• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

வழியிலே இதயத்தின் நிழலாய் - 27 Final

ஷாரிகா

Active member
Staff member
VIN - 27

நாற்காலியின் மீது குத்துக்காலிட்டு அமர்ந்திருந்தவள், ஜன்னல் கம்பிகளைத் தாண்டி எங்கோ தொலைதூரத்தை வெறித்துக் கொண்டிருந்தாள்.

அபித்ரனின் வழக்கு குறித்து ஷோபனாவின் பெற்றோர், சித்தி–சித்தப்பா, அம்மம்மா, மாமியார், யாழினி என அனைவரின் கருத்துக்களும், அறிவுரைகளும், ஏச்சுக்களும், பேச்சுக்களும் எல்லாமே ஒரே புள்ளியில் வந்து நின்றன.

ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாகச் சொன்னாலும், அவர்களது வார்த்தைகளின் சாரம் ஒன்றுதான்.

என்ன நடந்தாலும் அபித்ரன் உயிருடன் திரும்பி வரப்போவதில்லை. ஆகவே, இந்த வழக்கிற்காக இனியும் தன்னையே வருத்திக் கொள்ளாமல், தன் உடல் ஆரோக்கியத்தையும் மனநிலையையும் கவனித்துக்கொண்டு இயல்பு வாழ்க்கைக்குத் திரும்ப வேண்டும் என்பதே அனைவரின் விருப்பமாக இருந்தது.

ஆம்!
போன உயிர் மீளப்போவதில்லை என்பது, அவளும் அறிந்ததே...

ஆனால், அபித்ரனின் தற்கொலைக்கான உண்மையான காரணமும், அதற்குப் பின்னால் இருந்தவர்களும், பாடசாலை வளாகத்திலும் தனியார் வகுப்புகளிலும் மறைமுகமாக அரங்கேறிக் கொண்டிருக்கும் அந்தச் சட்டவிரோதச் செயல்களும் சமூகத்தின் பார்வைக்கு வரவேண்டும் என்பதே அவளது ஒரே எண்ணம்.

ஆனால் அந்த எண்ணம் நிறைவேற்றப்பட்டால் கூட, இயல்பு நிலைக்கு திரும்புவது என்பது நிச்சயமாக இப்போதைக்கு இயலாது.

சித்தி வீட்டுக்குள் நுழைந்ததுமே தன்னிச்சையாய் தடதடவென படியேறி மாடியறைக்கு செல்லத் துடிக்கும் கால்களை வேண்டுமானால் கஷ்டப்பட்டு கட்டுக்குள் கொண்டு வர முடியுமே தவிர, இரத்தம் வடித்து துடித்தழும் இதயத்தை, இயல்பு நிலைக்கு கொண்டு வருதல் என்பது அவளால் இயலவே இயலாதே...

இறுதி நேரத்தில் அன்னை- தந்தைக்கு கூட எழுதாதவன், அவளுக்கல்லவா எழுதியிருந்தான்.

அப்படியிருக்க, இந்த உண்மைகளைக்கூட வெளிக்கொணராவிடின், அவளெல்லாம் என்ன தமக்கை??

எல்லாவற்றையும் விட,
அவளுக்கு இன்னொரு தம்பியும் இருக்கிறானே...

அவனும் அதே பாடசாலையில்தான் படிக்கிறான். அதே மைதானத்தில்தான் விளையாடுகிறான். அதே சூழலில்தான் தினமும் நடமாடுகிறான்.

இன்று அபித்ரனுக்கு நடந்தது, நாளை வேறொரு பிள்ளைக்கோ... அல்லது....

நினைக்கவே நெஞ்சு நடுங்குகின்றதே...

குறைந்தபட்சம் அவன் நலனுக்காகவாவது, இந்த உண்மைகள் வெளிச்சத்துக்கு வர வேண்டும்.

வரவே வேண்டும்...

திடுமென அறைக்கதவைத் திறந்து உள்ளே வந்தான் வருண்.

காலையிலேயே எங்கோ கிளம்பிச் சென்றவன், அவள் எழுந்ததிலிருந்து கண்களிலேயே படவில்லை. இப்போதுதான் வீடு திரும்பியிருந்தான்.

அவன் அறைக்குள் நுழைந்ததும், ஷோபனாவின் விழிகள் தன்னிச்சையாக மேசைக் கடிகாரத்தை நோக்கின.
நேரம், சரியாக ஒன்று ஐம்பது.

"ஷோபா... ஒருக்கா ஹோலுக்க வாவன்."

"இப்பவா!? ஏன்?"

"வா... வந்து பாரன்." என்று ஷோபனாவின் கைபிடித்து அழைத்துச் சென்றான் வருண்.

விறாந்தையில் அமுதாவுடன் பேசியபடி அமர்ந்திருக்கும் பெண்மணி, அன்று கமலசேகரின் வீட்டில் நின்றிருந்தவர்.
அவரருகிலிருந்த மாதவனைக் கண்ட மாத்திரத்தில், உள்ளுக்குள் எழுந்த ஆத்திரத்தை உதடுகளை அழுத்திப் பிடித்து அடக்கியவாறு நடந்தாள்.

ஷோபனாவை கண்டதும், படபடக்கும் விழிகளோடும், தடதடக்கும் இதயத்தோடும் அவசரமாய் எழுந்து நின்றான் மாதவன்.

அவனின் அன்னை தேவியும், உடனே எழுந்து அவளருகே சென்றவர், "என்னம்மா நீ! இதுதான் விஷயமென்டு அன்டைக்கொரு வார்த்த எனட்ட சொல்லிருந்தியன்டா... இந்த ராஸ்கலுக்கு முதுகுல நாலு இழு இழுத்து உன்னோடயே அனுப்பி வச்சிருப்பனேம்மா..." என்றார் அவளின் கைபிடித்து.
அவரது குரலில் மகன் மீது இருந்த கோபமும், ஷோபனாவிடம் இருந்த வருத்தமும் ஒன்றாகக் கலந்திருந்தது.

பதிலுக்கு சிறிதாகத் தலையசைத்த ஷோபனா, எதுவும் பேசாமல் வருணைப் பார்த்தாள்.

வருண் மெலிதாக சிரித்துவிட்டு, "அது... இன்னொருக்கா ட்ரை பண்ணி பாப்பமென்டு, மார்னிங் அந்த லோயர்ட வீட்ட போனா... அவர் இல்லயாம். இவங்க யாரென்டு கேட்டுட்டு, நைசா விஷயத்த சொல்லி பாத்தன். அஞ்சே நிமிஷத்துல மகனோட வந்துட்டாங்க. அப்படியே போலீஸ் ஸ்டேஷன் போனோம். இப்பதான் வாரம். மத்த போய்ஸ் இன்னும் அங்கதான்..." என்றான் எதிரில் இருந்தவளின் மீது பார்வையை விலக்காமல்.

கண்களை எட்டாத மில்லிமீட்டர் புன்னகையோடு அறைக்குள் செல்வதற்காய் திரும்பியவளை,

"ஹேய்! வா எல்லாருமா சேந்து சாப்பிடுவம்."என்று வருணும்,

" சாப்பிட்டுப் போமா..." என்று அமுதாவும் அழைக்க,

"இல்ல. எனக்குப் பசியில்ல." என்று பொதுவாகச் சொல்லிவிட்டு, யாருடைய முகத்தையும் பார்க்காமல் அறையை நோக்கி நடந்தாள்.

வருணுக்குத்தான் முகம் மாறாமல் காப்பது பெரும் கஷ்டமாயிற்று. மனதுக்குள் ஒரு கனமான அதிருப்தி பரவ, அமைதியாக உணவு மேசையில் அமர்ந்தான்.

