• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

மகுடம் சூட்டும் காதல் - 5

அத்தியாயம் - 5


அரசியல் நரகத்திலிருந்து விடுபட்டு பஸ் ஜன்னல் வழியே வந்த குளிர்ந்த காற்று அர்ஜுனின் முகத்தில் மோதியது.

ஜன்னலுக்கு வெளியே பச்சைப் பட்டு உடுத்தியது போல விரிந்து கிடந்த நெல்வயல்களும், வானுயர வளர்ந்து நின்ற தென்னை மரங்களும், ஆங்காங்கே ஏர்களில் உழுது கொண்டிருந்த விவசாயிகளும் அர்ஜுனின் கண்களுக்குப் புதிய உலகத்தைக் காட்டினர்.

பல மாதங்களாகச் சென்னையின் கறுப்புப் பணப் பங்களாவிற்குள் மூச்சு முட்டித் தவித்த அவனது நுரையீரலுக்கு, இந்த மாசற்ற கிராமத்துக் காற்று ஒரு புதிய ஜீவனைக் கொடுத்தது.

இருப்பினும் அந்தப் பசுமையான இயற்கை எழிலுக்குப் பின்னால் விஸ்வநாதனின் ரசாயன ஆலை ஒளித்து வைத்திருக்கும் நச்சு ரகசியம் அவனது நினைவுக்கு வர, அவனது ரசனை காற்றோடு மறைந்தது.

'இவனுங்க பண்ற அநியாயத்தை ஆதாரத்தோட உடைக்கணும்..' என்று தனக்குள் முணுமுணுத்துக் கொண்டான்.

பஸ்ஸிலிருந்து இறங்கிய அர்ஜுன், தன் பயணப் பையைத் தோளில் இறுக்கிக் கொண்டு நேராக நெல்வயல் அரசு உயர்நிலைப் பள்ளி நோக்கி நடந்தான்.

ஓட்டுக் கூரை வேய்ந்த வகுப்பறைகளும், பெரிய விளையாட்டு மைதானமும், மரங்களின் நிழல்களும் கொண்ட அந்தப் பள்ளிக்கு சென்றான்.

தலைமை ஆசிரியர் அறையில் தன் பையிலிருந்த அரசு தற்காலிக பணி ஆணை கோப்பைக் காண்பித்து, புதிய அறிவியல் ஆசிரியராக பொறுப்பேற்றுக் கொண்டான்.

"தம்பி அர்ஜுன் இந்த ஊர்ல இருக்கற ஒரே ஹைஸ்கூல் இதுதான்.. ஏழைப் பிள்ளைகள் தான் இங்க படிக்கறாங்க.. அவங்களுக்கு எல்லாம் நல்லா பாடம் சொல்லிக் குடுங்க.." என்று தலைமை ஆசிரியர் அன்போடு வாழ்த்தி அனுப்பினார்.

தன் முதல் வகுப்பிற்குள் நுழைந்த அர்ஜுன், கையில் சாக்பீஸ் எடுத்து கரும்பலகையில் அறிவியல் என்று பெரிய எழுத்துகளில் எழுதினான்.

மாணவர்களின் வெள்ளந்தியான சிரிப்பும், ஆர்வமும் அவனுக்குள் ஒரு புதிய நிம்மதியைக் கொடுத்தன. அன்று முழுக்க மாணவர்களோடு உரையாடி, கடினமான அறிவியல் சூத்திரங்களை எளிய கதைகள் மூலம் விளக்கி, முதல் நாளிலேயே அவர்களுக்குப் பிடித்த ஆசிரியராக மாறிப் போனான்.

பள்ளி முடிந்து பெல் சத்தம் பலமாக ஒலித்தது. மாணவர்கள் அனைவரும் சத்தமிட்டபடி மைதானத்தை நோக்கி ஓடினர். அர்ஜுன் தன் மேஜையில் இருந்த புத்தகங்களை அடுக்கிக் கொண்டு தன் பையைத் தோளில் மாட்டிக்கொண்டு வகுப்பறையில் இருந்து வெளியே வந்தவன் மெதுவாக நடந்தான்.

