• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

பாவை 10

STN - 94

New member

நிருஷிகா அமைதியாகவே ஸ்கூட்டியை ஓட்டிக் கொண்டு வர, ரிஷியும் யோசனையில் ஆழ்ந்திருந்தான். அவர்களின் அபார்மென்டை அடைந்ததும், கேட் வாசலில் இறங்கிக் கொண்டவன் “நிரு, ஆல்ரெடி நேரமாயிடுச்சு, நீ கிளம்பு. நான் ரூமுக்கு போய்க்கறேன்”

“இருட்டா இருக்கே ரிஷி, நானும் ரூம் வரைக்கும் துணைக்கு வரட்டுமா?”

“உனக்கு இப்ப தான் இருட்டு, எனக்கு எப்பவுமே இருட்டு தான் நிரு. பழகிருச்சு. நான் பாத்துக்கறேன் கிளம்பு”

அவள் ஸ்கூட்டியை திருப்பி வண்டியை கிளப்பும் சத்தம் கேட்டபின் உள்பக்கமாக இருந்த வழி தடத்தில் நடந்தான். அவர்கள் பின்னால் வந்த அபார்ட்மென்டின் செகரட்டரி அவனை அழைத்தார்.

“ரிஷி, இப்போ போனாளே அந்த பொண்ணு தேவ்ராஜ் எக்ஸ்போர்ட்ஸ் ஓனரோட வளர்ப்பு பொண்ணு தானே?”

“நீங்க சொன்னது சரியானு தெரியல, இருக்கலாம்”

“சரியா தெரியலனு சொல்றே, அவ கூட வண்டியில போயிட்டு வர்றீயே ரிஷி. எனக்கு நல்லா தெரியும் இந்த பொண்ணு தேவ்ராஜ் வீட்ல தான் இருக்கா. இவ அம்மா பேரு மைதிலி. நானும் மைதிலியும் ஒரே ஆபிஸ்ல தான் வேலை செஞ்சோம். ராஜ் டைவர்ஸ் ஆனவரு. ரொம்ப வருஷமா இன்னொரு கல்யாணம் பண்ணிக்காம இருந்தாரு. இந்த மைதிலி அவரை எப்படியோ மயக்கி கல்யாணம் பண்ணி வேலை செஞ்சிட்டு இருந்த கம்பெனிக்கே முதலாளி ஆகிட்டா. போதாக்குறைக்கு ரெண்டு பிள்ளைய வேற பெத்துக்கிட்டா. அவளோட முக ஜாடை அப்படியே இருக்கு இந்த பொண்ணுக்கு. இவளும் அவளோட அம்மா மாதிரி உன்னை மயக்கி நீ இத்தனை நாளா சேர்த்து வச்சிருந்த சொத்தை ஏமாத்திட்டு போயிட போறா, பாத்து கவனமாயிரு” என்று சொல்லி முடிக்கும் முன் ரிஷி கோபத்தோடு கையை ஓங்க, ரிஷிக்கு பதிலாக அப்போது தான் அங்கே வந்திருந்த கதிர் அவரை அறைந்திருந்தான்.

“ரிஷி, நான் பாத்துக்கறேன். நிருவும் இங்கே தான் கேட் வாசல்ல நின்னுட்டு இருக்கா. இந்த ஆளு பேசினத கேட்டுட்டானு நினைக்கிறேன். நீ அவகிட்ட போய் சமாதானம் செய்” என்று கதிர் அவரின் சட்டையை பிடித்து உலுக்கினான்.

ரிஷி அவசரமாக கேட்டின் அருகே சென்றான்.

