அத்தியாயம் - 17
இது வேலைக்காகாது என்ற முடிவோடு அகத்தியனை நோக்கி திரும்பிய தமிழ், கண்களை மூடிக் கொண்டு உறங்குவது போலிருந்த கணவனிடம்,
" நாந்தான் இதெல்லாம் சரியா வராதுனு முதல்லயே சொன்னேனே, அப்றமும் ஏன் வலுக்கட்டாயமா செய்தீங்க?" எனக் கேட்க கண்களைத் திறந்தவன் எதுவும் புரியாமல் விழித்தான்.
"நான் என்ன செய்தேன் மொழி? நான் எதுவுமே செய்யலையே!" விழித்தபடி குழப்பத்துடன் வேகமாக கேட்டவனை முறைத்த தமிழ் படுக்கையில் இருந்து வேகமாக எழுந்தமர, அகத்தியனும் எழுந்து அமர்ந்தான்.
" இந்த கல்யாணம் வேணாம்னு ஆரம்பத்துலயே சொன்னேன். வலுக்கட்டாயமா என்னைய கட்டிட்டு, கொஞ்சம் கொஞ்சமா என் மனசை உங்கள விரும்ப வைச்சுட்டு, இப்ப நீங்களும் சந்தோஷமா இல்லாம, என்னையும் கஷ்டப்படுத்துறீங்க." என்பதற்குள் அவளது கண்கள் கலங்கி விட்டது.
அவளது கண்ணீரைக் கண்டதும் பதறியவன்,"என்னடா சொல்ற? நான் உன்னை கஷ்டப்படுத்தறேனா?! புரியலைடா." அவளை தன்னருகே இழுத்து அணைத்துக் கொண்டு அவன் வினவ, அவளுக்கு கண்களில் நீர் பொங்கியது.
"ஆமா. அன்னிக்கு டாக்டர்கிட்ட போயிட்டு வந்ததுல இருந்தே நீங்க சரியில்ல. எனக்கு ஏதாவது பெரிய மனநோய் இருக்கா? அதான் என்னை எப்படி கழட்டி விடலாம்னு யோசிச்சுட்டே இருக்கீங்களா?" அவள் சிறுபிள்ளை போல மூக்கை உறிஞ்சிக் கொண்டு கண்ணீரை புறங்கையால் துடைத்தபடி வினவ, அவனுக்கு உருகிப் போயிற்று.
"நான் வேணாம்னு முடிவு பண்ணிட்டீங்கள்ல, அதான் முகத்தை உர்ருனு வைச்சுட்டு இருக்கீங்க. எங்கிட்ட நார்மலா பேச மாட்டீன்றீங்க. எப்பவுமே யோசனையோட இருக்கீங்க. என்னால தான் நீங்க கஷ்டப்படுறீங்கனு தெரிஞ்சு எனக்கு எவ்வளவு வேதனையா இருக்கு தெரியுமா?" படபடவென பொரிந்தாள்.
அவளை எப்படி சமாதானம் செய்வதென தெரியாமல் விழித்தவன், அவளது பேச்சிற்கு இடையே 'அப்படி எல்லாம் இல்லடா' என்றுரைத்தெல்லாம் அவளது செவிகளைத் தீண்டவே இல்லை. தன்போக்கில் புலம்பிக் கொண்டிருந்தாள்.
கட்டுப்பாடின்றி வழிந்த கண்ணீரைத் துடைத்துக் கொண்டு வாய் ஓயாமல் புலம்பும் மனைவியின் பேச்சிற்கு இடையே தனது சொற்களால் தடைப் போட முடியாமல் திணறியவன்,
சட்டென்று அவளது இதழ்களைக் கவ்வி முத்தமிட்டு தனது செயலால் தடையிட, கை முஷ்டியை இறுக்கமாக மூடி தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்ட தமிழ் விழிகள் விரிய அவனைப் பார்த்தாள்.
அவனது எதிர்பாராத முத்தத்தில் திகைப்புடன் இருந்தவளை கவனியாமல், அவளது பேச்சை நிறுத்த தொடங்கிய இதழொற்றல் அகத்தியனை வேறு உலகிற்கு இழுக்க, அதில் லயித்து அவளது தேனிதழ்களை சுவைக்கப் போனவன் சட்டென இயல்புக்கு வந்து அவளை விட்டு விலகினான்.
ஆனால் இதுவரை அவனது பாசமான இதழொற்றலை மட்டுமே உணர்ந்த தமிழ், அவனது திடீர் இதழ் தாக்குதலில் வார்த்தைகள் வர மறுத்து அப்படியே உறைந்து போய் அமர்ந்திருக்க, அதற்குள் இயல்புக்கு திரும்பிய அகத்தியன் பேசத் துவங்கினான்.
