வரம் 11
மகள் மாதங்கியிடம், அவள் பெற்ற மகள் துவாரகாவை தன் பேரனுக்குத் திருமணம் செய்து கொடுக்க முடியாது என்று உறுதியாக காத்தவராயன் சொல்லிச் சென்று சில நாட்கள் கடந்திருந்தது. இடைப்பட்ட நாட்களில் வீட்டில் பெரிய மாற்றங்கள் இல்லை என்றாலும் மாதங்கியிடம் பெரிய மாற்றம் வந்திருந்தது.
அதிகாலை நேரம் குளிப்பதற்காக கிணற்றடிக்கு வந்திருந்தான் நவநீதன். அங்கே ஆர்ப்பாட்டமாய் தண்ணீர் இறைத்துக்கொண்டிருந்தாள் துவாரகா.
“நீ இங்க என்ன பண்ற?” என்ற நவநீதன் அதன்பிறகே அவள் உடையைக் கவனித்தான்.
அவன் அறிந்து அவள் முதல் விஷேஷம் நடந்த அன்று புடவை அணிந்திருந்தாள். அதன்பிறகு கோவில் திருவிழா காலத்தில் கூட புடவை கட்டியது இல்லை. பெரும்பாலும் தாவணி, சில சமயம் சுடிதார்களில் இருப்பாள். இன்று வழக்கத்திற்கு மாறாக புடவையில் இருப்பதும், அதை விட மாறாக வேலையே செய்து பழக்கம் இல்லாதவள் கிணற்றில் இருந்து நீர் இறைப்பதும் வித்தியாசமாக இருந்தது.
அவள் திருட்டு விழி விழிப்பதைப் பார்த்துவிட்டு, “யார் இதை பண்ண சொன்னா?” என்று அடுத்த கேள்வியை முன்வைத்தான்.
“அம்மா தான் மச்சான் பண்ணச் சொன்னாங்க. நாலு கொப்பரைக்கு இறைச்சிட்டேன். இது அஞ்சாவது.” என்றவள் தாய் வருகையை உணர்ந்ததும் வேலையில் கவனமானாள்.
“என்ன தம்பி?” மாதங்கி கேட்க, “அதைத் தான் நானும் கேட்கிறேன். வேலைக்காரங்க வரலன்னா நீங்களோ, அம்மாவோ இந்த வேலையைப் பார்க்க வேண்டியது தானே. படிக்கிற பொண்ணு இவளை ஏன் பார்க்க சொல்றீங்க?” என்றான்.
“எல்லாக் காலமும் நாங்களே பார்த்துக்கிட்டு இருக்க முடியாதே தம்பி. இவளுக்கும் எல்லாம் தெரியணும் தானே. அதுதான் கொஞ்சம் கொஞ்சமா கத்துக்கொடுக்க முடிவெடுத்து இருக்கேன். இன்னைக்கு கொஞ்சம் தாமதம் ஆகிடுச்சு. நாளைக்கு நீங்க குளிக்க வரும் போது தொந்தரவு பண்ண மாட்டோம்.” என்ற மாதங்கி மகளை இழுத்துக்கொண்டு அங்கிருந்து சென்றார்.
இந்த அத்தை புதிதாகத் தெரிந்தாள் நவநீதனுக்கு. ஏதோ சரியில்லை என்கிற யோசனையுடன், துவாரகா இறைத்து வைத்த தண்ணீரையே பயன்படுத்தி குளித்துவிட்டு நகர்ந்தான்.
உள் அறையில் கண்ணப்பன், அஞ்சனை இருவரும் பேசிக்கொண்டிருந்தனர். “இந்த மாதங்கிப் பொண்ணு ஏன் இப்படி பண்றா? மாமா ஏதோ சொன்னாங்கன்னா அதை அப்படியே மனசுக்கு எடுத்துக்கிறதா, நாம அப்படியே விட்டுடுவோமா என்ன? துவாரகாவுக்கு வீட்டு வேலை பழக்குறேன்னு அந்த பச்சைப் பிள்ளையைப் போட்டு அந்த பாடு படுத்துறா?
