• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

ரோசி கஜனின் இயற்கை -14

ரோசி கஜன்

Administrator
Staff member
குறை நினையாதீங்கோ பிள்ளைகள் . ஒரு கதையை எழுதி முடிச்சிருவம் எண்டு மினக்கட்டதில, இங்கு கதை போஸ்ட் பண்ண இயலாமல் போயிற்று. இனித் தினமும் போடுவேன் .


மழை, அதுவும் சோவென்று கொட்டும் மழைக்கு மெத்தென்ற இருக்கைக்குள் புதைந்தபடி சுடச்சுட ஏதாவது நொறுக்குத்தீனியோடு ஒரு புத்தகம் வாசித்தால்! படம் பார்த்தால்! ஏன், மிகப்பிடித்த பாடல்களைக் கேட்டால்!

இதையெல்லாமே இவர்கள் வீட்டு இளையவர்கள் செய்ய, "இப்பிடிக் கொட்டுற மழையில நனைஞ்சு கொண்டு டியூசனுக்கு, பள்ளிக்கு எண்டு போயிட்டு, வீட்டுக்கு இறுக்கி சைக்கிள் மிதிக்கேக்க இருக்கிற சுகம் உதுகளில எல்லாம் கிடைக்குமா என்ன?" ஏங்கிப் போவார், கவியின் அன்னை சுகுணா. கூடவே கைகோர்த்து ஏக்கமோட ஊர்க்கதைகளை ஆரம்பித்துவிடுவார், மலர்.

இந்த மாலைப்பொழுது, யாருக்குமே அப்படியெந்த நினைவுகளையும் கொண்டுவரவில்லை. மாறாக, வாகனத்தில் சடசடத்துத் தெறித்த மழை சற்றே அச்சம் உண்டுபண்ணியது. முன் கண்ணாடியிலும் பின் கண்ணாடியிலும் சரக்சரக்கென்று மின்னலாக நகர்ந்துகொண்டிருந்த வைப்பர் சோடிகள் கூடச் சற்றே பயத்தையூட்டின.

"கொஞ்சம் பார்த்துப் போங்க தம்பி!" சுகுணா சொல்ல, முறுவலித்தவன், "ஒண்ணும் யோசிக்க வேணாம் ஆன்ட்டி, ரிலாக்ஸ்சா இருங்க!" சமாதானமாகச் சொல்லிவிட்டு, “பார்க்கில இருக்கேக்க நல்லகாலம் மழை பெய்யேல்ல!" என்றான், நிம்மதியோடு.

“அதென்டா சரிதான் தம்பி, சேறும் சகதியுமா இருந்திருக்கும்." என்றுவிட்டுப் பின்னால் பார்த்த நாதன், "இவ்வளவு பெரிய பயணம் வெளிக்கிட்டாச்சு, இதுக்கெல்லாமா யோசிக்கிறது அண்ணி?" என்றார், தமையன் மனைவியிடம்.

"அதுக்கில்ல, முழுக்குடும்பமும் போறம்; கொஞ்சம் கவனமா இருக்கலாம்." சுருதி குறைந்திருந்தாலும் சொன்னார், சுகுணா.

"நீங்க சொல்லுறது சரிதான் ஆன்ட்டி, என்ர குடும்பத்தோட போகேக்க எப்பிடி இருப்பனோ அப்பிடித்தான் இருக்கிறன்; இந்த ரெண்டு கிழமைகளுக்கு எதுக்கும் யோசியாம பயணத்தச் சந்தோசமா அனுபவியுங்க!" என்றவன் பார்வை, மின்னலாகப் பாய்ந்து, கைபேசியில் கவனமாக இருப்பவளைத் தொட்டு, சடக்கென்று நிமிர்ந்தவளின் பார்வையில் சிக்கி விட்டே திரும்பியது. அதுவும், 'சந்தோசமாக அனுபவியுங்க எண்டு சொல்லி எனக்குத்தான் கடிக்கிறான்.' என்ற எண்ணத்தோடு உதடுகளைச் சுழித்துப் பழிப்புக் காட்டியதையும் பார்த்துவிட்டே!

வேந்தன் அப்படிச் சொன்னபிறகு எதைச் சொல்வது? 'பயணமே இப்பத்தான் தொடங்கியிருக்கு, இப்பிடி எவ்வளவப் பார்க்க வேணும்!' என்ற மலைப்போடு, காலையிலிருந்து அலைந்த அலுப்புச் சிறிதுமின்றி கையிலிருக்கும் டேபில் ‘சப்வே’யில் ஆழ்ந்திருந்த கவின் தலையில் பாசமாக வருடிக்கொண்டே, புகை படிந்த ஓவியமாகக் கடக்கும் வெளிப்புறத்தை நோட்டமிட்டவண்ணம் அமர்ந்திருந்தார், சுகுணா.

