அத்தியாயம் - 20
வித்யாபீடம் மேனிலைப் பள்ளி..
காலை நேர பிரார்த்தனை முடிந்து வகுப்புகள் தொடங்க, அந்த பதினொன்றாம் வகுப்பிற்குள் நுழைந்த வகுப்பாசிரியைக்கு, "குட் மார்னிங் மேம்!" மாணவ மாணவிகள் காலை வணக்கம் வைத்தனர்.
"குட் மார்னிங்! எல்லாரும் உட்காருங்க. இன்னிக்கு தானே ஃபர்ஸ்ட் டே, அதனால கொஞ்சம் உங்கள ரிலாக்ஸ் பண்ணலாமா?" புன்னகையுடன் கேட்ட ஆசிரியை தேவிகா,
"இன்னிக்கு இந்த க்ளாஸ்க்கு புதுசா வந்து சேர்ந்தவங்க எல்லாம் எழுந்து, கொஞ்சம் உங்களப் பற்றி அறிமுகப்படுத்துங்க பார்ப்போம்." என்றபடி அவரது இருக்கையில் அமர்ந்துவிட நான்கைந்து பேர்கள் எழுந்து நின்றனர்.
மூன்றாம் வரிசை இருக்கையில் எழுந்து நின்ற முதல் மாணவியிடம் அவளைப் பற்றி கேட்க, " மை நேம் இஸ் முத்ரா." என்று தன் பெயரை இறுமாப்புடன் சொல்லி தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டு, யாரையும் சட்டை செய்யாது அமர்ந்து கொண்டாள்.
தேவிகா அவளை ஒருமாதிரி பார்த்தவர் அடுத்து மாணவர்கள் பக்கம் முதல் வரிசையில் இருந்தவனை பேசச் சொல்ல, "மார்னிங் மேம்! மை நேம் இஸ் அகரன். நிகேதன் ஸ்கூல்ல இருந்து வந்திருக்கேன்." என்றவன்,
திரும்பி மற்ற மாணவர்களை பார்த்து "ஹலோ எவ்ரிபடி! இனிமே உங்களோட நண்பன்." மலர்ந்த சிரிப்புடன் சொல்ல, தேவிகாவும் அவனது தன்மை கண்டு எழுந்த இளஞ்சிரிப்போடு அவனை அமரச் சொன்னார்.
கன்னங்குழிய பூத்த அவனது புன்னகையில் அங்கிருந்த கன்னிகள் மயங்க,"ஹி ஹேஸ் டூ பி ஒன்லி மைன்!" தன்னருகே இருந்தவளிடம் கர்வத்துடன் சவால் விடுவது போலக் கூறினாள் முத்ரா.
அவளருகில் அமர்ந்திருந்த நித்யா "அதுசரி! நடக்கும் போது அதையும் தான் பார்ப்போமே." என்பது போல தலையசைத்து ஒருமாதிரி ஏளனமாக புன்னகைத்தாள்.
அடுத்தடுத்து மேலும் ஓரிரண்டு பேர் தங்களை அறிமுகம் செய்ய, கடைசி வரை வாய் திறக்காமல் கடைசி இருக்கையில் தனியாக நின்ற மாணவியின் மீது தேவிகாவின் பார்வை விழ அவளிடம்,"இப்ப நீதான். உன்னை அறிமுகப்படுத்துமா." அவளைப் பேச ஊக்கினார்.
தற்போது அனைவரது பார்வையும் அவள்மேல் பதிய அதில் மிரண்டு போய் விழித்தவள் தட்டுத் தடுமாறி, "ம்.. மை நேம் இஸ் அம்மு.. அமிர்தவல்லி." அதற்கு மேல் அவளால் எதுவும் பேச முடியாமல் பதற்றத்தில் தொண்டை வறண்டு போக தண்ணீர் புட்டியை எடுத்து குடிக்கப் போனவள்,
"நான் தண்ணி குடிக்கலாமா டீச்சர்? " ஆசிரியையிடம் அனுமதி வேண்ட, அவளது பதற்றத்தை உணர்ந்தவர் அதற்கு மேல் அவளை எதுவும் கேட்டு முதல்நாளே மற்றவர்கள் முன்பு சங்கடப்படுத்த வேண்டாமென அனுமதி வழங்கி அவளை அமரச் சொல்லி விட்டார்.
அவளது பதற்றமும் தடுமாற்றமும் அங்கிருந்த மாணவ மாணவிகளுக்கு சிரிப்பாக இருந்தாலும் சத்தமாக சிரித்தால் ஆசிரியை திட்டுவார் என நமட்டுச் சிரிப்புடன் அவளைத்தான் கண்டிருந்தனர்.
