• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

மன்னிப்பாயா காதலே - 22

Vishakini

Moderator
Staff member
அத்தியாயம் 22

கிட்டத்தட்ட அப்பாவும் மகனும் வந்து ஒரு மாதமாகிற்று. சஜிதனுக்கு இன்னும் கிண்டர் கார்டனில் இடம் கிடைக்காததால் இருவரும் வீட்டில்தான் இருந்தனர்.

சில நேரங்களில் உதயன் எங்காவது தனியாகச் செல்வதானால் கேசிகனையும் அழைத்துப்போவான். எல்லாமே புதிது என்பதில் அவனோடு கூடவே சென்று அந்த நாட்டின் நடப்பை, வழக்கங்களை அறிந்துகொள்வதில் இவனுக்கும் ஆர்வமே.

பெரும்பான்மை நாள்களின் அவனது பகல் நேரத்துச் சமையல் பிரேமாவோடு வீடியோ கோலில் இருந்தபடியேதான் நடக்கும். அப்படியே அவரையும் அங்கே சாப்பிட வைத்துவிடுவான். அவரும் அவன் சமையலுக்கான உத்திகளைச் சொல்லிக்கொடுத்தபடியே பேரனோடு ஆசை தீரப் பேசிவிடுவார்.

மாலையில் நாவினி வேலை முடிந்து வந்தபிறகு தானே அவளுக்கு அழைத்துக் கதைப்பார். அவர்கள் மூவரையும் குடும்பமாகப் பார்க்கக் கிடைப்பது அப்போதுதான் என்பதில் அதைத் தவற விடவே மாட்டார். அப்படியான பொழுதுகளில்தான் அவர்களை உன்னிப்பாக அவர் கவனிப்பதும்.

மூவரும் ஒரே வீட்டில் இருக்கிறார்கள் என்பதைத் தாண்டி, கணவன் மனைவிக்கிடையிலான அந்த அந்நியோன்யம் எவ்வளவு தேடியும் அவர் கண்ணில் படுவதாக இல்லை. ஒரேயொரு ஆறுதல் நாவினியும் சஜிதனும் மிக நன்றாகவே ஒட்டிக்கொண்டிருந்தனர்.

அந்த, ‘நவி அன்ட்ரி’ மட்டும் இன்னும் மாறவில்லை. அதை மாற்ற முயலாத மகன் மீது மெல்லிய கோபம் கூட உண்டாயிற்று அவருக்கு. அன்று அவர் காணொளி அழைப்பில் இருக்கையில் தோடம்பழத்தை உரித்து, அதை ஒவ்வொரு சுளைகளாகப் பிரித்து, கண்ணாடிக் கிண்ணத்தினுள் போட்டு எடுத்துக்கொண்டு வந்த நாவினி, “சஜுக்குட்டி! அன்ட்ரிட்ட வாங்கோ. தோடம்பழம் சாப்பிடுவம்.” என்று அழைத்தாள்.

“இன்னும் என்னம்மா அன்ட்ரி? அம்மா எண்டு சொல்லிக்குடுங்கோ.” பட்டென்று சொன்னார் பிரேமா.

திகைத்து நிமிர்ந்த நாவினி, வேகமாகத் திரும்பிக் கேசிகனைத்தான் பார்த்தாள். அவனும் இதை எதிர்பார்க்கவில்லை என்று அவன் முகமே சொல்லிற்று.

“என்ன தம்பி, நீங்களாவது இதையெல்லாம் சொல்லிக் குடுக்கிறேல்லையாப்பு? இன்னும் எத்தின நாளைக்கு அன்ட்ரி எண்டு சொல்லுவார்?” என்று மகனை அதட்டிவிட்டு, “சஜுக்குட்டி! அப்பம்மாவப் பாருங்கோ. சாரு அண்ணா பிரியா அன்ட்ரிய எப்பிடிக் கூப்பிடுறவர்?” என்று பேரனிடம் வினவினார்.

“அம்மா எண்டு.” நாவினியின் மடியில் அமர்ந்திருந்த குட்டிக் கண்ணனும் அழகாகப் பதில் சொன்னான்.

“அதே மாதிரி எங்கட செல்லமும் நவி அன்ட்ரிய அம்மா எண்டுதானே கூப்பிடோணும். அதுக்குத்தானே உங்கட அப்பா அப்புச்சாமிட்ட போய் நவி அம்மாவக் கலியாணம் முடிச்சவர்.” என்று எடுத்துச் சொன்னார் பெரியவர்.

