• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

பாவை 07

STN - 94

New member
ரிஷிக்கு ரெக்கார்டிங் முடிந்ததும் வழக்கம் போல கதிர் அவனை டிராப் செய்து விட்டு செல்ல, தன் அபார்ட்மென்ட்டிற்கு சென்று சாவியை எடுத்து கதவை திறக்க முயன்றான். கதவு பூட்டப்படாமல் திறந்து கொள்ளவும் புருவ முடிச்சுடன் உள்ளே சென்றான்.

தன் கைப்பேசியை எடுத்து ஆன் செய்தவன், “கால் கதிர்மாறன்” என்று சொல்ல, கதிருக்கு போன் சென்றது.

“சொல்லு ரிஷி”

“கதிர், ரூம் திறந்திருக்குடா, யாரோ உள்ளே இருக்கற மாதிரி தோணுது, உடனே வா”

“யார்டா வரப்போறாங்க. காலைல லாக் பண்ண மறந்திருப்பே” என்றான் கதிர்

“நோ, எப்பவும் நான் மறந்ததேயில்ல. இன்னைக்கு எப்படி மறப்பேன்”

“சாரி, இப்போ தான் ஞாபகம் வந்துச்சுடா, நடுவுல ஒரு முறை நான் தான் வந்துட்டு போனேன் பூட்ட மறந்துட்டேன்னு நினைக்கிறேன்” என்று கதிர் போனை வைத்து விட்டான்.

ரிஷி காதுகளை கூர்மையாக்கி கொண்டு கவனமாக அறைக்குள் சென்று கவனித்தான். அறையின் மணமூட்டி வாசத்தை தவிர வேறு எதுவும் தெரியாததால், அறைக்குள் சென்று உடையை மாற்றி வந்தான். பின்பு சமையலறைக்குள் சென்று வலப்பக்கத்திலிருந்த கப்போர்டில் காபி பொடி, சர்க்கரையை எடுத்து வைத்துக் கொண்டு, பிரிஜ்ஜிலிருந்து பாலை எடுத்து ஒரு பாத்திரத்தில் ஊற்றி ஸ்டவ்வின் மீது கவனமாக வைத்தான். பின்பு “அலெக்சா, ப்ளே மை பேவரைட் இளையராஜா சாங்ஸ்” என்றான்.

‘ராஜ ராஜ சோழன் நான், எனை ஆளும் காதல் தேசம் நீதான்’ - என்ற பாடல் ஒலிக்க அதை ஹம் செய்தபடி காபியை கலக்கி ஹாலில் இருந்த மேஜை மீது வைத்து விட்டு நீள் இருக்கையில் அமர்ந்தான். பின்பு கைநீட்டி காபி கப்பை எடுக்க முயன்ற போது அந்த காபி கப் கைகளுக்கு தட்டுப்படவில்லை. புருவம் சுருக்கியவன், “யாரது?” என்றான் அதட்டல் குரலில்

பதிலில்லாமல் போகவே கையை எல்லா பக்கமும் நீட்டி யாராவது கைகளுக்கு தென்படுகிறார்களா என்று காற்றில் துழாவினான். பின்பு காதுகளை கூர்மையாக்கி கவனித்தான். யாரோ காபியை ரசித்து குடிக்கும் உதட்டு சத்தம் லேசாக கேட்டது. அதை கவனிக்காதவன் போல எழுந்து சென்றவன் அறையின் கதவை உள்பக்கம் சாத்தி தாழிட்டான்.

பின்பு சடாரென்று சத்தம் வரும் திசையை நோக்கி திரும்பி இருகரங்களிலும் அழுத்தி பிடிக்க, அவன் கரங்களுக்குள் மென்மையான வெற்று தோள்கள் அகப்படவே திடுக்கிட்டான். ஆனாலும் பிடியை தளர்த்தாமல் மேலும் இறுக்கியவன், “யார் நீ? இங்கே என்ன பண்றே?” என்றான் அழுத்தமான குரலில்

ஆடவன் கரங்களின் எதிர்பாராத தீண்டலில் அதிர்ந்த பெண்ணவளோ அவனுடைய இருகரங்களையும் தன் இரு உள்ளங்கைகளால் அழுத்தி பிடித்துக் கொண்டு, “யாருனு கண்டுபிடிங்க பாக்கலாம்?” என்றாள் குறும்புடன்

“நிருஷிகா?”

