• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

மன்னிப்பாயா காதலே - 5

Vishakini

Moderator
Staff member
அத்தியாயம் 5


கேசிகனோடான தொடர்பு முற்றிலுமாக அறுந்து மூன்று வருடங்களாகியிருந்தன. எப்படி அவன் பற்றிய ஒரு செய்தி கூடத் தெரியாமல் வாழ்ந்தால் என்றே அவளுக்குத் தெரியாது. சிறகொடிந்த பறவையைப் போல்தான் அவள் நாள்கள் நகர்ந்திருந்தன.

உள்ளார்ந்து மகிழ்ந்து வாழ்ந்தாளா என்றால் இல்லை. காலங்கள் ஓடின. அந்த ஓடிய காலத்தில் ஜெர்மன் நாட்டு மொழியைப் படிப்பதும், பாடசாலையை முடித்துக் கல்லூரியில் சேர்வதும் அவளின் கடமைகளாக இருந்தன. அவற்றைத் திறம்படவே செய்தாள்.

இப்படி இருக்கையில்தான் நாகரத்தினத்தின் அன்னை காலமானார். ஊருக்கு உடனேயே புறப்பட்ட மனிதர், வீட்டுப் பிரச்சனையையும் என்னவென்று பார்க்க எண்ணினார். அதற்கு நாவினியையும் அழைத்துச் செல்ல வேண்டும்.

அதுவரையில் நாவினியும் கேசிகனும் கடிதத் தொடர்பில் இருந்து, பிறகு நாளாக நாளாக அது விடுபட்டுப் போயிற்று என்றுதான் நாகரத்தினத்துக்குத் தெரியும். மேலதிகமாக அவரிடம் எதையும் அபிராமி சொல்லப்போகவில்லை.

அபிராமிக்கு முதலில் அவளை அங்கே அனுப்புவதில் உடன்பாடில்லை. அதே நேரத்தில் ஊருக்குப் போகிறபோது வீட்டு விசயத்தையும் பார்த்துக்கொண்டு வர நினைப்பது மிக நல்ல யோசனையாகவே பட்டது.

அதைவிட இனி அவள் அடுத்தடுத்துத் தன் வாழ்வின் படிநிலைகளை நோக்கி நகரவேண்டியவள். அதற்கு இந்தப் பயணம் நிச்சயம் உதவும் என்று நம்பிச் சம்மதித்தார்.

இதை அறிந்த நாவினியின் மகிழ்ச்சியை வார்த்தைகளில் வடிக்க முடியாது. ஒரு வார்த்தை அவன் பற்றிய செய்தி கிட்டாதா என்று தவித்துக்கொண்டிருந்தவள். இன்னும் சில நாள்களில் அவனையே பார்க்கப்போகிறாள் என்றால் எப்படி இருக்கும்?

மெதுவாக நழுவித் தன் அறைக்குள் நுழைந்துகொண்டவள் சந்தோசத்தில் சத்தமில்லாமல் துள்ளிக் குதித்தாள். அவனைப் பார்க்கப் போகிறாள். அவளுடைய அவனை, அவளின் நாயகனை, அவளின் கேசியைப் பார்க்கப்போகிறாள். சிரிப்பு, சந்தோசம், அழுகை என்று எல்லா வகையான உணர்வுகளும் கலந்துகட்டி வந்தன.

அன்று பதினேழு வயதில் புரிந்தும் புரியா உணர்வுகளைச் சுமந்து அவனையே சுற்றிய மனம், இன்று அவனைக் காதலின் நாயகனாக வரித்து, கண்ட கனவுகளை எல்லாம் ஒன்றைக் கூட மிச்சம் விடாமல் நெஞ்சினுள் சேமித்து வைத்திருக்கிறதே. அதையெல்லாம் அவனிடம் கொட்டப்போகிறாள்.

