• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

மகேந்திரனின் மதிவதனியிவள் - 2

நிதனிபிரபு

Administrator
Staff member
மகேந்திரனின் மதிவதனியிவள் - 2


சிவபூஜை செய்வதற்காக அதிகாலை நான்கரை மணிக்கு எழுந்து கொண்ட தீரனின் விழிகள் இரண்டும் கொவ்வைப்பழமாக சிவந்து காணப்பட்டது...


இடைவிடாத அரண்மனை பணிகளின் நீட்சியாக அவனது உடல் ஓய்விற்காக மன்றாடியது... ஆனால் ஒரு நாட்டின் படைத்தளபதி அவ்வாறு உறங்குவது நியாயமன்றோ? அதிலும் அன்று மன்னர் முடி சூட்டிக் கொள்ளும் நாள் வேறு...


எனவே தன் உடல் சோர்வினை உதறிவிட்டு எழுந்தவன், தனது வழக்கமான நீராடலை முடித்த பின்னர் இடையில் வெள்ளை வேஷ்டி தரித்து, நெற்றியிலும், வெற்று மார்பு மற்றும் புஜங்களில் திருநீறு பூசிக் கொண்டு, அரண்மனையின் கீழ் மாடத்தில் கம்பீரமாக வீற்றிருந்த லிங்க திருமேனியாகக் காட்சி தரும் ஈசனை தரிசிக்க கிளம்பினான்...


அந்த விஸ்தாரமான மேல் மாடத்தில் நடந்து சென்றபோது, அவனுக்கு எதிர் திசையில் வந்து கொண்டிருந்தவனைக் கண்டு ஒரு நொடி தயங்கி நின்றுவிட்டு, தன் நடையைத் தொடர்ந்தான்...


அதற்குள் மிக அருகில் வந்துவிட்ட அந்த மாவீரன், "நில் தீரனே..." எனக் கூறி நிறுத்தியிருந்தான்..


அதில் அவனை தன் கூர்மையான விழிகளால் அளந்து விட்டு, போலி பணிவாக தன் சிரத்தை சற்று குனிந்து நிமிர்ந்தவன், "கூறுங்கள் சுந்தரவனத்து இளவரசே..! என்னால் தங்களுக்கு ஆகக்கூடிய காரியம் ஏதுமுண்டோ?..." என்றான்..


தீரனைப் பற்றி நன்கு அறிந்திருந்த அந்த அவன், "அப்படி ஏதும் இல்லை தளபதியே... ஆனால் இன்றும் நீ தான் சிவபூஜை செய்ய வேண்டுமா? அதற்காக பணியாளர் யாரையும் நியமித்துவிட்டு பட்டாபிஷேகம் சம்பந்தமான வேலைகளில் கவனம் செலுத்தலாம் அல்லவா?.."

எனக் கேட்டான்...


"ஹாஹா என் சம்பந்தமான பணிகளில் அடுத்தவர்களின் தலையீட்டை நான் விரும்ப மாட்டேன் இளவரசே... என் ஈசனிற்கு செய்ய வேண்டிய பூஜையை முடித்துவிட்டு அரை நாழிகையில் எங்கள் நாட்டு மன்னரின் முடிசூட்டு விழாவிற்கு தயாராகி விடுவேன்... அதைப் பற்றி தாங்கள் எவ்வித கவலையும் கொள்ள தேவையில்லை.. நான் வருகிறேன் இளவரசே..." என்றவன், தன் வழக்கமான வேகநடையால் அரண்மனை வளாகத்தில் அமைந்துள்ள கோவிலை அடைந்திருந்தான்...


தீரன் கோவிலை நோக்கிச் சென்றதை வெளி மாடத்தில் நின்று கவனித்து விட்டு, "இந்நாட்டின் மன்னனிற்கு மட்டுமல்ல, படைத்தளபதிக்கும் அகந்தை சற்று அதிகம் தான்.." என கூறிவிட்டு, சிவந்திருந்த கீழ் வானத்தை பார்த்துக் கொண்டிருந்தான்...


அவன் ராணியார் நயனத்தேனருவியின் சகோதரனின் மகன், மகேந்திர ராஜன்...!!!


இராஜசிங்காபுரிக்கு தெற்கில் அமைந்துள்ள சுந்தரவனம் என்னும் சிறிய நாட்டின் முடி இளவரசன்... தன் அத்தையின் அழைப்பின் பெயரில் இங்கு விஜயம் செய்திருக்கிறான்...