அவள் விலகிச் சென்ற திசையையே சில நொடிகள் வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தான் மாதவன்.

************

மாலை ஐந்தரை மணியளவில், அறைக்குள் வந்து வேகவேகமாய் தயாரான கணவனை கண்களால் பின்தொடர்ந்தபடி அமைதியாக பார்த்திருந்தாள் ஷோபனா.

தயாராகியதும், முதுகுப்பையை ஒற்றைத் தோளில் மாட்டியபடி, அவளை ஊடுருவும் பார்வை பாரத்தவன்,

"இன்னும் எத்தன நாளைக்கு இப்படியே உம்மென்டு இருக்கிற ஐடியா?" அவனது நிதானமான கடுமையிலும், நியாயமான கோவத்திலும் கண்கள் குளம் கட்டத்தொடங்க, வேறு பக்கம் பார்வையை திருப்பிக் கொண்டாள்.

சில நொடிகள் அமைதியாக அவளைப் பார்த்து நின்றிருந்தவன்,
"எனக்கு ஒரு ஹெல்ப் பண்றியா?" என தணிந்த குரலில் கேள்வி எழுப்பவும்,

சட்டென்று அவன் முகம் பார்த்தாள்.

ஷோபனா நல்ல மனநிலையில் இருந்தால் மட்டுமே, அவனுடன் சிரித்து, மகிழ்ந்து, இனிமையாகப் பேசுவாள்.

ஆனால், அவன் அப்படியல்ல.

எத்தனை முறை அவள் அவனை எடுத்தெறிந்து பேசியிருந்தாலும், 'டேப்லெட் போடு ஷோபா...'அல்லது 'டாக்டர்கிட்ட போ ஷோபா...' என்பதுதான் அந்த உரையாடலில் அவனது கடைசி வார்த்தைகளாக இருக்கும்.

எவ்வளவு கோபமாக இருந்தாலும், அந்தச் சில வார்த்தைகளிலேயே தன் அக்கறையையும் பெருந்தன்மையையும் வெளிப்படுத்திவிடுவான்.

அதை நினைத்தவளுக்கு, தன்னைத் தானே எண்ணி வெட்கமாக இருந்தது.

தான் எத்துனை பெரிய சுயநலவாதி என, உள்ளுக்குள் தன்னையே நிந்தித்தபடி அவன் வார்த்தைகளுக்காக காத்திருந்தாள்.

"தயவு செஞ்சு... நானா எடுக்கும் வரைக்கும், எனக்குக் கோல் எடுக்காத. உங்கட அம்மாட்டயும் அதையே சொல்லு... ப்ளீஸ்..." என்றவன், கதவை அறைந்து சாற்றிவிட்டு சென்றிருந்தான்.

ஷோபனாவோ, அவன் உதவியாக என்ன கேட்டான்- என்பதை நம்பமுடியாமல், மீண்டும் மீண்டும் நினைவுபடுத்தி கிரகிக்க முயற்சித்துக் கொண்டிருந்தாள்.

அம்மாட்டையும் சொல் என்பதன் அர்த்தம்? ஷோபனாவுக்கு இனிமேல் என்ன நடந்தாலும் அவனுக்கு தெரியப்படுத்த வேண்டாம் என்பது தானே..!

****************

மூன்று வாரங்கள் கடந்திருந்தன.

ஆனால், அபித்ரனின் மரணம் ஏற்படுத்திய அதிர்ச்சி இன்னும் அடங்கியிருக்கவில்லை.

'ஒரு மாணவனின் தற்கொலை' என்று தொடங்கிய செய்தி, இப்போது 'பாடசாலைகளில் போதைப்பொருள் பாவனை', 'மாணவர்களை குறிவைக்கும் போதைப்பொருள் வலையமைப்பு', என நாளுக்கு நாள் புதிய பரிமாணங்களை எடுத்துக் கொண்டே சென்றது.

போலீஸ் விசாரணையும் தொடர்ந்து கொண்டிருந்தது. சம்பந்தப்பட்ட மாணவர்களிடமிருந்தும், ஆசிரியர்களிடமிருந்தும், தனியார் வகுப்பு நடத்துபவர்களிடமிருந்தும் தொடர்ந்து வாக்குமூலங்கள் பெறப்பட்டன.

சம்பவத்துடன் தொடர்புடைய 'குரு' என்பவன் கைது செய்யப்பட்டதாகவும், மற்றவர்களைத் தேடும் பணிகள் நடைபெற்று வருவதாகவும் செய்திகள் வெளியாகின.

சரணும், மனோவும் சிறுவர் சீர்திருத்த இல்லத்திற்கு அனுப்பப்படுவதற்கான சாத்தியம் இருப்பதாக ஊரெங்கும் பேசப்பட்டது. அந்தப் பேச்சின் உண்மைத்தன்மை உறுதியாகத் தெரியாதபோதிலும், சம்பந்தப்பட்ட குடும்பங்களின் நிம்மதியை, அது வெகுவாகக் குலைத்திருந்தது.

பாடசாலை நிர்வாகமும் கைகட்டி நிற்கவில்லை.

போதைப்பொருள் ஒழிப்பு மற்றும் மாணவர் பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வு கருத்தரங்குகள் ஏற்பாடு செய்யப்பட்டன. பெற்றோர்களுக்கான விசேட சந்திப்புகளும் நடத்தப்பட்டன. மாணவர்களின் நட்பு வட்டம் முதல் சமூக வலைத்தளப் பயன்பாடு வரை, ஒவ்வொன்றையும் பெற்றோர் கவனிக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.

மேலும், விசேட அனுமதி வழங்கப்படும் சந்தர்ப்பங்களைத் தவிர, வெளியாட்கள் எவரும் பாடசாலைக்குச் சொந்தமான விளையாட்டு மைதானத்திற்குள் நுழையக் கூடாது என்ற புதிய விதியும் நடைமுறைக்கு வந்திருந்தது.

அபித்ரனுக்கு நீதி கோரி மாணவர்களும், சமூக அமைப்புகளும் இணைந்து அமைதிப் போராட்டங்களை நடத்தினர்.

"எங்கள் பிள்ளைகளைக் காப்பாற்றுங்கள்!"

" மாணவரிடத்தில் போதைப்பொருளுக்கு இடமில்லை!"

என்ற முழக்கங்கள், அந்த ஊரின் பிரதான வீதிகளில் பல நாட்கள் எதிரொலித்துக் கொண்டே இருந்தன.

அதிகாரப்பூர்வ ஊடகங்கள் மாணவர்களின் அடையாளங்களை மறைத்தே செய்திகளை வெளியிட்ட போதிலும், சமூக வலைத்தளங்கள் எந்த எல்லையையும் மதிக்கவில்லை.

யாரோ ஒருவர் வெளியிட்ட புகைப்படங்கள் சில மணி நேரங்களிலேயே ஆயிரக்கணக்கானோரின் கைப்பேசிகளை அடைந்துவிட்டன.

சம்பந்தப்பட்ட நால்வரின் புகைப்படங்களும், பெயர்களும், அவர்கள் படிக்கும் பாடசாலையின் பெயரும் சமூக வலைத்தளங்களில் காட்டுத்தீ போலப் பரவின.

அந்தச் செய்தி மேலும் பரபரப்பை ஏற்படுத்தியது.

அதற்கு முக்கியக் காரணம், சரணின் தந்தை கமலசேகர்.

