• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

12. தாமரை இலையுள் உறை தண்ணீராய்..!!

STN - 72

New member
Staff member
உறைநீர் - 12

பூமா சொன்னதை கேட்டு அங்கிருந்த அனைவருமே எல்லை இல்லா அதிர்ச்சிக்கு உள்ளானார்கள்..

நிலாவோ "என்ன.. என்ன சொல்றீங்க? அப்படின்னா நீங்க எங்க அம்மாவோட.." என்று பதைபதைக்கும் நெஞ்சோடு கேட்க

"ஆமாம்மா.. நான் உங்க அம்மாவோட தங்கச்சி தான்.. உனக்கு சித்தி.. அப்படி சொல்லிக்க கூட எனக்கு கூசுது.. உன் அம்மாவுக்கு தங்கையா இருக்கற தகுதி கூட எனக்கு கிடையாது.. உனக்கு எவ்வளவு திட்டணும்னாலும் எவ்வளவு வெறுக்கணும்னாலும் இல்ல அடிச்சு கொன்னே போடணும்னாலும் அதுக்கெல்லாம் தகுதியான ஆளு நான் மட்டும் தான்.. என்னால தான் உன் வாழ்க்கை.. எங்க அக்கா வாழ்க்கை எல்லாமே இப்படி ஒரு நரகத்தில போய் சிக்கிடுச்சு.." என்றவர் தலையில் அடித்துக் கொண்டு

"ஐயோ.. என் சீதாக்கா.. சொன்னாளே.. எவ்வளவோ அடிச்சுக்கிட்டாளே.. வேண்டாம் வேண்டாம்னு.. கேட்டனா நானு.. பொத குழியில போய் விழுந்தே தீருவேன்னு அடம் பிடிச்சேன்.. கடைசில என்னை காப்பாத்திட்டு எனக்கு பதிலா அவ போய் அந்த குழியில விழுந்துட்டாளே.." மனம் தாங்காமல் கதறினாள் பூமா..

தெய்வானை பூமா அருகில் அமர்ந்து "விடு பூமா.. இனி என்ன பண்ண முடியும்? எல்லா கஷ்டத்தையும் அனுபவிச்சிட்டு மகராசி போயும் சேர்ந்துட்டா.. நடந்தது நடந்திருச்சு.. அவ மனசார விரும்பினவரோட அஞ்சு வருஷம் சந்தோஷமா வாழ்ந்து இருக்கா.. போனது போகட்டும்.. இனி சீதாவோட பொண்ணை நாம நல்லபடியா பார்த்துக்குவோம்.." என்று பூமாவுக்கு ஆறுதல் சொன்னார்..

நிலாவுக்கோ ஒன்றுமே புரியவில்லை..

"ஐயோ எனக்கு எதுவும் புரியல.. மண்டையே வெடிச்சிடும் போல இருக்கு.. என்ன நடந்துச்சுன்னு யாராவது சரியா சொல்றீங்களா..?"

பூமாவின் கதறல் அவர் சொன்னதில் எந்த பொய்யும் இல்லை என்று அடித்து சொன்னது..

"அம்மாடி நிலா.. நிறைய விஷயங்கள் நடந்து போச்சு.. உங்க அம்மா சீதாவும் பூமாவும் அக்கா தங்கச்சிங்க.. ஜெகந்நாதனுக்கு சீதாவை தான் நாங்க பொண்ணு பார்க்க போயிருந்தோம்.. அவனுக்கு பொண்ணை ரொம்ப புடிச்சி இருந்தது.. ரெண்டு பேரும் சம்மதம் சொன்னதும் கல்யாணத்தை நிச்சயம் பண்ணுனோம்.. இது நடுவுல ஜெகந்நாதன் அடிக்கடி சீதாவை மீட் பண்ணிட்டு இருந்தான்.. அரேஞ்ச்ட் மேரேஜ்ன்னு பேரு தான்.. ஆனா ரெண்டு பேரும் பார்த்த உடனேவே ஒருத்தரை ஒருத்தர் விரும்ப ஆரம்பிச்சிருந்தாங்க.. கல்யாணம் ஆறு மாசத்துல நடக்க இருந்தது.. ஆனா நிச்சயமாகி மூணு மாசத்துக்கு அப்புறம் நடந்த சம்பவம் தான் சீதா ஜெகநாதன் பூமா மூணு பேர் வாழ்க்கையையும் அப்படியே தலைகீழா புரட்டி போட்டுச்சு.."

