அத்தியாயம் 8
சூரியனின் மஞ்சள் வண்ணத்தை தானதாக்கிகொண்ட வானம் இளஞ்சூட்டு கதிர்களை பூமி பந்திற்கு அனுப்ப, ஐந்து அறிவு பறவைகள் கூட்டம் தன் சரணாலயம் நோக்கி பறக்க, வானத்தில் பறக்கும் பறவைகள் கூட்டத்தை விட அதிவேகமாக தரையில் வாகன கூட்டம் பறந்து கொண்டு இருந்தது..
அந்த பெரிய காஃபி ஷாப்பில், காதலர்கள் மறைவாக அமர்ந்து தங்கள் காதலி உதட்டை உறிஞ்சு அந்த இடத்தையே சொர்க்கமாக மாற்றி கொண்டிருக்க, அந்த இடத்திற்கு சிறிதும் சம்மந்தமே இல்லாமல் தேநீர் கோப்பையை எடுத்து மிடரு மிடறாக விழுங்கி கொண்டிருந்தவனை இரு காந்த கண்கள் பார்வையில் விழுங்கியது.. காலியான கோப்பையை வைத்து உறிஞ்சுவது போல பாவலா காட்டி கொண்டிருந்த வெண்ணிலாவை அவனின் வெண்கல குரல் கலைக்க,
"இன்னொரு டீ சொல்லவா??"
"இல்ல வேண்டாம்!!"
நித்திக் முறைத்துக்கொண்டே இவளை பார்ப்பதை உணர்ந்து இளித்துவைத்தாள்..
"ஏதோ பேசணும்னு கூட்டிட்டு வந்து இவ்வளவு சுவாரசியமா டீ குடிச்சிட்டு இருக்க அதுவும் தீர்ந்து போன கப்ப உறிஞ்சி??"
'உன் உதட்ட உரிய முடியலையே சிடுவா அதான்!!' என்று உள்ளுக்குள் சொல்லிக்கொண்டாலும், "அது.. ஒன்னு கேட்டா கோச்சுக்க மாட்டீங்களே??"
"என்ன நாங்க எப்படி வீட்ல மாட்டிக்கிட்டோம் எப்படி எங்க லவ்வு புட்டுக்கிச்சுங்கறத பத்தியா??"
"இப்படி குறுக்க குறுக்க பேசுறீங்கன்னு தான் நான் அமைதியா உக்காந்து இருந்தேன்." முகத்தை திருப்பி கொண்டாள்..
"சரி கேளு.."
"அது உங்க அம்மாவை எதிர்த்து நீங்க கல்யாணம் பண்ணிக்கிட்டு குழந்தையும் பெற்று நல்லபடியா வாழ்றீங்கன்னு அவங்க கிட்ட காமிச்சா அவங்க ஏத்துக்க மாட்டாங்களா??" இதை சொல்வதற்குள் மூச்சு வாங்கியது பாவைக்கு கூடவே மனமும் ராணமாய் போனது..
"ஏன்??"
"இல்ல நான் உங்க கூட வந்த ரெண்டு முறையும் பார்த்தேன் அந்த பொண்ணு ரொம்பவே அழுகுறாங்க ரொம்ப ஃபீல் பண்றாங்க அம்மாவ பாக்கணுங்கறதுக்காக லவ் பண்ண பொண்ண கஷ்டப்படுத்துறீங்களே.."
"அவ என் பப்பூ!! அவளை பத்தி உனக்கென்ன கவலை.. அவளுக்காக மாமன் நான் இருக்கிறேன்.."
ஓங்கி கத்தி பேசவில்லை.. மேஜையை அடித்து சாகாசம் செய்யவில்லை.. அதே சமயம் அவன் கையின் இறுக்கமும் கண்ணில் தெரிந்த சிகப்பும் அடுத்த வார்த்தை பேச வரவில்லை வெண்ணிலாவிற்கு..
என்ன பேசுவது என்று தெரியவில்லை அதற்கு மேல் அவளுக்குமே.. மனதை கல்லாக்கி கொண்டு தான் இப்படி ஒரு கேள்வி கேட்டாள்.. எந்த காயமும் சிறுசாக இருக்கும் பொழுது ஆறிவிடும் அதையே சீழ் பிடித்து புரவி ஓட விட்டால் காயமும் ஆறாது அது தந்த ரணங்களும் தாங்காது..
