• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

மன்னிப்பாயா காதலே - 23

Vishakini

Moderator
Staff member
அத்தியாயம் 23


அன்றைய நாள் அப்படி ஒரு பேச்சு இருவருக்குள்ளும் நிகழும் என்று இருவருமே எதிர்பார்க்கவில்லை. ஆனால், அது நிகழ்ந்து முடிந்தபிறகு மனத்தில் அப்படி ஒரு ஆசுவாசம். அத்தனை நாள்களும் மனத்தில் சுமந்திருந்த பாரத்தை எல்லாம் கொட்டித் தீர்த்திருந்தார்கள். அதனாலேயே இறுக்கங்கள் தளர்ந்து இலேசாகியிருந்தனர்.

அதுவும் அவன் சொன்ன ‘என்ர பெட்டச்சி’ அவளைப் பழைய நாவினியாகவே மாற்றிவிட முயன்றுகொண்டிருந்தது. அந்த ஒற்றைச் சொல்லுக்கு அத்தனை பலமா என்று உள்ளூர வியந்துகொண்டிருந்தாள்.

அடுத்தநாள் காலை எழுந்தபோது அவன் இல்லை. அங்கே இலங்கையில் கடை திறக்கும் நேரத்திற்கு இங்கே இவன் கைப்பேசியில் கமராவைப் போட்டுக்கொண்டு மடிக்கணணியோடு அமர்ந்துவிடுவான் என்று தெரியும்.

முகத்தை மட்டும் கழுவிக்கொண்டு கீழே வந்தபோது அவள் எண்ணியதுபோல்தான் அவனும் உணவு மேசையில் அமர்ந்திருந்தான். இவள் முகத்தைக் கண்டு பயந்துபோனான்.

அந்தளவில் கண் மடல்கள் எல்லாம் தடித்து என்னவோ போலிருந்தது அவள் முகம். “இனியும் சும்மா சும்மா அழுது பார், உனக்கு இருக்கு!” என்றான் நொடியில் மூண்டுவிட்ட சினத்துடன்.

ஒருகணம் மருண்டாலும் காரணம் புரிந்து புன்னகைத்தாள் நாவினி.

“இப்ப வந்து சிரி!” என்றபடி எழுந்துவந்து அவள் நெற்றியைத் தொட்டுப் பார்த்தான். என்றுமில்லாத அந்தப் புது உரிமையான செயல் அவள் உள்ளத்தைக் கவர்ந்த அதேவேளை அவனை நிமிர்ந்து பார்க்க விடாமலும் செய்தது. இனிமையான உணர்வொன்று அவள் இதயத்தை நிறைத்தது.

“இல்ல காய்ச்சல் இல்ல.” என்றுவிட்டு சமையலறைக்கு நழுவினாள். நிறைய நாள்களுக்குப் பிறகு உள்ளார்ந்த மகிழ்வில் அவள் அகமும் முகமும் மலர்ந்திருந்தன. இருவருக்கும் தேநீர் போட்டு எடுத்துக்கொண்டு வந்து அவனிடம் ஒரு கோப்பையைக் கொடுத்துவிட்டு அவன் எதிரில் அமர்ந்தாள்.

இன்னுமே அவள் பைஜாமா செட்டிலேயே இருப்பதையும், இப்படி நிதானமாக அமர்ந்திருந்து தேநீர் பருகுவதையும் கண்டு, “இண்டைக்கு லீவா?” என்றான் கேசிகன்.

“இந்த முகத்தோட எப்பிடிப் போக? இண்டைக்கு முழுக்க கோல்ஸ்தான். வீட்டில இருந்தே சமாளிக்கலாம்.”

காலை உணவையும் சேர்ந்தே முடித்தனர். நேற்றைய இரவு நடந்ததைக் குறித்து இருவரும் பேசிக்கொள்ளவில்லை. ஆனால், அவர்களுக்கிடையிலான பிணைப்பும் நெருக்கமும் பலப்பட்டிருப்பது போன்ற உணர்வு இருவரிடமும். இருவர் பார்வையும் மற்றவர் மேல் அடிக்கடி படிந்து மீண்டது.