அப்போது அவனுக்கு எதிரே விறுவிறுப்பாக, துறுதுறுவென்று ஒரு பெண் நடந்து வந்தாள். அவளின் கையில் ஆங்கிலப் புத்தகங்களை அடுக்கிக் கொண்டு, லேசான வெளிர் நீல நிறச் சேலையில், காற்றில் பறக்கும் சுருள் முடியைச் சரிசெய்தபடி வந்தாள்.

அவள்தான் அந்தப் பள்ளியின் ஆங்கில ஆசிரியை.. பெயர் சுபத்ரா..

சுபத்ரா மிகவும் சுட்டித்தனமும், துறுதுறுப்பும் கொண்ட ஒரு நடுத்தரக் குடும்பத்துப் பெண். அவளது வருகை அந்தப் பள்ளிக்கே ஒரு கலகலப்பைக் கொடுக்கும். அவள் புத்தகங்களைப் பார்த்துக் கொண்டே ஏதோ ஒரு ஆங்கிலக் கவிதையைத் தனக்குள் முணுமுணுத்தபடி வேகமாக நடந்து வந்ததால், அவளுக்கு எதிரே வந்த அர்ஜுனைக் கவனிக்கவில்லை.

அவனின் மீது இவள் மோதிட, சுபத்ராவின் கையில் இருந்த ஆங்கிலப் புத்தகங்கள் அனைத்தும் தரையில் சிதறின.

அதிர்ச்சியில் உறைந்தவள் "வாட் தி ஹெல்.." என்று ஆங்கிலத்தில் கேட்டு தன் இடுப்பில் கை வைத்து நிமிர்ந்து பார்த்தாள்.

அவளது பெரிய கண்கள் கோபத்தில் விரிந்திருந்தன. அர்ஜுன் உடனே குனிந்து புத்தகங்களை அள்ளத் தொடங்கினான்.

"ஸாரி.. ஸாரி மிஸ்.. நான் பார்க்கல.." என்று அவன் பதறினான்.

"என்ன சார்.. கண்ணு முன்னாடி இல்லையா.? பார்த்து நடக்க மாட்டீங்களா.?" என்று தன் துறுதுறுப்பான கண்களை உருட்டி, கோவமாக கேட்டாள் சுபத்ரா.

அர்ஜுன் புத்தகங்களை அடுக்கிக் கொண்டு எழுந்து நின்று அவளது கண்களைப் பார்த்தான். மீன்விழி என்று கூறுவது இவளுக்கு நன்றாக பொருந்தும். கண்களை அங்குமிங்கும் உருட்டி அவனை பார்த்தவளின் பார்வை இவனுள் என்னமோ செய்தது.

"மிஸ் நீங்க தான் புக்ஸைப் பார்த்துட்டே வந்தீங்க.. நான் நேராத்தான் வந்தேன். தப்பு உங்க மேலதான்.." என்றிட, "ஓஹோ.. புதுசா வந்துருக்கற சயின்ஸ் சார் நீங்கதானா.? உங்க பேரு அர்ஜுன் தானே.?" என்று புத்தகங்களை அவனிடமிருந்து பறிப்பது போல் வாங்கிக் கொண்டு, உதட்டோரம் ஒரு குறும்பு பன்னகையை உதிர்த்தாள்.

"கிராமத்துப் பள்ளிக்கூடத்துக்கு வந்துட்டு இவ்வளவு ஈகோ காட்டக் கூடாது சார்.. மகாபாரதத்துல அர்ஜுனன் எவ்வளவு பெரிய வில்லாளனா இருந்தாலும் கிருஷ்ணரோட தங்கை சுபத்ராவை அடைவதற்கு அவரோட காலடில தான் வந்து நின்னாராம்.. அதை மனசுல வச்சுக்கோங்க.." என்று மெல்லிய குரலில் கூறியவள் கண்சிமிட்டி விட்டு சென்றாள்.

அர்ஜுன் வியப்போடு அவளையே பார்த்துக் கொண்டிருந்தான்.

'சுபத்ராவா.? அர்ஜுனனுக்கு ஏத்த சுபத்ரா தான்..' என்று அவனது உதடுகள் தற்செயலாகப் புன்னகைத்தன.