நான் கேட்டா, நாளைக்கு போற வீட்டில் இவ தானே எல்லா வேலையும் செய்யணும். நான் தானே சொல்லிக் கொடுக்கணும். அதை தான் செய்யுறேன்னு சொல்லிட்டு போறா.”
“மத்தியான சமையலுக்கு முன்னாடி நான் கொஞ்ச நேரம் கண் அசர்வது உண்டு. அந்த நேரம் துவாரகாவுக்கு சமைக்க கத்துக்கொடுக்கிறா போல. பாப்பா சமைச்சதை நவநீதனுக்கு கொடுக்கப் போனா வெடுக்குன்னு புடுங்குறா? கேட்டா, அப்பா எதாச்சும் நினைச்சுப்பார். தம்பிக்கு நான் வேற செஞ்சு தரேன்னு சொல்றா.”
“அவ மெதுவா தான் பேசுறா. ஆனா அதில் ஏதோ இருக்கு. அவ சாதாரணமா சொல்லுற ஒவ்வொரு வார்த்தையும் சுருக்கு சுருக்குன்னு குத்துற மாதிரி இருக்கு. மாதங்கி கொஞ்சம் கொஞ்சமா நம்மளை விட்டுப் போறா. கூடவே துவாரகாயையும் இழுத்துட்டுப் போறா.” வருத்தத்துடன் சொல்லிக்கொண்டிருந்தார் அஞ்சனை.
கண்ணப்பனுக்கு என்ன செய்வது என்று புரியவில்லை. தந்தையிடம் பேசாமல் தங்கைக்கு மறுபடியும் வாக்கு கொடுக்க வேண்டாம் என நினைத்து தந்தையைத் தேடிச் சென்றார். ஆனால் அவர் உதிர்த்த வார்த்தைகள் கண்ணப்பனுக்கு தன் தந்தையின் இன்னொரு பரிணாமத்தை காட்டியது.
“மாதங்கி நான் பெத்த பொண்ணு தான். துவாரகா என் ஆசைப் பேத்தி தான். ஆனா தகப்பன் பெயர் தெரியாதவங்கிற மிகப்பெரிய குறை அவகிட்ட இருக்கு. எனக்கு என் பொண்ணையும் பேத்தியையும் விட என் மகனும், பேரனும் முக்கியம்.
மாதங்கியால் ஊருக்குள்ள நான் படாத அசிங்கம் இல்ல. ஒவ்வொரு முறை துவாரகாவோட நான் வெளியே போகும் போது என் முதுகுக்குப் பின்னால் என்னென்ன பேசுறாங்கன்னு தெரியுமா?
மாதங்கியோட கர்ப்ப விஷயம் தெரிய வந்த நேரம், குடும்ப கௌரவத்தைக் காப்பாத்த அவளைக் கொன்னுடலாம் னு எத்தனையோ பேர் எனக்கு அறிவுரை சொன்னாங்க. ஆனா பெத்த மனசு கேட்கல. எவனோ ஒருத்தன் பண்ண தப்புக்கு என் பொண்ணை நான் ஏன் கொல்லணும் னு பாசத்தில் அமைதியா இருந்தேன். அதனால் தானோ என்னவோ இன்னும் இன்னும் அவமானத்தை சந்திச்சுக்கிட்டு இருக்கேன்.”
“அந்த நிலைமை என் சாமி நவநீதனுக்கு வரக்கூடாது. அவனுக்கு நான் எந்தக் குறையும் இல்லாத மகாலட்சுமி மாதிரி ஒரு பொண்ணைப் பார்த்து தான் கல்யாணம் பண்ணி வைப்பேன்.