அதுவும் பாவித்த பாத்திரங்களை அவள் ஒதுக்கிக்கொண்டு நிற்கையில் வெகு இயல்பாக அவளை அணைத்து, பட்டுக் கன்னத்தில் அவன் பதித்துவிட்டுப் போன முத்தத்திலிருந்து மீள முடியாமல் உறைந்து நின்றாள் நாவினி.

அவன் உதட்டில் மெல்லிய முறுவல். என்ன என்றான் புருவங்களை உயர்த்தி. ஒன்றுமில்லை என்றுவிட்டு தன் அலுவலக அறைக்குள் அவள் ஓடிவிட அவன் முறுவல் விரிந்துபோயிற்று.

நேற்றைய இரவு அவன் தழைகளையும் அறுத்து எறிந்திருந்தன. இத்தனை நாள்களும் மனம் அவள் புறமாகச் சரிந்துவிட்ட போதிலும் நெருங்கத் தயங்கினான். இன்று அந்தத் தயக்கம் இல்லை.

அவள் அங்கே யாரோ ஒரு வாடிக்கையாளருடன் பேச ஆரம்பித்துவிட்டது கேட்க மகனைப் பார்க்க மேலே ஏறினான். அந்தப் பெரிய மனிதன் இன்னும் நல்ல உறக்கத்தில் இருந்தான். தட்டி எழுப்பினான்.

எழுந்த மகன் தகப்பனைக் கட்டிக்கொண்டு, “நவி அம்மா கார்ல போய்ட்டாவா அப்பா?” என்று கேட்டான்.

நேற்று முழுவதும் தடுமாறினாலும் இன்று மகன் அம்மாவில் தெளிவாகிவிட்டது புரிந்தது. சின்ன புன்னகையோடு அவன் நெற்றியில் முத்தமிட்டு, “இண்டைக்கு உங்கட அம்மா வேலைக்குப் போகேல்ல. அவாட ஒபீஸ் ரூம்ல இருந்து ஃபோன் கதைக்கிறா. அந்த நேரம் நாங்க சத்தம் போடக் கூடாதுதானே?” என்று கேட்டபடி முகம் கழுவ அழைத்துச் சென்றான்.

“அப்ப நான் ரகசியமா கதைக்கோணுமா?” என்று இரகசியமாக வினவினான் சின்னவன்.

“ஓம்.” தானும் அதே குரலில் சொன்னான். சின்னவனைப் பல்லுத் தீட்ட வைத்து, முகம் கழுவிக் கீழே அழைத்துவந்தான்.

எப்போதும்போல் சுவாமிப் படங்கள் இருக்குமிடம் சென்று கடவுளை வணங்கி, நெற்றி முழுக்கப் பட்டை அடித்து, இவனுக்காகவே நாவினி தினமும் பறித்து வைக்கும் ஏதோ ஒரு பூவைக் காதில் செருகிக்கொண்டான்.

காலை உணவும் முடிந்ததும் சின்னவனுக்காகவே வாங்கிவைத்த வர்ணம் தீட்டும் புத்தகத்தை எடுத்து அப்பாவும் மகனுமாகத் தீட்டினார்கள். அப்படியே தனக்குத் தெரிந்த சின்ன சின்ன டொச் சொற்களைச் சொல்லிக்கொடுத்தான் கேசிகன்.

இடையில் ஒரு முறை வந்த நாவினியும் ஜெர்மன் மொழியில் இருக்கும் குட்டிக் கதையை வாசித்துப் பெரிய மனிதனுக்கு விளக்கம் சொன்னாள். கவனமெடுத்துக் கேசிகன் புறம் திரும்பாமல் இருந்தாள். அதுவே கேசிகன் முகத்தில் முறுவலைத் தோற்றுவித்தது.

அவள் திரும்பவும் அலுவலக அறைக்குள் சென்றதும் அப்பாவும் மகனுமாக நடந்துவிட்டு வந்தார்கள். அப்போது கேசிகனுக்கு அழைத்த உதயன், ‘மோல்’ ஒன்றுக்குப் போவதற்கு புறப்பட்டு வரச் சொன்னான்.

