• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

வழியிலே இதயத்தின் நிழலாய் - 08

ஷாரிகா

New member
Staff member
VIN - 08
ஸ்கூல் மைதானத்தின் ஓரமாக அமைக்கப்பட்டிருந்த, விளையாட்டு நிர்வாகக்குழுவினரின் காரியாலயத்திலிருந்து "அடுத்து இடம்பெறப்போகும் நிகழ்ச்சி, 16 வயதின் கீழ்..." என மகேஷ் அண்ணா ஏதோ அறிவிப்பது தெளிவில்லாமல் கேட்டது. ஷோபாவின் ஸ்கூலில் ஸ்போர்ட்ஸ் மீட் என்றாலே மகேஷ் அண்ணாவைத்தான் அறிவிப்பதற்கு அழைப்பார்கள். இன்றும் அவர் தான்.
கூட்டத்துக்குள் நின்று கை தட்டிக்கொண்டிருந்த ஷோபனா, மெதுவாய் சயன்ஸ் லேப் பக்கம் பார்வையைத் திருப்பினாள். எப்போதும் போல, லேபிற்கு முன்நிற்கும் அந்த சிறிய மாமரத்தின் கீழே, அவனது நண்பர்குழுவுடன் அமர்ந்திருந்து கதைபேசிக் கொண்டிருந்தான் ஜோ. சில நேரம் கண்கள் சுருங்க அழகாக சிரிக்கவும் செய்தான். அதே சிரிப்பு. எதுவுமே மாறவில்லை.
பின்னர், ஐஸ்கிரீம் வாங்குவதற்கு, யாரோ அம்மம்மாவிற்கு கதிரை எடுப்பதற்கு, தண்ணீர் குடிப்பதற்கு என என்னென்னவோ காரணங்களின் நிமித்தமாக அந்த மாமரத்தை நான்கைந்து தடவைகள் கடந்து சென்றிருப்பாள் ஷோபா. ஆனால், அவன் பார்க்கவே இல்லை. அல்லது பார்த்தும் கவனிக்கவில்லை.
அவனது அலட்சியத்தில் அவளுக்கு கோவம் வந்தது. என்ன செய்யலாம் என யோசித்தவளுக்கு, அவன் தனியாக எங்கோ போவது தெரிந்தது. ஏதோ முடிவு செய்தவள், கள்ளத்தனமாய்ப் புன்னகைத்தாள். அவன் பின்னே மெதுவாக ஓடிச்சென்று, அவன் கவனித்து விடாதவாறு சத்தமில்லாமல் நெருங்கி, "பே...!" என்று விளையாட்டாய் கத்தினாள். இதோ, ஜோ திரும்பிவிட்டான்!
"ஹாஹ்!"
திடீரென்று எழுந்து உட்கார்ந்தாள் ஷோபனா.
சுற்றிலும் இருட்டு. ஃபேன் சூழலுகின்ற சப்தம் மட்டுமே. மைதானம், மைக், மகேஷ் அண்ணா, மாமரம் ஒன்றும் இல்லை.
கனவு!
ஷோபனாவுக்கு மூச்சுவாங்கியது. நெத்தியில் வியர்வை. நெஞ்செல்லாம் படபடவென அடித்தது.
மெல்ல எட்டி லைட்டைப் போட்டாள். நேரம் 8.25 என்றது சுவர்க்கடிகாரம். கொஞ்சம் தண்ணீர் அருந்திக்கொண்டாள். நெஞ்சின் படபடப்பு சற்றுக்குறைந்தது போலிருந்தது.
மாலையில் கட்டியிருந்த புடவை கதிரையில் அள்ளிப்போடப்பட்டிருந்தது. இன்று அவளைப் பெண்பார்க்க வசீகரன் வீட்டிலிருந்து வந்திருந்தனர். அவன் வரவில்லை.
அவர்கள் சென்றதுமே தலைவலிப்பது போலிருக்கவும், டேப்லெட் போட்டுவிட்டு தூங்கியிருந்தாள்.
முன்னிரவுத்தூக்கம், கடந்த காலத்தின் ஏதோ ஓர் துகளை கனவாக்கித் தந்திருந்தது.
