ரோசி கஜனின் இயற்கை -21

  • நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.

    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

ரோசி கஜன்

Administrator
Staff member
Nov 11, 2018
1,719
1,113
113
ஆழ்ந்த உறக்கமின்றியே புரண்டுகொண்டிருந்தாள், இலக்கியா. அதுவே விடியற்காலையிலேயே எழ வைத்திட்டு. கைபேசியில் மணி பார்த்தாள், அப்போதுதான் நான்கரையைத் தாண்டியிருந்தது.
அசந்துறங்கும் மற்றவர்களைக் குழப்ப மனமின்றி மீண்டும் படுக்கையில் சரிந்தவள், 'GM வேந்தன்!' தட்டி அனுப்பினாள். அது பார்க்கப்படவில்லை.

'எத்தினைக்கு வருவீங்க?' அடுத்த குறுஞ்செசெய்தி.
'இங்க என்ன நித்திரை கொள்ளவிடாமல் செய்திட்டு வடிவா தூங்கினீங்களா?'

சிவப்பு முக ஸ்மைலிகளோடு அனுப்பியவள் அந்தப்புறம் பார்க்கப்படவில்லை என்பதை முகச் சிணுக்கத்தோடு அவதானித்துவிட்டு, 'இது சரிவராது. சத்தம் போடாம நாம நம்மட அலுவல்களப் பார்ப்பம்.' எண்ணிக்கொண்டேயெழுந்து, மாற்றுடைகள், டாய்லெட் பையோடு குளியலறைக்குள் புகுந்து கொண்டாள்.

அடுத்த அரைமணித்தியாலத்தில் வெளியே வருகையில் சுகுணா எழுந்திருந்தார்.

"ஏனம்மா இவ்வளவு வெள்ளன வெளிக்கிட்டிட்ட? இண்டைக்கு எட்டரை போல போனால் சரியெண்டு சொன்னவே தெரியாதா?"

"தெரியும் மா, பெரிசா நித்திர வரேல்ல."
சொல்லிக்கொண்டே காப்பி மேக்கரருகில் சென்றவள், "உங்களுக்கும் போடட்டா?" கேட்டுக்கொண்டே தனக்கு ஒரு பக்கற் கப்பசினோவை வைத்து அளவாக நீரை விட்டு மேக்கரைத் தட்டி விட்டாள்.

"சரிதான் போடு, நானும் வோஷ்ரூம் போயிட்டு வாறன்." சுகுணா நகர, தாய்க்கு ஒரு கோப்பிப் பக்கற்றை எடுத்து வைத்துவிட்டு கைபேசியை எடுத்துப் பார்த்தாள்.

அவள் அனுப்பிய செய்திகளைப் பார்த்திருந்தான். பதில் அனுப்பவில்லை. ‘பெரிய கொம்பன்!’ முணுமுணுத்தவள், தடித்துத் தொங்கிய யன்னல் திரையை விலத்தி வெளியில் பார்த்தாள்.

வெளிப்புறம் அவ்வளவாக ஒளி பெறவில்லை; மழை விட்டிருந்தது; உயரே எரிந்த வெள்ளை நியான் உபயத்தில் கழுவிடப்பட்டிருந்த சுற்றம் பளபளத்தது. அப்படியே சுற்றிச் சுழன்ற பார்வையில் பட்டது, அவர்கள் பயணம் செய்யும் வாகனம்.

"பார்ரா! ஆறுக்கு முதலே கடமை வீரர் வந்திட்டார்." முணுமுணுத்தவள், அவன் எங்காவது தென்படுகின்றானாவென்று ஆராய்ந்தாள்.
"இலக்கி உன்ர கப்பசினோ ரெடி, எனக்குக் கோப்பி போடேல்லையா?" தாய் கேட்டுக்கொண்டு வர, சட்டென்று வந்து கப்பசினோவை எடுத்துவிட்டு, "இந்தா போட்டுவிடுறன் மா, வேந்தன் வந்திட்டார் போல!" என்றாள், இயல்பாகக் கதைப்பது போல்.

