• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

வழியிலே இதயத்தின் நிழலாய் - 02

ஷாரிகா

Moderator
Staff member
VIN 2

சற்றே பிசியான சாலையோரத்தில் அமைந்திருந்தது அந்த அருந்தகம்(Cafe). செங்கற்களாலும் , பெரியவகைக் கண்ணாடி ஜன்னல்களாலும், அதன் வெளிப்புறம் அழகாக கட்டமைக்கப்பட்டிருந்தது .

கஃபேயின் உள்ளே அளவான சத்தத்தில் ஒலிக்கவிடப்பட்டிருந்த, மேலைத்தேய இசைக்கேற்ப கைவிரல்களால், மேசையில் தாளமிட்டபடி அமர்ந்திருந்தாள் ஷோபா. அவள் வந்து பத்து நிமிடங்கள் கடந்திருந்தன. ஜோ இன்னும் வந்திருக்கவில்லை. நேரத்தை அடிக்கடி பார்த்துக் கொண்டவளுக்கு, கடிகாரமுட்கள் மிகமெதுவாகவே நகர்வதைப் போலிருந்தது.

வீட்டிலிருந்து புறப்படுகையில் அமுதாவிடம், ஸ்கூலுக்கு சென்றுவிட்டு வருவதாகத்தான் கூறியிருந்தாள். அது ஒன்றும் பொய்யில்லை.

இங்கே புதிதாக பணியாற்றப்போகும் பாடசாலைக்கு சென்று, சமர்ப்பிக்க வேண்டியிருந்த சில ஆவணங்களை கையளித்துவிட்டே கஃபே வந்திருந்தாள். அண்ணா ஷங்கருக்கும் வேலை கொழும்பில் தான். அதனால் பதட்டப்படாமல் இலகுவான மனநிலையிலேயே அமர்ந்திருந்தாள்.

ஜோவிற்கு என்ன ஓ(ர்)டர் பண்ணுவது என மும்முரமாய் மெனுகார்ட்டை பார்த்திருந்தவள், எதிர் இருக்கையில் யாரோ அமர்வதைப் போலிருக்கவும், சட்டென்று நிமிர்ந்தாள்.

அது 'ஜோ' இல்லை.புதிய ஒருவன். பார்ப்பதற்கு நன்றாகத்தான் இருந்தான். வெளிர்நீல நிறத்தில் அவன் அணிந்திருந்த ஷர்ட்டின் கைகளை முழங்கைவரை சீராக மடித்திருந்தான். அவன் முகத்தில் ஆங்காங்கே வியர்வைத்துளிகள். சற்றே அலங்கோலமாக இருந்த தலைமுடிகளைப் பார்த்தால்...

' ப்ச்..முதலில் யாரிவன்?..' அது ஜோ இல்லை என்ற ஏமாற்றத்தில் எழுந்த எரிச்சலை முகத்தில் காட்டாது, என்ன என்பதாக அவனைப் பார்த்தாள் ஷோபா.

"நான் வருண். ஜோனத்தன்ட யுனி பிரண்ட்..."
என தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டவனின் முகத்தில் எவ்வித பாவனைகளும் இல்லை.

இதழ்களில் விரிந்த புன்னகையுடன், "ஓ...ஹாய்.." என்றவள்,
அவன் பின்னால் தேடியவாறே,
"ஜோ.? ஜோ எங்க...?" என கேட்டதும்,

"அவன் வர மாட்டான்.'' உடனே பதில் தந்தவனின் குரலில் முன்பை விட சற்றுக்கடினம் கலந்திருந்தது.

''ஏ..ன்? ஏதாச்சும் ப்ரொப்ளமா?" அவள் சிறு பதட்டத்துடன் கேட்கவும்,

சலிப்பாய் ''ப்ச்.." என்றவன்,
"ஜோனத்தனுக்கு நாளண்டைக்கு கல்யாணம், தெரியுமா?" அவளைப் பார்த்துக்கொண்டே நிதானமாக வினவினான் அவன்.

சட்டென்று சிரித்தவள், "ஐயோ... உங்கட பிரெண்ட விளையாட்டுக்காட்டாம டக்கென்டு (Quick) வர சொல்லுங்களன்..."

அவனிடத்தில் கேட்டுக்கொண்டே.. நேற்று ஜோ மெசேஜ் அனுப்பிய இலக்கத்துக்கு அழைப்பு விடுத்துப்பார்த்தாள். எதிரே இருந்தவனது போன் ஒலியெழுப்பியது.