கவி, ஆரூரன் தாம் எடுத்த புகைப்படங்கள் வீடியோ என்றிருக்க, அப்பப்போ அவர்களோடு இணைந்திருந்தாலும் இலக்கியாவின் பார்வை கள்ளத்தனமாக அவன் முகம் நோக்கிச் சென்று வந்து கொண்டிருந்தது. வாழ்க ரியர் வியூ மிரரே!

சின்னவர்களோடிணைந்து ரதி, அஜி அப்படியே உறங்கத் தொடங்கியிருந்தார்கள்.

நாதன் வேந்தனோடு கதைத்துக்கொண்டுவர அப்பப்போ தானும் பங்கெடுத்துக் கொண்டான், மாறன்.

"தம்பி ஆட்கள் இங்க வந்து கன காலமோ?" அவன் பற்றி அறிதலைத் தொடர்ந்தார் நாதன்.

"ஓம் அங்கிள், தாத்தா காலத்தில வந்தது. அப்பா ஆக்கள் கனடா, அம்மாவே சான்ஸ்பிரான்ஸ்சிஸ்கோ. நான் பிறந்து வளர்ந்தது படிச்சதெல்லாம் அங்கதான், இப்ப வேலைக்காக இங்க வந்திருக்கிறன்."

"அக்கா தங்கச்சிகள்." மாறன் தான் கேட்டான்.

"ரெண்டு அக்காக்கள், கலியாணம் செய்து சான்ஸ்பிரான்ஸ்சிஸ்கோல இருக்கினம்."

"சரி சரி..." இப்படி, அவன் பற்றிய கதைகளுக்கு இலக்கியாவின் செவிகள் எலிக்காதுகளாகிச் செவிமடுத்து நின்றன.

அப்படியே அவர்கள் பயணம் குறித்துக் கதைக்கத் தொடங்க, "பச்" மீண்டும் கைபேசிக்குத் தாவியது அவள் கவனம். காலையில் அப்படிக் கதைத்துவிட்டதற்கு மன்னிப்போடு குறுஞ்செய்தி போட்டால் என்ன என்றளவு யோசித்துவிட்டு, பட்டென்று கைவிட்டும்விட்டாள்.

கிட்டத்தட்ட இரு மணித்தியால ஓட்டம் எப்படிப் போனதென்று தெரியாது. "இதுதான் 'ரெட் இன் ஹோட்டல்' " சொல்லிக்கொண்டே, அவ்விடுதி முன் வாயிலுக்கருகிலிருந்த நிறுத்துமிடத்தில் வாகனத்தை நிறுத்தியவன், "எதுக்கும் நாம முதல் போய்ப் பார்த்திட்டு இவையல இறங்கச் சொல்லுவமே அங்கிள்!" என்றான், யோசனையோடு.

"ஏன் தம்பி?" என்ற நாதன், "ஓ! உங்களுக்குப் பெருசாத் திருப்தி இல்ல எண்டு சொன்னனீங்க என்ன?" என்றார் உடனே.

"ம்ம் ...நீங்க பே பண்ணியாச்சா?"

"ஓம் தம்பி, நாயகராக்கும் இதுக்கும் புக் பண்ணேக்கயே குடுத்தாச்சு; மற்றதுகளுக்கு நாம செக்கின் செய்யேக்கத்தான் குடுக்க வேணும்." என்றவர், "ரெண்டு இரவுக்கு மூன்று குயின்ஸ் பெட் அறைகள் அறுநூற்றிச் சொச்சம் எண்டு நினைக்கிறன். இங்க கிட்டத்தில சரியான காசு! இந்த ஹோட்டலில கொஞ்சம் பரவாயில்ல."

"அதுதான்...கொஞ்சம் தள்ளியும் போட்டிருக்கலாம் அங்கிள்; பரவாயில்ல வாங்க முதல் போய் அறையப் பார்த்திட்டு வருவம்." இறங்கியவன், ஒரே தாவலாகப் போர்ட்டிகோவில் சென்று நின்று கொண்டான். அதற்கிடையில் மழை கணிசமாகவே தழுவிவிட்டிருந்தது. இருக்கரத்தாலும் மாறி மாறி நீரை வழித்துவிட்டவன் பார்வை வாகனத்தின் கடைசிப்பகுதிக்குச் சென்றுவிட்டு அவசரமாகத் திரும்பியது. அவனையே பார்த்துக்கொண்டிருந்த இலக்கியா, "அண்ணா நானும் வாறன்." என்று எழுந்த மாறனோடு தானும் எழுந்தாள், "சித்தப்பா என்னால இனி முடியாது, உடனே வோஷ் ரூம் போகோணும்." என்றபடி.

"சரி வா." என்றுவிட்டு அவன் செல்ல, பின்னால் ஓடினாள், இவள்.

"வானில இருங்க எண்டு சொன்னன் மா." வேந்தன் இதைத்தான் சொல்ல வர, முந்திக்கொண்டார் நாதன்.

