• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

புனர்ஜென்ம பந்தமடி நீ எனக்கு - 1

நிதனிபிரபு

Administrator
Staff member
புனர்ஜென்ம பந்தமடி நீ எனக்கு 1

அந்தி சூரியன் தன் ஒளியைக் குறைத்து, மறைந்து கொண்டிருந்தது.

திருச்சி என்று அழைக்கப்படும் திருச்சிராப்பள்ளி மாநகரத்தின் முக்கிய பகுதியில் அமைந்திருந்த பெரிய கஃபேயில், தன் கீழ் உதட்டை ஒரு பக்கமாக இழுத்து மடித்து கடித்தபடி யாரையோ எதிர்பார்த்து கண்களைச் சுழற்றிக் கொண்டிருந்தான் அர்ஜுன்.

திராவிட நிறத்திற்கும் சற்றுக் கூடுதலான நிறம் தான். தாய் வழியாக அவனுக்குக் கிடைத்த பொக்கிஷம் அந்த நிறம். அதனாலேயே அவன் நிறைய பெண்களின் மனதை கவர்ந்தவனாக இருந்தான். இருபத்தி மூன்று வயதுடைய இளம் காளையவன். முதுநிலை பட்டப்படிப்பை முடித்து நான்கு மாதங்கள் தான் கடந்திருந்தது.

ஜீன்ஸ் பேண்ட் டி-ஷர்ட் சகிதமாக அமர்ந்திருந்தவன், ஒரு பக்க காலை மட்டும் நீட்டி ஆட்டிக்கொண்டிருந்தான்.

அவன் செயலிலேயே அவனுடைய பதட்டம் முகத்தில் அப்பட்டமாகத் தெரிந்தது. அவன் எதிர்பார்த்த நபர் வரவில்லை. பதட்டம் இன்னும் கூடியது.

பதட்டத்தை குறைக்க புகை அடிக்கலாமா என்று தோன்றியது. ஆனால் அது அவளுக்குப் பிடிக்காது. மூக்கை சுருக்கியவன், தன்னை கட்டுப்படுத்திக்கொள்ள கைமுஷ்டியை இறுக்கினான்.

‘எதற்காக அழைத்தாள்??’ அவன் மனது அதிலேயே சிக்கிக்கொண்டது. கடந்த மூன்று மாதங்களாக அவன் அழைத்தும் வராதவள், அழைப்பையும் ஏற்காதவள், உன்னைப் பார்க்க வேண்டும் மனது தவிக்கிறது என்று புலம்பியும், மனம் இறங்காதவள். அன்று காலையில் அழைத்தாள். மாலை சந்திக்கலாம், பேச வேண்டி இருக்கிறது என்று கூறினாள்.

அதைத்தானே நானும் மூன்று மாதங்களாகச் சொல்லிக் கொண்டிருக்கிறேன்?? அவளைப் பார்க்க வேண்டும், பேச வேண்டும், மனதில் அவள் உருவத்தைப் பொக்கிஷமாக நிரப்பிக் கொள்ள வேண்டும் என்று எத்தனையோ அழைப்புறுதல்கள் அவனுக்குள் இருக்க.

‘அப்படியொரு ஆசை அவளுக்கு இருக்காதா?? அல்லது பெண்கள் தங்களை கட்டுப்படுத்திக் கொள்ளும் திறன் படைத்தவர்களா??’ இவ்வாறு பல சிந்தனைகளுடன் குழம்பிக் கொண்டிருந்தான்.

அவன் எதிர்பார்த்த பைங்கிளி ஒயிலான நடையுடன் நடந்து வந்தாள்.

அவளைப் பார்த்ததும் காதல் கொண்ட மனம் ஒரு நிமிடம் துள்ளி குதித்தது. ‘நிஷா’ அது தான் அவளுடைய பெயர். வடக்கத்திய பெண். ஆனால் இங்கேயே மூன்று தலைமுறைகளாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். பார்க்க வடமாநிலத்துக்காரி என்று தெரிந்தாலும், தமிழ் நன்றாகவே தாண்டவமாடும். அதுதான் அவனை முதலில் ஈர்த்தது. பிறகு, அவள் பேச்சிலும், செயலிலும் அவன் கவனத்தை ஈர்த்து, அவன் மனதில் சிம்மாசனம் இட்டு அமர்ந்து விட்டாள் நிஷா.

