இரவு பத்து மணியளவில் சென்னை விமான நிலையத்தில் அமர்ந்திருந்தனர் மணிவாசகமும் மரகதமும்.
சென்னையில் மணிவாசகத்தையும் மரகதத்தையும் தங்களின் சொந்த வீட்டில் தங்குமாறு கூறியிருந்தான் கதிர்மாறன். ஆனால் மணிவாசகம் தான் தன்னுடைய தோழனின் வீடு இருப்பதாகக் கூறி அங்கிருந்து திருமணத்திற்குத் தேவையான துணிமணி பொருள்களை எல்லாம் வாங்கிக் கொண்டு கிளம்புவதாகக் கூறியிருந்தான். அந்த நண்பன் பழனி தான் என்று கதிர்மாறனும் அவன் தங்கையும் அறிந்திருக்கவில்லை. மேகி என்கின்ற மரகதம் அன்று இரவு மலேசியாவில் பழனியிடம் பேசியதை கதிர்மாறனிடம் உரைத்திருந்தாள். அப்பு இப்படி உடனே திருமணத்திற்குச் சம்மதிக்கக் காரணம் பழனியின் அறிவுரை தான் என்பதை அவளின் பேச்சுலேயே அறிந்திருந்தான் கதிர்மாறன். அன்றே பழனிக்குக் கைப்பேசியில் அழைத்துப் பேசியும் இருந்தான். அப்போதும் கூடப் பழனி மணிவாசகத்தைக் குறித்துக் கதிர்மாறனிடம் எதுவும் கூறவில்லை. மணிவாசகத்தைத் தனக்கு யாரென்றே தெரியாதது போலவே காண்பித்துக் கொண்டார் பழனி.
மரகதத்திற்குத் தேவையான புடவையும் நகையும் வாங்குவதற்குக் கதிர்மாறன் பணம் அனுப்புவதாகக் கூற, மறுத்து விட்டான் மணிவாசகம். தானே அவளுக்குத் தேவையான அனைத்தையும் வாங்கிக் கொடுப்பதாய் கூறிவிட்டான். அங்குக் கதிர்மாறனுக்கும் அவனது தங்கைக்கும் தேவையானதை அவர்களே வாங்கியிருக்க, இங்கு மணிவாசகமும் மரகதமும் அவர்களுக்குத் தேவையானதை வாங்கியிருந்தனர். சென்னையிலிருந்து மலேசியா விமானப் பயணத்திற்கும் மணிவாசகமே பார்த்துக் கொள்வதாய் உரைத்து விட்டான்.
"ஏன் மாமா கல்யாணத்துக்கு முன்னாடி எங்ககிட்ட இருந்து காசு வாங்கக் கூடாதுனு கௌரவம் பார்க்கிறீங்களா என்ன?" என்று நேரடியாகவே கேட்டிருந்தான் கதிர்மாறன்.
"என்ன தம்பி கௌரவம்னு பெரிய வார்த்தைலாம் சொல்லுதிய? நாம ஒன்னுக்குள்ள ஒன்னா ஆகப் போறோம். நமக்குள்ள என்ன கௌரவம் வேண்டி கெடக்கு. என்ன தான் வாயும் வயிறும் ஒன்னா இருந்தாலும் பணம்னு வந்துட்டா மனுச பையலுவ எப்படி மாறுவாவனு சொல்ல முடியாது தம்பி. என்னோட தன்மானத்துக்கு இழுக்கு வந்துடக் கூடாதுனு தான் நானே செலவு செய்யுதேன்னு சொல்லுதேன். கண்ணாலம் முடிஞ்ச பொறவு எம்பூட்டுனாலும் நீங்க எனக்காகச் செலவு செய்யுங்க. நான் கேள்வியே கேட்காம மனசார ஏத்துக்கிடுவேன்" என்று அவன் கூறிய பதிலில் கதிர்மாறனுக்கு மணிவாசகத்தின் மீது மிகுந்த மரியாதை உண்டாகி இருந்தது.
இப்படியாகக் கடந்த இரு நாள்களாக மணிவாசத்துடனும் மரகதத்துடனும் ஏதேனும் ஒரு வகையில் பேச்சுக் கொடுத்தவனாய் கைப்பேசியில் தொடர்பிலேயே இருந்தான் கதிர்மாறன்.
மரகதம் மலேசியா வரும் போது அவளுக்குச் சற்று பரிச்சயமானவனாகத் தான் இருக்க வேண்டும் என்று எண்ணினான் கதிர்மாறன். அதனாலேயே கடந்த இரு நாள்களாக மூன்று வேளையும் அவளுக்கு அழைத்துப் பேசியிருந்தான். அவன் கேட்பதற்குப் பதிலிறுப்பாளேயன்றிப் பெரியதாக அவள் எதுவும் அவனிடம் பேசிக் கொள்ளவில்லை.
