மகேந்திரனின் மதிவதனியிவள் - 2

  • நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.

    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

நிதனிபிரபு

Administrator
Staff member
Nov 11, 2018
2,210
16,607
113
Germany
MMI 2


சிவபூஜை செய்வதற்காக அதிகாலை நான்கரை மணிக்கு துயில் கலைந்தெழுந்த தீரனின் விழிகள் இரண்டும் கொவ்வைப்பழமாக சிவந்திருந்தன...



இடைவிடாத அரண்மனை பணிகளின் நீட்சியாக அவனது உடல் ஓய்விற்காக மன்றாடியபோதிலும், ஒரு நாட்டின் படைத்தளபதி அவ்வாறு உறங்குவது நியாயமன்றோ?


அதிலும் அன்றைய தினம் அதியன் நெடுமாறன் மன்னராக முடி சூடிக்கொள்ளப்போகும் நன்னாள் வேறு..!


எனவே தன் உடல் சோர்வினை உதறிவிட்டு எழுந்தவன், தனது வழக்கமான நீராடலை முடித்ததும் இடையில் வெள்ளை வேஷ்டி தரித்து, நெற்றியிலும், வெற்று மார்பு மற்றும் புஜங்களில் திருநீறு பூசிக்கொண்டு, அரண்மனையின் கீழ் மாடத்தில் கம்பீரமாக வீற்றிருந்த லிங்க திருமேனியாகக் காட்சி தரும் ஈசனை தரிசிக்கக் கிளம்பினான்...


அந்த விஸ்தாரமான மேல்மாடத்தில் நடந்து சென்றபோது, அவனுக்கு எதிர்திசையில் நடந்து வந்தவனைக் கண்டு ஒரு நொடி தயங்கி நின்றுவிட்டு, தன் நடையைத் தொடர்ந்தான்...


அதற்குள் மிக அருகில் வந்துவிட்ட அந்த மாவீரன், "நில் தீரனே..!" எனக் கூறி நிறுத்தியதில் அவனை தன் கூர்மையான விழிகளால் அளந்துவிட்டு போலிப்பணிவாக தன் சிரத்தை சற்றுக் குனிந்து நிமிர்ந்தவன்,


"கூறுங்கள் சுந்தரவனத்து இளவரசே..! எம்மால் தங்களுக்கு ஆகக்கூடிய காரியம் ஏதுமுண்டோ?..." என்றான்...


தீரனைப் பற்றி நன்கு அறிந்திருந்த அந்த அவன், "அப்படி ஏதும் இல்லை தளபதியே..! இன்றும் தாம் தான் சிவபூஜை செய்ய வேண்டுமா? அதற்காக பணியாளர் எவரையேனும் நியமித்துவிட்டு நீ பட்டாபிஷேகம் சம்பந்தமான பணிகளில் கவனம் செலுத்தலாம் அல்லவா?.." எனக் கேட்கவே,


"ஹாஹா..! எம் சம்பந்தமான பணிகளில் மற்றவர்களின் தலையீட்டை யான் விரும்புவதில்லை இளவரசே..! எம் ஈசனிற்கு செய்ய வேண்டிய பூஜையை முடித்துவிட்டு அரை நாழிகையில் எங்கள் நாட்டு மன்னரின் முடிசூட்டு விழாவிற்கு தயாராகி வருவேன்...


அதைப்பற்றி தாங்கள் எவ்வித கவலையும் கொள்ள தேவையில்லை... நான் வருகிறேன் இளவரசே..!" என்றவன், தன் வழக்கமான வேகநடையால் அரண்மனை வளாகத்தில் அமைந்துள்ள கோவிலை அடைந்திருந்தான்...


தீரன் கோவிலை நோக்கிச் சென்றதை வெளிமாடத்தில் நின்று கவனித்துவிட்டு, "இந்நாட்டின் மன்னனிற்கு மட்டுமல்ல, படைத்தளபதிக்கும் அகந்தை சற்று அதிகம் தான்..!" எனக் கூறிவிட்டு, சிவந்திருந்த கீழ்வானை வெறித்தான் அவன்...