எப்படி இருப்பான்? அவளுக்கே இருபத்தி மூன்று என்கையில் அவன் இருபத்தி எட்டினைத் தொட்டவன். முழுமையான ஆண். அப்போதே நல்ல உயரம். இப்போது இன்னும் நன்றாக வளர்ந்து, அதற்கு ஏற்ற உடற்கட்டோடு, மீசை தாடி என்று இருப்பானாக இருக்கும். கற்பனையில் நினைக்கையிலேயே அவள் நெஞ்சினுள் என்னென்னவோ உணர்வுகள் பொங்கின.

இந்த உணர்வுகளின் தளம்பல் கொஞ்சமும் குறையாமல் இலங்கை சென்று இறங்கினாள். நேராக அப்பம்மா வீட்டுக்குத்தான் போனார்கள். நாகரத்தினம் ஒற்றை மகன் என்பதில் அவர்தான் கொள்ளி வைத்தார். அதில் எட்டாம் நாள் காரியம் ஆகாமல் அவரை வெளியில் செல்ல விடவில்லை.

நாவினியால் அப்படி வீட்டுக்குள்ளேயே இருக்க முடியவில்லை. ஒரே ஊரில் இருக்கிறாள். பதினைந்து நிமிட சைக்கிள் பயணத்தில் அவனைப் பார்த்துவிடலாம் என்கையில் எப்படி இருப்பது?

மூன்று நாள்கள் முடிந்ததும், “அப்பா, சும்மா வெளில போயிட்டு வரட்டா? என்ர ஃபிரெண்ட்ஸ பாக்கோணும் மாதிரி இருக்கு.” என்று தந்தையிடம் கேட்டு அனுமதி பெற்றுக்கொண்டு, பக்கத்து வீட்டு அக்காவின் சைக்கிளில் புறப்பட்டுவிட்டாள்.

அவர்களின் வீடு இருக்கும் பகுதிக்குத் தனியாகப் போக வேண்டாம் என்று நாகரத்தினம் சொல்லியிருந்தார். பரமேஸ்வரனோடு முறுகல் நிலையில் இருக்கிறார்கள். அப்படி இருக்கையில் பெண் பிள்ளை அவளைத் தனியாக அனுப்ப அவருக்கு விருப்பமில்லை. ஆனால், அவர்கள் வீட்டுத் தெருவுக்குப் போக வேண்டும் என்கிற ஆசையிலேயே வந்தவள் என்ன செய்வாள்?

அவர்களின் தெரு நேராக வந்தால் ஒரு நாற்சந்தி. அந்த நாற்சந்தியிலிருந்து எங்கும் திரும்பாமல் திரும்பவும் நேராக வந்தால் பிரேமாவின் சீதனக்காணியைப் பார்க்கலாம். இத்தனை வருட இடைவெளியில் அங்கு வீட்டைக் கட்டியிருப்பானா, தன் அன்னையோடு குடிவந்திருப்பானா என்று அறியும் ஆவல் உந்தியதில் அவர்கள் வீட்டின் தெருப்பக்கமாக சைக்கிளை விடாமல் பிரேமாவின் சீதனக்காணி இருக்கும் தெருவுக்கு விட்டாள்.

இந்த ஐந்து வருட இடைவெளியில் சின்ன சின்னதாகவும் பெரிது பெரிதாகவும் நிறைய மாற்றங்கள். அங்கங்கே இலேசாகத் தடுமாறினாலும் சரியாகப் பிரேமாவின் சீதனக் காணி இருக்குமிடத்துக்கு வந்து சேர்ந்தாள்.

பார்த்தால் மதில் வைத்த வீடே கட்டியிருந்தான் அவன். ஆனால், பெரிய கேட்டினை தாங்கி நின்ற தூண்களில் ஒன்றில் ‘நிறைமொழி இல்லம்’ என்று இருக்கக் கண்டு குழம்பிப்போனாள். அந்தப் பெயர் வேறு நெருடியது.