“அப்ப மொழி அம்மா?” கெட்டிக்காரக் குழந்தை எழுப்பிய கேள்வியை விடவும், அத்தனை காலமும் அம்மாவாக இருந்தவளை அவனே ‘மொழி அம்மா’வாக மாற்றியதில் ஒரு கணம் துடித்து நிமிர்ந்தான் கேசிகன்.

நாவினி இமைகளைச் சிமிட்டக் கூட இல்லை. துடிக்கும் அவனையே அகன்ற விழிகளில் வேதனை துலங்கப் பார்த்திருந்தாள்.

“மொழி அம்மா அப்புச்சாமிட்ட போயிற்றா எல்லா? அவாக்குப் பதிலா எங்கட சஜுக்குட்டிய ஆரு பாக்கிறது? நவி அம்மாதானே?”

அவன் மேலும் கீழுமாகப் பெரிதாகத் தலையை அசைத்து ஆமோதித்தான்.

“அப்ப அவாவை நீங்க அம்மா எண்டுதானே கூப்பிடோணும். நீங்க வேணுமெண்டா நவி அம்மாவக் கேளுங்கோ. அவாக்கும் அதுதான் விருப்பமாம்.”

“ஓமா?” என்றான் சின்னவன் அவளிடம் திரும்பி. என்ன சொல்லுவாள்? அங்கே ஒருவன் இதையெல்லாம் ஏற்க முடியாமல் நெருப்பில் விழுந்த புழுவாகத் துடித்துக்கொண்டு இருக்கையில் ஆம் என்று எப்படிச் சொல்லுவாள்?

“நாவினி, தம்பி கேக்கிறான் எல்லாம்மா? பதிலச் சொல்லுங்கோ.” பிரேமாவுக்கு மகன் மருமகள் இருவர் மீதும் பயங்கரக் கோபம். சின்னவன் முன் கொஞ்சம் பிசகினாலும் எல்லாம் பிழைத்துவிடும் என்பதில் மிகுந்த பொறுமையோடு அந்தச் சூழ்நிலையை நாசூக்காய் நகர்த்தினார்.

“உங்களுக்கு எப்பிடி விருப்பமோ அப்பிடிக் கூப்பிடுங்க செல்லம்.” அவன் பார்வையில் சிறு ஆமோதிப்பும் இல்லாதபோது பிரேமா சொன்னதுபோல் அவளால் சொல்ல முடியவில்லை.

“உங்கட அப்பாவையும் கேளுங்கோ?” ஒரு முடிவுடன் இருந்த பிரேமா விடுவதாக இல்லை.

“அப்பா, நவி அன்ட்ரிய எப்பிடிக் கூப்பிட? மொழி அம்மா அப்புச்சாமிட்ட போனதால நவி அம்மா எண்டு கூப்பிடவா?”

கணவன் மனைவி இருவருமே சோஃபாவில் அமர்ந்திருந்துதான் பிரேமாவுடன் பேசிக்கொண்டிருந்தனர். நாவினியின் மடியில் இருந்த மகனைத் தூக்கித் தன் மார்போடு சேர்த்தணைத்தவனின் விழிகள் பனித்தன. மனக்கண்ணில் நிறைமொழி வந்து புன்னகைக்க, “அம்மா எண்டுதான் கூப்பிடோணும். அவாதான் இனிப் பிள்ளைக்கு அம்மா.” என்றான் அவன் நெற்றி முட்டி.

“பிறகு என்ன அப்பாவே சொல்லிட்டார். அங்க பாருங்கோ, தம்பின்ர அம்மா அழுதுகொண்டு இருக்கிறா. அவான்ர கண்ணைத் துடைச்சு விட்டுட்டுச் சிரிக்கச் சொல்லுங்கோ பாப்பம்.” என்றதும் தகப்பனின் கையில் இருந்தவன் நாவினியைத் திரும்பிப் பார்த்தான்.

அவள் சிரிப்பும் அழுகையுமாயாகக் கண்களைத் துடைத்தாள். “நவி அன்ட்… அம்மா அழக் கூடாது. சின்ன பிள்ளைகள்தான் அழுறது.” என்று தன் பிஞ்சுக் கைகளால் தானும் துடைத்துவிட்டான்.