“ஹவ் டேர் யூ, இந்த அபார்ட்மென்ட் செக்ரட்டரி நான். உன் பிரண்டு நல்லதுக்காக சொன்னா என்னையே அடிப்பீங்களா? அவ அம்மாவ போல அவளும் உன் பிரெண்டை மயக்கி, நடுத்தெருவுல நிக்க வைப்பா. அப்போ நான் சொன்னது உங்களுக்கு புரியும்” என்று அவர் சத்தமாக பேசிவிட்டு செல்ல, “இன்னொரு வார்த்தை பேசினா, அவன் உயிரோட இருக்க மாட்டான்னு சொல்லி வை கதிர்” என்றான் ரிஷி உறுமலோடு

கதிர் அந்த செக்ரட்டரியை அடித்து கொண்டிருந்தான். அவன் அலறும் சத்தத்தை கேட்டபடி நிருஷிகாவின் அருகே சென்றான்.

“நிரு”

“ரிஷி” இதுவரை அழுகையை அடக்கி கொண்டிருந்தவள் கதறி அழ தொடங்கினாள்.

“நீ கிளம்பலயா?”

“நான் போகும்போது எதிர்ல கதிர் வந்தாரு. அவர்கிட்ட வாங்கி வச்சிருந்த உங்க அபார்ட்மென்ட்டோட ஸ்பேர் கீ என்கிட்ட இருந்துச்சு. அவர பாத்ததும் ஞாபகம் வந்தது. அவர் பின்னாடியே கேட் வரைக்கும் வந்தேன். அந்த அங்கிள் பேசினது கேட்டதும் அப்படியே நின்னுட்டேன்” என்றாள் அழுது கொண்டே

“ஷ் அழாதடா. எல்லாரும் பாப்பாங்க. வா, பார்க் இருக்கற பக்கம் போகலாம்” என்று தன் கரத்தை நீட்டினான். அவனுடைய ஆறுதல் அவளுக்கு தேவையாக இருக்க மறுக்காமல் அவன் கரத்தை பற்றிக் கொண்டு நடந்தாள்.

சிமெண்ட் பெஞ்சில் அவளை அமர்த்தி அவள் அருகில் அமர்ந்து அவளின் உள்ளங்கையை பற்றி ஆதூரமாக அழுத்திவிட்டான்.

“நிரு, அவன் பேசினத பெரிசா எடுத்துக்காத”

“பரவால்ல ரிஷி, எனக்கு நல்லா தெரியும், என் அம்மாவ பத்தி இப்படி தான் எல்லாரும் பேசுவாங்க, அதுவும் என் காதுபடவே பேசியிருக்காங்க. ஆனா அம்மா போலவே பொண்ணும் இருப்பானு அவங்க முடிவு கட்டி பேசறது மனசுக்கு கஷ்டமா இருக்கு ரிஷி. நீங்க என்னை தப்பா நினைக்கறீங்களா?”

“ஷட் அப் நிரு. உளராதே. நான் ஏன் உன்னை தப்பா நினைக்க போறேன்? இன்பாக்ட் உன் அம்மா மேலயே எனக்கு எந்தவித தப்பும் இல்லனு தான் தோணுது”

“நீங்க என்னை வேணாம்னு சொல்லியும், நான் உங்களை துரத்தி லவ் பண்றேனே, ஒருவேளை என் அம்மாவோட புத்தி எனக்கும் வந்திருக்குமோ” உடைந்து அழுதாள்

“வாட் நான்சென்ஸ். ரப்பிஷா பேசாத, அடிச்சிட போறேன். நீ உன்னை கேவலப்படுத்திக்கிட்டு உன் அம்மாவையும் சேர்த்து அசிங்கபடுத்திட்டு இருக்க. அவனுக்கும் உனக்கும் பெரிசா என்ன வித்தியாசம் இருக்கு சொல்லு? அவன் சொன்னத கேட்டியா? அவன் வேலை செஞ்ச கம்பெனியில உங்க அம்மாவும் வேலை செஞ்சிருக்காங்க. அவங்க அந்த ஆபீசோட முதலாளிய கட்டிக்கிட்டது அவனுக்கு பொறாமைனு நல்லாவே தெரியுது

