VIN -24
கற்பூர வாசனையோடும் மலர்களின் மணமோடும் கலந்திருந்த அந்த வீடு, இரண்டு நாட்களாக துயரத்தின் கனத்தை சுமந்து கொண்டிருந்தது.
வீட்டு விறாந்தையின் நடுவிலே மலர் வளையங்களின் மத்தியில் வெள்ளை ஆடை அணிவிக்கப்பட்டு அமைதியாகக் கிடந்தான் அபித்ரன்.
உறவினர்கள், நண்பர்கள், பாடசாலை மாணவர்கள் என வந்தவர்கள் ஒவ்வொருவராக அருகில் சென்று முகம் பார்த்துவிட்டு, கண்ணீருடன் விலகிச் சென்றனர்.
அதே வீட்டின் உள்ளறை ஒன்றில், சுவரில் சாய்ந்தவாறு அசைவற்று அமர்ந்திருந்தாள் ஷோபனா. அவளது பார்வை வெறுமனே எதிரிலிருந்த சுவரில் பதிந்திருந்தது. விழிகளில் மட்டும் இடைவிடாமல் கண்ணீர் வழிந்துகொண்டே இருந்தது.
துயரச் செய்தி அறிந்ததும் உயிர் குலைந்து ஓடி வந்த அந்த இரவு...
காதுகளில் விழுந்த வார்த்தைகளை நம்பவும் முடியாமல், மறுக்கவும் முடியாமல், உயிர் பதற ஓடிவந்த இரவு...
மூச்சிரைக்க மாடிப்படிகளில் ஏறி வந்தவள், அப்போதுதான் வந்துசேர்ந்திருந்த பொலிஸாரும், இன்னும் சிலரும் அறையைச் சுற்றி நின்றிருக்க, இதயம் தடதடக்க இன்னும் சற்று முன்னேறினாள்.
மறைத்து நின்றிருந்தவர்களின் தோள்களுக்கு இடையிலான சிறிய இடைவெளியூடாக அவள் கண்களில் பட்டது, அந்தரத்தில் தொங்குவதைப் போலத்தெரிந்த அந்த கால்கள்...
அவ்வளவுதான்.
நெஞ்சுக்குள் ஏதோ ஒன்று சடாரென்று உடைந்தது.
அவை ஒரு காலத்தில் அவளது கைப்பிடித்து நடை பழகிய கால்கள்தான் என்பது புரிந்த நொடியே, அதற்கு மேல் பார்வையை உயர்த்தி அந்த முகத்தைப் பார்க்கும் திராணி அவளுக்கு இருக்கவில்லை.
பார்த்தாலும்...?
அந்தக் கன்னங்கள் மலர்ந்து சிரிக்கப் போவதில்லையே...
அந்த இதழ்கள் குறும்பாக வளைந்து, "வா ஷோபிக்கா..." என்று அவளை அழைக்கப் போவதில்லையே...
இனி... ஒருபோதும்...
ஒருபோதும் இல்லையா...?
தன்னிச்சையாய் கண்களில் இருந்து இரு துளிகள் வீழ்ந்தன.
அமுதாவைப் போலத்தலையில் அடித்துக் கொண்டு கதறியழவில்லை அவள்.
உணர்வுகள் அனைத்தும் பிடுங்கி எறியப்பட்டவளைப் போல, உயிரற்ற நடையோடு படிகளில் கீழிறங்கி வந்தவள், நேராக அம்மம்மாவின் அறைக்குள் நுழைந்து கொண்டாள்.
அப்போது அந்த அறைக்குள் சென்றவள்தான்.
அதன் பிறகு...
வெளியே வரவில்லை.
வைத்தியசாலையிலிருந்து அபித்ரனின் உடல் வந்தபோதும் இல்லை. அலங்கரித்து ஹாலில் வைத்தபோதும் இல்லை.
இப்போது கூட இல்லை.