உடைந்து விம்மினாள் நாவினி. பிரேமாதான் கனிவுடன் அவளை அதட்டி அடக்கினார். அவர் அழைப்பைத் துண்டித்த பிறகும் கணவன் மனைவி இருவரும் பேசிக்கொள்ளவில்லை.

சாருகனின் கார்களை வைத்து விளையாடிக்கொண்டிருந்த சின்னவனின் சலசலப்பு மட்டுமே அங்குக் கேட்டுக்கொண்டிருந்தது. அதுவும் எதையாவது சொல்கையில் அவன் அம்மாவையும் அன்ட்ரியையும் போட்டுக் குழப்பியடிப்பது நாவினிக்கு இலேசான புன்னகையோடு சேர்த்துக் கண்ணீரையும் தோற்றுவித்தது. திரும்பிக் கேசிகனைப் பார்த்தாள்.

மகன் மீது பார்வை இருந்தாலும் அவன் இங்கில்லை என்று விளங்கிற்று. வேதனையோடு அவனையே பார்த்தாள். தன் எதிர்பார்ப்பு இப்போதும் தோற்றுப்போனது புரிந்தது.

சட்டென்று எழுந்து சமையலறைக்கு நடந்தாள். பகல் அவன் சமைத்த கறிகள் இருந்தன. ரொட்டி சுட்டால் போதும். ஒரு கிண்ணத்தில் பச்சை மாவை எடுத்துப் போட்டாள். வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை எல்லாம் தேவையான அளவு எடுத்துச் சின்ன சின்னதாக நறுக்கிப் போட்டாள்.

கூடவே தேவையான உப்பும் தேங்காய்ப்பூவும் சேர்த்து, இளஞ்சசூட்டுத் தண்ணீரும் எண்ணெய் கொஞ்சமும் விட்டு நன்றாகக் குழைத்து எடுத்தாள். அவற்றை அளவான உருண்டைகளாக்கி மூடி வைத்துவிட்டுச் சின்னவனுக்கு கிரேப்ஸ் செய்து கொடுத்தாள்.

அப்போதும் கேசிகனிடம் அசைவே இல்லை. இந்தளவிலா நிறைமொழி அவனோடு இரண்டரக் கலந்திருக்கிறாள்? அவள் அவன் மனைவி, அந்நியோன்யமாக வாழ்ந்தவர்கள், இன்று அவள் இல்லை என்றாலும் அந்த வலி இருக்கும் என்று அறிவு எடுத்துச் சொன்னாலும் மனம் தாங்க முடியாமல் சுருண்டது.

அவளையும்தானே நேசித்தான். இன்னும் சொல்லப்போனால் அவன் முதல் காதல் அவள். அப்படியிருக்க இந்தளவு பாதிப்பை அவள் அவனுள் நிகழ்த்தியிருக்கவில்லையே. அப்படி இருந்திருந்தால் அவள் பற்றிய தகவல் எதுவும் இல்லை என்றதும் அடுத்து என்று போயிருப்பானா?

தான் தன் காதலில் தோற்றுப்போனோம் என்பதும், நிறைமொழியளவு அவன் இதயத்தின் அடியாழம் வரை ஊடுருவும் சக்தி தனக்கு இருக்கவில்லை என்பதும் அடிபட்ட புறாவாக அவள் இதயத்தைத் துடிக்க வைத்தன.

சட்டென்று இறங்கிவிட்ட சூடான கண்ணீரை அவன் பார்த்துவிட முதல் துடைத்துக்கொண்டாலும் அது நிற்பதாய் இல்லை. கொட்டும் கண்ணீரைத் துடைத்துவிட்டபடியேதான் ரொட்டிகளைச் சுட்டாள்.

“என்னட்டச் சொல்லியிருக்க நானும் வந்திருப்பனே.” திடீரென்று பின்னால் கேட்ட குரலில் திடுக்கிட்டுத் திரும்பிப் பார்த்தாள் நாவினி

“நவி என்ன, அழுறியா?” அவள் கண்களின் சிவப்பையும் இமைகளில் படிந்திருந்த ஈரத்தையும் கண்டு அதிர்ந்து கேட்டான்.

சட்டென்று தலையைக் குனிந்து புறங்கையால் கண்களைத் துடைத்துக்கொண்டு, “இல்ல. அது ஏதோ…” என்று அவள் சமாளிக்க முயல, “நீ திரும்பு முதல்!” என்று அவள் கரம் பற்றித் திருப்பினான் அவன்.