இப்போதும் மலேசியா செல்வதற்காகச் சென்னை விமான நிலையத்தில் அமர்ந்திருந்த மரகதத்தின் கைப்பேசிக்கு அழைத்தான் கதிர்மாறன்.
அவள் அழைப்பை எடுத்ததும், "ஹாய் ஸ்வீட் ஹார்ட்" என்று உற்சாகக் குரலில் பேசினான் கதிர்மாறன்.
"ஹலோ" உள்ளே போன குரலில் உரைத்தாள்.
"என்னடா குரலே வர மாட்டேங்குது? உடம்பு எதுவும் சரியில்லையா?" என்று கனிவுடன் கேட்டான்.
"இல்லங்க அப்படிலாம் எதுவுமில்ல" என்று அமைதியாகவே அவள் பேச,
"உன் மனசுல இப்ப என்ன ஓடுது? என்கிட்ட வெளிப்படையா பேசுடா. நான் எதுவும் சொல்ல மாட்டேன்" என்றான்.
சற்று நிமிடம் அமைதியாக இருந்தாள். மறுபக்கத்தில் அவனிடம் இருந்து எந்தப் பேச்சு சத்ததமும் வராமல் போக,
"ஹலோ இருக்கீங்களா?" எனக் கேட்டாள்.
"ஹ்ம்ம் இருக்கேன் இருக்கேன். உனக்காகவே காத்துக்கிட்டு இருக்கேன்" புன்னகையுடன் உரைத்தான்.
அவனின் இப்பதிலில் அவளின் முகத்தில் லேசாய் புன்னகை எட்டிப் பார்த்தது.
"சரி உன் மனசு இப்ப என்ன சொல்லுது அதை மறைக்காம சொல்லு" என்றான்.
"பயமா இருக்குங்க" என்றாள்.
"பயமா? ஏன்?" எனக் கேட்டான்.
"ஏன்னு தெரியலை. என்னமோ மனசு படபடனு இருக்கு" என்றாள்.
"ஓ.. ஆமா மணி மாமா அங்கே என்ன செஞ்சிட்டு இருக்காரு" எனக் கேட்டான்.
"அவர் அங்கே ஏதோ ஆபிசர்கிட்ட பேசிட்டு இருக்காரு" என்றவள் சொன்னதும்,
"உன் காதுல இருக்கப் போனை கொஞ்சம் தள்ளி வச்சி உன் முகத்துக்கு நேரா பிடி" என்றான்.
"எதுக்கு?" என்றாள்.
"கேள்விக் கேட்காம சொன்னதைச் செய்மா" என்றான்.
அவன் சொன்னதைப் போன்று கைப்பேசியைத் தனது முகத்துக்கு நேராக அவள் வைத்துப் பார்க்க, காணொளியில் புன்னகை முகமாய்க் காட்சி அளித்தான் கதிர்மாறன்.
"ஹய்யோ என் மூஞ்சு தெரியுதா உங்களுக்கு" என்றவள் படபடப்புடன் கேட்டவளாய் தனது தலை முடியை சீராக்கினாள்.
"இல்லையே நீ தான் வீடியோ ஆன் பண்ணலையே" என்றவன் சொன்னதும் ஆசுவாசப் பெருமூச்சு அவள் விட,
"எதுக்கு இவ்வளோ பதட்டம்? ஏன் நான் உன்னைப் பார்க்கக் கூடாதா?" என்று கேட்டான்.
"இல்ல.. அப்படி இல்ல.. நான்" என்று தட்டுத் தடுமாறியவளாய் அவள் பேச்சை நிறுத்த,
"ஹ்ம்ம் நீ?" என்று கேள்வியுடன் நிறுத்தினான்.
"இல்ல கொஞ்சம் கூச்சமா இருந்துச்சு. நான் ஒன்னும் பெரிசா அலங்காரம் செய்யலை. அதான்" என்று மெல்லிய குரலில் உரைத்தாள்.
ஹா ஹா ஹா என்று வாய்விட்டுச் சிரித்தவன், "ஒரே வீட்டுல வாழும் போது எப்போதும் அலங்கார பொம்மை மாதிரியேவா ரெண்டு பேரும் இருக்க முடியும். நீ எப்படி இருந்தாலும் எனக்குப் பிடிக்கனும். நான் எப்படி இருந்தாலும் உனக்குப் பிடிக்கனும். அப்படி அட்ஜஸ்ட் பண்ணி விட்டுக் கொடுத்து ஒருத்தருக்கு ஒருத்தர் அன்பா வாழுறதுக்குப் பேரு தான் காதல்" என்று சிரித்தான்.