நடந்ததில் வியர்த்துப்போயிருந்ததில் மகனை மேலே அழைத்துவந்து குளிக்க வார்த்தான் கேசிகன். கணப்பை எரியவிட்டிருந்தாலும் வெந்நீரில் நின்றுவிட்டு வெளியே வந்த சஜிதன் குளிரில் கிடுகிடுவென்று நடுங்கினான்.

“அச்சோ, எங்கட செல்லத்துக்குக் குளிருதோ?” என்று துவாயினால் அவனைச் சுற்றி மூடித் தூக்கிக்கொண்டு வந்து, அவர்களின் அறையின் கதவைத் திறந்த கேசிகன், அங்கே நாவினி உடை மாற்றிக்கொண்டு நிற்பாள் என்று எதிர்பார்க்கவிலை.

ஒரு கணம் திகைத்தாலும், “சொறி நவி. நீ நிக்கிறது தெரியாது.” என்றுகொண்டு வேகமாகத் திரும்பிப் போகப் போனவன் சட்டென்று நின்று அதிர்ந்து திரும்பினான்.

நாவினியும் அப்படி அவன் வருவான் என்று எதிர்பார்க்கவில்லை. அடுத்ததாக அவளுக்கு ஒரு காணொளி அழைப்பு இருந்தது. அதற்கு பைஜாமா செட்டுடன் நிற்க முடியாது என்றுதான் உடை மாற்ற மேலே வந்தாள்.

கதவைச் சாற்றியிருந்தாளே ஒழியப் பூட்டவில்லை. எப்போதுமே பூட்டுவதில்லை. இப்படிச் சாற்றியிருந்தாலே உள்ளே வரமாட்டான். இல்லையா, இலேசாகத் தட்டி உள்ளே வரலாமா என்று கேட்டுவிட்டு வருவான்.

அவனும் கீழே அலுவலக அறையில் இருந்தவள் சாற்றப்பட்டிருந்த அறைக்குள் இருப்பாள் என்று எதிர்பார்க்கவில்லை. அதனால்தான் கதவு சாற்றப்பட்டிருந்தபோதும் தட்டாமல் திறந்தான்.

அப்படி அவன் திடீரென்று கதவைத் திறந்து வந்ததே பெரிய அதிர்ச்சி என்றால், போனவன் மறுபடியும் திரும்பி வந்தால்?

மேலே அணிய எடுத்த உடையைக் கொண்டே தன்னை மறைத்துக்கொண்டு கேள்வியும் பதற்றமுமாக அவனைப் பார்த்தாள் நாவினி.

தூக்கி வைத்திருந்த மகன் இவள் புறம் திரும்பிவிடாதபடிக்கு அவன் தலையைப் பிடித்துத் தடுத்துக்கொண்டு, “என்ன இது?” என்றான் அவள் தோள்பட்டையை காட்டி.

ஒன்றும் புரியாமல் தன் தோளைத் தானே பார்த்தவளுக்கு அப்போதுதான் காரணம் புரிந்தது. “அதா? அது அந்த அக்சிடெண்ட்ல காயப்பட்ட அடையாளம்.” என்றாள் ஆசுவாசமாகியபடி.

பல்லாங்குழியின் குழி ஒன்று போலவே அந்த இடத்தில் ஒரு பகுதியைக் காணவில்லை.

“காயமா? நவி அம்மாக்கா? ரெட்டம் வந்ததா?” என்று கேட்டபடி வேகமாகத் திரும்ப முயன்றான் சஜிதன். அதற்கு விடாமல் அவனைத் தடுத்துப் பிடித்தபடியே அவளைச் சில கணங்களுக்கு இமைக்காது பார்த்துவிட்டு அங்கிருந்து வெளியேறினான் கேசிகன்.

நாவினிக்கு ஒன்றும் புரியவில்லை. நின்று நிதானமாக யோசிக்க அவகாசமும் இல்லை. சின்னவன் வேறு குளித்ததோடு இருக்கிறானே. வேகமாக உடையை மாற்றிக்கொண்டு வெளியே வந்து, “நீங்க போங்கோ.” என்றுவிட்டு வேகமாகப் படி இறங்கிச் சென்று அலுவலக அறைக்குள் புகுந்தாள். அதன் பிறகு அதைப் பற்றி யோசிக்க அவகாசம் இருக்கவில்லை.