இன்னும் இரண்டு மாதங்களில் நடைபெறவிருந்த பாராளுமன்றத் தேர்தலில் வேட்பாளராக களமிறங்க இருந்த அவரை குறிவைத்து, அரசியல் கட்சிகள் இந்தச் சம்பவத்தை தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்தத் தொடங்கின.

'சட்டம் பேசும் லோயரால் சொந்த மகனையே ஒழுங்காக வளர்க்க முடியவில்லையாம்.'

'உண்மையை மறைக்க அதிகாரத்தைப் பயன்படுத்தியிருக்கிறாராம்.'

என்ற விமர்சனங்கள் அரசியல் மேடைகளிலும், சமூக வலைத்தளங்களிலும் பரவின.

அவரது ஆதரவாளர்கள் அதை அரசியல் சதியென்று மறுத்தனர்.

எதிரணியினரோ, 'ஒரு மாணவனின் உயிரைவிட எந்தப் பதவியும் பெரியதல்ல' என்று பொதுக்கூட்டங்களில் பேசத் தொடங்கினர்.

ஒரு மாணவனின் மரணம், ஒரு குடும்பத்தின் துயரத்தைத் தாண்டி அரசியல் விவாதப் பொருளாகவும் மாறியிருந்தது.

வருண் சொல்லியதன் பேரில், மாதவனும் அவன் அன்னை தேவியும் யாழினியின் வீட்டில் தங்க வைக்கப்பட்டிருந்தனர்.

வருண் வந்து கேட்ட போது, யாழினி ஒரேயடியாக மறுத்திருந்தாள். சிவா, கொஞ்சம் எடுத்து சொல்லிய பிறகு தான் சரி என்றிருந்தாள்.

ஆரம்ப நாட்களில், ஆதியை மாதவனுடன் தனியாக விட யாழினி பெரிதும் தயங்கினாள்; பயந்தாள். அதை மாதவனும் உணர்ந்தே இருந்தான். ஆனால், நிலைமையைப் புரிந்துகொண்டு அமைதியாகவே நடந்துகொண்டான்.

நாள்கள் நகர நகர, யாழினியின் மனமும் மாறியது. முன்பைப் போல இல்லாமல், அவர்களுடன் இயல்பாகப் பேசத் தொடங்கினாள்.

மாதவன், அம்மாவிடம் கெஞ்சிக் கெஞ்சி ஒருவழியாய் அனுமதி பெற்றுக்கொண்டு, தன் மாமாவைப் பார்க்க சென்றிருந்தான். ஆனால் கமலசேகரும், சரணும் அவன் முகம் பார்க்கவே மறுத்துவிட்டனர்.

மனோவும் அவனுடன் பேசவில்லை. அன்டனி மாத்திரம் மாதவனுடன் பழையபடி இயல்பாய் பேசினான்.

மாலை நேரங்களில், சிவாவையும் ஆதியையும் அழைத்துக்கொண்டு அருகிலிருந்த பூங்காவிற்கோ, விளையாட்டு மைதானத்திற்கோ, சில சமயங்களில் கடற்கரைக்கோ செல்வான் மாதவன்.

ஆதியுடன் சேர்ந்து காற்பந்து விளையாடும் அந்தச் சில மணித்துளிகள்தான், அவன் மனதில் தேங்கியிருந்த பாரத்தை ஓரளவாவது மறக்கச் செய்தன.

ஆனால், வெளி உலகம் அவனை மறக்கவில்லை.

ஒருநாள் மாலை, பூங்காவிலிருந்து திரும்பி வந்துகொண்டிருந்தபோது, எதிரே வந்த மதுஷ்ணவியின் தந்தையைக் கண்டான்.
அவனை யாரென்று இனங்கண்டு கொண்டவர், ஒரு கணம் அவன் முகத்தையே பார்த்துவிட்டு விலகி நடந்தார்.

திட்டவும் இல்லை.
சாபமிடவும் இல்லை.

ஆனால், அந்த ஒற்றைப் பார்வையில் இருந்த வெறுப்பும், அருவருப்பும், மாதவனைத் தலைகுனிய வைத்தன; கண்கலங்க வைத்தன.

இதையெல்லாம் விட, மாதவனை அதிகம் வதைத்தது வேறொன்று.

இந்த மூன்று வாரங்களில் ஷோபனா இருமுறை யாழினியின் வீட்டிற்கு வந்திருந்தாள். தேவியுடன் நல்லமுறையில் பேசினாள்; பழகினாள்.
மாதவனிடம் மட்டும் ஒரு வார்த்தைகூட பேசவில்லை.

அவன் எவ்வளவோ முறை, "அக்கா..." என்று தயக்கத்தோடு அழைத்துப் பார்த்தான். ஒவ்வொரு முறையும் மன்னிப்புக் கேட்டான்.
அவளோ, அவன் சொற்களைக் கேட்காதவளைப் போல அமைதியாக விலகிச் சென்றாள்.

அந்த அமைதியான ஒதுக்கம்...

மாதவனின் குற்றவுணர்வை நாளுக்கு நாள் இன்னும் ஆழமாகக் கீறிக்கொண்டே இருந்தது.

*****************

இன்று ஷோபனாவின் பிறந்தநாள்...

காலையிலேயே பெற்றோருடன் கோயிலுக்குச் சென்று வந்தவள், அறைக்குள் நுழைந்ததும் கைபேசியைத்தான் எடுத்தாள்.

பேட்டர்ன் லொக்கைத் திறப்பதும்...
மீண்டும் அணைப்பதுமாகவே இருந்தாள்.

வருணிடமிருந்து ஒரு சிறிய வாழ்த்துச் செய்தியேனும் வந்திருக்குமோ என்ற எதிர்பார்ப்பு, ஒவ்வொரு முறையும் அவளை கைபேசியை நோக்கி இழுத்தது.

ஆனால்...

திரையில் இருந்தது ஏமாற்றம் மட்டும்தான்.

"தயவு செஞ்சு... நானா எடுக்கும் வரைக்கும் எனக்குக் கோல் எடுக்காத...... ப்ளீஸ்..."

அன்று அவன் சொன்ன அந்த வார்த்தைகள் இன்னும் அவள் காதுகளில் ஒலித்துக் கொண்டிருந்தன.

அந்தக் குரலில் இருந்த உச்சகட்ட இயலாமையும், கலங்கிய கெஞ்சலும் இன்றுவரை அவளால் மறக்க முடியவில்லை.

அதற்குப் பிறகு அவளும் அவனை அழைக்கவில்லை.

அவனிடமிருந்தும் ஒரு அழைப்பு வரவில்லை.

இடையில் போயா தின விடுமுறையன்று வீட்டிற்கு வராதபோது மட்டும், குமரனுக்கு அழைத்துப் பேசியிருந்தாள்.

குமரன், தான் அழைத்த விஷயத்தை சொல்லியதும் வருண் தனக்கு அழைக்கக்கூடும் என்ற நம்பிக்கையோடு அன்றிரவு முழுவதும் காத்திருந்தாள்.

ஆனால்...

கல்நெஞ்சக்காரன்.

அவன் புறத்திலிருந்து ஒரு அழைப்புகூட வரவில்லை.

அந்த நினைவு மீண்டும் மனதைத் துளைக்க, இனியும் பிடிவாதம் பிடித்திருப்பதில் அர்த்தமில்லை என்று தோன்றியது.

மனம் கேட்காமல், அவனது எண்ணுக்கு அழைப்பு விடுத்தாள்.

எடுக்கப்படவில்லை.

மீண்டும் முயற்சித்தாள்.

மீண்டும்...

'No Answer.'

இதயம் காரணமே இல்லாமல் கனத்தது.

