சிந்தூரா அவனைப் பார்த்தபடி கண்ணீரைத் துடைத்துக் கொண்டாள்.
உனக்கும் ஆழினிக்கும் இன்னும் எதுவும் சரியாகவில்லைனு எனக்குப் புரியுது.
நான் வேணும்னா ஆழி கிட்ட போய் பேசவா? நான் சொன்னா அவ கேப்பா.”
“நீ செஞ்ச வரைக்கும் போதும் அக்கா. என் வாழ்க்கையைநான் பார்த்துக்கிறேன். நீ உன் குடும்பத்தை மட்டும் பாரு.”
என்று அழுத்தி சொல்லிய செழியன், கடைக்குச் செல்ல மனமில்லாமல் மீண்டும் தன்னுடைய அறைக்குச் சென்றான்.
அங்கே அவன் பார்த்த காட்சி அவனை ஒரு நொடி அதிர வைத்தது.
ஆழினி அழுதுகொண்டே தன்னுடைய லக்கேஜ்கள் அனைத்தையும் சூட்கேஸில் எடுத்துவைத்துக் கொண்டிருந்தாள்.
அதைப் பார்த்ததும் செழியனுக்கு ஒன்றுமே புரியவில்லை. ஏற்கனவே தன்னுடைய அக்காவின் மேல் இருந்த கோபம், இப்போது ஆழினியின் செயலைப் பார்த்ததும் இன்னும் பலமடங்கு அதிகமானது.
“என்ன பண்ணிட்டு இருக்க?” என்று அவன் சத்தமாகக் கேட்க, ஆழினி தூக்கிவாரிப் போட்டது போல அவனைப் பார்த்தாள்.
சற்று பயத்துடன் அவனைப் பார்த்தவள், ‘தவறு செய்தவர்களே தைரியமாக இருக்கும்போது நமக்கு மட்டும் ஏன் பயம்?’ என்றுத் தன்னைச் சமாளித்துக் கொண்டு நிமிர்ந்து நின்றாள்.
“நான் கிளம்புறேன்.” என்றாள்.
“ பங்ஷன் முடியுற வரைக்கும் நீ இருன்னு உன்கிட்ட எத்தனை தடவைதான் சொல்லுறது?”
“நீங்க எதுவும் சொல்ல வேண்டாம்!”
என்று அவன் பேச்சை இடைமறித்தாள் ஆழினி.
“நீங்களும் உங்க அக்காவும் பேசிட்டு இருந்ததை நான் கேட்டேன். பிடிக்காத வாழ்க்கையை எதுக்குப் பிடிச்சு வைக்கணும்னு நீங்க கேட்டீங்கதானே? உங்களை யாரும் பிடிச்சு வைக்கச் சொல்லல. என்னை விட்டுடுங்க.”
அவள் குரலில் கோபத்தைவிட வலி அதிகமாக இருந்தது.
“லூசு மாதிரி உளறாதே, ஆழி.”
“ஆமா நான் லூசு தான்?”
என்றவளின் கண்களில் கண்ணீர் வழிந்தது. அதைத் துடைத்தவாறே,
“இன்னும் நீங்க சொல்றதையெல்லாம் நம்பிட்டு இருக்கேனே. நான் லூசு தான்.”
“இங்க பாரு ஆழி… நீ எப்ப பார்த்தாலும் அரைகுறையா எதையாவது கேட்டுட்டு கோபப்படுற. நான் சொல்றத கொஞ்சமாவது முழுசா கேளு.”
“என்ன? என்னை சமாதானப்படுத்த ஏதாவது சொல்லலாம்னு பார்க்குறீங்களா?”
“நாங்க பேசுறதை முழுசா கேட்டிருந்தா, உனக்கே எல்லாம் புரிஞ்சிருக்கும்.”என்று கூறியவன் அவளருகில் சென்று அவளது கையைப் பிடித்தான்.
“இங்க பாரு, ஆழி… உன்னை எனக்கு ரொம்பப் பிடிக்கும்.” என்று மென்மையாகக் கூற.
ஆழினியோ சிரித்தாள்.