அன்றைய அறிமுகப் படலம் முடிய, அடுத்தடுத்து வந்த வகுப்பு ஆசிரியர்களும் எந்தெந்த பாடங்களுக்கு வருகிறார்கள் என்பதை அறிமுகம் செய்து முதல்நாள் என்பதால் சிறிய அளவில் பாடங்களை தொடங்கி விட்டனர்.
மதிய உணவு இடைவேளை வருவதற்குள் புதிதாக வந்தவர்களுடன் மற்ற மாணாக்கர்கள் பழகிவிட, அதற்குள் அகரனைச் சுற்றி ஒரு நட்பு வட்டம் உருவாகி விட்டது.
முத்ராவிடமும் நட்பு பாராட்ட வந்த சில மாணவிகளை அவளது அலட்சியப் பார்வையும் ஆணவப் பேச்சும் ஒரு அசூயையுடன் அவளிடமிருந்து விலகிச் செல்ல வைக்க, அருகில் அமர்ந்திருப்பதால் நித்யா மட்டும் அவளிடம் நட்பு கொண்டாள்.
அங்கு யாரிடமும் பேசாமல், ஆபத்தில் நெருப்புக்கோழி தலையை மணலில் புதைத்துக் கொள்வது போல பாடப்புத்தகத்தில் தன்னை புதைத்துக் கொண்டு தனித்தீவாக இருந்தது அமிர்தா மட்டுமே.
அனைவரது பார்வை அவள்மீது விழுந்தாலும் யாராவது எதாவது பேசி விடுவார்களோ என்ற பயத்தில் வெகு மும்மரமாக பாடத்தில் மூழ்கி இருந்தாள்.
"ஹாய்! இன்னிக்கு தானே முதல் நாள் அதுக்குள்ள புக் மொத்தமும் படிச்சு சென்டம் எடுக்கப் போறீங்களா?" திடுமெனக் கேட்ட ஆண்குரலில் திடுக்கிட்டு அவள் பார்க்க, "கூல்! நாந்தான் அம்மு அலைஸ் அமிர்தவல்லி." சிரிப்புடன் நின்றிருந்தான் அகரன்.
"இல்ல.. அது வந்து.." அவள் தடுமாற அவளைப் பார்க்க அவனுக்கு பாவமாக இருந்தது. இப்படியொரு சுபாவத்துடன் இந்த மாணவர்கள் இடையே இவள் எப்படி படித்து முடிக்கப் போகிறாள்!? சற்று கவலையாகக் கூட இருந்தது.
"புது ஸ்கூல்.. புது க்ளாஸ்.. மற்ற கேர்ள்ஸ் கூட பேசி ஃப்ரெண்ட் ஆகலாமே அம்மு? ஸாரி! அம்மு சொல்லலாம் தானே?!" மாறாத புன்னகையுடன் அவன் கேட்க அவள் ஆமோதிப்பாக தலையசைத்தாள்.
"எனக்கு பயமா இருக்கு." என்றவளை புருவங்கள் சுருங்க யோசனையாக அவன் பார்க்க, " நான் இந்த ஊருக்கே புதுசு. லாங்குவேஜ் ப்ராப்ளம் வேற. எதாவது தப்பா பேசிட்டா, அதான்.." தடுமாற்றத்துடன் அவள் கூற அவளது நிலை அவனுக்கு புரிவது போலிருந்தது.
"ஃபைன்! அப்ப இங்கிலீஷ்ல பேசி நண்பர்களாக பாருங்க. தனியா இருந்தா, அது உங்கள வேற மாதிரி போட்ரைட் பண்ணிக் காட்டும். பை தி வே ஐம் அகரன்." தன்னை அறிமுகப்படுத்திச் சிரிக்க,
தற்போது பதற்றம் குறைந்து அவனைப் பார்த்து லேசாக புன்னகைத்த அமிர்தா "தெரியும். நீங்க சொன்னப்பவே கேட்டேன்." என்றாள்.
இவ்வளவு நேர பேச்சிற்கு பிறகு இப்போது தான் சற்று இலகுவாக புன்னகைக்கிறாள் என்பதை கவனித்தவன், 'சீக்கிரமே சரியாகி விடுவாள்'என்று மனதிற்குள் சற்று நிம்மதியாக உணர்ந்தான்.
அகரனையே கவனித்துக் கொண்டிருந்த முத்ரா அமிர்தாவுடன் அகரன் பேசிச் சிரிப்பதை வெறுப்போடு பார்த்தபடி இருக்க, "என்ன உன் ஆளை, அந்த அமுல் பேபி கொத்திட்டுப் போயிடும் போல," கேலிச் செய்து சிரிக்க, மனதிற்குள் கனன்றாள் முத்ரா.