இதோ.. அந்த வழமையான இறுக்கம், நெஞ்சம் முழுவதும் மெல்லப் பரவத் தொடங்கியது. தன் நெஞ்சுப்பகுதியை நீவி விட்டவளுக்கு,
'மயங்கிக் கியங்கி விழுந்தாலும்...'
என்ற எண்ணம் தோன்றவும்,
உடனே சென்று குளிர்ந்த நீரை எடுத்து பருகினாள்.

சற்றுநேரம் தன்னைத்தானே சமாளிக்க முயன்றவள், திடீரென்று ஒரு முடிவுக்கு வந்தாள்.

யாழினி வீட்டுக்கு போகலாம். வருணைப் பற்றி நன்றாகவே கோள் சொல்லிக் கொடுக்கலாம். என்று நினைத்தவளுக்கு, உதட்டோரத்தில் ஒரு மெல்லிய புன்னகை அரும்பியது.

அப்போதுதான் இன்னொரு விஷயம் நினைவுக்கு வந்தது.

யாழினியும் இன்னும் அவளுக்குப் பிறந்தநாள் வாழ்த்து சொல்லவில்லையே!

'பரவாயில்லை... அப்படியே,அவக்கும் சேர்த்து முதுகுல இரண்டு அடி போடலாம்.'
என்று முணுமுணுத்தபடி, நீண்ட நாட்களின் பின் ஒரு குஷியான மனநிலையில் வீட்டை விட்டு வெளியேறினாள்.

*****************
வழமையாக வண்டியை நிறுத்தும் இடத்தில் அதை நிறுத்திவிட்டு, யாழினியின் வீட்டிற்குள் நுழைந்தாள் ஷோபனா.

விறாந்தையில், தரையில் கால்களை மடக்கி அமர்ந்தபடி, ஆராவுடன் சேர்ந்து வண்ணப் பென்சில்களால் சித்திரம் வரைந்து கொண்டிருந்தார் தேவி.

வாசலில் நின்ற ஷோபனாவைக் கண்டதும், அவர் முகம் சட்டென்று மலர்ந்தது.

"வாம்மா..."

என்று புன்னகையுடன் தலையசைத்தவருக்கு, பதிலாக அழகான முறுவலொன்றைச் சிந்தினாள் ஷோபனா.

"ஹாப்பி பர்த்டே மாமி!"
என்று ஓடி வந்த ஆதி, அவளிடம் கை கொடுத்து வாழ்த்தினான்.

"தேங்க்ஸ் டா..."
என்று அவன் தலையை வருடியவள், வீட்டுக்குள் இன்னும் ஒரு அடி எடுத்து வைத்தாள்.

அந்த நேரம்தான் ஹாலின் மறுபக்கத்தில் நின்றிருந்த மாதவன் மெதுவாக முன்னே வந்தான்.

தயக்கத்தோடு...

கிட்டத்தட்ட குற்றவாளியைப் போல...

முதுகுக்குப் பின்னால் மறைத்து வைத்திருந்த, வண்ணத்தாளால் சுற்றப்பட்ட அந்த சிறிய பரிசை அவள் முன் நீட்டி,
"ஹாப்பி பர்த்டே... அக்கா.."
மெல்லிய குரலில் சொன்னான்.

ஒரு கணம்...
வீடே அமைதியாகிப் போனது.


தேவியின் கண்களில் எதிர்பார்ப்பு.
யாழினியின் முகத்திலோ,
இறுக்கம் வெளிப்படையாகத் தெரிந்தது.

ஒரு நொடி தயங்கிய ஷோபனா...

பிறகு மெதுவாகக் கையை நீட்டி அந்தப் பரிசைப் பெற்றுக்கொண்டாள்.

"தேங்க்ஸ்..."
என்ற ஒற்றை வார்த்தை, மிகவும் மெல்லிய குரலில் அவளிடமிருந்து வெளியேறியது.

அந்த ஒரு வார்த்தை போதும் என்பதுபோல, மாதவனின் முகத்தில் நிம்மதி பரவியது.

"பிரிச்சு பாருங்கக்கா..." என்றுபுதுவித உரிமைக் குரலில் அவன் சொன்னதைக் கேட்காதது போல , அதை ஸ்டூலில் வைத்திருந்தாள் ஷோபா.

மாதவன் உள்ளுக்குள் சுணங்கினாலும், அதைப் பெரிதாகவெல்லாம் எடுத்துக்கொள்ளவில்லை. அவனது அக்கா அதை வாங்கியதே அவனுக்கு மகிழ்ச்சி தான்.

அடுத்த நொடியே,
ஆதியைப் பார்த்து கையை உயர்த்தினான்.

"யெஸ்!"

என்று இருவரும் ஹை-ஃபை அடித்துக்கொண்டு, தங்களது சந்தோஷத்தை மறைக்காமல் வெளிப்படுத்தி மகிழ்ந்தனர்.

அவர்களை ஒரு பார்வை பார்த்துவிட்டு, எதுவும் பேசாமல் மீண்டும் சமையலறைக்குள் சென்றாள் யாழினி.

அந்தச் சிறிய காட்சியைப் பார்த்த தேவி, யாருக்கும் தெரியாமல் பெருமூச்சொன்றை வெளியேற்றினார்.

*************************
 
Last edited:

ஷாரிகா

Active member
Staff member
தேவியின் அருகே அமர்ந்து பேசிக்கொண்டிருந்த ஷோபனா, இடையிடையே சமையலறை வரை சென்று வந்தாள்.

யாழினி அவளைப் பார்த்தாள்.

ஆனால்... வாழ்த்தவில்லை; அவளிடம் முகம் கொடுத்து ஒரு வார்த்தைகூட பேசவில்லை.

"அக்கா..."

"என்ன?"
யாழினியின் குரலில் இருந்த இறுக்கம், ஷோபனாவை 'ஒன்றுமில்லை...' என்று தலையசைக்க வைத்தது.

"சாப்பிட வா..."

என்று மட்டும் சொல்லிவிட்டு, உணவுப் பாத்திரங்களை எடுத்துக்கொண்டு சாப்பாட்டு மேசைக்கு வந்தாள்.

எல்லோரும் ஒன்றாக அமர்ந்து சாப்பிட்டனர்.

சிறிது நேரம் கழித்து, அறையிலிருந்து வெளியே வந்த சிவாவும், அவளை வாழ்த்த, நன்றி நவின்றவளின் பார்வை, மீண்டும் யாழினியிடமே சென்று நின்றது.

"என்னக்கா... என்னோட ஏதாச்சும் கோவமா?"

"இல்ல." வெடுக்கென்று வந்தது பதில்.

"ஏன்க்கா ஒரு மாதிரி கதைக்கிறீங்க? வருணும் எனக்கு கோல் பண்ணல்ல. நான் பண்ணினாலும் ஆன்ஸர் இல்ல..."

கடைசி வார்த்தைகளைச் சொல்லும்போது, அவளது குரல் மெல்லத் தழுதழுத்தது.

"ஓஹ்..."
என்ற யாழினியின் முகத்தில் லேசான எள்ளல் படர்ந்தது.

"பாத்திங்களா சிவா... மெடம் வருணுக்கு கோல் எல்லாம் எடுத்திருக்காங்க."
என்று பொய்யான ஆச்சரியத்துடன் கணவனைப் பார்த்தாள்.

சிவாவோ, "யாழி..."என்று
மனைவியை மெல்லமாய் அதட்டியவன், ஷோபனாவை நோக்கித் திரும்பினான்.

"ஷோபா... வருணுக்கு சின்ன ஆக்சிடென்ட் ஒன்டம்மா."
அவனது வார்த்தை முடியும் முன்பே, ஷோபனா பதறி எழுந்து நின்றாள்.