உங்க மனசில் ஆயிரம் விருப்பம் இருக்கலாம். ஆனா நவநீதன் மனசில் அப்படி எந்த எண்ணமும் இல்லை. துவாரகாவுக்கும் இருக்கிற மாதிரி தெரியல. அப்படியே இருந்தாலும் அதைப் பத்தி எனக்குக் கவலை இல்லை. ஊருக்குள்ள என் பேரன் நாலு பேருக்கு நியாயம் சொல்லும் நிலையில் இருக்கிறவன். அவனோட நிற்கும் தகுதி என் பேத்திக்கு கிடையாது.”
“நான் இத்தனை சொல்லியும் இந்தப் பேச்சை மேற்க்கொண்டு தொடர நினைச்சா நான் செத்தாச்சும் அந்தக் கல்யாணத்தை நிறுத்துவேன்.” என்று அத்தனை உறுதியாய் சொன்னார் காத்தவராயன்.
தந்தையை மீறி இந்தத் திருமணத்தை நடத்த முடியும் என்கிற நம்பிக்கை இல்லாததால் தங்கையை விட்டுக்கொடுக்க துணிந்திருந்தார் கண்ணப்பன். இது எதுவும் மாதங்கியைப் பாதிக்கவில்லை. தனக்கான காலம் இன்னும் எத்தனை நாள்கள் இருக்குமோ. அதற்குள் தன் மகளை இன்னொரு வீட்டில் நல்லபடியாக வாழும் அளவிற்கு தயார்படுத்தி விடவேண்டும் என்பதில் தான் உறுதியாக இருந்தார்.
வெளியே காட்டிக்கொள்ளாமல் இருந்தாலும் தங்கையின் மனவருத்தம் அன்பான அந்த அண்ணனுக்குப் புரிந்து தான் இருந்தது. கூடுதலாக மார்பில் போட்டு வளர்த்த மருமகள் படும் வேதனைகள் அவரின் மனதை உப்பு நீராய் அரித்தது. ஆனாலும், “இங்க எல்லோரும் என்னோட உறவுகள். இதில் யாருக்காகன்னு நான் பேச முடியும். என்ன நடக்கணும் னு இருக்கோ அது தான் நடக்கும்.” என்று கடந்தார்.
மகளின் செயல்களை காத்தவராயன் கவனித்துக்கொண்டு தான் இருந்தார். எப்போதும் மாதங்கி அமைதியின் சொரூபம் தான் என்றாலும், இந்தப் பிரச்சனை வந்த பிறகு வீட்டில் உள்ளவர்களாக எதுவும் பேசாமல், தானாக எதுவும் பேசுவது இல்லை. எப்போது பார் ஏதாவது வேலை செய்து கொண்டே இருப்பார்.
இந்த வீட்டின் மகனைத் திருமணம் செய்து கொள்ளும் அளவு தகுதியில்லாத பெண்ணுக்கும், அவளைப் பெற்றவளுக்கும் அவர்கள் பாவம் பார்த்து உணவு கொடுக்க வேண்டாம், மூன்று வேளை சாப்பாட்டிற்கு வேலை செய்து கழித்து கொள்ளலாம் என்று நினைத்து செய்வது அப்பட்டமாகத் தெரிந்தது. காத்தவராயனுக்கு வருத்தம் இருந்தது தான். ஆனால் இது தான் எல்லோருக்கும் நல்லது என்று அமைதியாக கடந்து போனார்.
அடுத்த சில நாட்களில் தானே தன் பேரனுக்கு பெண் பார்த்து முடிவு செய்துவிட்டு, அந்தத் தகவலை அவனைப் பெற்றவர்களிடம் அறிவிப்பாகச் சொன்னார்.
மாதங்கிக்கு அதில் பெரிய அதிர்ச்சி ஒன்றும் இல்லை. தந்தை ஒரு முடிவு எடுத்தால் அதில் எத்தனை உறுதியாக இருப்பார் என்பதில் அவருக்கு முன் அனுபவம் இருந்தது. அதனால் இயல்பாக அதைக் கடந்தார். ஆனால் மகனைப் பெற்ற கண்ணப்பன், அஞ்சனை இருவருக்கும் இதில் அதீத வருத்ததம்.