"அவர் இங்க தானே தங்கினவர், மழைக்க இனிப் போக வேணுமா எண்டு இங்க தங்கச் சொல்லிட்டார், சித்தப்பா. ஆம்பளைகள் நாலுபேருமா ஒரு அறையில தங்கினவே." சொல்லிக்கொண்டே, "கவி எழும்பன் மா. ஆறு மணி ஆகுது." மூத்த மகளிடம் திரும்பிவிட்டாரவர்.

'அடப்பாவி! போய்ச் சேர்ந்தாரா என்ன ஏதெண்டு நான் மெசேஜ் போட்டு பதை பதைச்சுக்கொண்டிருக்க நீர் குசாலா தூங்கிக்கொண்டு இருந்தீரோ!' மனதுள் அலறிவிட்டவளுக்கு அவன் முதுகைப் பிளந்திடும் ஆத்திரம்!

'இருக்கு இண்டைக்கு!' கறுவிக்கொண்டே, "அம்மா கோப்பியை எடுங்கோ, சித்தி ஆக்கள் எழும்பீட்டினமா எண்டு பார்த்திட்டு வாறன்." சட்டென்று வெளியேறியிருந்தாள்.

"என்ன இலக்கி ரெடியாகிட்டிரா?" நித்திரைக்கலக்கம் அகலா விழிகளோடு இவளை உள்ளே விட்டுவிட்டு, "குளிச்சிட்டு விடுறன் அக்கா." ஆருரனின் தாயிடம் சொல்லிவிட்டு குளியலறைக்குள் புகுந்து கொண்டாள், அஜி.

கவினும் ராஜியின் மகளும் நல்ல உறக்கத்திலிருந்தார்கள்.

"சித்தி, எல்லாருக்கும் கோப்பி போடட்டா?"
"ஓமம்மா. சித்தப்பா ஆட்களுக்கும் சேர்த்தே போடன்." என்ற ரதி, "வேந்தனும் நிக்கிறார், அங்க நாலுபேர்." சொல்லிக்கொண்டே தன் ஆயத்தங்களிலிருந்தார்.

"ஓ!" தெரியாதவள் போல் கேட்டுக்கொண்டவள், கோப்பியைத் தயாரித்தெடுத்து, "அவையள் எழும்பியிருந்தா பிளாஸ்கில் விட்டுக் குடுப்பம் என்ன சித்தி?" தாம் கொண்டுவந்திருந்த பிளாஸ்கில் விட்டு மூடினாள்.

“ஓமம்மா, சித்தப்பா எழும்பியிருப்பார் குடுத்து விடுறியா?" என்றதும், "ம்ம்...குடுத்திட்டு வாறன்." வெளியேறி, பக்கத்தறைக்கதவை மெல்லத் தட்டிவிட்டு நின்றவள், வேந்தன் வந்து கதவைத் திறக்கவேண்டுமென்ற எதிர்ப்பார்போடுதான் நின்றாள்.

கதவைத் திறந்தார் நாதன். "கோப்பி போட்டாச்சோம்மா!" பிளாஸ்கை வாங்கிக்கொண்டார்.

"நாம வெளிக்கிட்டுட்டுப் பக்கத்தில மேக் டொனால்ட்சில காலம சாப்பிட்டுட்டுப் போகச் சரியா இருக்கும்."

“ம்ம்... சரி சித்தப்பா. ஆரூரன், மாறன் சித்தப்பா ஆக்கள் எழும்பெல்லையா?" அங்கு நின்றே உள்ளே எட்டிப்பார்த்தாள்.

"வேந்தன் குளிக்கிறார், அதனால கிடக்கினம்." சொன்னவர் உள்ளே திரும்பிவிட, “சரி சித்தப்பா.” திரும்புவதைத் தவிர வழியிருக்கவில்லை. அஜி ஆட்கள் தங்கியிருந்த அறைக்கே சென்றுவிட்டாள்.