பொண்டாட்டி செத்த பின்னாடி குழந்தைய வளர்க்கறதுக்காக ஆம்பிளை கல்யாணம் பண்ணிக்கிட்டா ஊரே சேர்ந்து கல்யாணம் பண்ணி வைக்குது. அதே நிலைமையில இருக்கற ஒரு பொம்பளை கல்யாணம் பண்ணிக்கிட்டா அத கேவலமா பேசறாங்க. நீயும் தாய்கிழவி மாதிரி பேசிட்டு இருக்கற” என்றான் எரிச்சலாக

“நீங்க மட்டும் என்ன? என்னை பத்தியும் என் குடும்பத்தை பத்தியும் முன்னாடியே தெரிஞ்சதால தான என்னை வேணாம்னு சொல்லி துரத்திட்டே இருக்கீங்க?” என்று அவள் ஏதேதோ சொல்லி புலம்ப ஆரம்பிக்க

“முட்டாள், நீ வேணாம்னு நான் நினைக்கிறேனா? என்னோட ஒவ்வொரு அணுவும் நீ வேணும்னு கொதிச்சுட்டு இருக்கு. அது தெரியுமா? நான் வேணாம்னு சொல்றது உன் நல்லதுக்காக தான். அத புரிஞ்சுக்கோ முதல்ல”

நிருஷிகாவின் அழுகை நின்றிருந்தது. “சும்மா சமாதானம் செய்யறதுக்காக எதையாச்சும் அடிச்சு விடாதீங்க”

“என்னை பத்தி முழுசா தெரிஞ்ச பின்னாடியும் அதே காதலோட எப்போ திரும்பவும் வந்து நின்னியோ அப்பவே என் மனசு உன்பக்கம் சாய்ஞ்சிருச்சு. நீ என்னை நார்மலா டிரீட் பண்றதும், என்கூட போட்டி போட்டுட்டு செஸ் விளையாடறதும், இப்போ உன்கூட நான் வெளியே வந்தப்போ கதிர்கூட இருக்கறது போலவே கம்பர்ட்டபிளா இருந்துச்சு, உன் அருகாமை, என் மனசுக்குள்ள எவ்வளவு பெரிய போராட்டத்தை உண்டு பண்ணியிருக்குனு உனக்கு சொன்னா புரியாது நிரு. பார்வை இல்லனாலும் எல்லா உணர்வும் இருக்கற ஆண் நான், உன்னோட நெருக்கம் என்னை கதிகலங்க வைக்குது”

கண்களை துடைத்துக் கொண்டே “மனசுக்குள்ள இவ்ளோ காதல வச்சுட்டு ஏன் ரிஷி விலகி போக நினைக்கறீங்க?” என்றபடி நிருஷிகா அவன் தோள்களில் சாய, ரிஷி சட்டென நிதானத்திற்கு வந்தான்.

அவளை சமாதானம் செய்வதற்கு, இப்படியா மனதிலிருப்பதையெல்லாம் உளறி கொட்ட வேண்டும்? என்று தன்னையே நொந்து கொண்டான்

“நிரு, உன்மேல எனக்கு வேற மாதிரி எண்ணங்கள் வர ஆரம்பிச்சிருச்சு. முக்கியமா இன்னைக்கு ரொம்பவே அதிகம். மனசுக்குள்ள இந்த மாதிரி எண்ணங்கள வச்சுக்கிட்டு எதுவுமே இல்லாத மாதிரி என்னால இயல்பா நடிக்க முடியாது. அதான் வெளிப்படையா சொல்லிட்டேன்”

“உங்களோட காதல இப்படி கூட சொல்லலாமா ரிஷி?” என்றாள் லேசான வெட்கத்துடன்

“அதனால இனி என்னை சந்திக்க வராதே. ஏன்னா, நாம ரெண்டு பேரும் பிரெண்டா இருக்க முடியாது. அப்படி சொல்லிக்கிட்டு பழகினாலும் அது பொய்யா தான் இருக்கும்”

“ஏன் ரிஷி இப்படியெல்லாம் பேசறீங்க? பிரெண்டாவும் வேணாம், லவ்வராவும் வேணாம்னா, கல்யாணம் பண்ணிக்கலாமா?”