"நல்லா பேசுறீங்க" என்று மனத்திற்குள் கூறுவதாய் நினைத்து வாய்விட்டே அவள் கூற,
மீண்டும் வாய்விட்டுச் சிரித்தவனாய், "தேங்க்ஸ் ஃபார் த காம்ப்ளிமெண்ட் டார்லிங்" என்றான்.
"அய்யோ வாய்விட்டே சொல்லிட்டேனா?" நாக்கைக் கடித்தவளாய் அவள் பதற,
"என்கிட்ட பேசும் போது நீ மனசுக்குள்ள பேசக் கூடாது டார்லிங். மனசு விட்டு பேசனும்" என்றான்.
"ஹ்ம்ம்" என்றாள் அவள்.
"சரி என் மூஞ்சைப் பாரு நீ" என்றவன் சொன்னதும் மீண்டுமாய்க் கைப்பேசியைச் சற்று தள்ளிப் பிடித்தாள்.
"ஹெட் செட் போட்டிருக்கியாடா? போனைத் தள்ளி வச்சிட்டா நான் பேசுறது உனக்கு எப்படிக் கேட்கும்?" என்றவன் கேட்டதும்,
"ஸ்பீக்கர்ல போட்டிருக்கேன்" என்றாள்.
"எதுக்கு? ஊரே நம்ம ரொமேன்ஸ் பண்றதை பார்க்கிறதுக்கா?" என்று அவன் சிரிக்க,
"என்னது ரொமேன்ஸ்ஸா?" என்று அலறியிருந்தாள்.
"நீ மொதல்ல ஹெட் செட் போடு! அப்புறம் ஷாக் ஆகலாம்" என்று சிரித்தான் அவன்.
தனது கைப்பையில் காதொலிப்பானைத் தேடி எடுத்து மாட்டியவள், "ஹலோ" என்றாள்.
"ஹெட் செட் போட்டாச்சா?" என்றவன் கேட்க,
"ஹ்ம்ம் போட்டாச்சு" என்றாள்.
"சரி இப்ப என் மூஞ்சைப் பாரு" என்றான்.
கைப்பேசியில் தெரிந்த அவன் முகத்தைப் பார்த்தாள் அவள்.
ஏதோ அறையில் கட்டிலில் அமர்ந்து கைப்பேசியைத் தூரமாய் வைத்து ஒலிபரப்பியில் போட்டுப் பேசியிருந்தான்.
அவனின் இடுப்பு வரை அந்தக் கைப்பேசியில் அவனின் உருவம் தெரிந்தது அவளுக்கு.
அவனை முகத்துக்கு நேராகப் பார்க்க சற்று வெட்கமாய் இருக்கவும் மெல்ல தலையைத் தாழ்த்திக் கொண்டாள்.
"என் மூஞ்சைப் பார்த்தா எப்படித் தெரியுது?" எனக் கேட்டான்.
"ஹான் எப்படினா?" என்று புரியாமல் அவனைப் பார்த்து அவள் கேட்க,
"இல்ல என் மூஞ்சைப் பார்த்தா புலி, சிங்கம், கரடி மாதிரி எதுவும் தெரியுதா?" எனக் கேட்டான்.
"இல்லையே" என்றாள்.
"அப்புறம் எதுக்குப் பயம்?" என்று மென்மையான குரலில் கேட்டான்.
"விலங்குகளை விட மனுஷங்களைப் பாரத்து தாங்க இந்தக் காலத்துல பொண்ணுங்க பயப்பட வேண்டியதா இருக்கு" என்று மனத்திற்குள் தோன்றியதை அப்படியே உரைத்திருந்தாள். ஆனால் அவன் எங்கே தப்பாக நினைத்து கொள்வானோ என்று நினைத்து உதட்டைக் கடித்தாள்.
அவளின் பதிலில் வியந்து அதிர்ந்து பின்பு புன்னகையுடன் அவளைப் பார்த்தான்.