இது அவர்கள் வீடு இல்லையோ, காணியை விற்றுவிட்டார்களோ? ஆவலாக உள்ளே போகப் போனவள் யோசித்தபடி தேங்கி நின்றாள். இல்லை, அவள்தான் அவர்களின் காணி என்று மாறி வந்துவிட்டாளா என்று நாளா பக்கமும் விழிகளைச் சுழற்றி அங்கிருந்த வீடுகளை ஆராய்ந்தாள்.

அப்போது அந்த நிறைமொழி இல்லத்தின் கேட்டின் ஒரு கதவு மட்டும் திறக்கப்பட்டது. பார்வையை அங்கே திருப்பினாள். இலேசாக மேடிட ஆரம்பித்த வயிற்றுடன் ஒரு பெண் வெளியில் வந்தாள்.

‘அச்சோ! இது நிறை அக்கா! அப்ப இது அவான்ர வீடா?’ அந்தப் பெண் மயூரனின் தங்கை நிறைமொழி என்று அவள் இனம் கண்டு முடிப்பதற்குள் பைக்கில் வெளியே வந்தான் அவன். அவளுடைய கேசிகன்.

ஆனந்த அதிர்ச்சியில் ஒரு கணம் உறைந்து நின்றுவிட்டாள். கண்கள் பனிக்க, முகம் அப்படியே பூவாக மலர அவனிடம் ஓடப்போனவள் அடுத்து நடந்த நிகழ்வில் பிரேக்கிட்டது போன்று அப்படியே நின்றாள்.

அங்கே நிறைமொழி அவன் தோளைப் பற்றிக்கொண்டு அவன் பின்னால் ஏறி அமர்ந்தாள். அவள் நெஞ்சமே இரண்டாகப் பிளந்துபோயிற்று. கால்கள் தரையில் நழுவின.

தன் கண்முன்னே அரங்கேறிக்கொண்டிருக்கும் காட்சி உண்மைதானா என்று நம்பமுடியாமல் அவள் அதிர்ந்து நிற்கையிலேயே, “கவனம் மொழி. வடிவாப் பிடி!” என்றுகொண்டு பின்புறம் திரும்பிய கேசிகனும் அப்போதுதான் அவளைப் பார்த்தான்.

அவனுக்கும் அதிர்ச்சிதான். அவளை அவன் அங்கே எதிர்பார்க்கவேயில்லை.

கணவனின் பார்வை தன் பின்னால் நிலைத்திருப்பதைக் கண்டு திரும்பிப் பார்த்த நிறைமொழியும் அப்போதுதான் நாவினியைக் கண்டாள்.

நம்பமுடியாத ஆனந்தமும் அதிர்ச்சியுமாக அவளைக் கூர்ந்துவிட்டு, “நவி! நீ நவிதானே? என்ர கடவுளே! எவ்வளவு பெரிய பிள்ளையா வளந்து நிக்கிறாய். வடிவா இருக்கிறாயடி. ஜெர்மன்ல இருந்து எப்ப வந்தனி? நீ வந்திருக்கிறாய் எண்டு ஒருத்தரும் சொல்லேல்லயே.” என்று ஆனந்தமாகப் படபடத்தபடி அவளிடம் வந்தாள் நிறைமொழி.

நாவினியால் பேச முடியவில்லை. தரையில் விழுந்த மீனாய் உள்ளம் துடித்துக்கொண்டிருந்தது. அடி வயிற்றிலிருந்து பொங்கிக்கொண்டு வந்த அழுகையை மறைக்க, நடுங்கிய உதடுகளால் சிரமப்பட்டுப் புன்னகைக்க முயன்றாள்.

“நவி? அழுறியா என்ன?” செக்கச் சிவந்துவிட்ட அவள் முகத்தையும் கலங்கிக்கிடந்த கண்களையும் கண்டுவிட்டுக் குழப்பத்துடன் வினவினாள் நிறைமொழி.