“எதுக்கு இப்படி சிரிக்கிற?” என்று சற்று எரிச்சலுடன் வினவினான் செழியன்.
“என்னை பிடிக்கும்னு சொல்றீங்களே… பிடிக்கிறவங்களை இப்படித்தான் டார்ச்சர் பண்ணுவாங்களா? இந்த வீட்டில நான் இருக்கேன்னா இல்லையா? எனக்கு என்ன பிடிக்கும்? என்ன பிடிக்காது? எதுவுமே கண்டுக்க மாட்டீங்க உங்களுக்கு மனைவியா நான் என் கடமையை எல்லாம் செய்தேன். ஆனால் கணவனா நீங்க எனக்கு எதுவுமே செய்யல.
ஆனால் என் மேல உங்களுக்கு காதல் இருக்குனு நீங்க சொன்னா, ஆமா, ஆமான்னு கேட்டு நான் நம்பனும் அதானே. இல்லன்னா நான் லூசு ! பைத்தியக்காரி. அப்படித்தானே.” என்று அவனது கையை உதறியவாறே கூற.
அவனோ அவளது கைகளை இறுக்கமாகப் பிடித்துக் கொண்டான்.
“முதல்ல இங்க பாரு, ஆழி.”
அவள் அவனைப் பார்த்தாள்.
“அக்காதான் நமக்குள்ள ஏதோ பிளான் பண்ணிட்டாங்க.
நான் உன்னை ரொம்ப லவ் பண்றேன். இது நடிப்பு இல்ல.”
“ ப்ச்! அண்ணி தான் நான் இந்த வீட்டில தனிமையில் இருக்கும்போது எனக்குத் துணையாக இருந்தாங்க. எனக்குன்னு ஒரு சப்போர்ட்டே அவங்கதான். அவங்க ஏன் இப்படிப் பண்ணப் போறாங்க?”
இன்னைக்கு கூட அவங்க தானே எனக்காக சப்போர்ட் பண்ணிப் பேசினாங்க. இன்னைக்கு மட்டுமல்ல… நான் வாழ்க்கையில கஷ்டப்பட்ட ஒவ்வொரு நிலையிலும் அவங்கதான் என் கூட இருந்தாங்க. அப்படிப்பட்டவங்களை ஏதாவது சொன்னீங்க நான் மனுஷியா இருக்க மாட்டேன்.” என்ற ஆழினியை அயர்ந்துப் போய் பார்த்தான்.
“என்ன அமைதியா இருக்காங்க? ஒண்ணும் பேச முடியலையா?” என்று எகத்தாளமாகக் கேட்டாள் ஆழினி.
“அப்படி என்ன இந்த வீட்டில் உனக்கு பிரச்சனை இருந்துச்சு? எங்க அக்கா வந்து அப்படியே உன்னைக் காப்பாத்திட்டாங்க!” என்று எரிச்சலுடன் கேட்டான் செழியன்.
“ எந்தச் சந்தர்ப்பத்திலாவது புருஷனா நீங்க எனக்குத் துணையாக இருந்தீங்களா? நான் என் குழந்தையை இழந்து தவிச்சப்போ, எனக்கு ஆறுதலாக இருந்தது அவங்கதான். அன்னைக்குக்கூட உங்களுக்கு என் மேல கோபம்தானே வந்துச்சு?” என்று எதிர்க்கேள்வி கேட்டாள் ஆழினி.
“அடிச்சேன்னு வச்சுக்கோ! இன்னிக்குக்கூட நீ செஞ்சதை என்னால மன்னிக்க முடியாது. நீ கன்சீவ் ஆகியிருக்கேன்னு சொன்னியா? எனக்குத் தெரியுமா? இல்ல வீட்டில் எங்க அம்மாவுக்குத் தெரியுமா? எங்க பெரியம்மாவுக்குத் தெரியுமா? அவங்களுக்கெல்லாம் தெரிஞ்சிருந்தா, உன்னை எப்படி பொத்திப் பொத்திப் பார்த்திருப்பாங்க! வீக்கா இருந்து அபார்ஷன் ஆயிடுச்சு. நீ மாசமா இருக்கிறதைக்கூட எங்ககிட்ட சொல்லாம மறைச்சிருந்துட்டு, அக்கா துணையாக இருந்தாங்கன்னு சொல்ற. உனக்கு குழந்தை உண்டானது புடிக்கல. அதான் எங்கக் கிட்ட சொல்லாமல் மறைச்சிட்ட.
