• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

மேகம் 19

STN-116

Active member
MTN 19

ஆவி பறக்க சிவப்பு அரிசிச் சோறு, மசாலா மணம் வீசும் காரமான கோழிக்கறி, தேங்காய்ப்பால் சேர்த்த கெட்டியான பரிப்பு (பருப்பு) கறி, கண்டியின் தனித்துவ உணவான இளம் பலாக்காயை மசாலா மற்றும் தேங்காய் துருவல் சேர்த்துச் செய்யும் ஒரு வறுவல் போலோஸ் கறி, பொரித்த கத்தரிக்காயில் வினிகரும் கடுகும் சேர்த்துச் செய்த வம்பட்டு மோஜு மற்றும் இலங்கையின் மிகப்பிரபலமான இனிப்பான வட்டலாப்பம் என்று, தரிந்துவின் வீட்டுச் சாப்பாட்டு மேசை கண்டியின் பாரம்பர்ய சிங்கள உணவு வகையறாக்களால் நிறைந்திருந்தது.

காலையிலிருந்து கண்டியின் மலைச்சரிவுகளிலும் பூங்காக்களிலும் அலைந்து களைத்திருந்த அவர்களுக்கு, அந்த உணவு நாவிற்கு விருந்தளிக்கும் தேவாமிர்தமாகவே இறங்கியது.

ருசியான அந்த உணவுகளை விடவும், தங்களை இன்முகத்துடன் வரவேற்றுத் தாய்மை கலந்த கனிவோடு அதைப் பரிமாறிய வத்சலாவின் அன்பும், எந்த அந்நியமும் இன்றித் தங்களோடு சரிசமமாக அமர்ந்து, விகடமாகப் பேசிக் கலகலப்பூட்டிய ஜகத்தின் குணமுமே அவர்களுக்கு இன்னும் அதிகமாகப் பிடித்திருந்தது.

அந்தச் சாப்பாட்டு மேஜையில், உணவை விடவும் அன்பே அதிகமாகப் பரிமாறப்பட்டதை அனைவரும் உணர்ந்தனர்.

"நிறைய நாளைக்கு பிறகு பொலொஸ் கறி சாப்பிடுறன் ஆண்ட்டி... சுப்பிரியா இருக்கு..." என்று ரசித்துச் சாப்பிட்டபடி பாராட்டினாள் நிம்மி.

"ஓமோம் அன்ட்ரி... இந்த மாதிரி ஒரு சாப்பாட்டை நான் சாப்பிட்டதே இல்ல... அவ்வளவு ருசியா இருக்கு... உங்களின்ர பாஷைல சொல்லோணும் எண்டால்... 'ஹரிம லஸ்ஸனை' (மிகுந்த அழகு)" என்று சப்புக்கொட்டினாள் சுபா.

அவள் சொன்னதைக் கேட்டு அனைவரும் ஒரு நிமிடம் திகைத்துவிட்டுப் பின் பலமாகச் சிரிக்க,

"அடியேய்... அது 'ஹரிம லஸ்ஸனை' இல்ல... 'ஹரிம ரஸை' (மிகுந்த சுவை) லஸ்ஸனை எண்டால் வடிவு எண்டு அர்த்தம்..." என்று பாத்திமா அவளைத் திருத்தினாள்.

"எல்லாம் எனக்குத் தெரியும்... நான் அன்ட்ரி இந்த டிஷ்ஷை டெக்கரேட் பண்ணி பிரசெண்ட் பண்ணியிருக்கிற விதம் வடிவா இருக்கு எண்டு தான் அப்படி சொன்னனான்..." விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டாத கதையாகச் சுபா சமாளித்தாள்.

"இவளுக்குப் பசி மயக்கம்... அதுதான் வாய் உளம்புறாள்... இதில இருக்கிற பாதி டிஷ்ஷிண்ட பெயர் கூட அவளுக்குத் தெரியாது... ஆனால் எப்படி சப்புக் கொட்டுறா பாருங்களேன்.. " என்று சிவா அவளைக் கலாய்க்க, அந்த இடமே சிரிப்பொலியால் நிறைந்தது.

வத்சலா கனிவோடு சுபாவின் அருகே வந்து,

"இன்னும் கொஞ்சம் வைக்கவா துவ...(மகள்)" என்று கேட்டார்.