அவளைப் பார்த்ததும், ஆர்வக்கோளாறில் எழுந்து நின்று விட்டான். முகம் எல்லாம் பூரிப்பாக அவளை வரவேற்றான்.

ஆனால் அவள் முகத்தில் அந்தப் பூரிப்பு இல்லை, சந்தோஷமும் இல்லை.

அதைக் கிரகித்தவனுக்கு பதட்டம் தொற்றிக் கொண்டது.

அருகில் வந்ததும் அவளை அமர வைத்து, அவளுக்குப் பிடித்த பிரீமியம் காபியை அவர்கள் இருவருக்கும் வரவைத்துவிட்டு அவனும் அமர்ந்தான்.

அவள் அதை மட்டும் தான் குடிப்பாள். அவளுக்கு மிகவும் பிடித்த காபி அது. பிரேசில் மற்றும் கொலம்பியாவிலிருந்து வரவைத்த காபி கொட்டைகளிலிருந்து தயாரிக்கப்படுவது. இதன் விலை நானூறிலிருந்து அறுநூறு வரை இருக்கும். அவனுக்குக் கட்டுப்படியாகாத ஒன்றுதான். ஆனால் அவளுக்காகத் தன்னிடம் இருக்கும் அனைத்தையும் செலவு செய்வான் அர்ஜுன்.

காபி வரும் வரை அவளிடம் அமைதி. அவன் ஏதேதோ கேட்டான். ஆனால் அவள் பதில் சொல்லவில்லை. காபி வந்ததும் அதை உறிஞ்சிக் குடித்தாள். அவள் குடிக்கும் அழகை எப்போதும் போலப் பார்த்து ரசித்திருந்தான் அர்ஜுன்.

“ம்ம், நீயும் குடி, கொஞ்சம் பேசணும்” என்றாள். அவன் தலையாட்டினான்.

பேசி முடித்து விட்டால் பிறகு யாராலும் குடிக்க முடியாது என்று அவளுக்குத் தோன்றி விட்டது போலும். அதனால் அவனையும் குடிக்கச் சொல்லி வற்புறுத்தினாள்.

அவள் பேச்சை எப்போது தட்டி இருக்கிறான்?? இப்பொழுது தட்டுவதற்கு?? உடனே எடுத்து அவனும் பருகினான்.

“இங்க பாரு அர்ஜுன். என் வீட்ல பெரிய பிரச்சனை. நானும் எவ்வளவோ சொல்லிப் பார்த்துட்டேன். ஆனா கேட்கவே இல்லை. என்னோட பேரண்ட்ஸ் செத்துருவேன்னு பயமுறுத்துறாங்க. அவங்களோட பிணத்து மேல நின்னு என்னால வாழ முடியாது. அவங்களுக்காக நான் கொஞ்சம் இறங்கி வரலாம்னு முடிவு பண்ணிட்டேன்” குடித்து முடித்தவள், காபி கப்பை டேபிளின் மீது வைத்துப் பேசிய வார்த்தைகள் இதுதான்.

அவனுக்குத் தலையும் புரியவில்லை, வாலும் விளங்கவில்லை. மொத்தத்தில் அவனுக்கு ஒன்றுமே புலப்படவில்லை.

“எனக்குப் புரியல” என்றான்.

சேரை சற்று முன்னோக்கி இழுத்து அவனைப் பார்த்தபடி அமர்ந்தவள். “யூ நோ, எங்க சமூகத்தில் நாங்க வெளியே பெண்ணெடுத்துப் பெண் கொடுப்பதில்லை. ஒண்ணுக்குள்ளவே ஒன்னா தான் முடிச்சுப்போம். பட் எனக்கு எங்க அப்பா மேல நிறைய நம்பிக்கை இருந்தது. அவருக்கு என் மேல பாசம் அதிகமா இருந்தது. அதனால அவரு நம்மளோட காதலுக்கு சம்மதம் சொல்லுவாருனு நினைச்சேன். ஆனா, இப்ப கதையே தலைகீழா மாறிடுச்சு. அப்பாவின் நண்பரின் பையனை எனக்குப் பார்த்துப் பேசி முடித்துவிட்டார்” என்று கூறி நிறுத்தி, அவனை ஆழம் பார்த்தாள்.

“இன்னும் எனக்குத் தெளிவா புரியல??” அவன் பேச்சில் குழைவு சென்று, அழுத்தம் கூடியிருந்தது.

எம்பி, அவன் வலது கையில், தன் இடது கையை வைத்தவள், அதில் அழுத்தம் கொடுத்து.