தலையை வேகமாக உலுக்கிக்கொண்டவள், போனை எடுத்துப் பார்த்தாள். புதிய எண்ணிலிருந்து இரண்டு மிஸ்ட் கோல்ஸ், வாட்ஸப்பில் மெசேஜும் வந்திருந்தது. என்னவென்று தட்டிப்பார்த்தாள்.
'Hi Shobana. திஸ் இஸ் வசீகரன்.'
"ப்ச்! இப்ப கதைக்கவெல்லாம் ஏலாது"
சலிப்பாய் முணுமுணுத்துக் கொண்டவள்,
'ஹலோ. லிட்டில் பிஸி. வில் கோல் லேட்டர்.' என அவனுக்கு அனுப்பிவிட்டு, எழுந்து குளியலறை சென்றாள்.
******
அந்தக்கல்யாண மண்டபத்தில் மதிய விருந்து முடிந்து, கூட்டம் கொஞ்சம் கொஞ்சமாய் கலைய ஆரம்பித்தது. வருணும் சாப்பிட்டு முடித்து, கல்யாண மாப்பிள்ளையான தன் சீனியரிடம் போவதாக சொல்லி விட்டு கீழே இறங்கி நடந்தவன், அப்போதுதான் ஷோபனாவைப் பார்த்தான்.
அவளது அருகில் நின்றவன் ஏதோ நிறையப் பேசுவது தெரிந்தது. அவள் சிறிதாய் தலையை மட்டும் அசைத்தாள். அவன் மீண்டும் ஏதோ கூறினான். அதற்கும் தலையசைத்தவள், எதேச்சையாக திரும்பியபோது இவனைக் கண்டிருந்தாள். உடனே அந்த அவனிடம் வருணைக் காட்டி ஏதோ கூறுவது தெரியவும், அவர்களை நோக்கி நடந்தான் இவன்.
" இந்தா, அவரே வந்துட்டேர். கிளாசுக்கு டைம் ஆகிட்டல்லோ.. போவமா வருண்?" என்று கேட்டவளின் கண்களில் 'சரி என்டு சொல்லுங்களேன்' எனும் யாசிப்பிருந்தது.
"ஓம். போவம்." என்ற வருணை 'உன்னை எனக்குப் பிடிக்கவில்லை' எனும் பார்வை பார்த்தான் அந்த அவன்.
"போய்ட்டு வாரன்" அவனிடம் மெதுவாக சொன்னாள் ஷோபனா.
"பாய் ஷோபனா. நைட்கு கோல் பண்ணுவன். ஆன்செர் பண்ணனும் சரியா." உரிமைக்குரலில் சொன்னான் அவன்.
சரி என்பதாக தலையசைத்தவள், வருணை முந்திக்கொண்டு வெளியே சென்றிருந்தாள்.
வருண் வரவும்,
" Thanks a lot வருண். உங்கள கூப்பிடுறத தவிர எனக்கு வேறவழி இருக்கல்ல. நீங்க இறக்கிவிட எல்லாம் வேணாம். நான் Drop Me போட்டு போவன். அகைன் தேங்க்ஸ்." வியர்த்துப்போன முகத்துடன் படபடவெனப் பொரிந்தாள் ஷோபனா.
" ஓகே.. ஓகே. எனக்கு அங்காலப்பக்கம் சின்ன வேலையொன்டு இருக்கு. வாங்க, நானே உங்கட வீட்ட இறக்கி விடுறேன்." சொன்னவனை நன்றியோடு பார்த்தவள், அவனது காரில் ஏறிக்கொண்டாள்.
கல்யாண விருந்து சாப்பிட்டுக் கிளம்ப தயாரானவளின் முன்னே, எங்கிருந்தோ வந்து நின்றிருந்தான் வசீகரன். நிறையப் பேசினான். ஷோபனாவை மிகவும் பிடித்திருக்கிறதாம். அவன் இதுவரை யாரையுமே விரும்பியதில்லை. ஆதலால் தனக்கு வரப்போகும் மனைவியையும் அவ்வாறே எதிர்பார்த்திருந்தானாம். ஷோபனாவுக்கும் எந்த ஒரு பாஸ்ட்டும் இல்லை என்பதாக அவனது பெரியம்மா உறுதியாகக் கூறவும் உடனேயே ஓகே சொல்லியிருந்தானாம்.