"போடுங்கோ அன்ட்ரி... நான் எல்லாம் இவனை மாதிரி சீன் போட மாட்டன்... வயித்துக்கு வஞ்சகம் இல்லாம சாப்பிடுற ஆள் நான்... வெரி மச் டிஸ்டர்பன்ஸ் ஹியர்... "என்று சிவாவைப் பார்த்து நாக்கைத் துருத்திக் காட்டிச் சொன்னாள் சுபா.

"சுபா துவ எண்ட கட்சி... நாங்க எல்லாம் சாப்பிடவே பிறந்த சனம்..." என்று ஜகத்தும் அவளோடு ஒத்தூத, சிரிப்புச் சத்தம் இன்னும் அதிகமானது.

சுற்றி நடக்கும் களேபரங்கள் எதையும் உணராதவர்களாய், இதழ் விரியாப் புன்னகையுடன், பார்வைகளால் தங்களுக்குள்ளே சம்பாஷித்துக்கொண்டு, ஒரு தனி உலகத்தில் லயித்திருந்தனர் தரிந்துவும் மேகலாவும்.

அவனது கைகளோ அதன்பாட்டுக்கு அவளுக்குத் தேவையானவற்றைப் பார்த்துப் பார்த்து எடுத்துத் தட்டில் வைத்துக் கொண்டிருந்தன.

தரிந்துவின் வீட்டை நெருங்கும் போதே மேகலாவிற்குள் ஒரு இனம் புரியாத சிலிர்ப்பு ஏற்பட்டது. அடர்ந்த மரங்கள் போர்த்திய பசுமைக்கு நடுவே, ஒரு தேவதை போலக் காட்சியளித்தது அந்த வெள்ளை நிற மாளிகை. அந்த வீட்டின் அமைதியும், குளிர்ந்த காற்றும் அவளது படபடப்பைக் குறைத்து ஒருவித நிம்மதியைப் படரவிட்டது.

அந்த வீட்டின் அழகை விடவும் அதிகமாக கவர்ந்தது, அவளை வரவேற்ற விதம். அவர்களின் பாரம்பரிய வழக்கப்படி, வெற்றிலை கொடுத்து இன்முகத்தோடு வரவேற்றனர் தரிந்துவின் பெற்றோர்.

ஏற்கனவே மருத்துவமனையில் அறிமுகம் இருந்ததால் அவர்கள் மிகவும் இயல்பாகப் பேசிப் பழகினர். ஆனால், மேகலாவிற்குத் தான் ஒருவித இனிய கூச்சம் அவளைப் பேச விடாமல் தடுத்தது.

நண்பர்கள் வருவதற்கு இன்னும் சற்று நேரம் இருந்ததால், தரிந்து அவளை அழைத்துச் சென்று தனது வீட்டைச் சுற்றிக் காட்டினான். மாடியேறி ஒரு அறையின் முன்னே வந்து நின்றபோது, தரிந்து குறும்புடன் அவளைப் பார்த்து ஒரு கண்ணைச் சிமிட்டினான். அவனது அந்தப் பார்வையின் அர்த்தம் புரிந்தவள், சட்டெனத் தடுமாறிப்போனாள்.

“நான்… நான்… கீழ மாமிட்ட போறன்…” என்று அவள் படபடப்புடன் நகர முயன்றாள்.

அவளது அந்தத் தடுமாற்றத்தைக் கண்டு சத்தமாகச் சிரித்த தரிந்து, அவளுக்கு மிக அருகில் வந்து, தன் நெற்றியை அவளது நெற்றியோடு மென்மையாக முட்டித் தேய்த்தான்.

"அவ்வளவு பயமா வலாகுழு... பயவென்ன எபா... (பயப்படாதே) நான் எல்லாம் ஜெண்ட்ல் மேன் மா... இப்போதைக்கு கதவுக்கிட்ட நிண்டு ஜஸ்ட் எட்டிப் பார்... கசாதயட பஸ்ஸே (திருமணத்திற்கு பிறகு) நானே உன்ர கையப்பிடிச்சு உள்ள கூட்டிக்கொண்டு போறன்..." என்று அவளை ஆசுவாசப்படுத்தினான்.

அவனது அந்தப் கண்ணியமான வார்த்தைகளில் மேகலா மெய்சிலிர்த்து, ஒரு வெட்கச் சிரிப்பை அவள் உதடுகளில் மலரச் செய்தது.