காத்தவராயனுக்கு மகளின் மேல் நம்பிக்கை இருந்தது. ஆனால் மகன், மருமகள் மீது இல்லை. மாதங்கிக்கும், துவாரகாவுக்கும் நல்லது செய்கிறேன் என்று அவர்கள் பாட்டிற்கு நவநீதனிடம் எதையும் பேசி வைத்துவிட்டால் என்கிற பயம் அவரை வேகவேகமாக செயல்பட வைத்தது.
பக்கத்து ஊரில் இருந்த செல்வாக்கு மிக்க குடும்பத்தில் பேரனுக்குப் பெண் பார்த்திருந்தார் காத்தவராயன். ஐஸ்வர்யா படித்த, பண்பான பெண். அவள் தன் பேரனுக்கும், வீட்டிற்கும் சகல விதத்திலும் சரியானவள் என்பது அவர் எண்ணம்.
கண்ணப்பன், அஞ்சனையை வைத்துக்கொண்டு நவநீதனிடம் ஜஸ்வர்யா பற்றி சொல்ல, “நீங்க யாரைக் காட்டினாலும் எனக்கு சம்மதம் தான்.” என்றதோடு முடித்தான் அன்று இருந்த நவநீதன். அன்றைய அவனுக்கு உலகமே அவன் குடும்பமும், தாத்தாவாகவும் தான் இருந்தார்கள்.
அன்றைய இரவில், “மச்சானுக்கும் எனக்கும் தானேம்மா கல்யாணம் பேசுறதா இருந்தது. இப்ப ஏன் திடீர்னு.” தாயிடத்தில் சந்தேகம் கேட்டாள் துவாரகா. அவள் என்னவோ சாதாரணமாகத் தான் கேட்டாள். ஆனால் கேட்டுக்கொண்டிருந்த மாதங்கிக்குத் தான் மூச்சடைத்துப்போனது.
கருவுற்றிருந்த காலங்களில் அவரிடம் மிச்சமிருந்த ஒரே ஆசை தனக்கு பிறக்கப்போவது மகனாக இருக்க வேண்டும் என்பது தான். தந்தையின் பேச்சு, ஊர் மக்களின் பேச்சை நினைத்து தன் சொந்த சுக துக்கங்களை இழக்கும் கொடுமையான பெண்பிறவி தன்னோடு முடிந்துவிடட்டும் என்று நினைத்திருந்தார். இறைவன் தீர்ப்பை மாற்றி எழுத, அப்பொழுது தான் பிறந்திருந்த மகளைப் பார்த்து ஆற்றுவார் தேற்றுவார் இன்றி அழுதார் மாதங்கி.
பச்சை உடம்புக்காரி அழுவதைத் தாங்கிக்கொள்ள முடியாமல், “இப்ப எதுக்கு இத்தனை அழுகை. உன்னோட பயம் புரியுது. ஆனா அது நியாயமில்லாத பயம். சரியான நேரம் வரட்டும் நம்ம நவநீக்கே இவளை முடிச்சிடலாம்.” என அஞ்சனை தான் முதன் முதலாக அந்த வார்த்தையை உதிர்த்திருந்தார்.
யாரென்று தெரியாத ஒருவன் மூலம் உண்டான கருவைச் சுமந்த நாத்தனாரை பெயரளவில் கூட காயப்படுத்தாமல், கர்ப்பகால உதவி செய்ய அஞ்சனையை அன்றி யாருக்கும் மனம் வராது. அது போதாது என்று அவர் பெற்ற மகளுக்கும் ஒரு வழியை அவர் அமைத்துக்கொடுத்திருக்க, வாழ்நாள் முழுமைக்கும் அண்ணிக்கு தான் அடிமை என்று தனக்குள்ளே பத்திரம் எழுதி வைத்திருந்தார் மாதங்கி.
