அத்தியாயம் 2
இளமையிற் கல்வி சிலையில் எழுத்து என்பார்கள். அப்படியான அந்த இளமையில் கல்வி மாத்திரம் சிலையில் எழுத்தாகப் பதிவதில்லை. வறுமை முதற்கொண்டு நண்பன் கடித்துத் தந்த மாங்காய் வரை பசுமரத்தாணியாக நெஞ்சில் பதிந்துவிடுகின்றன.
இளமையில் வரும் காதல், இளமையில் உண்டாகும் காயம் எல்லாமே அப்படித்தானே. நடுவானில் பறந்துகொண்டிருந்த விமானத்தில் அமர்ந்திருந்த நாவினி, தன் கைப்பேசியை இயக்கி, அதிலிருந்து ஒரு புகைப்படத்தை எடுத்துப் பார்த்தாள்.
அப்போது அவளுக்குப் பன்னிரண்டு வயது இருக்கும். அன்றைய அவளின் கேசி அண்ணா வரைந்த வீடு அது. கேசிகன் அவளை விட ஐந்து வயது பெரியவன். அவளுக்கு அவன் மிகப்பெரியவன். அதுவும் அந்த நேரத்தில் நெடு நெடுவென்ற உயரத்தில், மீசை நன்றாகவே அரும்ப ஆரம்பித்திருந்த அவன் தோற்றம், பார்வை, பேச்சு, உடல்மொழி அத்தனையிலும் அவளுக்கு ஒரு ஈர்ப்பிருக்கும். மலைப்புடன் வாயைப் பிளந்து பார்ப்பாள்.
ஆனால், அந்தப் பெரியவன் அந்த வீட்டுக்கு வரைந்த ஒரு கோட்டினைக் கூட நேராகப் போட்டிருக்கவில்லை. ஆனாலும், அவள் கண்ணுக்கு அந்த வீடு மிகுந்த அழகாய்த் தெரிந்தது. அன்றும் இன்றும்.
விறாந்தை, மூன்று அறைகள், சமையற்கட்டு, மேலதிக பொருள்கள் போடுவதற்கு ஒரு அறை என்று பல வீடுகளைப் போன்ற சாதாரண ஒரு வீட்டைத்தான் வரைந்திருந்தான். கூடவே ஒவ்வொரு பகுதியையும் அது என்ன பகுதி என்று பென்சிலால் எழுதியிருந்தான். அதன் முன்னே போர்ட்டிகோவும் அதன் ஒரு பக்கத்தில் நீண்ட அகல ஜன்னல்கள் கொண்ட ஒரு அறையும் மேலதிகமாக இருந்தன.
அவை எதற்கு என்று அவள் கேட்டதற்கு அங்கே தன்னுடைய பரிசுக் கோப்பைகளை எல்லாம் அழகுற வைக்கப்போகிறானாம். வாசிப்புப் பிரியனான அவனுக்குப் புத்தகங்கள் வைத்தெடுப்பதற்கும் அந்த அறை வேண்டும் என்றிருந்தான்.
“அப்ப எனக்கு? எனக்கும் ஒரு அறை வேணும்.” குழந்தையாக முகம் சுருக்கி அவள் கேட்டதற்கு, கையில் இருந்த பென்சிலாலேயே அவள் தலையில் தட்டி, “இந்த வீட்டில நீ, நான், அம்மா மூண்டு பேரும்தான் இருக்கப்போறம் பெட்டச்சி!” என்று சொல்லியிருந்தான் அவன்.
அதனாலோ என்னவோ அந்த வீட்டின் மீதான சொந்தம் அவளுக்கு அப்போதே உண்டாகிற்று. வரைந்தவன் அந்தப் பேப்பரையும் பென்சிலையும் அங்கேயே போட்டுவிட்டுப் போய்விட்டான். இவள் அதை எடுத்துப் பத்திரப்படுத்தி வைத்திருந்தாள்.
அங்கு மட்டுமில்லை. அதை ஜெர்மன் வரையிலும் கொண்டுவந்திருந்தாள்.
போனமுறை இலங்கை போனபோது அதை உரியவனிடமே ஒப்படைத்துவிட்டாள். அவன் வரைந்ததைக் கொடுத்துவிட்டாள். அவனை? அவனையும்தான். இல்லை, அவளாகக் கொடுக்கவில்லை. அவனாக அவளிடமிருந்து அவனைப் பிரித்துக்கொண்டிருந்தான்.
அவனுடையது கூட்டுக் குடும்பம். அம்மம்மா தாத்தா, மாமா அத்தை, அவர்களின் மகன், இவன், இவனுடைய அம்மா என்று எல்லோரும் ஒன்றாக இருந்தார்கள். அப்பா எங்கு என்றே தெரியாது. இவனுடைய அன்னையைப் பிடிக்கவில்லை என்று சொல்லாமல் கொள்ளாமல் ஊரை விட்டே ஓடிப்போய்விட்டார்.
