• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

மையல் மீளுதே மேகவியே - 23

Vishakini

Moderator
Staff member
மையல் 23

"பொண்டாட்டி." என்ற அழைப்பில் மடிக்கணினியில் இருந்த கவனத்தை கணவனின் பக்கம் திருப்பினாள் மேகவி.

"வொர்க் முடிய டைம் ஆகுமா?"

"எதுக்குக் கேட்கிற?"

"சீக்கிரம் முடிஞ்சா, வெளிய போகலாம்னு தான்."

புரியாது பார்த்தவள், "நீ வெளிய போறதுக்கும், என்னோட வொர்க் முடியிறதுக்கும் என்ன சம்பந்தம்?"

"அறிவு பொண்டாட்டி!" என அவளின் அருகே வந்து மூக்கை பற்றி லேசாய் ஆட்டியவன், "நீயும் நானும் சேர்ந்து போக தான் கேட்டேன்."

"ஹோ.. என்ன திடீர்னு?"

"இங்க வந்த பின்னாடி, ஆஃபீஸை தவிர வேற எங்கேயும் நம்ம ரெண்டு பேரும் ஒன்னா வெளிய போனது இல்ல, அதான். உனக்கு ஓகேனா போகலாம், இல்லனா நோ பிராப்ளம்."

"ம்ம்.. உன்னோட வொர்க் முடிஞ்சுதா?"

"அஞ்சு மணிக்கு மேல கோடி ரூபா கொடுத்தாலும் வேலை செய்ய மாட்டேன்னு சொல்லீட்டு ஓடி வந்துட்டேன்."

மெலிதாய் சிரித்தவள், "ஒரு ஹாஃப் ஹவர். நானும் முடிச்சுட்டு வர்றேன், போகலாம்."

"ஓகே." என அருகே அமர்ந்தவன், "எங்க போகலாம் ?"

"ஏன், நீ எதுவும் பிளான் பண்ணலயா?"

"இல்ல, நீ சொல்லு!"

"ம்ம்.." என்று சில நொடிகள் சிந்தித்தவள், "பீச் ஓகேவா?"

"பெசன்ட் நகர்? அஷ்டலட்சுமி கோவிலுக்குப் போயிட்டு அப்படியே பீச்சையும் பார்த்துட்டு வரலாம்."

"கீர்த்திக்கு கடவுள் பக்தி ரொம்ப அதிகமோ?"

"அப்படி சொல்லுறதுக்கு இல்ல. நம்மளை மீறி சில விஷயங்கள் நடக்கும் போது, நம்பிக்கைத் தர்ற மாதிரி ஏதோ ஒன்னு தேவைப்படுது இல்ல.? அந்த நம்பிக்கையா கடவுளைப் பார்க்கிறேன். சந்தோஷத்தையும் துக்கத்தையும் பகிர்ந்துக்கிறதுக்கான ஒரு சப்போர்ட்னு சொல்லலாம். நான், கோவில் கோவிலா சுத்துற ஆள் எல்லாம் இல்ல. சும்மா மனசுல நினைச்சு கும்பிட்டுக்குவேன், அவ்வளவு தான். தெய்வம் இருக்கிறதா சொல்லப்படுற இடத்துக்கு போயிட்டு வந்தா, ஒரு பாசிட்டிவ் எனர்ஜி கிடைக்கிற மாதிரி ஃபீல் ஆகும். அதுக்காக, தோணும் போது போயிட்டு வருவேன்."

"இப்ப எதுக்குப் போகணும்கிற?"

"அழகான, அதே நேரம் அறிவாவும் யோசிக்கிற பெண்ணை கல்யாணம் செஞ்சு இருக்கேன். சத்தி ஹேப்பி. சோ, அதை சாமிக்கிட்டயும் ஷேர் பண்ணிக்கலாம்னு தான்!"

"நிஜமாவே பேசுறதுக்கு உன்கிட்ட தான்டா கத்துக்கணும். டன் கணக்குல ஐஸைத் தூக்கி இப்படி மொத்தமா தலையில வைக்கிற?"

