• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

மன்னிப்பாயா காதலே - 15

Vishakini

Moderator
Staff member
அத்தியாயம் 15


இன்னொரு முறையும் நாவினியிடம் பேசிப் பார்த்த மேனகாவினால் அவள் மனத்தை மாற்ற முடியவில்லை. அதைப் பிரேமாவிடம் சொல்லி, ஜெர்மனிலேயே அவளுக்குத் திருமணத்திற்குப் பார்ப்பதாகச் சொன்னார்.

பிரேமாவுக்கு அதை ஏற்க முடியவில்லை. இங்கே கேசிகனிடம் அவளை மணப்பதற்குச் சம்மதிக்கச் சொல்லிப் பிடிவாதமாக நின்றார்.

கேசிகனுக்கு வாழ்க்கையே வெறுக்கும் நிலை. நாவினியின் குறுந்தகவல்கள் ஒருவகையாக அவனைக் கொன்றன என்றால் அன்று அவள் சொன்ன வார்த்தைகள் அவனை உறங்கவோ உண்ணவோ விடாமல் துரத்தியடித்துக்கொண்டிருந்தன.

அவன் செய்ததுதான் சரியாம். அவளைப் போன்று ஒரு இடத்தில் நின்றிருக்கக் கூடாதாம். அவளைத் தாண்டி நகர்ந்தான்தான். ஆனால், ஆசைப்பட்டு நகரவில்லையே. மொழி மீது ஆசைப்பட்டு மணக்கவில்லையே. மணந்தபிறகு ஆசைப்பட்டு வாழ்ந்தான். அது வேறாயிற்றே. இதை எப்படி அவனால் அவளிடம் உடைத்துப் பேச முடியும்?

இதில் நாவினி இரண்டாம் முறையாகவும் அவனை வேண்டாம் என்று சொன்னது தெரியும். அவனும் இன்னொரு திருமணத்திற்குத் தயாராக இல்லைதான். அதுவும் அவளை மணப்பதற்கான தகுதி தனக்கு இல்லவே இல்லை என்று நினைத்தான்.

அதே நேரத்தில் நாவினியின் உயிர் நேசத்திற்குத் தான் கொஞ்சமும் நியாயமாக நடக்கவில்லை என்கிற அந்த நினைப்பு, பொதுவாக அன்னை திருமணத்திற்குக் கேட்டபோது உறுதியாக நின்று மறுத்தது போன்று, நாவினியைக் கேட்டபோது மறுக்க விடாமல் செய்தது.

அதில், “அவளே வேண்டாம் எண்டு சொல்லுறாள். பிறகும் ஏனம்மா அவளையே கட்டு எண்டு எனக்கு அரியண்டம் தாறீங்க? எனக்குத் தம்பி மட்டும் போதும் எண்டு இன்னும் எத்தினை தரம் சொல்லுறது?” என்று சினந்தான்.

“உனக்குப் போதும். உன்ர மகனுக்கு நீ மட்டும் போதாது தம்பி!” என்றார் அவரும் விடாமல்.

“நீ சொல்லு. எல்லாமா இருந்து உன்னை நான் வளத்தேன்தான். அம்மம்மா, தாத்தா, நல்லவையோ கெட்டவையோ மாமா, மாமி, மச்சான் எண்டு உன்னச் சுத்தி எல்லாரும் இருந்தவேதான். ஆனாலும் ஒரு நாள் கூட அப்பாக்காக நீ ஏங்கினதே இல்லையா?” என்று அவர் கேட்டபோது வீம்புக்கு மறுக்க நினைத்தாலும் முடியாமல் இறுக்கமாக அமர்ந்திருந்தான் அவன்.

“அதேதான் தம்பி உன்ர மகன்ர நிலமையும். இன்னும் விவரம் தெரிய ஆரம்பிக்கேல்ல அவனுக்கு. தெரிய வரேக்க நீ எப்பிடி என்னட்ட ஒண்டும் சொல்லாம உனக்குள்ளேயே வச்சிருந்தியோ அதே மாதிரி உன்னட்ட ஒண்டும் சொல்லாம தனக்குள்ளேயே வச்சு மருகுவார். நீ பெத்த பிள்ளை அப்பிடி அழுறதுதான் உனக்கு விருப்பமா?”