"என்னண்ணா...?"

"பயப்படாத. கால்லயும் தோள்பட்டையிலயும் மட்டும் கொஞ்சம் அடிபட்டிருக்கு. மத்தபடி ஒண்ணும் பெரிய பிரச்சினை இல்ல."

"ஐயோ...!"
அவளது முகம் ஒரு நொடியில் வெளிறிப் போனது.

"ஏன்க்கா... எனட்ட..." என்று ஷோபா துவங்கவும்,

யாழினியோ, "வாய மூடு, ஷோபனா! நீ எனட்ட ஒண்ணுமே கேக்கேலாது." என்று
எரிந்து விழுந்தாள்.

"யாழினி!"
என்று சிவா, இம்முறை சற்றுக் குரலை உயர்த்தி அவளை அடக்க முயன்றான்.

"நீங்க சும்மா இருங்க, சிவா!"
என்று அவனிடமும் திரும்பிப் பாய்ந்தாள்.

நிலைமை சரியில்லை என்பதை உணர்ந்த தேவி, ஆராவைத் தூக்கிக்கொண்டு அமைதியாக அறைக்குள் சென்றார்.

மாதவனும், ஆதியை அழைத்துக்கொண்டு உள்ளே நகர்ந்தான்.

ஷோபனா மட்டும், கலங்கிய முகத்துடன் யாழினியையே பார்த்தபடி நின்றிருந்தாள்.

"எல்லார் வாழ்க்கையிலயும் இழப்புகள் இருக்கு, ஷோபனா.

உயிருக்குயிரா பாசம் வச்ச உறவு திடீரென்டு இல்லாம போனா, அது வேதனதான்.
தாங்கவே ஏலாத வலிதான்.

ஒரு மாசம்... ரெண்டு மாசம்... சரி.

அதுக்குப் பிறகு, அந்த வலியிலிருந்து கொஞ்சம் கொஞ்சமா வெளியில் வரணும்தானே...

அப்படியே அதுக்குள்ள மூழ்கிக்கிடந்து, நம்மளையும் அழிச்சிக்கொண்டு, சுத்தியிருக்கிற மனுசரையும் நாளுக்குநாள் கஷ்டப்படுத்துறது சரியா?

இன்டைக்கு என்னவோ பேர்த்டேன்னு லேசா அறிவு வந்த மாதிரி, அவனுக்குக் கோல் பண்ணியிருக்க.

ஆனா...
இந்த மூணு மாசத்துல, கடைசியா எப்ப அவனுக்குக் கோல் எடுத்து ஒருவார்த்த, 'சாப்பிட்டியா..'என்டு கேட்டனி?
ஆ...? "

உணர்ச்சி மிகுதியால் யாழினியின் இதழ்கள் லேசாகத் துடித்தன.

அவளது கேள்விக்கு, ஷோபனாவிடம் பதில் இல்லை. அதிர்ந்த முகத்துடன் யாழினியையே வெறித்துப் பார்த்தவள், ஒருமுறை எச்சிலை விழுங்கிக்கொண்டாள்.

யாழினியே மீண்டும் தொடர்ந்தாள்.

"உனக்கொரு நோய் இருக்கு ஷோபனா. அது ஆயிரம் டெப்ளட் போட்டாலும் குணமாகாது.

இல்லாமப் போன விஷயங்கள நினைச்சி நினைச்சி, கண்ணுக்கு முன்னால இருக்கிற உறவுகளையும், அவங்கட அன்பையும் அலட்சியப்படுத்துற நோய்.

அது, நீயா நினைச்சு மாறுற வரைக்கும் யாராலயும் சரிப்படுத்த ஏலாது.

சரி...
நாங்கதான் உனக்கு விஷ் பண்ணல.

அதுக்காக இவ்வளவு வருத்தப்படுற நீ...

'பிரிச்சுப் பாருங்கக்கா...'ன்னு ஒருத்தன் ஆசையா நீட்டின கிஃப்டைப் பிரிச்சுப் பார்த்தியா?

இல்ல தானே?

மாதவனுக்கும் அபிட வயசு தானே, ஷோபனா. . அந்தப் பெடியனோட அப்படியென்னடி கோபம் உனக்கு? ஏதோ தெரியாமப் பிழ செஞ்சிட்டான். நீ ஒரு டீச்சர். ஒரு சின்னப் பிள்ளைட்ட இவ்வளவு கல்லா நடக்கலாமா?

அதப் பார்த்து, 'பிடிச்சிருக்கு...' என்டு ஒரு வார்த்தை சொல்லியிருந்தா என்ன குறைஞ்சு போயிருக்கும்?

போ... இப்பவே பிரிச்சுப் பாரு."

யாழினியின், இதுநாள் வரை கண்டிராத புதிய அவதாரத்தில் அதிர்ந்துபோய் நின்றிருந்தாள் ஷோபனா.

" பாரடி கெதிய..." யாழினியின் குரல் உயர்ந்து ஒலித்ததில் திடுக்கிட்டவள், கிளிப்பிள்ளையாய் சொன்னதை செய்தாள்.

ஸ்டூலில் வைத்திருந்த அந்தப் பரிசை மெதுவாகக் கைகளில் எடுத்து சுற்றியிருந்த தாளின் ஓரத்தைப் பற்றிக் கிழித்தாள்.

பொன்னிறத் தாள் மெதுவாக விலக, கருநிற மரச்சட்டமிட்ட ஃபோட்டோ ஃப்ரேமொன்று வெளிப்பட்டது.

மெதுவாக அதை முழுவதுமாக வெளியே எடுத்தாள்.

அடுத்த நொடியே...
அவளது விரல்கள் அப்படியே உறைந்துபோயின.

அது, செயற்கை நுண்ணறிவில் வடிவமைக்கப்பட்டிருந்த அழகிய புகைப்படம்.

நடுவில்... முகம் நிறைந்த புன்னகையுடன் ஷோபனா நின்றிருக்க, அவளது வலப்புறம்- தலையை அவள் தோளில் சாய்த்தபடி சிரித்துக் கொண்டிருந்தான் அபித்ரன்.

இடப்புறம்...
அதே உரிமையோடு அவளை அணைத்தபடி நின்றிருந்தான் மாதவன்.

மூவரது முகங்களிலும், எந்தச் சுமையும் இல்லாத நிறைவான சிரிப்பு.

அவளது விரல்கள், தன்னையறியாமல் சட்டத்தின் கண்ணாடியை வருடின.

எத்தனை நொடிகள் அப்படியே இருந்தாளோ, அவளுக்கே தெரியவில்லை.

கண்களில் மெல்ல நீர் திரண்டு, பார்வை மங்கத் தொடங்கியது.

அப்படியே தளர்ந்து போய் இருக்கையில் அமர்ந்து விட்டாள் ஷோபனா.

ஐந்தாறு நிமிடங்கள் கடந்திருக்கலாம்.

அமைதியை உடைத்தது யாழினிதான்.

"எனட்ட ஏன் சொல்லலன்னு கேட்டியே... சொல்ல வேணாமென்டு உன்ட புருஷன்தானம்மா சொன்னது.
பேர்த்டே அன்டைக்கு உன்னக் கவலப்படுத்த வேணாமாம்.

வருண் மாதிரி... எல்லாருக்கும் அமையாது ஷோபனா.

ஆனா நீ..."

அதற்கு மேல், யாழினி என்ன சொல்லி இருப்பாளோ...சொல்ல வந்ததை, சிவா அவளது கையை மெதுவாக அழுத்திப் பிடித்து நிறுத்தினான்.