"ஷோபா... ஒருக்கா வந்து முகம் பாரு..." என்று அமுதா அழுதுகொண்டு கையைப் பிடித்தார்.
வருண் கூட மெதுவாக பலமுறை அழைத்துப் பார்த்திருந்தான்.
ஆனால் ஷோபனாவால் முடியவில்லை.
அவனது முகத்தைப் பார்த்துவிட்டால்...
நடந்தவை, நடப்பவை அனைத்தும் நிஜம் என்று ஒப்புக்கொள்ள வேண்டியிருக்கும். 'தம்பி உயிருடன் இல்லை' என்ற நிதர்சனத்தை ஏற்க வேண்டி இருக்கும்.
அழ வேண்டும்...
கதறி உடைந்து அழ வேண்டும் போலிருந்தது.
நெஞ்சுக்குள் பேரளவில் கனத்துக் கொண்டிருக்கும் வலியை சத்தமிட்டு அழுது கரைத்துத்தீர்க்க வேண்டும். ஆனால் முடியவில்லை. இதயம் இன்னும் அந்த ஒரு உண்மையை ஏற்க மறுத்துக்கொண்டே இருந்தது.
எல்லாவற்றிற்கும் மேலாக,
மனம் வேறொரு இடத்தில் சிக்கிக்கொண்டிருந்தது.
அந்த ஐம்பதாயிரம்...
யோசித்துப் பார்த்தபோது பணம் எடுக்கப்பட்டதாக சொன்ன தேதியில் சித்தியின் வீட்டில் தான் நின்றிருந்தாள். பணத்தை எடுத்தது அபித்ரன்தான் என்று அவளுக்குப் புரிந்துவிட்டது. முன்பும் இருமுறை ATM அட்டையைக் கொடுத்து பணம் எடுத்து வர அனுப்பியிருக்கிறாள்.
PIN எண்ணும் அவனுக்குத் தெரியும். பணத்தை எடுத்து விட்டு, கைபேசிக்கு வந்திருந்த குறுஞ்செய்தியையும் அழித்திருக்கிறான் என்று தெளிவாக புரிந்தது.
வருணுக்கு விஷயத்தை தெரியப்படுத்த வேண்டாம் என்று நினைத்தாள். அதனால் தான் அங்கேயே ஒன்றும் காட்டிக்கொள்ளவில்லை.
எப்படியும் இன்னும் சில மணிநேரத்தில் வருண் கண்டிக்குப் புறப்பட்டுவிடுவான் தானே. அதற்குப் பிறகு அபியிடம் சென்று, தனியாகக் கேட்டுக்கொள்ளலாம் என்று நினைத்திருந்தாள்.
அவளது சித்தப்பா மதியழகன் கோபம் வரும்வரைக்கும் தான் நல்லவர். பொறுமை எல்லை கடந்து விட்டால் சரி, அவ்வளவு தான்...
சின்னப் பிழை என்றாலும் அடித்துத் துவைத்துவிடுவார். பிள்ளைகள் என்றெல்லாம் பார்க்கமாட்டார்; நிதானித்து யோசிக்க மாட்டார். அவ்வப்போது சித்திக்கும் விழுவதுண்டு.
அபித்ரனுக்கு அப்பாவின் அடிக்கு பெரும் பயம். இப்படியிருக்க, ஷோபனாவுக்கு அவனது காதல் விஷயமே பெரிய ஆச்சர்யக்குறி தான். வயசுக்கோளரில் ஏதோ ஓர் அசட்டுத் துணிச்சலில் இறங்கியிருக்கக் கூடும் என்று நினைத்தாள்.