“ஐ நோ, நீ என்னை ரொம்ப விரும்புற. நானும் அப்படித்தான். பட் என்னோட சிட்டுவேஷன் இப்ப மோசமா மாறிடுச்சு. கண்டிப்பா நீ என்னைச் சரியா புரிஞ்சுப்ப. எனக்காக என்ன வேணுனாலும் பண்ணுவன்னு தெரியும்” நிஷா அடுக்கிக் கொண்டிருந்தாள்.

“நீ சொல்ல வந்ததை முதலில் தெளிவா சொல்லு?? நான் என்ன பண்ணுவேன்னு நீ சொல்லாத?” என்றான் அழுத்தமாக.

அந்தக் குரல், அவளுக்கு மிகப் புதிது. எச்சிலை உள் கூட்டி விழுங்கினாள். அவனைப் பற்றி அறியாதபோது. அவன் அவளுக்கு அறிமுகம் இல்லாதபோது, அவள் கவனித்த குரல் அது. அப்பொழுதும் அவன் அதை அவளிடம் வெளிப்படுத்தியதில்லை.

முதல் முறையாக வெளிப்படுத்துகிறான். தான் கூறப்போகும் வாக்கியம் அதுபோல என்று நிதானித்தவள்.

“எனக்கு அப்பாவோட பிரண்டோட பையனை திருமணத்திற்காகப் பேசி முடித்துவிட்டார்கள் அர்ஜுன்” என்றதும் எழுந்து நின்று விட்டான்.

அவன் கையில் அழுத்தம் கொடுத்து. அவனை அமரச் சொன்னாள். அவனும் சுற்றத்தை ஆராய்ந்துவிட்டு அமைதியாக அவள் முன்பு அமர்ந்தான்.


“நம்மளோட இந்த ரெண்டு வருஷ காதலை பத்தி அப்பா கிட்ட எவ்வளவோ எடுத்துச் சொன்னேன் அர்ஜுன். ஆனா, அப்பா ரொம்ப பிடிவாதம் பிடிக்கிறாரு. அவர் பார்த்த பையனை நான் திருமணம் பண்ணிக்கலனா தம்பிக்கும் விஷத்தைக் கொடுத்துட்டு, அப்பாவும் அம்மாவும் அதையே குடித்துச் செத்துடுவேன்னு சொல்றாங்க” என்று அவள் பேச்சை நிறுத்துவதற்கு முன்பாக.

“அதுக்கு??” என்றான் அர்ஜுன் அழுத்தமாக.

“இந்த மூணு மாசம் நான் உன்னைப் பார்க்க வேண்டாம்னு சொன்னதுக்கு ரீசனும் இதுதான். நாம பாக்கலனாலும் நம்மளோட காதலோட புனிதத்தை அவங்களுக்கு உணர்த்தணும்னு நினைச்சேன். ஆனா அப்பா ரொம்ப பிடிவாதமா மறுத்துட்டாரு. என் கண்ணு முன்னாடி விஷத்தைக் குடிக்கப் போய்விட்டார். நான் தட்டி விட்டு, அவர் காலில் விழுந்து கெஞ்சி கேட்டு அவர் பார்த்த பையனுக்குச் சம்மதம் சொன்ன பிறகுதான். அவர் அமைதியானாரு” அவள் நிதானமாகக் கூறிக் கொண்டிருந்தாள்.

ஆனால், அவன் நிதானம் தப்பிக் கொண்டிருந்தது.

“இப்ப நீ என்ன சொல்ல வரேன்னு தெளிவா சொல்லிடு நிஷா”.

‘உன் அப்பா பார்த்த பையனுக்கு ஓகே சொல்லிட்ட. என்னைக் கழட்டிவிட பார்க்குற’. முதல் பாதியை வெளிப்படையாகக் கூறியவன். மீதியை மனதிற்குள் தான் நினைத்தான்.

எதுவென்றாலும் அதை அவளே கூறட்டும். தான் அப்படி கற்பனையிலும் சிந்திக்க கூடாது என்று நினைத்தான்.

ஆனால் அவன் மனதில் நினைத்ததை தான் அவள் வாய்மொழியாகக் கூறினாள். ஆத்திரத்தில் டேபிளை தட்டி விட்டு எழுந்தவன். அந்த டேபிளை தூக்கி வீசினான்.