"நைஸ்! நீ இப்படி என்கிட்ட உன் மனசுல பட்டதெல்லாம் பேசணும்னு தான்டா நான் ஆசைப்படுறேன்" என்றவன், 'இவளுக்குப் பாஸ்ட் மேரேஜ் ஃலைப்ல எதுவும் டிராஜடி நடந்திருக்குமோ' என்று மனத்திற்குள் நினைத்துக் கொண்டவனாய்,
"பயப்படாத மரகதம். எனக்கும் தங்கச்சி ஒருத்தி இருக்கா! அதனால பொண்ணுங்ககிட்ட எப்டி நடந்துக்கனும்னு எனக்கு நல்லாவே தெரியும். ஐ ப்ராமிஸ் யூ என்னிக்கும் உன்னை அவமரியாதை செய்ற மாதிரி நடந்துக்க மாட்டேன். உன்னைக் கஷ்டபடுத்துற மாதிரி நடந்துக்க மாட்டேன். உன்னோட குடும்பத்தை நினைச்சு பயப்படுறனா அதையும் தூர தூக்கிப் போட்டுடு. இனி நீ நான், அப்பு, மணி மாமா அவ்ளோ தான் உன்னுடைய குடும்பம். உன்னைப் பெத்து வளர்த்த கடனுக்காகவும் கூடப் பொறத்த பாவத்துக்காகவும் அவங்க எல்லாருக்கும் நீ செய்ய வேண்டிய எல்லாத்தையும் செஞ்சிட்டடா. இனி நீ வாழப் போறது உன்னுடைய வாழ்க்கை. அந்த வாழ்க்கைக்கு உறுதுணையா நான் இருப்பேன். உன்னுடைய வாழ்க்கைல நீ எப்டி சந்தோஷமா வாழனும்னு நினைக்கிறியோ அப்படி வாழு. அதுக்கான எல்லா உரிமையும் உனக்கு இருக்கு. உனக்குப் புருஷன்கிற பேர்ல துணையா நான் இருப்பேன். யூ கேன் பீ யுவர் செல்ஃப் ஹியர். இந்தப் பயணம் உனக்கான விடுதலையா நினைச்சிக்கோ. பயம் எல்லாம் உன்னை விட்டுப் போய்டும். மனசு லேசா ஃபீல் ஆகும்" என்றான்.
பேசும் அவனையே இமைச் சிமிட்டாது பார்த்திருந்தவள், அவன் பேசி முடித்ததும், "தேங்க்ஸ்" என்றாள்.
அந்த நன்றியில் இருந்த உணர்வை முழுதாய் உணர்ந்தவனாய், "தேங்க்ஸ் ஃபார் அக்சப்டிங் மை வர்ட்ஸ் டியர். லவ் யூ ஸ்வீட் ஹார்ட். பத்திரமா வாங்க. காலைல கல்யாண அலங்காரத்துல உன்னைப் பார்க்கக் காத்துட்டு இருக்கேன்" என்றவனாய் இணைப்பைத் துண்டித்திருந்தான் கதிர்மாறன்.
அவன் கூறிய சொற்களே அவள் காதினுள் ரீங்காரமிட, சற்று மனம் லேசானது போல் உணர்ந்தாள் மரகதம்.
மரகதத்திடம் கதிர்மாறன் பேசிக் கொண்டிருந்த நேரம் மேகிக்கு அழைத்திருந்தான் மணிவாசகம்.
"தாயி சொகமா இருக்கியலா?" என்று தான் பேச்சைத் தொடங்கினான்.
இரண்டு நாள்களாக அவன் அழைப்பை ஏற்கவே இல்லை அவள். இப்பொழுதும் அவள் எடுப்பாள் என்ற நம்பிக்கை இல்லாமல் தான் அழைத்தான். ஆனால் அவள் அழைப்பை ஏற்றிருந்தாள்.
"ஹ்ம்ம் நல்லா இருக்கேன்" என்றதோடு அவள் அமைதியாகிப் போக,
"கல்யாண சாமான்லாம் வாங்கிட்டியலா?" எனக் கேட்டான்.
"ஹ்ம்ம் வாங்கியாச்சு" என்றாள்.
"பொறவு சாப்பிட்டியலா?" என்றான்.
"ஹ்ம்ம் ஆச்சு ஆச்சு" என்றாள்.
"சரி தாயி. நீங்க நிம்மதியா தூங்குங்க. காலைல பார்ப்போம்" என்றவனாய் இணைப்பைத் துண்டித்தான் மணிவாசகம்.
'ஹ்ம்ம் இவிய கூட எப்படிக் குடும்பம் நடத்தி எப்படிப் புள்ள குட்டிய பெத்துக்கப் போறேனோ?' என்று பெருமூச்சு விட்டவாறு அவன் சிந்தித்திருந்த நேரம், கதிர்மாறன் அவனுக்கு அழைத்திருந்தான்.