"எனக்கு வோஷ் ரூம் போகோணும் சித்தப்பா." என்றவள் அவர்களை முந்திச் சென்று வரவேற்பிலிருந்த பெண்ணிடம் கேட்டு அங்கு அருகிலேயே இருந்த கழிப்பறைக்குள் நுழைய முயன்றவள், "அவ்வளவு அவசரம் எண்டா இடையில சொல்லி இருக்கலாமே!" வேந்தன் குரல் கேட்க, நின்று திரும்பியிருந்தாள்.

அவனோ, நாதனிடம் சொல்லிக்கொண்டு நின்று இவள் ஆர்வத்தில் தண்ணி தெளித்திருந்தான்.

"செக்கின் செய்யவா?" விபரம் கேட்ட அப்பெண்ணிடம், "அதுக்கு முதல் ரூம ஒருதரம் பார்க்கலாமா? சின்னவே இருக்கினம், நொன் ஸ்மோக்கிங் ரூம் தானே?" ஆரம்பித்தான் வேந்தன்.

பதிவு செய்த விபரம் பார்த்துவிட்டு, "ஓம், மூண்டுமே இங்க கீழ இப்பிடியே போனா கடைசியில் அடுத்தடுத்து இருக்கு." என்றவள், "செக்கின் செய்துவிட்டே பாருங்க." என்றாள்.

"ஏன் கீழ, மேல ரூம் இல்லையா?" அவன் அதிருப்தியோடு கேட்க, "இல்ல இவே கேட்டமாதிரி இதுதான் ..." இழுத்தாளவள்.

"பிறகென்ன வேந்தன், செக்கின் செய்வம்; இந்த மழைக்க எல்லாரும் நல்லா களைச்சும் போய்ட்டினம்." என்றான், மாறன்.

கழிப்பறையிலிருந்து வந்த இலக்கியாவோ, "நாதன் சித்தப்பா வோஷ் ரூம் உவக், அப்ப ரூம் எப்பிடி இருக்குமோ!" நுனிக்காலில் நின்று அவள் அபிநயத்த விதத்தில் நாதன் முகத்தில் கோபம்!

"ரோட் ட்ரிப் வெளிக்கிட்ட ஆட்கள் கதைக்கிற கதையோ இது?" அடிக்குரலில் சொல்லவும் செய்தார்.

வேந்தன் முன்னால் திட்டுவாங்கி முகம் கன்றிவிட்டது, அவளுக்கு. "என்னவாவது செய்யுங்க!" முணுமுணுப்போடு பின்னால் நகர்ந்திட்டாள்.

அதற்குள் யாரையோ இருக்கிறாரா என்று விசாரித்தான் வேந்தன்.
"அவர் வர ஒரு மணித்தியாலமாகும், வெளியில போயிருக்கிறார்." அப்பெண் சொல்ல, அவரின் இலக்கம் கேட்டு கைபேசியில் அழைத்துக் கதைத்துவிட்டு வைத்தவன், “இது செயின் ஹோட்டல்ஸ் தானே அங்கிள், இந்த ஹோட்டலைப் பொறுப்பாகப் பார்க்கிறவரை எனக்குத் தெரியும்." என்றுவிட்டு அப் பெண்ணிடம் திரும்ப, அவளுக்கு அழைத்துச் சொல்லியிருந்தான், அந்த மனிதன்.

"சரி நீங்க போய்ப் பாருங்க." மூன்று அறைகளின் திறப்பையும் எடுத்துக் கொடுத்தாள் அவள்.

சென்று, முதலிருந்த அறையைத் திறந்து உள்ளிட்ட வேகத்தில் வெளிப்பட்டுவிட்டான் மாறன், முகச் சுழிப்போடு!

"என்னண்ணா இப்பிடி மணக்குது? சின்ன ஆக்களோட எப்பிடி? சத்தி மணமோ இப்படிப் புளிச்சு மணக்குது!" அவன் சொன்னதைக் கேட்ட இலக்கியா உள்ளே செல்லவேயில்லை. மூன்று அறைகளையும் பார்த்த நாதனுக்கு வேந்தன் சொன்னதிலுள்ள உண்மை புரிந்தாலும், 'இப்ப என்ன செய்யிறது? இப்பிடித்தான் இந்த ரெண்டு கிழமையும் போகப் போகுதோ!' நன்றாகவே குழம்பிப் போனார்.



மேலும் வாசிக்க....


14 -2

14 - 3
 
Last edited:

Goms

Well-known member
வாங்கோ, வாங்கோ ரோசிமா.

உங்களுக்கு உடல் நலமில்லையோ என்று நினைத்தேன். 5 நாட்கள் ஆள் காணவில்லை. நீங்க வந்தது மகிழ்ச்சி😍.

இந்த வேந்தன் பற்றிய முழு குறிப்பு கொடுக்கலையே... யாழ்க்கும் இவனுக்கும் என்ன தொடர்பு? மதி உண்மையில் நண்பனா? 🤔

இலக்கி ஒரு எபில பேசத் துடிக்கிறா, அடுத்த எபிலா அவனை பார்க்க மறுக்கிறா 😂 இவங்க சண்டையும், சமாதானமும் 🥰🥰🥰
 
Top Bottom