• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

மையல் மீளுதே மேகவியே - 16

Vishakini

Moderator
Staff member


மையல் 16

அலுவலகத்திற்குள் நுழைந்த மேகவியின் மீதுதான் அனைவரது கண்களும் இருந்தது. நெற்றிக் குங்குமமும், கையில் இருந்த உணவுப் பையும் காண்போருக்குப் புதியவளாக அவளைக் காட்சிப் படுத்திக் கொண்டிருந்தது.

மற்றவரின் பார்வையைக் கண்டும் காணாதது போல் கடந்து சென்றாள். எப்பொழுதுமே அவள் அப்படித்தான் என்பதால், பெரிதாய் எவ்வித புறம் பேசுதலும் அலுவலகத்தில் நிகழவில்லை. ஆனால் பணிபுரிபவர்களிற்கு இடையே மெலிதான சலசலப்பு மட்டும் இருந்தது.

தனக்கான இருக்கையில் அமர்ந்து வேலையைத் துவக்கிட, அறையின் கதவைத் தட்டிவிட்டு வெளியே காத்திருந்தான் மேகவிக்குக் கீழே பணி செய்யும் ஒருவன்.

"யா.. கம் இன்!"

கரத்தில் இருந்த கோப்பை அவளின் முன்பான மேஜையில் வைத்தவன், "நேத்து நீங்க செக் பண்ணச் சொன்ன ஃபைல் மேம்!"

"ஓகே, நான் பார்த்துக்கிறேன்!"

அவன் நகராமல் நிற்க, கேள்வியாய் நோக்கினாள்.

"என்ன?"

"ஒரு விஷயம் மேம்."

தட்டச்சு செய்து கொண்டிருந்த வேலையை நிறுத்தி விட்டு, அவன் பக்கம் பார்வையைத் திருப்பினாள்.

"குங்குமத்தை மேல ஏத்தி வச்சிருக்கீங்க மேம். மேரேஜ் ஆனவங்க தான்.." எனப் பாதியில் நிறுத்திட, "கரெக்டா தான் வச்சிருக்கேன்."

அவன் திகைத்து, "மேம்..?"

"ஐம் மேரீட். எனி இஷ்யூஸ்?"

"நோ.. நோ.. மேம். வி டிட் நாட் எக்ஸ்பெட். சோ.." எனப் பதற்றத்துடன் அவன் பதில் உரைக்க, இருக்கையில் சாய்ந்து அமர்ந்து புன்னகைத்தாள்.

"ஓகே! சில். மேரேஜுங்கிறது என்னோட பர்சனல். யார்க்கிட்டயும் சொல்ல வேண்டிய அவசியம் இல்லனு நினைச்சேன்!"

"அது, ஓகே மேம். நீங்க பொதுவாவே வொர்க்கைத் தவிர வேற எதைப் பத்தியும் யார்க்கிட்டயும் பேச மாட்டீங்க. ஆனா, இது லைஃப்ல ஒன்டைம் மொமண்ட் இல்லையா? அதுனாலதான் தெரிஞ்ச எல்லாரையும் இன்வைட் பண்ணி கல்யாணத்தை நடத்துறாங்க. எங்களை மாதிரி கொலிக்ஸ் கிட்டயாவது சொல்லி இருக்கலாமே? நாங்க எல்லாம் வந்து விஷ் பண்ணி இருப்போம்ல?"

'எனக்கே கல்யாண விஷயம் தெரியாதே.? இதுல எங்க இருந்து உங்கக்கிட்ட எல்லாம் சொல்ல?' என மனதில் எண்ணியவள், "வீட்டுல திடீர்னு அரேஞ்ச் பண்ணீட்டாங்க. எனக்கே லாஸ்ட் மினிட் தான் சொன்னாங்க. அதோட ஊர்ல வேற நடந்துச்சு. அதான் இங்க யார்க்கிட்டயும் சொல்லல!" என்று தன் மீது இருக்கும் அவனது நல் எண்ணத்திற்காக விளக்கம் தந்தாள்.

"அரேஞ்ச் மேரேஜா மேம்?" என வினவியவனின் குரலில் ஏகத்திற்கும் வியப்பு.