"மாமா பத்திரமா பார்த்து வாங்க. நீங்க இங்கே வந்ததும் உங்களை ஏர்போர்ட்ல இருந்து முருகன் கோவிலுக்குக் கூட்டிட்டுப் போக வண்டி ஏற்பாடு பண்ணிருக்கேன். அந்த டிரைவரே உங்களை ஏர்போர்ட்ல ரிசீவ் செஞ்சி கூட்டிட்டுப் போய்டுவார். அங்கே நீங்க குளிச்சி கிளம்புறதுக்கு ரூம் ஏற்பாடு செஞ்சிருக்கேன். மரகதத்துக்கு மேக்கப் செய்யவும் ஆளுங்க அங்கே ரெடியா இருப்பாங்க. நானும் அப்புவும் முகூர்த்த நேரத்துக்கு அங்கே வந்துடுவோம்" என்றான் கதிர்மாறன்.
"சரி தம்பி" என்று மணிவாசகம் கூறவும்,
"என்ன இன்னும் தம்பினு கூப்பிட்டுட்டு இருக்கீங்க? மச்சான்னு கூப்பிடுங்க?" என்றான் கதிர்மாறன்.
"பொண்டாட்டியோட அண்ணனை உரிமையா கூப்பிட சொல்றிய ஆனா எம்ம பொண்டாட்டி எங்கூட உரிமையா பேச மாட்டேங்காவலே" என்றான் மணிவாசகம்.
"நான் மரகதத்தைக் கட்டிக்கனும்னு தான் அவ உங்களைக் கட்டிக்கச் சம்மதிச்சிருக்கா மாமா. அதனால கொஞ்சம் பொறுத்துப் போங்க. எனக்கு அப்புவோட வாழ்க்கையை நினைச்சு தான் பயமா இருக்கு மாமா" வருத்தமான குரலில் உரைத்தான் கதிர்மாறன்.
"இந்த மாமன் இருக்கப் பயமேன் மச்சான். நான் அவளைக் கண் கலங்காம பார்த்துக்கிடுவேன். நீங்க கலங்காதிய" என்றான் மணிவாசகம்.
"ஹ்ம்ம் அந்தத் தைரியத்துல தான் இந்தக் கல்யாணத்துக்கு ஒத்துக்கிட்டேன் மாமா. எப்பவும் ஏட்டிக்குப் போட்டியா ஏதாவது எங்கிட்ட பேசிட்டே இருப்பா. இந்தக் கல்யாணப் பேச்சு ஆரம்பிச்சதுல இருந்து ரொம்ப அமைதியா இருக்கா" என்றவன்,
"ரொம்பப் புலம்புறேனோ மாமா" என்று சிரித்தான்.
"மனசுக்கு நெருக்கமா வச்சிருக்க ஆளுங்ககிட்ட தான் இப்படி மனுசுல உள்ளதெல்லாம் வெளிப்படும் மச்சான். உங்க மனசுல அந்த இடத்துல என்னை நீங்க வச்சிருக்கிறதுல சந்தோஷம் தான் மச்சான்" என்ற மணிவாசகம்,
"உம்ம தங்கச்சியை நினைச்சு உமக்குக் கவலை இருக்கும் தானே. என்னால புரிஞ்சிக்க முடியுது. நான் சத்தியம் செய்யுதேன். உம்ம தங்கச்சியைக் கண்ணு கலங்காம பார்த்துக்கிட வேண்டியது எம் பொறுப்பு மச்சான்" என்றான்.
"அட மாமா அவ உங்களைக் கண்ணு கலங்காம பார்த்துக்கனுமேனு தான் எனக்குப் பயமா இருக்கு" என்று அவன் கூறிய விதத்தில் வாய்விட்டுச் சிரித்தான் மணிவாசகம்.
"ஹா ஹா ஹா அதையும் நான் பார்த்துக்கிடுதேன்" என்றான் மணிவாசகம்.
"மரகதத்தோட வீட்டுல தெரிஞ்சா என்ன சொல்லுவாங்க மாமா. இப்படிப் பொண்ணு வீட்டுக்குத் தெரியாம கல்யாணம் செய்றது வேற மனசை உறுத்துது மாமா" என்றான் கதிர்மாறன்.
"அப்படிப் பேசுறதுக்கும் சொல்லுறதுக்கும் அவியளுக்கு எந்தத் தகுதியும் இல்லை மச்சான். அதெல்லாம் நினைச்சு நீரு வெசனப்படாதிய. நல்லா கல்யாண கனாவோட தூங்குங்க. நாளைக்கு விடியல் சொகமானதாவே இருக்கும்" என்றவனாய் பேச்சை முடித்து விட்டு அழைப்பை துண்டித்த நொடி மரகதத்தின் தந்தை செல்லையாவிடம் இருந்து அழைப்பு வந்தது.