குளியலறைக்குள் இருந்தவனுக்கு அவள் குரல் நன்றாகவே கேட்டது. அவளைப் பார்க்க வேண்டும் போலொரு உந்துதல் எழுந்தாலும் அடக்கிக்கொண்டான். கூடவே எழுந்த கோபம் அடக்க வைத்தது. இன்னும் சிறிது நேரத்தில், அவன் ஆசையாக வாங்கிக்கொடுத்த ஆடையோடு கவியைக் காணத்தானே போகிறான், இன்று முழுநாளும்.

முதல் நாள் அனுபவித்த அதே எரிச்சலும் கோபமும் இன்று முழுதும் அவனை ஆட்டி வைக்கத்தான் போகின்றது. அதை ஒன்றுமேயில்லை என்றளவில் சமாளிக்க அவளும் ஏதாவது செய்யத்தான் போகிறாள். ஆனால், அவன் இளக்கம் காட்டப் போவதில்லை.
மனம் இறுக தன் வேலைகளை முடித்தவன், "கோப்பி குடியுங்க தம்பி." என்ற நாதனிடம், அவள் கொண்டு வந்த கோப்பி வேண்டாம் என்று மறுக்க முடியாது வாங்கிக் குடித்தான்.

"அங்கிள் காருக்குப் போகப் போறேன், பாக்குகள் ஏதாவது வைக்கிறது எண்டால் வைக்கலாம்." என்றதும், "ஓம், நானும் வாறன்." தேவையில்லை என்ற பைகளை எடுத்துக்கொண்டு வெளியேறியவர்கள் அடுத்த இரு அறைகளிலும் பைகள் வைப்பதென்றால் வரலாம் என்றுவிட்டே சென்றார்கள்.

அடுத்த ஒரு மணித்தியாலத்தில் அநேகமாக எல்லோரும் புறப்பட்டிருந்தார்கள்.

"இலக்கி எங்க அஜி சித்தி? காலம எழும்பினதுக்கு கண்ணிலேயே காணேல்ல." என்றபடி வந்த கவியைப் பார்க்காது கவனமாகத் தவிர்த்தான், வேந்தன். சாரதியாசனத்தில் அமர்ந்திருந்தவன் அன்றைய, அடுத்த நாளைய பயணவிபரங்களை ஆராயும் சாட்டில் அவர்கள் புறம் பார்க்கவேயில்லை.

“கவின வெளிக்கிடுத்திறா. காலம கண்ணைத் திறந்ததும் அக்கா தான் எல்லாம் செய்யவேணும் எண்டு அவவவோட ஒட்டிட்டான். அதால தான் நான் கெதியா வெளிக்கிட்டுட்டன்." என்றாள் அஜி.

“இன்னும் எவ்வளவு நேரமாகும்?" நாதன் கேட்க, “ஒரு அரைமணித்தியாலம்.” என்றான் மாறன்.
“அப்ப நாம பக்கத்தில சூப்பர் மார்க்கெட்டுக்கு ஒருக்கா போயிட்டு வரலாம் அண்ணி.”

“ம்ம், சரி போயிட்டு வந்திருவம்.” என்ற சுகுணாவோடு நாதனின் மனைவியும் வாகனத்தில் ஏற, “போயிட்டு வந்திட்டு வெளிக்கிடச் சரியா இருக்கும் தம்பி.” என்றபடி முன்னால் ஏறினார், நாதன்.

"நாங்க எண்டா ரெடி!" என்ற கவி, ஆரூரனோடும் மற்ற இருவரோடும் வரவேற்பில் ஒரு ஓரமாகவிருந்த சோஃபாவில் அமர்ந்துவிட்டாள். அதுவரை தாம் எடுத்திருந்த புகைப்படங்களை பார்ப்பதும் ஒருவருக்கொருவர் மாற்றிக்கொள்வதுமாக அவர்களிருக்க, சூப்பர் மார்க்கெட் போயிருந்தவர்கள் வரவும் கவின் தயாராகவும் சரியாகவிருந்தது.
நாதனும் மாறனும் செக்கவுட் செய்துவிட்டு வர, எல்லோரும் வாகனத்தில் ஏறியிருந்தார்கள்.