“வாவ், சூப்பர் ரிஷி. என் குரல நல்லா ஞாபகம் வச்சிருக்கீங்களே” என்றாள் ஆச்சர்யமாக

“இங்கே என்ன பண்றே? உள்ளாற எப்படி வந்தே?” என்றபடி அவள் தாேள்களை பற்றியிருந்த தன் கரங்களை அவன் பிரித்தெடுக்க முயற்சிக்க, நிருஷிகா ரிஷியின் கரத்தை தன் தோளோடு இறுக பற்றிக் கொண்டாள்.

‘கண்ணோடு கண்கள் ஏற்றும் கற்பூர தீபமே, கை தீண்டும் போது பாயும் மின்சாரமே’

ரிஷி வெடுக்கென்று மின்சாரம் தீண்டப்பட்ட உணர்வில் தன் கரத்தை இழுத்துக் கொண்டான்.

“இதெல்லாம் இந்த கதிர்மாறனோட வேலை தானே? அலெக்சா, கால் கதிர்மாறன்” என்று உறுமினான்.

அலெக்சா பலமுறை முயற்சி செய்தும் கதிர்மாறன் இணைப்பு கிடைக்காததால், “கால் நாட் கனெக்ட்டட்” என்று பதிலளித்தது.

“ரிஷி கதிரை திட்டாதீங்க. நான் தான் அவர்கிட்ட கெஞ்சி உங்க ரூமோட ஸ்பேர் கீய வாங்குனேன்” என்றாள் நிருஷிகா

“நிரு, என்ன பண்ணிட்டு இருக்கேனு தெரிஞ்சு தான் பண்றீயா? என் பொறுமைய ரொம்ப சோதிக்கிற நீ. நானும் போகட்டும் சின்ன பொண்ணு, பொறுமையா சொன்னா புரிஞ்சிப்பேன்னு வரச்சொல்லி என்னை பத்தி மறைக்காம சொல்லியும், நீ திரும்ப வந்தா என்ன அர்த்தம்? அப்பார்ட்மென்ட்ல வேற யாராச்சும் பார்த்தா என்ன நினைப்பாங்க? முட்டாள்” என்று அவளை திட்டினான்.

“ஏன் பார்த்தா என்ன? என்ன நினைப்பாங்க?” என்று அவள் வெள்ளந்தியாய் கேட்க, ரிஷி முகத்தை கடுமையாக்கி தன் கோபத்தை காட்டினான்.

கையை வெளிப்பக்கமாக காட்டி, “அவுட்” என்றான்.

“போறேன், போறதுக்கு முன்னாடி நீங்க போட்ட காபிய மட்டும் குடிச்சுட்டு போயிடறேன். கொஞ்சமா குடிச்சிட்டேன். இனி நீங்க அதை குடிக்கவும் முடியாது. நல்லா வேற இருந்துச்சு. குடிச்சுட்டு போகட்டுமா ரிஷி?”

“சீக்கிரம் குடிச்சுட்டு கிளம்பு” என்றவன் வாசலிலேயே நின்றான்.

“ரிஷி”

“என்ன?”

“காபி ஆறிடுச்சு”

“அதுக்கு”

“சூடு பண்ணி கொடுக்கறீங்களா?”

“அதெல்லாம் முடியாது. குடிக்கறதா இருந்தா குடி, இல்லனா கிளம்பு”

“பாதி குடிச்சிட்டேன். காபி வேற நல்லா இருந்துச்சு, ஆறிட்டா எனக்கு பிடிக்காது. ப்ளீஸ் ரிஷி”

“எல்லாம் இந்த கதிர்னால வந்தது. வரட்டும் அவன், இன்னைக்கு இருக்கு அவனுக்கு" என்று முனகி கொண்டே சமையலறைக்குள் சென்றவன் அடுப்பிலிருந்த பாலை சுடவைத்து இரு டம்ளரில் காபியை கலக்கினான். இடையில் உதவி செய்கிறேன் என்று நிருஷிகா வந்தால் என்ன செய்வது? என்ற யோசனையில் அவனிருக்க, அவளோ அலெக்சாவிடம் பேசிக் கொண்டிருந்தாள்.

“ஹாய் அலெக்சா” என்று அவள் போராடிக் கொண்டிருக்க, அது அவளுக்கு பதில் சொல்லவில்லை.