அதை உணர்ந்து புன்னகைத்த மேகவி, "எஸ்.."

"உங்க கேரக்டருக்கு, இப்படி வீட்டுல பார்க்கிற பையனை மேரேஜ் பண்ணுவீங்கனு நான் எக்ஸ்பெட் பண்ணல!"

"நானே எக்ஸ்பெட் பண்ணல!" என வாய்க்குள்ளேயே முணுமுணுத்தவள் சிரித்து சமாளிக்க, "எனிவே.. கங்கிராட்ஸ் மேம். மேரேஜுக்குத்தான் இன்வைட் பண்ணல. இங்க ரிசப்ஷன் மாதிரி ஃபங்ஷன் ஏதாவது வைக்கலாம்ல? நாங்களும் எங்க பங்குக்கு வந்து விஷ் பண்ணுவோம்?"

"நான் சொல்லுறேன்!" என்றவள் தலை அசைக்க, அதற்கு மேல் அவளிடம் பேச முடியாது என உணர்ந்து வெளியேறினான் அவன்.

தங்களது குழு தலைவியின் அறையில் இருந்து வந்தவனை, உடன் பணி செய்பவர்கள் விசாரணைக்காக சூழ்ந்து கொள்ள.. அலுவலகத்தின் அன்றைய காலை நேர தலைப்புச் செய்தி மங்கையின் திருமணம் தான்.


எப்பொழுதும் போல் அதையும் கண்டு கொள்ளாமல் நேரத்தை நகர்த்தினாள் பாவை. நண்பகலிற்கு மேல் தலைப்புச் செய்தியின் கரு மாற்றம் அடைந்தது. அதற்குக் காரணம் சத்திய கீர்த்தி.

பொதுவாய் ஆர்டர் செய்து மதிய உணவை உண்ணும் மேகவி அன்றைய தினம் இல்லத்தில் இருந்து எடுத்து வந்ததால், அனைவரது பார்வையும் அவளின் மீது தான் இருந்தது.

மூன்று அடுக்கில் ஒரு ஜான் உயரத்திற்கு இருந்தது, உணவு பாத்திரம். முதலில் மேல் அடுக்கைத் திறந்திட, 'ஹேவ் எ நைஸ் டே பொண்டாட்டி!' என்ற வாசகத்தோடு இனிப்பு ஒன்று கண்களை நிறைத்தது.

'லஞ்சுக்கு சாக்லெட்டை கொடுத்து விட்டிருக்கிற ஒரே அதிபுத்திசாலி இவனா மட்டும் தான் இருப்பான்!' என மனதிற்குள் கணவனிற்கு சிறியதாய் அர்ச்சனை நடத்தியவள், இரண்டாவது அடுக்கைத் திறந்தாள்.

பாதி அளவிற்கு மாதுளை முத்துகள் இருக்க, அதன்மேல் சிறிய கிண்ணத்தில் புதினா துவையல் இருந்தது.

முதல் அடுக்கில் இருப்பதை காலையே அவன் உரைத்து இருந்தான்.

'என்னை என்னனு நினைச்சான் இவன்? என்னமோ ஸ்கூலுக்குப் போற அஞ்சு வயசு குழந்தைக்குப் பிரிபர் பண்ணுற மாதிரி.. சாப்பாடு, ஃபுரூட்ஸ், சாக்லெட்னு லஞ்ச் பாக்ஸை பேக் பண்ணி இருக்கான்?' என நினைத்தவளிற்கு சிரிப்பும் எரிச்சலும் ஒருசேர வந்தது.

சத்தியின் மீதான எந்த ஒரு உணர்வையும் இதுதான் எனத் தெளிவுடன் அவளால் வெளிக்காட்ட இயலவில்லை. வெல்லத்தில் கலந்திருக்கும் உப்பைப் போலவே, ஒவ்வொரு விஷயத்திலும் அவளிற்கு கலவையான எண்ணங்களைக் கொடுத்து, ஒருவித குழப்பத்திலேயே வைத்திருந்தான் ஆடவன்.