“என்னை கல்யாணம் பண்ணிக்க போறீயா? லூசு மாதிரி உளராத நிரு”

“நான் ஒண்ணும் உளரல, நிஜத்த தான் சொல்றேன்”

“என்னை கல்யாணம் பண்ணிக்கிட்டு என்ன பண்ணுவ? வெளியில போகணும்னா பைக்லயோ கார்லயோ கூட உன்னை கூட்டிட்டு போக முடியாது. உனக்கு என்ன தேவைனு என்னால பார்த்து செய்ய முடியாது. அது கூட பரவாயில்ல, காலம் பூரா நீ என்னை பாத்துக்கணும். இப்போ இருக்கற காதல் வேகத்துல இதெல்லாம் பெரிய விஷயமா உனக்கு தெரியாது. ஆனா சேர்ந்து வாழ ஆரம்பிச்ச பிறகு நிறைய இழக்க வேண்டியிருக்கும் நிரு. சின்ன சின்ன சந்தோஷங்கள்ல இருந்து பெரிய இழப்பாவும் இருக்கலாம். இன்னைக்கு சுகமா தெரியற காதல் கல்யாணத்துக்கு பிறகு சுமையா மாறிடும். நான் சுமையா இருக்க விரும்பல”

“பேசி முடிச்சிட்டீங்களா? இல்ல இன்னும் எதாச்சும் பாக்கியிருக்கா? நீங்க என்னை வேணாம்னு சொல்லும் போதே நான் உங்களயே சுத்தி வந்தேன். இப்போ உங்க மனசுல என்மேல காதல் இருக்குனு தெரிஞ்சு போச்சு, உங்கள விட்டுட்டு போயிடுவேனா? நீங்க சொல்ற சில்லி ரீசன தூக்கி குப்பையில போடுங்க.

இப்போ மட்டும் உங்கள யாராச்சும் சுமந்துட்டு இருக்காங்களா என்ன? வாழ்க்கையில என்னை நீங்க வழிநடத்தி கூட்டிட்டு போக மாட்டீங்களா? அது மாதிரி தேவை படற நேரத்துல நான் உங்கள வழிநடத்த போறேன். பைக், கார் எல்லாம் புருஷன் தான் ஓட்டனும், பொண்டாட்டிங்க பின்னாடி உட்கார்ந்து வரணும்னு சட்டம் இருக்கா? நான் வண்டி ஓட்டினா அது ஓடாதா?

வீட்டுக்குள்ள நீங்க என்னை பாத்துக்கோங்க, வெளிய போகும் போது நான் உங்கள பாத்துக்க போறேன். கதிர்மாறன எத்தனை நாளைக்கு உங்க கூடவே வச்சுட்டு இருக்க போறீங்க? அவருக்கு கல்யாணம் ஆக வேணாமா?”

“கதிர் வாழ்க்கை செட்டிலாகணும் தான். அதுக்காக நான் உன் வாழ்க்கையை பாழாக்க விரும்பல. முதல்ல உன் வீட்ல என்னை கல்யாணம் பண்ணிக்க ஒத்துப்பாங்களா? உன் பிரெண்ட்ஸ் கிட்ட போய் பார்வையில்லாதவர லவ் பண்றேன்னு சொல்லி பாரு. அவங்க வேணாம்னு தான் உனக்கு அட்வைஸ் பண்ணுவாங்க. நானும் உனக்கு ஒரு பிரெண்டா சொல்றேன், நமக்குள்ள சரிப்பட்டு வராது நிரு. இந்த ஒரு வாரத்தை மறந்துட்டு உன் வாழ்க்கைய வாழ பாரு”

“ஒரு வேளை என்வீட்லயும் என் பிரெண்ட்ஸ்ம் உங்கள கல்யாணம் பண்ணிக்க ஒத்துக்கிட்டா உங்களுக்கு ஓகேவா ரிஷி?”