இல்லை என்று தலையசைத்தவளின் பார்வை, இது நீயா என்று நம்ப முடியா வலியையும் வேதனையையும் சுமந்து கேசிகனைத் தொட்டு வந்தது. அவனுக்கும் தன்னைச் சமாளித்துக்கொள்வது இலகுவாய் இல்லை. ஆனாலும் முகத்தைக் கடுமையாக மாற்றிக்கொண்டு, “மொழி வா! நேரமாகுது.” என்று அழைத்தான்.

“கேசி, இவள் நவி. மறந்திட்டீங்களா? உங்கட மாமா வீட்டுக்குப் பக்கத்தில இருந்தாவே. நீங்க படிப்பிச்ச உங்கட பெட்டச்சி.” அவளின் தோற்ற மாற்றத்தினால் அவனால் இனம்காண முடியவில்லையோ என்றெண்ணி அவளை அவனுக்கு நினைவூட்டினாள் நிறைமொழி.

நாவினிக்குச் சிரிப்பும் கண்ணீரும் சேர்ந்து வந்தன. அவளை அவனிடம் ஒருவர் அறிமுகம் செய்யும் நிலைக்குத் தள்ளப்பட்டுவிட்டாளே.

“ஓ! அவாவா? வெளிநாடு போனதும் ஆளே மாறிட்டா.” என்று மனைவியிடம் சொல்லிவிட்டு, “எப்பிடி இருக்கிறீங்க நவி, நல்லாருக்கிறீங்களா?” என்றான் அவளிடம்.

கண்ணீரும் புன்னகையும் ஒருங்கே தோன்ற ஒன்றும் சொல்லாமல் அவனையே பார்த்தாள் நாவினி. அந்த விதி அவளை எப்படியான இடத்தில் கொண்டுவந்து நிறுத்தியிருக்கிறது? அவளுக்குத் தன் குரலில் நம்பிக்கை இல்லாமல் போனதில் நன்றாக இருக்கிறேன் என்று தலையை அசைத்தாள்.

“சந்தோசம். பிறகு பாப்பமன். இப்ப மொழியை டொக்டரிட்ட கூட்டிக்கொண்டு போகோணும்.” என்று அவளை மிக நாசுக்காகக் கத்தரித்துவிட்டு, “மொழி வந்து ஏறு, நேரமாகுது.” என்றான் மனைவியிடம்.

“இல்லாட்டி வீட்டை போறியா நவி? மாமி வீட்டுலதான் இருக்கிறா.” ஏனோ அவளை அப்படியே விட்டுவிட்டுப் போக மனம் வராமல் சொன்னாள் நிறைமொழி.

“இல்ல… இல்லை அக்கா. அப்பம்மா மோசம் போய்ட்டா. அதுக்குத்தான் வந்தனாங்க. நான் அங்க போகோணும். இன்னொரு நாளைக்கு வாறனே.” எப்படிக் கோர்வையாகச் சொன்னாளோ தெரியாது. ஆனால் சமாளித்தாள்.

“ஓ! சொறியடா. எங்களுக்கு இது தெரியாதம்மா. எல்லாம் முடிஞ்ச பிறகு ஒரு நாளைக்குக் கட்டாயம் வீட்டுக்கு வா. இப்ப உண்மையாவே எனக்கு நேரமாயிற்றுது. வாறன் போயிற்று.” என்று அவள் கரம் பற்றிச் சொல்லிவிட்டுப் போனாள் அவள்.

எது உந்தியது என்று தெரியாது, “மொழி அக்கா!” என்று அழைத்து அவளை நிறுத்தினாள். திரும்பிப் பார்த்தவளிடம், “எப்ப கலியாணம் நடந்தது?” என்று விசாரித்தாள்.

முகம் பளீர் என்று மலர்ந்து சிரிக்க, “போன வருசம் நடந்தது. நடந்து எட்டு மாதமாகுது.” என்று பதில் சொன்னாள் அவள்.