கண்கள், மூக்கு, முகமெல்லாம் செக்கச் சிவந்திருப்பதைக் கண்டு திகைத்தான். “நவி என்னம்மா?” என்று அவளை அணைக்க வர, “ப்ளீஸ்!” என்று விலகினாள் அவள்.

ஒன்றும் புரியமாட்டேன் என்றது அவனுக்கு. “என்ன எண்டு சொல்லு நவி. இப்பிடி எல்லாத்தையும் உன்ர மனதுக்கயே வச்சிருக்காத.” என்று அதட்டினான்.

சமாளித்துப் புன்னகைக்க முயன்றாலும் கண்ணீர் அரும்பிற்று அவளுக்கு. திரும்ப திரும்ப அவன் விசாரித்தும் மனம் திறக்க மறுத்தாள் அவள்.

அவனுக்கு முகம் மாறியது. “அப்ப என்ன எண்டு சொல்ல மாட்டாய்?” என்றான் இறுக்கமான குரலில்.

“இல்ல. உண்மையா ஒண்டும் இல்ல.”

“ஓ சரி!” என்றுவிட்டுப் போய்த் தொலைக்காட்சியைப் போட்டுக்கொண்டு அமர்ந்துகொண்டான். “அப்பா, டெலிடபீஸ் போடுங்கோ!” என்றபடி ஓடிவந்து தகப்பனின் மடியில் ஏறி அமர்ந்தான் மகன். அதைச் செய்தாலும் அவனிடம் தென்பட்ட இறுக்கமே அவன் கோபத்தின் அளவைச் சொல்லிற்று.

நாவினி பரிதவித்துப்போனாள். முதலில் அவளால் இதை அவனிடம் பேச முடியும் என்கிற நம்பிக்கை இல்லை. பேசி வீண் பிரச்சனைகளை உருவாக்கத் தைரியமில்லை. சின்னவனும் இருக்கிறானே. ரொட்டிகளைச் சுட்டு முடித்து, கறிகளையும் சூடு செய்து கொண்டுவந்து மேசையில் வைத்துவிட்டு அவனைச் சாப்பிட அழைத்தாள்

அவன் அசையவே இல்லை. சின்னவன் கவனத்தைக் கவராமல் அங்கேயே நின்று கெஞ்சலாகப் பார்த்தாள். அவன் திரும்புவதாகவே இல்லை.

கேசிகனின் இந்த முகம் அவளுக்குப் புதிது. அவளின் கேசி அவள் தவறே செய்தால் கூடத் தண்டிக்காமல் தட்டிக்கொடுத்துப் புரியவைப்பான். ஆனால் இவன்…

திரும்பவும் கண்ணீர் பெருகும்போலிருக்கவும் பேசாமல் சாப்பாட்டை மூடி வைத்துவிட்டுத் தன் அலுவலக அறைக்குள் நுழைந்துகொண்டாள். வேலை பார்க்கும் மனநிலை கொஞ்சமும் இல்லை. கண்ணீர் மட்டும் ஏன் என்றில்லாமல் பெருகிற்று.

இல்லாத பெற்றோர்களை எண்ணி அழுதாளா, இல்லை இழந்துவிட்ட தன் காதலை எண்ணி அழுதாளா, இப்படி வாழ்க்கையை செம்மையாகக் கொண்டு போக முடியாமல் அல்லாடும் தன் இயலாமையை எண்ணி அழுதாளா, இல்லை அவன் காட்டும் இந்தக் கடின முகத்தினால் அழுதாளா அவளுக்குத் தெரியாது.

ஒரு கட்டத்தில் உதடுகள் காய்ந்து, தொண்டை உலர்ந்து, கண்கள் எரியவும் போய் முகத்தை அடித்துக் கழுவினாள். சின்னவன் உறங்குவதற்கான நேரம் வந்திருந்தது. திரும்பவும் விறாந்தைக்கு வந்து பார்த்தாள்.

அவள் எண்ணியதுபோல் தகப்பனின் மார்பில் தலையை அந்தப் பக்கமும் இந்தப் பக்கமுமாக மாற்றி மாற்றி வைத்தபடி உறக்கமும் விழிப்புமாக இருந்தான் அவன்.

இவளைக் கண்டுவிட்டு, “நவி அன்… அம்மா.” என்றான் அந்த உறக்கக் கலக்கத்திலும்.