“எது சொன்னாலும் அலெக்சானு முதல்ல சொல்லிட்டு பேசு. அப்போ தான் அது ஆக்டிவேட் ஆகி உனக்கு பதில் சொல்லும்” என்றான் சமையலறையிலிருந்து

“அலெக்சா, ஹாய் ஐயம் நிருஷிகா”

“ஹாய், நிருஷிகா” என்று அது பதில் சொன்னதும்

“அலெக்சா, உன்னோட பாஸ் யாரு?” என்று மெல்லிய குரலில் கேட்டாள்

“ரிஷி வர்மன்” என்று அது பதில் சொன்னது

“நான் உன் பாஸூக்கே பாஸ் தெரியுமா?” என்றாள்

“அலெக்சா, வாட் ஷி செட்?” என்றபடி ரிஷி வந்தான்

“நான் உன் பாஸூக்கே பாஸ் தெரியுமா?” என்று அலெக்சா அவள் சொன்னதை அப்படியே போட்டுக் கொடுக்க, ‘அடியே அலெக்சா, உன்ன அப்புறமா வச்சுக்கறேன்டி’ என்று மனதிற்குள் கறுவியபடி ரிஷியை பார்த்து மழுப்பலாக சிரித்து வைத்தாள்.

அது அவனுக்கு எங்கே தெரிய போகிறது? முகத்தை உர்ரென்று வைத்துக் கொண்டு, “இந்த காபி. குடிச்சுட்டு கிளம்பு முதல்ல” என்றான் வெடுக்கென்று

“தேங்க்ஸ் ரிஷி” என்றபடி காபியை எடுத்துக் கொண்டவள், “அலெக்சா, கண்டினியூ த சாங்” என்றாள்.

வில்லோடு அம்பு ரெண்டு கொல்லாமல் கொல்லுதே,
பெண் பாவை கண்கள் என்று பொய் சொல்லுதே,
முந்தாணை மூடும் ராணி செல்வாக்கிலே,
என் கண்கள்

“அலெக்சா, ஸ்டாப் த சாங்” ரிஷி உறுமினான்.

“ஏன் ரிஷி, பாட்டு நல்லா தானே இருக்கு, உங்களுக்கு பிடிக்கலயா?”

அவனுக்கு பிடித்த பாடல் தான். தனிமையில் அவளோடு அந்த பாடலை கேட்கும்போது மனம் ஏனோ தறிக்கெட்டு போவதை அவளிடம் சொல்ல முடியுமா? சற்றுமுன் பாய்ந்த மின்சாரத்தின் தாக்கம் இன்னும் அவன் உடம்பில் மிச்சமிருக்கிறதே, மனதின் தடுமாற்றத்தை மறைத்து அவளிடம் கடுமையை காட்டினான்.

“நீ இங்கே எதுக்கு வந்தே? பாட்டு கேக்கறதுக்கா?” என்றான் எரிச்சலாக

“இல்ல ரிஷி, உங்க கிட்ட ஹெல்ப் கேக்கலாம்னு வந்தேன்”

“என்ன ஹெல்ப்?”

“உங்கள பாத்து எனக்கும் எப்எம்ல பேசணும்? வாய்ஸ் ரெக்கார்டிங் பண்ணனும்னு ஆசையா இருக்கு. எனக்கு உதவி செய்வீங்களா? அத கேக்கறதுக்கு தான் வந்தேன்”

“இத கேக்கறதுக்கு இவ்ளோ தூரம் ஏன் வர்றே? உனக்கு தான் குயிலோசை எப்எம் நல்லா தெரியுமே? நீ வேற அங்கே பிரபலமாயிட்ட. கேட்டவுடனே சான்ஸ் தரப்போறாங்க”

“அதுக்கு முன்னாடி நான் புரபசனலா தயாராக வேணாமா ரிஷி? கதிர்கிட்ட இதுக்கு எதாச்சும் கோர்ஸ் இருக்கானு கேட்டேன். ரிஷிகிட்டயே கத்துக்கோனு சொன்னாரு. மைக்ல எப்படி பேசணும், உணர்வுகளை எப்படி கொண்டு வரணும், இதெல்லாம் எனக்கு சொல்லி தர்றீங்களா ரிஷி”

“நீ உன் வீட்லயே டிரை பண்ணு. வாய்ஸ் ரெக்கார்ட் பண்ணி கதிரோட வாட்ஸ்அப்புக்கு அனுப்பு. நான் கேட்டுட்டு உனக்கு சஜசன் சொல்றேன்”

“வீட்டுக்கு போனா புவனும் புவனிகாவும் என் ரூமுக்கு வந்துடறாங்க ரிஷி. எல்லாம் உங்க பேச்ச கேட்டதால வந்தது. ரொம்ப சேட்டை பண்றாங்க. அவங்கள வெளியே போக சொல்லவும் மனசு வரல. நான் ஆபிஸ்ல வேலை முடிஞ்சதும் ஈவ்னிங் இங்கே வரேன். ஒரு மணி நேரம் எனக்கு கோச்சிங் தர்றீங்களா?”