அன்றைய மாலையின் பொன்னிற வெளிச்சத்தில் அர்ஜுன் - சுபத்ரா இடையேயான அந்த அழகான சந்திப்பின் அம்பு பாய்ந்திருந்தது.

அதே நேரத்தில், பள்ளியை விட்டு வெளியே வந்த அர்ஜுனின் கண்கள் தூரத்தில் கறுப்புப் புகை மூட்டத்தைக் கக்கிக் கொண்டிருந்த விஸ்வநாதனின் ரசாயன ஆலையின் மீது விழுந்தன.

'இப்போ எதுவும் பண்ண கூடாது.. அமைதி அர்ஜூன் அமைதி..' என்று தனக்கு தானே கூறிக் கொண்டு தனக்குத் தற்காலிகமாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த வாடகை வீட்டிற்குச் சென்றான்.

அது நெல்வயல் கிராமத்தின் நடுவே இருந்த ஒரு சிறிய அக்ரஹாரத் தெரு போன்ற அமைதியான பகுதி.

ஒரு சாதாரணக் காட்டன் சட்டையும் வேட்டியும் கட்டிக் கொண்டு தெருவில் காலார நடக்க ஆரம்பித்தான் அர்ஜூன்.

சென்னையின் கான்க்ரீட் காடுகளையும், ஹாரன் சத்தங்களையும் கேட்டுப் பழகிய அவனது மனதிற்கு இந்தத் தெருவின் அமைதியும், வாசல்களில் போடப்பட்டிருந்த அரிசி மாவுக்கோலங்களும், மாட்டுத் தொழுவத்தின் வாசமும் ஒரு புதிய அனுபவத்தைத் தந்தன.

அவன் நிதானமாக நடந்து கொண்டிருந்த போது தூரத்தில் ஒரு வீட்டின் வாசலில் இருந்து ஒரு துறுதுறுப்பான குரல் கேட்டது.

"என்ன சார்... ஸ்கூல் முடிஞ்சும் சயின்ஸ் ரிசர்ச் இன்னும் முடியலயா.? தெருவுல கூடவா இப்படி யோசிச்சுட்டே நடப்பீங்க.?" என்றதில் திடுக்கிட்டு திரும்பிப் பார்த்தான் அர்ஜூன்.

பள்ளிச் சேலையை மாற்றி விட்டு, ஒரு அழகான தாவணியில், தலையில் மல்லிகைப் பூவோடு அவள் நின்றிருந்த தோரணை அர்ஜுனின் நெஞ்சில் சட்டென ஒரு அம்பு போலப் பாய்ந்தது.

"நீ... நீங்க இந்தத் தெருவுல தான் இருக்கீங்களா மிஸ்.?" என்று அர்ஜுன் ஆச்சரியமாகக் கேட்டான்.

"மிஸ்ஸா.? ஸ்கூல்ல தான் மிஸ்... வெளியில நான் வெறும் சுபத்ரா.. சுருக்கமா சுபான்னே கூப்பிடலாம்" என்றபடி அவனிடம் வந்தாள்.

"ஆமாம்.. இது எங்க சொந்த வீடு.. நீங்க தங்கியிருக்கீங்களே முனுசாமி தாத்தா வீடு... அது எனக்கு ரெண்டு வீடு தள்ளித் தான் இருக்கு.. அப்போ நாம இனிமே தினமும் பார்க்கப் போறோம்னு சொல்லுங்க மிஸ்டர் அர்ஜுன்.." என்று கண்சிமிட்டி வம்பு இழுத்தாள்.

"ஓஓஓ அப்படியா விஷயம்.?" என்று கேட்டு லேசாகச் சிரித்தவன் "தினமும் பார்த்து என் உயிரை வாங்கப் போறீங்கனு சொல்லுங்க.. ஸ்கூல்ல தான் புக்ஸை தட்டிவிட்டேனு சண்டை போட்டீங்க.. இங்கயும் ஆரம்பிச்சுட்டீங்களா.?" என்று கேலியும் கிண்டலுமாக வினவினான்.

"நான் எங்க சார் சண்டை போட்டேன்.? நீங்க தான் சென்னை திமிரோட விறைப்பா நடந்து வந்தீங்க.." என்று உதட்டை பிதுக்கியவள் "சரி சென்னை மகாராஜாவுக்கு எங்க கிராமத்துத் தண்ணி குடிச்சுப் பழகிருச்சா.? இல்லை மினரல் வாட்டர் தான் வேணுமா.?" என்று எள்ளலாகக் கேட்டாள்.