'அபி, இது வேற ஏதோ பிரச்சனையென்டு வடிவா விளங்குது. உன்ட லவ்ஸ்டோரிய வச்சு பூசி மெழுகுறாய். என்னென்டு ஒழுங்கா சொல்லலையோ, இப்ப போவன் சித்தப்பாட்ட. அடிச்சு கொல்லுவேரென்டு தெரியும். அதுக்காக பாவப்பட்டு சொல்லாமவிடுவன் என்டு மட்டும் நினைச்சிறாத. இவ்வளவு காசு எடுக்குற அளவுக்கு வந்த பிறகும், உனக்குப் பாவப்பட்டனோ.. ஊருலகத்துல என்ன விட லூசி வேற யாருமில்ல. நீ சொல்றியா? இல்லாட்டி நான் போய் சொல்லவா?' காரில் திரும்பி வருகையிலே அவனிடம் எப்படிக் கேட்பதென்று முடிவே செய்துவிட்டிருந்தாள்.
அபித்ரனிடம் போய் முதலில், என்ன பிரச்சினை என்று நிதானமாக கேட்டுப் பார்ப்போம். இந்த முறையும் சொல்லாமல் இருந்தால், சித்தப்பாவிடம் சொல்லிவிடுவதாக பயமுறுத்தி விஷயத்தை வாங்கிவிடலாம் .
அதன் பிறகு, தேவைப்பட்டால் வருணிடமும் சொல்லிக்கொள்ளலாம்.
இப்போதைக்கு வேண்டாம்.
அவ்வளவுதான் நினைத்திருந்தாள்..
இந்த விஷயத்தைஏன் அவ்வாறு சாதாரணமாக எடுத்துக் கொண்டாள்?
ஏதோ ஐநூறு, ஆயிரம் என்றால் பரவாயில்லை.
ஐம்பதாயிரம் ரூபாய் என்கையில் அவள் சற்று ஆழமாக யோசித்திருக்க வேண்டாமா?
ஒரு பள்ளி மாணவன் யாரிடமும் சொல்லாமல் எடுத்து செலவழிக்கும் அளவிற்கு அது சிறிய தொகையா?
அப்போதே அவள் எல்லாவற்றையும் விட்டுவிட்டு அவனைப் பிடித்துக் கேட்டிருக்க வேண்டாமா?
அப்போதே வருணிடம் சொல்லியிருக்க வேண்டாமா?
கேள்விகள் மட்டும் மனதிற்குள் மீண்டும் மீண்டும் எழுந்தன.
என்ன பயன்?
இப்போது, மடமையை எண்ணி நொந்துகொள்ள மட்டும் தானே முடியும். மாண்டவனை மீட்டெடுக்கவா முடியும்??
அவன் ஏதோ சிக்கலில் மாட்டியிருக்கிறான் என்று தோன்றியது. ஏதோ பெரிய விவகாரம் என்று எண்ணினாள் தான்.
ஆனால் அந்தச் சிக்கலின் முடிவு தற்கொலையாக இருக்கும் என்று,
முடிவிலியில் ஒரு பங்கு கூட அவளால் சிந்தித்திருக்க முடியாது.
"எல்லாத்துக்கும்..."
என்று சொல்லிவிட்டு, கண்களை எட்டாத ஒரு புன்னகையை உதிர்த்தானே...
அந்தப் புன்னகையை வைத்தாவது ஏதோ சரியில்லை என்று உணரமுடியாமல் போயிற்றே.
எப்படி முடியும்...?
அப்போதுதான் அவள் மனம் வேறெங்கோ இருந்ததே. இனிய தருணங்களின் மயக்கத்தில் மூழ்கி திளைத்திருந்ததே.
நினைக்க நினைக்க ஷோபனாவுக்கு நெஞ்சறைக்கூடு வெடித்து நொறுங்கிவிடும் போலிருந்தது.
உள்ளெடுக்கும் ஒவ்வொரு மூச்சிலும் குற்றவுணர்வின் பாரம் கூடிக்கூடி அவளை அழுத்தியது.
தன் கண்முன்னே நின்றபோதும் அவனது வேதனையை உணரத் தவறிவிட்டோமே... என்ற வேதனைதான் அவளை அதிகமாகக் கொன்றுகொண்டிருந்தது.