'கலங்கிய குட்டையில் தானே மீனைப் பிடிக்க இயலும்?'

அதுபோல பாவையின் சிந்தையைக் குழப்பிவிட்டு மனதைப் பிடிக்கும் வழியைச் செயல் படுத்திக் கொண்டிருந்தான்.

உணவை முடித்த மேகவி, மாதுளை முத்துகளை ஒவ்வொன்றாய் எடுத்து முன் பற்களால் கடித்து, அதன் சாறை உள்ளிழுத்து பின் அதன் விதையையும் மென்று விழுங்கிக் கொண்டிருந்தாள். மங்கையே அறிந்திடாமல், அவளிற்குள் இருக்கும் விளையாட்டுச் சிறுமி அவ்வப்போது வெளியே எட்டிப் பார்த்து வேடிக்கைக் காட்டினாள்.

கணவனானவன் 'துணைவியின் ஆழ்மனதிற்குத் தூண்டிலிட்டு, மெல்ல மெல்ல உணர்வுகளின் பாதையில் இழுத்து வருகிறான்!' என திட்டவரைவாகக் குறிப்பிட்டால் சரியாய் இருக்கும் போலும்.

"டிஃபன் பாக்ஸை பார்த்தா, மேம்மோட ஹஸ்பெண்ட் பிரிபர் பண்ணிக் கொடுத்த மாதிரி தெரியிது!" எனப் பணியாளர்களுக்கு இடையே இரகசிய பேச்சு நடைபெற, அது இரண்டாவது தலைப்புச் செய்தியாய் மாற்றம் அடைந்தது.

யாரானாலும் தன்னை விட்டு எட்டவே நிற்க வைத்துப் பழகுபவள் மேகவி. பெண்கள் என்றால், அவசியமான தருணங்களில் சிறிதளவு கரிசனம் மட்டும் எட்டிப் பார்க்கும்‌‌. ஆண்கள் மீது நம்பிக்கை அற்றவள், அவர்களுக்காக துரும்பைக் கூட அசைக்க மாட்டாள்.



இதுதான் அவளின் குணம் என்று உடன் வேலை செய்யும் அனைவருமே அறிவர் என்பதால், அவ்வப்போது எழுந்த கிசுகிசுப்பான பேச்சுகள் கூட பின்னர் அந்தத் தடம் தெரியாமல் மறைந்து போனது.


மாலை வரையிலான பொழுது கடந்து சென்றது தெரியவில்லை. வழக்கமான நேரத்திற்கு இல்லம் வந்து சேர்ந்தாள் மேகவி.

முதல் நாளைய இரவில் இருந்து நடந்த நிகழ்வுகளினால், மனமானது திறந்திருக்கும் இல்லத்திற்குள் இருப்பவனது செயல்பாட்டினை அனிச்சையாய் எதிர்நோக்க ஆரம்பித்து விட்டது.

அலமாரியில் காலணியை வைத்து விட்டு வர, அமைதியே வரவேற்றது.

'என்னடா இது? வீட்டுல இல்லையா அவன்? எப்பவும் ஏதாவது ஒன்னு செஞ்சிட்டு இருப்பானே..?' என எண்ணியபடி கூடத்திற்குள் நுழைய, பெரும் அதிர்ச்சி.

தாரிகாவும் சத்தியும் எதிரெதிரே அமர்ந்து இருந்தனர்.

'இவங்க ரெண்டு பேரும் இவ்வளவு சைலண்டா இருக்காங்களா? சான்ஸே இல்லையே?' என்று அருகே சென்று பார்க்க டீபாயின் மீது சதுரங்க பலகை விரிக்கப்பட்டு, வெள்ளை மற்றும் கருப்பு வண்ணத்தில் குதிரைகளும் சிப்பாய்களும் அங்கங்கு நகர்ந்திருந்தன.

"அடப்பாவிகளா! இங்க ஒருத்தி வந்ததைக் கூட கவனிக்காம ரெண்டு பேரும் இப்படி விளையாடுறீங்க?" என மேகவி கேட்டிட, "நான் சொன்னேன்ல ப்ரோ?" என்றாள் தாரிகா.