சுபா சாதாரணமாகக் கேட்ட அந்த வார்த்தை அர்ஜுனின் மூளையைச் சட்டென உலுக்கியது. அவனுக்கு விஸ்வநாதனின் ரசாயன ஆலை ஞாபகம் வந்தது.

"தண்ணீ நல்லாத் தான் இருக்கு சுபா... ஆனா இந்த ஊர் தண்ணில ஏதோ ஒரு விசித்திரமான சுவை இருக்கற மாதிரி எனக்குத் தோணுது.. அது ஏன்.?" என்று இது தான் நல்ல சான்ஸ் என்று அவளிடம் போட்டு வாங்க நினைத்து கேட்டான்.

சுபாவின் முகத்தில் இருந்த புன்னகை சட்டென மறைந்து, ஒரு மெல்லிய சோகம் குடியேறியது.

பெருமூச்சு விட்டவள் "நீங்க சயின்ஸ் வாத்தியார்... கரெக்டா கண்டுபிடிச்சுட்டீங்க சார்.. இந்த ஊர் தண்ணீ இப்போ சாபமா மாறிட்டு இருக்கு.. முன்னாடி எல்லாம் எங்க ஊர்க் கிணத்துத் தண்ணி தேன் மாதிரி இனிக்கும்..

ஆனா கடந்த சில வருஷங்களா இந்தத் தண்ணீயைக் குடிச்சதுல இருந்து ஊருக்குள்ள யாருக்கும் நல்லது நடக்கல.." என்று அவள் இழுத்தாள்.

"நல்லது நடக்கலயா.? என்ன சொல்றீங்க சுபா.?" என்று புரியாமல் அவன் நிற்க,
"அது.. அது வந்து.. பெரியவங்க ஏதோ சொல்றாங்க சார்.. எனக்குச் சரியாத் தெரியல.. எங்க அண்ணிக்குக் கல்யாணம் ஆகி ஆறு வருஷம் ஆகுது.. இன்னும் ஒரு குழந்தை பிறக்கல..

இந்தத் தெருவுல மட்டும் இல்ல சார் இந்த நெல்வயல் கிராமத்துல இருக்கற எந்த இளம் தம்பதிகளுக்கும் கடந்த ஏழு வருஷமா ஒரு குழந்தைக் கூட பிறக்கல.. இந்த ஊரே மலடாயிட்டு இருக்குனு ஊர் பெரியவங்க அழுது புலம்புறாங்க.." என்று வேதனையோடு கூறினாள்.

அர்ஜுனின் இதயம் ஒரு நொடி துடிப்பதை நிறுத்தியது போல் இருந்தது..

'கடந்த ஏழு வருடங்களாக இந்த ஊரில் ஒரு குழந்தைக் கூட பிறக்கவில்லயா.? ஒட்டுமொத்தக் கிராமமே மலட்டுத் தன்மையால் பாதிக்கப்பட்டுள்ளதா.?' அவனால் நம்ப முடியவில்லை..

"வேற ஏதாவது பிரச்சினை இருக்கலாமே..? யாருமே ஹாஸ்பிட்டல் போய் செக்கப் பண்ணலயா.?"

"எல்லாம் பண்றாங்க சார்.. ஆனா குழந்தை மட்டும் கிடைக்கல.."

விஸ்வநாதன் ஆட்கள் சென்னையில் பேசிய அந்த ரகசியப் பேச்சுக்கான முழுப் பரிமாணமும் இப்போது தான் அவனுக்குப் புரிந்தது.

நிலத்தடி நீரில் கலக்கப்படும் அந்த ஆபத்தான ரசாயனக் கழிவுகள் தான் இந்த மாபெரும் மனிதப் பேரழிவிற்குக் காரணம் என்பதை அவனது அறிவியல் மூளை உடனே கணக்குப் போட்டுக் கண்டுபிடித்தது

'விஸ்வநாதன் நீ எவ்வளவு பெரிய கொடூரக்காரன்..' என்று அர்ஜுனின் கைகள் கோவத்தில் இறுகின.