“முடியாது”

“சரி அரை மணிநேரம்?”

“நிரு, நீ இங்கே வந்தா நல்லா இருக்காது, தயவு செஞ்சு புரிஞ்சுக்கோ”

“ஏன் நான் வந்தா என்ன? ஏன் நல்லா இருக்காது?” என்று அவள் கேள்வி கேட்க, ரிஷி பதிலளிக்காமல் அமைதியாக இருந்தான்.

“எனக்கு டப்பிங் பேசணும்னு ஆசையா இருக்கு. நீங்களும் என்னோட வாய்ஸ் நல்லா இருக்குனு தானே சொன்னீங்க? வீட்ல எப்பவும் அமைதியாவே பேசாம இருந்துட்டு இதெல்லாம் டிரை பண்ண கூச்சமா இருக்கு ரிஷி. உங்ககிட்ட வேற எதுவும் பேசி தொல்லை பண்ண மாட்டேன். உங்கள குருவா நினைச்சு உதவி கேக்கறேன். ப்ளீஸ் ரிஷி ஹெல்ப் பண்ணுங்க” என்றாள்

ரிஷி யோசனையோடே அமர்ந்திருக்கவும், “ஒரு வேளை நான் உங்களோட பெரிய ஆர்ஜேவா ஆயிடுவேனோனு பயப்படறீங்களா ரிஷி?”

“ச்சே, என்ன இப்படி சொல்லிட்டே? நான் அப்படிப்பட்ட ஆளில்ல. உண்மையாவே உனக்கு இன்ட்ரஸ்ட் இருந்தா நான் உனக்கு உதவி பண்றேன். ஆனா உனக்கு ஒரு வாரம் தான் டைம். அதுக்கப்புறம் நீ என்னை தொல்லை பண்ண கூடாது. ஐமீன் மீட் பண்ண டிரை கூட பண்ண கூடாது, புரியுதா?”

“ஒரு வேளை உங்க மனசு மாறிட்டா?”

“அது எப்பவும் மாறாது” என்றான் உறுதியான குரலில்

‘அதையும் பாக்கறேன்’ என்று மனதிற்குள் சிரித்துக் கொண்டவள், “சரி ரிஷி கிளம்பறேன். நாளைக்கு பாக்கலாம்” என்று தன் கைப்பையை எடுத்துக் கொண்டு வெளியேறி லிப்டின் வழியாக கீழே இறங்கினாள்.

வாசலிலேயே கதிர் நின்றிருந்தான். “கதிர், மிஷன் சக்ஸஸ்” என்று அவள் கட்டை விரலை உயர்த்தி காட்டினாள்.

“அப்பாடி, இப்போ தான் மூச்சே வருது எனக்கு. அலெக்சா ஆப்ல இருந்து கால் வரவும் உன்னை பாத்துட்டு தான் கத்தியிருப்பான்னு தெரிஞ்சுக்கிட்டேன். போன் எடுத்து பேசினா கண்டபடி திட்டுவான். ஆனாலும் உன்னய அடிச்சுடுவானோனு வேற பதட்டமா இருந்துச்சு. உடனே திரும்பி வந்துட்டேன். உள்ளே வரவும் பயமா இருந்துச்சு. அதான் இங்கேயே நின்னுட்டேன். சக்ஸஸ்னு சொன்னியே என்ன சக்ஸஸ் நிருஷிகா?” என்றான் ஆர்வமாக

“ரிஷி என்கூட ஒரு வாரம் டேட்டிங் பண்ண ஒத்துக்கிட்டாரு கதிர்”

“நிஜமாவா சொல்றே?” என்றான் நம்ப முடியாமல்

“ஆமா டேட்டிங் முடியறதுக்குள்ள நல்ல முடிவா சொல்ல போறாரு பாருங்க”

“அப்படி ஒண்ணு நடந்தா அத விட இந்த உலகத்துல எனக்கு வேற பெரிய சந்தோசம் எதுவுமே கிடையாது நிருஷிகா” என்றான்

“கண்டிப்பா நடக்கும் கதிர். அதுவரைக்கும் நீங்க கொடுத்த ஸ்பேர் கீ என்கிட்டயே இருக்கட்டும்” என்றவள் அவனுடைய பதிலுக்கு காத்திருக்காமல் தன் ஸ்கூட்டியில் கிளம்பியிருந்தாள்.