தகப்பனால் அந்த ஆசையில் இடி விழுந்திருந்தாலும், விஷயம் மகளுக்குத் தெரிய வரும் முன்னர் தடுக்கப்பட்டுவிட்டதில் சின்ன ஆசுவாசம். ஆனால் இப்போது மகள் கேட்ட கேள்வி வயிற்றில் புளியைக் கரைத்தது.
“எதுக்காகம்மா இப்படிப் பார்க்கிறீங்க?” தானும் பயந்து போய் கேட்டாள் துவாரகா.
ஒரு காலகட்டம் வரை பட்டாம்பூச்சியைப் போல் சுதந்திரமாக சுற்றித் திரிந்த மாதங்கியை ஒரே ஒரு சம்பவம் மொத்தமாக அடக்கி ஒடுக்கியது. அன்றில் இருந்து தேவைக்கு அதிகமாக தலை கூட நிமிர்த்தாதவர் தன் மகளையும் அப்படியே வளர்த்து வைத்திருந்தார்.
“உனக்கு இந்த விஷயம் எப்படித் தெரியும்?” மாதங்கி மகளின் புஜங்களை இருக்கமாகப் பற்றியபடி கேட்க, அன்னையின் பிடி வலித்தாலும் அமைதியாக, “அத்தை தான் ஒருநாள் சொன்னாங்க.” என்றாள்.
“இங்க பார், அதெல்லாம் நடக்காது. அந்த ஆசை உனக்குள்ள இருந்தா அதை ஆசிட் ஊத்தியாச்சும் அழிச்சிடு. அம்மா உனக்காக ஒரு நல்ல மாப்பிள்ளையைப் பார்ப்பேன். அந்த வாழ்க்கையை ஏத்துக்கிட்டு நீ நல்லபடியா வாழனும். சரிதானே.” என்க, சரியென்று தலையாட்டி வைத்தாள் துவாரகா. அவளுக்கு அன்றும் இன்றும் நவநீதனோடான திருமணப்பேச்சுவார்த்தை வெறும் தகவல் மட்டுமே.
அடுத்த நாள் விடிந்தது. பேரனுக்காக ஐஸ்வர்யாவை பெண் பார்க்க செல்ல வேண்டும். ஆனால் மகள் அங்கே வந்தால் தேவையில்லாத பேச்சுகள் வர வாய்ப்பிருக்கிறது. அதைத் தடுக்க மகளை வரவேண்டாம் என்று சொல்ல வேண்டும். ஆனால் எப்படிச் சொல்வது என்று தயக்கத்துடன் இருந்தார் காத்தவராயன்.
மாதங்கி பொதுவாக எந்த விஷேஷங்களிலும் கலந்து கொள்பவர் இல்லை தான். ஆனால் இது அண்ணன் மகன் விஷேஷம் என கிளம்பி இருந்தால் என்ன செய்வது என்று தான் தயங்கிக்கொண்டு இருந்தார். சற்று நேரத்திற்கு முன்பு, மனைவி கண்ணகியம்மாளின் நகைகளை மருமகள் அஞ்சனையிடம் இருந்து மாதங்கி கேட்டு வாங்கிச் செல்வதைப் பார்த்திருந்தார் கண்ணப்பன். அதனாலேயே அவருக்குள் பல யோசனை.
ஆனால் அவரின் பயத்திற்கு அவசியம் இல்லாமல் மகளை மட்டும் தயாராக்கி அழைத்துக்கொண்டு வந்தார் மாதங்கி. பேத்தியைப் பார்த்த கண்ணப்பன் அதிர்ந்து போனார். பேத்தி அழகு என்று தெரியும். ஆனால் இத்தனை அழகு என்று அவருக்குத் தெரியாது.