அவனது முக மாற்றத்தைப் பார்த்த சுபா பதறி "என்ன சார் ஆச்சு.? ஏன் முகம் ஒரு மாதிரி மாறுது.? நான் ஏதும் தப்பா சொல்லிட்டேனா.?"

"இல்லை சுபா.. நீ ஒன்னும் தப்பா சொல்லல.. கேட்ட எனக்கு தான் ஒரு மாதிரி ஆகிருச்சு.. சரி நன் கிளம்பறேன்.. இருட்டாகிட்டு இருக்கு.." என்று அவளிடம் இருந்து விடைப்பெற்றான்.

செல்லும் அவனையே பார்த்து நின்ற பெண்ணவளுக்கு மனதில் ஏதோ இனம்புரியாத தவிப்பு உண்டாகியது. அது என்னவோ..?

சுபா கூறிய அதிர்ச்சியான வார்த்தைகள் இன்னும் அவனின் காதுகளில் விடாமல் ஒலித்தன. கடந்த ஏழு வருடங்களாக பசுமையான நெல்வயல் கிராமத்தில் ஒரு குழந்தைக் கூட பிறக்கவில்லை என்ற கொடூரமான மனிதப் பேரழிவு, அவனது அறிவியல் மூளையை உலுக்கியது.

விஸ்வநாதனின் ரசாயன ஆலைதான் இந்த மாபெரும் துரோகத்திற்குப் பின்னால் இருக்கிறது என்ற உண்மை அவனுக்கு நன்றாக புரிந்தது. அது இன்னும் இந்த ஊர் மக்களுக்கு புரியவில்லையா.? என்ற கேள்வியும் எழுந்தது.

அவனது இதயம் படபடவென்று அடித்துக் கொண்டிருந்தது. அவனை ஆட்கொண்டிருந்த உணர்வு என்னவென்று அவனுக்கே புரியவில்லை. அவனால் இந்தத் தகவலைத் தனக்குள் மட்டும் பூட்டி வைக்க முடியவில்லை.

உடனே தன் மொபைலை எடுத்து விருசாலியின் ரகசிய எண்ணிற்கு அழைத்தான்.

தம்பியின் அழைப்பைக் கண்டதும் அவசரமாக எடுத்து காதில் வைத்தாள் விருசாலி. காரணமின்றி அவன் இவளுக்கு அழைக்க மாட்டான். தேவை என்றால் மட்டும் தான் அவனிடம் இருந்து இவளுக்கு அழைப்பு வரும். மாற்றான் தந்தை பிள்ளைகள் என்றாலும் இருவருக்குள்ளும் பாசம் அதிகமாகவே இருந்தது.

"சொல்லுடா அர்ஜுன்.. அங்க எதாவது பிரச்சனையா.? நீ நல்லா இருக்கீயா.?" என்று பதற்றத்துடன் கேட்டாள் விருசாலி.

அவன் சுற்றி வளைக்காமல் நேரடியாகவே "அக்கா நாம நினைச்சதை விட விஸ்வநாதன் ரொம்பப் பெரிய மிருகம்ம்க்கா.." என்ற அர்ஜுனின் குரல் கோபத்திலும் அதிர்ச்சியிலும் நடுங்கியது.

"நான் இப்போ தான் அந்த நெல்வயல் கிராமத்தோட ஒரு அதிர்ச்சியான உண்மையை லோக்கல் ஆளுங்க மூலமா தெரிஞ்சுக்கிட்டேன்.. இந்த ஊர்ல இருக்கற அந்த ரசாயன ஆலையோட கழிவு நீர் நிலத்தடி நீர்ல கலந்து, ஒட்டுமொத்த ஊரையே மலடாக்கிட்டு இருக்குக்கா..

கடந்த ஏழு வருஷமா இந்த நெல்வயல் கிராமத்துல ஒரு குழந்தைக் கூட பிறக்கலையாம்க்கா.. எத்தனையோ இளம் தம்பதிகள் குழந்தையே இல்லாம அழுதுட்டு இருக்காங்க.. விஸ்வநாதனும் அவனோட ஆளுங்களும் தங்களோட கள்ளப்பணத்துக்காக ஒரு ஒட்டு மொத்தக் கிராமத்தோட வம்சத்தையே அழிச்சிட்டு இருக்காங்கக்கா.." என்று ஒட்டுமொத்த விபரத்தையும் போனில் கொட்டினான் அர்ஜுன்.