அவன் காயப்பட்டுப் போவான் என்கிற பயத்தில் இவள் அதைப் பற்றிக் கேட்பதில்லை. அவனும் சொன்னதில்லை.
இவனையும் இவன் அன்னையையும் பார்த்துக்கொண்டது இவனுடைய தாத்தாவும் மாமாவும்தான். அதனாலேயே அந்த வீட்டின் அத்தனை வேலைகளையும் அவனுடைய அன்னை பிரேமாதான் கவனித்துக்கொள்வார்.
அப்பா இல்லை என்பதால் எல்லோருமாகச் சேர்ந்து தன் அன்னையை வேலை வாங்குகிறார்கள் என்கிற கோபம் இவனுக்கு உண்டு. அவன் மாமியை அவனுக்குப் பெரிதாகப் பிடிக்காது. ஆனால் என்ன, எதையும் வெளியில் காட்டிக்கொள்ள மாட்டான். இவளிடமும் நேரடியாகச் சொன்னதில்லை. அவன் பேச்சிலிருந்து இவளாக அதை உணர்ந்திருக்கிறாள்.
நன்றாகப் படித்து, நல்ல வேலைக்குப் போய், வீடு கட்டி, அன்னையை அதில் வாழவைக்க வேண்டும் என்பதுதான் அவன் இலட்சியமே.
சொன்னதுபோல் அத்தனையையும் செய்திருந்தான். ஒன்றே ஒன்றைத் தவிர்த்து. அந்த வீட்டில் அவளுக்கும் இடம் உண்டு என்று சொன்னவன் அதை மறந்துபோனான். அல்லது அந்த வீட்டுக்கு அவள் வேண்டாம் என்று அவனே முடிவெடுத்துவிட்டான்.
விழியோரம் துளிர்த்த கண்ணீரை டிஷ்யூ பேப்பரினால் திரும்பவும் ஒற்றியெடுத்துவிட்டு ஜன்னல் புறமாகப் பார்வையைத் திருப்பினாள்.
கை எட்டித் தொட்டுவிடும் தூரத்தில் இருக்கும் இந்த வெண்பஞ்சு மேகங்களை அவளால் தொடமுடியுமா என்ன? அதைப்போன்றுதான் அவனும். அவளுக்கு இல்லவே இல்லை என்றாகிப்போனான்.
ஆனால், எதிர்காலம் என்ன வைத்திருக்கிறது என்று தெரியாமல் அந்தச் சின்னஞ்சிறு வயதில் வளர்த்த கற்பனைகளும் கண்ட கனவுகளும்தான் எத்தனை?
அன்னை இறக்கும் வரையில் கூட அயல் வீட்டுப் பிள்ளைகள் என்ற வகையில்தான் அவர்களுக்குள் பழக்கமிருந்தது. அன்னை இறந்த பிறகுதான் அவன் பாசம் இவள் மீது முழுமையாகத் திரும்பிற்று. இவள் மாமா வீட்டில் இருந்த காலத்தில் கூட மெனக்கெட்டு நடந்து வந்து பார்த்துக்கொண்டு போவான்.
அந்த நாள்களில் அவனின் பிரதி இவள். அவன் படித்தால் இவளும் படிப்பாள். என்ன சந்தேகம் என்றாலும் இவள் கேட்பது அவனிடம்தான். அவன் மனேஜ்மென்ட் முடித்துவிட்டு மாமாவைப் போல் சுப்பர் மார்க்கெட் ஆரம்பித்து, அதையே தொடர் நிறுவனமாக மாற்றி, இலங்கை முழுவதும் நிறுவுவேன் என்று சொன்னபோது, தானும் அதையேதான் செய்யப்போகிறேன் என்று சொன்ன நினைவு அவளுக்கு.
அவளின் பத்து வயதில்தான் அபிராமி அவர்கள் வீட்டுக்கு வந்தார். அதன் பிறகு அவர் இவளை நன்றாகப் பார்த்துக்கொள்வாரோ என்கிற சந்தேகத்திலேயே இன்னும் கண்ணும் கருத்துமாக அவன் இவளைக் கவனித்துக்கொள்வான்.
ஆனால், அவன் பயத்திற்கு அவசியம் இருந்ததே இல்லை. அபிராமி அத்தனை அன்பான பெண்மணி. அவர் மூலம் அவளுக்கு அபிசன், அஜிதன் என்று அடுத்தடுத்து இரண்டு தம்பிகள்.
ஆரம்பத்தில் தனக்கும் தந்தைக்கும் நடுவில் வந்த அபிராமியை ஏற்றுக்கொள்ள முடியாமல் திணறியிருக்கிறாள். ஆனால், வலிக்காமல் முள்ளைப் பிடுங்குவது போன்று, அவளின் உறுத்தலை அகற்றித் தன்னோடு பிணைத்தவர் அபிராமிதான்.
ஆரம்பத்தில் அபி அம்மாவாக இருந்தவர் பெரிய தம்பி பிறந்ததிலிருந்து அம்மாவாகிப்போனார்.