“அம்மா!” அவர் கேட்டு முடிக்க முதலே அதட்டினான். அப்படி அவன் மகன் மருகுவதற்கா அப்பா என்று அவன் இருக்கிறான்?

“சும்மா வாயால சொன்னதுக்கே உனக்குக் கோபம் வருது. ஆனா அதுதான் நடக்கப்போகுது. அதுக்குத்தான் நீ இவ்வளவு பிடிவாதமா நிக்கிறாய்.” என்று அவர் விடுவதாகவே இல்லை.

வர வரக் கேசிகனுக்கு வீடு நரகம் போலாயிற்று. அந்தளவில் அவனைக் கண்டாலே பிரேமா திருமணத்தைப் பற்றியேதான், அதுவும் நாவினியைக் கட்டு என்றுதான் பேசினார். இதேதான் நிறைமொழியைத் திருமணத்திற்குக் கேட்டு, இவன் மறுத்தபோதும் நடந்தது. இப்போது மறுபடியும் ஆரம்பித்திருக்கிறார்.

நாவினி அங்கே வேறு ஒருவனுக்குச் சம்மதித்துவிடுவாளோ என்று அவருக்குள் ஒரு பதற்றம். அதற்குள் இங்கே மகனிடம் சம்மதம் பெற்றுவிட நினைத்தார்.

நாவினியையும் விடவில்லை. அன்று அவன் வீட்டில் இருக்கையில் வேண்டுமென்றே வீடியோ கோலில் அவளுக்கு அழைத்தார். இப்படியான பொழுதுகளில் எல்லாம் புத்திசாலித்தனமாக மயூரனின் தம்பி முகிலனைக் கூப்பிட்டு, பேரனை அவர்கள் வீட்டுக்கு அனுப்பிவிடுவார்.

சாரதா இவர்களின் முகம் பார்க்க முடியாமல் வருவதை நிறுத்திவிட்டதில் இது அவருக்கு வசதியாகிற்று. கூடவே பேரன் இல்லாத பொழுதுகளில் திருமணம் குறித்து மகனிடம் விடாமல் பேசினார். அவரின் இந்தத் திட்டமிட்ட செய்கைகள் அவர் ஒரு முடிவோடு இருப்பதைக் கேசிகனுக்குத் தெளிவாக உணர்த்தின.

நாவினி காணொளி அழைப்பில் வந்ததும், “பேரன் இருக்கிறதால யோசிக்கிறீங்களாம்மா?” என்றார் நேராகவே. இப்போதெல்லாம் நாசுக்கு, நாகரீகம் பார்க்கும் நிலைகளை அவர் தாண்டியிருந்தார்.

“ஐயோ அன்ட்ரி. சஜுக்குட்டிய அப்பிடி எல்லாம் சொல்லாதீங்க.” என்றாள் அவள் அவசரமாக.

“ஏற்கனவே கட்டி வாழ்ந்தவன், ஒரு மகன் வேற இருக்கிறான் எண்டு வேண்டாம் எண்டு சொல்லுறீங்களா?” இதையெல்லாம் கேட்டு மகன் தனக்குள் இறுகுவதைக் கவனித்தாலும் காட்டிக்கொள்ளாமல் வினவினார். அவனுக்கும் ஒரு தெளிவு பிறக்குமே.

“அன்ட்ரி ப்ளீஸ், அப்பிடி எல்லாம் ஒண்டும் இல்லை. இப்பிடி எல்லாம் கதைக்காதீங்கோ.” அவளுக்கு இந்த விதமான பேச்சே மிகுந்த சங்கடத்தை உண்டாக்கிற்று.

“பிறகு ஏனம்மா இவ்வளவு பிடிவாதமா வேணாம் எண்டு நிக்கிறீங்க? நானும் உங்களுக்குத் தாய் மாதிரித்தான். என்னில சத்தியமா இதையெல்லாம் கடந்து வந்திட்டீங்க, இன்னொரு வாழ்க்கைக்குத் தயார் எண்டு சொல்லுங்கோ. நான் கதைக்கேல்ல.” என்றவருக்கு ஒன்றும் சொல்லாமல் அமைதி காத்தாள் அவள்.