மறுமுனையில் விருசாலிக்குத் தூக்கி வாரிப்
போட்டது.

"என்னடா சொல்ற அர்ஜுன்.? இவ்வளவு பெரிய கொடூரமா.?" என்று விருசாலி அதிர்ச்சியில் தன் வாயை மூடிக் கொண்டாள்.

"ஆமாம்க்கா.. நான் சும்மா இருக்க மாட்டேன்.. யாருக்கும் தெரியாம அந்த ஊர்க் கிணத்துத் தண்ணியையும், ஆற்றுத் தண்ணியையும் சாம்பிள் எடுக்கப் போறேன்.. அதை நம்ம லேப்புக்கு அனுப்பி சயின்டிஃபிக் ரிப்போர்ட் வாங்கப் போறேன்.. அந்த ஆதாரத்தை வச்சு இந்த விஸ்வநாதன் கூட்டத்தை ஒட்டு மொத்தமா நடுத்தெருவுல நிறுத்தப் போறேன்கா.." என்று கோவத்துடன் கூறினான் அர்ஜுன்.

"பார்த்துடா அர்ஜுன்.. அங்க இருக்கறது விஸ்வநாதனோட கோட்டை.. உனக்கு எதாவது ஆபத்து..." என்று விருசாலி பேச ஆரம்பித்த நேரம் அறையின் கதவு சட்டெனத் திறக்கப்பட்டு உள்ளே புயலென நுழைந்தான் கர்ணன்.

அவனது கண்கள் கோவத்தில் சிவந்திருந்தன. உள்ளே வந்தவன் விருசாலி போனில் பேசிக் கொண்டிருந்ததை அரைகுறையாக கேட்டிருந்தான். அவனுக்கு முழு விபரம் தெரியவில்லை. அவர்கள் பேசுவதும் விளங்கவில்லை. ஆனாலும் தன் அண்ணனைப் பற்றி பேசுவது மட்டும் நன்றாக தெரிந்தது.

அவளது கையிலிருந்த மொபைலைப் பிடுங்கி "ஏய் அர்ஜுன்.. யார் வீட்டுல நின்னு, யார் அண்ணனைப் பத்திடா துரோகினு பேசுறீங்க.?" என்று கர்ணன் போனில் கத்தினான்.

அவனது ஆக்ரோஷம் அந்த அறையின் சுவர்களையே அதிர வைத்தது.

"எங்க அண்ணன் விஸ்வநாதன் ஒரு ஒட்டு மொத்தக் கிராமத்தையே அழிக்கிறாரா.? உங்களுக்கு எவ்வளவு தைரியம் இருந்தா என் வீட்டுக்குள்ளயே இருந்துட்டு, என் அண்ணன் மேல இப்படி ஒரு அசிங்கமான பழிச் சொல்லை வீசுவீங்க.?

அக்கா தம்பி ரெண்டு பேரும் சேர்ந்து ஏதோ பெரிய சதி வலை பின்னுறீங்கனு எனக்கு அப்பவே தெரியும்டா.. நீங்க சொல்றதை எல்லாம் நான் நம்புவேனு நினைக்கறீங்களா.?

என் உயிரே போனாலும் என் அண்ணனை நான் சந்தேகப்பட மாட்டேன்.. உங்களால என்ன பண்ண முடியுமோ பண்ணுங்க.. அதே மாதிரி என்னால என்ன பண்ண முடியுமோ நானும் பண்றேன்.. என் அண்ணனுக்காக என் உயிரை கூட குடுப்பேன்.." என்று கர்ணன் தன் அண்ணன் மீதான கண்மூடித்
தனமான விசுவாசத்தில் கர்ஜித்தான்.

மறுமுனையில் அர்ஜுனும், இங்கிருந்த விருசாலியும் கர்ணனின் இந்த வார்த்தைகளில் ஒரு நொடி ஸ்தம்பித்து நின்றனர்.



தொடரும்..
 
Top Bottom