'இவரு தான் என்கிட்ட பேசவே மாட்டாரே! இப்ப என்னதுக்குப் போன் செய்றாரு' என்று யோசித்தவாறே அழைப்பை ஏற்றவன், "ஹலோ" என்றதும், "பொட்டை புள்ளையைத் தனியா வெளியூருக்கு அனுப்பிட்டு உறக்கமே வராம தவிக்கிறாரு உன் மாமா" என்றார் சுசீலாம்மா.
"நீயா அக்கா? உன் போன்னு என்னாச்சு?" எனக் கேட்டான்.
"நான் நல்லா தூங்கிட்டுக் கெடந்தேன்டா. இந்த மனுஷன் உறக்கம் வராம என்னை எழுப்பிப் பேசுனு சொல்லி போனைக் கொடுத்துப்புட்டாரு" என்றார்.
"அதான் நான் அவ கூடவே இருக்கேனே அக்கா. அப்புறம் என்னத்துக்குப் பயமாம்" என்றான் மணிவாசகம்.
"அதான்டா நானும் சொல்லுதேன். நீ கூட இருக்கத் தைரியத்துல தானே நான் நிம்மதியா உறங்கிட்டுக் கிடந்தேன். இந்த மனுசன் என்னிக்கு உன்னை நம்பியிருக்காரு. அதான் உறக்கம் வராம கெடந்து அல்லாடுறாரு" என்றார் சுசீலாம்மா.
"காசுக்காக அந்தப் பொண்ணைப் பலி ஆடா விட்டாலும் இந்தமேனிக்காவது அவா மேல பாசம் வச்சிருக்கியலே!" என்று அவர்களின் மண்டையில் குட்டுவது போன்று உரைத்த மணிவாசகம்,
"நீ மாமாக்கிட்ட போனைக் கொடு" என்றான்.
"என்னது உம்ம மாமன்கிட்டயா போன கொடுக்கச் சொல்லுத?" என்று அதிர்ச்சியுடன் கேட்டார் சுசீலாம்மா.
"ஆமாக்கா. ஒரு பொண்ணோட அப்பாவா அவரோட மனநிலையை என்னால புரிஞ்சிக்க முடியுதுக்கா. அந்த உணர்வுக்கு மரியாதை கொடுத்து தான் நான் பேசுறேன்னு சொல்லுதேன்" என்றான்.
அங்குச் சுசீலாம்மா கைப்பேசியை அவரிடம் கொடுத்ததும், கைப்பேசியைக் காதில் வைத்து குரலைச் செருமினார் அவர்.
அவரின் குரலைக் கேட்டதும், "பயப்படாதீய மாமா. நான் தான் அவிய கூடவே இருக்கேனே. அவாளுக்கு ஏத்த பாதுகாப்பான எல்லா ஏற்பாடும் செஞ்சி கொடுத்து அவிய சந்தோஷமா வாழுறதைப் பார்த்த பொறவு தான் நான் அங்கன வருவேனாக்கும். இனி உம்ம பொண்ணு வாழ்க்கைல சந்தோஷம் மட்டும் தான் இருக்கும்னு நினைச்சு நிம்மதியா தூங்குங்க" என்று ஆறுதலாய் பேசிவிட்டு இணைப்பைத் துண்டித்தவன் மரகதத்துடன் விமானத்தை நோக்கிச் சென்றான்.
விடியல் பயணத்தை நோக்கிச் சென்றிருந்தனர் இருவரும்.
இரவு பதினொன்றரை மணிக்கு இருவரும் விமானத்தில் ஏறி அமர்ந்ததும், நான்கு மணி நேரப் பயணம் ரெக்கைக் கட்டிப் பறந்தது. மலேசிய நேரப்படி அதிகாலை ஆறரை மணிக்கு கோலாலம்பூர் விமான நிலையத்தில் தரை இறங்கினர் இருவரும். கதிர்மாறன் கூறியது போலவே அங்கு ஓட்டுநர் ஒருவர் இவர்களுக்காகக் காத்திருந்து அழைத்துச் சென்றார்.
சைபர்ஜெயாவின் அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து கதிர்மாறனும் அவனது தங்கை மரகதமும் புறப்பட்டுக் கோலாலம்பூரின் போக்குவரத்து நெரிசலை கடந்து பத்துமலையின் நுழைவாயிலை அடைந்தபோது, வானத்தில் சூரியன் மெல்ல எட்டிப்பார்த்தது.
மணிவாசகமும் மரகதமும் மணமக்கள் அலங்காரத்துடன் பத்து மலையை அடைந்த போது காலை எட்டு மணியாகி இருந்தது.