கதிர் அப்பார்ட்மென்டிற்குள் சென்றான். அவர்களின் அறையை அடைந்ததும் கதவை திறக்க முயன்றான். அது உள்பக்கமாக பூட்டியிருந்தது. சாவி வேறு நிருஷிகா எடுத்து சென்றுவிட்டாள். வழக்கமாக ரிஷி எப்போதும் உள்பக்கம் தாளிடமாட்டான். தன் மேல் கோபமாக இருக்கிறான் போலும் என்று நினைத்தபடி கதவை தட்டினான்

“ரிஷி கதவ திறடா”

“ஏன் உன்கிட்ட இன்னொரு சாவி இருக்கு தானே? திறந்துட்டு வா” என்று பதில் வந்தது

“அது அதுவந்து சாவி என்கிட்ட இல்லடா தொலைஞ்சிருச்சு?”

“பொய் சொன்னே? வாயை உடைச்சிடுவேன்டா, நீதானே நிருஷிகாகிட்ட சாவி கொடுத்தது?”

கதிர் பதில் சொல்லாமல் நின்றிருந்தான்.

“எப்போ இருந்துடா மாமா வேல பாக்க ஆரம்பிச்ச?” உள்ளிருந்து தெறித்து வந்தன வார்த்தைகள்.

“உனக்கு நல்ல வாழ்க்கை கிடைக்க நான் மாமா வேலை செய்யணும்னா அதை கூட செய்ய தயார்டா”

கதவை பட்டென திறந்து கதிரின் கரம்பற்றி உள்ளே இழுத்திருந்தான் ரிஷி. “படவா, உன் பிரெண்ட் வாழ்க்கைய பத்தி மட்டும் சுயநலமா யோசிக்கறீயே? அந்த பொண்ணோட வாழ்க்கைய பத்தி கொஞ்சமாச்சும் யோசிச்சியா? அவ தான் சின்ன பொண்ணு, புரியாம பேசறா? உனக்கு அறிவு வேணாம்? கண்பார்வை இல்லாத என்னை வச்சுக்கிட்டு அவ காலம் பூரா என்னைய சுமையா சுமக்கணுமா?”

“ஏண்டா இப்படியெல்லாம் பேசற? நீ சுமை இல்லடா சுகம். நீ கிடைக்கறதுக்கு அந்த பொண்ணு குடுத்து வச்சிருக்கணும்?”

“ஆனா நான் எதுக்கும் கொடுத்து வைக்கலயேடா? நீ வீணா பகல் கோட்டைய கட்டி அந்த பொண்ணு மனசுல நம்பிக்கைய விதைச்சிராத”

“யாரு, நான் தான் நம்பிக்கைய விதைக்கிறேனா? நல்லாயிருக்குடா உன் நியாயம். ஒரு வாரம் டேட்டிங்குக்கு சம்மதிச்சுட்டு என்னை குறை சொல்றீயா?”

“என்னது? டேட்டிங்கா? அப்படியா சொன்னா அவ? எடு போனை?” என்று ரிஷி கடுப்புடன் கேட்க,

“இல்லடா, நான் தான் வாய் தவறி மீட்டிங்குனு சொல்றதுக்கு பதிலா டேட்டிங்க்னு சொல்லிட்டேன். ஒரு வாரம் மீட் பண்ண ஒத்துக்கிட்டதா தான் சொன்னா”

“அதான பாத்தேன். ஒரு வாரம் ரெக்கார்டிங் பத்தி கத்து கொடுக்க சொல்லி கெஞ்சி கேட்டா. நானும் ஒரு வாரத்துக்கு சொல்லி தர ஒத்துக்கிட்டேன். ஆனா அதுக்கப்புறம் என்னை மீட் பண்ண ட்ரை பண்ணக் கூடாதுங்கிற கண்டிஷனோட தான் ஒத்துக்கிட்டேன்”

‘ஓ அதை தான் டேட்டிங்னு கெத்தா சொல்லிட்டு போனாளா அந்த பக்கி’ என்று மனதிற்குள் அவளை வறுத்தெடுத்தான் கதிர்மாறன்.