இயற்கையிலே நல்ல அழகான பெண் துவாரகா. மாதங்கியின் ஒட்டுமொத்த அழகும் அவரிடம் இருந்து துவாரகாவிற்கு வந்திருந்தது. தன் அழகே தனக்கு ஆபத்தானது போல் மகளுக்கும் ஆகிவிடக் கூடாது. அவள் அழகு வேற்று ஆடவன் கண்களை உருத்திவிடக் கூடாது, எதுவும் மகளின் அழகை உயர்த்திக்காட்டக் கூடாது என்பதில் மாதங்கி அத்தனை சிரமம் கொள்வார். முகத்திற்கு பவுடர் போடக்கூட மகளை அனுமதித்தது கிடையாது.
காதை ஒட்டிய தோடு, கைக்கு இரண்டாக கண்ணாடி வளையல், சத்தம் வராத கொலுசு, எந்தப் பூவாக இருந்தாலும் எண்ணி ஒரு முழம் மட்டும் என மகளின் அழகை கட்டுக்குள் வைத்திருந்தார். சரியான நேரம் வரும் போது நவநீதனின் கண்களுக்கு மட்டும் மகள் அழகாகத் தெரிந்தால் போதும் என்று தான் அவர் நினைத்திருந்தார். இப்போது நிலைமை மாறி இருந்ததால் தானும் தன் நிலையை மாற்றிக்கொண்டார்.
விஷேஷ வீடுகளுக்கு வரும் பெண்கள் பலர் தங்கள் வீட்டிற்கு பெண்களைத் தேடுவது வழக்கம். அப்படியாயினும் தன் மகளுக்கு வரன் வரட்டும் என்பது மாதங்கியின் நினைப்பு.
மயில் கழுத்து நிற புடவையில், நீண்ட தலைமுடியை தளர்வாகப் பின்னலிட்டு, நிறைய மல்லிகைப் பூ வைத்து, கை நிறைய கண்ணாடி வளையல், பெரிய ஒற்றை ஆரம் என வந்து நின்ற பேத்தியைப் பார்க்க காத்தவராயனின் கண்கள் நிறையத்தான் செய்தது. செங்கமலமாக இருந்தால் தான் என்ன, சேற்றில் முளைத்து விட்டதே என்று மனம் சுருங்கிப்போனார்.
தேவையான பொருள்களுடன் வந்த அஞ்சனை துவாரகாயைப் பார்க்கவும் ஒரு நொடி உறைந்து போனார் என்றே சொல்ல வேண்டும்.
அவரை உறைவில் இருந்து மீட்கும் பொருட்டு, “அத்தை கூடவே இருக்கணும். அத்தை அறிமுகப்படுத்தாம யார்கிட்டேயும் பேசக்கூடாது. சொன்னதை எல்லாம் நினைவில் வைச்சுக்கணும்.” ஏற்கனவே சொல்லி வைத்திருந்த முக்கியமான கட்டளைகள் சிலவற்றை மாதங்கி மீண்டும் சொல்ல, சரி சரியென்று தலையை ஆட்டிக்கொண்டாள் துவாரகா.
“நீ வரலையா மாதங்கி?” கண்ணப்பன் கேட்க, “நீங்க திரும்பி வரும் போது திருஷ்டி கழிக்க வீட்டில் ஒரு ஆள் இருக்கணுமே. நான் இங்கேயே இருக்கேன் அண்ணா.” இதற்கு மேல் கேட்காதே என்னும் பாவனையில் சொல்ல, பெருமூச்சுடன் சரியென்று கிளம்பினார் அவர்.
மாப்பிள்ளையாக வெள்ளை சட்டை சாம்பல் வண்ண பேண்ட்டில் தயாராகி வந்த நவநீதன் கூட, துவாரகாயைப் பார்த்து புருவம் உயர்த்தி பின் அடக்கினான். அவ்வளவு தான் அவள் மீதான அவன் கவனிப்பு. ஆர்ப்பாட்டமாய் ஜஸ்வர்யா இல்லம் சென்றனர் அனைவரும்.