சத்தி மனைவியைப் பார்த்து ஒற்றைக் கண்ணை சிமிட்டிச் சிரித்திட, அவள் புரியாமல் விழித்து, "என்ன சொன்ன?" என வினவினாள் தோழியிடம்.

"நீயா வந்து எங்கக்கிட்ட பேசுவனு ப்ரோக்கிட்ட பெட் கட்டுனேன்."

"பெட்டா..?" என்ற மேகவியின் குரலில் மிதமிஞ்சிய வலி எட்டிப் பார்த்தது.

இருவருமே அந்நொடியில் அவளிடம் ஏதோ மாற்றத்தை உணர, "ஹேய் சீரியஸா எல்லாம் ஒன்னும் இல்ல. சும்மா விளையாட்டுக்குத்தான்."

"எது விளையாட்டு?" என சினத்துடன் கேட்டிட, அமைதியாய் நோக்கினர் அவளை.

கணவனையும் தோழியையும் கனல் பார்வை பார்த்த மேகவி, "என்ன பெட்?"

"காஃபி!"

"ஹான்..?"

"நான் சொன்ன மாதிரி நடந்தா, ப்ரோ எனக்குக் காஃபி போட்டுக் கொடுக்கணும்."

"ஓ... நடக்கலேனா?"

"நான், அவருக்குப் பக்கத்துல இருக்கிற சூப்பர் மார்க்கெட்டுக்கு வழி காட்டணும்!"

"இது என்ன, சின்னப் பிள்ளத்தனமா? ரெண்டு பேருக்கும் இன்னும் ஸ்கூல் போற பிள்ளைகனு நினைப்பா?"

மெலிதான பெருமூச்சை வெளி விட்டபடி எழுந்த சத்தி, "உனக்கு என்ன பொண்டாட்டி வேணும், காஃபியா டீயா?"

"எனக்கு எதுவும் வேண்டாம்!" என்றவள் அறையை நோக்கிச் செல்ல, "வரும்போது ஓகேவா தான இருந்த? அதுக்குள்ள என்ன ஆச்சு?" எனப் பாவையின் கைப்பற்றி நிறுத்தினான் அ
ஆடவன்.

அவனது கரத்தைத் தட்டி விட்டவள், "என்னை வச்சு பெட் கட்டுனியா கீர்த்தி?"

"நான் இல்ல.. சிஸ்டர் தான்."

"அவ சொன்னா, நீ செய்வியா? என்னை அவ்வளவு சீப்பா நினைச்சிட்டியா?"

"ஏய்! லூசுத்தனமா என்ன பேச்சு இது?" என அவன் கண்டிக்க, "க்ளௌட், என்னடி? இப்படி எல்லாம் பேசுற? ஸாரி ப்ரோ!" என்ற தாரிகா வாடிய முகத்துடன் அங்கிருந்து நகர்ந்தாள்.

"சிஸ்டர்.."

சத்தியின் குரலில் நிதானித்தவள் வலிந்த முறுவல் ஒன்றை சிந்த, கண்மூடித் திறந்து பார்வையாலேயே ஆறுதல் உரைத்து அனுப்பினான்.

அவள் சென்று விட்டதை உறுதி செய்து கொண்டவன், அடுத்ததாய் மனைவியின் பக்கம் திரும்பிட, உடல் தளர்ந்து கூடத்தில் இருந்த இருக்கையில் அமர்ந்து இருந்தாள் அவள்.

"மேகவி!"

கணவனின் அழைப்பில் சட்டென்று நிமிர்ந்து பார்த்தாள்.

முதன் முதலாய் பெயரைச் சொல்லி அழைக்கிறான். 'பொண்டாட்டி' என்று மூச்சு விடுவது போல் ஓயாமல் உரைப்பவனின் அந்த தொனியானது, எத்தனை இனிமையானது என இந்நொடியில் அவளிற்குப் புரிந்தது.

"என்ன ஆச்சு உனக்கு?"

"ஒன்னும் ஆகல!"

"இதை நான் நம்புவேன்னு நினைக்கிறியா?"

"என்னைக் கொஞ்சம் தனியா விடுறியா?"