இந்நாட்டின் இளவரசி மதிவதனிக்கும் தன் அண்ணன் மகன் மகேந்திரனிற்கும் திருமணம் நடத்த வேண்டுமென்பது ராணியாரின் நீண்ட நாள் ஆசை...


அடுத்த ஆண்டு தங்கள் இளவரசியின் திருமணம் வெகு விமரிசையாக நடைபெறும் என்ற பேச்சும் சமீப காலமாக நாட்டு மக்களிடையே பரவியுள்ளது...


யாருக்கு யாரை இணை சேர்ப்பது என்பது அந்த மகாதேவனின் முடிவன்றோ..!!! அவன் ஒருவனைத் தவிர அதனை வேறு யாரறிவார்???..


கலைநயத்துடன் எழுப்பியிருந்த மேல் மாடத்தில் நின்றபடி தீரனை கவனித்துக் கொண்டிருந்த மகேந்திரன், பின்னர் ஏதோ யோசனையாக நடந்து கோவிலை அடைந்திருந்தான்...


அதற்குள் இளந்தீரன் தன் வழக்கமான பூஜையை முடித்துவிட்டு அந்த பரமேஸ்வரனின் முன்பு தியானத்தில் ஆழ்ந்திருந்தான்...


அவனுக்கு எதிரில் சென்று அமர்ந்தவன் தானும் இமைகளை மூடிக் கொண்டான்...


இங்கு வந்ததில் இருந்தே மகேந்திரனின் நுட்பமான அறிவு இளந்தீரனின் மீது சந்தேக விதையை தூவியிருந்தது...


சில நிமிடங்களில் கண் விழித்த தீரன், தனக்கு எதிரில் அமர்ந்து தன்னை கவனித்து கொண்டிருந்த சுந்தரவனத்து இளவரசனை ஒரு முறை அழுத்தமாக நோக்கி விட்டு

எழுந்து கொண்டான்...


"நில் தீரனே..."


தன்னை தொடர்ந்து வந்து இடையூறு செய்தவனை நினைத்து ஆத்திரம் பெருகிய போதிலும், அவனுடைய செல்வாக்கை எண்ணி அதை திறமையாக மறைத்தவாறு, "கூறுங்கள் இளவரசே..." என்றான்..


"கடந்த ஆறு திங்களில் நடைபெற்ற இரு போர்களிலும் வெற்றி வாகை சூடியிருக்கிறாய் என்பதற்கு உன் உடலின் வலிமையே கட்டியம் கூறிவிடும் தீரா..." என்றபடி களிரின் உறுதியை ஒத்திருந்த அவன் புஜங்களை வருடினான்...


அவன் தன்னை இப்படி வானளாவ புகழ்வதை நம்ப முடியாதவனாக அவனை நோக்கி தன் கூர்ப்பார்வையை வீசி விட்டு, "இதை கூறுவதற்காகவா என்னை நிறுத்தினீர்கள்?.."


"இல்லை தான்..."


"பின்பு?..."


"நீ எதற்காக எதிரி நாட்டிலிருந்து இங்கு வந்தாயோ அது ஒருபோதும் நிறைவேறப் போவதில்லை என்று எடுத்துரைக்க தான் உன்னை நிறுத்தினேன் தீரனே..."


அதைக் கேட்டு திகைத்தவன் நொடியில் தன்னை மீட்டவனாக, "நான் எதிரி நாட்டைச் சேர்ந்தவன் தான்... ஆனால் எதிரி அல்ல இளவரசே... இந்திரபுரியில் பிறந்து வளர்ந்ததால் மட்டுமே நான் எதிரியாக மாறிவிட மாட்டேன்..." என்றான் தன் கம்பீரமான குரலில்...


"நீ கூறுவது உண்மையாக இருந்தால் எனக்கும் மகிழ்ச்சியே.."


"நான் சில வருடங்களாக இந்நாட்டின் பிரஜையாக தான் வாழ்ந்து வருகிறேன் இளவரசே... அதை தாங்கள் மறந்து விட வேண்டாம்... இராஜசிங்காபுரியின் படைத்தளபதியாக உயிர்த் தியாகம் செய்யவும் கூட நான் தயாராக தான் இருக்கிறேன்...


"நீ கூறுவது உண்மையென்றால் எனக்கு உன் மேல் எந்த ஆட்சேபனையும் இல்லை தீரனே... இப்போது சென்று வா..." என்ற மகேந்திரனின் மனம் அத்தனை தெளிவடையவில்லை...