கேசிகனுக்கு அன்னை அவளை மறுக்க முடியாத இடத்தில் நிறுத்திச் சம்மதத்தை வாங்கிவிட முயல்வது தெளிவாகப் புரிந்தது. அதே நேரத்தில் அவள் மனத்தில் உண்மையில் என்ன இருக்கிறது என்று அவனுக்கும் அறியவேண்டியிருந்தது.

“உங்களை நான் வற்புறுத்தேல்ல ஆச்சி. என்ர மகனால ஒரு பொம்பிளைப் பிள்ளை கலியாண வாழ்க்கைக்க போகேலாம நிக்கிறதை என்னால பாக்கேலாம இருக்கன. உங்கட அம்மா இருந்தா உங்கள இப்பிடியே விடுவாவா சொல்லுங்க? உங்களுக்கு என்ன குறை, உங்கட மனதில என்ன இருக்கு எண்டு கேட்டுச் செய்வாதானே? அதத்தான் நானும் செய்ய நினைக்கிறன்.” என்றவர் பேச்சில் மௌனமாகக் கண்ணீர் உகுத்தாளே தவிர்த்து ஏதும் சொன்னாள் இல்லை அவள்.

பிரேமாவுக்கே பாவமாய் இருந்தது. ஆனால், இதற்கு ஒரு முடிவு வேண்டுமே. அவள் சம்மதித்துவிட்டால் மகன் மறுக்கமாட்டான் என்று தெரியும். அவளோ அவர் சொல்லும் அனைத்தையும் கேட்டுக்கொண்டாளே தவிர்த்து அசைவதாக இல்லை.

கடைசியில், “இவ்வளவு கேட்டும் சொல்லுறீங்க இல்லை என்னம்மா? ஒரு வயசான பொம்பிளையக் கவலைப்பட வச்சுப் பாக்க ஆசைப்படுறீங்களா நாவினி? எனக்குத்தான் ஒரு நல்ல வாழ்க்கை வாழக் குடுத்து வைக்கேல்ல எண்டு பாத்தா இப்ப என்ர மகனுக்கும் அதே நிலை. என்னவோ எங்கட தலைல சாகிற வரைக்கும் ஒற்றையாவே கிடந்து சாகுங்கோ எண்டு எழுதியிருக்குப் போல.” என்று சொல்லவும் கேசிகன் துடித்துப்போனான். இந்தளவுக்கு எல்லாம் அன்னை யோசித்திருப்பார் என்று அவன் நினைக்கவே இல்லை.

“அன்ட்ரி ப்ளீஸ். இப்பிடி எல்லாம் சொல்லாதீங்கோ.” என்று நாவினியும் அழுதாள்.

“நீங்களும் இந்தளவுக்குப் பிடிவாதம் பிடிக்கக் கூடாதுதானேம்மா?” அவருக்கும் உள்ளம் அழுததில் குரல் உடைந்து வந்தது.

சில கணங்களுக்கு அமைதியாக இருந்துவிட்டு, “திரும்பவும் இன்னொருத்தர நம்பப் பயமா இருக்கு. அது உங்கட மகனாவே இருந்தாலும்.” என்று நலிந்து மெலிந்து வந்த அவள் பேச்சில் அடிபட்டவனாகத் துடித்து நிமிர்ந்தான் கேசிகன்.

பிரேமாவுக்கும் கண்ணீர் சுரந்துபோயிற்று. மகன் புறம் பார்வை சென்றுவர, “அப்பிடி எல்லாம் பயப்பிடாதீங்கோ நாவினி.” என்றார் வேதனையோடு.

அவள் கண்ணீருடன் முறுவலித்தாள்.

“அவருக்கு எப்பிடி என்னைப் பற்றின எந்தத் தகவலும் தெரியாதோ அப்பிடித்தான் எனக்கும். என்ன செய்றார், எப்பிடி இருக்கிறார், என்ன மனநிலையில் இருக்கிறார் எண்டு எதுவுமே தெரியாது. ஆனாலும் என்னை எதிர்பாத்துக்கொண்டு இருப்பார் எண்டுற நம்பிக்கையோடதான் அத்தனை வருசமும் இருந்தனான். ஆனா அவர்… அவரால இன்னொரு வாழ்க்கைக்க போக முடிஞ்சிருக்கு. சந்தோசமா வாழ முடிஞ்சிருக்கு. அப்பிடியானவரைத் திரும்ப ஏற்க எனக்கு விருப்பம் இல்ல.” என்றதும் பிரேமாவுக்கே பேச்சற்றுப் போயிற்று.