அவன் ராணியார் நயனத்தேனருவியின் தமையனின் மகன், மகேந்திரராஜன்...!!!


இராஜசிங்காபுரிக்கு தெற்கில் அமைந்துள்ள சுந்தரவனம் என்னும் சிறிய நாட்டின் முடி இளவரசன்... தன் அத்தையின் அழைப்பின் பெயரில் இங்கு விஜயம் செய்திருக்கிறான்...


இந்நாட்டின் இளவரசி மதிவதனிக்கும் மகேந்திரனிற்கும் திருமணம் நடத்த வேண்டுமென்பது ராணியாரின் நீண்ட நாள் விருப்பம்..!


அவ்வாறே அடுத்த ஆண்டு தங்கள் இளவரசியின் திருமணம் வெகு விமரிசையாக நடைபெறும் என்ற பேச்சும் சமீபகாலமாக நாட்டு மக்களிடையே பரவியுள்ளது...


யாருக்கு யாரை இணைசேர்ப்பது என்பது அந்த மகாதேவனின் முடிவன்றோ..!!! அவன் ஒருவனைத் தவிர அதனை வேறு யாரறிவார்???


கலைநயத்துடன் எழுப்பியிருந்த மேல்மாடத்தில் நின்றபடி தீரனை கவனித்துக் கொண்டிருந்த மகேந்திரன், பின்னர் ஏதோ சிந்தனையில் நடந்து கோவிலை அடைந்திருந்தான்...


அதற்குள் இளந்தீரன் தன் வழக்கமான பூஜையை முடித்துவிட்டு அந்த பரமேஸ்வரனின் முன்பு தியானத்தில் ஆழ்ந்திருக்க, அவனுக்கு எதிரில் அமர்ந்தவன் தானும் இமைகளை மூடிக்கொண்டான்...


இங்கு வந்ததில் இருந்து தீரனைப் பின்தொடர்வதே மகேந்திரனின் முழுநேரப் பணியாக மாறியிருந்தது...


சில நிமிடங்களில் கண்விழித்த தீரன், தனக்கு எதிரில் அமர்ந்து தன்னைக் கவனித்துக் கொண்டிருந்த சுந்தரவனத்து இளவரசனை ஒரு முறை அழுத்தமாக நோக்கிவிட்டு

எழுந்துகொள்ள,


"நில் தீரனே..!" என்று நிறுத்தியிருந்தான் அவன்...


தன்னைத் தொடர்ந்து வந்து இடையூறு செய்தவனை நினைத்து ஆத்திரம் பெருகிய போதிலும், சிலதை எண்ணி அதைத் திறமையாக மறைத்தவாறே, "கூறுங்கள் இளவரசே..!" என்றான்..


"கடந்த ஆறு திங்களில் நடைபெற்ற இரு போர்களிலும் வெற்றிவாகை சூடியிருக்கிறாய் என்பதற்கு உம் யாக்கையின் வலிமையே கட்டியம் கூறிவிடும் தீரா..!" என்றுக் களிரின் உறுதியை ஒத்திருந்த அவன் புஜங்களை வருடினான்...


அவன் தன்னை இப்படி வானளாவ புகழ்ந்ததை நம்ப இயலாமல் அவனை நோக்கி தன் கூர்ப்பார்வையை வீசிவிட்டு, "இதைக் கூறுவதற்காகவா எம்மை நிறுத்தினீர்கள்?.."


"அல்ல தீரனே..."


"பிறகு?..."


"தாம் எதற்காக எதிரிநாட்டிலிருந்து இங்கு வந்தாயோ அது ஒருபோதும் நிறைவேறப் போவதில்லை என்பதை எடுத்துரைக்கவே உம்மை நிறுத்தினேன் தீரனே..."