"போவம் தம்பி." நாதன் முன்னால் ஏறிக்கொண்டார்.
"இலக்கி இன்னும் என்ன வைக்க இருக்கு?"

"என்ர டொய்லட் பாக் தான். வச்சிட்டன் சித்தப்பா, நீங்க ஏறுங்கோ!"

"சரி வா." மாறன் உள்ளிட, கடைசியாக ஏற முனைந்தவள், அக்கணம், வேந்தனின் பாராமுகத்தில் கோபம் கொள்ளாது உதடுகளுள் நெரிந்த முறுவலோடு தான் நின்றாள்.

சாரதியாசனத்தின் மேல் பகுதியைப் பற்றிக்கொண்டே ஏறுவது போல் உள்ளிட்டவளின் கை கொத்தாய் வேந்தனின் பிடரி சிகையைப் பற்றி உன்னி இழுத்திருந்தது. கண்ணிமைக்கும் நேரத்தில் இது நடந்திருக்க எதுவுமே நடவாதபாவனையில் உள்ளிட்டிருந்தாளவள்.

அவள் வந்தது, பை வைப்பதாகப் பெயர் பண்ணிக்கொண்டு நின்றதையெல்லாம் உணர்ந்திருந்தாலும் அவளைப்பாராது இருந்த வேந்தன், "ஏய்!" சுள்ளென்ற வலியில் கோபமும் சேர மற்றவர்களை மறந்து தீவிழியோடுதான் திரும்பினான். அவ்வளவும் தான்.

அவன் பார்வை, மின்னலாக உரசிய இலக்கியாவின் பார்வையில் தடுமாறி, கணத்தில் அவளை அளவெடுத்து, தான் கொண்டிருந்த கோபத்தைத் தொலைத்துவிட்டு அப்படியே நிலைத்து நின்றுவிட்டது.

அவளோ, கடைசி வரிசைக்குச் சென்று அமைதியாக அமர்ந்துவிட்டாள்.

"என்ன வேந்தன்?" கேட்ட நாதன், அவன் பார்வையைத் தொடர்ந்து இலக்கியாவைத் திரும்பிப் பார்த்தார். அங்கிருந்த அனைவர் பார்வையும் அதையேதான் செய்தது.

சட்டென்று உள்ளுக்குள் எழுந்துவிட்ட நகைப்பைப் புதைத்துக்கொண்டு, "சொறி! உண்மையாவே தவறி!" வேந்தனிடம் சொன்ன வேகத்தில், "அது வந்து ...சித்தப்பா...ஏறேக்க சீற்றில பிடிச்சு ஏறினனா, அவரட தலைமயிர் இழுபட்டுட்டு...இலேசாத்தான்." என்று சொல்லும் போதே அவளையும் மீறி பக்கென்று நகைத்துவிட்டாள்.




21-2
21-3
 
Last edited:

Author: ரோசி கஜன்
Article Title: ரோசி கஜனின் இயற்கை -21
Source URL: NithaniPrabu Novels-https://nidhaniprabunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
  • Love
Reactions: peijar and Goms

Goms

Well-known member
May 22, 2025
674
442
63
Chennai
அடிப்பாவி, யாருக்கும் தெரியாம குடுத்த ட்ரெஸ்லாம் வாங்கிக்கிட்ட, இப்போ எல்லோருக்கும் முன்னாடி கொடுக்கிறான்னு வாங்க மாட்டேன்னு சொல்றியா?😂 நல்ல நாடகம். இந்த கவிக்கு அப்பப்போ சந்தேகம் வருதே.