• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

பாவை 25 (நிறைவு பகுதி)

STN - 94

Member
Staff member
“அம்மா” என்று நிருஷி கத்தவும் மைதிலியும் குழந்தைகளும் ஓடிவந்தனர். அவள் ராஜ்ஜை கைக்காட்ட மூவரும் அவர் அருகில் சூழ்ந்து கொண்டனர். ராஜ் மெதுவாக கண்விழித்த போது தலைமாட்டில் கண்ணீருடன் மனைவி, ஆதூரமாக அவரின் கரம் பற்றி “அப்பா” என்று கண்கலங்கும் மகள் நிருஷிகா. “ஐய்யா, டாடி கண்முழிச்சிட்டாரு” என்று கைத்தட்டி குதிக்கும் புவன் புவனிகா.

‘எனக்கு ஒன்னுன்னா என் தலைமாட்டுல என் மனைவி குழந்தைங்க இருக்கணும்’ என்று அவர் ஆசைப்பட்ட கனவு நிறைவேறி விட்டது. மைதிலி தனி மனுஷியாக இருந்திருந்தால் நிச்சயமாக திருமணத்தை பற்றி யோசித்திருக்க மாட்டார். நிருஷிகாவை கொண்டே அவர் மைதிலியை கரம்பிடித்தார். மைதிலிக்கு அந்த நேரத்தில் பாதுகாப்பு தேவைப்பட்டது, ராஜ்ஜுக்கு குடும்பமாக வாழ ஆசையிருந்தது, சமூக அந்தஸ்தை காப்பாற்றிக் கொள்ளவேண்டிய சூழ்நிலையில் இருந்தார்.

இப்படி பல காரணங்களுக்காக திருமணத்தை நடந்திருந்தாலும் இருவருக்குள்ளும் நாளடைவில் நட்பும் அதை தொடர்ந்து காமத்தை கடந்த காதலும் மலர்ந்திருந்தது. காமத்தில் முடிந்தால் தான் காதல் நிறைவு பெற்றதாக அர்த்தமா என்ன? அன்பும் நட்பும் அனுசரனையும் காலம்கடந்து தொடர்ந்தால் தானே காதல் நிறைவு பெற்றதாக அர்த்தம்? அந்த வகையில் ராஜ் மைதிலியின் காதல் நிறைவான காதல் தான்!

மைதிலி குனிந்து ராஜ்ஜின் நெற்றியில் முத்தமிட்டார். சட்டென ராஜ்ஜின் கண்கள் நிருஷிகாவை பார்த்தது, அவள் முகத்தில் எப்போதும் தெரியும் கடுகடுப்பு இல்லை. புன்முறுவலுடன் தந்தை தாய் இருவரின் பக்குவப்பட்ட காதலை பார்த்திருந்தாள்.

இளமை கால காதலின் ஒரு அங்கமாக காமம் இருக்கலாம். அதற்குபின்பான இறுதி காலம் வரை அன்பும், நட்பும் அனுசரணையும் தானே தொடரும்?

இருவருக்கும் தனிமை கொடுக்க எண்ணி தம்பி தங்கையை அழைத்துக் கொண்டு வெளியே சென்றவள் ரிஷிக்கு தகவல் சொன்னாள்.

மைதிலி ராஜ்ஜின் மார்பில் சாய்ந்து கதறி அழ தொடங்கவும், “உனக்கு இன்னொருமுறை விதவை கோலத்தை கொடுத்துட்டு போகமாட்டேன், மைதிலி” என்ற ராஜ் மெதுவாக கையை உயர்த்தி அவரின் தலையை தடவி விட்டார்.

ரிஷி மருத்துவரோடு வந்திருந்தான். உள்ளே வந்த மருத்துவர் ராஜ்ஜை பரிசோதனை செய்து விட்டு “பேச முடியுதில்லயா?”

“முடியுது டாக்டர்”

“யு ஆர் பர்பக்ட்லி ஆல்ரைட். உங்களுக்கு கொடுத்திருக்கற மருந்துகள் எல்லாம் நரம்புகளை பலப்படுத்தும். நிறைய நாள் படுக்கையிலேயே இருந்ததால எக்ஸர்சைஸ் அவசியம். ரிஷி பிசியோதெரிபிஸ்ட்டை வரவழையுங்க” என்றுவிட்டு சில மாத்திரைகளை எழுதி ரிஷியிடம் கொடுத்துவிட்டு கிளம்பினார். அவனும் அவர் பின்னாலே சென்றான்.