அதைக்கேட்டு திகைத்தவன் நொடியில் தன்னை மீட்டவனாக, "யான் எதிரிநாட்டைச் சேர்ந்தவனாக இருப்பினும் எதிரி அல்ல இளவரசே..! இந்திரபுரியில் பிறந்து வளர்ந்ததால் மட்டுமே ஒருவன் எதிரியாக மாறிவிட மாட்டான்..." என்றான் தன் கம்பீரமான குரலில்...


"தாம் உரைப்பது உண்மையாக இருப்பின் எமக்கும் மகிழ்ச்சியே..!"


"யான் சில ஆண்டுங்களாக இராஜசிங்காபுரியின் பிரஜையாகவே வாழ்ந்து வருகிறேன் இளவரசே... அதை தாங்கள் மறந்துவிட வேண்டாம்... அவசியம் நேருமாயின் இந்நாட்டின் படைத்தளபதியாக உயிர்த்தியாகம் செய்யவும் சித்தம் கொண்டுள்ளேன்..."


"தாம் உதிர்த்த சொற்கள் சத்தியமென்றால் எமக்கு உம் மீது எவ்வித ஆட்சேபனையும் இல்லை தீரனே... இப்போது சென்று வா..." என்ற மகேந்திரனின் மனம் அத்தனைத் தெளிவடையவில்லை...


அவனிடம் இருந்து விலகி வந்த தீரன், 'ஹாஹா உம் மனதில் எழுந்த சந்தேகம் சரி தான் மகேந்திரா..! யான் இந்த ராஜ்ஜியத்தில் இருந்து தாம் நினைத்துப் பார்த்திடாத ஒன்றையும் பெறுவதற்காகவே நேர்மையான படைத்தளபதியாக அரிதாரமிட்டு சுற்றி வருகிறேன்... விரைவில் அதை அடைந்தும் விடுவேன்...' என்று மனதில் எண்ணிக்கொண்டே நடந்தவன் எதிரில் நடந்து வந்த இளவரசி மதிவதனியின் எழிலில் பிரமித்து நின்றுவிட்டான்...


தன் தோழியுடன் அளவளாவியபடி அவள் நடந்து வரும்போதே அவளுக்காக அரண்மனையில் கட்டியிருந்த குளத்தில் நீராடிவிட்டு வருவதை அவள் கூந்தலில் இருந்து சொட்டிக்கொண்டிருந்த நீர்த்துளிகளை வைத்து கண்டுகொண்டான் அவன்...


இந்திரலோகத்தில் இருந்து இறங்கி வந்த தேவதையாக மின்னிய அவளின் முழுமதி வதனத்தை ஒரு நொடி ஆழ்ந்து நோக்கியவன், 'ஆஹா என்ன ஒரு தெய்வீக அழகு...!!! ஆனால் உணவுப் பிரியையான இவளின் இடை மட்டும் எங்ஙனம் இத்தனை வடிவாக உள்ளது...' என்று எப்போதும் எழும் கேள்வியோடு அவளின் அங்க வளைவுகளை அளந்துவிட்டு, தான் இருக்கும் இடத்தை கணக்கில் கொண்டு தன் விழிகளைத் திருப்பிக் கொண்டான்...


மதியின் அழகில் மயங்கியது தீரன் மட்டுமன்று..! அவனுக்குப் பின்னால் நின்ற மகேந்திரனும் தான்..!


குளியலை முடித்து வந்த அவ்வேளையிலும் தன் கரத்தில் ஏதோ இனிப்பை வைத்திருந்த இளவரசி, அதை சிறிது சிறிதாக உண்டபடி தான் நடந்து வந்தாள்...


'சரியான சாப்பாட்டு ராணி' என்று தம் முத்து மூரல்களை கடித்துக்கொண்ட தீரனின் விழிகள் இரண்டும் தங்களைக் கட்டுப்படுத்த இயலாமல் மீண்டும் அவளது மதிமுகத்தையே வட்டமிட்டன...


எதிரில் நின்று பார்வையால் தன்னை துளைப்பது யார் என எண்ணியபடி நிமிர்ந்துப் பார்த்த மதிவதனியின் விழிகளில் விழுந்தது என்னவோ மகேந்திரன் மட்டுமே..!