கைப்பேசியைத் தூக்கித் திருப்பி அவளிடம் காண்பித்தவன்,
"நேற்று உங்களுக்கு டெக்ஸ்ட் பண்ணது, நான்தான்." என்றான்.

ஷோபனாவுக்கு எதுவும் புரியவில்லை. மேசையில் முழங்கையூன்றி, நெற்றிப்பொட்டை ஒற்றைவிரலால் அழுத்தியவாறு.. குழப்பமாக அவனையே பார்த்திருந்தவளிடம் எதுவும் கூறாது, தன் கைப்பேசியினை நீட்டியிருந்தான்.

நொடிநேர தயக்கத்தின் பின், அதை வாங்கிப்பார்த்தாள். பார்த்த மாத்திரத்தில் பாவையின் கண்கள் கலங்கிவிட்டன.

அது, ஜோனத்தனின் ப்ரீ வெடிங் ஷூட்டில் எடுக்கப்பட்ட, ஒரேவகையான சில புகைப்படங்களை ஒன்றிணைத்து எடிட் பண்ணப்பட்டிருந்த போட்டோ ஒன்று. ஒவ்வொன்றிலும் அருகிலிருந்தவளைப் பார்த்து.. கண்கள் சுருங்க அழகாக புன்னகைத்தபடி நின்றிருந்தான் ஜோ.

வீழ்ந்துவிடாமலிருக்க, பகீரதப் பிரயத்தனப்பட்டு, அவளது கீழிமைகளின் எல்லைக்கோட்டிலே தடுத்து வைக்கப்பட்டிருந்த கண்ணீரின் ஒருதுளி, தடுப்புமீறி, கன்னத்தின் வழியே உருண்டோடி, பட்டென போனின்மீது மோதித் தெறித்தது. அதிலே உணர்வு வரப்பெற்றவள், அவசரமாக டிஸ்யூவினால் மொபைல் திரையினைத் துடைத்துவிட்டு, ஒரு 'சொரி'யுடன் அவனிடம் போனைக் கொடுத்தாள்.

எதிரே அமர்ந்து பார்த்துக் கொண்டிருந்தவனுக்கும் சற்றுப் பாவமாகத்தான் இருந்தது. ஆனால் அவளுக்கு சிலவற்றைப் புரியவைக்க வேண்டும்... தொண்டையை செருமிக்கொண்டு,

" ஜோனத்தன் உங்களோட பேசிட்டா, அந்த நாள் ஃபுல்லா எவ்ளோ ஹப்பியா சுத்துவானென்டு எனக்குத்தான் தெரியும். நீங்க சாதாரணமா ஃப்ரெண்ட்லியா கோல் கதச்சி இருக்கலாம். ஆனா.., Move on ஆகேலாம இருக்கிறவனுக்கு அது ஹோப் குடுக்குற மாதிரிதானே...
பிறகு உங்களப்பத்தி தான் கதைச்சிக்கொண்டே சுத்துவான்; எல்லாத்தையும் ஒவ்வொன்டா சொல்லி சொல்லி கவலைப்பட்டுக்கொண்டே இருப்பான்.
இது சரியா வராதென்டு எனக்கு நல்லாவே தெரிஞ்சிது.எப்படியோ அவன்ட்ட பேசி, புரியவெச்சி, அவனும் மனசுமாறி நல்லா இருக்குற நேரத்துல திருப்பவும் உங்கட கோல் வந்துடும்..."

என அதிருப்தியுடன் முடித்து, அதை முகத்திலும் காட்டியவன், கலங்கிய கண்களுடன் அமைதியாக இருந்தவளைப் பார்த்துவிட்டு, தானே மீண்டும் தொடர்ந்தான்.

" வேணாமெண்டு முடிவெடுத்தா மொத்தமா விட்டுடனும் ஷோபனா. இந்தபக்கமும் போகாம, அந்தப்பக்கமும் போகாம, நடுவில் நிக்கிறது சரியே.. இல்ல. இன்டைக்கு நீங்க அழுததைப் பாத்தா, இன்னும் அதே இடத்துல தான் நிக்கிறீங்க போல.
ரொம்ப கஷ்டப்படுத்தான் உங்கட நம்பர ப்ளாக் பண்ணவச்சேன். அதுக்கு பிறகு நிறையவே மாறிட்டான். எப்பவோ நடந்திருக்க வேண்டியது. நீங்க கொஞ்சமாச்சும் யோசிச்சு இருந்திருந்தா... "

தொடர்ந்து ஏதோ கூறவந்தவன்,
ஷோபனாவின் வதனத்தில் வேதனையின் சாயல் கண்டு இடைநிறுத்தி, பெருமூச்சு விட்டுக்கொண்டவன்,