சட்டென்று...
வெளியே சலசலப்பு அதிகரிக்கத் தொடங்கியது.
பெட்டிக்குள் வைக்கப் போகிறார்களாம். மெல்லிய குரல்களில் பேசிக்கொண்ட வார்த்தைகள் அவள் காதில் விழுந்தன.
அருகில் அமர்ந்திருந்த யாழினி, ஷோபனாவின் கையைப் பற்றிக்கொண்டு மெதுவாக அழைத்தாள். ஷோபனாவின் தலை அப்போதும் மறுப்பாக அசைந்தது.
வெளியே ஓய்ந்திருந்த ஒப்பாரிச் சத்தம் மீண்டும் எழத் தொடங்கியது.
அப்போது கபிஷ் உள்ளே வந்தான்.
"பெட்டிக்குள்ள வைக்கப் போறாங்களாமக்கா..." தொண்டை அடைக்க, "இப்ப என்டாலும் வந்து அபிட முகத்தப் பாரேன்..." என்றான் கரகரத்த குரலில்.
கபிஷின் முகத்தில் அபியின் சாயல் தெரிந்ததோ, இல்லை அந்த "அக்கா..." என்ற அழைப்பில் அபியின் குரல் கேட்டதோ, ஷோபனாவுக்கே தெரியவில்லை.
தொண்டை வரை வந்து நின்ற விம்மலை அடக்கிக்கொண்டு அவனுடன் நடந்தாள். அவள் வருவதைப் பார்த்தவர்கள், பரிதாபப் பார்வையுடன் வழி கொடுத்தனர்.
இதோ...
இரண்டு நாட்களாகப் பார்க்கத் துணியாத முகம்.
அமைதியாகப் படுத்திருந்தான் அபித்ரன்.
எப்போதுமே குப்புறப்படுத்துதான் தூங்குவான். "ஒழுங்கா படடா ..." என்று அம்மம்மா அடிக்கடி திட்டுவார்.
கேட்டால் தானே. இரண்டு நிமிடத்தில் மீண்டும், தலையணையை கட்டிக் கொண்டு குப்புறப்படுத்துவிடுவான்.
நிமிர்ந்து படுக்கும் பழக்கமே இல்லாதவன். இன்று மட்டும்...
மெல்ல முன்னேறி அருகே வந்து நின்றவள், நடுங்கிய கையால் அவன் நெற்றியை மெதுவாகத் தொட்டாள். குளிர்ந்திருந்தது. அந்த குளிர்ச்சி அவளது விரல்களைத் தாண்டி நேராக இதயத்திற்குள் இறங்கியது.
"ஏன்டா..." உடைந்த குரல் வெளியேறியது.
அவ்வளவுதான்.
அதுவரை எப்படியோ அடக்கி வைத்திருந்த கண்ணீரும் கதறலும் கரை உடைத்தது.
அவன் தலைமாட்டில் முழந்தாளிட்டு குழந்தையைப் போலக் குலுங்கிக்குலுங்கி அழுதாள். கபிஷும் அவளருகே வந்து மண்டியிட்டு, அவளை இறுகக் கட்டிக்கொண்டு அழுதான்.
அக்காவும் தம்பியும் ஒருவரையொருவர் பற்றிக்கொண்டு கதறியழுத காட்சி, அங்கிருந்த பலரது கண்களையும் கலங்க வைத்தது.
கேவல்களுக்கும் விக்கல்களுக்கும் இடையே, விசும்பல்களுக்கு நடுவே, என்னவெல்லாமோ சொல்லிச் சொல்லி அழுதாள் ஷோபனா.