ஏனெனில் தீரன் அவள் தேங்கி நின்றபோதே இடப்புறம் பக்கவாட்டாக நீண்ட பாதையின் வழியாக நடந்துவிட்டான்...


புன்னகையில் முகம் விகசிக்க, "வாருங்கள் மூத்தாள்வியே... மாமா, மாமி அனைவரும் நலமா?.." என்றாள்...


(ஆள்வி - மச்சான், மூத்தாள்வி - நம்மைவிட வயது கூடிய மச்சான்)


"யாவரும் நலம் வதனியே..! நீ நலமா? உம்மை ஓர் ஆண்டிற்கு முன்னர் மலர்வனத்தில் பார்த்தது... அதற்குள்ளாக எழில் கூடி, ஆளை மயக்குகிறாய் பெண்ணே..!.." என்ற மகேந்திரனின் விழிகள் இரண்டும் பாசத்தை சொரிந்தன...


"சிறு வயதிலிருந்து எம்மை வைத்து பகடிப் பேசுவதை மட்டும் தாங்கள் நிறுத்த மாட்டீர்களே..."


"இல்லை வதனியே..! யான் கூறுவது சத்திய வார்த்தைகள்..! உமது எழிலில் நிச்சயமாக மயங்கிவிட்டேன் பெண்ணே..!" என்றவனின் விழிகள் இப்பொழுது வேறிடத்தில் லயித்திருந்தன...


ஆடவனின் குரலில் மிகுதியான ரசனை..!


இருவரும் பேசி சிரிப்பதை திரைச்சீலைகளின் மறைவில் நின்று கேட்டுக்கொண்டிருந்த தீரனின் நெஞ்சம் தீப்பற்றி எரிந்தது...


'அவள் வதனத்தில் தான் எத்தனை நீளமான புன்னகை..! ஓர் நாட்டின் இளவரசி அளவாகப் புன்னகைத்தால் போதாதா?' என்று கறுவியவன்,


'யான் நினைத்தது நிறைவேறுவதற்குள் இந்த மகேந்திரனின் சிரம் எம் கரத்தால் வெட்டுப்படப்போவது மட்டும் உறுதி...' என்று எண்ணியவாறு தன் வாளை இறுகப் பற்றிக்கொண்டான்...


மகேந்திரனின் புகழாரத்தில், "போங்கள் ஆள்வியே..!" என்று முறுவலித்துவிட்டு விலகி நடந்தவள், தமது தோழி வான்மதியின் பதற்றமான குரலில் பின்புறம் திரும்ப, அவள் ஓடி வருவதைக் கண்டு திகைத்தாள்...


விரைந்து வந்து மதிவதனியின் கரங்களைப் பற்றிக்கொண்ட அவள், ஓடி வந்த களைப்பில் சற்று இளைப்பாறிவிட்டு தோழியை கவலையாக நோக்க, தன் கரத்திலிருந்த இனிப்பை முழுமையாக விழுங்கிய மதிவதனி,


"உம்மிடம் ஏன் இத்தனை பதற்றம் வான்மதி?" என்றுக் கேட்டகவே,


"நம் மன்னரின் அறைக்கதவு இன்னும் திறக்கப்படவில்லையாம் மதி..! அவர் துயில் எழுந்ததற்கான எவ்வித சுவடும் தென்படாததில் அனுமதியின்றி எவ்வாறு உள்ளே நுழைவது என்ற குழப்பத்தில் காவலாளிகள் இருவரும் செய்வதறியாது நிற்கின்றார்களாம்... நீ வந்து முயற்சித்து பாரடி..!" என்றவளின் குரலில் அச்சம் தொக்கி நின்றது...


"அப்படியா..? ஆனால் நங்கையாள் அங்கே தானே இருக்க வேண்டும்... அவர் எங்கே?..." என்று பதட்டமாக வினவிய மதிவதனி தமையனின் அறையை நோக்கி வேகமாக நடந்தாள்...