“யாரும் ஒத்துக்க மாட்டாங்க”

“ஒருவேளை ஒத்துக்கிட்டா?”

“அப்போ பாக்கலாம்”

“இப்போவே பாருங்க. கதிர், நான் ரிஷிய கல்யாணம் பண்ணிக்கிட்டா உங்களுக்கு ஓகேவா?”

“டபுள் ஓகே” என்றபடி கதிர் அவர்கள் எதிரே இருந்த இருக்கையில் அமர்ந்தான்.

“அவன் என்னோட பிரெண்ட், அப்படி தான் சொல்லுவான்” என்றான் ரிஷி

“கதிர்மாறன் உங்கள போலவே எனக்கும் பெஸ்ட் பிரெண்ட். அவரு ஓகேனு சொல்றாரு. என்னோட வீட்லயும் ஓகேனு சொல்ல வைக்கறேன்” என்று சொல்லிவிட்டு ரிஷியின் பதிலுக்காக காத்திராமல் கிளம்பி சென்றாள்.

“ரிஷி, நிரு உன் விஷயத்துல ரொம்ப தீவிரமா இருக்கா. உனக்கு அவள விட பொருத்தமா யாரும் இருக்க மாட்டாங்க. அவ சொல்ற மாதிரி அவளோட அப்பா அம்மா உங்க கல்யாணத்துக்கு ஒத்துக்கிட்டா எந்த பிரச்சனையும் இல்ல தானே? சும்மா வீண்பிடிவாதம் பிடிக்காம அவளுக்கு ஓகே சொல்லு” என்றான் கதிர்

“அவ சின்ன பொண்ணுடா, விளைவுகள பத்தி யோசிக்காம காதல் மயக்கத்துல பேசறா. இன்னைக்கு சரினு படறது நாளைக்கு தப்புனு தோணலாம். எங்க கல்யாணம் நடந்து பின்னாடி அது தப்பான முடிவா நிருவுக்கு தோணிட்டா அத என்னால தாங்க முடியாதுடா”

“நிரு மேல அவ்வளவு தான் உனக்கு நம்பிக்கையா? அவ உன்னை பார்த்து மயங்கி காதல்னு உன் பின்னாடி சுத்தல. உன் குரல கேட்டு அதுகூடவே டிராவல் பண்ணி மனசுக்குள்ள காதல வளர்த்திருக்கா. நீ குட்டையா கருப்பா, ஏன் சொட்டையா இருப்பேனு சொல்லியும் அவ உனக்காக காத்திட்டு இருந்தா. நீ முன்னாடி வந்து நின்னும் நான் சொன்ன உருவத்தை எதிர்பார்த்து காத்துட்டு இருந்தா. அவளா மயக்கத்துல பேசறா?

நீ அவ கண்ணை பாத்திருந்தா இப்படி சொல்லியிருக்க மாட்டே ரிஷி, அவ உன்னை பாக்கற பார்வையில எவ்வளவு காதல் கொட்டிகிடக்குது தெரியுமா? நீ அவள பார்வையால தீண்டலனாலும் உன் பக்கத்துல இருக்கறதுக்கே அவளோட முகம் சிவந்து போயிரும். நானும் உங்க கூட தான் இருக்கேங்கறத மறந்துட்டு உன்னையே தான் பாத்துட்டு இருப்பா. அவளோட பெரிய கண்ணுல உன்னோட பிம்பத்தை தவிர வேற எதுவும் தெரியாது. எத வச்சு அவளுக்கு உன்மேல காதல் வந்துச்சுனு எனக்கு இப்பவும் பிரமிப்பா இருக்கு. அவளோட அழகுக்கு எத்தனையோ பேர் அவள அணுகியிருப்பாங்க. ஆனா கொஞ்சமும் அலட்டல் இல்லாம அவ உன் பின்னாடி லோலோனு சுத்திட்டு இருக்கறதால உனக்கு அவளோட அருமை தெரியல” என்றான் கதிர்மாறன்.