அவனிடம் இருந்து விலகி வந்த தீரன், 'ஹாஹா உன் மனதில் எழுந்த சந்தேகம் சரி தான் மகேந்திரா... நான் இந்த ராஜ்ஜியத்தில் இருந்து ஒன்றை பெறுவதற்காகவே நேர்மையான படைத்தளபதியாக அரிதாரமிட்டு சுற்றி வருகிறேன்... விரைவில் அதை அடைந்தும் விடுவேன்...' என்று மனதில் எண்ணிக் கொண்டே நடந்தவன் எதிரில் நடந்து வந்த இளவரசி மதிவதனியின் அழகில் பிரமித்து நின்றுவிட்டான்...


அவள் தோழியுடன் அளவளாவியபடி நடந்து வரும்போதே அவளுக்காக அரண்மனையில் கட்டியிருந்த குளத்தில் நீராடி விட்டு வருவதை அவள் கூந்தலில் இருந்து சொட்டிக் கொண்டிருந்த நீர்த்துளிகளை வைத்து கண்டு கொண்டான்...


இந்திரலோகத்தில் இருந்து இறங்கி வந்த தேவதையாக மின்னிய அவளின் முழுமதி வதனத்தை ஒரு நொடி ஆழ்ந்து நோக்கியவன், 'ஆஹா என்ன ஒரு தெய்வீக அழகு...!!! ஆனால் உணவுப் பிரியையான இவளின் இடை மட்டும் எப்படி இத்தனை வடிவாக உள்ளது...' என்று எப்போதும் எழும் கேள்வியோடு அவளின் அங்க வளைவுகளை அளந்து விட்டு, தான் இருக்கும் இடத்தை கணக்கில் கொண்டு தன் விழிகளைத் திருப்பிக் கொண்டான்...


மதியின் அழகில் மயங்கியது தீரன் மட்டுமன்று..! அவனுக்குப் பின்னால் நின்று கொண்டிருந்த மகேந்திரனும் தான்..!


குளியலை முடித்து வந்த அந்த வேளையில் கூட தன் கையில் ஏதோ இனிப்பை வைத்திருந்த இளவரசி, அதை சிறிது சிறிதாக உண்டபடி தான் வந்து கொண்டிருந்தாள்‌...


'சரியான சாப்பாட்டு ராணி' என்று தன் மூரல்களை கடித்து கொண்ட தீரனின் விழிகள் இரண்டும் தங்களை கட்டுப்படுத்த முடியாமல் அவளது மதிமுகத்தையே வட்டமிட்டது...


எதிரில் நின்று பார்வையால் தன்னை துளைப்பது யார் என எண்ணியபடி நிமிர்ந்துப் பார்த்த மதிவதனியின் விழிகளில் விழுந்தது என்னவோ மகேந்திரன் தான்...


ஏனென்றால் தீரன் தான் அவள் தேங்கி நின்றபோதே இடப்புறம் பக்கவாட்டாக நீண்ட பாதையின் வழியாக நடந்துவிட்டானே..!!!


புன்னகையில் முகம் விகசிக்க, "வாருங்கள் மூத்தாள்வியே... மாமா, மாமி எல்லாரும் நலமா?.." என்றாள்...


(ஆள்வி - மச்சான், மூத்தாள்வி - நம்மைவிட வயது கூடிய மச்சான்)


"யாவரும் நலம் வதனியே... நீ எப்படி இருக்கிறாய்? உன்னை பல வருடங்களுக்கு முன்னர் பார்த்தது... நன்றாக வளர்ந்து, அழகு கூடி, ஆளை மயக்குகிறாய் பெண்ணே..!.." என்ற மகேந்திரனின் விழிகள் இரண்டும் பாசத்தை சொரிந்தது...


"சிறு வயதிலிருந்து என்னை வைத்து பகடி பேசுவதை மட்டும் தாங்கள் நிறுத்த மாட்டீர்களே..."


"இல்லை வதனியே... நான் கூறுவது சத்தியமான வார்த்தைகள்... உனது எழிலில் நான் மயங்கிவிட்டேன் பெண்ணே..."


இருவரும் பேசி சிரிப்பதை திரைச்சீலைகளின் மறைவில் நின்று கேட்டுக் கொண்டிருந்த தீரனின் நெஞ்சம் தீப்பற்றி எரிந்தது...