(நங்கையாள் - அண்ணி)


"அறையின் உள்ளே பேரமைதி நிலவுகிறதாம் வதனி..! அங்கு யாரும் இருப்பதற்கான அறிகுறியாக சிறு ஓசை கூட கேட்கவில்லை என்றுக் கேள்விப்பட்டேனடி..." என்று பதில் கூறிய வான்மதி தோழியின் வேகத்திற்கு ஈடுகொடுத்து நடந்தாள்...


வான்மதி கூறியதைக் கேட்டுக் கொண்டிருந்த ஆண்மகன்கள் இருவரும் அதியனிற்கு என்னவாயிற்றோ என்ற பதைபதைப்புடன் பெண்களை பின்தொடர்ந்துச் சென்றனர்...


எனினும் இவர்கள் நால்வரும் மன்னரின் அறையை அடைவதற்கு முன்பாகவே அங்கு விஜயம் செய்திருந்த ராணியாரின் உத்தரவின் பெயரில் காவலாளிகள் அறையைத் திறந்திருந்தனர்...


அங்கு தான் ஈரைந்து திங்கள் கருவறையில் சுமந்து ஈன்றெடுத்த புதல்வனின் அசைவற்ற நிலையைக் கண்ட நயனத்தேனருவி, "அதியனே..! எம் செல்வமே..‌! உமக்கா இப்படி ஓர் நிலை வர வேண்டும்?" என்று அரற்றியவாறு துக்கம் தாளாமல் வெடித்து அழுது கொண்டிருந்தார்...


அன்னையின் அழுகுரலைக் கேட்ட மதிவதனி, காவலாளிகளை விலகுமாறு பணித்துவிட்டு உள்ளே விரைய, அங்குக் கண்ட காட்சியில் அவளின் விழிகள் இரண்டும் அச்சத்தில் விரிந்தன...


முடிசூட்டு விழாவிற்கு பட்டாடை தரித்து ஆளுமையாகத் தயாராக வேண்டிய அவளின் தமையன் அதியன் நெடுமாறன் அசைவற்ற உடலாகப் படுக்கையில் கிடந்தான்...!!!


"தமையனே...!!!" என்ற அலறலுடன் தன்னை சமாளிக்க முடியாமல் மூர்ச்சையான பெண்ணவள், நொடியில் வேரறுந்த மரமாக நிலத்தில் சரிந்திருந்தாள்...


"மதி" "வதனி" என்று பதறிய ஆடவர்கள் இருவரும் கீழே அமர்ந்து ஒன்றாக அவளை மடிதாங்கியிருந்தனர்...



தொடரும்......
 
Last edited:

Author: நிதனிபிரபு
Article Title: மகேந்திரனின் மதிவதனியிவள் - 2
Source URL: NithaniPrabu Novels-https://nidhaniprabunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.

Gowri Karthikeyan

Well-known member
May 5, 2026
1,290
384
83
Chennai
அட ஜி.. அப்ப வதனிக்கு மகேன் தான் ஜோடியா🤔🤔🤔🤔
பட் அவள் அழகில் மயங்கிவிட்டேன் சொல்லி எங்க பார்த்தான் மகேன் 🧐🧐🧐🧐
யாரும் அவளின் தோழியா?????
தீரன் பெற போகும் பரிசு என்ன ????
வதனியையா சொல்றான்🤔🤔🤔🤔
போச்சி பாவம் அதி
 
அட ஜி.. அப்ப வதனிக்கு மகேன் தான் ஜோடியா🤔🤔🤔🤔
பட் அவள் அழகில் மயங்கிவிட்டேன் சொல்லி எங்க பார்த்தான் மகேன் 🧐🧐🧐🧐
யாரும் அவளின் தோழியா?????
தீரன் பெற போகும் பரிசு என்ன ????
வதனியையா சொல்றான்🤔🤔🤔🤔
போச்சி பாவம் அதி
அது வான்மதிய பார்த்துருப்பான் சிஸ் அதான் அந்த லுக்கு🫣😂
 
  • Love
Reactions: Gowri Karthikeyan