நண்பன் சொல்ல சொல்ல நிருஷிகாவின் முகத்தை மனக்கண்ணில் கற்பனை செய்து பார்த்த ரிஷி, அது முடியாமல் போகவே “கதிர், நிருஷிகா எப்படி இருப்பாடா?” எனக் கேட்டான்.

“டேய் நான் அவளோட பிரெண்ட், என்கிட்ட கேக்கறே? நீ தான் அவளை பத்தி தெரிஞ்சுக்கணும். நான் போய் எதாச்சும் சமைக்கறேன். நீ பொறுமையா வா” என்று சொல்லி சென்றான் கதிர்.

ரிஷி தன் மனக்கண்ணில் நிருஷிகாவின் முகம் எப்படி இருக்கும் என பலமுறை யோசித்து பார்த்தான். கடற்கரை மணலில் தன்னருகே நடந்து வந்தவளின் உயரமும், மென்மையான சருமமும், மெல்லிய தோள்களும் தனிதனியாக நினைவிற்கு வந்து, இனிய ஏகாந்தத்தை ஏற்படுத்த இமைமூடி வெகுநேரம் அப்படியே அமர்ந்திருந்தான்.

மறுநாள் காலை வேலைக்கு செல்லும் முன் நிருஷிகா ரிஷியினை சந்திக்க அபார்ட்மென்டிற்கு சென்றாள். கதிர்மாறன் வெளியே வந்தவன் அவளை கண்டதும், “என்ன நிரு, வேலைக்கு போகலயா? காலைலயே காதலன பாக்க ஓடி வந்துட்டியா?”

“பின்ன என்னவாம், உன் சாமியார் பிரெண்டு ‘லவ் பண்ணலாமா? வேணாமா?’னு அவரும் குழம்பி, என்னையும் குழப்பி விட்டுட்டாரு. ராத்திரி பூரா தூக்கம் வரல. ரெண்டுல ஒண்ணு கேட்டுட்டு போனா தான் எனக்கு வேலையே ஓடும், அதான் வந்தேன்”

சிரித்துக் கொண்டே அவளிடம் தன் சாவியை நீட்டி, “ரிஷி குளிச்சுட்டு இருக்கான், நீ வெயிட் பண்ணு வந்துடுவான்” என்று கிளம்பி சென்றான்.

நிருஷிகா அவர்களின் அறைக்கதவை திறந்துக் கொண்டு உள்ளே சென்றாள். ரிஷியின் குளியல் அறைக்குள் அலெக்சாவின் உபயத்தால் பாட்டு சத்தம் ஒலித்துக் கொண்டிருந்தது.

“அடியே அலெக்சா, நான் இருக்க வேண்டிய இடத்துல நீ இருக்க. கொஞ்ச நாளைக்கு தான்” என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டு காத்திருந்தாள். வெகுநேரமாக ரிஷி வெளியே வராததால் பொறுமையிழந்து அவன் எண்ணிற்கு அழைத்தாள்.

குளியலறைக்குள் இருந்தவாறே அதை ஏற்றவன், “நிரு, பைவ் மினிட்ஸ்ல கூப்பிட்டா?” என்றான்

“எனக்கு ஆபீஸ்க்கு நேரமாச்சு ரிஷி. நீங்க ஓகே சொன்னா தான் வீட்ல பேசணும், பேசட்டுமா?”

“என்ன பேச போறே?”

“நான் பேசுவேனானு என்வீட்ல எதிர்பார்க்கறது எனக்கு நல்லாவே தெரியுது. இதுவரைக்கும் நான் அவங்க கிட்ட எதுவும் பேசினது இல்ல, இது வேணும்னு கேட்டது இல்ல. முதல் முறையா நானா அவங்க கிட்ட பேச போறேன். நீங்க எனக்கு வேணும்னு கேக்க போறேன். நான் கேட்டத மறுக்க மாட்டாங்கனு எனக்கு நம்பிக்கையிருக்கு. நான் போய் கேக்கட்டுமா?”