வெண்ணிலாவிற்கு நாளாக நாளாக நித்திகின் அருகாமை தேவையாக இருக்கிறது.. நெஞ்சுக்குழிக்குள் உரசும் தாலி அவன் உன்னவன் என்பதை சொல்லாமல் சொல்கிறது.. எப்படியும் அவனுக்கான காதல் அவனின் சாரு என்றானபோது தான் மனதில் ஆசை வளர்த்துக் கொள்வது வீண் என்று தெரிந்தாலும் அருகில் இருந்து கொண்டு காதலை வெளிப்படுத்தாமல் இருக்க முடியவில்லை.. தொலைவிலிருந்தாலும் மனதுக்குள் நேசித்த நேசம் அப்படியே தான் இருக்கும்.. ஆனால் இப்படி அருகில் இருந்து கொண்டு காதலை காட்டாமல் இருப்பது அவளுக்கு பெரும் தண்டனையாக இருக்கிறது.. அதனால் தான் துணிந்து என்னை இதிலிருந்து விலக்கி விடுங்கள் என்று சொல்வதற்கு பதிலாக இப்படி சொல்லிவிட்டாள்.. நடிப்பாகவே இருந்தாலும் கணவன் மனைவி தாலி பந்தம் என்பது சும்மா இருக்க விடுமா?? நாடகத்தின் முடிவில் மனது உடைந்து போக போறது என்னவோ நான் தானே என்ற புரிதல் ஏற்பட்டதினால் தான் இப்படி யோசிக்கிறாளோ என்னவோ..
வெண்ணிலாவின் சிந்தையை கலைக்கும் விதமாக நித்திக்கின் போன் அலறியது.. மருத்துவமனையிலிருந்து தாயின் எண் வந்தது யோசனையாக போனை எடுத்தான்..
"ஹலோ!!"
"நித்திக்!!" வெகு நாட்கள் கழித்து அன்னையின் இயல்பான குரல் கேட்கிறான்..
"அம்மா!!"
"ம்ம்ம்ம் டாக்டர் வீட்டுக்கு போகலாம்னு சொல்லிட்டாங்கப்பா.. நீ வந்து கூட்டிட்டு போனினா சரியா இருக்கும்."
"ஏன்மா மாமா பக்கத்துல இல்லையா?? மாமா கூட வீட்டுக்கு போங்கம்மா நான் வெளில ஒரு வேலையா வந்துருக்கேன் முடிச்சுட்டு வந்துடறேன். "
"டேய் மாமா வீட்டுக்கா என்னடா உளறுற.. வயசு பொண்ணு இருக்கிற வீட்டிலயாடா புதுசா கல்யாணம் முடிச்ச புருஷன் பொண்டாட்டி குடும்பம் நடத்திட்டு இருக்கீங்க??"
ஆஹா!! மண்டை மேல் இருந்த கொண்டையை கவனிக்காதது அப்பொழுது தான் நினைவுக்கு வந்தது நித்திக்கிற்கு தன் எதிரே அமர்ந்திருக்கும் வெண்ணிலாவை எரிக்கும் பார்வை பார்த்தான்..
"அது அம்மா!! நீங்க ஹாஸ்பிடல்ல இருக்கறதுனால நான் இன்னும் மாமா வீட்ல தான்மா இருந்துட்டு இருக்கேன்.. அவ எப்பயும் போல ஹாஸ்டல்ல தான் தங்கி இருக்கா."
"நினச்சேன்டா அப்போவே இந்த மாதிரி தான் ஏதாவது பண்ணுவன்னு.. கல்யாணம் ஆன ரெண்டு பேரும் பிரிஞ்சு இருந்தா ஊர் உலகம் என்ன பேசும்?? பேங்க் மேனேஜருன்னு தான் பேரு புத்தி கொஞ்சமாவது இருக்காடா?? மாமா வீட்டு பக்கத்திலேயே ஒரு வீடு காலியா தானே இருக்கு.. ஏற்கனவே நம்ம கூட சொன்னோம்ல உனக்கு கல்யாணம் முடிச்சுட்டு அங்க தான் குடுத்தனம் வைக்கணும்னு அந்த வீட்டையே இன்னைக்கு சாயிங்காலத்துகுள்ள பேசிடு நாளைக்கு காலையில அந்த வீட்டுக்கு தான் நம்ம மூணு பேரும் போகணும்.."
