• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

NTYU - 6

STN - 90

New member
தேடல் 6

IMG_20260317_161648.jpg


தவறு செய்வது மனித இயல்பு, அதை உணர்ந்து திருந்தி மாற்று வழியில் நடப்பதை விட உயிரை விட துணிந்த வேதாவை அதட்டி இழுத்து வந்தார் மாணிக்கம். செந்தாழினியின் கழுத்தில் மஞ்சள் கயிறை பார்த்து திகைத்து நின்றனர் இருவரும்.

அன்னையின் முன் தலை கவிழ்ந்து அமர்ந்திருந்த தீரனையும் அவனையே உறுத்து விழிக்கும் செந்தாழினியை கண்ட ஊர் பெரியவர்கள் கண்டன குரலில் தீரனிடம்..

“என்ன தீரா இது..?” எனக்கேட்க பதிலின்றி மௌனமாய் நின்றான். செந்தாவிடம்..

“எங்க தீரனை தெரியுமா மா..? ஏற்..” என முடிப்பதற்க்குள் மஞ்சள் கயிறை கழட்ட போனாள் செந்தா. கமலா அவள் கையை பிடித்து..

“உன் கழுத்துல தாலி கட்டுனதுக்காவே என் மகன் உன் வீட்டுக்காரனாக முடியாது..உனக்கு விருப்பமிருந்தா வீட்டுக்கு வா..மேற்கொண்டு பேசி என்ன னு முடிவெடுப்போம்..விருப்பமில்ல னா இந்த கயிறை நாளைக்கு உண்டியல் ல நீயே போட்டுரு..” என கண்டிப்புடன் கூறியவரை மறுக்க மனமின்றி அமைதியானாள் செந்தாழினி. மேலும் ஊர் பெரியவர்கள்..

“என்ன தான் காலம் மாறுனாலும் நம்ம மண்ணுக்கு மக்களுக்கு னு இருக்கிற கலாச்சாரம் மாறாதப்பா..உங்க அப்பாரு இங்க உட்கார்ந்து சொன்ன இடத்திலிருந்து நாங்க சொல்றோம்..அத்தை மகளை கட்டுவ னு பாத்தா என்னென்னமோ கதை சொல்லி இந்த புள்ள கழுத்துல பொசுக்குனு கட்டிப்புட்ட..ஊரை பொறுத்தவரை நீ தான் அந்த புள்ளையோட புருஷன்..எப்பா மைனரு..நீ ஒருத்தன் பண்ண தப்புல இப்ப ரெண்டு பிள்ளைக வாழ்க்கை லோல்படுது..இனி நீயும் உன் குடும்பமும் இந்த ஊருக்குள்ள இருக்க கூடாது..உங்கள மொத்தமா தள்ளி வைக்குறோம்..ஒரே நாள் தான் டைம்..நாளைக்கு ஊரை விட்டே கிளம்பிடுங்க..அடுத்து இங்க வாப்பா..” என நிலன்யா மற்றும் ராஜீவனை அழைக்க தன் மாமனை ஏறிட்டாள் நிலா. சிறு அசைவின்றி நிலம் நோக்கி அமர்ந்திருப்பவனை கண்டு கண்கள் கலங்கியது. தன் உள்ளத்தில் நிறைந்திருந்தவனே இது அனைத்திற்கும் காரணம் என மனம் முழுவதும் துவேஷத்தை நிரப்பிக்கொண்டு அவர்களின் முன் நின்றாள்.

கற்பு என்பது உடல் சம்பந்தபடடது என இன்னும் அதே அறியாமையில் பெண்களை முடக்கும் இது போன்ற பஞ்சாயத்து கூட்டங்கள் எத்தனை அறிஞர்கள் வந்தாலும் திருந்த போவதில்லை என்பதாய் நிலாவின் கழுத்தில் தாலி கட்டினான் ராஜீவன்.

பலமாக அடி வாங்கியதில் உடல் வலித்தாலும், தன் நாடி நரம்புகளில் ஊறிப்போன தன்னவளை அடுத்தவரின் மனைவியாய் பார்க்க முடியாமல் மயங்கி சரிந்தான் வினுயுகன்.

“வினு…” என பதறியபடி அவனை தாங்கி பிடித்தார் மாணிக்கம்..வேதா மகனை மடியில் கிடத்தி அவன் கன்னம் தட்டி எழுப்ப..சிறிதும் அசைவில்லை அவனிடம். வினுவை பொறுத்தவரை அவன் வாழ்வின் இறுதி நொடி தன்னவளை மாற்றான் மனைவியாய் மணக்கோலத்தில் பார்த்தது.