மகிழுந்தில் இருந்து இறங்கிய மரகதத்தின் கண்கள் விண்ணை முட்டும் அளவுக்குக் கம்பீரமாக நின்றிருந்த 140 அடி உயர தங்க நிற முருகன் சிலையைக் கண்டு வியப்பில் விரிந்தன.
பச்சை பசேலெனச் சூழ்ந்திருந்த மலைக்குன்றுகளும், அங்கொன்றும் இங்கொன்றுமாக ஓடிக்கொண்டிருந்த குரங்குகளின் சத்தமும் அந்தக் காலைப் பொழுதை இன்னும் அழகாக்கின.
இருவரும் நடந்து கோவில் வளாகத்தில் உள்ள பிரம்மாண்ட கல்யாண மண்டபத்திற்குள் நுழைந்தனர்.
அவர்கள் உள்ளே நுழைந்ததும் மணமகன் மணமகளுக்கு உரிய ஆட்டம் பாட்டத்துடன் கொண்டாட்டமாய் அவர்கள் இருவரையும் உள்ளே அழைத்துச் சென்றனர் கதிர்மாறன் மரகதத்தின் பணியிடத் தோழமைகள். இவை எல்லாம் கதிர்மாறனின் ஏற்பாடு.
ஒரே மேடையில் இரண்டு பிரகாசமான ஹோம குண்டங்கள் வளர்க்கப்பட்டு, அந்த இடமே யாகப்புகையின் நறுமணத்தாலும், நாதஸ்வர இசையாலும் நிறைந்திருக்க, மேடையின் வலதுபுறம் கதிர்மாறன் மரகதம் ஜோடியும், இடதுபுறம், மணிவாசகம் மரகதம் ஜோடியும் அமர வைக்கப்பட்டனர்.
மரகதம் பளபளக்கும் காஞ்சிப் பட்டுப்புடவையில் அலங்காரத்துடன் அழகுப் பதுமையாய் குனிந்த தலை நிமிராமல் அமர்ந்திருக்க, அவளை ரசித்துப் பார்த்திருந்தான் கதிர்மாறன்.
"நீ சும்மாவே அழகுத் தான். பட்டுப் புடவை அலங்காரத்துல ரொம்பவே அழகா இருக்கடா" என்று அவளின் காதினோரம் கூறினான்.
அவனைப் பார்த்து மெல்ல புன்னகைக்க முயன்றாலும் அவளின் முகம் கலக்கத்தை வெளிப்படுத்தியது.
"என்னம்மா?" என்று கேட்டவனுக்கு அவளின் முதல் திருமணத்தின் நினைவு வந்து விட்டதோ என்று தோன்ற, "என்னைக் கட்டிக்கிறதுல உனக்கு விருப்பம் தானே" எனக் கேட்டான்.
மெல்ல விழியை நிமிர்த்தி அவனைக் கோபமாய் முறைத்தாள்.
"இவ்வளோ தூரம் வந்த பிறகு என்ன கேள்வி இது" கோபக் குரலில் கேட்டாள்.
இதழ்விரியச் சிரித்தவனாய், "லவ் யூ டார்லிங்" என்றான்.
உதட்டைச் சுழித்தவளாய் முகத்தைத் திருப்பிக் கொள்ள, அவளின் தாடையைப் பற்றித் தன்னை நோக்கித் திருப்பியவனாய், "சாரி! சாரி" என்று கண்களைச் சுருக்கிக் கெஞ்சும் பார்வையுடன் வாயசைத்தான்.
மெல்லப் புன்னகைத்தாள் அவள்.
"தேங்க்யூ அண்ட் லவ் யூ ஸ்வீட் ஹார்ட்" என்று மீண்டுமாய் அவன் வாயசைக்க, தலையைக் குனிந்து கொண்டாள் அவள்.
மறுபுறம், பட்டு வேட்டிச் சட்டையில் கம்பீரத்துடன் அமர்ந்திருந்த மணிவாசகம், தன் அருகில் பட்டுப்பாவாடை சட்டையில், தலை அலங்காரம் ஏதுமற்று, மிதமான முக அலங்காரத்துடன் இருந்த மேகி என்ற மரகதத்தைப் பார்த்து மெலிதாகப் புன்னகைத்தான். அவளும் அவனைப் பார்த்து இன்முகத்துடன் புன்னகைத்தாள்.
சுற்றிலும் அவர்களுடன் பணிபுரியும் பணியாளர்கள், நண்பர்கள் குடும்பத்தினருடன் வருகைத் தந்து அவர்களைச் சூழ்ந்து இருக்க, அந்த மண்டபமே விழாக்கோலம் பூண்டிருந்தது.