சிவனேசன் சொல்ல சொல்ல அங்கு நின்று இருந்த இளைய தலைமுறையினர் அனைவருக்கும் அவர் சொல்லும் எதையுமே நம்ப முடியாத அளவுக்கு அதிர்ச்சி உள்ளுக்குள் ஆட்டி வைத்தது..

நிலா ஜெகந்நாதனின் மகள் என்று தெரிந்ததிலிருந்து சிந்துவும் ரியாவும் கலங்கிப் போனார்கள்.. அது எப்படி அப்படி இருக்க முடியும்? சிந்து ரியா இருவரையும் பொறுத்தவரை அப்பாவின் இளவரசிகள்தான் அவர்கள்.. அவரை எப்போதுமே வர்ல்ட்ஸ் பெஸ்ட் டேட் என்று சொல்லி தான் விளிப்பார்கள்.. இப்போது அவர் இரண்டு பெண்களை ஒரே நேரத்தில் ஏமாற்றி இருக்கிறாரோ என்று தோன்ற அந்த எண்ணமே அவர்களுக்கு உவப்பானதாய் இல்லை.. இது பொய்யாக இருந்து விடாதோ என்று தான் நப்பாசை கொண்டார்கள் அவர்கள்..

சீதாவும் பூமாவும் சகோதரிகள்.. தாயில்லா பிள்ளைகள்.. சிறு வயதிலேயே அன்னை இறந்து விட்டதால் சீதா பொறுப்புள்ள பெண்ணாக தான் வளர்ந்தாள்.. வீட்டில் பொறுப்புகள் அதிகமாக இருக்க அவளால் எட்டாம் வகுப்புக்கு மேல் படிப்பை தொடரவும் முடியவில்லை..

ஆனால் பூமாவோ சீதாவுக்கும் அவள் தந்தைக்கும் செல்ல பெண்ணாய் வளர்ந்தாள்.. அந்த வீட்டின் இளவரசியாய் வலம் வந்தாள்.. கேட்டதெல்லாம் கிடைத்தது அவளுக்கு.. சீதா அவளுடைய அன்னையாகவே மாறி இருந்தாள்.. அவள் எது கேட்டாலும் எப்படியாவது சிரமப்பட்டு அதை அவளுக்கு கொடுக்க முனைவாள் அவள்.. சில சமயம் வாயை திறந்து கேட்பதற்கு கூட அவசியமில்லாது மனதில் நினைக்கும் போதே அவள் நினைத்ததை கண் முன் கொண்டு வந்து வைத்து விடுவாள் சீதா..

ஆனால் அதற்காக அவள் படும் கஷ்டத்தை எல்லாம் அறியாமல் பூமாவும் ஏதோ அரண்மனையில் வாழும் இளவரசி போல் தான் வாழ்ந்தாள்.. சீதாவை ஏவல் செய்தே பழக்கப்பட்டு போயிருந்தாள் அவள்.. ஒரு வேலையும் செய்ய மாட்டாள்.. முழு சோம்பேறியாக வளர்ந்திருந்தவளுக்கு தலை வாரிப் பின்னி விடுவது முதல் சமையல் செய்து தங்கைக்கு பரிமாறி அவளை பள்ளிக்கு அனுப்புவது வரை தன் குழந்தையாகவே எண்ணி பார்த்துக் கொண்டாள் சீதா..

ஆனால் இதன் விளைவோ பயங்கரமாக உருவெடுத்து இருந்தது பூமாவிடம்.. எதற்குமே சற்றும் சிரமப்படாது மெனக்கெடாது அடுத்தவர் கஷ்டம் புரியாத பிடிவாதக்காரியாக அவள் வளர்ந்திருந்தாள்.. பதின் வயது வரை அதனால் அவளுக்கு எந்த பிரச்சினையும் இல்லை.. ஆனால் பருவ வயதுக்கு வந்த பிறகு அவள் பாதுகாப்பு கேள்விக்குறியானது..

கல்லூரியில் காலடி எடுத்து வைத்த வருடம் மாயனுடன் அவளுக்கு அறிமுகம் ஏற்பட்டது.. மாயன் வேறு யாருமில்லை அந்த டில்லி பாபுவின் தந்தை தான் அவன்..