நிலைமையை உணர்ந்த செந்தா தன் போனில் 108 க்கு அழைக்க, சில நிமிடங்களில் விரைந்து வந்த ஆம்புலன்சில் வினு அவன் பெற்றோருடன் தானும் ஏறினாள் செந்தா. கதவை மூடும் முன் ஒரு முறை தீரனை பார்த்தவள் பட்டென கதவை மூடினாள்.

இவையனைத்தும் தெரிந்தும் தெரியாதது போல காட்டிக்கொண்டாள் நிலன்யா. கழுத்தில் தாலி ஏறிய மறுநொடி எத்தனை யுகங்கள் எடுத்தாலும் மறக்கவியலாத யுகனை முற்றிலும் மறந்து தனக்காகவே வாழும் மாமன் மகன் அல்ல தன் தாயுமானவனுக்கு தன் காதலையே அர்பபணித்து புதிய பாதையில் அடியெடுத்து வைத்தாள்.

சதா பேச்சும் சிரிப்புமாய் இருக்கும் தீரனின் வீடு மயான அமைதியாய் ஆளுக்கொரு மூலையில் அமர்ந்திருந்தனர். தன் அறையில் படுத்தவாறே விட்டத்தை வெறித்து கொண்டிருந்தான் தீரன்.

சற்று முன் நடந்த நிகழ்வுகளை திரும்ப திரும்ப தன் மனதில் ஓட்டியபடி எங்கு தான் நிதானத்தை இழந்தோம் என தன்னையே அலசிக்கொண்டிருந்தான். அவனை பொறுத்தவரை வினுயுகன் சொன்னதை செய்து காட்டிவிட்டான் என்பதை விட நிலன்யாவின் அவன் பாலான ஆர்வமோ நேசமோ தீரனை பலமாக தாக்கியது. பிறந்ததிலிருந்து கைக்குள் வைத்து ஆகர்ஷித்த தன் குறிஞ்சி மலர் தப்பானவனை அதுவும் தன் பரம எதிரியை தேர்ந்தெடுப்பதா..? ஏன் இவள் புத்தி இப்படி பிறழ்ந்தது..? தீரன் காதலுக்கு எப்போதும் துணை நிற்பவனே அது தூய்மையானதாக இருப்பின்..ஆனால் இவளோ அறியா பருவத்தில் வந்த இனக்கவர்ச்சியில் போயும் போயும் படிப்பறிவில்லாத, ஊரே ஏசும் பொறுப்பற்ற ரவுடியான இவனை..ஐயோ என கூக்குரலிட்டது தீரனின் மனம். இவர்களை ஒதுக்கி செந்தாழினியை நினைக்கும் போதே உள்ளம் தீ பற்றி எறிந்தது.

அவளை முதன்முதலாய் அலுவலகத்தில் பார்த்த நொடி தன்னிலை மறந்து அவளையே கண் சிமிட்டாமல் பார்த்து உறைந்து நின்றது புத்தம் புது பரவச அனுபவமாய் இப்போதும் தித்திக்குதே..இதோ தனக்கென பிறந்தவளை கண்டுக்கொண்டதாய் அவன் கண்கள் அவளை இதய சிறையில் லாவகமாய் பூட்டி வைத்தனவே.

ஏலத்தில் அவள் திருப்பி கொடுத்ததை ஆழ்ந்து ரசித்தவன் அவள் கையை பற்றி பேசிய அரக்கனை வதம் செய்ய துடித்தவன் இன்று அதே கொடியவனை மணந்து தன்னிடமே வாழ்ந்து காட்ட போகிறேன் என சவால் விட்ட அந்த நொடி தீரன் தன் வசமிழந்து நிலாக்குட்டி, தன் குடும்பம் பின்னுக்கு தள்ளப்பட்டு அடுத்த கணமே உக்கிர நரசிங்கராய் மாறி தன் ஸ்ரீ தேவியை தன்னுடன் இணைத்துக்கொண்டான்.

அன்னையிடம் வாங்கிய அறை நிதர்சனத்தை புரியவைக்க கடமை தவறிய ஆண்மகனாய் உள்ளம் துடிக்க தன்னை தானே வேள்வி தீயில் போட்டு எரித்து கொண்டிருந்தான்.

நண்பனின் மனநிலையை புரிந்துக்கொண்ட ராஜீவன்..தன் மாமியாரிடம்..

“நிலன்யாவை நான் என் வீட்டுக்கு கூட்டிட்டு போறேன்..