" இங்கப்பாருங்க ஷோபனா.. உங்கள ஹர்ட் பண்றது என்ட நோக்கம் இல்ல. நேத்து நல்லகாலம், ஜோனத்தன்ட போன்ல நீங்க போட்ட மெஸேஜ் பார்த்தது நான்தான். உங்களுக்கும் விளங்கத்தானே வேணும்... நேர்ல கதைக்கிறது சரியென்டு படவும்(தோன்றவும்) வர சொன்னனான்.
நாளண்டைக்கு டவுன் சர்ச்சிலதான்(Church) வெடிங்க். ஏலுமென்டா (இயலுமென்றால்) கட்டாயம் வாங்க..."

எனக்கூறிக் கொண்டே எழுந்து, வேகநடையுடன் கஃபே விட்டு வெளியேறி இருந்தான்.

*****

ஷோபாவின் வீட்டு வெளிமுற்றம் நல்ல பெரியதொரு பரப்பு.பசுமையான புல் முழுவதும் பரவியிருந்தது.முற்றத்தில் ஓரிடத்தைப் பிடித்து சின்னதாய் இருந்தாலும், அழகிய தோட்டம் ஒன்றை உருவாக்கியிருந்தனர்.

வரிசையாக நடப்பட்டிருந்த Veitchia வகை பன்னைத் தாவரங்களின் பின்னே, கால்பாதம் வைக்கக்கூடிய அளவிலான சிறிய சாம்பல்நிறக் கற்கள் பதிக்கப்பட்டிருந்தன. கற்களின் அந்தப்புறமாக வெவ்வேறு நிறத்திலான அலங்காரப் பூச்செடிகளையும் , சிறிய குரோட்டன் தாவரங்களையும் எளிமையான ஒரேவகை சாடிகளில் நேர்த்தியாக வைத்திருந்தனர்.

இவர்கள் கொழும்பிலிருந்த போது இங்கே அனைத்தையும் கவனித்துப் பராமரித்தது அமுதாவின் தாயார்தான்.

நேரம் மாலை நான்கு மணி. முற்றத்தில் அமர்ந்து ஃபேஸ்புக் பார்த்துக் கொண்டிருந்தார் தமிழ்நேசன்.

''அம்மா குடுத்துவிட்டாங்க.."என்று,
அவித்த மரவள்ளிக்கிழங்குத் துண்டுகளையும், சிறிய கோப்பையில் கட்டசம்பலையும் நேசனின் முன்னிருந்த ஸ்டூலில் வைத்தார் அமுதா.

கிழங்குத்துண்டு ஒன்றையெடுத்து கட்டசம்பலில் தொட்டுக்கொண்டு வாயிலிட்டவர்,

''ம்ம்... உறைப்பா நல்லாருக்கு. பிள்ள எழும்பிட்டாளா..?"

''ஸ்கூல் போய்ட்டு வரேக்க, ஏதோ ஒரு ரெஸ்டாரன்ட்ல சாப்புட்டாளம். ஆள் நல்..லா அடிச்சிட்டா போல. இன்னும் எழும்பி வரக்காணல்ல.''

''ஆஹ்.. அடுத்த கிழமையிலருந்து வேலைக்கு போக வேணுமென..?"

" ஓமோம்...''

தாங்கள் இருவரும் பேசிக் கொண்டிருந்தவர்கள், ஷங்கர் வீடியோ கோலில் வரவும் அவனையும் சேர்த்துக்கொண்டார்கள்.

தமிழ்நேசன்-அமுதா தம்பதியருக்கு இரண்டு மக்கள். மூத்தமகன் ஷங்கர். இளையவள் ஷோபனா.
ஷங்கர் கொழும்பு வைத்தியசாலையில் கண்மருத்துவராக பணிபுரிகிறான். அவன் மனைவி மாலினியும் வைத்தியர்தான். மூன்று வயதில் 'அகல்யா ' என ஒருமகளும் இருக்கிறாள்.

இளையவள் - ஷோபனாவைப் பற்றி சொல்வதானால்,
இருபத்தியேழு வயது நிரம்பிய மங்கை. அழகான, கலையான முகம். சாதாரணமாக தும்மினால்கூட நாசி செந்நிறமாகி விடுகின்ற நிறமுடையாள்.

இப்போதும், பெண்ணவளின் கண்களைச் சுற்றியுள்ள பகுதியும், கன்னங்களும், மூக்கு நுனியும் சிவந்துபோய் தெரிகின்றன. அழுகிறாள் போலும்...
 
Top Bottom