அவளை மெதுவாக மொட்டை மாடிக்கு அழைத்துச் சென்றான். அங்கே அழகிய பூச்செடிகள் வரிசையாகத் தலை அசைத்துக் கொண்டிருக்க, அங்கிருந்து பார்த்தால் எங்கும் பரந்த பசுமை இழையோடியிருந்தது. இருள் மெல்லக் கவியத் தொடங்கிய அந்த வேளையில், தூரத்தில் தெரிந்த மின்விளக்குகளின் ஒளி, கண்டி நகரை ஒரு மின்னும் வைர மாலையாக மாற்றியிருந்தது.

அந்த அழகை ரசித்தபடி நின்றவளை, அங்கிருந்த மர ஊஞ்சலில் அமர வைத்தான் தரிந்து. மெதுவாக அவளது மென்விரல்களைத் தன் கையில் ஏந்தினான். அவளது விரல் நுனிகளின் சிலிர்ப்பை உணர்ந்தவாறே, தன் பாக்கெட்டில் இருந்து இளநீல நிறக் கல் பதித்த ஒரு அழகான மெல்லிய தங்க மோதிரத்தை எடுத்தான். கணப்பொழுதில் அவளது விரலில் அதை அணிவித்து விட, மேகலா கண்கள் விரிய அதையே ஸ்தம்பித்துப் பார்த்துக் கொண்டிருந்தாள்.

"அச்சோ... ஏன் இதெல்லாம்... தங்கம் எல்லா..." என்று பதற்றத்தோடு கேட்டாள்.

அவன் அவளது விழிகளை ஆழமாக நோக்கி,
"என்ர ரத்தரங் வலாகுழுட்ட... (தங்க மேகத்திற்கு) ரத்தரங் முத்த... (தங்க மோதிரம்) இந்த நீலக்கல், உனக்கும் எனக்கும் பிடிச்ச வானத்தைக் குறிக்கும்..." என்று மென்மையாக அந்த விரலில் தன் இதழ்களைப் பதித்தான்.

வெட்கத்தில் முகம் செங்கொழுந்தாகச் சிவந்தாலும், அவளுக்குள் ஒரு பயம் எட்டிப் பார்த்தது.

"அச்சோ... இதெல்லாம் வேணாமே தரிந்து... வீட்டில பார்த்தா விசாரிப்பினம்..." என்றாள் தயக்கத்துடன்.

"அடுத்த மாசம் வரப்போற உன்ர பிறந்தநாளுக்கு, உன்ர பிரெண்ட்ஸ் குடுத்த கிப்ட் எண்டு சொல்லு... நான் சிவாகிட்டயும் சுபாகிட்டயும் சொல்லுறன்..." என்று அவளது பயத்தைப் போக்கினான்.

“ஆனாலும்... இதெல்லாம் ஏன் தரிந்து?” என்று நெகிழ்ச்சியில் கண்கள் கலங்கக் கேட்டாள் மேகலா.

அவன் அவளது கைகளைத் தன் கைகளுக்குள் பொதிந்து கொண்டு,
"நான் உனக்கு போட்டு விடுற நிச்சய மோதிரம் எண்டு வெச்சுக்கொள்ளன்... இதை நீ எண்டைக்குமே கழட்டக் கூடாது... அப்படி நீ இதைக் கழட்டினாய் எண்டால் நான் செத்துட்டதா அர்த்தம்..." என்று அழுத்தமான குரலில் கூறினான்.

அவன் வாயிலிருந்து வந்த அந்த வார்த்தைகளைக் கேட்டுத் துடித்துப் போனாள் மேகலா.

"என்ன கதைக்கிறனீங்க..." என்று பதற்றத்தில் அவன் வாயைப் பொத்தி, அப்படியே அவனது நெஞ்சில் சாய்ந்து தேம்பி அழுதாள்.

அவளது அந்தத் தீடீர் அணைப்பில் அவன் உடலில் ஒரு மின்சாரம் பாய்ந்த உணர்வு. அவளை இன்னும் அழுத்தமாகத் தன் அணைப்பிற்குள் சிறைப்படுத்தியவன்,

"இந்த அணைப்புக்காக எத்தனை தரம் வேணும் எண்டாலும் சாகலாம் போலயே..." என்று அவளது காதோரம் முணுமுணுக்க, அவனது முதுகில் ஒரு பலமாய் ஒரு அடி விழுந்தது.