பார்வை அவனிடம் பாய்ந்துவிடாமல் இருக்கப் பெரும் பாடு பட்டபடி, “அப்ப நீங்க ரெண்டுபேரும் நியூ கப்பிள். ரெண்டு பேருக்கும் ஹப்பி மேரீட் லைஃப் அக்கா.” என்று வாழ்த்திவிட்டு வந்துவிட்டாள்.

அதன் பிறகு அவளின் அப்பம்மா வீட்டை விட்டு அவள் வெளியில் வரவேயில்லை. வருவதற்கு தைரியம் வரவில்லை. கண்ணீரிலேயே கரைந்தாள்.
 

Vishakini

Moderator
Staff member
என்னடா இது, இந்த மூன்று நாள்களும் இல்லாமல் இப்போது போய் அப்பம்மாவின் இறப்புக்கு அழுகிறாளே என்று எல்லோரும் குழம்பினர். அவள் தன் காதல் மலராமலேயே கருகிப்போன துக்கத்தைக் கடைப்பிடித்துக்கொண்டிருந்தாள்.

இத்தனை காலமும் இருக்கிறதா என்றும் தெரியாமல், இல்லை என்றும் சொல்ல முடியாமல் அவளுக்குள் ஒரு காதல் மலர்ந்து மணம் வாசம் வீசிக்கொண்டிருந்தது. தொடருமா என்றும் தெரியாமல், முடிந்துவிட்டதா என்றும் தெரியாமல் அந்தக் காதலை நெஞ்சினுள் சுமந்துகொண்டு வந்தாள். அது பார்த்தால் அது எப்போதோ முடிந்துபோயிருக்கிறது. முட்டாள், அவள்தான் கவனிக்காமல் இருந்திருக்கிறாள்.

ஆசைகள்தான் துன்பத்துக்குக் காரணமாம். அவள்தான் அவன் பார்வைகளை, சாதாரண வார்த்தைகளை வேறு மாதிரி எடுத்து மனத்தில் ஆசையை வளர்த்துக்கொண்டாளோ. என்னை மறந்துவிடாதே, உனக்காகக் காத்திருப்பேன் என்றானே? ஒற்றைக் கையால் இலேசாக அணைத்து நெற்றியில் முத்தமிட்டானே. அதுவும் சாதாரணமானதா என்ன? ஒன்றுமே புரியவில்லை அவளுக்கு. யாரோ இருட்டறையில் கொண்டுபோய்த் தள்ளிவிட்டது போலிருந்தாள்.

அவள் நினைத்துவைத்த தோற்றத்தில், அவள் நினைத்துவைத்த கம்பீரத்தில், தாடி மீசை என்று அவள் உள்ளத்தை மொத்தமாகக் கொள்ளை கொள்ளும் கம்பீரத்தோடும் களையோடும் இருப்பவன் இன்னொருத்தியின் கணவனாகவும் இருக்கிறானே.

இனி என்ன செய்வாள்? மொத்த எதிர்காலமும் வெறுமையாகத் தெரிந்தது.

அவன் வசிப்பது அன்று அவளுக்கு வரைந்து காட்டியது போலவே அவன் கட்டிய வீட்டில். அவள் வழிப்போக்கியாக வீதியோரத்தில் யாரோவாக நின்றுவிட்டு வந்திருக்கிறாள்.

இது தெரியாமல் அவளிடம் இருந்த அந்த வீட்டைப் பெரிதாக்கி பிரிண்ட் எடுத்து, ஃபிரேம் போட்டுக் கையோடு கொண்டுவந்தாள். உன் நினைவுகளோடுதான் என் இத்தனை வருடங்களும் பயணித்தன என்று அவனிடம் காட்டிவிடும் வேகம். தாம் மனங்களைப் பரிமாறிக்கொண்ட பிறகு, பரிசாக அதைக் கொடுக்க எண்ணியிருந்தாள். ஆனால் இன்று, அது அவளைப் பார்த்துச் சிரித்துக்கொண்டிருந்தது.