இல்ல தம்பி..முறையா..” என சொல்ல வந்த மரகதத்தை இடையிட்டு..

“நமக்குள்ள எந்த முறையும் அவசியமில்ல..இவ இங்கேயே இருந்தா என் தீரனை நான் இழந்துடுவேன்..சோ..ப்ளீஸ்..” என நிலன்யாவின் கையை பற்றி வெளியேறினான். இந்த வீட்டின் செல்ல சீமாட்டி, அழகிய பிறை நிலா இன்று பொலிவிழந்து கட்டிய துணியோடு வாழ்க்கை நடத்த போவதை எண்ணி மனம் கேட்காமல் அவர்கள் பின்னால் விரைந்தார் மரகதம்.

தூணில் சாய்ந்து அமர்ந்திருந்த கமலா மகனின் ஆத்திரத்தில் அவன் செய்த பாதகத்தை நினைத்து கண்ணீர் சிந்தினார். தன் கணவர் இருக்கையில் இந்த ஊரே மெச்சும் படி வாழ்ந்த குடும்பம் இன்று தேவையற்ற அகந்தையால் தன் தலையில் தானே மண்ணை வாரி போட்டு கொண்ட சிறியவர்களை எண்ணி உள்ளம் குமைந்தது.

பல மணி நேரங்களாய் தன் பெற்றோரை தவிக்கவிட்டு மெல்ல கண் திறந்தான் வினுயுகன். சொந்த வேலையாக ஊருக்கு சென்றிருந்த பிரணவ் விரைந்து வந்தான். மாணிக்கம் மூலம் அனைத்தையும் கேள்விப்பட்டவனுக்கு நண்பனை நினைத்து மனம் வருந்தியது. தனக்கு மட்டுமே தெரிந்த வினுவின் காதலுக்கு முடிவுரை எழுதபட்டதை இனி எப்படி ஏற்றுக்கொள்வானோ என கலங்கி நின்றான் பிரணவ்.

நண்பனை கண்டதும் கண்கள் மின்ன அவனை பார்த்த வினு அதிக சிரமம் கொடுக்காது விரைவில் குணமாகினான். மறந்தும் தன் உணர்வுகளை வெளிக்காட்டாது தன் மனதினுள் ஆழ புதைத்தவன் புது பிறவி எடுத்தவன் போல சகஜமாக வலம் வர தொடங்கினான்.

காலங்கள் உருண்டோட தோவாளை ஊரையே ஒதுக்கி வைத்து தனக்கென ஒரு சாம்ராஜ்யத்தை ஏற்கனவே உருவாக்கியிருந்த வினுயுகன் இப்போது இன்னும் தீவிரமாய் அதை விஸ்தாரபடுத்தினான். படிப்பறிவு பட்டம் மட்டுமே மனிதனின் வாழ்வை மேம்படுத்தும் என்ற கூற்றை பொய்யாக்கி தோவாளை தவிர அதை சுற்றியுள்ள சிறு நகரங்களில் தன் ஆட்டோமொபைல் ஸ்பேர் பார்ட்ஸ் விற்பனை கிளைகளை நிறுவியவன் பல கருத்தரங்குகள், கல்லூரிகளுக்கு இது சம்பந்தமாக விரிவுரையாற்றி வந்தான். அவனின் எளிதாக புரிய வைக்க கூடிய பாங்கும், பிழையில்லாமல் அலட்டலின்றி பேசும் ஆங்கிலம் கலந்த தமிழ் உரைகளும், பார்த்ததும் மனதில் பதியும் வசீகர ஆண்மகனாய் பல இளம் கன்னிகளின் கனவு நாயகனாய் வலம் வருபவனின் கண்கள் கறுப்பு கண்ணாடிக்கு பின்னால் ஒளியிழந்து தன் பிறையை தேடும் குழந்தையாய் இருப்பது ப்ரணவ் மட்டுமே அறிந்த ஒன்று.