அவனாவது அவளுக்கு இருக்கிறானே. உள்ளம் கனிய, “மேல போய்ப் படுப்பம்.” என்றபடி வந்து அவனைத் தூக்கிக்கொண்டு
மேலே போனாள். அவனை நெருங்கிச் சின்னவனைத் தூக்குகையில் நெஞ்சம் படபடக்காமல் இல்லை. ஆனாலும் சமாளித்திருந்தாள்.

அவள் முகத்தை ஒருமுறை நன்றாகப் பார்த்துவிட்டு, “நவி அன்… அம்மா அழுதவாவா?” என்றான் சின்னவன்.

இவளுக்கு நாசி விடைத்துக்கொண்டு வந்தது. ஆனாலும் முறுவலித்து, “இல்லையே. அது அப்போத சந்தோசத்தில அழுதது. இப்பவும் தெரியுது.” என்று சொன்னாள்.

“அப்ப நான் அம்மா கூப்பிடவா?” என்று தலையையும் ஆட்டிக் கேட்டான் அவன்.

“ஓம் கூப்பிடுங்க செல்லம்.”

“அம்மா!” அவள் கழுத்தைத் தன் பிஞ்சுக் கரங்களினால் கட்டிக்கொண்டு அவன் சொல்ல அவள் விழிகளில் நீர் திரண்டுபோயிற்று.
 

Vishakini

Moderator
Staff member
அவனுக்குப் பல்லுத் தீட்டி, உடை மாற்றி அழைத்துவந்து படுக்க வைத்தாள்.

நிறையக் கதைகள் சொன்னான் அவன். அவள் பேசும் அவசியமே இல்லை. அவன் மழலையை ரசித்தபடி தட்டிக்கொடுத்தாள்.

கடைசியில் அழுததினால் உண்டான கண் எரிவில் அவனோடு சேர்ந்து அவளும் உறங்கியிருந்தாள். எதேற்சையாகத் திடுக்கிட்டு எழும்பிப் பார்க்க, நேரம் இரவு பத்தைத் தாண்டியிருந்தது. அவன் இடம் வேறு வெறுமையாக இருந்தது. வேகமாக எழுந்து அமர்ந்தாள். அவர்கள் சாப்பிடவும் இலையே. விறுவிறு என்று கீழே இறங்கி வந்து பார்த்தாள்.

இன்னும் அவன் அதே சோஃபாவில் இருக்கக் கண்டு அவளுக்குத் திகைப்பாயிற்று. இது என்ன பிடிவாதம்? மெல்லச் சென்று அவன் முன்னே நின்றாள். தலையைப் பின்னால் சாய்த்து, விழிகளை மூடியிருந்தவன் கண்களைத் திறப்பதாக இல்லை.

“சாப்பிடேல்லையா?” தன் தயக்கம் உடைத்து வினவினாள்.

அவன் கோபமும் கொஞ்சம் நிதானத்திற்கு வந்திருந்தது போலும். விழிகளை மாத்திரம் திறந்து அவளைப் பார்த்தான். இரத்தச் சிவப்பாக மாறியிருந்த விழிகளும், தடித்திருந்த விழி மடல்களும், சிவந்து சின்னதாகிவிட்ட முகமும் அதன் பிறகும் நன்றாக அழுத்திருக்கிறாள் என்று சொல்லின. ஒரு நெடிய மூச்சுடன் நிமிர்ந்து அமர்ந்து தன்னருகில் தட்டிக் காட்டினான்.

மறுக்காமல் சென்று அமர்ந்து அவன் முகம் பார்த்தாள் நாவினி.

“சொல்லு, என்ன பிரச்சினை?” என்றான் அவள் புறமாகத் திரும்பி அமர்ந்துகொண்டு.

அவன் காட்டிய நிதானமும் கேட்ட விதமும் இன்றைக்கு இதைப் பேசாமல் விடமாட்டான் என்று சொல்லிற்று. கொஞ்சம் உதறாமல் இல்லை அவளுக்கு. கூடவே பேசிவிட்டால் பரவாயில்லையோ என்றும் நினைத்தாள்.

“இல்ல அது… மொழி அக்கா அளவுக்கு நான் உங்கட மனதில ஆழமா பதியேல்ல எண்டு நினைச்சன்.” என்றதும் திகைப்புடன் அவளைப் பார்த்தான்.

“என்ன விசர்க் கதை கதைக்கிறாய்?” என்று உடனேயே அதட்டினான்.