“அதோட…”

“அதோட?”

“எனக்கெண்டு இந்த உலகத்தில ஆருமே இல்லை அன்ட்ரி. ஆர் என்ன சொன்னாலும், உனக்கு நாங்க இருக்கிறோம் எண்டு நம்பிக்கை தந்தாலும் நான் அநாதை எண்டுறதுதான் உண்மை…” என்றவள் பேச்சில் கேசிகனின் தாடை இறுகிற்று.

“அம்மாச்சி, என்னன கதை இது?”

“இல்லை அன்ட்ரி. இத நான் கழிவிரக்கத்தில சொல்லேல்ல. உண்மையக் கதைக்கிறன். அப்பிடித் தனியா நிக்கிற எனக்குத் துணையா வாறவருக்கு எல்லாமா நான் இருக்கோணும் எண்டு ஆசைப்படுறன். அவரின்ர அன்பு எனக்கு மட்டுமே வேணும். நான் பேராசைப்படுறனா இல்லை சாத்தியப்படாத ஒண்டுக்கு ஆசைப்படுறனா தெரியேல்ல. அம்மா, அப்பா, தம்பியாக்கள் இருந்திருந்தா இப்பிடி எதிர்பாத்திருக்க மாட்டேனா இருக்கும். ஆனா இண்டைக்கு எனக்கானவருக்கு நான் முக்கியமானவளா இருக்கோணும். ஆனா உங்கட மகன்…” என்று நிறுத்தினாள்.

பிரேமாவுக்கே நெஞ்சின் துடிப்பு கூடிப்போயிற்று என்கையில் கேசிகனின் நிலை?

“அவரின்ர மனதில ஏற்கனவே இன்னொருத்தி இருக்கிறா. அவரின்ர உலகத்தில அவரின்ர வைஃப் முதன்மையா இருப்பா. அடுத்ததுதான் நான். எனக்கு அப்பிடி ஒரு வாழ்க்கை வேணாம்.”

அவசரமாக மகனைத்தான் பார்த்தார் பிரேமா. இறுக்கிவிட்ட முகத்துடன் அவன் எழுந்து போவது தெரிந்தது.
 

Vishakini

Moderator
Staff member
இவள் புறம் திரும்பி, “வேற ஒரு பெடியனா இருந்தாலும் அவருக்கும் அம்மா அப்பா சகோதரம் எண்டு இருக்குமே நாவினி. அவேலயும் அவர் பாசம் வச்சிருப்பார்தானே.” என்றார் பிரேமா.

“குடும்பம் இல்லாம நிக்கிற நான் குடும்பத்தில பாசம் வைக்காத எண்டு சொல்லுவனா அன்ட்ரி? அது வேற. நானும் அவரும் எண்டு வரேக்க அவருக்கு நான் எல்லாமா இருக்கோணும். அதத்தான் சொல்லுறன்.”

பிரேமாவுக்கு அவளை விளங்காமல் இல்லை. அதற்காக இதை அப்படியே விட இன்னுமே அவர் தயாராக இல்லை. அதில், “இத நான் கதைக்கக் கூடாது செல்லம். அதே மாதிரி உங்கட மனதை நோகடிக்கிற எண்ணமும் எனக்கு இல்ல. உங்களுக்கு விளங்க வைக்கிறதுக்கு மட்டும்தான் இதச் சொல்லுறன் சரியா?” என்று பீடிகையோடு ஆரம்பித்தார்.

“உங்களைப் பெத்த அம்மா பரிமளா இருக்கிற வரைக்கும் உங்கட அப்பாக்கு அவாதானே எல்லாமா இருந்தவா. உங்கட அப்பாக்கும் அவா எண்டா உயிர் என்ன? எவ்வளவு அந்நியோன்யமா இருந்தவே எண்டு நான் பாத்திருக்கிறன். அதுக்காக உங்கட அபிராமி அம்மா வந்த பிறகும் உங்கட அப்பா அப்பிடியேதான் இருந்தவரா?” என்றதும் ஏதோ புரிவது போலிருந்தது அவளுக்கு.

