சமையலறை நோக்கிச் சென்றவள் நடை கணம் நிதானித்தது. மனைவியின் புகைப்படத்தில் பார்வை ஊன்றிக் கிடக்க பூபாலன் நின்ற நிலை, அருகில் சென்று ஆறுதலாக இரு வார்த்தைகள் கதைக்க வைப்பதாக இருந்தது.
“ம்க்கும்...அவருக்கு ஆறுதல் சொல்லுறது என்ன, இங்க இருக்கும் மட்டும் ஆளோட ஒரு வார்த்த கதைக்கிறேல்ல!” முணுமுணுத்தபடி விருட்டென்று கடந்து சென்று விட்டாள்.
‘உமக்கு உம் அம்மாவில கோபம் வந்தாலோ, அவர் கதைச்ச கதை பிடிக்காம இருந்தாலோ அதை அவரிட்ட எல்லா காட்ட வேணும்?! உமக்கு ஒரு பிரச்சினை, சிக்கல் எண்டோன்ன ஓடிவந்து நிண்ட மனிசரிட்டயா அதக் காட்டுறது? என்னதான் நல்ல சினேகிதனா இருந்தாலுமே பிரணவ்வோட இவர் அப்பிடிக் கதைக்கப் போய்த்தான் கோவிச்சுக்கொண்டு போனவர். அதோட என்னமாதிரி பிள்ளைகளப் பறிச்சார்?’
மனதுள் பூபாலன் மீது அத்தனை எரிச்சலும் கோபமும் வந்திருந்தது. அவனோடு ஒரு வார்த்தை கதைத்தாலுமே அதை அப்படியே வெளியில் கொட்டி விடுவாள் .
“இனி அந்தாளிட மூஞ்சிய கூடப் பாக்கிறேல்ல. நான் இங்க இருக்கிறது லாதிக்காகவும் குட்டியனுக்காகவும். அதுவும் எத்தின நாட்களுக்கு? வந்த வேலை முடியவிட்டுப் போகப்போறன், அதுவரைக்கும்.” புறுபுறுப்போடு பால் கரைத்துக்கொண்டு நின்றவள் பின்னால் வந்து நின்றார், விமலா.
“கயல் நான் கரைச்சுத் தரவோ?”
“இல்ல அக்கா, கரைச்சு முடியுது.”
“அவருக்குப் பாலக் குடுத்திட்டுச் சாப்பிட வாங்க. பிரணவ் சாப்பிடாமல் போய்ட்டார்.”
சிலகணங்கள் பேச்சில்லாது நின்றவள் கரம் பால் போத்தலை மெல்லக் குலுக்கியது.
“நீங்க சாப்பிடுங்க, எனக்கு இப்பப் பசிக்கேல்ல.”
“இல்ல... லாதியும் சாப்பிடேல்ல.”
“ம்ம்ம்...அனுப்பி விடுறன்.”
“கயல்” மீண்டும் அழைத்து நிறுத்தியவருக்குத் தயக்கமாக இருந்தாலும் தொடர்ந்தார்.
“சித்தி கதைச்சுக்கொண்டிருக்க ‘ஐபேட்’ட தட்டிவிட்டுட்டான். அவா கட்டாயம் அங்க யோசிச்சு அழுதுக்கொண்டு இருப்பா!” மெல்லச் சொன்னார்.
பால் போத்தலில் வெளிப்புறத்தில் ஒட்டி நின்ற நீர்த்துளிகளை துடைத்துவிட்டுத் திரும்பியவள் விமலாவைக் கேள்வியாகப் பார்த்தாள்.
“அதுக்கு நான் என்ன செய்யிறது? காயு இல்லாமல் போய் ஒரு மாதம்...ஒரே ஒரு மாதம் தான் ஆகியிருக்கு; அதுக்க இப்படியொரு கதை கதைக்க வெளிக் கிட்ட ஆக்கள் வாற எல்லாத்துக்கும் முகம் குடுக்கத்தான் வேணும்.” சொன்னவள் குரலில் அத்தனை கோபம்.
“கதைக்க வேண்டிய தேவை இருக்கே கயல். ஒரு நிமிசம் கோவத்த அங்கால தள்ளி வச்சிப்போட்டு யோசியும். உமக்கு வேலையும் இருக்கு. அதோட இவே ரெண்டு பேருரையும் எத்தனைக்குப் பாப்பீர்? அல்லது நான் தான் எத்தனைக்கு எண்டு இங்க நிக்கேலும்? என்ர ஒரே மகள் வயித்துப்பிள்ளத்தாச்சிய விட்டுப் போட்டு வந்து நிக்கிறன். இன்னும் மிஞ்சி மிஞ்சிப் போனா ஒரு மூண்டு மாதங்கள் நிப்பனா? அதுக்குப் பிறகு பூபாலன் என்ன செய்வான்? பிள்ளைகள ஒரு நாளைக்குப் பாப்பானா? அதுவும் குழந்தையை எப்பிடி அவனால வளர்க்க ஏலும்.”
நீதான் பதில் சொல்ல வேண்டும் சொல் பார்க்கலாம் என்கின்ற மாதிரி படபடவென்று கேட்டார்.
“இங்க பாருங்க அக்கா, இதப் பத்திக் கேட்கிற, கதைக்கிற மனநிலையில நான் இப்ப இல்ல. அதோட இதையெல்லாம் என்னோட கதைக்கிறத விட உங்கட தம்பியோட கதையுங்க. எப்ப கதைக்கிறது எண்ட முடிவு உங்கட கையில.” விருட்டென்று நடந்தவள் விமலாவின் முகத்தைச் சுருங்கச் செய்து விட்டாள்.