“என்னனு”

“ப்ச், நீங்க வேணும்னு”

“கண்டிப்பா நான் உனக்கு வேணுமா ருஷி?” ரிஷியின் குரலில் இருந்த ஈர்ப்பை கண்டு திகைத்தவளின் முகமெங்கும் ஜிவ்வென ரத்தம் பாய்ந்து சிவப்பேறியது.

“ம், கண்டிப்பா வேணும்”

“நான் என்ன உன் பெட்ரூம்ல வச்சிக்கற டெடிபியரா? நீங்க வீட்ல கேட்டதும் என்னை வாங்கி உங்க கைல கொடுத்துடுவாங்களா?” கிண்டலாக கேட்டான்.

“கல்யாணமானதும் நான் தான் உங்க வீட்டுக்கு வரப்போறேன். நீங்க தான் என்னை வாங்க போறீங்க. அப்போ நான் தான் உங்க டெடிபியர்”

“அப்படியா? எல்லா சொத்தையும் எனக்காக விட்டுட்டு வரப்போறீயா?”

“எல்லா சொத்தையும் விட்டுட்டு வர்றதா? அங்கே இருக்கற எந்த சொத்தும் என்னோடதில்ல ரிஷி. நான் மட்டும் கட்டின புடவையோட வருவேன், உங்களுக்கு ஒகேயா?”

“உனக்கு தான் புடவ கட்ட தெரியாதே”

“சரி, ஜீன்ஸ் டாப்போட வருவேன், போதுமா?”

“உன் வீட்ல ஒத்துப்பாங்கனு நம்பறீயா?”

“அவங்கள பொறுத்தவரைக்கும் நான் வேண்டாத பொருள். கல்யாணங்கிற பேர்ல நான் வேற வீட்டுக்கு போயிட்டா அவங்களுக்கு ப்ரீ தானே? ஏற்கனவே நான் யாரையாவது காதலிச்சா, அவங்களுக்கே கல்யாணம் பண்ணி அனுப்பிடனும்னு பேசிட்டு இருந்தாங்க. அவங்களே பாத்து கல்யாணம் பண்ணி வச்சா செலவாகுமில்ல. அவங்க அப்படி நினைக்கிறதும் எனக்கு வசதியா தான் இருக்கு ரிஷி. பிடிக்காத இடத்துல இனி இருக்க வேண்டிய அவசியமில்ல. எனக்கு பிடிச்சவரோட வாழ போறேன்.

நீங்க பார்வையில்லை அது இதுனு பூமர் மாதிரி பேசறத விட்டுட்டு மனசுக்குள்ள இருக்கற காதலோட பேசுங்க. இப்போ இருக்கற டெக்னாலஜியில நீங்க ஏற்கனவே நார்மலான வாழ்க்கைய வாழ்ந்துட்டு இருக்கீங்க. எனக்கு நீங்க வேணும், நான் வேணுமா வேணாமா மனச மறைக்காம உண்மைய சொல்லுங்க”

“நான் வாங்க போற டெடிபியர் எப்படி இருக்குனு தெரியாம எப்படி வேணுமா வேணாமானு சொல்றதாம்” என்றபடி குளியலறை கதவை திறந்துக் கொண்டு வெளியே வந்தான்.

சத்தமில்லாமல் அவன் எதிரே நெருங்கி நின்றவள், “டெடிபியர் எப்படி இருக்குனு நீங்களே தெரிஞ்சுக்கோங்க” என்றவளின் குரலில் திகைத்தவன், “நிரு நீ எப்போ வந்தே?”