நிலன்யாவும் படிப்பை முடித்து நிலா விருந்தக முழு பொறுப்பை தன் கையில் எடுத்திருந்தாள். வழக்கம் போல அவளுக்கு துவார பாலகர்களாய் கணவனும், மாமன் மகனும் உதவிட நிலா விருந்தகம் மேலும் விருத்தியடைந்து தோவாளை கடைப்பகுதியில் ‘கேலக்ஸி க்ரில் டைன்-இன் ரெஸ்டாரன்ட்’ என 5 நட்சத்திர ஓட்டலை ஆரம்பித்து சுற்றுலா பயணிகள் தங்குவதற்கு ஏற்ற அறைகள், விஸ்தாரமான நீச்சல் குளம், குழந்தைகளுக்கான விளையாட்டு பூங்கா, பெரியவர்களுக்கான ஸ்பா என சுமார் 3 ஏக்கர் பரப்பளவில் துறை வாரியாக பிரித்து அதற்கான இளம் வல்லுநர்களை நியமித்து, ஆளுமைத்திறனும், நிமிர்வும், நேர்மையோடு உழைக்கக்கூடிய இளைஞர்களை மேற்பார்வையிட செய்து இவர்கள் அனைவரோடும் சக தொழிலாளியாக சில நேரங்களில் முதலாளியாக தட்டிக்கொடுத்து வேலை வாங்கி ஆரம்பித்த சில மாதங்களுக்குள் அனைவரும் பாராட்டும் வகையில் மக்கள் கூட்டம் நாளுக்கு நாள் அலை மோத செய்த தன் சிறு பெண்ணின் வளர்ச்சியை மெய் மறந்து ரசித்தான் விழிதீரன்.

மருந்துக்கும் தன் பழைய வாழ்க்கையை நினைத்து வருந்த ஒரு நொடி கூட இடம் தராமல் தங்களுக்கான பாதையை அழகாக செப்பனிட்டு அதில் முன்னேறிக்கொண்டிருக்கும் சேரா காதலர்களின் வளர்ச்சியில் ஊரே வியந்து நோக்கியது.

விருப்பமின்றி தன்னை சுற்றி போட்ட வேலியை ஒதுக்கி திருநெல்வேலிக்கு மாற்றல் வாங்கிக்கொண்டு தனியொருவளாய் தன் வழியில் பயணித்தாள் செந்தாழினி.

அன்று மலையில் சந்தித்தோடு சரி, வேறெங்கும் தெரிந்தோ தெரியாமலோ ஏன் யத்தேச்சையாக கூட ஒருவரையொருவர் நேரில் சந்தித்து கொள்ள வில்லை இவ்விரு ஜோடிகளும். தன் ஆத்திரத்தால் அவளுக்கு தான் செய்த பாதக செயலால் தீரனும் செந்தாவை விட்டு தள்ளியே இருந்தான். மின்னல் வேகத்தில் சீறிக்கொண்டு பாயும் இரு சிறுத்தைகளின் மோட்டார் பந்தயத்தை ஊரே வியந்து நோக்கும் தருணங்கள் இனி காண கிடைக்காதென வருடா வருடம் நடக்கும் தசரா திருவிழாவில் மட்டும் கலந்து கொண்டு தன் உயிருக்கும் மேலாக நேசித்த மோட்டார் பந்தயத்திற்க்கு அன்றோடு முழுக்கு போட்டிருந்தான் விழிமகன். திருமணத்திற்கு பிறகு மோட்டார் பைக்கை தீண்டாது கேப், ஆட்டோ என உழன்று கொண்டிருந்த மனைவிக்கு புத்தம் புது மாருதி ப்ரான்கஸ்(Maruthi Nexa Fronx) காரை வாங்கி கொடுத்திருந்தான் ராஜீவன்.

நிலன்யாவிற்கு தன் உயிர் நண்பனை வாழ்க்கை துணையாய் தேர்ந்தெடுத்ததில் தவறில்லை எனும்படியாக இருவரின் உறவும் தெளிந்த நீரோடையாய் பயணித்தது. சொந்தமாக வைத்திருந்த ஜவுளி கடையை காலை முதல் மதியம் வரை கவனித்து கொண்டு மனைவியின் புது 5 ஸ்டார் ஹோட்டலை மேற்பார்வையிட்டு இரவு இருவரும் ஒன்றாக வீடு திரும்புவதை வழக்கமாக வைத்திருந்தனர் ராஜீவன் மற்றும் நிலாவும். தன்னை சுற்றியுள்ள சகவயதுடையோர் திருமணம் முடித்து ஜோடி ஜோடியாக வலம் வரும் போது தன் மகன் மட்டும் தனியொருவனாய் பெயருக்கு வாழ்ந்து கொண்டிருப்பதை நினைத்து நினைத்தே கமலாவிற்கு உடம்பு சரியில்லாமல் போனது. தன் தாயின் கவலையை அறிந்த தீரன் அவரை தேற்றி தனக்கான வாழ்வு இனி உங்களுடன் மட்டுமே என திட்டவட்டமாக கூறி ஆன்மீக வழியில் தன்னை ஈடுபடுத்திக்கொண்ட மகனை நெருங்க முடியாமல் அமைதியாகி போனார் கமலா.

தொடரும்.
 
Top Bottom