனமாக இருக்குமாறு திட்டிக் கொண்டே இருப்பார்.

அன்று கோவில் திருவிழா அப்படி இப்படி என நாட்கள் வேகமாய் உருண்டோடி ஐந்து மாத மகவை சுமந்து கொண்டிருக்கிறாள் செந்நிலா.

அனைவருமே தீபாராதனையை காண கிளம்பி கோவிலை அடைந்திருந்தனர். ரதியும், ரகுவின் தங்கை அனிதாவுடன் சேர்ந்து சாமி கும்பிடுவதாய் கூறியிருந்தாள்

அவளைக் காண்பதற்காகவே ஆர்வமாக தயாராகி வந்திருந்தான் ரகு. எப்படியாவது அவளிடம் தன் மனதில் இருப்பதை கூறிவிட வேண்டும் என்ற வேகம் அவனிடம்.

அவளின் படிப்பும் நிறைவடைந்துவிட்டது. இனி எதற்கு காலதாமதம் செய்ய வேண்டும், அவளுக்கும் தன் மேல் விருப்பம் இருந்தால் வீட்டில் கூறி மேற்கொண்டு பேசலாம் என்ற முடிவோடு தான் கோவிலுக்கு வந்திருந்தான்.

ஆனால், அவன் எதிர்பார்த்தவளோ வராமல் அவனை ஏமாற்றி இருந்தாள்.

"இப்ப என்னத்துக்கு இப்படி உட்கார்ந்து அழுதுகிட்டு இருக்க?" என்றாள் இந்திரா.

"அம்மாச்சி என்ன பேச்சு பேசுச்சுன்னு தெரியுமா. எனக்கு தாங்கல, என்னை பத்தி ஒரு வார்த்தை யாரும் தப்பா பேச முடியுமா.. இப்படி பேசிடுச்சே" என்றவளுக்கு மனம் ஆறவே இல்லை.

காலையில் திருவிழாவிற்காக அவள் ஆசையாய் பட்டுபாவாடை தாவணையில் தயாராகி இருந்தாள்.

அவளைப் பார்த்ததுமே, "இப்படித்தேன் மினிக்கிகிட்டு போயி உன் அக்காக்காரி வயித்துல புள்ளயோட வந்தா. இப்போ நீ மினிக்கிகிட்டு திரியுற, நீ எப்போ எவன் புள்ளைய வாங்கிகிட்டு வந்து நிக்க போறியோ" என்று சட்டென பேசி விடவும்.

அவளுக்கு கோவிலுக்கு போகும் ஆசையே விட்டுப்போனது. அப்படியே அழ ஆரம்பித்தவள் தான், இன்னமும் அவளின் அழுகை நின்றபாடில்லை.

"அம்மாசிய பத்தி உனக்கு தெரியாதா.. அது பேசுறதெல்லாம் ஒரு பேச்சினு பேசிக்கிட்டு கிடக்குற. இப்படித்தான் செல்வா மாமாக்கு என்னைய கட்டி வைக்கிறேன், அப்புறம் நகநட்டு போட்டு கட்டி வைக்கிறேன்னுச்சு. இப்போ ஒன்னும் இல்லாம அங்க வெறும் கைய வீசிக்கிட்டு போய் நின்னுட்டு கையில இவள வச்சிருக்கிறதுதான் பாக்கி" என்று தன் மகளை காண்பித்தவள்.

"என் மாமியார் அம்புட்டு பேச்சு பேசுறாங்க. புருஷன் ஊதாரி தனமா சுத்தி சுத்தி வரான். என்னை என்ன பண்ண சொல்ற".

"எல்லாத்தையும் விட்டு தள்ளுடி, உன்ன போலவே பொட்ட புள்ளைய பெத்து வச்சிருக்கியே.. நாளைக்கு அது என்ன காரியம் பண்ணி தலை குனிய வைக்க போதே. ஆம்பள புள்ளைய பெத்திருந்தாலாவது நல்லா இருந்திருக்கும். இப்போ இந்த புள்ளய வளர்த்து அதுக்கு என்னத்த நீ நகைநட்டு சீர்சனத்தி எல்லாம் செஞ்சு கட்டி கொடுக்க போறியோ" என்று அப்பொழுதும் இந்திராவை திட்டினார் காமாட்சி.