“மைதிலி இந்த ரிஷி யாரு? நிரு லவ் பண்ணவனா?”

“ஆமா ராஜ்” என்று தொடங்கி மைதிலி நடந்தவைகள் அனைத்தையும் கூறினார்.

“மாலினி ஆரம்பத்துல இருந்தே சொத்து மேல தான் குறியா இருப்பா. அவளால உங்களுக்கு எந்த பிரச்சனையும் வரக்கூடாதுனு அந்த டிரைவரை நம்பினேன். அவன் துரோகியா மாறுவான்னு நான் கொஞ்சமும் நினைக்கவேயில்ல. என்னை கொல்ல பாத்ததுமில்லாம என் நிருஷியையும் கொல்ல முயற்சி பண்ணியிருக்கான். நம்ம வக்கீலை வரச்சொல்லு, அவனும் செக்கரட்டரியும் சாகறவரைக்கும் ஜெயில்ல இருக்கறமாதிரி கேஸ்ஸை ஸ்டார்ங் ஆக்க சொல்றேன்.

நான் எல்லாரையும் நல்லா புரிஞ்சு வச்சிருக்கேன், என்னோட மதிப்பீடு தப்பாதுனு சொல்லுவியே மைதிலி. இந்த டிரைவர் விஷயத்துல எவ்வளவு முட்டாளா இருந்திருக்கேன் பாத்தியா? நான் அசட்டுத்தனமா அவன் மேல வச்ச நம்பிக்கை உங்கள எங்கே கொண்டு வந்து நிறுத்தியிருக்கு?” என்றார் வேதனையுடன்

“ராஜ் இப்படி நடக்கும்னு உங்களுக்கென்ன தெரியும், பரவால்ல விடுங்க” என்றார் மைதிலி ஆதரவாக

“ரிஷிங்கற மனுஷன் வரலனா நீயும் நிருஷியும் என்ன ஆகியிருப்பீங்க? உனக்கு பாதுகாப்பு கொடுக்கறேன்னு கட்டிக்கிட்டு நானே நீ ஜெயிலுக்கு போறதுக்கு காரணமாயிட்டேனே” என்று கண்கலங்கினார்

“நம்ம குழந்தைங்க அனாதைங்க மாதிரி ஆசிரமத்துல வளர்ந்திருக்குமே. நீ ஜெயில்ல, நான் ஆஸ்பிட்டல்ல, குழந்தைங்க ஆஸ்டல்லனு குடும்பமே சிதைஞ்சு போயிருக்கு, நிருஷி பாவம் எப்படி இதையெல்லாம் பேஸ் பண்ணாளோ, என் பொண்ணு ஊரை விட்டு எங்கேயோ கோயம்பத்தூர்ல மறைஞ்சு வாழணும்னு அவளுக்கென்ன தலையெழுத்தா?

இந்த மாலினி உண்மையாவே என் கடைசி ஆசையை காப்பாத்தணும்னு நினைக்கறவளா இருந்திருந்தா என்ன பண்ணியிருக்கணும்? நிருஷி எங்கே இருந்தாலும் தேடி கண்டுபிடிச்சு அஸ்வினுக்கு கல்யாணம் பண்ணியிருக்கணும். ஆனா நிருஷி கிளம்பி போனதும் விட்டது தொல்லை, கிடைச்ச சொத்தை பிரச்சனையில்லாம சுருட்டிக்கலாம்னு இருந்திருக்கா. ரிஷி சொன்னதால நிருஷி திரும்பி வந்ததும் சொத்துக்காக கல்யாண பேச்சை எடுத்திருக்கா. ச்சே, என்ன ஜென்மங்க இவங்க எல்லாம்?” என்றார் வெறுப்புடன்

“இந்த சொத்தே நமக்கு வேணாம் ராஜ். நம்ம பசங்களே போதும். சொத்தையெல்லாம் அவங்களுக்கு கொடுத்துடுங்க, நாம எங்கேயாச்சும் போயிடலாம்”

“அவங்களுக்கு ஏன் கொடுக்கணும்? அவங்களோட இருக்கற ஷேரை வித்திடுறேன். அந்த பணத்துல அனாதை ஆசிரமம் வச்சி நடத்தலாம். ரிஷிய கூப்பிடு. நான் அவர்கிட்ட பேசணும்” என்றார்