மகன் தலையை நன்றாகத் துடைத்துவிட்டு, உடை மாற்றி என்று கைகள் அதுபாட்டுக்கு வேலை செய்தாலும் கேசிகனின் உள்ளம் இன்னும் அதிர்ந்த நிலையிலேயே இருந்தது. வடுவே அத்தனை பெரிதாக இருந்தது. அப்படியானால் காயம்? அதை எப்படித் தாங்கினாள்?

“என்னப்பா, நவி அம்மாக்கு அடி பட்டுட்டுதா? காயமா? ரெட்டம் வந்ததா?” போன்ற மகனின் கேள்விகளைக் கூடச் சமாளிக்க முடியவில்லை.

பெரிய கோட்டின் முன்னிருந்த சின்ன கோடு கவனிக்கப்படாமல் போவதுபோல், விபத்து ஒன்றில் மொத்தக் குடும்பத்தையும் பறிகொடுத்துவிட்டு அனாதையாக நிற்கிறாள் என்கிற செய்தியின் முன், அவளும் அந்த விபத்தில் சிக்கிப் பெரியளவில் காயப்பட்டவள் என்பது கவனிக்கப்படாமல், கருத்திற்கு வராமல் போயிற்று.

மேலே யோசிக்கக் கூட முடியாமல் அவன் அமர்ந்திருக்க உதயன் அழைத்துத் தயாரா என்று கேட்டான். வரவில்லை என்று சொல்லிவிட்டு வைத்தவனால் வேறு எந்த வேலையும் பார்க்க முடியவில்லை. மகனின் தேவைகளை மட்டும் கவனித்தான்.

பகல் உணவுக்கு வந்தவளின் குழப்பம் நிறைந்த பார்வைக்கும் பதில் சொல்லவில்லை அவன். அந்த வடுவைப் பார்த்ததில் இருந்துதான் இப்படி இருக்கிறான் என்கிற வரை புரிந்தது அவளுக்கு. திரும்பவும் அலுவலக அறைக்குள் நுழைந்தவள் நான்கரை போல்தான் வெளியே வந்தாள்.

அப்போதும் அவன் முகம் தெளியாமல் இருக்கவும், “என்ன?” என்றாள் ஒன்றும் விளங்காமல்.
 

Vishakini

Moderator
Staff member
ஒன்றுமில்லை என்று தலையை அசைத்தவனின் பார்வை மட்டும் அவளிலேயே இருந்தது. இதற்குள், “நவி அம்மா, எங்க உங்கட காயம்?” என்றுகொண்டு ஓடி வந்தான் சின்னவன்.

எதையெதையோ சொல்லி அவனைச் சமாளித்தாள். கேசிகன் அன்று முழுக்க ஒருமாதிரியாகவேதான் இருந்தான். அன்று மாலை அழைத்த பிரேமாவிடமும் ஒன்றுமில்லை என்றுவிட்டான்.

இரவுணவை மூவரும் சேர்ந்தே சாப்பிட்டனர். தலைக்கு முழுகியதில் சின்னவன் நேரத்திற்கே உறக்கத்திற்குச் சிணுங்கினான். நாள் முழுக்கப் பேசிக்கொண்டே இருந்ததில் அவளுக்கும் களைப்பு. சஜிதனைத் தூக்கிக்கொண்டு, “நீங்க வரேல்லையா?” என்று அழைத்தாள்.

“நீ போ, வாறன்.” என்றான் அவன்.

மயூரன் அழைத்துக் கடை விபரங்கள் சொன்னான். முழுக் கவனம் இல்லாமலேயே கேட்டுவிட்டு வைத்தான். நேரம் இரவு பத்தைத் தொட்டிருந்தது. பெருமூச்சு ஒன்றுடன் எழுந்து மேலே சென்றான்.

அங்கே சின்னவனோடு சேர்ந்து நாவினியும் நல்ல உறக்கத்தில் இருந்தாள். எப்போதும்போல் தன் பக்கம் சென்று சரியாமல் நின்று அவளைப் பார்த்தான்.