“எப்படா சாவினம் அடுத்தது செய்ய எண்டு இருக்கிறது போல இருக்கு இவேட கதை!” புறுபுறுப்போடு அறைக்குள் நுழைந்தவள் முறைப்போடு நிதானித்தாள்.
அங்கே...
பூபாலன் மடியில் குழந்தையிருக்க அருகில் அணைந்து அமர்ந்திருந்தாள், லாதி. காயுவின் மறைவின் பின் பிள்ளைகளிருவரையும் இன்றுதான் அருகில் சேர்த்திருக்கிறான். அவன் மறுபுறம் நெருங்கியபடி, முகம் நிறைந்த சந்தோசத்தோடு காயு அமர்ந்திருக்கும் பிரேமை கயலுக்கு. விழிகள் நிறைந்து போயின.
‘இந்தக் குடும்பத்தில இப்படியொரு அசம்பாவிதம் நடந்தேயிருக்க வேணாம்.’ மனம் கலங்கி என்ன செய்வது? நடந்திட்டுதே!
உள்ளே வந்தவள் அசையாது நின்றுவிட, “தாரும் நான் குடுக்கிறன்.” பாலை வாங்க கை நீட்டினான். அவன் விழிகளில் தவிப்பு. கயல்விழியோ, முறைப்போடு அருகிலிருந்த சின்ன மேசையில் பால் போத்தலை வைத்த வேகத்தில் தன் கைபேசியை எடுத்துக்கொண்டு நகர்ந்தாள்.
“சொறி கயல்! என்னதான் எண்டாலும் நான் அப்பிடியெல்லாம் கதைச்சு இருக்கக் கூடாது. சொறி!”
காதில் வாங்காதது போல் நகர்ந்தவள் நோக்கி கைகால்களை அடித்து உதைத்தான், குழந்தை. தகப்பன் பிடியிலிருந்து வழுவி அப்படியே கயலில் தொற்றிக்கொள்ளும் முனைப்பில் நெளிந்து வளைந்து சத்தம் போட்டான்.
“குஞ்சன் பால் குடிப்பம் என்ன?” குழந்தையை அணைத்துப் பிடிக்க முயன்றபடி, “கயல்விழி!” இவளையும் நிறுத்த முனைந்தான், பூபாலன்.
அவளோ, “லாதி நேரம் போயிட்டு, போய்ச் சாப்பிடுங்க!” கேளாத பாவனையில் நடந்தாள்.
“நான்...பிரணவ்வோட கதைக்கிறன். உங்கட ரெஜிஸ்ட்ரேசன் குறிச்ச நாளில செய்திரலாம் கயல்.” என்றவனை, இடைவெட்டியது கயல்விழியின் குரல்.
“இங்க பாருங்க, நீங்க இனிமேல் என்னோட கதைக்க வேணாம் சரியோ. நான் இங்க இருக்கிறது பிள்ளைகளுக்காக. அதோட என் சம்பந்தமான விசயங்கள எனக்குப் பார்க்கத் தெரியும்.” முறைப்போடு சொன்னவள், “இதென்ன அவனப் போட்டுச் செய்யிறீங்க? இப்பிடிக் குடுத்தா பிள்ளைக்குப் புரை ஏறிரும். அவனத் தாங்கோ!” ஓரெட்டில் வந்து குழந்தையைத் தூக்கிக் கொண்டவள், பால் போத்தலுக்காகக் கை நீட்டினாள்.
கடைவாய் இரண்டாலும் பால் வழிய அவள் முகத்தில் தன் முகத்தைத் தேய்த்தான் குழந்தை.
“அப்பா தாங்க. ஸ்வீட்டி குடுத்தாத்தான் குட்டியர் குடிப்பார்.”
அவன் கரத்திலிருந்த பால் போத்தலை வாங்கி அவள் கையில் கொடுத்த லாதிக்குத் தந்தை மீண்டும் கயல்விழியை வெளியே போ என்று சொல்லிவிடுவாரோ என்ற பயம். அதுவே அவளோடு அணைந்து நிற்கவும் வைத்திருந்தது.
மூவரையும் பார்த்தபடி எழுந்தான், பூபாலன். கடந்த கணம் வரை தம் குடும்பத்தின் இக்கட்டான நேரத்தில் உற்ற உறவாக நின்று தோள் கொடுத்தவளாகவே கயல்விழி பற்றி எண்ணியிருந்தான். அவள் வேறு என்ற எண்ணம் உதித்ததேயில்லை. ஆனால், இப்போது அப்படி எண்ணியிருப்பது பிழை என்ற எண்ணம் அவனுள் விழுந்திட்டு. முக்கியமாக தன் பிள்ளைகள் அவளில்லாது கொஞ்ச நேரம் கூட இருக்க மாட்டார்கள் என்றால்...
அவன் முகத்தில் தீவிரம். அப்படியே கயல்விழியை நோக்கினான்.
“இவே எனக்கும் பிள்ளைகள்தான் கயல்விழி. என்னாலயும் என்ர பிள்ளைகளப் பாத்துக்கொள்ள ஏலும்.”
நிதானமாக அவளைப் பார்த்தபடி ஆரம்பிக்கவே, “நோ அப்பா!” பெரிதாகவே அழத் தொடங்கியிருந்தாள், லாதி.