மைதிலி சென்று ரிஷியை அழைத்து வர, “ரிஷி என்னை மன்னிச்சிடுங்க. உங்கள மாதிரி நல்ல மனசும் தன்னம்பிக்கையும் இருக்கறவரா இருந்தா பார்வையில்லாம இருந்தா கூட என் மகளை நான் கல்யாணம் பண்ணி கொடுப்பேன்னு அன்னைக்கு நான் சொல்லியிருக்கணும். அப்படி சொல்லியிருந்தா உங்களுக்கும் இழப்பு இருந்திருக்காது. எங்களோட குடும்பமும் ஆளுக்கொரு பக்கமா சிதறி போயிருக்க மாட்டோம்”

“ஐயோ சார், மன்னிப்பெல்லாம் எதுக்கு? பெறாத பொண்ணு மேலயே இவ்வளவு பாசமா இருக்கறீங்க, உங்க முன்னாடி நான் ஒண்ணுமேயில்ல”

“ஒன்னுமேயில்லயா? காதலிச்ச பொண்ணு நல்லாயிருக்கணும்னு ஊரவிட்டு போயிருக்கீங்க, அதனால உங்க நண்பனை இழந்திருக்கீங்க. மறுபடியும் சரியான நேரத்துல திரும்பி வந்து என் மகளையும் என்னையும் என் குடும்பத்தையும் மீட்டு இருக்கீங்க. நல்லவேளையா டிரைவர் எனக்கு பாய்ஸன கொடுத்து நிருஷிக்கும் அஸ்வினுக்கும் நடக்க இருந்த கல்யாணத்தை நிறுத்திட்டான். அஸ்வின் நல்லவனா இருந்தாலும் மாலினி போல பேராசை பிடிச்சவகிட்ட அவ போராடிட்டு இருந்திருப்பா.

நீங்க தான் என் நிருஷிக்குனு கடவுள் போட்ட முடிச்சு போல. ஆறு எங்கே சுத்துனாலும் கடலுக்கு வர்றது போல, நீங்க எங்கேயோ போனாலும் நிருஷிகிட்ட வந்துட்டீங்க. நீங்க வரலனா என்னாகியிருக்கும்?” அவர் கண்கலங்க

“சார், இன்னைக்கு தான் குணமாகியிருக்கீங்க, அதிகம் பேச வேணாம். ரெஸ்ட் எடுங்க”

“சாரா? மாமானு சொல்லுங்க மாப்பிள்ளை” என்றார் மெல்லிய புன்னகையுடன், சரிங்க மாமா என்று ரிஷியும் புன்னகைத்தான்.

அதன் பிறகு வந்த நாட்களில் ரிஷி கல்யாண வேலையையும் பார்த்துக் கொண்டு, ராஜ்ஜின் வேண்டுகோள்படி மாலினியோடு ஷேர் இருந்த கம்பெனிகளின் பங்குகளை விற்று டிரஸ்ட் ஆரம்பித்தான். இடையில் பிசியோதெரப்பிஸ்ட் சொல்லி கொடுத்த உடற்பயிற்சிகளை ராஜ் செய்ய கஷ்டப்படும் போது அவருக்கு உதவியாக இருந்தான்.

*********

அன்று ரிஷிவர்மன் நிருஷிகாவின் திருமண விழா!

ரிஷி வெட்ஸ் ருஷி என்ற பெயர் பலகையை பார்த்தும் அவள் கதிர்மாறனிடம் சவால் விட்டது நினைவிற்கு வந்ததும் நிருஷிக்கு கண்கள் கலங்கிவிட்டது.

‘உனக்கு நல்ல வாழ்க்கை அமையணும்னா நான் என்ன வேணும்னாலும் பண்ணுவேன்டா’ என்ற கதிரின் வார்த்தைகள் ரிஷியின் காதில் ரீங்காரமிட்டன.

‘எனக்கென உன்னை தந்து எனக்கிரு கண்ணையும் தந்து
அதன்வழி உனது கனா காண சொன்னாயோ’ என்று நினைத்தவனின் கண்களும் குளம் கட்டியிருப்பதை கவனித்த நிருஷி தன்னவனின் கரங்களோடு தன் கரங்களை கோர்த்துக் கொண்டாள்.