அவள் அரும்பிவிட்ட கண்ணீருடன் புன்னகைத்தாள். அவளின் அந்த விதமான புன்னகைகள் அவன் உயிரையே உருவி எடுப்பதுபோல் வலிக்க வைப்பவை. அவளையே சில கணங்களுக்குப் பார்த்துவிட்டு, “அது அப்பிடி இல்ல நவி!” என்றான் அவன் ஒரு பெருமூச்சுடன்.

இல்லாமலா அன்று அவன் கடையில் ஒற்றைப் புகைப்படத்தைக் கண்டு அவன் முகம் கசங்கியது? சாரதா வீட்டில் வைத்து அவர்களின் திருமணப் படம் பார்த்து மனத்தால் அழுதானே. அதுதான் திருமணமான புதிதில் நடந்தவை என்று சொன்னாலும் இன்று நடந்தது?

“என்னைத் தாண்டிப் போய் மொழி அக்காவோட சந்தோசமா வாழ முடிஞ்ச உங்களுக்கு, இண்டைக்கு ஒரு வருசமாகியும் அவாவை மறக்கேலாம இருக்குத்தானே?”

“நான் ஏன் அவளை மறக்க?” அவள் கேள்வியில் உண்டான கோபம் கேசிகனைச் சுள்ளென்று கேட்க வைத்தது.

“அதுதானே. நான் கேட்டது பிழைதான். விடுங்க!” என்று அவள் எழுந்துள்ளவும், “ஏய், வாடி இஞ்ச! கதைக்கிற எல்லாத்தையும் கதைச்சுப்போட்டு விடுங்கவா?” என்று இழுத்து அவளைத் திரும்பவும் அமரவைத்தான் அவன்.

அவனின் திடீர் கோபத்தில் அவள் நடுநடுங்கிப்போனாள். இதெல்லாம் அவளுக்குப் பழக்கமில்லாதவை. பயத்துடன் அவனைப் பார்த்தாள்.

“ப்ச்!” தலையைக் கோதிய கேசிகன் அப்படியே இரு கைகளாலும் தலையைத் தாங்கியபடி அமர்ந்துவிட்டான்.

அவள் அவனையே பார்த்திருக்க நிமிர்ந்து, “சரியோ பிழையோ நான் இன்னொருத்தியக் கட்டி வாழ்ந்து, ஒரு மகனோட இருக்கிறவன் எண்டு தெரிஞ்சுதானே என்னைக் கட்டினனி? பிறகும் இப்பிடி எல்லாம் கதைச்சா எப்பிடி நாவினி?” என்றான் ஆற்றாமையுடன்.

“நான் அதச் சொல்லேல்ல. அவாவை இன்னும் உங்களால மறக்கேலாம இருக்கே. அதச் சொல்லுறன். அந்தளவுக்கு என்னால உங்கட மனதில அப்பவும்தான் இப்பவும்தான் இடம் பிடிக்க முடியேல்லதானே?” என்று சோகமாய்ப் புன்னகைத்தாள்.

இது என்ன விசர்க் கதை என்று அவனுக்குக் கோபம்தான் வந்தது. ஆனால், அன்று அன்னையோடு கதைக்கையிலும் தன் கணவன் தன்னை மட்டுமே முதன்மையாக நினைக்கிறவனாக இருக்க வேண்டும் என்று அவள் சொன்னது நினைவில் வரவும் திரும்பவும் தலையைப் பற்றிக்கொண்டு அமர்ந்துவிட்டான் கேசிகன்.

அவள் தன்னையே பார்த்துக்கொண்டு அமர்ந்திருப்பது புரிய, வாயைக் குவித்துக் காற்றை ஊதிவிட்டு எழுந்து நின்றான்.

“உனக்கு இது விளங்குமா எண்டு எனக்குத் தெரியேல்ல. அந்த நேரம் வெளிநாட்டுக்குப் போனதும் என்னை மறந்திட்டாய், தூக்கி எறிஞ்சிட்டாய், கையக் கழுவி விட்டுட்டாய் எண்டு எனக்கு உன்னில கோவம் இருந்தது. காரணத்தைச் சொல்லிப்போட்டுப் பிரிஞ்சிருந்தா கூட வேற. இது நீ என்னை ஏமாத்தின மாதிரி… ‘என்னட்ட நீ சொல்லியிருக்க அபியோட நான் கதைச்சிருப்பனே’ எண்டு அண்டைக்கு அம்மா சொன்னவா. அப்பிடி அம்மாட்ட கூடச் சொல்லேலாத அளவுக்கு அதப் பெரிய அவமானமா நினைச்சிருக்கிறன். அந்த அவமானம், அந்தக் கோபம்தான் ஒரு வைராக்கியத்தத் தந்தது. அதுதான் உன்னை மறந்து நல்லா வாழ்ந்து காட்டோணும் எண்டுற வெறியை எனக்குத் தந்தது. மொழியும்…” அவளும் அவள் காட்டிய அன்பும் அதற்குப் பெரும் துணையாக இருந்தவை என்று சொல்ல வந்துவிட்டு நிறுத்திவிட்டான்.