"நான் கேட்டதுக்கு முதல்ல எனக்குப் பதில் வேணும். அப்புறம் உன்னை நான் தனியா விடுறேன்!"

"ஏண்டா, என்னை இப்படிப் படுத்துற.? நான் எதை மறக்கணும்னு நினைக்கிறேனோ, அதையே ஞாபகப்படுத்தி விட்டு.." எனக் குரல் மெலிய உரைக்க, மனைவியின் கைப்பற்றி இழுத்து எழ வைத்து தன்னோடு அணைத்துக் கொண்டான் சத்தி.

"என்ன செய்யிற? விடு!"

"ஸு! எப்பப்பாரு விடு விடுனு ஓடத்தான் பார்க்கிற? உன் சம்பந்தப்பட்ட எல்லாரும் இங்க இருக்கும் போது, எங்களை விட்டு தள்ளிப் போயி தனியா என்ன செய்யப் போற நீ?"

"நான் ஏதோ செய்யிறேன், உனக்கு என்ன? இப்ப விடுறியா இல்லையா?"

"முடியாது!"

"மிஸ்பிஹேவ் பண்ணாத கீர்த்தி!"

சட்டென்று அவளை விலக்கி நிறுத்தியவன், "மிஸ்பிஹேவா.? அதுக்கான மீனிங் தெரியுமா உனக்கு? அழுகுற குழந்தையைச் சமாதானம் செய்யிறது போல, நான் உன்னைக் கட்டிப்பிடிச்சு முதுகுல தடவிக் கொடுத்து நார்மலா மாத்த டிரை பண்ணா, மிஸ்பிஹேவ் செய்யிறாங்களாம்? நீ எல்லாம் என்ன பொண்ணோ? ஆமா, பொண்ணு தான.?"

அவனை முடிந்த மட்டும் முறைத்தவள், எதுவும் பேசாமல் அறைக்குள் செல்ல, "என்ன பழக்கம் இது? பேசுறவங்களை மதிக்காம, சட்டுனு அங்கிருந்து கிளம்புறது?" என மீண்டும் கரம் பற்றி நிறுத்தினான்.

பாவையின் கண்கள் அவனது பிடியின் மீது படிய, "என்ன? கையைப் பிடிச்சு இழுத்து மிஸ்பிஹேவ் பண்ணுறேன்னு சொல்லப் போறியா?"

கணவனை நிமிர்ந்து நோக்கியவள், "ஏண்டா என்னை வச்சு பெட் கட்டுன நீ?"

"ஹேய்.. இது ஒரு சின்ன விசயம். அதுவும் இல்லாம உன்னை வச்சு பெட் கட்டல நாங்க."

"அப்புறம்?"

"எங்க ரெண்டு பேருல, உன்னைப் பத்தின புரிதல் யாருக்கு அதிகம்னு தான் பெட். 'நீ என்னைப் பெருசா கண்டுக்க மாட்ட'னு நான் சொன்னேன். சிஸ்டர், 'அதெல்லாம் இல்ல. அவளுக்கு உங்கமேல கன்சர்ன் இருக்கு'னு சொன்னாங்க. பட், ஐ டிட் நாட் எக்ஸ்பெட்டட், என் பொண்டாட்டிக்கு என்மேல அக்கறை இருக்குப் போலயே?"

"உன் மூஞ்சி! அக்கறையும் இல்ல சர்க்கரையும் இல்ல!"

"ப்ச்ச்.. இதைத்தான் நானும் சொன்னேன்?" என அவன் பெருமூச்சு விட, "எனக்குக் காஃபி வேணும்!"

"போயி ஃப்ரஷ் ஆகிட்டு வா. போட்டு வைக்கிறேன்."

"ரெண்டு கப்பா போடு. நானே ஸ்டாருக்குக் கொண்டு போயி கொடுத்துக்கிறேன்!"

"ம்ம்.. சரி!" என்றவன் சமையல் அறைக்குச் செல்ல, தன்னைத் தூய்மை செய்து கொள்வதற்காக நகர்ந்தாள் மேகவி.
 
Top Bottom