இருவரின் உள்ளங்கை கதகதப்பும் மற்றவருக்கு ஆறுதலை தந்தது. அதற்கு மேல் அவர்களை யோசிக்க விடாமல் ஐயர் அவர்களை மணமேடையில் அமரச்சொல்ல, ராஜ் மைதிலி முன்னிலையில் ரிஷிவர்மன் நிருஷிகாவின் கழுத்தில் மங்கலநாணை பூட்டி அவளை தன்னவளாக்கி கொண்டான்.

அஸ்வின் திருமணத்திற்கு வந்து வாழ்த்து சொல்லிவிட்டு, “டிரைவர் செக்கரட்டரி ரெண்டு பேருக்கும் தீர்ப்பு வந்தாச்சு. ஆயுள் தண்டனை கிடைச்சிருக்காம். அம்மா செஞ்ச தப்புக்கு நான் மன்னிப்பு கேட்டுக்கறேன்” என்றவன் அதற்கு மேல் அங்கே நிற்காமல் சென்று விட்டான்.

குயிலோசை எப்எம், கோயம்பத்தூர் ஸ்டுடியோ என்று ரிஷியுடன் வேலை செய்தவர்களும் நிருஷிகாவின் நண்பர்களும் திருமணத்திற்கு வந்து வாழ்த்து தெரிவித்தனர்.

ராஜ் மற்றும் மைதிலியிடம் இருவரும் ஆசி பெற்ற பின் மாமனாரும் மருமகனும் தொழில்குறித்து பேசிக் கொண்டிருந்தார்கள், “ரிஷி நீங்க குன்னூர்ல நிருஷி பேர்ல பிளாட் வாங்கியிருக்கறதா சொன்னா. நான் ஆரோக்கியமா தான் இருக்கேன். கொஞ்ச நாளைக்கு தனியா சந்தோஷமா இருந்துட்டு வாங்க. கோயம்பத்தூர்ல உங்களோட ஸ்டுடியோவ பாத்துக்கிட்டு நேரம் கிடைக்கும் போது நம்ம பிசினஸையும் கொஞ்சம் பாருங்க” என்றார் ராஜ்

“கண்டிப்பா மாமா, நான் இல்லனாலும் அங்கே வேலை சரியா நடக்கும். இருந்தாலும் அப்பப்போ கோவை போயிட்டு வருவோமே தவிர, உங்க கூட தான் இருக்க போறோம்” என்றவன் அருகிலிருந்த மனைவியை காணாமல் தேடினான்.

நிருஷிகா பேபி பிங்க் நிற நீள் பாவாடையில் சிறகில்லா தேவதையாக படியிறங்கி வந்தாள். ரிஷியின் கண்கள் அவளை விழுங்குவது போல பார்க்கவும் அதனை விரித்து “நல்லாயிருக்கா?” என்றாள்

“ரொம்ப அழகாயிருக்கு நிரு. உன்னோட நிறத்தை இது இன்னும் தூக்கி காட்டுது. தேவதை மாதிரி இருக்கே” என்றான் ரசனையோடு

“உங்கள பர்ஸ்ட் டைம் மீட் பண்ண வந்தப்போ, உங்கள இம்ப்ரஸ் பண்றதுக்காக நான் டிசைன் பண்ணி வாங்கின காஸ்ட்லியான டிரஸ். நீங்க ரசிக்கறதுக்காக வாங்கினது, உங்களால பாக்க முடியாதுனு தெரிஞ்சதும் நான் இத போடறதே இல்ல. செகண்ட் டைம் போட்டிருக்கேன்” என்றாள்

அவள் காதருகே குனிந்த “நான் தான் உன்னை பாக்காமலே இம்ப்ரஸ் ஆயிட்டேனே நிரு. அதுசரி செகண்ட் டைம் எதுக்கு போட்டிருக்கே, நம்ம ஹனிமூன் டிரிப்ப செலிபிரேட் பண்றதுக்கா?” என்றான் கிசுகிசுப்பான குரலில். அவன் குறும்பு பார்வையை எதிர்கொள்ளமுடியாமல் ராஜ்மைதிலியிடம் விடைபெற்றுக் கொண்டு காரில் ஏறினாள்

இருவரும் குன்னூருக்கு கிளம்பினர். வழிமுழுவதும் ரிஷியின் பார்வை அவள் மேல் அழுத்தமாக படிந்து மீள்வதை உணர்ந்தாள். அவன் கவனத்தை திருப்பும் பொருட்டு அவள் என்ன பேசினாலும் அவனின் பேச்சும் பார்வையும் அவளின் கன்னங்களை சிவக்க வைப்பததாகவே இருந்தது. டிரைவிங் செய்து கொண்டிருப்பவனின் கவனம் சிதறக்கூடாது என்பதால் “அலெக்சா ப்ளே த சாங்” என்றாள்

‘ராஜராஜ சோழன் நான், எனை ஆளும் காதல் தேசம் நீதான்’ என்று பாடல் ஒலிக்க, “அடியே அலெக்சா, தேஞ்சு போன ரெக்கார்ட் மாதிரி இந்த பாட்ட தான் போடுவியா” என்று அதன் தலையில் தட்ட போனாள். ரிஷி நிருஷியின் கரங்களை பிடித்து அவளை தடுத்தவன் அதற்குபின் அவளின் கரத்தை விடாமல் பாடலை ரசித்தபடி காரை ஓட்டினான்.

“ரிஷி, டிரைவிங்ல சேப்டி முக்கியம்” என்றாள்

“நாம வரவேண்டிய பிளாட் வந்தாச்சு, நிரு” என்றபடி காரை வீட்டிற்குள் செலுத்தினான். இருட்ட தொடங்கியிருந்ததால் சுற்றிலுமிருக்கும் இயற்கை எழில் தெரியவில்லை எனினும் தேயிலை தோட்டத்தின் வாசத்தை இமை மூடி நுகர்ந்தாள். ரிஷியோ பாவையின் கழுத்து வளைவில் முகம் புதைத்து அவளின் வாசம் பிடித்தபடி

“நிரு” என்றான்

“ம்”

“டெடிபியர வாங்கிட்டேன். எப்படி இருக்குனு இன்னும் தெரியல. விளையாடி பாக்கவா?” என்றான் அவள் காதில் மீசை உரச. அவன் பேச்சில் முகமும் உடலும் ரத்தமென சிவந்துவிட, அவளின் கன்னத்தை வருடியவன் மென்மையாக இதழ்பதித்தான். பின்பு மங்கையின் மலரிதழை சுவைக்க முற்பட, பாவையோ நாணத்தோடு அவன் தோளில் சாய்ந்துக் கொண்டாள். ரிஷி தன் ஐந்தடி டெடிபியரை தூக்கி கொண்டு உள்ளே சென்று கதவை சாத்தினான்.

உல்லாச மேடை மேல ஓரங்க நாடகம் அங்கே அரங்கேற துவங்கியிருந்தது.

மூன்று வருடங்களுக்கு பிறகு,

கார் சென்னையின் சாலைகளில் சென்று கொண்டிருந்தது. நிருஷியின் மடியில் அமர்ந்திருந்த கதிர்மாறன் தன் கையிலிருந்த கைப்பேசியில் கூகுள் மேப்பை தீவிரமாக பார்த்தபடி, “டாடி, இப்போ ரைட் எடுத்து நேரா போங்க, 100 மீட்டர்ல ஒரு லெப்ட் எடுத்தா தாத்தா வீடு வந்துடும்”

“சரிங்க சார்” என்றான் ரிஷிவர்மன் புன்னகையுடன்

“கதிர், அப்பாவுக்கு தாத்தா வீட்டுக்கு வழி தெரியாதா? வாரத்துல நாலுநாள் இங்கே தானே வர்றோம். போனை கொடு முதல்ல” என்று அதட்ட

திரும்பி அன்னையை முறைத்தவன், “டாடிக்கு எப்பவும் நான் தான் ரூட் பாத்து சொல்லுவேன்” என்றான் கண்களை உருட்டி

மகனின் பச்சை நிற கண்களில் நண்பனை கண்டவள் அப்படியே உறைந்து போய் ரிஷியை பார்க்க, “என் கதிர் என்னை விட்டு போகமாட்டான்னு நான் சொல்லல? பாத்தியா?” என்பதாய் அவன் பார்வை இருந்தது.

கதிர்மாறன் இப்போதும் ரிஷிவர்மன், நிருஷிகாவுடன் தான் இருக்கிறான், நண்பனாக அல்ல மகனாக!


(சுபம்)
 

Attachments

Last edited:
Top Bottom