வருண் கலங்கிய முகத்துடன் பார்த்துக் கொண்டிருந்தான். ஆற்றும் வழிஅறியாது, தேற்றும் மொழி தெரியாது அமைதியாக பார்த்துக் கொண்டு நின்றவன், அவள் அருகே சென்று தோளில் மெதுவாகக் கை வைத்தான். அதற்கு மேல் என்ன செய்வதென்று தெரியவில்லை..
**************
பெட்டியின் மூடி பொருத்தப்பட்டது.
"கவனமா..."
யாரோ ஒருவர் மெதுவாகச் சொல்ல,
பெட்டி ஹாலின் நடுவிலிருந்து உயர்ந்தது.
கண்ணீரால் மங்கிய பார்வையுடன்,வாசலை நோக்கி நகர்ந்துகொண்டிருந்த அந்தப்பெட்டியை மட்டுமே பார்த்துக்கொண்டு வேரூன்றியவளாக அசையாமல் நின்றாள் ஷோபனா.
எடுத்துக்கொண்டு போகிறார்கள்...
அவனை எடுத்துக்கொண்டு போகிறார்கள்.அவளது சிறுவயதின் ஒரு பகுதியையும், எண்ணற்ற நினைவுகளையும், "ஷோபிக்கா..." என்று பின்னாலேயே சுற்றித் திரிந்த ஒரு உயிரையும், சேர்த்தே எடுத்துக்கொண்டு போகிறார்கள்.
அவன் போகிறான்.
இனி அவள் வாழவேண்டுமே.
அவனைப் போகாமல் தடுத்திருக்கக் கூடிய கடைசி மனிதர்களில் ஒருத்தி தான்தானோ என்ற குற்றஉணர்ச்சியோடு வாழ்நாள் முழுக்க, வலிக்க வலிக்க வாழவேண்டுமே.
*****************
அடுத்து வந்த நாட்களில் பொலிஸ் விசாரணை தீவிரமாக நடந்தது.
ஷோபனாவிடமும் கேள்விகள் கேட்கப்பட்டன.
தன் கணக்கிலிருந்து பணம் எடுக்கப்பட்ட விஷயத்தை அவள் கூறியபோது, அருகில் நின்றிருந்த வருணின் பார்வை சட்டென்று தன் பக்கம் திரும்பியதை உணர்ந்தாள்.
அந்தப் பார்வையில் அதிர்ச்சியும் இருந்தது.அதிருப்தியும் இருந்தது.
அதையும் உணர்ந்தே இருந்தாள்.
ஆனால் அதற்கு எந்த எதிர்வினையும் இல்லை. அதிர்ச்சியும், துயரமும், குற்றவுணர்வும் சேர்ந்து அவளது உணர்வுகளை ஏற்கனவே துடைத்தெறிந்திருந்தன.வெறுமையா ன முகத்தோடு நின்று, கேட்ட கேள்விகளுக்குப் பதில் சொன்னாள்.
அவ்வளவுதான்.
ஆறேழு நாட்கள் ஆகிவிட்ட நிலையில் அன்று தன் அம்மாவிடம் வந்திருந்தான் வருண். குமரன் அவனுக்கு அழைத்துப் பேசியவன்,
இயலுமென்றால் மறுநாளே வந்துசேருமாறு சொல்லியிருந்தான்.
ஒரே மாதத்தில் அதிக நாட்கள் விடுமுறை எடுத்தால், பயிற்சிக் காலம் முடிந்ததும் கையளிக்க வேண்டிய லொக் புக்கில் இடைவெளி விழுந்துவிடும்.
பரீட்சைக்கு விண்ணப்பிப்பதிலும் சிக்கல்கள் வரக்கூடும். எழுத முடியாமலும் போகலாம்.
வருண் நீண்ட நேரம் யோசித்தவன், இன்றிரவே கிளம்ப முடிவு செய்திருந்தான்.
தயாராகியவன் ஷோபனாவிடம் சொல்லிக்கொள்ள வந்திருந்தான்.