"அச்சோ! என் பொண்டாட்டிக்குச் சளி பிடிச்சிடுச்சா என்ன.?" என்று மனைவியின் மூக்கின் கீழே தொட்டுப் பார்த்துத் துடைத்து விட, "ச்சீசீ.. கையை எடு!" எனத் தட்டி விட்டவளிற்கு ஏனோ சிரிப்பு தான் வந்தது.

அவனும் சிரித்து, "உனக்குக் கோயிலுக்குப் போக இஷ்டம் இல்லையா.?' என வினவ, "அப்படி இல்ல. நானும் உன்னை மாதிரி தான். பொதுவாவே இங்க சென்னையில போறதுக்கு டைம் கிடைக்காது. ஊருல இருக்கிறப்ப அம்மா சில நேரம் கூட்டிட்டுப் போவாங்க. இதுவரைக்கும் நானா தனியா போனதே இல்ல. ஏன்னு தெரியல, போகணும்னு தோணவும் இல்ல."

"சரி! அப்ப இன்னைக்கு நான் கூட்டிட்டுப் போறேன் உன்னை."

தலை அசைத்துச் சிரித்தவள், "ஓகே நான் போயி ரெடி ஆகிட்டு வர்றேன்!" என்று விட்டு எழுந்து செல்ல, அவனும் தயாராகச் சென்றான்.

தம்பதியராய் இணைந்து எண்தேவிகளையும் தரிசனம் செய்து விட்டு, இருள் சூழத் துவங்கிய வேளையில் கடலினைக் காணச் சென்றனர்.

அன்று அலையின் வேகம் சற்று அதிகமாய் இருந்தது.

எட்டநின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த மனைவியை கவனித்த சத்தி, "என்ன, இப்படித் தள்ளி நின்னு பார்க்கவா வந்த.?"

"பின்ன.?"

"தண்ணியில விளையாட பிடிக்காதா உனக்கு?"

"ஹேண்ட்பேக், செப்பல் எல்லாம் யாரு பார்த்துப்பா.?"

"நான் எதுக்கு இருக்கேன்?" என்றவன் கைப்பையை வாங்கிக் கொள்ள, புரியாது பார்த்தாள் மேகவி.

"என்ன பொண்டாட்டி?"

"செருப்புக்கு காவல் இருக்கவா வந்த நீ.?"

"இல்ல, உனக்கு!" என உரைத்தவன் கண்களால் கால்களைக் காட்ட, காலணிகளைக் கழட்டினாள் மங்கை.

இதுவரை ஒன்றிரண்டு முறை தனியாகவும், சில முறைகள் தாரிகாவுடனும் கடற்கரைக்கு சென்று இருக்கிறாள்.

கடல்அலை பாதத்தை தீண்டிச் செல்லும் இடத்திற்குச் சென்று அசையாமல் அங்கேயே நின்று சிறிது நேரம் கால்களை நீரில் நனைத்துவிட்டு, கிளம்பி விடுவாள். அந்த உப்பு நீரில் உடல் நனைய மனம் நிறைந்து ஒருமுறைக் கூட விளையாடியது இல்லை.

ஆசை இருந்தும், அதனைச் செய்யாமலேயே இந்நாள் வரை கடந்து வந்திருந்தாள். அதற்குப் பல காரணங்கள் இருந்தன.

முதலாவது பாதுகாப்பு. தனி ஒருவளாய் அல்லது தோழிகள் இருவருமாய் வந்திருக்கும் நிலையில், மற்றவரின் பார்வை தங்களின் மீது பதிவதை மேகவி விரும்பவில்லை. அங்கிருந்த மக்களுக்கு இடையே தானும் ஒரு ஆளாய் இருந்துவிட்டு எவரது கவனத்தையும் ஈர்க்காது மறைந்திடுவாள்.

இரண்டாவது, பெண்மைக்கே உரித்தான எச்சரிக்கை உணர்வு. உடைமைகளுடன் நீரின் அருகே செல்ல இயலாது. ஏதேனும் தொலைந்து போனால், தேவையற்ற மனவருத்தமே மிஞ்சும். அதனால் ஏற்படும் பின்விளைவுகளும், எந்நிலையில் இருக்கும் என அறுதியிட்டுக் கூற இயலாதே?‌ எவ்வித விபத்தும் நிகழாது இருப்பதற்கான முன்னெடுப்பாய், அமைதியை கடைப்பிடித்து வந்தாள்.