சட்டென அவரின் குரலை கேட்ட ரதி அறைக்கு எழுந்து சென்று விட்டாள்.

"ஒன்னு சொல்லிட்டா உன் தங்கச்சிக்கு தாளாது. மூலையில உட்கார்ந்து ஒப்பாரி வைக்க ஆரம்பிச்சிடுவா. சீக்கிரம் நேரம் ஆகுது கோவிலுக்கு வாங்க" என்று அனைவரையும் அழைத்துக் கொண்டு கோவிலுக்கு வந்தார்.

ரதி வர முடியாது என மறுக்கவும். யாரும் அவளை வற்புறுத்தவும் இல்லை. அப்படியே விட்டு விட்டு வந்து விட்டனர்.

மாலை போல் தேரோட்டம். மதிய உணவிற்கு பிறகு ரதியின் செல்பேசி சிணுங்க. அனிதாவின் எண்ணை பார்த்தவள் எடுத்து காதுக்கு கொடுத்தாள்.

"என்ன ரதி நீ வருவனு நான் எவ்வளவு ஆசையா இருந்தேன் தெரியுமா.. கடைசியில உன்ன ஆளையே காணோம். நீ திருவிழாவுக்கு வரலையா?".

அவளிடம் தன் அப்பத்தா பேசியதை கூறியவள், "நான் எங்கேயும் வரல அனிதா. நான் இவங்க பேச்சுக்கு பயந்து தானே யாரையும் நிமிர்ந்து கூட பாக்காம இருக்கேன். அப்பவும் இப்படி பேசினா என்ன அர்த்தம். எனக்கு மனசு தாங்கல எவ்வளவு கஷ்டமா இருக்குன்னு தெரியுமா".

"அவங்க பேசுறதெல்லாம் ஒரு பேச்சா, அப்பத்தா எப்போ நல்ல வார்த்தை பேசி இருக்காங்க. நீ என்ன பண்ணுவியோ, ஏது பண்ணுவியா எனக்கு தெரியாது. சாயந்திரம் நீ கோவிலுக்கு வந்தே ஆகணும். நான் உனக்காக காத்துட்டு இருப்பேன் அவ்வளவுதான்" என்று கூறிவிட்டு அழைப்பை துண்டித்தாள்.

தன் அண்ணனைப் பார்த்து, "அம்மா இதுக்கெல்லாம் ஒத்துப்பாங்களாண்ணா. தேவையில்லாம என்னையும் சேர்த்து மாட்டிவிட்டுடாத" என்றாள் பாவம் போல்.

"முதல்ல ரதி மனசுல என்ன இருக்குன்னு தெரிஞ்சுப்போம். அப்புறமா அம்மா, அப்பாவ எப்படி சமாதானம் செய்யுறதுனு பார்ப்போம்" என்று ஒரு முடிவுடன் தான் கிளம்பி கோவிலை அடைந்திருந்தான்.

ரகு கூறியது போலவே ரதியை அழைத்துக்கொண்டு தனியாக வந்திருந்தாள் அனிதா.

"இங்க எதுக்குடி கூப்பிடு வந்திருக்க அப்படி என்ன பேச போற?" என்று கேட்டுக்கொண்டே திரும்பிய ரதிக்கு அனிதாவிற்கு பதிலாக ரகுவின் முகம் தெரிய.

ஒரு நொடி திகைத்து விழித்தவள். சுற்றும் முற்றும் திரும்பி அனிதாவை தேடினாள். அவள் இல்லாது போகவும் சட்டென தன் தலையை தாழ்த்திக் கொண்டு அங்கிருந்து நகர முற்பட்டாள்.

"ஒரு நிமிஷம் ரதி நான் தான் அனிதா கிட்ட சொல்லி உன்ன இங்க அழைச்சிட்டு வர சொன்னேன். உன்கிட்ட கொஞ்சம் பேசணும்".