கட்டிலில் அமர்ந்திருந்து ஷோபனாவுடன் பேசிக்கொண்டிருந்த தயாளதேவி, வருணைப் பார்த்ததும் அமைதியாக வெளியேறிவிட்டார்.
'என்ன?' என்பது போல நிமிர்ந்து அவன் முகத்தைப் பார்த்தாள் ஷோபனா.
"நான்... இன்டைக்கு போகணும். போகட்டா...?"
ஒரு கணம் அவனைப் பார்த்திருந்தவள், பிறகு மெதுவாகத் தலையசைத்தாள்.
"நீயும் வேலைக்கு போகலாமே..." மெல்லக் கேட்டான்.
"ம்ம்... போகணும்."
"எப்ப?"
பதில் சொல்லவில்லை.
வெறுமனே தோள்களைக் குலுக்கினாள். அந்தச் சிறிய அசைவில் பெருமளவு சோர்வு தெரிந்தது.
"என்ட பிரண்டுட அண்ணாவும் இந்த ஸ்டேஷன்லதான் வேல. ஸ்கூல்.. அபிட விஷயமா ஸ்கூல்லயும் போலீஸ் என்கொயரி நடக்குதாம். கூடிய சீக்கிரம் என்னென்டு தெரிய வரும் என்டவர்..."
"ஹ்ம்ம்..." என்றவளது குரல் உள்ளே போயிருந்தது.
அதைத் தாண்டி என்ன பேசுவது என்று வருணுக்குத் தெரியவில்லை.
அவளது ஒட்டாத தன்மையான பேச்சு...
வெறுமையான முகம்...
அவளை நினைத்து வருணுக்கு பயமாக இருந்தது.
சில நொடிகள் அமைதியாக நின்றவன், இறுதியில் அவளது தலையை மெதுவாக வருடினான்.
ஷோபனா அதற்கும் எந்த எதிர்வினையும் காட்டவில்லை.
"பொய்ட்டு வாரன்..." என்று மட்டும் சொல்லிவிட்டு மனமேயில்லாமல் புறப்பட்டான் வருண்.
***************
அடுத்த நாள் மாலை, கைபேசியை வெறித்தபடி அமர்ந்திருந்த ஷோபனாவின் பார்வையில் ஒரு முகநூல் பதிவு பட்டது.
அபியின் புகைப்படம்.
அதன் கீழே பெரிய எழுத்துக்களில்,
"காதலி பிரிந்த வேதனையில் மாணவன் தற்கொலை..."
என்று எழுதப்பட்டிருந்தது.
சில நொடிகள் அப்படியே திரையைப் பார்த்துக்கொண்டிருந்தாள்.
கீழே கருத்துகள் குவிந்திருந்தன.
" O/L எக்ஸாம் கூட எழுதல. பாவம்..."
"இந்த வயசுல பிள்ளைகளுக்கு எவ்வளவு மன அழுத்தம்..."
" நாட்டுல இதெல்லாம் இப்ப சாதாரணம்..."
"அந்தப் பெட்டையையும் விசாரிக்கணும்..."
மேலும் பல பதிவுகளும் இதைத் தழுவியதாகவே இருந்தது.
"குற்றச்செயல் அல்லது வெளிப்புற தலையீடு தொடர்பான ஆதாரங்கள் இதுவரை கிடைக்கவில்லை என்பதால், தற்போதைய நிலையில் காதல் தொடர்பான மன உளைச்சல் காரணமாக ஏற்பட்டிருக்கக்கூடிய தற்கொலையாகவே கருதப்படுகிறது." என்ற போலீஸ் விசாரணை முடிவு தொடர்பான பதிவொன்றையும் பார்த்தவளுக்கு தாளவில்லை.
உடனே கடையிலிருந்த சித்தப்பாவிடம் விஷயம் சொல்லி, அம்மம்மாவின் மறுப்பையும் பொருட்படுத்தாமல் போலீஸ் ஸ்டேஷனுக்கு அவருடன் சென்றாள்.