மூன்றாவது அசௌகர்யம். உடை நனைந்து விட்டால், அதனோடு இல்லத்திற்குச் செல்வது என்பது சற்றே சங்கடமான விஷயம். உடலோடு ஒட்டிக் கொள்ளும் மணலோடு வேறு போராட்டம் நடத்த வேண்டும்.

இன்றைய தினம், அவளைக் கவனிப்பதற்காக கணவன் என்ற உறவில் சத்யகீர்த்தி இருந்தான்.

திரும்பி இல்லம் செல்லும் பொழுது, வாகனத்தை அவன் இயக்கிக் கொள்வான் என்பதால், அசௌகர்யமாய் இருந்தாலும் சமாளித்துக் கொள்ளலாம் என்பதால், "தேங்க்ஸ் கீர்த்தி!" என்றுவிட்டுச் சென்றாள்.

அரை மணி நேரத்திற்கும் மேலாக கடல் நீரில் விளையாடி, சிறு பிள்ளையாய் மாறி இருந்தாள் மேகவி.

கரையில் நின்று அவளைப் பார்த்தபடி, "ஹேய்.. அலை பெருசா இருக்கு பாரு. பொண்டாட்டி கவனம். பார்த்துப் பார்த்து. விழுந்துடாதம்மா!" என்று அவ்வப்போது வந்த சத்தியின் குரலால், அணிந்திருந்த உடை மார்பு வரை ஈரமான போதும், எவ்வித அசௌகர்யமும் தோன்றவில்லை மங்கைக்கு.

'ஒன்றும் ஆகாமல் தன்னை அவன் பாதுகாப்பாய் பார்த்துக் கொள்வான்!' என நம்பிக்கை இருந்தது.

ஆம்! நம்பிக்கை தான்! எந்த ஒன்று ஆண்கள் இனத்தின் மீது தனக்கு ஏற்படாது என்று உறுதியாய் எண்ணினாளோ, எதை கணவனின் மீது வைக்க இயலாது என உரைத்தாளோ, அந்த உணர்வானது இன்று உருவாகி இருந்தது அவளையும் அறியாமல். அவன் ஒருவன் மீது மட்டும்!

"நீ கொடுக்கிற கேர்.. என்னோட அண்ணா, அம்மா, அப்பத்தா, ஏன் ஸ்டார்கிட்ட இருந்து கூட கிடைக்கும் தான? இவங்களோடவும் என்னால வீட்டை சேர் பண்ணிக்க முடியும். அப்ப, ஹஸ்பண்டா என் லைஃப்ல உன்னோட ரோல் என்ன..?" என்று முந்தைய தினம் வினவியவளிற்கு, இத்தருணத்தில் அதற்கான பதில் கிடைத்துக் கொண்டிருந்தது.

தமையன் சாகரனை இதுபோல் துணைக்கு அழைத்தால், நிச்சயம் வருவான் தான். ஆனால் மேகவிக்கு இதுவரை ஏனோ அவனிடம் கேட்கத் தோன்றவில்லை. அத்தோடு காலம் முழுமைக்கும் இது சாத்தியமா என்றால், அதற்கான விடை கேள்விக் குறியே!

அவனிற்கு என்று தனியாய் ஒரு வாழ்க்கை உள்ளது. கவனம் செலுத்த, பாதுகாப்பு செய்ய, நேரத்தைச் செலவு செய்திட மனைவி இருக்கிறாள்.

திருமணத்திற்குப் பின்னர் துணைவி வந்து விடுவதால், தங்கை என்ற உறவு அனிச்சையாய் இரண்டாம் இடத்திற்குச் சென்று விடும். உடன் பிறந்தவனாய் இருந்தாலும் கூட, இனி உரிமையாய் எதையும் கேட்டுப் பெற இயலாது.

தந்தை உயிரோடு இருந்திருந்தால், அவர் வாழும் காலம் மட்டும் இவையெல்லாம் கிட்டியிருக்கும் தான். ஆனால் மேகவிக்குத்தான் அந்த கொடுப்பினை இல்லையே.?

அதனை ஈடுகட்டுவது போல், இன்று அந்நிகழ்வு நடந்து கொண்டிருந்தது.