மெதுவாக அவளது முகத்தை ஏந்தி, இமைகளில் தளும்பி நின்ற நீர்த்துளிகளைத் தன் விரல்களால் மென்மையாகத் துடைத்து அவளைத் தேற்றினான். பின், அவளது இரு கண்களிலும் ஆழமாக அழுத்தித் தன் முத்தத்தைப் பதித்தான். அந்த ஸ்பரிசத்தில் மேகலாவின் கன்னங்கள் சிவப்பேற,

"மகே பண..." (எனது உயிர்)

என்று கண்களில் காதல் மின்ன அவளது கன்னங்களைப் பற்றி லேசாக ஆட்டிவிட்டான்.

தங்களுக்குள்ளே ஒரு தனி உலகத்தைப் படைத்திருந்த அந்தத் தருணத்திலிருந்து அவர்கள் இருவரும் மீண்டு கீழே இறங்கி வரவும், அவளது நண்பர்கள் குழாம் ஆரவாரத்துடன் வீட்டை வந்தடையவும் சரியாக இருந்தது.

தரிந்துவின் பெற்றோரின் கனிவான வரவேற்பு நண்பர்களுக்கும் மிகவும் பிடித்துப்போக, அந்த இரவு விருந்து நகைச்சுவையும், அன்பும் நிறைந்த ஒரு மறக்க முடியாத இனிய நிகழ்வாக நிறைவடைந்தது.

சிரிப்பும், கலாட்டாக்களுமாக நேரத்தைக் கடத்தியபின், இரவு பதினொரு மணியளவில் அனைவரும் ஒருவாறாக அங்கிருந்து கிளம்பத் தயாராகி, தரிந்துவின் குடும்பத்தாரிடம் விடைபெற்றனர்.

கிளம்பும் தருணத்தில் மேகலா மட்டும் மௌனமாகத் தரிந்துவைப் பார்த்தாள். அவளது கண்களில் பிரிய மனமில்லாத தவிப்பு இழையோடியது. அவன் அவளது கண்களை நேராக நோக்கி, ஒரு மெல்லிய தலையசைப்பின் மூலம் விடை கொடுத்தான். அந்த ஒற்றைத் தலையசைப்பில் 'பத்திரமாகப் போய் வா' என்ற அக்கறையும், 'உனக்காக நான் இங்கிருப்பேன்' என்ற காதலும் பொதிந்திருந்தது.

தன் இதயத்தின் ஒரு பகுதியை அங்கேயே விட்டுச் செல்பவள் போல, தரிந்துவை விட்டுப் பிரிய மனமில்லாமல் கனத்த இதயத்துடன் மேகலா காரில் ஏறினாள்.

நாட்கள் வாரங்களாகி, வாரங்கள் மாதங்களாகி, இரண்டு வருடங்கள் உருண்டோடிவிட்டன.

அந்த இரண்டு வருடங்களில், எப்போதாவது நிகழும் நேரடிச் சந்திப்புகளும், எப்போதும் துணையாக இருக்கும் அலைபேசி உரையாடல்களுமே அவர்களது உலகமாக இருந்தன.

நாளொரு வண்ணமும் பொழுதொரு மேனியுமாக அவர்களது காதல், காலத்தின் கரங்களால் செதுக்கப்பட்டு இன்னும் ஆழமாக வேரூன்றி வளர்ந்தது.

அன்று மேகலா பணியில் இருந்த துபாயிலிருந்து இலங்கை வரும் அதே விமானத்தில், தனது அலுவல் நிமித்தமாகத் தரிந்துவும் பயணித்தான். அங்கே மேகக்கூட்டங்களுக்கு நடுவேயும் அவர்களது காதல் அரங்கேற, துரதிஷ்டவசமாக அதே விமானத்தில் காஞ்சனாவும் பயணித்துக் கொண்டிருந்தாள்.

விளைவு... உருத்திர மூர்த்தியாகக் கண்கள் சிவக்க ஆத்திரத்தில் தகித்துக்கொண்டிருந்த முரளியின் முன்னே, அச்சத்தில் உறைந்து நின்றிருந்தாள் மேகலா.




 

STN-116

Active member
வட்டலாப்பம் எனக்கு பிடிக்கும்
விஸ்லி வந்திட்டாளா
எனக்கும் பிடிக்கும்...
அவ இனிமேல் தான் வந்து குட்டையை குழப்புவாள்
 
Top Bottom