மயூரன் அண்ணா கூட அவளிடம் இதைப் பற்றி ஒரு வார்த்தை சொல்லவில்லையே. கூடப்பிறந்த தங்கையையே உற்ற நண்பனுக்கு மணமுடித்துக் கொடுத்தவன் அவளிடம் ஒற்றை வார்த்தை பகிரவில்லையே. இல்லை, சொன்னான், அவள் வாழ்க்கையை ஜெர்மனியிலேயே பார் என்றான். அதன் பொருள் இதுதானா?

அந்தளவில் என்னாயிற்று, ஏன் இப்படி ஒரு முடிவுக்குப் போனார்கள்? இனி அவள் வாழ்க்கை?

இதெல்லாம் முதலே தெரிந்திருக்கக் குறைந்தபட்சமாக வீண் கற்பனைகளில் திளைத்திருந்து, மேலும் மேலும் கனவுகளை வளர்க்காமலாவது இருந்திருப்பாளே. அவனைத் தேடி வந்திருக்கவே மாட்டாளே. காரணம் கேட்போம் என்று மயூரனைத் தேடினாள். அவனைப் பிடிக்க முடியவில்லை.

நாகரத்தினத்தின் அன்னைக்கு எட்டாம் நாள் காரியம் முடிந்து அவர் வெளியே வந்துவிட்டார். அவளால்தான் தன் நேசத்தின் மரணத்திலிருந்து வெளிவரவே முடியவில்லை.

எதையும் சிந்திக்க முடியவில்லை. தெளிவு என்பதே கிட்ட மாட்டேன் என்றது. நிறைமொழியின் முகத்தில் தெரியும் பொலிவும் மகிழ்வும் அவளுக்கு அவன் எத்தகையதொரு வாழ்க்கையைக் கொடுத்துக்கொண்டிருக்கிறான் என்று சொல்லின. அப்படியிருந்தும் அவன் நினைவுகளில் அவள் சிக்குப்பட்டு நிற்பது எந்த வகையிலும் சரியாகாது.

வெளியே வர வேண்டும். அத்தனையையும் முடிந்தவையாக எண்ணிக் கடந்துவர வேண்டும். முடிய வேண்டுமே. வானத்தை நோக்கி எத்தனை தரம் எறிந்தாலும் தரையை நோக்கியே வரும் பந்தினைப் போன்று, என்ன செய்து அவன் நினைவுகளை விரட்ட நினைத்தாலும் அவனிலேயே வந்து நின்றாள்.

அவளோடும் ஊரில் இருக்கும் நான்கு பெரியவர்களோடும் பரமேஸ்வரனைச் சந்திக்க அவர் வீட்டுக்கே சென்றார் நாகரத்தினம்.

அவரை அவரின் வீட்டின் கேட் தாண்டி வீட்டின் முற்றத்துக்குக் கூட அனுமதிக்கவில்லை பரமேஸ்வரன். வீதியிலே நிறுத்திவைத்துப் பேசினார். அதுவும், “இதென்ன நீங்க உழைச்சு வாங்கின வீடோ? என்ர தங்கச்சி செத்ததும் பொம்பிளை சுகம் வேணுமெண்டு அடுத்தது பாத்துக்கொண்டு போனவருக்கு என்ர தங்கச்சின்ர சொத்துக் கேக்குதோ? வெக்கமா இல்லையோ?” என்றவரின் மோசமான பேச்சில் மகள் முன்னே நிற்கவே கூசிப்போனார் நாகரத்தினம்.

ஊரின் முக்கியமானவர்கள் என்று வந்தவர்கள் யார் பேச்சையும் பரமேஸ்வரன் கேட்பதாக இல்லை. அயலட்டையினரும் அவருக்கு எதிராகப் பேசத் தைரியமற்று நின்றனர். நாகரத்தினம் போய்விடுவார். ஒரே தெருவில் காலத்துக்கும் இருக்கப் போகிறவர்கள் அவர்களாயிற்றே. அந்தளவில் பரமேஸ்வரனின் வாயும் குணமும் ஊருக்குள் மிகுந்த பிரசித்தி.