அவனை ஒரு கணம் பார்த்த யாழினி, வேறு எதுவும் பேசாமல் எழுந்து சமையலறைக்குள் சென்றுவிட்டாள்.

சில நொடிகள் கழித்து, சிவா ஷோபனாவை நோக்கித் திரும்பினான்.

"ஷோபனா..."

அவள் மெல்ல நிமிர்ந்து பார்த்தாள்.

"நம்மள விட்டு போன விஷயங்களுக்காக எவ்வளவு அழுறமோ...

அதே மாதிரி, நமக்குக் கிடைச்சிருக்கிற பிளெசிங்ஸ்காக அதவிட அதிகமா சந்தோஷப்படவும் பழகணும்..."

ஷோபனா இறுகிப் போனவளாய் பதிலின்றி அமர்ந்திருந்தாள்.

"மாமாவும் மாமியும், வருணைக் கூட்டி வாரத்துக்கு மத்தியானம் போல போவாங்க. நீயும் அவங்களோட சேர்ந்து போ...."
என்று சொல்லிவிட்டு, சமையலறை பக்கம் ஒரு பார்வை பார்த்தவன்,

"யாழினிய... ரெண்டு பேருமா சேர்ந்து மலை இறக்குங்க."

என்றான், இறுதியில் மெல்லிய புன்னகையோடு.

அந்தப் புன்னகைக்குப் பதில் சொல்லக்கூட முடியவில்லை ஷோபனாவால்.

கண்ணீரைத் துடைக்கவும் மறந்து, தலையைக் குனிந்தபடியே அமர்ந்திருந்தாள்.

"போம்மா, ஷோபா... லேட்டாகிடும்."

சிவா மீண்டும் மென்மையாகச் சொல்ல, மெதுவாக எழுந்தாள் ஷோபனா.


******************
குமரனின் பைக்கை பின்தொடர்ந்தபடி காரை செலுத்திக் கொண்டிருந்தார் வருணின் தந்தை.

பின்புற இருக்கையில், மாமியாரின் அருகே அமர்ந்திருந்த ஷோபனாவுக்கு உள்ளுக்குள் இதயம் 'திக்திக்' என்று அடித்துக்கொண்டே இருந்தது. ஆனால் அந்தப் பதற்றத்தை முகத்தில் காட்டிக்கொள்ளாமல், முடிந்தவரை இயல்பாக இருப்பதுபோல் காட்டிக் கொண்டாள்.

நேற்றிரவு, குமரனுடன் பைக்கில் சென்றுகொண்டிருந்தபோது, மழையால் ஈரமாக இருந்த சாலையில் டயர் சற்றுச் சறுக்கியதில் பைக் சரிந்து விழுந்துவிட்டதாம்.

குமரனுக்கு பெரிய காயம் எதுவும் இல்லை.
ஆனால் பின்னால் அமர்ந்திருந்த வருணுக்குத்தான் முழங்காலில் நன்றாக அடிபட்டிருந்தது. தோல் உரிந்திருந்ததால், வாக்கிங் ஸ்டிக்கின் உதவியின்றி அவனால் சரியாக நடக்க முடியவில்லையாம்.

இன்று மதியம் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டிருந்தவனை குமரன், அறைக்கு அனுப்பாமல் தன் வீட்டிற்கு கூட்டிச் சென்று இருந்தானாம்.

இப்போது....

இவர்களும் அங்கே தான் செல்கின்றனர்.

*************************
 
Last edited:

ஷாரிகா

Active member
Staff member
பெண்டேஜ் போடப்பட்ட இடத்தில் அரிப்பது போல் இருக்கவும், அதைச்சுற்றி, விரல் நுனியால் லேசாக தடவிக் கொண்டிருந்தான் வருண்.

அறைக்கதவு திறக்கப்பட்டது.

நிமிர்ந்து பார்த்தான்.

குமரன், வருணின் பெற்றோர் ஆகியோரின் பின்னால் தென்பட்ட கலங்கிப்போன முகத்தை கண்டதும், அவன் உள்ளம் உடனேயே உருகித்தான் போனது.

அவள் விழிகளும் அவனை சந்தித்தபொழுது, உடனே அவளிடமிருந்து பார்வையை விலக்கிக் கொண்டான்.

யாழினி உபயத்தினால், அவள் வருவது முன்னமே தெரியும். அதனால் இயல்பாக இருப்பது போல் காட்டிக் கொள்வது இலகுவாக இருந்தது.

வருணின் தகப்பனும் தாயும் அவனிடம் பேசிக்கொண்டிருந்து விட்டு, சிறிது நேரத்தில் கணவன் மனைவிக்கு தனிமை கொடுத்து வெளியே சென்றனர்.

அறை முழுவதும் அமைதி.

என்ன பேசுவது...
எப்படிப் பேசுவது...
என்றே தெரியாமல் நின்றிருந்தாள் ஷோபனா. பாவமாக அவனையே பார்த்துக்கொண்டிருந்தாள்.

ஆனால்...வருண் அவளை ஒருமுறைகூட ஏறெடுத்தும் பார்க்கவில்லை.

கைபேசியை எடுத்து யாருக்கோ அழைப்பு விடுத்தான்.

" மச்சான் டேய்... இன்னொரு டூ த்ரீ ஹவர்ஸ்ல போக வெளிக்கிட்ருவம். ரூமுக்கு போய் என்ட பேக மட்டும் எடுத்து தந்தியென்டா சரி.."

அந்தப் பக்கத்தில் பேசுவது குமரனாய் இருக்க வேண்டும்.

அழைப்பை முடித்துவிட்டு, கட்டிலின் ஓரத்தில் நீட்டியிருந்த கால்களை மெதுவாகக் கீழே இறக்கி, கட்டிலின் கைப்பிடியைப் பற்றியபடி எழுந்து நிற்க முயன்றான்.

காயமடைந்த காலை ஊன்றியதும் முகம் சுருங்கியது.
சமநிலையை இழந்தவன் சற்றுத் தடுமாறினான்.

அதைப் பார்த்த ஷோபனா, யோசிக்கவே இல்லாமல் வேகமாக அவனருகே ஓடிவந்தாள்.

"பாத்து..."
என்று சொல்லிக்கொண்டே அவன் கையைத் தாங்க முயன்றாள்.

சட்டென்று அவள் முகத்தை நிமிர்ந்து பார்த்தவன்,
"ஓஹ்... ஹெல்ப் பண்றீங்களா?"


ஒரு கணம் இடைவெளிவிட்டு,
"வேணாங்க..."
என்றான்.

அந்த ஒரு வார்த்தையில் இருந்த குளிர்ச்சி, ஷோபனாவின் உள்ளத்தை சுட்டுப் பொசுக்கியதே.

அதன் பின்னர்,
அவளை கண்டு கொள்ளாதவன் போல, சுவரில் சாய்த்து வைக்கப்பட்டிருந்த வாக்கிங் ஸ்டிக்கை எடுத்து, அதில் உடல் பாரத்தைச் சாய்த்துக்கொண்டு மெதுவாக சமநிலையைப் பெற்றான்.

பிறகு...
ஒரு வார்த்தைகூட பேசாமல் குளியலறைக்குள் நுழைந்து கதவை மூடிக்கொண்டான்.

நிமிடங்கள் கழித்து, கதவைத் திறந்து வெளியே வந்தவன் கண்டது,

செல்லக் கோபத்துடன் அவனை முறைத்துக் கொண்டிருந்த அன்னையையும், அவரின் கைவளைவைப் பற்றியபடி விம்மி விம்மி அழுது கொண்டிருந்த மனைவியையும் தான்.