'கணவன் என்பவன் நம்பிக்கையைத் தர வல்லவன்!' என மெல்ல புரிய துவங்கியது பாவைக்கு‌.

உண்மையில் சத்தியிடம் இருந்து இந்த நம்பிக்கையைத் தவிர்த்து, பொன்னோ பொருளோ எதுவும் தேவையில்லை அவளிற்கு. அனைத்து அடிப்படைத் தேவைகளையும் நிறைவேற்றிக் கொள்ளும் திறன் பெற்றவள். அதற்கான தைரியமும் உண்டு.

ஆனால் எவ்வித சந்தேகமும் கொள்ளாது ஓர் ஆணின் மீது முழுமையாய் நம்பிக்கை கொள்வது என்பது.?

மற்றவரைப் பற்றிச் சிந்திக்க துணியாத மனம், அவனிற்கு மட்டும் விதிவிலக்கு அளித்து இல்லத்திற்குள் இடம் அளித்தது‌. தற்போது இதயத்திற்கு உள்ளும்!

இமைகளைத் திறக்க விடாது செய்யும் கனத்த காற்றும், செவியை நிறைக்கும் அலைகளின் ஓசையும், சுவாசத்திற்குள் நிறையும் உப்பின் வாசமும், ஈரத்தில் இறுகும் உடலும் என புதிய அனுபவமாய் இருந்தது மேகவிக்கு.

கரையில் நின்றிருந்த ஆடவனை நோக்கினாள்.

"கீர்த்தி.." என குரல் கொடுத்து 'வா.' என்பது போல் கை அசைத்திட, அங்கிருந்த இரைச்சலில் மனைவியின் அழைப்பு கேட்காது போயினும், அவளின் உடல் மொழியையும் கை அசைவின் பொருளையும் உணர்ந்து அருகே சென்றான்.

"என்ன.?"

"நீயும் வா.."

இடக்கையில் இருந்த அவளின் காலணிகளைக் காட்டினான்.

"கீழ போட்டுட்டு வா."

"தொலைஞ்சிடப் போகுது."

"போனா போயிட்டுப் போகுது."

சின்னதாய் சிரித்தவன், "நான் என்னோடதை மிஸ் பண்ண தயாரா இல்ல."

"நான் வேணும்னா உனக்குப் புதுசா ரெண்டு ஜோடி வாங்கித் தர்றேன். வா!"

அவளைச் சற்றே வியப்பாய் நோக்கியவன், "பெரிய மனசு பொண்டாட்டி உனக்கு!"

"பாவி! டயலாக்கா பேசி டைம் வேஸ்ட் பண்ணிக்கிட்டு இருக்க? வாடான்னா.?"

இருவரது காலணிகளையும் ஓரமாய் வைத்துவிட்டு, மனைவியின் கைப்பையை மட்டும் மார்பிற்குக் குறுக்காய்ப் போட்டுப் பத்திரப்படுத்திக் கொண்டு, கால்சராயினை முழங்கால் வரை மடித்து விட்டபடிச் சென்றான்.

கணவனின் கரத்தைப் பற்றிக் கொண்டாள் மேகவி.

"எதுக்குக் கூப்பிட்ட.?"

"எவ்வளவு நேரம் தனியா நின்னு வேடிக்கைப் பார்த்துட்டு இருப்ப? அதான் கூப்பிட்டேன்."

"பாருடா. என் பொண்டாட்டிக்கு என்மேல இருக்கிற அக்கறையை!"

அவனை ஆழ்ந்து பார்த்தவள், "நீ இந்த மாதிரி அப்பப்ப கிறுக்குத்தனமா பேசாம இருக்கிறது நல்லது. இல்லனு வையி.." எனக் கை ஓங்கிட, "சரி சரி!" என்று சமாதானத்திற்கு வந்தான் சத்தி.

"நான் மட்டும் தனியா இருக்கிறதுக்கு ஒருமாதிரி இருந்துச்சு. அதான் வரச் சொன்னேன்."

"அதுசரி! பக்கத்துக்குத் தட்டுக்குத் தோசை மாதிரியா?"

மெலிதாய்ச் சிரித்தவள், "ஏன் அவ்வளவு தூரம் தள்ளி நின்ன? உனக்கு கடல் பிடிக்காதா.?"