அபிராமியை நாகரத்தினம் கட்டியதில் பரிமளா வீட்டினருக்குக் கொஞ்சமும் உடன்பாடில்லை. திருமணம் செய்யப்போகிறாராம் என்று அறிந்த கணமே வந்து அவரோடு சண்டை பிடித்தார்கள். நாவினியைத் தம்மிடமே தந்துவிடச் சொன்னார்கள்.
அப்படியிருக்கத் திருமணமாகி அடுத்த பத்து மாதத்தில் அவர் அபிசனைப் பெற்றதும், அதற்கு அடுத்த ஒன்றரை வருடத்தில் அஜிதனைப் பெற்றுக்கொண்டதும் பரிமளா வீட்டினரால் பெருமளவில் விமர்சிக்கப்பட்டது.
தம் மகள் எப்போது இறப்பாள் என்று காத்திருந்து, புதிதாக இன்னொருத்தியை வீட்டுக்குள் கொண்டுவந்ததும் அல்லாமல், பிள்ளை பிள்ளையாகப் பெற்றுப் போடுகிறார் என்று முகம் சுளிக்க வைக்கும் பேச்சுகளைப் பேச ஆரம்பித்தனர்.
அந்த நேரத்தில் பரமேஸ்வரன் செய்துகொண்டிருந்த புகையிலை வியாபாரம் வேறு நொடிந்து விழுந்துவிட, பரிமளாவுக்கு என்று கொடுத்த சீதன வீட்டையும் நகைகளையும் திருப்பித் தரும்படி மறைமுகமாகக் கேட்க ஆரம்பித்தார்கள்.
அப்போதுதான் நாவினியை அவர்கள் தம் பக்கம் வைத்துக்கொள்ள முயன்றதற்கும், அவரின் இரண்டாவது திருமணத்தை எதிர்த்ததற்கும் என்ன காரணம் என்று புரிந்துகொண்டார் நாகரத்தினம்.
அந்தக் கோபத்தில் நாகரத்தினம் மறுத்துவிட்டார். அவை முறையின்படி நாவினிக்குச் சேர வேண்டியவை. இல்லாவிட்டாலும் நல்ல முறையில் அதைப் பற்றி அவரோடு பேசியிருக்கலாம். அதை விட்டுவிட்டு அவர் செய்துகொண்ட இரண்டாவது திருமணத்தையும், அதன் மூலம் பெற்றுக்கொண்ட குழந்தைகளையும் கொச்சையாகப் பேசியவர்களுக்கு மனமிரங்க அவருக்கு மனமில்லை.
ஊராருமே மனைவியை இழந்தாலும் இன்னொரு மனைவி, குழந்தைகள் என்று அவர் வாழ்கிறார். மகளை இழந்தவர்களுக்கு இன்னொரு மகள் கிடைப்பாளா, அதற்குப் பதிலாக அவர்கள் கொடுத்த சீதனத்தைத் திருப்பிக் கொடுக்கலாம் என்பதுபோல் நியாயம் பேச ஆரம்பித்தனர்.
நாகரத்தினத்திற்கு மொத்தமாக மனம் விட்டுப்போயிற்று.
சின்ன மகன் பிறந்து ஆறு மாதத்தில் ஏஜென்சி மூலம் ஜெர்மனி செல்லும் வாய்ப்பு அவருக்கு வந்தது. பரிமளாவின் நகைகள், அதுவரை நாவினிக்குச் சேர்த்தவை, அபிராமிக்கு, மகன்களுக்குச் செய்தவை என்று எல்லாவற்றையும் அடகு வைத்ததோடல்லாமல், பரிமளாவின் சீதன வீட்டின் பெயரில் வட்டிக்கும் வாங்கி ஜெர்மன் சென்று இறங்கினார் நாகரத்தினம்.
அதுவரையில் அதைப் பற்றி அவர்கள் இருவரும் வெளியில் மூச்சே விடவில்லை. பிள்ளைகளுக்குக் கூடச் சொல்லவில்லை. இரண்டு நாள்களுக்கு அப்பா வெளியூர்ப் பயணம் போகிறார் என்றே சொல்லியிருந்தார்கள்.
ஒன்று பயணம் சரிவராமல் யாரிடமும் சொல்ல விருப்பமில்லை. இரண்டாவது பரிமளாவின் நகைகளையும் வீட்டையும் பயன்படுத்துவதால் அவர் வீட்டினர் பிரச்சனைக்கு வருவார்களோ என்கிற பயம்.
அவர்கள் பயந்தது போன்று விடயம் அறிந்ததும் பரிமளாவின் தமையன் பரமேஸ்வரன், இவர்களின் வீடு தேடி வந்து பெரும் சண்டையை இழுத்திருந்தார். கொச்சையான வார்த்தைகளால் அபிராமியைக் கேவலப்படுத்தி, அசிங்கப்படுத்திவிட்டுப் போனார். தான் நொடிந்த நேரத்தில் தங்கையின் நகைகள் இருந்தும் அவை தனக்கு உதவவில்லையே என்கிற கோபம் அவருக்கு.