"டேய்... என்னடா அது!? அக்காவும் தம்பியுமா சேந்து பிள்ளைய கஷ்டப்படுத்துறீங்களாம். வெளுக்கப் போரனிப்ப ரெண்டு பேருக்கும்" அதட்டலாய்க் சொன்னார் வைதேகி.

சட்டென்று அரும்பிய இளநகையை உதட்டை ஒரு பக்கமாய் சுளித்து மறைத்தவன்,
" முதல்ல, உங்கள யாரம்மா..இந்த அழுமூஞ்ச கூட்டி வர சொன்னது? எப்பவும் அழுது வடிக்கிற பெட்ட, எனக்கு வேணாமம்மா.." என்றான் கோபம் போல்.

அவ்வளவுதான்.

ஷோபனா குரல் உயர்த்தி அழத்தொடங்கி விட்டாள்.

" பாருங்களன் மாமி.. நானென்ன வேணுமென்டா செய்றன். என்ட குணமே அதானே..இப்பல்லாம் அழுறதே இல்ல. எனக்கு வருனோட கதைக்கணும் போலவே இருந்தது. அவர் அப்டி சொன்னதால தான், நான் கோலே எடுக்கல்ல.. "

பக்கத்திருக்கை பெடியன் தொடையில் நறுக்கென்று கிள்ளியதும், ஓடியோடிச் சென்று டீச்சரிடம், கண்ணை கசக்கிக் கொண்டே அழுகுரலில் முறையிடும் முன்பள்ளி சிறுமியை போல் தெரிந்தாள் ஷோபனா.

வருண், இம்முறை அடக்கமாட்டாமல் சத்தமிட்டு நகைத்தான்.

வைதேகிக்கும் முகம் முழுக்க சிரிப்புதான்.

இருந்தாலும் அடக்கிக் கொண்டவர், "டேய்... இந்தா பிள்ளைய சமாதானப் படுத்து. எல்லாம் முடிஞ்சு... இப்ப நீயும் அழ வைக்காத அவள." என்றவர், ஷோபனாவை அவனருகே கட்டிலில் அமரச் செய்துவிட்டு வெளியேறினார்.

மீண்டும் பொங்கி வந்த சிரிப்பை, தொண்டையைக் கனைத்து அடக்கிக் கொண்டவன், டிஷ்ஷு ஒன்றை எடுத்து நீட்டினான்.

அதை வாங்கி முகத்தை நன்றாக துடைத்தவள், இன்னொன்றையும் வாங்கி மூக்கை உறிஞ்சினாள்.

அந்த சத்தத்தில் "ச்சீ..." என்றான் வருண், முகத்தை சுளித்தபடி.

உடனே, டிஸ்யூ பாக்சையே அவளது கையில் திணித்துவிட்டு,
"இந்தா... இன்னும் நல்லாத் துட"
என்று என்னவோ போல் சொன்னவனை முறைத்தாள் ஷோபனா.

"பாருங்களேன் மாமி... இவா என்ன முறைக்கிறா..." என்று அவளைப் போலவே செய்து காட்டிவிட்டு, தலையை பின்னால் சரித்து, குலுங்கி குலுங்கி சிரித்தான் வருண்.

அவன் செயலில் கோவம் வர, உடனே வருணின் டி-ஷர்டில் தன் மூக்கைத் தேய்க்கத் தொடங்கினாள்.

"ஸ்.. ஆ.. அம்மா... அந்த கைலயும் அடிபட்டுருக்குடீ.." என்று அவன் அலறியதில்தான்
"ஐயோ.." என்று விலகினாள் ஷோபா.

ஒரு கணம்...
இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்தனர்.

பிறகு...
இருவரது இதழ்களிலும் ஒரே நேரத்தில் ஒரு அழகான புன்முறுவல் மலர்ந்தது.

"டொக்...டொக்..."
அந்த அறைக் கதவு தட்டப்பட்ட,

"குமரா... வாடா..." என்று குரல் கொடுத்தான் வருண்.

குமரன் உள்ளே வந்தவன், ஷோபனாவிடம் பேகை கொடுத்து விட்டு,

"பிறந்தநாள் வாழ்த்துக்கள்மா..." என்று சொல்ல,

"தேங்.." என்று நன்றி உரைக்க வந்தவளை, கை உயர்த்தி தடுத்தவனை,

ஷோபனா என்னவோ ஏதோ என்று பார்த்திருந்தாள்.

குமரன் தொண்டையை செருமிக் கொண்டவன்,


"வானம் ஃபுல்லா மேகம்.

வருண் வாழ்க்க ஃபுல்லா சோகம்.
முழுசா மூணுமாச காலம்.
தம்பி முகத்தில சிரிப்பையே காணும்.
அட என்ன செய்வன் நானும்.
என் மச்சான் ரொம்ப பாவம்.
தங்கச்சி நீ மனசு வச்சா...
இந்த நிலை மாறும்.

இந்த நிலை மாறும்..."

உச்சஸ்தாயில் தொடங்கி, கீழ்ஸ்தாயியில் முடித்திருந்தான்.

ஷோபனா இதழ் விரித்து புன்னகை செய்தவள்,
"நிச்சயமா அண்ணா..." என்றாள்.
அந்த 'நிச்சயமா'வில் நன்கு அழுத்தம் கொடுத்தபடி.

"அப்றோம் வருண் சார்... உங்க சைட்லருந்து கவிதைக்கு கம்பளிமெண்ட்டே வரலையே...?" என்று குமரன் கைகளை விரித்து விரல்களை சுழற்றியபடி கேட்க,

"அட! அட! எப்படிப்பட்ட வரிகள்... மச்சான், நீ ஏன்டா உன்ட பெயர, கம்பர்வேல், வைரவேல், வாலிவேல். இப்படி ஏதாவதா மாத்தக்கூடாது?" என்றான் வருண் சீரியஸான முக பாவனையோடு.

குமரன் தன் சட்டை கோலறைத் தூக்கிவிட்டவன், ஒரு பெருமித சிரிப்புடன் வெளியே சென்றிருந்தான்.

அவன் போனதும், "நீங்க, எனக்கு இன்னும் விஷ் பண்ணவே இல்லயே..." என சிணுங்கலாய் கேட்டாள் ஷோபனா.

"அந்த பேகத் திற."

திறந்து பார்த்தவள், உள்ளிருந்ததைக் கண்டதும்,
"ஹை!! கவிதையா?"என்றாள், குழந்தைத்தனமான ஆச்சரியத்துடன்.

"ஓஹோ! இவக்கு நினைப்புதான். கதைக்கவே பஞ்சப்பர்ற மகாராணிக்கு, கவித கவிதையா கொட்ராங்க இங்க..." என்று செல்லம்மாய் நொடித்துக் கொண்டவன்,

"ஹேய்...அத எடுத்துப் பாரு. ஆனா பாத்துட்டு கண்ணால வடிச்சியோ... யாழினிக்குத்தான் கோல் எடுப்பன் நான்."என்றான் எச்சரிப்பாய்.

"அதெல்லாம் நான் அழமாட்டன்." என்று சொல்லிக்கொண்டே அதை வெளியில் எடுத்துப் பார்த்தாள்.

அது அபியின் கடைசி தினத்தன்று அவன், அவளை ஒற்றைக் கையால் அணைத்தபடி நிற்கும் புகைப்படம்... அபியின் முகத்தை கைகளால் வருடிக் கொடுத்தாள் ஷோபனா.

என்ன முயன்றும் கண்கள் கலங்குவதைத் தடுக்க முடியவில்லை.

ஆனால் அழக்கூடாதே...