மனைவியின் சொத்து மகளுக்குச் சேரவேண்டியது என்று எடுத்துச் சொன்னார் நாகரத்தினம்.

“மனுசின்ர சொத்து மகளுக்கு எண்டு சொல்லுறதுக்கு என்ர தங்கச்சிதான் உனக்கு இன்னும் மனுசியோ? ஒழுங்கா வெளிநாடு போய்ச் சேருற வழியப் பார். அத விட்டுப்போட்டு மகளைக் காட்டி வேற வேலை பாக்காத!” என்றதும் நாகரத்தினம் துடித்துப்போனார். அவரால் இந்தளவுக்கெல்லாம் இறங்க முடியாது.

உடனே திரும்பி மகளைப் பார்த்தார். அங்கிருந்த யாரையும் நிமிர்ந்து பார்க்க முடியாமல் அவமானத்தில் குறுகிப்போய்க் கண்ணீர் உகுத்துக்கொண்டிருந்தாள் அவள். அப்போதுதான் அவளையும் அழைத்துக்கொண்டு வந்தது எவ்வளவு பெரிய தவறு என்று புரிந்தது. அதற்குமேல் அந்த இடத்தில் ஒரு நிமிடமும் அவர் நிற்கவில்லை.

ஆனால், இப்படிக் கேவலமாகவும் அசிங்கமாகவும் பேசியே தன்னைத் துரத்தியடிக்க நினைக்கும் மனிதரின் மோசமான குணத்துக்கு அடங்கிப்போகவும் பிடிக்கவில்லை. கேசிகனின் தாத்தாவோடும் அவன் மாமாவோடும் கதைத்துப் பார்க்கலாம் என்று எண்ணி அவர்கள் வீட்டுக்குச் சென்றார்.

அவர்களும் உதவிக்கு வருவதாக இல்லை. உறவுக்காரரான பரமேஸ்வரனை இவருக்காகப் பகைக்கத் தயாராக இல்லை.

மாறாக, “வெளிநாட்டிலதானே இருக்கிறீங்க, இஞ்ச திரும்பியா வரப்போறீங்க? ஏதோ ஒரு வகையில அவருக்கும் அது உரித்தான காணிதானே. பேசாம குடுத்துப்போட்டுப் போங்கோ.” என்று சொல்லி நாசுக்காகக் கையை விரித்தார் அவன் தாத்தா.

அப்போது கேசிகனும் அங்கேதான் இருந்தான். அவனும் எந்த உதவிக்கும் வருவதாக இல்லை. அங்கே அவனும் இருக்கிறான் என்பதே நாவினியை இயல்பாக இருக்க விடவில்லை. அந்த வீடு, அந்த வீட்டில் அவனோடு தான் பழகிய நினைவுகள் என்று பலவும் வந்து அவளைப் பாடாகப் படுத்தின.

அதைவிட அனைத்தையும் கண்முன்னே கண்டிருந்தபோதிலும் அவன் தன்னை மறந்து இன்னொருத்தியை மணந்து இன்புற்று வாழ்கிறான் என்பதை இன்னுமே அவள் சின்ன இதயம் நம்ப முடியாமல் துடித்துக்கொண்டிருந்தது.

இங்கே வரப்போகிறோம் என்றதும் எந்தளவில் மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்தாளோ அந்தளவில் இப்போது இந்த நொடியே அங்கிருந்து ஓடிவிடத் தவியாய்த் தவித்தாள்.

இப்படி, தான் பழகிய எல்லோருமே கைவிரித்தபோது தன் கையறு நிலையை எண்ணி மிகவுமே வருந்தினார் நாகரத்தினம். காவல்துறைக்குப் போகலாமா என்று யோசித்த மனிதரிடம் நாவினி மறுத்துவிட்டாள்.