ஆனால், சொல்லாமலேயே புரிந்துகொண்டவள் அவனைக் கலங்கிய விழிகளுடன் நோக்கினாள்.

“ஆனா மொழி விசயத்தில அப்பிடி எதுவும் இல்ல நவி. அவளை யோசிச்சாலே நாங்க சந்தோசமா வாழ்ந்த வாழ்க்கைதான் கண்ணுக்க வந்து நிக்குது.” என்றதும் என்ன முயன்றும் முடியாமல் கண்ணீர் அவளுக்குக் கொட்டியிருந்தது.

“நீ அழுறாய் எண்டுறதுக்காக என்னால பொய் சொல்லேலாது நவி. தயவு செய்து அழாத!” என்றான் அவள் மீது உண்டான பரிவையும் மீறிய சினத்துடன்.

“இல்ல. நான் அழேல்ல. நீங்க சொல்லுங்க.”

வேக வேகமாகக் கண்களைத் துடைத்தவளைக் கண்டு பாவமாயிற்று. அவள் முன்னால் வந்து குந்தி அமர்ந்து மடியில் கிடந்த அவள் கரங்கள் இரண்டையும் பற்றினான்.

நிறைந்துவிட்ட விழிகளோடு பார்த்தவளிடம், “இண்டைக்கு உன்னோட சந்தோசமா வாழுறதுக்குத்தான் ஆசைப்படுறன்.
இந்த மனமாற்றம் அங்க ஊர்ல இருக்கேக்கையே எனக்கு வந்திட்டுது. அதுக்காக மொழியை வெறுக்கேலுமா சொல்லு?” என்று அவளிடமே கேட்டான்.

“அவள நினக்கேக்க அவள், அவளின்ர குணம், அவளோட வாழ்ந்த வாழ்க்கை, எதிர்காலத்தில நானும் அவளும் எப்பிடி எல்லாம் வாழோணும் எண்டு அவள் சொன்னதுகள், தம்பியப் பற்றி அவள் கண்ட கனவுகள் எண்டு நிறைய நினைவில வரும். அப்பிடித் திட்டம் திட்டமா போட்டு வச்சுப்போட்டு ஒண்டையும் அனுபவிக்காமப் போயிற்றாளே எண்டு கவலைப்படுவேன்தான். அதுக்கு அர்த்தம் இன்னும் அவளையே நினைச்சுக்கொண்டு இருக்கிறன் எண்டுறது இல்ல நவி.” என்றான் என்னைப் புரிந்துகொள் என்கிற மன்றாடலுடன்.

“இண்டைக்கு அம்மா தம்பிட்ட உன்னை அம்மா எண்டு சொல்லச் சொன்னதும் நடந்ததும் அதுதான். இனி உன்னோடதான் என்ர வாழ்க்கை எண்டு நான் அவளை ஊரோடயே விட்டுட்டு வந்த மாதிரி, இன்னும் கொஞ்சக் காலத்தில தம்பியும் அவளை மறந்திடுவான் எண்டு நினைச்சதும் சுருக்கெண்டு வலிச்சது.” என்றவனின் பேச்சில் அவளுக்கும் கண்ணீர் கொட்டிற்று.

“நான் இஞ்ச வந்த பிறகும் நீ விலகி நிக்கிறது எனக்குத் தெரியும். நானும் உன்னை நெருங்காம இருந்ததுக்குக் காரணம் ஒரு விதமான குற்ற உணர்ச்சி. அண்டைக்கு நீ சொன்னியே, மாறோணும் எண்டு நாங்களா நினைக்காம எங்களை இன்னொருத்தரால மாத்தேலாது எண்டு. அது உண்மைதான். நீ பிடிவாதமா என்னை மட்டுமே நினைச்சுக்கொண்டு இருந்த மாதிரி என்னால இருக்கேலாமப் போச்சுத்தான். அதுக்கு ஆயிரம் நியாயமான காரணங்கள் என்னட்ட இருந்தாலும் உனக்கு நான் செய்தது பிழைதான். அதுக்கு என்னை மன்னிப்பியா?”

