மௌனம் -18
“பிடிக்காத வாழ்க்கைக்காக எதுக்கு போராடணும்?” என்று செழியன் கூறியதைக் கேட்டு அதிர்ந்து நின்ற சிந்தூரா, அடுத்த நொடியே தன்னைச் சமாளித்துக் கொண்டாள்.
“ஆழிக்கு உன்னைப் பிடிக்கல. அது ஏற்கனவே தெரிஞ்ச விஷயம் தானடா. அதுக்காக நடந்த கல்யாணம் இல்லன்னு ஆயிடுமா? அதுவும் கல்யாணம்னு முடிவானத்துக்குப் பிறகு அம்போனு விட்டுட்டுப் போன தனு இப்போ உனக்கு நல்லவளாகிட்டாளா?” என்று எரிச்சலாக வினவினாள் சிந்தூரா.
“அவதான் இப்போ திரும்பி வந்துட்டாளே. அதுவும் இல்லாம, அவ என்னோட அத்தை மக. அவ கஷ்டப்படுறதை என்னால பார்த்துட்டு இருக்க முடியுமா?” என்றான் செழியன்.
“அதுக்காக அவளை கல்யாணம் பண்ணிக்கப் போறியா?” என்று அதிர்ச்சியுடன் கேட்டாள் சிந்தூரா.
செழியனோ பதில் எதுவும் சொல்லாமல் அவளை அமைதியாகப் பார்க்க.
“டேய்… ஆழினி பாவம்டா.” என்றாள் சிந்ததூரா.
“ ஓஹோ! ஆழினி மேல ரொம்பத் தான் அக்கறை?” என்று நக்கலாகக் கூறினான் வியன் செழியன்.
சிந்தூரா ஒன்றும் புரியாமல் தம்பியைப் பார்த்தாள்.
“நடிக்காதக்கா எல்லா உண்மையும் எனக்குத் தெரிஞ்சிருச்சு. நீயும் சொல்லுவ, சொல்லுவன்னு பார்த்தேன். ஆனா இன்னமும் நடிச்சுக்கிட்டு இருக்க.”
“என்ன உண்மை?” என்று பதற்றமாகக் கேட்டாள் சிந்தூரா.
“எனக்கு ஆழினி எவ்வளவு பிடிக்குமோ, அதே மாதிரி அவளுக்கும் என்னைப் பிடிக்கும். அது உனக்கு நல்லாவே தெரியும். அதைத் தெரிஞ்சுக்கிட்டே என்கிட்ட அவளுக்கு என்னைப் பிடிக்கலன்னு சொல்லிட்டு,
அவக்கிட்ட எனக்கு அவளைப் பிடிக்கலன்னு சொல்லிருக்க? எதுக்குக்கா இந்த வேலை பார்த்திருக்க?”
“என்னடா உளறுற?” என்று சிந்தூரா அதிர்ச்சியுடன் கேட்டான்.
“உளறல அக்கா! உண்மையைத் தெரிஞ்சுக்கிட்டேன். இனிமே நீ என்னை ஏமாத்தவும் வேண்டாம்… நடிக்கவும் வேண்டாம்.”
“டேய்…” என்று அதிர்ச்சியுடன் ஏதோ சொல்ல வந்த சிந்தூராவை கையசைத்து தடுத்தான் செழியன்.
“எதுவும் சொல்லி என்னை ஏமாத்தனும்னு நினைக்க வேண்டாம்க்கா.
நீ இப்படி என் வாழ்க்கையில விளையாடுவேனு நினைச்சுப் பார்க்கக் கூட என்னால முடியல.
நான் உன் கூடப் பிறக்கலைனாலும் நான் உன் தம்பி தானே? அப்படித்தானே உன்னை நான் அக்காவா நினைச்சேன்? நீ என்ன சொன்னாலும் அது தான் நான் செய்வேன். எனக்கு நீ தானே முக்கியம். ஆனால் நீ எனக்குத் துரோகம் பண்ணியிருக்கக் கூடாது.
“டேய் செழியா… இப்படியெல்லாம் பேசாதடா.”
“நான் பேசல அக்கா… நீ தான் என்னைப் பேச வைக்கிற.” என்று குரல் உடைய கூறினான் வியன் செழியன்.
“நானும், ஆழியும் உனக்கு என்ன துரோகம் பண்ணிட்டோம்?”
“ டேய் தம்பி! நான் யாருக்கும் துரோகம் பண்ணணும்னு நான் நினைக்கல. நான் பண்ணினது தப்புதான். ஆனா அது உன் மேல இருக்கிற பாசத்துல பண்ணினது.”
“எதே என் மேல உள்ள பாசமா? என் காதலைப் பிரிக்கிறது தான் எனக்கு செய்யுற நல்லதா? ஆழினிக்கு என்னப் பிடிக்கலைன்னதும் என் மனசு எவ்வளவு கஷ்டப்பட்டதுன்னு உனக்குத் தெரியுமா?
உன் நாத்தனார் அவளும் நம்மளோட வளர்ந்தவ தானே. அவளுக்கு இந்த கல்யாணத்துல விருப்பம் இல்லை வேற யாரையோ விரும்புறேன்னு உன்கிட்ட சொல்லி இருக்கா. ஆனால் அவளுக்கும் அநியாயம் பண்ணியிருக்க. அவளும் இன்னைக்கு வாழ்க்கையைத் தொலைச்சிட்டு நிக்குறா?”