என்றவர் சோர்வாக போனை துண்டிக்க, நித்திக் கொதித்துப் போயிருந்தான் என்றால் அங்கே அவனின் மாமா திருதிருத்து கொண்டு இருந்தார். காரணம் இரண்டு பக்கம் இருந்து அம்பு போல ஒரு பக்கம் சாருவும் இன்னொரு பக்கம் லாவண்யாவும் அவரை முறைத்துக் கொண்டு இருந்தார்கள்..
"நல்ல வாய் உன்னோடது சும்மாவே இருக்க மாட்டியா?? இப்ப எங்க அம்மா என்ன சொல்றாங்க தெரியுமா??" என்று அன்னை கூறிய அத்தனையும் நித்திக் வெண்ணிலாவிடம் கூற வெண்ணிலா முகத்தை அப்பாவி போல வைத்துக்கொண்டு மனதுக்குள் 'ஆரா பத்துக்கு பத்து' என்று குத்தாட்டம் போட்டாள்..
"என்ன ஊமைக்கோட்ட்டான் மாதிரி இருக்க ஏதாச்சும் ஐடியா சொல்லு.."
"அட இருங்க சார் இதுக்கு மேல தான் நம்ம வேலை சுலபமா முடிய போகுது.."
"என்ன உளர்ற!! நீயும் நானும் ஒரே வீட்டுக்குள்ள எப்படி இருக்குறது." என்றவன் பாவக்காயை பச்சயாக சாப்பிட்டது போல முகத்தை சுளிக்க,
'அடிங்க சிடுவா இருடா உன்ன அத்தை கூட கூட்டணி போட்டு பொண்டாட்டியா வந்து கொடுமை பண்றேன்!' என்று மனதுக்குள் நினைத்துக்கொண்டு வெளியே, "சார் நம்மளோட திட்டம் என்ன?? "
"நீயே சொல்லி தொல!!" எரிந்து விழுந்தான்..
"சொந்தம் இல்லாம கல்யாணம் பண்ணாலும் குடும்பத்துல பிரச்னை, பிரிவு வரும் அதானே.."
"ஆமா!!"
"அப்போ நம்ம அவங்க பக்கத்துல இருந்துகிட்டு தினமும் சண்டை போட்டுக்குவோம் அவங்களுக்கு பிடிக்காத விஷயம் என்னன்னு என்கிட்ட சொல்லுங்க அட்டவணை போட்டு ஒவ்வொன்னா செய்வோம். அவங்களே ஒரு கட்டத்தில் வெறுத்து போயி எனக்கு என் மருமக சாருவே போதும் நீ வெளியில போன்னு விரட்டுற அளவுக்கு அவங்கள டார்ச்சல் பண்ணுவோம் ஓகேவா!!" சிறுபிள்ளை போல தம்ஸ் அப் காட்டினாள்..
"ஐடியா ஓகேவா தான் இருக்கு.. ஆனா ஏற்கனவே எங்க அம்மா ஹார்ட் சர்ஜரி பண்ணவங்க நீ படுத்துற கொடுமையில் அவங்களுக்கு ஏதாவது ஆயிடுச்சின்னா??"
"யோவ் என்னைய கொடுமகாரி மாதிரி பேசிக்கிட்டு இருக்குற? அவங்கள கொடுமை படுத்துறது என் நோக்கம் கிடையாது உனக்கும் எனக்கும் செட் ஆகல நம்ம கல்யாணம் ஃபெயிலியர் என்று நிரூபிக்கிறது மட்டும்தான் நம்ம நோக்கம். "
"ஹான் ஓகே ஓகே.." என்று யோசனைக் கலைந்தவன் மீண்டும் வெண்ணிலாவை பார்த்து, "இப்போ நீ என்னை யோவ்னு சொன்னியா?? "
"இல்லையே சார் ஹிஹி!!" என்றவள் அடுத்த பேச்சை எடுத்து அவன் கவனத்தை மாற்றினாள்..
"சரி கிளம்புவோமா?? எங்க அம்மா எப்படியும் நாளைக்கு நல்ல நாள் பார்த்து வச்சிட்டு தான் இந்த வேலை எல்லாம் பண்ணும் இன்னிக்கி நான் போயி அந்த வீட்டை கிளீன் பண்ணிட்டு நமக்கு தேவையான பொருள் எல்லாம் வாங்கிட்டு வந்துடறேன்." நித்திக் பேச்சில் 'நமக்கு' என்று இவளையும் இணைத்துக்கொண்டதை இருவருமே உணரவில்லை..