“கதிர், இந்த கண்டிஷன் உனக்கும் தான். ஒரு வாரத்துக்கு அப்புறம் அவ என்னை மீட் பண்ணவே கூடாது. இதுக்கு நீதான் பொறுப்பு”

“அதப்பத்தி ஒரு வாரத்துக்கு பிறகு பேசிக்கலாமே ரிஷி” மழுப்பினான் நண்பன்

“ஏன் இப்பவே பேசினா என்ன?”

“ஒரு வாரத்துல உன் மனசு நிருஷி பக்கம் சாஞ்சிட்டா?”

“சான்சே இல்ல”

“சான்ஸ் இருக்கு”

“எப்படி சொல்றே?”

“இதுவரைக்கும் எந்த பொண்ணுங்களாவது கன்டினியூவா உன் பெர்சனல் நம்பருக்கு போன் பண்ணியிருக்காங்களா? அப்படியே பண்ணாலும் நீ எடுத்து பேசியிருக்கியா?”

“இல்ல”

“நம்ம அப்பார்மென்ட் வரைக்கும் வந்திருக்காங்களா? முக்கியமா வீட்டுக்குள்ள வந்திருக்காங்களா?”

“இல்ல”

“உன் மனசுக்குள்ள நிருஷிகா எப்பவோ வந்துட்டா ரிஷி. அதனால தான் நீ இதையெல்லாம் அலோவ் பண்றே”

“லூசு மாதிரி உளராத. நீ சொன்னதால தான் அவகூட போன்ல பேசறதுக்கும் மீட் பண்றதுக்கும் ஒத்துக்கிட்டேன். இப்போ என்னவோ என் மேல பழிய போடறே” என்ற ரிஷி நண்பனுக்கு முகத்தை காட்டாமல் திரும்பி நின்றுக் கொண்டான்.

“நான் என்னதான் சொன்னாலும், நீ உன் மனசுக்கு சரினு பட்டத தான் செய்வே. உன்னை பத்தி எனக்கு நல்லாவே தெரியும். அதவிடு, நான் சொல்லியா நிருஷிகாவுக்கு ஒரு வாரம் மீட் பண்றேன்னு வாக்கு கொடுத்தே?” என்று மடக்கினான் கதிர்

“அதான் இப்போ பிரச்சனையா? இப்பவே போன் பண்ணி வரவேணாம்னு சொல்லிடறேன்” என்று தன் பாக்கெட்டிலிருந்த கைப்பேசியை எடுத்தான் ரிஷி

“ரிஷி, நிருஷிகாவுக்கு கொடுத்த வாக்கை உடனே மாத்தக்கூடாது. பாவம்டா அவ” என்றபடி நண்பனின் கையிலிருந்த கைப்பேசியை பிடுங்கி கொண்டான்.

ரிஷி இருகைகளால் தன் தலையை பிடித்துக் கொண்டு உட்கார்ந்து விட்டான்.

“ரிஷி, கூல்டா. நான் சும்மா தான் உன்கிட்ட விளையாடினேன். நிருஷிகா உண்மையாவே சில டவுட்ஸ் எல்லாம் கேட்டா. நீ அவளுக்கு சொல்லி கொடுப்பேனு சொல்லியிருக்கேன். நீயும் அவளுக்கு வாக்கு கொடுத்திருக்க. கொடுத்த வாக்கை நிறைவேத்திடு. அதுக்கப்புறம் உன் முடிவு எதுவா இருந்தாலும் அதுக்கு நான் கட்டுப்படுவேன்” என்றான் கதிர் உறுதியான குரலில்

அதன்பிறகு தான் ரிஷியின் முகம் தெளிந்தது.

“உன் வாக்கையும் நீ மறந்துடாத கதிர். என் முடிவு எதுவா இருந்தலும் நீ அதுக்கு கட்டுப்படணும்” என்றான் ரிஷி

‘உன் முடிவ மாத்தற சக்தி நிருஷிகாகிட்ட இருக்குனு நம்பறேன்’ என்று மனதிற்குள் சொல்லி கொண்ட கதிர் நண்பனின் கோரிக்கைக்கு தலையசைத்தான்.

நண்பனின் கோரிக்கையை ஏற்று அவன் சொல்வதை கேட்கவேண்டும் என்ற கட்டாயம் வரும் என்று அப்போது கதிர்மாறனுக்கு தெரியவில்லை.

(தொடரும்)
 

Attachments

Top Bottom