கேட்டுக் கொண்டிருந்தவளுக்கு அவன்மீது பாவப்படுவதா கோவப்படுவதா எனத்தெரியவில்லை.
நேற்றிரவு வந்த கொடுங்கனவைப் பற்றி யாழினுக்கு அழைத்துச் சொல்லவும், 'அடியேய் லூசு. எல்லாத்தையும் நினைச்சி குழப்பிக்கொள்ளாதடி. மாப்பிள்ளைக்கு எடுத்துக்கத முதல். அவர பிடிச்சி இருந்தா எல்லாம் சரிவரும். கல்யாணத்துக்கு காதல விட கம்பானியன்ஷிப் தான் வேணும். ...' இன்னும் ஏதேதோ நிறைய நிறைய அறிவுரைகள் கூறிய பின்பே போனை வைத்திருந்தாள் யாழினி.
இவளும் இன்றிரவு அவனுக்கு அழைத்துப் பேசும் முடிவில்தான் இருந்தாள். இன்றில்லாவிட்டாலும், சிறிது நாட்களின் பின்னர் ஜோவைப் பற்றி சொல்லவும் எண்ணியிருந்தாள். சொன்னால் தான் அவளுக்கு நிம்மதியாக பேசிப்பழக முடியும். ஆனால் இந்த வசீகரன் பேசுவதைப் பார்த்தால்...
ஷோபனாவுக்கு கார் சிக்னஸ் ( Car Sickness)உண்டு. இன்று சாப்பிட்டவுடன் காரில் ஏறியதால் என்னவோ போலிருந்தது. கார் கண்ணாடியை இறக்கினால் நன்றாக இருக்கும். கேட்டுப்பார்ப்போம்.
"வருண், எனக்கு ஒரு மாதிரி இருக்கு. கிளாஸ கொஞ்.."
அவள் கேட்டு முடிப்பதற்குள் கண்ணாடியை முக்கால்வாசிக்கு இறக்கியவன்,
" இப்ப ஓகேயா? இல்லாட்டி ஃபுல்லா திறக்கவா?" வீதியில் பார்வையை பதித்தபடியே கேட்டான்.
"இல்ல, போதும்."
ஷோபனா வருணைத்தான் பார்த்திருந்தாள். ஆபத்பாந்தவனாய் வந்து உதவிவிட்டு, வீட்டுக்கும் அழைத்து செல்கிறான். வசீகரனை யாரென்று கேட்கவும் இல்லை. சங்கடப்படுத்த வேண்டாமென்று நினைத்திருப்பான். குணத்தில் அப்படியே யாழினியின் ஆண் வடிவம் போலத் தோன்றியது.
"என்ன ஷோபனா? தண்ணி ஏதாச்சும் வேணுமா?"
தன்னையே பார்த்துக் கொண்டிருந்தவளிடம் கேட்டான்.
இல்லையெனத் தலையசைத்தவள்,உடனே
" இந்த சிவன் கோயில் தாண்டி ஒரு இளநிக்கடை வரும். நிப்பாட்டுறீங்களா குடிப்பம்?" இயல்பாய் கேட்டாள்.
காரின் வேகத்தைக் குறைத்து, அந்த கடைக்கு சற்றுத்தள்ளி மரநிழலில் நிறுத்தியிருந்தான் வருண். சீட் பெல்ட் கழட்டி இறங்க முற்பட்டவனை,
"இல்லையில்ல, நான் போய் சொல்லிட்டு வாரன்." என அவசரமாய் தடுத்த ஷோபா, அவன் பதிலை எதிர்பாராமல் இறங்கிச் சென்றிருந்தாள்.
வருண் இறங்கி நின்று சாலையில் செல்லும் வாகனங்களை வேடிக்கை பார்க்கத்தொடங்கினான். கொழுத்தும் வெயிலுக்கு ஈடாக காற்றும் வீசிக்கொண்டிருந்ததால் தோலில் சுட்டெரிக்கும் உணர்வில்லை.