பெண்கள் கல்லூரி வாசலில் நின்று உள்ளிருந்து வரும் பெண்களை நோட்டம் இட்டுக் கொண்டிருப்பான்.. அதில் பகட்டுக்கும் பணத்துக்கும் அழகுக்கும் மயங்கும் பெண்கள் எவராவது இருப்பார்களா என்று கண்களால் தோண்டி துருவி அப்படி யாராவது அவன் கண்களில் சிக்கும்போது அவர்களை பல நாட்கள் பின் தொடர்ந்து சென்று அவர்களைப் பற்றிய முழு விவரங்களை அறிந்துக் கொள்வான்.. அதன் பிறகு அவர்களோடு காதல் நாடகமாடி தன்னை முழுதாக நம்பி அவர்களை தன்னோடு வரவைத்து விபச்சார தொழிலில் ஈடுபடுத்துவதுதான் அவனுடைய அத்தனை நாள் வாடிக்கையாக இருந்தது..

எத்தனையோ பெண்களின் வாழ்க்கையை இப்படி நாசம் செய்திருக்கிறான் அவன்.. அவனை நம்பி பெற்றவர்களை ஏமாற்றி அவனோடு ஓடிப் போய் படுகுழியில் விழுந்த பெண்கள் பலருண்டு..

அந்த வரிசையில் இப்போது பூமாவும் இணைந்திருந்தாள்..

ஆமாம்.. அவளை தன் காதல் வலையில் சிக்க வைத்திருந்தான் அவன்.. அவனுடைய சொகுசு காரும் அவன் உடைகளும் அவன் அணிந்திருந்த நகைகளும் அவனை பெரிய பணக்காரனாக காட்டியது அவள் கண்களுக்கு.. இப்படிப்பட்ட சொகுசு வாழ்க்கை வாழ வாய்ப்பு கிடைக்கும்போது அதை வேண்டாம் என்று சொல்வாளா அவள்..

எளிதாய் அவன் விரித்த வலையில் விழுந்திருந்தாள் அவள்.. சீதாவுக்கு திருமணம் நிச்சயமாகி அடுத்த மூன்று மாதத்தில் திருமணம் நடக்க இருக்க அப்போது ஒரு நாள் இரவு 12 மணிக்கு பையில் துணிகளை அடுக்கி எடுத்துக்கொண்டு வீட்டை விட்டு வெளியேற முயன்றாள் பூமா..

ஆனால் அவளின் நல்ல நேரமோ இல்லை சீதாவின் கெட்ட நேரமோ அவள் வெளியே போவதற்கு முன்னால் சீதா அவளைப் பார்த்து இருந்தாள்..

"எங்க போற பை எல்லாம் எடுத்துட்டு?" என்று கேட்டவளிடம் திமிராய் "எங்கேயோ போறேன்.. உனக்கு என்ன வந்தது? இனிமே இந்த வீட்ல இருந்து என்னால கஷ்டப்பட முடியாது.. நான் ஒருத்தரை விரும்புறேன்.. அவரு பெரிய பணக்காரர்.. அவரும் என்னை உயிருக்கு உயிரா விரும்புறார்.. நான் அவரோட போக போறேன்.." என்று அலட்டிக் கொள்ளாமல் சொன்னவளை அதிர்ந்து பார்த்திருந்தாள் சீதா.

"பூமா.. உனக்கு என்ன பைத்தியமா? நீ யாரையாவது விரும்புறதா இருந்தா அதை அப்பாக் கிட்ட சொல்லு.. நீ விரும்புறவரை வந்து உன்னை பொண்ணு கேட்க சொல்லு.. அதை விட்டுட்டு எதுக்கு இப்படி ராத்திரியோட ராத்திரியா அவரோட போறேன்னு கிளம்புறே..? உனக்கு ஏதாவது ஆச்சுன்னா.."