"யாராவது பாத்தாங்கன்னா தப்பா பேசுவாங்க" என்றாள் படபடப்பாய்.

"தப்பு பண்ண உன் அக்காவ பத்தி யாரும் தப்பா பேசல. உன்ன பத்தி தான் தப்பா பேச போறாங்களா.. நான் உன்ன லவ் பண்றேன். எனக்கு உன்ன ரொம்ப ரொம்ப பிடிச்சிருக்கு. உனக்கும் என்னை பிடிச்சிருக்கா?" என்று பட்டென்று நேரடியாக கேட்டு விட்டான்.

"ஆங்!" என அவனின் வார்த்தையில் விழித்தவள்.

"இல்ல, எனக்கு பிடிக்கல" என்றாள் பட்டென்று.

"சரி பிடிக்காட்டி போகட்டும். என்னை கட்டிக்க உனக்கு சம்மதமா?".

அவனை பிடிக்கவில்லை என்று கூறுகிறோம். அதை ஒரு விஷயமாகவே எடுத்துக் கொள்ளாமல் என்னை திருமணம் செய்து கொள்கிறாயா என கேட்கிறானே என்று அவனை வினோதமாய் பார்த்து வைத்தாள் ரதி.

அதில், ரகுவிற்கும் சிரிப்பு எழ. தன் பற்களைக் கடித்து கட்டுப்படுத்திக் கொண்டவன்.

"சொல்லு ரதி, என்னை கல்யாணம் பண்ணிக்க உனக்கு விருப்பமா?".

"ம்கூம் இல்ல" என்றாள் அவசர குரலில்.

"வேற யாரையாவது விரும்புறியா? வேற யாரையாவது கல்யாணம் பண்ணிக்கணும்னு நினைக்கிறியா?".

"ஐயோ! ஏன் இப்படி எல்லாம் கேக்குறீங்க" என்று சுற்றும் முற்றும் பார்த்து பதறியவள்.

"எனக்கு யாரையும் கல்யாணம் பண்ணிக்க வேண்டாம். எங்க வீட்ல யார கல்யாணம் பண்ணிக்க சொல்றாங்களோ அவங்கள தான் நான் கட்டிப்பேன்".

"அப்போ உங்க வீட்ல என்னை கட்டிக்க சொன்னா கட்டிப்பியா?".

அவனின் வார்த்தையில் திருதிருவென விழித்தவளுக்கு என்ன பதில் கூறுவது என தெரியவில்லை.

"நிச்சயமா உங்க வீட்ல என்னை கட்டிக்க சொல்லி கேப்பாங்க. அப்போ உன் விருப்பம் என்னன்னு எனக்கு தெரியணும். அதுக்காக தான் இப்ப நான் உன்கிட்ட கேக்குறேன். எந்த தப்பும் செய்யாம நீ ஏன் தண்டனைய அனுபவிக்கணும்னு நினைக்கிற. எனக்கு உன்ன பத்தி தெரியும். உன் மேல எனக்கு முழு நம்பிக்கை இருக்கு. உன் குடும்பம் உன்ன நம்புதோ, இல்லயோ.. நான் உன்ன நம்புறேன். உன்னுடைய ஒவ்வொரு அசைவுக்கும் அர்த்தம் எனக்கு தெரியும். என் மனசுக்குள்ள நீ முழுசா நுழைஞ்சு பல வருஷமாகுது. படிக்கிற பொண்ணு கிட்ட சொல்லி மனச கெடுக்க வேண்டாம்னு தான் நான் இத்தன நாள் பேசாம இருந்தேன். உன் அக்கா இப்படி நடந்துக்கிட்டதால உன் மேல எந்த ஒரு தப்பான எண்ணமும் எனக்கு இல்ல. உன்ன பத்தி எனக்கு தெரியும். உன் வீட்ல என்னை கட்டிக்க சம்மதமானு கேட்கும்போது நீ முழு மனசோட சம்மதிக்கிறியான்னு எனக்கு தெரியணும். அதுக்காக தான் இப்போ கேட்கிறேன், உன் வீட்ல என்னை கட்டிக்க சொன்னா உனக்கு சம்மதமா?".
 
Top Bottom