பதட்டமாக எழுந்தவள். “எதுக்கு இப்படி ஆக்ஃவர்டா பிஹேவ் பண்ற?? எல்லாரும் நம்மளையே பாக்குறாங்க. எனக்கு எம்பேரசிங்கா இருக்கு” இரண்டடி பின்னால் தள்ளி நின்று, கைகளைப் பிசைந்து கொண்டே கூறினாள் நிஷா.

சுற்றி இருந்தவர்களின் கவனம் முழுவதும் அவர்களின் பக்கம் தான் இருந்தது. ஆனால் அவன் எதையும் கண்டு கொள்ளவில்லை. அதைக் கவனிக்கும் மனநிலையும் அவனிடம் இல்லை.

காபி ஷாப்பின் நிர்வாகிகள், வேலை செய்பவர்கள் என்று எல்லோரும் அவர்களை நெருங்கி விட்டார்கள். அவன் கோபத்துடன் கைமுஷ்டியை இறுக்கி பிடித்திருப்பது தெரிய, அவனைத் தடுப்பதற்காகவே அவன் பக்கம் வந்து நின்று கொண்டவர்கள். அவனைப் பிடித்தும் கொண்டார்கள்.

“சார் ரிலாக்ஸ், ஏன் இப்படி பிஹேவ் பண்றீங்க?. இது ஒன்றும் ரோட்டோரத் டீக்கடை கிடையாது. பெரிய மாலில் இருக்கும் கஃபே. இங்க நீங்க எது செய்தாலும் போலீஸ் கேஸாகும். நிறைய செலவாகும். நிதானம் முக்கியம்” அங்கு வேலை செய்பவன் நிலையை உணர்த்த எண்ணினான்.

ஆனால் அவனுக்குக் கோபம் கட்டுப்பட மறுத்தது.

“இப்ப ஃபைனலா என்னடி சொல்ற?” தரம் தாழ்ந்து பேசினான். இதுவரை அவன் வாழ்வில் அது போன்று யாரிடமும் அவன் பேசியதில்லை.

“இதுக்கு மேல என்ன சொல்றது?? எப்படி அரகெண்டா பிஹேவ் பண்றேன்னு பாரு?? அதான் உன் புத்தியை காட்டிட்டல்ல?? நாயைக் குளிப்பாட்டி நடு வீட்டுல வச்சாலும். அது எதையோ தின்னப் போகுமாம்?? உன்னோட தராதரம் தெரியாம உன் கூடப் பழகியது என்னோட தப்பு தான். அதுக்கு என்னை அசிங்கப்படுத்துறல்ல?? நான் எவ்வளவு பொறுமையா என்னோட நிலையை சொல்லிட்டிருக்கேன். அதைப் புரிந்துகொள்ளத் தெரியாத நீ எல்லாம் என்ன மனுஷன்?” அவனைப் பற்றிச் சிறிதும் இரக்கம் இல்லாமல் அவள் எதையோ பேசிக் கொண்டிருந்தாள்.

அவனுக்கு ரௌத்திரம் அதிகமானது. உண்மையில் அவர்கள் பிடித்திருக்கவில்லை என்றால், அவளை அடித்திருப்பான் அர்ஜுன். ‘அவள் நிலையை, தான் புரிந்துகொள்ள வேண்டுமா? அப்பொழுது என்னுடைய நிலை? அதை யார் புரிந்துகொள்வது?’.

“எவ்வளவு திமிரு டி உனக்கு?? பழமொழியா சொல்ற??. என்ன சுத்தி சுத்தி வந்து காதலிச்சு, நீ இல்லனா நான் இல்லன்னு டயலாக் எல்லாம் விட்டு, நான் வேணான்னு நிக்கும் போதும். உயிரையே விட்டுடுவேன்னு த்ரேட்டினிங் பண்ணி, என்னை லவ் பண்ண வச்சுட்டு. இப்ப ரொம்ப ஈஸியா உங்க அப்பா பார்த்த பையன கல்யாணம் பண்ணிக்க போறேன்னு வந்து என்கிட்டயே சொல்றியே, உனக்கு எவ்வளவு நெஞ்சழுத்தம் இருக்கும்??” என்று அவன் எகிரி கொண்டு பேசினான்.

மற்றவர்கள் அவனை இறுக்கமாகப் பிடித்துக் கொண்டார்கள். அவர்கள் அனுபவத்திற்கு இதுபோல நிறைய பார்த்திருக்கிறார்கள். அதனால் அவர்களுக்கு ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை.