"பிடிக்காதுனு இல்ல. இந்தத் தண்ணி சேராது. ராஷஸ் வந்துடும். என்னை ஈரமாக்கி விட்டுடாத என்ன.?"

"ஹோ.. அப்ப, நீ போ."

"பரவாயில்ல. உனக்குத் துணையா இருக்கேன்."

அதன்பின் மேகவி எதுவும் பேசவில்லை. கடல் நீரில் இருந்து கரை பக்கமாய் சற்றுத் தள்ளி அவனை அழைத்து வந்தாள். அலையின் வேகம் குறைந்து கால் விரல்களை தழுவி செல்லும் படியான இடத்தில் இரண்டு நிமிடங்கள்‌ மட்டும் நின்றிருந்து விட்டு, "கிளம்பலாம் கீர்த்தி." என்றாள்.

"என்ன அதுக்குள்ள போகலாம்னு சொல்லுற? வந்து ஒரு மணி நேரம் கூட ஆகல. நாளைக்குச் சண்டே தான? இன்னும் கொஞ்ச நேரம் இருந்துட்டுக் கிளம்பலாம்."

"போதும்! டயர்டா இருக்கு. வெளியே டின்னரை முடிச்சிடலாம், என்ன.?" என்றவாறே அவள் தனது காலணிகளை எடுத்துக் கொண்டு நடக்க, ஆடவனும் பின்தொடர்ந்தான்.

அருகே இருந்த ஒரு தெருவோர கடையில் இரவு உணவிற்காக சென்றனர் இருவரும்.

இரு தண்ணீர் பாட்டில்களை வாங்கி முதலில் கணவனிடம் நீட்டிய மேகவி, "கீர்த்தி, காலை வாஷ் பண்ணிக்கோ!"

புரியாது பார்த்தவன், "எதுக்கு.?"

"நீதான ராஷஸ் வரும்னு சொன்ன? கிளீன் பண்ணு."

"ஹேய் பொண்டாட்டி! எனக்காக தான் சீக்கிரம் கிளம்பிட்டியா.?" என அவன் அகமும் புறமும் மலர்ந்திட குதூகலத்துடன் வினவ, "நொய் நொய்யினு கொஸ்டின் கேட்காம சொல்லுறதைச் செய்யிடா!" என்றவள் தண்ணீர் பாட்டிலின் மூடியைத் திறந்து கொடுத்தாள்.

கால்களைச் சுத்தம் செய்து கொண்டவன், "மேகவி!"

இரண்டாம் முறையாக பெயர் சொல்லி அழைக்கிறான். முதல் அழைப்பில் கண்டிப்பு நிறைந்து இருந்தது. இன்றைய நொடியில் காதல் ததும்பி வழிந்தது.

அதை அவள் உணர்ந்து இருந்தாலும் வெளிக் காட்டிடாது, அவனைக் கேள்வியாய்ப் பார்த்தாள்.

"ஐ திங்க், யூ ஆர் ஃபாலன் ஃபார் மீ!"

"கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி தான் என்கிட்ட கிறுக்குத்தனமா பேசாதனு சொன்னேன்?"

அவன் புன்னகைத்திட, "இன்னொரு தடவை இதுமாதிரி ஏதாவது சொன்ன, உன்னை இங்கேயே விட்டுட்டுப் போயிடுவேன். அப்புறம் மூட்டை முடிச்சைக் கட்டிக்கிட்டு, என்னோட வீட்டுல இருந்து கிளம்ப வேண்டியது இருக்கும்."

"அச்சோ! கோபப்படாத பொண்டாட்டி. இப்படி திடீர்னு போகச் சொன்னா, எங்க போவேன்? நான் பாவம் இல்லையா?"

"டிராமா கிங்! முதல்ல உன்னோட ஆக்டிங்கை ஸ்டாப் பண்ணு. பார்க்க சகிக்கல."

"ஓகே ஓகே!" என்றவன் அதற்கு மேல் அவளைச் சீண்ட விருப்பம் இல்லாது அமைதியாகி விட, இருவருக்குமான இரவு உணவைப் பரிமாறிச் சென்றார் கடைக்காரர்‌.
 
Top Bottom