இலேசாகப் பனித்த விழிகளுடன் அவளை நோக்கி வேண்டியவனைக் கண்டு பொலபொலவென்று கண்ணீர் உகுத்தாள் நாவினி.

இப்படி மன்னிப்புக் கேட்பான் என்று எதிர்பார்க்கவில்லை. அவளுக்கு அது வேண்டுமாயும் இல்லை. ஆத்மார்த்தமான ஒரு வாழ்க்கை. அதுதான் வேண்டும். இடையில் என்னென்னவோ நடந்திருந்தாலும் முதல் காதல் அவள் கை சேர்ந்திருக்கிறது. ஆனாலும் அதை வாழ முடியாமல் ‘அவன் மொழியின் கணவன்’ என்கிற நினைப்பு ஆழமாய் அவள் நெஞ்சில் விழுந்து, அவனை நெருங்க விடாமல் தடுத்துப் பிடித்துக்கொண்டே இருப்பதுதான் அவள் துன்பத்துக்கெல்லாம் காரணமே.

ஆகப் பிரச்சனை அவளிடம்தான். அதில், “ப்ளீஸ், மன்னிப்பெல்லாம் கேக்காதீங்க.” என்றாள் கண்ணீருடன்.

“இல்ல நான் கேக்கோணும். இன்னும் சொல்லப்போனா உன்ர இந்த அன்புக்கு நான் தகுதியானவன் இல்…” என்றவனின் உதட்டின் மீது விரல் வைத்து, தலையை மறுப்பாக அசைத்து, “ப்ளீஸ்!” என்றாள் கெஞ்சலாக.

சில கணங்களுக்கு அவளையே பார்த்தவன் அவளின் அந்தக் கரத்தையே எடுத்துத் தன் கன்னத்துடன் ஒட்டிக்கொண்டு சில கணங்களுக்கு விழிகளை மூடிக்கொண்டான்.

அவன் உள்ளத்தின் கலக்கம் முகத்தில் அப்படியே தெரிந்தது. ஒரு கண்ணில் அடிபட்டால் மறு கண்ணும் கலங்குவதுபோல் அவன் நிலை கண்டு அவள் உள்ளமும் கலங்கிப்போயிற்று.

“உண்மையா சொறி நவி. என்ர பெட்டச்சிக்கு நான் நியாயமா நடக்கவே இல்லை எண்டுறது என்னைக் குத்திக்கொண்டே இருக்கு. என்னை மறந்திடாத எண்டு அவளிட்டச் சொன்ன நான், அவளை விட்டுட்டன். என்ர நவி அப்பிடிச் செய்வாளா எண்டு ஒரேயொருக்கா யோசிச்சிருந்தா கூட இதெல்லாம் நடந்திருக்காது.” என்றான் கண்களும் முகமும் கலங்க.

அவள் முகத்தை இரு கரங்களாலும் தாங்கி, “நடந்த எதையும் மாத்திற சக்தி எனக்கு இல்ல நவி. ஆனா, என்னோட வாழப்போற உன்ர மிச்ச வாழ்க்கையச் சந்தோசமா மாத்தித் தர என்னால ஏலும். எனக்கும் உன்னோட அப்பிடி ஒரு வாழ்க்கை வாழ ஆசையா இருக்கு. மொழி என்ர இறந்தகாலம். இறந்தகாலம் மட்டும்தான் எண்டுறத விளங்கி என்னோட வாழ வருவியா?” என்றான் பனித்திருந்த விழிகளோடு.

கண்ணில் கண்ணீரும் நடுங்கும் இதழ்களில் முறுவலுமாக அவனையே பார்த்தவள் ஆம் என்று தலையை அசைத்தபடி அவன் கழுத்தைக் கட்டிக்கொண்டாள்.
 

vidhya s

Member
இறந்தகாலத்து துன்பத்த மறந்தா தான் நிகழ்காலத்துல சந்தோசமா வாழ முடியும்...ஆனா நவினால முடியலயே😢
 
இ ந்த துன்பம் தேவையா? வேற ஒரு நல்லவனா நவிக்கு வாழ்க்கை துணையாக வந்து இருக்கலாம்.

She deserves better and the best.......
 
Top Bottom