இதைவிட மோசமாக, அடிதடி போலீஸ் கேஸ் என்று அனைத்தையும் பார்த்திருக்கிறார்கள். குப்புற படுத்து அழுது கரைந்ததையும் பார்த்திருக்கிறார்கள். காலில் விழுந்து கெஞ்சியதையும் பார்த்திருக்கிறார்கள்.

“சார் எதுவா இருந்தாலும் பொறுமையா பேசித் தீர்வு காணுங்க. இப்படி சண்டை போடாதீங்க. அப்புறம் நாங்க போலீஸுக்கு போன் பண்ண வேண்டியதாயிருக்கும். அப்பொழுதும் அங்கிருந்தவர்கள் பொறுமையாகவே பேசினார்கள்.

நிலைமையின் தீவிரம் அவர்களுக்குப் புரிந்தது. அவன் ஆத்திரத்தில் இருக்கும்போது இவர்களும் கோபத்தை வெளிப்படுத்தினால், நிலைமை கைமீறிச் சென்றுவிடும் என்றுதான். அவர்களும் தூக்கிப் பிடித்துக்கொண்டு பேசியது.

அவள் எதையோ பேச, அர்ஜுன் கோபமாகக் கத்த ஆரம்பித்து விட்டான். அதற்கு மேல் அங்கு நின்றால் தன்னுடைய நிலைமை கீழிறக்கமாக ஆகிவிடும் என்று நினைத்த நிஷா. அவனை மற்றவர்கள் பிடித்திருக்கிறார்கள் என்பதை உறுதி செய்து கொண்டு. வேகமாக அங்கிருந்து வெளியேற ஆரம்பித்தாள்.

அவர்களிடமிருந்து விடுபடப் போராடினான் அர்ஜுன். ஆனால் அவர்கள் விடவில்லை.

“உடைச்ச டேபிளுக்கு பில்லை செட்டில் செய்து விட்டுப் போங்க சார்” என்று அந்தக் காபி ஷாப்பின் நிர்வாகி கூற.

“காபியும் குடிச்சிருக்காரு, அதுக்கும் பேப்பண்ணனும்” என்று அவன் நிலைமை புரியாமல் அர்ஜுனுக்கு காபி கொடுத்தவர் வேறு, அவனை இன்னும் நிறுத்தி வைக்க முயன்றார்.

“என்னோட டெபிட் கார்டு, போன் எல்லாத்தையும் உங்ககிட்ட கொடுத்துட்டு போறேன். நான் திரும்ப வந்து வாங்கிக்குறேன். முதல்ல என்னை விடுங்க” அவர்களிடமிருந்து விடுபடப் போராடிக் கொண்டிருந்தான் அர்ஜுன்.

ஆனால் அவர்கள் சிறிதும் இறங்கவில்லை. “சார் போலீஸ் கேஸ் ஆகாம பணத்தை கட்டிட்டு போங்கன்னு சொல்றதே பெரிய விஷயம். செட்டில் பண்ணிட்டு கிளம்புங்க. அப்படி இல்லன்னா, கேமரா பதிவை வச்சு போலீஸ் கேஸ் கொடுக்க வேண்டியதா இருக்கும்” என்று நிர்வாகி மிரட்டினார்.

அவர் உண்மையில் மிரட்டினாரா அல்லது அவனைக் காப்பாற்றினாரா என்று கடவுளுக்குத் தான் வெளிச்சம். அதீத கோபத்தில் இருப்பவர்கள் அதே நிலையில் சென்றால், எது வேண்டுமென்றாலும் நிகழலாம். சற்று நிதானித்தால், ஒருவேளை அவன் கோபம் மட்டுப்படலாம் என்று நினைத்தார் போலும்.

வேறு வழியே இல்லாமல், அவர்கள் சொன்னதை செய்தான். அவன் கோபத்தையும் அவனால் அடக்க முடியவில்லை. அந்த அசிங்கத்தையும் அவனால் கடக்க முடியவில்லை.

கஃபேயின் மூலையில் அமர்ந்திருந்த இரு விழி கண்கள் அவனை பாவமாகப் பார்த்துக் கொண்டிருந்தது.
 
Last edited by a moderator:

Gowri Karthikeyan

Active member
இந்த நிஷா பிள்ளையே அவனை லவ்வரேன்னு சொல்லிட்டு இப்ப கலட்டி விட பார்க்குது.....
பாவம் அர்ஜுன்.....
யார் அது????
 
Top Bottom