"எதுவும் ஆகாது.. அவர் ரொம்ப நல்லவர்.. என்னை நல்லா ராணி மாதிரி வச்சுக்குவார்.. அக்கா.. அவர் வீட்ல எங்க கல்யாணத்துக்கு ஒத்துக்க மாட்டாங்க அக்கா.. அதனாலதான் ரகசியமா கல்யாணம் பண்ணிக்கலாம்னு சொன்னார்.. கொஞ்ச நாள் பொறுத்து மெதுவா அவங்க அம்மா அப்பா கிட்ட சொல்லி என்னை வீட்டுக்கு கூட்டிட்டு போறேன்னு சொல்லி இருக்காரு.. ப்ளீஸ் கா.. எதையாவது சொல்லி என் வாழ்க்கையை கெடுத்துறாதே.. என் வாழ்க்கையை நானே முடிவு பண்ணிக்கிறேன்.."

அவள் சொன்னதை கேட்டு சீதாவுக்கோ கோபம் தான் வந்தது.. ஆனாலும் இப்போது கோபப்பட்டால் அவள் வேகம் இன்னும் அதிகரித்து வீட்டை விட்டு வெளியேறிவிடப் போகிறாளே என்ற பயம் அவள் கோபத்தை கட்டிப் போட்டது..

"சரி.. நீ அவரை கல்யாணம் பண்ணிக்கிறது அவங்க வீட்ல தெரிய வேண்டாம்.. நம்ப அப்பாவும் நானும் உங்க கல்யாணத்தை நடத்தி வைப்போம்ல..? அவரை இங்க வந்து பேச சொல்லேன்..."

"இல்லக்கா நான் இப்பதான் காலேஜ் ஃபர்ஸ்ட் இயர் படிக்கிறேன்.. அப்பா கிட்ட சொன்னா இப்ப நிச்சயமா எனக்கு கல்யாணம் பண்ணி வைக்க மாட்டார்.. அதுவும் இப்ப மூணு மாசத்துல உன் கல்யாணத்தை வச்சுக்கிட்டு என் கல்யாணத்தை பத்தி யோசிக்கவே மாட்டார்.. உனக்கே 20 சவரன் நகை தான் போடுறாரு.. அவ்வளவு பெரிய பணக்காரர் மாயன்.. அவரை கல்யாணம் பண்ணிக்கிட்டு போகும் போது நான் எந்த நகையும் இல்லாம போனா நல்லா இருக்காது அக்கா.. இதே ஓடிப்போய் கல்யாணம் பண்ணிக்கிட்டா வேற வழி இல்லாம அவரே எனக்கு வாங்கி கொடுத்திடுவார்.."

"இப்ப என்ன? உனக்கு நகை போடணும் அவ்வளவுதானே? என் கல்யாணத்துக்கு வச்சிருக்க 20 சவரனோட எப்படியாவது இன்னும் 10 சவரன் சேர்த்தே உனக்கு போடுறேன். ஆனா அவர் அப்பாகிட்ட வந்து பேசி உன்னை கல்யாணம் பண்ணிக்கணும்.."

"அக்கா.. சொன்னா புரிஞ்சுக்க.. அவர் இப்ப எனக்காக காத்துகிட்டு இருப்பார் கா.. நான் இப்ப போகலன்னா அவர் கோவிச்சுக்கிட்டு போயிடுவாருக்கா.. ப்ளீஸ்.. என்னை போக விடு.."

"இங்க பாரு.. அப்படியெல்லாம் நீ எக்கேடோ கெட்டு போன்னு என்னால அனுப்ப முடியாது.. சரி.. நீ இங்கேயே இரு.. நான் போறேன்.. நான் போய் அவர்கிட்ட விஷயத்தை சொல்லி நாளைக்கு வந்து அப்பா கிட்ட பேச சொல்றேன்.."

"இல்ல நானும் வருவேன்.."

எப்போதும் போல் பூமா அடம் பிடிக்க "சரி வா.. ஆனா நான் அவனோட பேசும்போது நீ வாயை திறக்க கூடாது.." என்று சொல்லிவிட்டு அவளையும் அழைத்துக் கொண்டு மாயனிருந்த இடத்திற்கு சென்றாள்..

மாயன் ஒரு சவுக்கு தோப்புக்குள் தன் காரில் சாய்ந்த படி பூமா வருவாள் என்று எதிர்பார்த்த படி காத்திருக்க அவன் கண்களுக்கு விருந்தாய் இரண்டு பெண்கள் வந்து கொண்டிருந்ததை பார்த்தவன் மனதிற்குள் வேறு கணக்கை போடத் துவங்கினான்.

நீர் உறையும்..
 
Top Bottom