" ஸாரி! உன்னோட பேச்சை எப்படி நிப்பாட்டறதுனு தெரியல, அதான்.. ரியலி ஸாரி மொழி! உன் பர்மிஷன் இல்லாம.. ச்சே!"அவளிடம் அவன் கொடுத்த வாக்கை மீறி நடந்து கொண்டதற்காக தன்னையே அறைந்து கொண்டு அவன் நொந்து கொள்ள, தமிழின் விழிகள் கலங்கியது.
அதையும் தப்பர்த்தம் கொண்டு தவித்தவன் மீண்டும் மன்னிப்பைக் கேட்க,"இதான், இதுதான்.. நான் உங்கள ரொம்ப கஷ்டப்படுத்தறேன். ஒரு கணவனாக மனைவியிடம் உரிமையா உங்க உணர்வுகளை வெளிபடுத்த முடியாம அடக்கி வச்சுட்டு இருக்கீங்க."
"எனக்கு தெரியும் நான் உங்களுக்கு நல்ல மனைவியா இல்ல. என்னால இருக்க முடியல." கண்களில் குளம் கட்டிய கண்ணீரை உகுத்தவள் கனத்த மனதுடன்,
"நீங்க வேணும்னா வேற யாரையாவது கல்யாணம் பண்ணிட்டு சந்தோஷமா இருங்களேன். நாம டிவோ.." அவள் சொல்வதற்குள் மீண்டும் ஒரு இதழ் யுத்தம். இம்முறை சற்று வன்மையாக..
ஏற்கனவே உணர்வுகளின் உந்துதலில் தன்னை கட்டுப்படுத்திக் கொண்டிருந்தவனை 'விவாகரத்து' என்ற அவளது பேச்சு கோபமுறச் செய்ய, அப்படிப் பேசியதற்கு தண்டனையாக அவளது இதழ்களை தண்டித்தான்.
அவனது தண்டனையை எதிர்க்காமல் அமைதியாக உள்வாங்கியவள் கண்கள் மூடியவாறு இருக்க, சட்டென அவளிடமிருந்து விலகியவன், "இனிமே இந்த மாதிரி வார்த்தைகள், வார்த்தைகள் என்ன எண்ணமே உனக்கு வரக்கூடாது. அப்றம் நடக்கற சேதாரத்துக்கு நான் பொறுப்பல்ல." கோபமாகக் கூறியவன் திரும்பிக் கொண்டான்.
அவனது முத்தத்தில் திளைத்து உரிமையான கோபத்தில் நனைந்தவள் மனதில், 'வாய் வார்த்தையாகக் கூட அதை கேட்க விரும்பாதவரா தன்னைத் தவிர்த்து வேறொருத்தியை தேடிப் போவார்!?' என்ற கேள்வி பிறக்க, தாயின் சொற்களால் அவளுள் ஏற்பட்ட குழப்பம் தீர்ந்து மனம் தெளிந்தாள்.
உடலால் அவனுக்கு எந்தவித சுகமும் கிடைக்காதபோதும் தன்மேல் மலையளவு காதல் கொண்ட கணவனை எண்ணி மனம் பூரிக்க, அதை எண்ணி இதழ்களில் கர்வப்புன்னகை பூத்தவள் அவனையே பார்த்திருக்க, அவனோ கோபத்தில் கொதித்துக் கொண்டிருந்தான்.
'அவள் எப்படி இப்படியெல்லாம் பேசலாம்? என்னைப் பற்றி இத்தனை நாட்கள் உடனிருந்தவள் புரிந்து கொண்டது அவ்வளவு தானா?! உடல்சுகத்திற்காக அலைபவனா நான்?! " என்று கோபத்தில் கொதித்தவன்,
'அதற்கான இவளை விடுத்து வேறொருத்தியை,' அதற்கு மேல் அவனால் சிந்திக்கவும் முடியவில்லை தன்னை கட்டுக்குள் கொண்டு வரப் போராடிக் கொண்டிருந்தான்.
அவனது மனநிலையை தற்போது சரியாக உணர்ந்தவள், "ஸாரி!" மன்னிப்பைக் கேட்க, அவளை அவன் திரும்பியும் பார்க்கவில்லை தமிழுக்கு அவனது கோபம் புரிய, "ஸாரி அத்தான்! நான் அப்படி பேசி இருக்கக்கூடாது." காதலுடன் கூறினாள்.
அவளது வாய்மொழியாக வந்த 'அத்தான்' என்ற அவளது அழைப்பு அவனுக்குள் பனிச்சாரலைத் தூவ மனம் ஒருபுறம் குதூகளித்தாலும், அவனது கோபம் குறைந்தபிறகும் கூட அவளே பேசட்டும் என மௌனம் காத்தான்.