'நான் நினைத்தது நிறைவேறுவதற்குள் இந்த மகேந்திரனின் சிரம் என் கையால் வெட்டுப்பட போவது மட்டும் உறுதி...' என்று எண்ணியவாறு தன் வாளை இறுகப் பற்றிக்கொண்டான்...


"போங்கள் ஆள்வியே..." என்று முறுவலித்து விட்டு விலகி நடந்தவள், தனது தோழி வான்மதி பதற்றமாக தன்னை நோக்கி ஓடி வருவதைக் கண்டு திகைத்து நின்றாள்...


விரைந்து வந்து மதிவதனியின் கரங்களைப் பற்றிக் கொண்ட அவள், ஓடி வந்த களைப்பில் சற்று இளைப்பாறி விட்டு தோழியை கவலையாகப் பார்த்துக் கொண்டிருந்தாள்...


தன் கரத்திலிருந்த இனிப்பை முழுமையாக வாய்க்குள் வைத்து அமுக்கிய மதி, "உன்னிடம் ஏன் இத்தனை பதற்றம் வான்மதி?" என்றுக் கேட்டாள்...


"நம் மன்னரின் அறைக்கதவு இன்னும் திறக்கப்படாமல் இருக்கின்றதாம் வதனி... அவர் துயில் எழுந்ததற்கான எந்த சுவடும் தென்படவில்லையாம்... அனுமதியின்றி எவ்வாறு உள்ளே நுழைவது என்ற குழப்பத்தில் காவலாளிகள் இருவரும் செய்வதறியாது நிற்கின்றார்களாம்... நீ வந்து முயற்சித்து பாரடி..." என்ற வான்மதியின் குரலில் அச்சம் தொக்கி நின்றது.


"அப்படியா..? ஆனால் நங்கையாள் அங்கே தானே இருக்க வேண்டும்... அவர் எங்கே?..." என்று பதட்டமாக வினவிய மதிவதனி தமையனின் அறையை நோக்கி வேகமாக நடந்தாள்...


(நங்கையாள் - அண்ணி)


"அறையின் உள்ளே பேரமைதி நிலவுகிறதாம் வதனி... அங்கு யாரும் இருப்பதற்கான அறிகுறியாக சிறு ஓசை கூட கேட்கவில்லை என்று கேள்விப்பட்டேனடி..." என்று பதில் கூறிய வான்மதி தோழியின் வேகத்திற்கு ஈடுகொடுத்து நடந்தாள்...


வான்மதி கூறியதைக் கேட்டு கொண்டிருந்த ஆண்மகன்கள் இருவரும் அதிகனிற்கு என்னவாயிற்றோ என்ற பதைபதைப்புடன் பெண்களை பின்தொடர்ந்துச் சென்றனர்...


ஆனால் இவர்கள் நால்வரும் மன்னரின் அறையை அடைவதற்கு முன்பாக அங்கு விஜயம் செய்திருந்த ராணி நயனத்தேனருவியின் உத்தரவின் பெயரில் காவலாளிகள் அறையைத் திறந்து இருந்தனர்...


அங்கு தான் ஈரைந்து திங்கள் கருவறையில் சுமந்து ஈன்றெடுத்த புதல்வனின் அசைவற்ற நிலையைக் கண்ட தேனருவி, "அதிகனே... என் மகனே... என் செல்வமே..‌. உமக்கா இந்த நிலை வர வேண்டும்.." என்று அரற்றியவாறு துக்கம் தாளாமல் வெடித்து அழுது கொண்டிருந்தார்...


அன்னையின் அழுகுரலைக் கேட்ட மதிவதனி, காவலாளிகளை விலகுமாறு பணித்து விட்டு உள்ளே விரைந்து ஓடியவளின் விழிகள் இரண்டும் அச்சத்தில் விரிந்தன...


முடிசூட்டு விழாவிற்கு பட்டாடை தரித்து ஆளுமையாக தயாராக வேண்டிய அவளின் தமையன் அதிகன் நெடுமாறன் அசைவற்ற உடலாக படுக்கையில் கிடந்தான்...!!!


"தமையனே...!!!" என்ற அலறலுடன் தன்னை சமாளிக்க முடியாமல் மூர்ச்சையான பெண்ணவள், நொடியில் வேரறுந்த மரமாக நிலத்தில் சரிந்திருந்தாள்...


"மதி" "வதனி" என்று பதறிய ஆடவர்கள் இருவரும் கீழே அமர்ந்து ஒன்றாக அவளை மடிதாங்கியிருந்தனர்...



தொடரும்...
 
Top Bottom