அந்த வடு திரும்பவும் கண் முன்னே வந்து நின்றது. இப்படி எத்தனையைத் தாங்கியிருப்பாள்? மகனை ஒருமுறை பார்த்துவிட்டு வந்து அவளருகில் அமர்ந்தான். அப்படியே சரிந்து அவள் போர்வைக்குள் வந்து, அவளின் மேற்சட்டையின் பட்டன்களை ஒவ்வொன்றாகக் கழற்ற ஆரம்பித்தான்.

“ஐயோ! என்ன செய்றீங்க?” நல்ல உறக்கத்தில் இருந்தவள் திடுக்கிட்டு விழித்து அவனிடமிருந்து விலக முயன்றாள். அவன் விடவில்லை. “சத்தம் போடாத!” என்று மெல்லிய குரலில் அதட்டினான்.

அப்படி எப்படிச் சத்தம் போடாமல் இருப்பது? “ப்ளீஸ்!” என்று அவன் கரத்தைத் தடுக்க முயன்றாள் நாவினி.

“ஏன் எனக்கு உரிமை இல்லையா?” காதில் வந்து மோதிய அவன் மூச்சுக் காற்றும் சேர்ந்து அவளிடம் கோபமாய்ச் சீறிற்று.

அவள் அசைய மறந்து அவனையே பார்த்தாள். அவன் மிகுதி பட்டன்களையும் கழற்ற, வேகமாக அவனோடு ஒட்டிக்கொண்டு தன்னை மறைத்தாள் நாவினி. சின்னவனுக்காகப் போடப்பட்டிருந்த விடிவிளக்கு அவளுக்குக் கூச்சத்தை உண்டாக்கிற்று.

ஆனால், மேலாடையைக் களைந்தவன் காதல் புரியவில்லை. மெல்ல அவள் தேகம் வருடி எங்கெல்லாம் காயத்தின் அடையாளங்கள் கிடக்கின்றன என்று தேடினான். அப்போதுதான் அவன் செயலுக்கான காரணம் புரிந்தது நாவினிக்கு. தொண்டை ஏறி இறங்க விழிகளில் நீர் சேர்ந்தது.

கிட்டத்தட்ட ஆறு மாதங்களுக்கும் மேலே இந்த நரக வேதனையை அனுபவித்திருக்கிறாள். அந்த நாள்களில் எல்லாம் பச்சைப் புண்ணாக உள்ளம் வலிப்பது போதாது என்று உயிர் போகும் வலி உடலின் பல பாகங்களிலும். சில நேரங்களில் உள்ளத்தின் காயத்துக்கு உடலின் காயமும் அது தரும் வலியும் தேவையாய் இருக்கும்.

சில நேரங்களில் இத்தனை வலிகளை அனுபவித்துக்கொண்டு உயிர் வாழத்தான் வேண்டுமா என்றிருக்கும். அந்த நாள்களில் அவன் இன்னொரு பெண்ணின் கணவன் என்று தெரிந்துமே வெக்கமே இல்லாமல் அவனுக்காக ஏங்கி ஏங்கி அழுத்திருக்கிறாள்.

இப்படி எத்தனை? பயம், பதற்றம், பாதுகாப்பின்மை, கண்ணை மூடினால் படார் என்று வந்து மோதும் அந்தப் பார ஊர்தி, அதன் பிறகு கேட்ட மரண ஓலம் என்று அந்த நாள்களில் புத்தி சுவாதீனம் இல்லாதவளைப் போல்தான் இருந்தாள். தன்னைத் தானே எதுவும் செய்துவிடுவாளோ என்று பயந்து மேனகா இவளுடனேயேதான் இருந்தார்.

அத்தனையையும் இந்த நிமிடத்தில் திரும்பவும் அனுபவிப்பது போலிருக்கவும் தேம்பி தேம்பி அழ ஆரம்பித்தாள் நாவினி. அவளை மார்போடு அணைத்துக்கொண்டு அவனும் சத்தமில்லாமல் கண்ணீர் உகுத்தான்.
 
Top Bottom