இமைகளை இறுக்கி மூடி, "ட்வென்டி... நைன்டீன்... எயிட்டீன்........" என்று இருபதிலிருந்து குறைந்து வரும் ஒழுங்கில் முணுமுணுப்பாய் எண்ணத் தொடங்கினாள்.

பார்த்திருந்தவனுக்குத் தான் ஒரு மாதிரி வருத்தமாய்ப் போனது.

உள்ளுக்குள் நிரம்பப் போராடினாலும், அவனுக்காய் முயற்சிக்கிறாள்.

ஒருவேளை அவன், அவளருகிலேயே இருந்திருந்தால்...

'வாரன் ஷோபா.. இன்னொரு த்ரீ வீக்ஸ்ல உன்னோடயே இருக்க வாரன்.' என்று மானசீகமாய் அவளுக்கும் தனக்கும் சொல்லிக்கொண்டான் வருண்.

"த்ரீ... டூ... வன்..." சொல்லி முடித்துவிட்டு ஆழ மூச்சுடன், கண்களைத் திறந்தவள், அவன்புறம் பார்த்து,

"அன்டைக்கு போட்டோ எடுத்தனிங்களா? எனட்ட காட்டவே இல்லையே..." என்க,

பதிலாய் எதுவும் சொல்லாமல், அவள் தலைவருடி, நெற்றியில் ஆழமாக இதழ் பதித்தான். கண்கள் மூடி அவன் அலாதி அன்பினை சுகித்தவள், பின் விலகி,

"சரி.. வடிவா சாஞ்சி இருங்க. நான் அப்படி வாரன்." என்று அவன் முதுகுக்கு தலையணை கொடுத்து சாயச் செய்தவள்,

அந்தப் பக்கமாய் வந்தமர்ந்து அவன் இடக்கை வளைவில் தன் கை நுழைத்து, அவன் தோளில் சலுகையாய் தலை சாய்த்து கொண்டாள்.

"மாதவனும், இப்படி ஒன்டு தான் தந்தவன். அவனுக்கு ஒரு தேங்க்ஸ் கூட சொல்லல நான். போகேக்க நல்லதா ஒரு ஃபுட்பால் வாங்கிட்டு போவமா?"
என்றாள் ஷோபனா.

"ஆகா.. அவனோடயும் கதச்சாச்சா அப்ப?"

"ஹ்ம்ம்..." என்று தலையசைத்தாள்.

"அவன் இனியும் நம்மளோடயே இருக்கட்டும். O/L எக்ஸாம் முடிய நல்ல ஃபுட்பால் கிளப் பார்த்து ஜாயின் பண்ணி விடுவம். சரியா?" அவள் குரலில் ஓர் புதிய அக்கறை.

"சரி..." என்று புன்னகைத்தவன்,

"வேற...?"என்று நீட்டி இழுத்துக் கேட்டான்.

அவனை ஓரக்கண்ணால் பார்த்த ஷோபனா, உதட்டைக் கடித்தாள்.

"வேற... இப்டி இருந்தே சொல்லவா? இல்லாட்டி இறங்கிப் போய் தோப்புக் கரணம் போடவா?"

வருணின் புருவங்கள் சுருங்கின.
"என்ன!?"என்றான் புரியாமல்.

"சொரி சொல்றதக் கேட்டன்."

"தயவு செஞ்சு வேணாம். கல்யாணம் கட்டினதிலருந்து எனட்ட எப்படியும்... ஒரு... ஆயிரம் 'சொரி'யாச்சும் சொல்லிருப்ப. இப்பருந்து எனக்கு இங்கிலிஷ்ல புடிக்காத வார்த்தையே 'சொரி' தான்."

அந்த வார்த்தைகளில் குற்றச்சாட்டு இல்லை.
செல்லமான அலுப்புதான் இருந்தது.

ஷோபனா மெதுவாக அவனைப் பார்த்தாள்.

"உங்களுக்குப் புடிக்காதென்டு சொல்லிட்டீங்கல்லோ... இனி, அந்த வார்த்தையே சொல்லாத மாதிரி நடந்து கொள்றன்."


அவள் வாக்குறுதிகள் பற்றி அவனுக்குத்தான் தெரியுமே..
வருணின் இதழ்களில் தன்னிச்சையாக புன்னகை மலர்ந்தது.

"ஹா... பாப்போம்... பாப்போம்." என்றவன்,

சிறிது நேர அமைதிக்குப் பிறகு மீண்டும்,
"வேற?" என்று இழுத்தான்.

இந்த முறை ஷோபனா சற்று தயங்கினாள்.

விரல்களை ஒன்றோடொன்று கோர்த்துக் கொண்டவள்,

"வேற... அபி கேட்ட விஷயம் ஓகே தானே?"
என்று மெல்லிய குரலில் கேட்டாள்.

வருணுக்கு உடனே புரியவில்லை.
"என்ன... என்ன விஷயம்?"

"லெட்டர்ல... அத்தான்ட்ட கேட்டுட்டு..."
என்று நினைவூட்டினாள்.

நினைவு வந்தவனாக "ஓஹோ... அதுவா?"
என்றவன், அவள் கன்னத்தை மெதுவாக வருடியபடி,

"அக்காக்கு ஓகேன்டா அத்தான் இப்பவே ரெடி."
என்றான் குறும்பாக.

அடுத்த கணமே...
அவள், அவன் தோள்பட்டையில், வலிக்காத அளவுக்கு செல்லமாகக் கடித்து வைத்தாள்.

"ஆஹ்..." என்று போலியாக அலறியவனைப் பார்த்து வாய்விட்டு சிரித்தாள்.

பல நாட்களுக்குப் பிறகு, மனம் திறந்து சிரிக்கும் மனையாளின் முகம் பார்த்து அவன் மனம் கனிந்து போனது; கண்கள் கலங்கிப் போயின.

வருண், மனைவிக்காக அக்கறையுடன் விட்டுக்கொடுத்து வாழ்வது ஒரு வித அழகென்றால்,
ஷோபனா, சின்னச் சின்ன முயற்சிகளால் தன்னையே மாற்றிக்கொள்ள முனைவது பேரழகு.

அந்த அழகான பயணத்தில்,
இந்த இரண்டு இதயங்களும் இனிமேலாவது
இனிதாய்... நலமாய்... வளமாய்...
வானமும் பூமியும் நிலைத்திருக்கும் காலம்வரை,
வாழ்வாங்கு வாழட்டும்.


முற்றும்.
 
Last edited:

ஷமீம்

Active member
இந்த கதையில் வருண் தான் 👌.. என்ன மாதிரியான மனிதன்.. எவ்வளவு பொறுமை, புரிதல், மனிதாபிமானம், காதல்.. சொல்லி கொண்டே போகலாம்...

ஷோபனா - பாசம் வக்கிறதாலேயே மன அழுத்தத்தை கூட்டி கொள்கிற ரகம்...

அபி- அருமையான குழந்தை.. இவ்வளவு பாசமான குடும்பத்தில் நிச்சயம் தைரியமாக தன் பிரச்சினையை சொல்லியிருக்கலாம்.. ஆனால் சிறுபிள்ளை பயந்து விட்டான்...

இன்றைய சமுதாயத்தில் நடக்கும் சீர்கேடு பற்றி அருமையாக சொல்லி இருந்தாய் பெண்ணே... கன்னி முயற்சி 👍🏻👌🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻...

எதிர்காலத்தில் இதைவிட சிறந்த படைப்புகளை எழுதி மேன்மேலும் உன் எழுத்து பணி சிறக்க மனம் நிறைந்த வாழ்த்துகள் 💐 💐 💐 💐 💐
 

Google Typing

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.

Top Bottom