மலேசிய அர்ச்சகர்களின் வேத மந்திரங்கள் முழங்க, ஹோம குண்டத்தில் நெய்யும், சமித்துகளும் இடப்பட்டன. அக்னி பகவான் சாட்சியாக, திருமணத்தின் உச்சக்கட்ட தருணம் நெருங்க, "கெட்டிமேளம் கெட்டிமேளம்" என்று குரல் கொடுத்தார் அர்ச்சகர்.
நாதஸ்வரத்தின் வேகத்தைக் கூட்டவும் மங்கள இசை மண்டபத்தின் கூரையைத் தொட்டது.
கதிர்மாறன் மரகதத்தின் கழுத்திலும், மணிவாசகம் மேகியின் கழுத்திலும் ஒரே முகூர்த்தத்தில், ஒரே நேரத்தில் மாங்கல்யத்தைச் சூட்டினர். அங்கே கூடியிருந்த ஒட்டுமொத்த கூட்டமும் "அரோகரா... முருகனுக்கு அரோகரா" என்று பக்திப் பரவசத்துடன் குரல் எழுப்ப, இரு ஜோடிகளின் மீதும் அட்சதை மலர்கள் மழையாகப் பொழிந்தன.
மரகதத்தின் கண்களில் ஆனந்தக் கண்ணீர் துளிர்க்க, அதைத் தன் விரல்களால் மெதுவாகத் துடைத்துவிட்டான் கதிர்மாறன்.
மேகி அமைதியாகவே இருந்தாள். மணிவாசகம் அவளின் கைகளை இறுக பற்றிக் கொண்டவனாய் அவளின் காதோடு, "இனி ஆயுசுக்கும் உங்களைக் கண்ணுக்குள்ள வச்சி பார்த்துப்பேன் தாயி" என்றான்.
மேகியின் கண்களில் சட்டென நீர் துளிர்த்து விட, கதிர்மாறன் அங்கிருந்து பார்த்தவனாய், "ஹேப்பி மேரீட் லைப்டா அப்பு" என்று அவளைத் தேற்றவெனவே சத்தமாகக் கூறினான்.
"உனக்கும் தான்டா எருமை" என்று வழமைப் போல் கூறியவள் பின் மரகதத்தின் அதிர்வும் கண்டிப்புமான பார்வையைக் கவனித்து விட்டு, "உங்களுக்காக எல்லாம் ஒன்னும் அவனை மரியாதையா கூப்பிட முடியாது அண்ணி" என்று சத்தமாகக் கூறி உதட்டைச் சுழித்தாள்.
மரகதத்தின் பார்வை கதிர்மாறன் மீது சற்று முறைப்பாய் வரவும், "ஆத்தா பரதேவதை" என்று அலறிய கதிர்மாறன், "மாமா உங்க பொண்டாட்டி வாயை கொஞ்சம் அடக்கி வையுங்க" என்றான்.
"யாரு.. யாரை அடக்குறது?" என்று இருந்த இடத்தில் இருந்தே மேகி எகிறிக் கொண்டு பேச, "மச்சான் தாலி கட்டின உடனே என் பொண்டாட்டி கூட சண்டை மூட்டி வுடுறீயளே மச்சான். இது நியாயமா?" என்று பாவம் போல் மணிவாசகம் கேட்கவும், அங்கிருந்த அனைவருமே கலகலவெனச் சிரித்திருந்தனர்.
இவ்வாறாகக் கேலியும் கிண்டலுமாய்ச் சிரிப்பும் குள்ளாமுமாய் மனநிறைவாய் நடந்திருந்தது திருமணச் சடங்குகள்.
இரு ஜோடிகளும் கரம் கோர்த்து, அக்னி குண்டத்தை வலம் வந்து, அங்கு வைத்திருந்த முருகன் படத்தில் விழுந்து வணங்கினர். பின்னர், அந்த முருகப் பெருமானின் பிரம்மாண்ட சிலைக்கு முன்னால் நின்று படங்களை எடுத்தவர்கள், ஜோடியாய் படிக்கட்டு ஏறிச் சென்று முருகனைத் தரிசித்து ஆசி பெற்று விட்டு, திருமணத்திற்கு வந்திருந்த உற்றார் சுற்றத்தாருடன் அமர்ந்து திருமணப் பந்தியில் உண்டு விட்டு தங்களது வீட்டை நோக்கிப் பயணத்தைத் தொடர்ந்தனர். அவர்களின் இல்லறப் பயணமும் இனிதாய் தொடங்கியது.