மதியழகன் பேச, ஏற்கனவே பலமுறை கேட்ட கதையை மீண்டும் கேட்கும் முகபாவனையுடன் அவர்களைப் பார்த்திருந்தார் அந்த போலீஸ் அதிகாரி.
வெற்றிலையை மென்றபடி நாற்காலியில் சற்றுப் பின்னால் சாய்ந்தவர்,
"பாருங்கோ சேர்... நாங்க இந்தக் கேஸை சும்மா மேலோட்டமா பாக்கல. ஸ்கூல்ல போய் விசாரிச்சாச்சு. அவனோட நெருங்கின கூட்டாளிப் பொடியனுகள்டயும் கதச்சாச்சு. எல்லாரும் ஏறக்குறைய ஒரே விஷயத்தத்தான் சொல்றானுகள். விரும்பின, அந்த பிள்ளட வீட்டுக்கும் போய் விசாரிச்சாச்சு. இப்ப நாங்க வாழ்ந்த காலம் மாறி இல்ல சேர்.. படிக்கிற பிள்ளைகள்கிட்ட போன், சோஷியல் மீடியா, காதல், டிரக்ஸ் என்டு... சின்ன வயசுல பெரிய முடிவுகள் எடுக்கிறானுகள். பிரச்சன வந்தா சமாளிக்க தெரியாம இப்படி..." கடைசி வரியை முடிக்காமல் அவர்களைப் பார்த்தார்.
ஷோபனா அவர் கூறியதை முழுதாய் ஏற்கமுடியாத முகபாவனையோடு "ஆனா சேர்... அந்த காசு விஷயம் சொன்னனே?" கரகரப்பான குரலில் மெல்லக் கேட்டாள்.
"அதையும் விசாரிச்சம் தான். யாராவது ஃப்ரெண்டுக்குக் குடுத்திருக்கலாம். இல்லாட்டி விரும்பின பிள்ளைக்கே செலவு பண்ணியிருக்கலாம். சித்தப்பாகாரன் என்டு ஒருத்தன், அந்த பிள்ளைய அடிச்சி கொல்லாத குறை. அது பயந்து பயந்து பதில் சொல்றதப் பாக்கேக்க எங்களுக்கே பாவமா இருந்தது. ஒருவேள அவன்தான் உங்கட தம்பிய பிடிச்சி மிரட்டினானோ என்னவோ.. ஆதாரம் இல்லாம வெறும் சந்தேகத்த மட்டும் வெச்சு ஒண்டும் செய்ய ஏலாதம்மா." என்றவர்,
பமதியழகனிடம் திரும்பி,
"உங்கட கவல விளங்குது சேர். ஆனா இப்ப வரைக்கும் கிடைச்ச தகவல்கள்ல டிரக், வெளியில இருந்து வந்த பிரச்சனை, மிரட்டல் , அடிதடி அப்படியென்டு எதுவும் உறுதியா தெரியல. புதுசா ஏதாவது தகவல் கிடைச்சா நிச்சயமா விசாரிப்பம். நீங்களும் ஏதாவது தெரிஞ்சா உடனே சொல்லுங்க."
என்று கூறிவிட்டு உரையாடலுக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.
வேறு எதையும் பெற்றுக்கொள்ள முடியாத நிலையோடு, அரைமனதுடன் வெளியே வந்தாள் ஷோபனா.
அவளுக்கு இதை இப்படியே விட்டுவிட்டு கைகட்டிக்கொண்டு இருக்க முடியாது. உண்மையான காரணம் தெரியும்வரை நிம்மதி கிடைக்காது.
ஒற்றைத் தலைவலி பாடாய்ப் படுத்தியதில், வீட்டுக்கு வந்ததும் இரு டேப்லெட்டை போட்டுக்கொண்டவள், நேரத்தைப் பார்த்துவிட்டு அருளுக்கு அழைத்தாள்.

Last edited: