• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

வழியிலே இதயத்தின் நிழலாய் - 25

ஷாரிகா

Active member
Staff member
VIN - 25

அவர்களருகில் வந்த அபித்ரன்,
"டேய் மாதவா!! என்னடா இதெல்லாம்? " முகத்தை அசூசையாக வைத்துக்கொண்டு குரலில் அதிர்ச்சியை காட்டி கேட்டதில், கையில் இருந்ததை அனிச்சை செயலாக மேசையில் வைத்துவிட்டான் மாதவன்.

மாதவனுக்கும் இந்த விஷயத்தில் துளியும் உடன்பாடுஇல்லை. வேண்டுமாயின், அளப்பரிய பிரியத்திற்குரிய அம்மா மேல்கூட சத்தியம் செய்து கூறுவான்.
என்னசெய்வது, ஆருயிர் நண்பன் சரணுக்கு துணை போக வேண்டிய கட்டாயத்தில் அவனது குழுவினருடன் இழுபட்டு வந்து நிற்கிறான். அன்னைக்குத் தெரிந்ததோ கொலைதான் விழும்.

"மனோ டேய்!! இஞ்ச.. இவர்ட முகத்தப்பாரன். எங்களையெல்லாம் பார்க்க அரியண்டமா இருக்காம் அவருக்கு.." அபியை சுட்டிக்காட்டி சரண் நக்கலாய் சொல்ல

"அன்டைக்கு எங்களோட சேந்து சிகரெட் அடிக்கக்குள்ள கேவலமா இருக்கல்லையோ?" எகத்தாளமாய் கேட்டான் மனோ என விளிக்கப்பட்டவன்.

"நான் கேட்டது மாதவன்ட்ட."
நண்பனிடமே பார்வையைப் பதித்தபடி சொன்னான் அபி.

அந்தப் பார்வையை எதிர்கொள்ள முடியாமல் மாதவன் கண்களைத் தாழ்த்திக்கொண்டான்.

அபித்ரனும் மாதவனும் வெவ்வேறு வகுப்புப் பிரிவுகளைச் சேர்ந்தவர்கள்.
ஆரம்பத்தில் பெரிதாகப் பழக்கம் இல்லை என்றாலும், காற்பந்தாட்டம் இருவரையும் நெருக்கமாக்கியிருந்தது.

பாடசாலை உதைபந்தாட்டக் குழுவில் இணைந்த பிறகு, டீம் லீடரான மாதவனை அபி ஒரு தனி மதிப்புடனும் பிரியத்துடனும் பார்த்தான். அவனது மட்டில்லாத் திறமையை ஆகர்ஷிக்கும் ஒரு விசிறி என்று கூட சொல்லலாம்.

போகப் போக மாதவனுக்கும் அவன் மேல் ஒரு பிரத்யேக பாசம் ஏற்பட்டிருந்தது.

எது எப்படி இருந்தாலும், மாதவன் இவர்களுடன் சேர்ந்து இந்த இழி செயலை செய்வதற்கு உடந்தையாக இருப்பதை அபித்ரனால் ஏற்க முடியவில்லை.

" அபி! நீ போடா.. இங்க பாரு, சத்தியமா நான் ஒன்டும் உள்ளுக்க எடுக்கல்ல." மாதவன் எப்படியாவது அவனை அனுப்பிவிட முனைந்தான்.

"ஓஹ்!! ஏன் வேணுமெண்டா நீங்களும் உங்கட யாலுவாவோட ஜோடி சேந்து போகலாமே..?" சரண் குரலில் வெளிப்படையான எரிச்சல் கலந்த நக்கல்.

"ஓம். போகத்தான் போறம். குரு அண்ணா.. இல்லாட்டி, சேர்.. யாராவது ஒரால் வரட்டும். நின்டு சொல்லிட்டுப் போறம்." அபியின் குரல் இறுகியது.

அதை கேட்டதும் "ஐயோ அபி! அதெல்லாம் வேணாம். இது சும்மா.. ஒருக்கா என்டுதான் . அப்படித்தானே... சொல்லுங்களண்டா.." ஆன்டனி முகம் வெளிற சமாளித்தான்.

"ஏய்!! அப்படி விசர் வேலை எல்லாம் பார்த்துறாத" அபியிடம் சீறினான் சரண்.

"என்ன சொன்னாலும் சரி. இன்டைக்கு சொல்லத்தான் போறன்....
சிகரெட் குடிச்சி மாட்டுப்பட்ட நேரத்துலயே எவ்வளோ அடி வாங்கினம்." என்றுவிட்டு, அவர்கள் மளமளவென ஜீன்ஸ் பாக்கெட்க்குள் திணித்தவற்றை சுட்டிக்காட்டி,

"இதெல்லாம் என்ன முதல்? எங்கால கிடச்சது? பயம் இல்லையாடா உங்களுக்கெல்லாம்?" வார்த்தைகள் கடுமையாக வந்தாலும், குரலில் நடுக்கம் இருந்தது.


அபித்ரனுக்கோ ஏதோ தான் செய்ததைப் போலப் பயமாக இருந்தது. சிகரெட் விஷயம் வீட்டுக்குத் தெரிந்தபோது வாங்கிய அடி இன்னும் மறக்கவில்லை.
இதைவிட பெரிய பிரச்சினையில் சிக்கினால் என்ன ஆகும் என்ற பதற்றம் நெஞ்சுக்குள் ஓடிக்கொண்டே இருந்தது.
ஆனாலும் அமைதியாக விலகிப் போகவும் முடியவில்லை.

அபித்ரன் வகுப்பில் பெரிய ரவுடி ரகமெல்லாம் இல்லை. எடுப்பார் கைப்பிள்ளை என்று கூட சொல்லலாம். இவர்கள் சற்று ஏற்றிவிட்டால் சுர்ரென மண்டைக்கேறும் ரகம். அருளுடன் சேர்ந்தால் மட்டும் கொஞ்சம் கெத்தாகச் சுற்றித்திரிவான். அவ்வளவுதான்.

ஆனால் இன்று...
அவர்கள் எவ்வளவு சொல்லியும் அசையாமல், தங்களுக்கு எதிராக ஒரேபிடியில் நின்றவனைப் பார்க்க, உண்மையிலேயே போய் சொல்லிவிடுவானோ என்ற பயம் அனைவருக்குள்ளும் முளைக்கத் தொடங்கியது. இலேசாக வியர்வை அரும்பியது.

சரண் மனோவிடம் கண்ணைக் காட்டிவிட்டு, தன் போனை எடுத்துக் கொண்டு சற்றுத்தள்ளி சென்றான்.

மற்றவர்கள் அபியிடம் 'சொல்லவேண்டாம்' என்று வெவ்வேறு விதமாய் கேட்டுப்பார்க்க, அவன் ஒரேடியாக மறுதலித்து நின்றான்.

அந்த நேரத்தில் தான் குரு உள் நுழைந்தான். அந்த டியூஷன் சென்டரில் உதவியாளனாக வேலை பார்ப்பவன்.

வேளா வேளைக்கு சென்டரைத் திறப்பது, பூட்டுவது, வகுப்பறைகளைச் சுத்தம் செய்வது, மாதாந்திர கட்டணங்களை வசூலித்து பதிவு செய்வது, வரவுகளைப் பார்ப்பது, பரீட்சைப் புள்ளிகளை டைப் பண்ணி அறிவிப்புப் பலகையில் ஒட்டுவது என சென்டரின் பெரும்பாலான வேலைகளையும் கவனிப்பவன் குரு.

அங்கு படிக்கும் மாணவர்களுக்கு அவன் வெறும் உதவியாளன் அல்ல. பிரியத்திற்குரிய 'குரு அண்ணா.'

அந்தச் சென்டருக்கு வரும் மாணவர்களின் குடும்பப் பின்னணி முதல் நட்பு வட்டம் வரை பல விஷயங்கள் குருவுக்கு அத்துப்படி.

குருவின் தலையைக் கண்டதும் அபித்ரன் அவசரமாக ஓடிச்சென்றான்.
"குருண்ணா! அவங்கட பொக்கட், பேக் எல்லாத்தையும் ஒருக்கா செக் பண்ணுங்கவன். முழுக்க ட்ரக்ஸ்... சேருக்கு கெதிய கோல் எடுங்கண்ணா!"


"சரி... சரி... முதல்ல நீ இங்க வா," என்று அங்கிருந்த மர வாங்கிலில் அபித்ரனை அமரவைத்தான் குரு.

தோளில் கைபோட்டு அமைதிப்படுத்துவது போல,
"ஏதோ தெரியாம செஞ்சிட்டானுகள் டா. ஒருக்கா தானே... விட்ருவம். சேர்ட்ட எல்லாம் கொண்டு போகவேணாம். சரியா?" என்று பொறுமையாகக் கேட்பவனை குழப்பமாக பார்த்துவிட்டு,

"என்னண்ணா நீங்க?? நானே போய் சேர்ட சொல்றன் அப்ப." என்றான் முடிவாய்.

குருவின் முகம் இறுகியது. எழுந்து மற்ற நால்வரிடமும் சென்றான்.

பீதியால் பேதலித்த முகத்துடன் பார்த்துக் கொண்டிருந்தவர்களை நெருங்கி, "அறஞ்சனென்டா..." உச்சகட்ட கோபத்தில் கையை உயர்த்தியவன், "இவன ஏன்டா சேர்த்தனீங்க மொக்குகளே!! புத்திசாலித்தனமா தப்பிக்கவும் தெரியல. என்னையும் சேர்த்து மாட்டி விட்டுதுகள். சனியனுகள்..." கடித்த பற்களுக்கிடையில் வார்த்தைகளைத் துப்பினான் குரு.

அடுத்த கணமே திரும்பி அபித்ரனிடம் வந்தவன்,
"டேய்! ஆம்புளப்பிள்ள தானே நீ? என்ன அது... பெட்டையல் மாதிரி கோள்மூட்டுறதிலயே நிக்கிறாய்?"
அவன் குரல் உயர்ந்ததும் அபித்ரனின் கண்கள் கலங்கின.
ஆனால் பின்வாங்கவில்லை.

"நீங்கதான் எல்லாத்துக்கும் காரணம் என்டதையும் சேத்து மாட்டிக்குடுப்பன்."என்ற அபித்ரனின் குரல் நடுங்கினாலும், வார்த்தைகள் அழுத்தம் திருத்தமாய் வெளிவந்தன.

ஒரு கணம் அவனை உற்றுப் பார்த்த குரு பிறகு எள்ளலாக நகைத்தான்.

"சரி... மாட்டிக்குடு." அலட்சியமாகத் தோளைக் குலுக்கியவன்,
"நானும் மாட்டிக்குடுக்கிறன். புது வருஷக் கொண்டாட்டமன்டைக்கு அருள காவலுக்கு வச்சுக்கொண்டு, கிளாஸ் பின்பக்கமா போய்... அது... இவர்ட ஆள்... அந்தப் பெட்டைட பேர் என்னடா மாதவா?" கேட்டுவிட்டு குரு அவனைப் பார்க்க, விடை கூறாது கலங்கிப்போன முகத்துடன் நண்பனைப் பார்த்தான் மாதவன்.

"மதுஷ்ணவி.. மது." பதில் சொன்னது மனோ.

"ஆஹ்!! பின்பக்கமிருந்த CCTVயையும் மறந்து.. அவளோட சரியான கத நம்மட அபி. கத ருசில அஞ்சும்கெட்டு அறிவும்கெட்டுப் போச்சுப் போல தம்பியருக்கு. கடைசில டைரி மில்க் வேற குடுத்தவர் சேர். போ அபி.. நீ போய் மாட்டிக்குடு . நான் மதுட சித்தப்பாட நம்பருக்கு டைரி மில்க் வீடியோவ அனுப்பி வைக்கிறேன். போ.. போ.. ஓடு." குரு போனை எடுத்துக் கொண்டே சொல்ல , மாதவனைத் தவிர மற்றவர்கள் முகத்தில் சின்னதாய் பிரகாசம்.

அந்த நொடியே அபித்ரனின் முகத்திலிருந்த தைரியம் கரைந்தது.
தொண்டை வறண்டு போனது.
எச்சிலை விழுங்கிக்கொண்டான்.

"என்னடா? போகலையா?" குருவின் குரலில் வெற்றி வெளிப்பட்டது.

"குருண்ணா... கொஞ்சம் சும்மா இருங்களன். அவன் யார்ட்டையும் ஒன்டும் சொல்ல மாட்டான். அபி, வாயத்திறந்து சொல்லன்டா..."
மாதவன் அவசரமாக அபித்ரனின் தோளைத் தொட்டான்.

"அண்ணா ப்ளீஸ்..." தொடங்குகையிலே
அபித்ரனின் குரல் உடைந்துவிட்டது.
"அப்படி எதுவும் செஞ்சிறாதிங்கண்ணா. நான்... நான் யார்ட்டையும் சொல்ல மாட்டேன்."
அழாத குறையாக கெஞ்சினான் அபி.

"ஆஹ்!! அது..."
என்று அலட்சியமாகச் சிரித்த குரு,
"எங்க... அபிட கையில ரெண்டு சாமானை குடுங்க. ஒரு போட்டோ எடுத்து வெப்பம். யாருக்கு தெரியும்...பிரேக்-அப் ஆனா மனசு மாறினாலும் மாறிரும்."
அவன் பேச்சில் ஒரு நக்கல் கலந்த அழுத்தம் இருந்தது.
அருகிலிருந்தவர்களிடம் இருந்து இரண்டு பாக்கெட்டுகளை வாங்கி அபித்ரனின் கையில் திணித்து, ஒரு புகைப்படம் எடுத்தான்.

"ஏய்! நில்லு. நில்லு."
மீண்டும் ஒன்று எடுத்துவிட்டே அவனை விடுவித்தான்.

ஒரு வார்த்தையும் பேசாமல்,
வலி நிறைந்த கண்களினால் தன்னை ஏமாற்றமாய் பார்த்துவிட்டு சென்ற நண்பனின் முகத்தை மாதவனால் என்றுமே மறக்க முடியாது.

அதற்குப் பிறகு அபித்ரன், மாதவனுடன் பேசுவதே இல்லை. சரண் மற்றும் மற்றவர்களுடன் கூட ஏதோ பேசுவான்.

மாதவனின் மன்னிப்புகளும் மன்றாடல்களும் அபியின் மனதை கரைக்கவே இல்லை.
ஒரு கட்டத்தில் அவனும் முயற்சிப்பதை நிறுத்திவிட்டான்.

'கொஞ்ச நாள் போனால் சரியாகிடும்...'
என்று நினைத்துக் கொண்டான்.

ஆனால் கொஞ்ச நாட்களில் அவன் முழுதாகப் போய்விட்ட செய்திதான் கிடைத்தது.சில்லு சில்லாய் நொறுங்கிப் போனான் மாதவன்.

நண்பனின் விபரீதமுடிவுக்கு தானும் ஓர் காரணம் என்ற உண்மையை அவனால் மாற்றவும், கழிவிரக்கம் கொண்டு தன்னைத்தானே மன்னிக்கவும் முடியாது.

இப்போதெல்லாம் ஃபுட்பால் விளையாடுவதில் விருப்பமே இல்லை. டீம் லீடர் ஆயிற்றே.. கடமைக்கு செல்கிறான்.

அபித்ரனின் பேச்சில் 'ஷோபிஅக்கா..' எனும் நபர் அடிக்கடி வந்து போவார்.

இறப்பு வீட்டில் வைத்து அவள் அழுதகாட்சி, மாதவனை வெகுவாய் பாதித்திருந்தது. எந்த அளவுக்கென்றால், அவளிடம் மட்டுமாவது உண்மையை சொல்லி விடுவோமா என்று சரணிடம் கேட்கும் அளவிற்கு. சரண் விட்டால் தானே...

சரண். நண்பன் என்ற உறவுக்கும் மேற்பட்டவன். மாதவனுக்கு சகோதரனைப் போன்றவன்.

சரணின் தந்தை, 'கமலசேகர்' மட்டக்களப்பில் பிரசித்திபெற்ற ஓர் சட்டத்தரணி. இப்போது அரசியலிலும் இறங்கிவிட்டார்.

மாதவனின் அப்பா அவன் பிறப்பதற்கு முன்பே இறந்துவிட்டார். கமலசேகரின் வீட்டில்தான் ஏதோ வேலை செய்தாராம். அவர் இறந்ததுமே மாதவனின் அன்னையை அந்த வீட்டில் வேலைக்கு எடுத்துக் கொண்டார்களாம். பின்னர் தங்க இடமில்லாமல் போன சமயம், அவர்களையும் அங்கேயே தங்கச்செய்தார்கள்.

மாதவன் பிறந்ததிலிருந்தே அந்த வீட்டில் தான். இந்த பதினாறு வருடங்களில் மாதவனுக்கு நினைவு தெரிந்து, ஒரு நாள் கூட இந்த வீட்டினரால் வேலைக்காரியின் மகனாக நடத்தப்பட்டதே இல்லை அவன்.

ஒருவேளை சிறுவயதில் ஏதேனும் பாரபட்சம் காட்டி இருக்கலாம். ஆனால் சரணின் உயிர் நண்பனான பிறகு, அவனை எப்படி நடத்தினார்களோ, அதே மாதிரி தான் மாதவனையும் நடத்தினார்கள்.

மாதவனும், சரண் “நில்” என்றால் நிற்பான். “உட்கார்” என்றால் உட்காருவான். தன் அன்னைக்கு பிடிக்காவிட்டாலும்...

என்னவோ அவனால் சரணின் வார்த்தைகளை மீற முடிவதில்லை.
கடைசியில் அபித்ரனின் விஷயத்திலும் 'வாய் திறக்க கூடாது' என்று அவனைக் கட்டிப்போட்டு விட்டானே.

மாதவனால் என்ன முயன்றும் அபியின் மறைவைக் கடந்து வர இயலவில்லை. குற்ற உணர்ச்சி பெரிய ஒரு முட்டுக்கட்டையாய் முன்னே நின்றது.

அன்று மைதானத்தில் ஷோபனாவைப் பார்த்ததுமே அவனையறியாமல் ஓடிவந்திருந்தான் . அருகில் சென்றபோது தான் அவள் அழுதுகொண்டிருப்பது தெரிந்தது. மாதவனுக்கும் தொண்டையை அடைத்தது.

அன்றிரவே இன்ஸ்டாகிராமில் அவளிடம் பெயரின்றி மன்னிப்பு வேண்டியிருந்தான்.

அபித்ரனின் அக்கா இப்போதெல்லாம் அடிக்கடி மைதானத்திற்கு வருகிறாள். சரணின் மறுப்பையும் மீறி அவளிடம் ஓரிரு வார்த்தைகளாவது பேசிவிடுவான். அதனால் அவனது மனநிலையில் ஒரு மண்ணாங்கட்டி மாற்றமும் ஏற்படவில்லை. திருடனுக்கு தேள் கொட்டிய கதையாகிப் போனது அவன் கதையும்.

எப்போதும் போல இப்போதும் நடுஇரவில் தூக்கம் தொலைத்து எழுந்துநின்ற மாதவன், நடந்தவைகளை ஒவ்வொன்றாக நினைத்துப் பார்த்து வேதனை தாளாமல் ஊமையாய் கண்ணீர் வடித்தான்.

***************

அந்த பாடசாலையின் முன்றலில் காலை கூட்டம் நடைபெற்று கொண்டிருந்தது.

“அடுத்த நிகழ்வாக லக்ஷிகா அவர்களின் உரை இடம்பெறும்” என்ற அறிவிப்பைத் தொடர்ந்து, ஒரு மாணவியிடம் ஒலிவாங்கி கையளிக்கப்பட்டது.

“அனைவருக்கும் வணக்கம்.”
சிறிய இடைவெளிக்குப் பிறகு பேசத் தொடங்கினாள்.

“நான் பேசப்போகும் தலைப்பு மிகவும் முக்கியமான ஒன்று. இன்றைய செய்திகளில் பெரும்பாலானவை ஒரே துயரத்தைத் திரும்பத் திரும்ப சொல்லிக்கொண்டிருக்கின்றன. பல்கலைக்கழக மாணவர்கள், பாடசாலை மாணவர்கள்… அவர்கள் எடுத்துக்கொள்ளும் விபரீத முடிவுகள் நம்மை தினமும் பதறவைக்கின்றன.

உலக சுகாதார அமைப்பின் தரவுகளின்படி, உலகில் ஒவ்வொரு சில நிமிடங்களுக்கும் ஒரு தற்கொலை சம்பவம் இடம்பெறுகிறது. ஒவ்வொரு சில வினாடிகளுக்கும் ஒரு தற்கொலை முயற்சி நடைபெறுகிறது என்றும் அறிக்கைகள் கூறுகின்றன.

நம் நாடும் இதற்கு விதிவிலக்கல்ல. இங்கும் நிலைமை கவலைக்கிடமாகவே உள்ளது. இலங்கையில் சராசரியாக நாளொன்றுக்கு 50 தற்கொலைகள் இடம்பெறுவதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.தென் ஆசியாவில் தற்கொலை வீதம் அதிகமாக காணப்படும் நாடுகளில் இலங்கையும் ஒன்று எனவும் கூறப்படுகிறது.

பிரச்சினைகள் ஏற்படும் போது இலகுவில் மனம் புண்படும் தன்மையுடையவர்கள், அவற்றை தாங்க முடியாதவர்கள், நண்பர்களிடம் பகிர்ந்து கொள்ள முடியாதவர்கள், தங்களது பிரச்சினைகளுக்கு இதுவே ஒரே நிரந்தரத் தீர்வு என்று தவறாக நம்பி அந்த விபரீத முடிவை எடுக்கின்றனர்................."

இன்னும் அந்த தலைப்பைச் சார்ந்த பல விடயங்களை தனது உரையில் விவரித்துவிட்டு,

இறுதியாக குரலை தணித்து, அதில் வருத்தத்தை சற்று குலைத்து,

“சமீபத்தில் எங்கள் பாடசாலையையே சேர்ந்த அண்ணா ஒருவரும்… துரதிருஷ்டவசமாக இப்படியான ஒரு விபரீத முடிவை எடுத்திருந்தார். அவர் எப்போதும் மைதானத்தில் சிரிப்புடன் ஓடி விளையாடும், கால்பந்து அணியின் உயிராக இருந்த ஒரு மாணவர். நண்பர்களை உற்சாகப்படுத்தும் அவரது குரலும், அந்த சிரிப்பும் இன்னும் எங்கள் நினைவுகளில் உயிருடன் இருக்கின்றன.
இன்று அவரை இழந்துவிட்டோம் என்பது நம்ப முடியாத ஒரு உண்மையாகவே நம்மை வலிக்க வைக்கிறது. அவரது இழப்பு எங்கள் எல்லோருக்கும் ஒரு பாடமாக இருக்கட்டும்…!!
வாழ்க்கை எவ்வளவு கடினமாக இருந்தாலும், பேசக்கூடிய ஒருவர் எப்போதும் இருக்கிறார் என்பதை நாம் மறக்கக் கூடாது.
மேலும்… எங்கள் நண்பர்களில் யாராவது மன அழுத்தத்தில் இருக்கிறார்கள் என்றால், அதை கவனிக்காமல் விடக்கூடாது. அவர்களுக்காக நாமும் ஒரு துணையாக இருக்க வேண்டும் என்பதை நினைவூட்டியவளாக விடைபெறுகிறேன்.
நன்றி!!. வணக்கம்! "
என்றதோடு அவளது உரையை முடித்துக் கொண்டாள்...

கூட்டத்தில் நின்றிருந்த சில மாணவர்களின் முகம் இயல்பாகவே இறுகியது. சிலர் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்; பார்வையில் சொல்ல முடியாத ஒரு அசௌகரியம்.

அந்த சிலருள் அண்டனியும் அடக்கம்.
அண்டனி இதுவரை ஒருபோதும் காலை கூட்ட நிகழ்ச்சிகளை அந்த அளவுக்கு கவனமாகக் கேட்டதே இல்லை.

பொதுவாகவே, அப்படியான உரைகள் அவனுக்கு சலிப்பை மட்டுமே தரும். சில நிமிடங்களில் பார்வை வேறெங்கோ சிதறிவிடும்; நண்பர்களுடன் குசுகுசுப்புகள் தொடங்கிவிடும்.

ஆனால் இன்று…
அவன் அசையாமல் நின்றிருந்தான்.

ஒவ்வொரு வார்த்தையும் அவனுக்குள் ஆழமாக இறங்கியது. பயம் ஒரு பந்து போல உள்ளே உருண்டு பெரிதாகிக் கொண்டிருந்தது. கை கால்கள் தானாகவே உதறத் தொடங்க, நின்ற இடமே சுழலுவது போல மயக்கம் வந்தது.

அபித்ரனின் இறப்பு சம்பவம் கேட்டு அதிர்ந்த நொடி இதயம் எப்படி வேகமடுத்து துடித்ததோ, சரியாக அதைப்போலவே துடிக்க தொடங்கியது.

அதற்குப் பிறகு இரவுகள் அவனுக்கு எளிதாக இல்லை. இன்றுவரை தூங்கும்போது மின்விசிறியை எக்குத்தப்பாய் பார்த்துவிட்டாலே போதும்—யாருடைய இரு கால்களோ தலைக்கு மேல் தொங்குவது போல ஒருகாட்சி மனதில் திடீரென மிதந்து வந்துவிடும்.

அரங்கில் காலைக் கூட்டத்தின் அடுத்தடுத்த நிகழ்வுகள் நடக்கத் தொடங்கின.
அன்டணியின் இதயக் கூடத்தில் அடுத்தடுத்து நினைவுகள் நகரத் தொடங்கின.
 
Last edited:

ஷாரிகா

Active member
Staff member
அந்த மைதானத்தின் வலது புறமாக ஒரு கிறிஸ்தவ அடக்கஸ்தலம் இருந்தது. அதன் காணிக்குள் ஆங்காங்கே தடித்த அடிமரங்களுடன் உயரமாக நின்ற மரங்கள் இருளோடு கலந்து அச்சுறுத்தலாகக் காட்சியளித்தன. மாலை இருள் மெல்லப் பரவத் தொடங்கியிருந்ததால், அந்தப் பகுதியைப் பார்ப்பதற்கே ஒரு வித பயம் தோன்றியது.

அடக்கஸ்தலத்தின் மூலையில் நின்றிருந்த பெரிய மரம் ஒன்றின் பின்னால் அவர்கள் அனைவரும் ஒதுங்கி நின்றிருந்தனர்.
சரணும் அவனது நண்பர்களும், குருவும், அவனுடன் புதிதாக வந்திருந்த இருவரும்.

சட்டை பட்டன்களைத் திறந்துவிட்டிருந்த அவர்களின் தோற்றமும், முகம் முழுக்கப் பரவியிருந்த தாடியும், இருளோடு சேர்ந்து இன்னும் மிரட்டலாகத் தெரிந்தது.

ஒருவன் ஃப்ரீ ஹெயரில் நின்றிருந்தான். மற்றவன் உச்சியில் கொண்டை போட்டுவிட்டு சில முடிக்கற்றைகளை அப்படியே விட்டிருந்தான்.

"டேய்! ஒரே ஒருக்கா எண்டுதானே சொன்னனி? இப்ப திரும்ப என்னடா..?" மெல்ல சரணின் காதோரம் நெருங்கி, கடுப்பாய்
கிசுகிசுத்தான் மாதவன் .

"அடேய் லூசு..! குரு மாட்டுப்பட்டுட்டான் என்டா தங்களத்தானே கை காட்டுவான். அதான், சும்மா அபிக்குப் பயம் காட்ட வந்திருக்கானுகள். வேற ஒன்டுமில்ல இங்க.." சரணும் அதே குரலில் பதிலளித்துக் கொண்டிருந்தபோதே, அன்டனி அபித்ரனோடு அங்கே வந்து சேர்ந்தான்.

அவர்கள் நெருங்கியதும், உச்சியில் கொண்டை போட்டிருந்தவன் ஓரடி முன்னால் வந்து,
"காச எடு... கெதியா." என்று அதட்டலாய் சொல்ல, அபியும் அமைதியாக பணத்தை எடுத்து நீட்டினான்.

மாதவன் அதிர்ந்து போனவனாய் சரணைப் பார்க்க,
'எனக்கு தெரியாது' என்பது போல உதட்டை பிதுக்கிவிட்டு, அசட்டையாகத் தோளைக் குலுக்கினான் அவன்.

பணத்தை வாங்கியவன், அதை ஒருமுறை எண்ணிப் பார்த்துவிட்டு அபித்ரனை ஏறிட்டான்.

"உங்கட அப்பா ரெண்டு கடையல்லோ வச்சிருக்காராம். நீ என்ன செய்யெண்டா... மத்தக் கடையிலிருந்து ஒரு அம்பதாயிரம் மட்டும் எடுத்துட்டு வா. உனக்கு பத்து நாள் டைம்." அவன் சொன்ன விதத்தில் மிரட்டலைவிட அலட்சியம்தான் அதிகமாக இருந்தது.

அபித்ரனின் முகம் வெளிறிப்போனது. "ஐயோ!! ப்ளீஸ் அண்ணா... நான்தான் சொல்லமாட்டன் எண்டு சொல்லிட்டனே. தயவு செஞ்சு என்ன விட்ருங்கோ..." கைகள் கூப்பியபடி அழுகுரலில் கெஞ்சினான் அவன்.

"குருண்ணா... என்ன இதெல்லாம்?"
மாதவன் தன்னையறியாமல் உயர்ந்த குரலில் குறுக்கிட்டான்.

அடுத்த கணமே, ஃப்ரீ ஹெயரின் கை அவன் கன்னத்தில் இடியென வந்து இறங்கியது. தடுமாறி ஒரு அடி பின்னால் நகர்ந்தவன், எரிந்துபோன கன்னத்தைப் பிடித்தபடி முறைத்தான்.

"என்னடா... முறைக்கிறாய்?"
என்று சீறியவன், தனது கைபேசியை எடுத்துக் காட்டினான்.

திரையில் இருந்ததைப் பார்த்த மாதவனின் முகம் இறுகிப்போனது. செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி அபித்ரனையும் மதுஷ்னவியையும் மிகவும் கீழ்த்தரமாக சித்தரித்து, எடிட் செய்யப்பட்டிருந்த புகைப்படங்கள்...

அதைப் பார்த்த அன்டனிக்கே உடம்பு முழுக்க எரிச்சல் பரவியது. ஆனால் எதையும் வெளிக்காட்டாமல், கைகளைக் கட்டிக்கொண்டு அமைதியாக நின்றான்.

"மூடிக்கொண்டு நிக்காட்டி... மத்தாக்களுக்கும் இதுதான் நடக்கும்."
என்று எச்சரித்த அந்த அந்தக் கொண்டையிட்டவன் நடக்கத் தொடங்கினான்.

சில அடிகள் சென்ற பிறகு மீண்டும் நின்று திரும்பி, "பத்து நாளைக்குள்ள காசோட வந்தியெண்டா, போட்டோ... வீடியோ... எல்லாம் அழிஞ்சிடும். இல்லாட்டி... என்ன நடக்கும் என்டு உனக்கே தெரியும்."

தீர்க்கமாகச் சொல்லிவிட்டு, மற்றவர்களோடு சேர்ந்து இருளுக்குள் மறைந்தான் அவன்.

அவர்கள் சென்ற பிறகும் அபித்ரன் தலையை நிமிரவில்லை.
ஒரு கையால் கண்களில் வழிந்த கண்ணீரைத் துடைத்தபடி, இன்னொரு கையால் கழற்றப்பட்டிருந்த பூட்ஸைத் தூக்கிக்கொண்டு, சோர்ந்து போனவனாய் அவன் நடந்துசென்றது அன்று சாதாரணமாகத்தான் தெரிந்தது.

ஆனால் அபியின் அந்த உடைந்த தோற்றம் இன்னும் தன் நினைவில் அப்படியே பதிந்திருக்கிறது என்பதையே இன்றைக்குத்தான்... அதுவும் இப்போதுதான்... ஆன்டனி உணர்கிறான்.

'சொரிடா அபி!!!' மறைந்தவனிடம் மானசீகமாக மன்னிப்பும் வேண்டினான்.

*****************

இடைவேளை மணி ஒலித்தது.

பள்ளிச் சிற்றுண்டிச்சாலையின் ஒரு மூலையில் அமர்ந்திருந்த நண்பர்கள் நால்வரின் முகத்திலும் வழக்கமான உற்சாகம் இல்லை.

சில நொடிகள் யாரும் எதுவும் பேசவில்லை.

"எனக்குப் பயமா இருக்குடா... எல்லாத்தையும் போய்ச் சொல்லுவமா?"என்று அமைதியைக் கலைத்தான் அன்டனி.

"நானும் அண்டையிலிருந்தே... அதத்தான் சொல்லிட்டு இருக்கன். இப்பவாவது உனக்கு அறிவு வந்துதே..." என்று உடனே மாதவனும் சொல்ல,

"டேய்...!! சொல்லப்போறேன்... என்ற விசர்க்கதையை நிப்பாட்டுங்கடா முதல்ல." சரணின் சீறலில் எரிச்சல் தெரிந்தது." யாரும், எங்கயும் போய் ஒண்டும் சொல்லப்போறதில்ல."

"ஓம். அதான் ஒரு மாசத்துக்கு கூட ஆகிட்டுதல்லோ? இவ்ளோ நாள் மூடிட்டு இருந்த மாதிரியே இன்னும் கொஞ்ச நாள் இருந்தா போதும். எல்லாம் தன்னால சரியாகிடும்" நண்பனை ஒத்து ஊதினான் மனோ.

அன்டனி நிமிர்ந்து இருவரையும் பார்த்தான். "உங்களுக்கெல்லாம் நிம்மதியா நித்திரை வருதாடா? எனக்கு தலைக்கு மேல ஃபேன பார்த்தாலே... பயமா இருக்குடா.."அவன் சொன்ன விதத்தில் இருந்த அழுத்தம், மற்றவர்களை ஒரு கணம் அமைதியாக்கியது.

"நேத்து வரைக்கும் நல்லாத்தானே இருந்தனி... இப்ப என்ன புதுசா நடந்துட்டுது?" என்றான் மனோ கேள்வியாய்.

"எல்லாம் அந்த பெட்டையல்-கூட்டம் இண்டைக்கு காலம அசெம்பிளில எடுப்பெடுத்ததால வந்த ஞானோதயம்." சரண் நக்கலாய் சொன்னதில்,

மாதவனின் முகம் சட்டென்று இறுகியது.

"நாங்க செஞ்சது ஒண்டும்.. சின்ன விஷயமில்லடா சரண். நல்லது சொல்ல வந்த அபியக் கொண்டாச்சி... மதுவ முழுசா மாட்டிவிட்டு, நாட்டவிட்டே போக வெச்சாச்சி..." என்றுவிட்டு ஒரு பெருமூச்சை இழுத்தவன்,

" மனுஷன் என்டா... செஞ்ச பிழைகள நினைச்சி ,பயம் இல்லாட்டியும்... கொஞ்சமாவது உறுத்தல் இருக்கணும் தானேடா?" மாதவன் காட்டமாய் கேட்டான்.

"என்னடா பைத்தியகாரன் மாதிரி உளர்றாய்...? அபியக் கொன்டாச்சோ..!! யார் கொன்டது?? அபி அவனாத்தான் செத்தவன்.." சரணிடமிருந்து அந்த வார்த்தைகள் விழுந்ததும், மேசையைச் சுற்றி மீண்டும் ஒரு கனமான அமைதி நிலவியது.

"நாங்க நினைச்சிருந்தா எல்லாருமா சேர்ந்து தடுத்திருக்கலாமேடா..."
உள்ளே போன குரலில் ஆரம்பித்த அன்டனி, தலையைக் குனிந்து கொண்டு,

"அப்படிப்பாத்தா... ஒருவகையில இதுவும் கொலதான். இந்தப்பாவத்த யேசப்பா கடைசி வரைக்கும் மன்னிக்கவேமாட்டேர்."
மேசையின் மீது பார்வையைப் பதித்தபடியே செல்லியவன்,

மெதுவாய் சரணின் தோளில் கைவைத்து, "போலீஸ்.. அவங்களா கண்டுபிடிக்கிறதுக்கிடையில, நம்மளே போய்ச் சொல்லுவமேடா." இப்போது அவன் குரல் தணிந்திருந்தது.

ஆனால் சரண் உடனே வெடித்தான்.
"போடா... போய்ச் சொல்லு." என்றுவிட்டு எள்ளலாகச் சிரித்தவன்,
"உடனே நாலு பேரையும் புடிச்சு உள்ள போடுவான். குருவும் அவனுகளும் எங்கயெண்டு கேட்டு அடிப்பானுகள். நாங்க தெரியாதெண்டு முழிச்சுக்கொண்டு நிப்பம். அப்படியே சீர்திருத்தப் பள்ளியில போய் குப்பைகொட்ட வேண்டியதுதான்..."

"அப்படியெல்லாம் நடக்காதுடா."
மாதவன் அவசரமாகக் குறுக்கிட்டான்.

"ஸ்கூல் ஸ்டூடன்ட்ஸ்ஸ உடனே பெரிய பெரிய கிரிமினல்ஸ் மாதிரி நடத்த மாட்டாங்களாம்டா... கேஸ் விஷயத்துல மாமா ஏதாவது செய்வார் தானே. ஆனா, மெனக்கெடாம கூடிய சீக்கிரம் உண்மையச் சொல்றதுதான் நமக்கு நல்லது." சரணைப் பார்த்து கிட்டத்தட்ட கெஞ்சினான் அவன்.

"ஓம்டா!!." அன்டனியும் உடனே தலையாட்டியவன் "நானும் நேத்து நெட்ல சேர்ச் பண்ணிப் பாத்தனான். பொதுவா, ஸ்டூடண்ட் என்டா வேற மாதிரிதான் கேஸ் ஹேண்டில் பண்ணுவாங்களாம்டா. ஹேண்ட் கஃப் போடுறது கூட அரிதாமே..." என்றவன் ஒரு கணம் தயங்கிவிட்டு,
"அதுவும் இல்லாம, குருவாக்கள் எங்கெண்டும் உனக்கு நல்லாவே தெரிஞ்சிருக்கும். போன கிழமை மனோவும், நீயும் அவனுகள்ட்ட போய் சாமான் வாங்கினிங்க தானே... இல்லஎன்டு மட்டும் பொய் சொல்லாத."

அன்டனி சொன்னதை கேட்ட மாதவன் அதிர்ச்சியோடு இருவரையும் பார்த்தான்.
அவன் முகத்திலிருந்த குழப்பம் வெளிப்படையாகத் தெரிந்தது.

"போன கிழமையா!!? இதெப்ப நடந்தது?" கேட்டுவிட்டு சரணைப் பார்க்க, அங்கிருந்து விடை வராமல் போகவும் மீண்டும் அன்டனியைத்தான் பார்த்தான்.

அவன் கசப்பாகச் சிரித்தான்.
"உனக்கு ஒண்டுமே தெரியாது மாதவா... இவங்க ரெண்டு பேரும் இதோட எத்தனையோ தரம் வாங்கிட்டாங்க. பொய்சொல்லிப் பொய்சொல்லி உன்ன பேக்கையாக்கி வச்சிருக்கானுகள்."

அவன் சொல்லி முடிப்பதற்குள் மனோ சட்டென்று எழுந்து அன்டனியின் சட்டைக் கோலரைப் பற்றியவன்,

"என்னடா..? இப்ப புதுசா நல்லவனுக்கு நடிக்கிறாய்!! எங்களுக்குப் பின்னால தேஞ்சிகொண்டு திரியேக்க எங்க போனது இந்த அறிவு?" அன்டனியின் முகத்துக்கு நேராகக் கத்தினான் மனோ.

அந்த நொடியில் மாதவனுக்கு அங்கே இருக்கவே அருவருப்பாக இருந்தது. கதிரையிலிருந்து சட்டென்று எழுந்தவன், சரணை ஒருமுறை வெறுப்போடு பார்த்தான்.
பிறகு எதுவும் பேசாமல்,
விறுவிறுவென்று அந்த இடத்தை விட்டு வெளியேறிவிட்டான்.

அன்றைக்குப் பள்ளி முடியும்வரைக்கும் மாதவனின் முகம் கடுகடுவென்றே இருந்தது.

சரணுக்குத்தான் உள்ளுக்குள், பயத்தில் வயிற்றைக் கலக்கியது.

' இண்டைக்குப் பின்னேரம் கிரவுண்டுக்கு அபித்ரனின்ட அக்கா வந்தா... ஒருவேள அவளிட்ட எல்லாத்தையும் சொல்லிடுவானோ?'
என்ற சந்தேகம் அவனை விடாமல் துரத்தியது.

நகத்தைக் கடித்தபடி, அடிக்கடி மாதவனைத் திரும்பித் திரும்பிப் பார்த்துக்கொண்டே இருந்தான்.
ஆனால் மாதவனோ ஒருமுறைகூட அவனை ஏறெடுத்துப் பார்க்கவில்லை.

பள்ளி முடிந்ததும் சைக்கிள் நிறுத்துமிடத்தில் அவனை நெருங்கிய சரண்,

"மாதவா..."
என்று தயக்கமாகத் தோளில் கை வைத்தான்.

அடுத்த கணமே அந்தக் கையை வேகமாக உதறிவிட்ட மாதவன், சைக்கிளை எடுத்துக்கொண்டு பேசாமல் பறந்துவிட்டான்.

அவனைப் பார்த்துக்கொண்டே நின்ற சரணின் நெஞ்சுக்குள் ஏதோ இறுகியது.

மாதவனுக்கோ சரணை நினைக்க நினைக்க கோபமாகவும், வெறுப்பாகவும், ஆற்றாமையாகவும், ஏமாற்றமாகவும் இருந்தது.

ஒரு கணம்,'அபிக்கும் என்னோட இப்படித்தான் இருந்திருக்குமோ?' என்ற எண்ணம் தோன்றியது.

நாம் நன்மதிப்பு வைத்திருக்கும் ஒருவர், அந்த நம்பிக்கையை உடைத்தெறிந்து ஒன்றுமில்லாமல் ஆக்கிவிடும்போது வரும் வலி மிகவும் கொடியது.

மாதவனும் அப்படியொரு தாங்கொணா வேதனையில்தான் இருந்தான்.

வீட்டுக்குச் சென்றதும் நேராக, அந்த அலுவலக அறைக்குள் நுழைந்தவன், அதிசயத்திலும் அதிசயமாய் அங்கே கூட்டமின்றி தனியாக அமர்ந்திருந்த கமலசேகரிடம், நடந்த அனைத்தையும் ஒன்றுவிடாமல் கொட்டிவிட்டான்.

வெளியே நின்றுகொண்டிருந்த சரணுக்கு ஏதோ சரியில்லை என்று ஏற்கனவே புரிந்திருந்தது. பதற்றத்தோடு அறை வாசலில் அங்குமிங்கும் நடந்துகொண்டிருந்தவன், பொறுமையிழந்து சிறிது நேரம் கழித்து உள்ளே நுழைந்தான்.

அவன் உள்ளே வந்த மறுகணமே—

பளார்!

சரணின் தந்தையின் கை அவன் கன்னத்தில் இறங்கியது.

****************

ஷோபனா அப்போதுதான் வேலை முடிந்து வீட்டுக்கு வந்திருந்தாள்.
சேலையைக்கூட மாற்றத் தோன்றவில்லை. அப்படியே கட்டிலில் சரிந்துகொண்டாள்.

இப்போதெல்லாம் இரவு உறங்குவதற்காக அதிகமதிகமாக மாத்திரைகளை உள்ளெடுத்துக் கொள்கிறாள். நிறைவாகச் சாப்பிட முடிவதில்லை. மனதை ஒருமித்து மாணவர்களுக்குக் கற்பிக்க முடிவதில்லை. எல்லாம் சேர்ந்து சுவாசிக்கும் மூச்சுக்காற்று கூட பாரமாகத் தோன்றும் அளவுக்கு அவளைச் சோர்வடையச் செய்திருந்தன.

மெதுவாக இமைகளை மூடிக்கொண்டாள்.
ஆயிரமாயிரம் கரியநிற நிஜங்கள், நினைவுகள், பதில் தெரியா கேள்விகள், குற்றவுணர்வுகள்...

அந்த அடர் இருளுக்குள் ஒரு பொட்டு வெளிச்சம்கூட இல்லை.
ஒரு நிமிடம் கூட அதற்குள் நிற்க முடியாமல் சட்டென்று கண்களைத் திறந்துகொண்டாள் ஷோபனா.


வருணுடனும் பேசி மூன்று நாட்களுக்கும் மேலாகி இருந்தது.

கடைசியாக அலைபேசியில் உரையாடியபோது,
"மனசுக்கு ஆகக்கஷ்டமா இருந்தா... டொக்டர்ட ஒருக்கா பொய்ட்டு வாவன் ஷோபா... கொஞ்சம் லேசா இருக்கும் தானே..." என்றவனிடம் பேயாய் கத்தியிருந்தாள்.

என்னவோ தெரியவில்லை… அவன் அப்படி சொன்னதும் சட்டென்று ஒரு எரிச்சல் வெடித்தது.
அவனிடம் என்னவெல்லாம் சொல்லிக் கத்தினாள் என்பதுகூட அவளுக்கு தெளிவாக நினைவில் தங்கவில்லை.

வருணும் அமைதியாக அழைப்பைத் துண்டித்திருந்தான்.
'இனி உன்ன தலையில தூக்கி வச்சிக்கொண்டு ஆடேலாது. எக்கேடோ கெட்டுப்போ...!!' என்று நினைத்தானோ என்னவோ...
தெரியவில்லை.
அதன் பிறகு அவனிடமிருந்து இன்னும் அழைப்பு வரவில்லை.

இவளுக்கும் இப்போது கெஞ்சிக் கொஞ்சி சமாதானம் செய்யும் மனநிலை துளியுமில்லை. ஆனால் அடிக்கடி புலனத்தை திறந்து மூடுகிறாள்.

ஒருபுறம் கணவனின் கனிந்த வார்த்தைகளுக்கும், அவனின் அரவணைக்கும் அருகாமைக்கும் மனம் ஏங்கினாலும், மறுபுறம் எந்த ஆறுதலையும் ஏற்றுக்கொள்ள முடியாதவளாகத் தன்னை உணர்கிறாள்.

தன் உள்ளத்தின் போக்கை அவளே புரிந்துகொள்ள முடியாத நிலையில் இருந்தாள்.

அன்று டொக்டர் சொல்லியது முற்றிலும் உண்மைதான்...

அவள் மனம் ஒரு கவலைவிரும்பிக் குரங்கு.
உயிரை வேரோடு அறுக்கக்கூடிய நினைவுகளின் கிளைகளிலேயே தாவித் தாவி அமரும் குரங்கு.

ஷோபனாவுக்கும் இப்போது,
"டொக்டர்ட ஒருக்கா போனா தான் என்ன..."என்ற எண்ணம் தோன்றத் தொடங்கியிருந்தது.

அவரிடம் எல்லாவற்றையும் கொட்டி அழுதுவிட்டால்...
நெஞ்சின் மீது அமர்ந்திருக்கும் இந்தக் குற்றவுணர்வின் இமாலயக் கனத்திலிருந்து, பட்டாம்பூச்சியின் ஒரு சிறகளவு எடையாவது குறையலாம்.

அவர் ஆறுதலாகப் பேசும்போது...
மற்றைய சிறகின் எடையும் கரைந்துவிடலாம்....

அந்த நேரம் ஷோபனாவின் கைப்பேசி இசைத்தது.

வேகமாக எடுத்துப் பார்த்தாள்.
பாடசாலை பியோன்.

பாடசாலை முடிவடையும் நேரத்தில், கடந்த மாதம் ஆங்கிலப் பிரிவுக்காக வாங்கிய பொருட்களின் ரசீதுகளை தரச்சொல்லிக் கேட்டிருந்தார்.

"அதெல்லாம்... மத்த ஹேன்ட் பேகுக்குள்ள அண்ணா... வீட்ட போனதும் வட்சப் பண்ணி விர்றன்."
என்று சொன்னது நினைவுக்கு வர, சோர்வாக எழுந்து மேசையை நோக்கிச் சென்றாள்.

அந்தக் கைப்பையை எடுத்தவள், உள்பக்க ஜிப்பைத் திறந்து கையை நுழைத்தாள். ரசீதுகள், சிறு குறிப்புத்தாள்கள், தேவையில்லாமல் சேர்ந்து கிடந்த காகிதங்கள்...
எல்லாவற்றையும் வெளியே எடுத்துப் பரப்பினாள்.

ரசீதுகளைத் தேடி எடுத்து அனுப்பிவிட்டு மீண்டும் பார்வையைத் தாழ்த்தியபோது,
கடைசியாக சில டொபி பேப்பர்களும்,
நான்காக மடிக்கப்பட்ட ஒரு இரட்டை ரூல் கொப்பித்தாளும் மட்டும் எஞ்சியிருந்தன.

புருவம் சற்றே சுருங்கியது.

அசட்டையாக அந்தத் தாளையெடுத்து, மடிப்புகளைப் பிரிக்கத் தொடங்கினாள்...
 
Last edited:
Top Bottom