" ஈவினிங் வீட்ல சும்மா தானே இருப்பேன்.. நான் வந்து ஏதாவது உங்களுக்கு கூடமாட ஒத்தாசை பண்ணவா சார்?? "
" அதெல்லாம் எனக்கு ஒன்னும் வேணாம் எவ்வளவு சீக்கிரம் இந்த ரிலேஷன்ஷிப்ப முடிச்சுகிட்டு இது ஃபெயிலியர் ஒர்க் ஆகாதுன்னு நிரூபிச்சுட்டு கிளம்ப முடியுமோ அவ்வளவு சீக்கிரம் கிளம்பிடு ஏன்னா பக்கத்திலேயே என் சாரு நம்மள பாத்து கஷ்டப்படுவா.. "
ஒரு பெணின் மன கஷ்டத்தை உணர்ந்தவனுக்கு இன்னொரு பெண்ணை தன் சுயநலத்திற்காக பகடைக்காயாக உருட்ட போகிறோம் என்பது புத்தியில் உறைக்கவில்லை போலும்..
"ஓகே சார் கிளம்புறேன்.."
"ஹே நாளைக்கு ரெண்டு மணி நேரம் பர்மிஷன் போட்டு துணி எல்லாம் அடுக்கி பேக் பண்ணி வை காலையில நான் வந்து கூட்டிட்டு வரேன்.. "
"உங்களுக்கு எதுக்கு சார் சிரமம் எனக்கு நீங்க லொகேஷன் மட்டும் ஷேர் பண்ணுங்க நானே லக்கேஜ் எல்லாம் வண்டில வச்சுட்டு எடுத்துட்டு வந்துடறேன்.. "
என்றவர்கள் ஆளுக்கொரு பக்கம் செல்ல அவர்களை இணைத்தே தீருவேன் என்று விதி விளையாடுகிறதே..
வெண்ணிலாவிற்கு இரவெல்லாம் உறங்கா இரவாக அமைந்தது அவள் வரும் வழியிலேயே பல யோசனைகளை அவள் மூளையை ஆக்ரமிக்க, மனம் என்னவோ நித்திக் பக்கமே சாட, வண்டி அதன்போக்கில் எப்பொழுதும் இவள் வணங்கும் முருகன் கோயில் வாசலில் சென்று நின்றது..
முருகன் முன் கை கூப்பி கண்ணை மூடி நின்ற வெண்ணிலா,
"முருகா!! ஏன் நான் அவர பாக்கணும்? யாருக்குமே தெரியாத அவருடைய மென்மையான பக்கங்கள் எனக்கு மட்டும் ஏன் தெரியணும்? அவர் மேல எனக்கு வந்த உணர்வெல்லாம் வயசுகோளாறு, ஈர்ப்புன்னு பேர் வச்சு கடத்துப்போன என் வாழ்க்கைக்குள்ள தடாலடியா என் அனுமதியே இல்லாம ஏன் அவரு நுழையனும்? சுகமா எனக்குள்ள வந்த அவர திருப்பி அனுப்பிடற நோக்குல போன எனக்கு இன்னுமே பக்கமா, நெருக்கமா அவரோட இணைச்சு வச்சுருக்கியே அது ஏன்?? இப்புடி எனக்குள்ள ஆயிரம் கேள்வி இருக்கு அனைத்துக்குமான பதிலா நான் உன்ன நம்புறேன்.. நீ தான் இருக்குறதுலையே பெரிய படைப்பாளி டைரக்டர் போல எங்க படத்துக்கும் சுபமான கிளைமாக்ஸ் குடுத்திடுப்பா!!"
என்றவள் காதுக்குள் இனிமையான மணியோசை, கண்ணை திறக்க அர்ச்சகர் குங்குமம் அவளிடம் நீட்ட, பக்கத்தில் தாலி சரடு தானம் குடுக்கும் பெண் இவளிடம் ஒன்றை நீட்ட, "எல்லாம் நன்மைக்கே!!" என்று வாங்கிக்கொண்டாள்..
மனது முழுக்க நிறைவேற வேண்டிய ஆசை இருந்தால் பார்க்கும் அனைத்துமே நமக்கான நல்ல சமிஞ்சையாக தான் தெரியும் வெண்ணிலாவிற்கு தெரிந்தது போல..
Last edited by a moderator:
Author: நிதனிபிரபு
Article Title: புது மங்கல சௌபாக்கியம் - 8
Source URL: NithaniPrabu Novels-https://nidhaniprabunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Article Title: புது மங்கல சௌபாக்கியம் - 8
Source URL: NithaniPrabu Novels-https://nidhaniprabunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.