“அவ சின்ன பொண்ணு. அவளுக்கு ஒன்னும் தெரியாது. உங்க ரெண்டு பேருக்கும் நல்லது செய்யணும்னு தான் இப்படி பண்ணிட்டேன்.”
“அக்கா ஏதாவது சமாளிக்கணும்னு பொய்யுக்கு மேல பொய்யா சொல்லாதீங்க.
உண்மையிலே எங்க ரெண்டு பேரு மேல அக்கறை இருந்தா இப்ப நாங்க ரெண்டு பேரும் பேசிட்டு இருக்கும்போது உனக்கு ஏன் கோபம் வருது. உன் மேல எனக்கு ஒரு மரியாதை, பாசம் எல்லாம் இருக்கு. அதை நீயே கெடுத்துக்காதே. தயவு செஞ்சு இனிமேல் என்கிட்ட எதுவுமே பேசாதே. எந்த விளக்கமும் கொடுக்க வேண்டாம்.” என்று கோபமாக செழியன் பேச.
“ டேய் நான் சொன்னதெல்லாம் பொய்யாகவே இருக்கட்டும். ஆனால் உன் மேல இருக்கிற பாசத்துலதான் இப்படி பண்ணிட்டேன்.”என்ற சிந்தூரா கண்ணீருடன் அவனை ஏறிட்டாள்.
செழியனோ கோபத்தை அடக்கப் படாதபாடு பட்டான்.
“நம்ம வீட்ல நான் சொல்றதைத்தான் பாட்டி, அப்பா, சித்தப்பா, சித்தி, மய்யூ, தனு, அத்தை, மாமா, அத்தான் எல்லோரும் கேட்பீங்க. ஆனால் எங்க அம்மா உனக்கு கல்யாணம் ஆனதும் நீ உன் பொண்டாட்டி சொல்றதைதா தான் கேட்பேன்னு அடிக்கடி சொல்வாங்க.
அப்புறம் மய்யூவும் அவளோட அண்ணி பேச்சைத் தான் கேட்பான்னு சொன்னாங்க.
அதைக் கேட்டதுல இருந்து என் மனசு எவ்வளவு வலிச்சதுத் தெரியுமா?
வெளியிலிருந்து யாராவது வந்து என்னை மதிக்காம போயிட்டா என்னாகும். அதுவே தனுவை கல்யாணம் பண்ணிக்கிட்டா எப்பவும் போல என் பேச்சு எடுபடும்னு நினைச்சு தான் இப்படி பண்ணிட்டேன்.”
என்ற சிந்தூராவை அயர்ந்துப் பார்த்தான் செழியன்.
“அக்கா… நீ புரிஞ்சுதான் பேசுறியா? இல்ல புரியாம பேசுறியா?”
அவள் அமைதியாக இருந்தாள்.
“பெரியம்மா சும்மா கிண்டலுக்குச் சொல்லியிருப்பாங்க. அதை மனசுல வச்சுக்கிட்டு இப்படி மூணு பேரோட வாழ்க்கையையும் வீணாக்குறீங்கன்னு உனக்குத் தெரியுமா?”
“என்னடா வேணும்? நீ ஆசைப்பட்ட பொண்ணைத்தான் கல்யாணம் பண்ணிக்கிட்டு இருந்த. அப்புறம் என்ன?”
“அதுதான் பிரச்சனை அக்கா!”
என்ற செழியனின் குரல் சற்றுக் கடினமானது.
“நான் ஆசைப்பட்ட பொண்ணைக் கல்யாணம் பண்ணிக்கிட்டாலும், நான் நினைச்ச மாதிரி வாழல
நம்ம தனுவோட வாழ்க்கையும் இப்போ கேள்விக்குறியா இருக்கு.
நீ உன் மதிப்பு, மரியாதைக்காக எங்க வாழ்க்கையையே அழிச்சுட்ட. இப்பவாது உனக்கு புரியுதா?” என்று செழியன் வார்த்தைகளால் விளாச.
சிந்தூராவின் கண்களில் கண்ணீர் தேங்கியது.
“நான் செஞ்சது தப்பு தான். மன்னிச்சிடு செழியா.”
“நான் மன்னிக்கணும்னா இனி உன் வீட்டில்தான் உனக்கான வாழ்க்கையைப் பார்த்துக்கிட்டு இருக்கணும்.
நல்லதா, கெட்டதா… அதெல்லாம் நீயே பார்த்துக்கோ. அதுதான் உனக்கு நல்லது.
உனக்கான உண்மையான மரியாதை நீ எப்படி நடந்துக்கிறேன்னு பொறுத்துதான் கிடைக்கும். அத விட்டுட்டு எங்க வாழ்க்கையில ஏதாவது பிரச்சனையை உண்டு பண்ண நினைச்சீங்கன்னா அவ்வளவுதான்.” என்று கடுமையாக கூறினான் வியன் செழியன்.
“நீ என்னை விட்டுப் போயிடுவியா செழியா?”என்று அவனைப் பார்த்தபடி மெதுவாகக் கேட்டாள் சிந்தூரா.
அந்தக் கேள்வியில் செழியனின் கோபம் மொத்தமாகக் கரைந்தது.
“அக்கா… உன்னை விட்டுப் போகப் போறேன்னு நான் எப்போ சொன்னேன்?”
உன் வாழ்க்கையைப் பார்த்துக்கிட்டு நீ சந்தோஷமா இருக்கணும்னுதான் சொல்றேன். அதுதான் உனக்கு நல்லது. நான் எங்கிருந்தாலும் உனக்கு தம்பி தான்.”