“அபியும் அவரும் வாழ்ந்த வாழ்க்கையும் எனக்குத் தெரியும். உங்களுக்கும் தெரியும். இன்னுமே சொல்லப்போனா அபியை இந்த ஊர்ல எல்லாரும் பிழையா கதைக்கினம் எண்டுதான் இஞ்ச பாத்துக்கொண்டு இருந்த அரசாங்க உத்தியோகத்தையே விட்டுப்போட்டு உங்கட அப்பா ஜெர்மன் போனவர். ஓம்தானே?” என்றதும் கண்ணீருடன் ஆம் என்று தலையை அசைத்தாள் நாவினி.

“அதே மாதிரி ஜேர்மனில நீங்க அஞ்சு பேரும் வாழ்ந்த வாழ்க்கையை நீங்களே யோசிச்சுப் பாருங்கோ. அபியும் உங்கட அப்பாவும் எப்பிடி இருந்தவே, உங்கட அப்பான்ர அன்பு பரிமளாவில இருந்ததா, அபியில இருந்ததா எண்டும் யோசிங்க.”

அவர் இப்படிக் கேட்கிற வரையில் அப்படி அவள் யோசித்துப் பார்த்ததில்லை. இப்போது யோசிக்கையில் அபிராமி அவள் அப்பாவின் இரண்டாவது மனைவி என்கிற எண்ணம் அவளுக்கே வந்ததில்லை. பரிமளா பற்றிய பேச்சு அவர்களுக்குள் வந்த நினைவு கூட அவளுக்கு இல்லை.

அம்மா என்று நினைத்தால் அவள் மனக்கண்ணில் வந்து நிற்பவர் அபிராமி மட்டுமே. அத்தனை அந்நியோன்யமாகவும் அன்பாகவும் வாழ்ந்தவர்கள். கலங்கிய விழிகளோடு அவள் பார்த்த பார்வையே அவள் மனவோட்டத்தைச் சொல்லிற்று. தானும் கண்ணீருடன் புன்னகைத்தார் பிரேமா. இது துடிக்க துடிக்க வைத்தியம் பார்க்கும் ஒரு முறை. அவருக்கும் வேறு வழி இல்லையே.

“இதுதானம்மா வாழ்க்கை. இப்ப இந்த நிமிசம் வரைக்கும் அவன் மொழின்ர மனுசன். நாளைக்கு உங்களுக்கும் அவனுக்கும் கலியாணம் நடந்தா, அதுக்குப் பிறகு அவன் நாவினின்ர மனுசன். ஆரம்பம் சில காலத்துக்கு வேணுமெண்டா மொழின்ர நினைவுகள் வந்து போகலாம். நாளடைவில நீங்க மட்டும்தானம்மா அவனுக்கு.” என்று கனிவுடன் விளங்க வைத்தார்.

“உங்கட எதிர்பார்ப்பில எந்தப் பிழையும் இல்ல. அதே மாதிரி நான் சொன்னது வாழ்க்கையின்ர நிதர்சனத்தை. நிறைய யோசிக்காதீங்கோ. உங்கட மனம் என்ன சொல்லுது எண்டு கேளுங்கோ.” என்று சொல்லிவிட்டு அழைப்பைத் துண்டித்தார் பிரேமா.

இரண்டு நாள்களுக்கு மட்டுமே அமைதியாக இருந்தார். மகனையும் தொந்தரவு செய்யப் போகவில்லை. இப்போது அவனுக்கு அவள் எண்ணப்பாடு என்ன என்று புரிந்திருக்கும். யோசிக்கட்டும் என்று விட்டார்.

அதன் பிறகு மேனகா, வைதேகி என்று எல்லோரையும் அவளோடு பேச வைத்தார். இதையெல்லாம் அறிந்த சாரதாவும் தயக்கத்தை உதறிவிட்டுப் பிரேமா வீட்டுக்கு வந்து, தன் பங்குக்கு அவளுக்கு அழைத்து, நடந்தவற்றுக்காக மன்னிப்பைக் கேட்டார்.

நாளாக நாளாக நாவினிக்கு ஒரு அழுத்தம். மேனகாவுக்குமே இப்பொழுது பிரேமா கேசிகன் மீது நல்லெண்ணம் வந்திருந்தது. முதல் திருமணத்தையும் அந்தக் குழந்தையையும் ஒரு குறையாக அவர் பார்க்கவில்லை.

அதுவும் நாகரத்தனம் அபிராமி குறித்து அவரோடும் பிரேமா கதைத்ததில் அவருமே மாறியிருந்தார். அதில் அவரும் அங்கே அவர் பார்த்த அந்தப் பெடியனைக் கட்டு, இல்லையா கேசிகனுக்கு ஆம் என்று சொல்லு என்று நெருக்கினார்.

ஒரு கட்டத்துக்கு மேல் அவளால் இந்த விடயம் குறித்துத் தனக்குள் போராட முடியவில்லை. இது ஒரு முடிவுக்கு வந்துவிட்டால் நிம்மதியாக இருக்கும் என்கிற நிலைக்கு வந்திருந்தாள்.

‘இப்பிடி எல்லாம் நடக்கும் எண்டு தெரியா குஞ்சு. தெரிஞ்சிருந்தா நீ ஆசைப்பட்ட மாதிரி அந்தத் தம்பிக்கே உன்னைக் கட்டி வச்சிருப்பன். அம்மாவை மன்னிச்சுக்கொள்ளு செல்லம்.’ என்று இறக்கும் தருவாயில் அன்னை சொன்னதையே சம்மதமாக எடுத்துத் திருமணத்திற்குச் சம்மதித்தாள்.

அவள் சம்மதம் அறிந்து பிரேமா அழுதுவிட்டார். வெளியில் காட்டிக்கொள்ளாதபோதும் அவளைச் சம்மதிக்க வைப்பதற்காக அவர் போராடிய போராட்டம் பெரும் போராட்டமாயிற்றே. இனி அவள், அவர் மகன், பேரன் வாழ்க்கை எல்லாம் நன்றாக இருக்கும் என்கிற பெரும் ஆசுவாசம் அவருக்குள் உண்டாயிற்று.

அவரைத் தயக்கத்துடன் பார்த்து, “எனக்கு அங்க வந்திருக்கிற ஐடியா எல்லாம் இல்லை அன்ட்ரி.” என்று மெல்லச் சொன்னாள் நாவினி.

“நீங்க வர வேணாமாச்சி. நான் தம்பியையும் பேரனையும் அனுப்பி வைக்கிறன்.” உயிர்போகும் வேதனை உள்ளே வாட்டினாலும் காட்டிக்கொள்ளாமல் சொன்னார். “அதுக்குப் பதிலா நான் உங்களிட்டக் கெஞ்சிக் கேக்கிறது ஒண்டே ஒண்டுதானம்மா. என்ர பேரக் குழந்தையச் சொந்தப் பிள்ளையா நினைச்சு வளத்துப்போடுங்கோ குஞ்சு. ஒண்டும் தெரியாத பிஞ்சு அவர்.” என்றார் கண்ணீருடன்.

“நானும் அப்பிடியான ஒரு பிள்ளைதான் அன்ட்ரி. சஜூவ ஏங்க விடமாட்டன்.” என்று கண்ணீருடன் அவளும் முறுவலித்தாள்.

“இது போதுமம்மா எனக்கு. இந்த ஒரு வார்த்த போதும்.” என்று கண்களைத் துடைத்துக்கொண்டார் அவர்.

“பிறகு நீங்க?”

“எனக்கு என்ன? உங்களுக்கு எண்டு இன்னொரு பிள்ளை பிறக்கேக்க என்னைக் கூப்பிட மாட்டீங்களா?”

இன்னொரு பிள்ளையா? அதைப் பற்றியெல்லாம் யோசித்தே பார்த்திராதவள் பதில் சொல்ல வராமல் அவரைப் பார்த்தாள்.

“நான் வயசுபோன கட்டையம்மா. பக்கத்திலதானே அம்மாவும் அண்ணா குடும்பமும் இருக்கினம். அதெல்லாம் சமாளிப்பன். என்னைப் பற்றி யோசிக்காதீங்கோ.” என்று அவளைத் தேற்றினார் அவர்.

அங்கு நடப்பதெல்லாம் கேசிகனுக்குத் தெரியாமல் இல்லை. மொத்தமாக இறுகிப்போயிருந்தான் அவன். அவன் விருப்பத்தைக் கேட்டுக்கொண்டு யாரும் வரவில்லை. அப்படியே கேட்டாலும் நாவினியை எப்படி மறுப்பான்?

“திரும்பவும் உன்னை நம்பி ஓம் எண்டு சொல்லியிருக்கிறா தம்பி. இந்த முறையும் ஏமாத்திப்போடாத.” என்ற பிரேமாவின் வார்த்தைகள் மொத்தமாக அவனை அடித்துச் சாய்த்திருந்தன.

கூடவே அது உண்மையுமாயிற்றே.

ஆனால், மகனின் அமைதி அவரைக் கோபப்படுத்திற்று. “எத்தினையோ தரம் சொல்லிட்டன் தம்பி. நான் இன்னும் எவ்வளவு காலத்துக்கு இருப்பன் எண்டு நினைக்கிறாய்? எனக்குப் பிறகு இந்தக் குஞ்சனை ஆர் வளக்கிறது? இல்ல நான் செத்தாத்தான் இன்னொரு கலியாணத்தைப் பற்றி யோசிப்பியா?”

“அம்மா!” என்று கத்திக்கொண்டு எழுந்துவிட்டான் அவன். கோபத்தில் மூச்சு வாங்கியது. “என்னவாவது செய்ங்கோ!” என்றுவிட்டுப் போனான்.

மயூரனின் அன்னைக்கு மிகுந்த மகிழ்ச்சியும் நெகிழ்ச்சியும். கூடவே, ஏதோ ஒரு குற்ற உணர்விலிருந்து வெளியே வந்த உணர்வு. மகளின் இழப்பை இன்னும் அதிகமாக உணராமல் இல்லை. அப்படியே மருமகனிடம் சென்று பேசு என்று மகனிடமும் சொன்னார்.

மயூரனுக்கு இன்னுமே கேசிகனின் முகம் பார்க்கும் தைரியம் இல்லை. ஆனாலும் வந்து சந்தித்தான். கேசிகன் அவனுக்கு முகம் கொடுக்கவே மறுத்தான். மனம் முற்றிலுமாக அவனிடமிருந்து விலகியிருந்தது. மன்னிக்கிற மாதிரியோ, மறக்கிற மாதிரியோ அவன் எதையும் செய்யவில்லை என்று எண்ணினான்.

ஆனாலும் அவனை அணைத்து முதுகில் தட்டிக்கொடுத்து, “இப்பதான் நிம்மதியா இருக்கு மச்சான். கட்டாயம் நீ சந்தோசமா இருப்பாய்!” என்று சொல்லிவிட்டுப் போனான் மயூரன்.

இப்படி அவர்களைச் சுற்றி இருக்கிற அனைவரும் மகிழ்ச்சியாக இருக்க, விரைவில் கணவன் மனைவியாகப்போகிற அந்த இருவரும் இன்னும் எதையும் பேசிக்கொள்ளவில்லை. நாவினியாக அழைக்கக்கூடும் என்கிற கேசிகனின் எதிர்பார்ப்புப் பொய்யாகிற்று.

பிரேமா, சாரதா, வைதேகி, மேனகா என்று நால்வர் கொண்ட குழு நொடியையும் வீணாக்கவில்லை. காலையிலிருந்து மாலை வரை நான்கு வீடுகளுக்கும் கைப்பேசி அழைப்புகள் பறந்துகொண்டே இருந்தன. அடுத்து வந்த நல்ல நாள் ஒன்றைத் திருமண நாளாகக் குறித்துவிட்டே ஓய்ந்தனர்.
 

Renju

New member
சத்தியமாக இந்த பயலை அடி வெளுக்க தோணுது எனக்கு அவன் பெண்டாட்டி உயிரோடு இருந்தா இப்போ என்ன பண்ணுவான் ஒரு சொறில ஓடி போயிடுவான் அட போமா நிவி வேற யாரையும் கட்டுமா
 

Chitra ganesan

Active member
கட்டாயப்படுத்தி,கலவர படுத்தி ,நெருக்கடி கொடுத்து அவள் வாயாலேயே வார்த்தையை பிடிங்கி சம்மதம் வாங்கி இருக்காங்க.
பெற்றோர்,உற்றோர் இல்லாத ஒரு அநாதை பெண்ணின் பாதுகாப்பு இல்லாத அநாதரவன நிலையை,அவங்க சொந்த தேவைக்கு உபயோகப்படுத்திகிட்டாங்க.
ஏத்துக்கவே முடியல😥
 
Top Bottom