“அதெல்லாம் இல்ல. வீட்ல தனுவை நினைச்சு எல்லோரும் கவலையா இருந்தாங்க. அப்போ மாசமா இருக்கேன்னு சொன்னா ஏதாவது தப்பா நினைச்சுப்பாங்க. கொஞ்சம் நாள் போகட்டும்னு அண்ணிதான் சொன்னாங்க. அவங்க எனக்கு எது சொன்னாலும் நல்லதுக்குத்தான்.” என்றாள்.
அவள் சொன்னதைக் கேட்டதும் தலையில் கை வைத்துக் கொண்டான் செழியன்.
‘அக்கா… நல்லாவே என் வாழ்க்கையில் நீ விளையாடி வச்சிருக்க!’ என்று மனதிற்குள் குமுறியவன்,
“இன்னும் உங்க அண்ணி என்ன செஞ்சாங்க? அதையும் சொல்லு.” என்றான்.
“அவங்களா? நான் குழந்தையை இழந்து நிராதரவா இருந்தப்ப என்னை நல்லாப் பார்த்துக்கிட்டாங்க.
உங்களை வேணாம்னு விட்டுட்டுப் போன தனு திரும்பி வீட்டுக்கு வந்ததும் நான் ரொம்ப பயந்தேன். அப்ப எனக்கு ஆறுதலாக இருந்தது அவங்கதான்.
‘நீ எதுக்கும் பயப்படாதே. நீ தான் இந்த வீட்டு மருமக. உன்னை யாராலும் எதுவும் பண்ண முடியாது. நீ எப்பவும் போல இரு. நீ பயந்து ஒதுங்கி இருந்தா எல்லாரும் ஏறி மிதிப்பாங்க. என் தம்பியை மட்டும் அவப்பக்கம் திரும்பாமல் பார்த்துக்கோ. சின்ன வயசுல இருந்து அவனுக்கு தனுனா ரொம்ப இஷ்டம். நீ அழுது வடிஞ்சுகிட்டு இருந்தின்னா அப்புறம் உன்னை திரும்பி பார்க்க மாட்டான். நீ எப்பவும் போல பிரெஷா இருன்னு சொல்லி எனக்கு
தினமும் அவங்கதான் எனக்குப் பூ கட்டித் தந்து, வச்சுக்கோன்னு சொல்வாங்க.”
அவள் சொன்னதைக் கேட்டதும் செழியன் அமைதியாகிவிட்டான்.
அந்த நேரத்தில் அவள்மீது தனக்கு இருந்த கோபம் அனைத்தையும் நினைத்துப் பார்த்தான்.
‘ஒருத்தி வாழாமல் வந்து இங்கே அவதிப்பட்டுக்கிட்டு இருக்கும்போது, இவள் மட்டும் அலங்காரமாக இருக்கிறாளே’ என்று எத்தனை முறை கோபப்பட்டிருக்கிறேன்!
இப்போது நினைத்துப் பார்த்தபோதுதான் அவனுக்குப் புரிந்தது.
‘அவள் தன்னை அலங்கரித்துக் கொண்டது சந்தோஷத்திற்காக அல்ல. அதுவும் அக்காவுடைய வேலை.
இங்கே இவகிட்ட புருஷனுக்காக அழகா இருன்னு சொல்லிட்டு, அங்க எல்லாரும் இருக்கும்போது இவளை மட்டமா பேசியிருக்கா. நாமளும் அமைதியா இருந்திருக்கோம். அக்காவைப் பற்றி அவளுக்கு எப்படி புரிய வைப்பது.’ என்று எண்ணியவனுக்கு தலைசுற்றியது.