“எவ்ளோ நேரம் குளிப்பீங்க? கதிர் கிளம்பும் போது வந்தேன். நேர்ல பேசிட்டு போகலாம்னு பார்த்தா, நீங்க வர்ற மாதிரி தெரியல. அதான் இங்கே இருந்துட்டே போன்ல பேசினேன்”

“நீ இங்கே தான் இருக்கறதா என்கிட்ட சொல்லவே இல்லையே ஏன்?”

“நீங்க எங்கே இருக்கேனு கேக்கவே இல்லையே அது ஏன்?” என்றாள் அவன் பாணியிலேயே

“ஆபீசுக்கு நேரமாச்சுனு சொன்னே இல்ல, கிளம்பு நிரு. இத பத்தி அப்புறமா பேசிக்கலாம்”

“அப்போ டெடிபியர் எப்படி இருக்குனு தெரிஞ்சுக்க போறதில்லயா ரிஷி?”

“எப்படி தெரிஞ்சுக்கறது?” என்றான் தொண்டையை செருமியபடி

“செஸ் போர்ட்ல எல்லா காய்ன்ஸும் எப்படி தெரிஞ்சுக்கிட்டீங்க?” பதில் கேள்வி கேட்டாள்.

ரிஷியின் கரம் உயர்ந்து அவளின் முகத்தருகே தயங்கி நின்றது. நிருஷிகா அவன் கரத்தை பற்றி தன் முகத்தில் வைத்தாள். ரிஷியின் விரல்கள் பெண்ணவளின் நெற்றி வகிட்டை தொட்டு, அதன் நீள அகலத்தை ஆராய்ந்தது. பின்பு இருகரங்களால் அவளின் இரு புருவங்களை அளவெடுத்தது. வில்லென வளைந்திருந்த இரு புருவங்களுக்கிடையே சின்னதாய் ஒரு ஸ்டிக்கர் இருந்தது. சிலையின் கண்களை உளியால் செதுக்கி திறப்பது போல தன் இருகரங்களின் விரல்களால் அவளின் கண்களை தொட்டு பார்த்து, அவளின் இமைகளை படபடக்க வைத்திருந்தான். பின்பு நாசியின் நீள அகலத்தை ஆராய்ந்து, கன்னங்களின் அரைகோள வடிவத்தின் கோணத்தை மனதில் குறித்து கொண்டான்.

உண்மையில் தீவிரமாக அவளின் மதிமுகத்தை விரல்களால் அறிந்து கொண்டிருந்தான். ஆனால் நிருஷிகாவிற்கு அவன் தீண்டல்கள் சில்லென்ற தீப்பொறிகளாய் உடலெங்கும் பரவியது. கன்னங்களில் இருந்த விரல்கள் வேண்டுமென்றோ தடம் மாறியோ அவளின் இதழ்களுக்கு இடம்பெயர்ந்திருந்தது. விரல்கள் தன் போக்கில் இதழ்களின் வரிகளை எண்ணிக் கொண்டிருக்க, விரல்களால் அறிந்து கொண்டதை இதழ்களால் அறிந்து கொள்ளும் பேராவல் பேரலையாய் மனதிற்குள் மோத, தன்னையும் மறந்து, அவளை நோக்கி குனிந்தவன், அவளின் இருகன்னங்களையும் கைகளில் இறுக பற்றி தன் இதழ்களால் பெண்ணவளின் இதழ்களை முற்றுகையிட்டிருந்தான்.

சில விநாடிகளோ நிமிடங்களோ இருவரும் அசைவற்றிருந்தனர். இதழ்களின் முற்றுகை மேலும் முன்னேறாமல் அப்படியே தான் இருந்தது. இருவருக்குள்ளும் பெருங்காதல் பேரமைதியை கொடுத்திருக்க, இந்த நிமிடம் இந்த நிமிடம் இப்படியே உறையாதா? இந்த நெருக்கம் இந்த நெருக்கம் இப்படியே தொடராதா?


(தொடரும்)
 
Top Bottom