“எனக்கு இந்த வீடு, காணி எல்லாம் வேணாம் அப்பா. நீங்க, அம்மா, தம்பியாக்களே போதும். நாங்க திரும்பிப் போவம் ப்ளீஸ்!” என்று கண்ணீருடன் கெஞ்சவும் மகளை மார்போடு அணைத்துக்கொண்ட மனிதர் மறுக்கவில்லை.

அவருக்கும் மற்றவற்றை விடவும் மகள் முக்கியமாகத் தெரிந்தாள். கூடவே அந்த வீட்டின் உறுதியும் தன்னிடம்தானே இருக்கிறது என்றெண்ணிக்கொண்டு புறப்பட்டுவிட்டார்.

அன்று அன்னை சொன்ன சில பொருள்கள் வாங்க கடைத்தெருவுக்கு வந்திருந்தாள் நாவினி. எதேற்சையாகத்தான் எதிர்ப்பட்டான் கேசிகன்.

அவனைக் கடந்து போகவே முடியவில்லை. அங்கேயே நின்றுவிட்டாள். எல்லாம் முடிந்துபோயிற்றுத்தான். ஆனால், ஏன் இப்படி இடையில் முறிந்துபோனது என்று தெரிய வேண்டாமா? தன்னைக் கண்டும் காணாதது போன்று கடக்க முயன்றவனை, “உங்களோட கதைக்கோணும்.” என்று தடுத்தாள்.

புருவங்களைச் சுளித்தபடி திரும்பிப் பார்த்தான் அவன். அவள் செய்கை பிடிக்கவில்லையாம். முகம் கன்றியது. இருந்தும் நாகரீகம் பார்க்கும் நிலையில் அவள் இல்லையே.

“எப்பிடி இருக்கிறீங்க?”

“எனக்கு என்ன? நல்லாருக்கிறான். நல்லாத்தான் இருப்பன்.” என்றான் கடின முகத்தோடு.

நம்ப முடியாமல் அவனையே பார்த்தாள் நாவினி. இப்படி ஒரு கடின முகம் அவனுக்கு உண்டு என்று அவளுக்குத் தெரியவே தெரியாது.

அவள் எப்படி இருக்கிறாள் என்று ஏதும் கேட்பான் என்று நினைத்தாள். இல்லை நடந்ததற்கு ஏதாவது விளக்கம் சொல்வான் என்று எதிர்பார்த்தாள். அவனோ அதற்குமேல் அங்கே நில்லாது அவளைக் கடந்து போயிருந்தான்.

அவன் எப்போதோ அவளைக் கடந்து போய்விட்டான்தான். ஆனால், அதையே மீண்டுமொருமுறை செயலில் காட்டிச் சென்றான்.

புறப்பட முதல் மயூரனின் வீட்டுக்குச் சென்று, “எனக்கு அங்க போகக் கிடைக்கேல்ல அன்ட்ரி. இதை உங்கட மகளுக்கும் மருமகனுக்கும் என்ர கலியாணப் பரிசு எண்டு சொல்லிக் குடுத்துவிடுறீங்களா?” என்று நயமாகக் கேட்டு, அந்த ஃபிரேமிட்ட வீட்டினைக் கொடுத்துவிட்டு வந்துவிட்டாள்.

முதல் முறை அங்கிருந்து புறப்படுகையில் அவன் நினைவுகளை மறக்க முடியாமல் புறப்பட்டாள். அந்த முறை எப்படியாவது அவனை மறந்துவிட வேண்டும் என்கிற பிரார்த்தனையுடன் புறப்பட்டிருந்தாள்.
 

Chitra ganesan

Active member
மயூரனும் கூட்டு களவாணி போல..கூட பிறந்தவள் மட்டுமே தங்கை.அவளின் வாழ்வு மட்டுமே முக்கியமா இருந்திருக்கு😡
இரண்டு தடிமாடுகளும் ஒரு சின்ன பெண்ணை ஒருவன் அண்ணன் என்றும்,ஒருவன் காதல் என்றும் நம்ப வச்சி ஏமாத்தி இருக்குது🤨
 

Google Typing

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.

Members online

Top Bottom