அவனருகில் வந்த ஷோபா, "இந்தக் கடைக்கு கிழமையில குறைஞ்சது ரெண்டு தரமென்டாலும் வந்துடுவன். வழுக்கையை இளநீரோட சேத்து கிரைண்டர்ல நல்..லா அடிச்சிப்போட்டு, தேசிப்புளியும் விட்டு, ஐஸ் கட்டிய சின்னச்சின்னதா நிறைய போட்டு தருவாங்க. அடிக்கிற வெயிலுக்கு குடிச்சா சட்டப்படி இருக்கும்."
அவனுக்கு தெரியாதா என்ன? ஏதோ அரியவகை பிரியாணியின் ரகசிய சுவைக்குறிப்பு சொல்லும் செஃபின் பாவனையில் கூறியவளைப் பார்த்து சிரிப்பு வந்தது வருணுக்கு. கொடுப்புக்குள் அடக்கிக்கொண்டான்.
குளிரான இளநீர் ஜுஸ், வெளிப்புறம் நீர்த்துளிகள் கோடு கோடாக வழிந்தபடியிருக்க பெரிய க்ளாஸ்களில் வந்தது. இருவரும் ஸ்ட்ராவை உறிஞ்சிக் குடிக்க ஆரம்பித்தார்கள்.
"நீங்க எப்டி..? பாஸ்ட்ல ஒரு லவ் இருக்குற பெர்சன கல்யாணம் பண்ணுவீங்களா?"
அவளது திடீர்க் கேள்வியில் நல்லவேளை அவனுக்கு புரையேறி விடவில்லை. அருந்துவதை நிறுத்திவிட்டு அவளை விசித்திரமாக பார்த்தான்.
" சொரி. அதுவந்து.. இன்டைக்கு வெட்டிங் ஹால்ல பேசிட்டிருந்தாரே அவர்தான் எனக்கு பாத்திருக்க மாப்பிள்ள. ஜோனத்தனப் பத்தி சொல்றதா இல்லையா என்டு ஒரே குழப்பம். அதுதான் சும்மா உங்கள்ட்ட கேட்டுப்பாத்தன்."
"ஓ.. ஓகே.. பாஸ்ட்ட விட பிரசன்ட் அண்ட் ஃபியூச்சர் தானே முக்கியம். இப்பல்லாம் யாருக்குத்தான் எக்ஸ் இல்ல. உங்களுக்கு சொல்லனும்னே தோனிச்சென்டா சொல்லிர்றது பெட்டர். Anyway... Congrats ஷோபனா." என்றான் சிறிதாய் புன்னகைத்தபடி.
வருணின் பதிலில் அந்த வசீகரன் சொன்னதைப்பற்றி இவனிடம் பகிர்ந்து கொள்வோமா என யோசித்து, பின் வேண்டாமென முடிவெடுத்தாள். 'இங்கே வந்து என்னவும் கேட்கலாம், என்னவும் புலம்பலாம் அப்டி ஏதாவது என்ட நெத்தியில எழுதியிருக்கா?' என்று முகத்திலடித்தாற் போல ஏதேனும் கேட்டுவிட்டானென்றால்... சீச்சீ, கேட்கமாட்டான்; இங்கிதம் தெரிந்தவன். நான்தான் இங்கிதமின்றி அவன் தனிப்பட்ட விடயத்தில் மூக்கை நுழைத்தது. உதவியாய் வந்தவனை சங்கடப்படுத்தியது.
'அடியேய் ஷோபனா! வீடு போய் சேர்ற வரைக்கும் வாய மூடிக்கொண்டு வாராய்.' மனதுக்குள் அவளுக்கே அதட்டிக்கொண்டாள்.
இருவரும் காரில் ஏறிக்கொண்டார்கள். அதன் பின்னரான பத்து நிமிட பயணமும் அமைதியிலேயே கழிந்தது. மெயின் ரோட்டிலேயே இறங்கிக்கொண்டு, அவனுக்கு நன்றியுரைத்துவிட்டு வீடு நோக்கி நடக்கத் தொடங்கினாள் ஷோபனா.
 
Last edited:
Top Bottom