எந்தன் சிறகுகள் உனக்காக 💕 அத்தியாயம் 21

அத்தியாயம் 21

அந்த மூன்று மாடி ஆடம்பர வீடு பொதுப்பொலிவுடன் கண்ணை பறித்தது. ஸ்ரீதரும் காயத்ரியும் சென்னை வந்து 15 நாட்கள் ஓடியிருந்தது.

காயத்ரிக்கு பிடித்த வீட்டை வாங்கி, இன்று புதுமனை புகுவிழாவும் இனிதே நடந்து முடிந்திருந்தது.

கமலமும், பத்மினியும் ஐங்கரனுடன் வந்திருந்தனர். அடுத்த நாளே கிளம்பும் திட்டத்துடன்.

காயத்ரியும் டெலாய்ட் நிறுவனத்தின் சென்னை கிளையில் வேலைக்கு செல்ல ஆரம்பித்திருந்தாள்.

முகம் மகிழ்ச்சியில் விகாசிக்க, விழாவிற்கு வந்திருந்தவர்களை ஸ்ரீதருடன் புன்னகை முகமாக வழியனுப்பிக் கொண்டிருந்த அவளின் பார்வை கணவனில் தான் அழுத்தமாக, ஆராய்ச்சியாக பதிந்திருந்தது.

இந்த 15 நாட்களில் வீட்டில் இருக்கும்போது அவளிடம் பழகும் ஸ்ரீதருக்கும், வெளியில் சென்றால் அளவளிடம் அவன் நடந்து கொள்ளும் விதத்திற்கும் ஏணி வைத்தாலும் எட்டாது என்னும் வகையில் மாற்றங்கள்.

வீட்டில் கூட அவன் நடவடிக்கையில் வித்தியாசம் தான். ஊரில் சிங்காரி, காயூகுட்டி என்று அவளே தான் உலகம் என்று கொஞ்சி கொண்டாடியவன், சென்னை வந்த பின்னர் வேலை வேலை என்றே சுற்றுகின்றான்.

அதிலும் வீட்டில் இருக்கும்போது இருக்கும் புன்னகையும் இலகுத்தன்மையும் வெளியே சென்றான் என்றால் மறைந்துவிடும். அதற்கு பதிலாக ஒருவகையான விரைப்பும், இறுக்கமும் அவனிடம் ஒட்டிக் கொள்ளும்.

அதிலும் அவன் பி.ஏ மற்றும் மாளவிகா உட்பட ஒரு சிலரிடம் நன்றாக இயந்து நடப்பவன், மற்றவர்களிடம் சற்று ஓட்டா தன்மையாகவே நடந்து கொள்வான்.

சில நேரம் காயத்ரியை வெளியே அழைத்துச் சென்றாலும் அவன் பிசினஸ் பார்ட்னர்ஸ், மாளவிகாவுடன் பேசும் இணக்கம் கூட தன்னிடம் இருந்ததில்லை என்று அவளுக்கு தோன்றும். ஆக மொத்தம் சென்னைக்கு வந்து மாமா மாறிவிட்டது என்பது காயத்ரியின் கணிப்பு.

ஆறு வருடங்கள் முன் நான் மட்டுமே உலகமாக இருந்த என் மாமாவின் வாழ்வில், இன்று பிசினஸ், காசு, பணம், அந்தஸ்து இது தான் உலகமாகி போனதா என்ற அதிருப்தி வந்திருந்தது காயத்ரிக்கு.

விசேஷத்திற்கு வந்தவர்கள் அனைவரையும் அனுப்பிவிட்டு, கமலம் பத்மினி மற்றும் ஐங்கரனை கவனித்து, அவர்கள் அறையில் அனைத்தையும் சரிபார்த்துவிட்டு,

தங்களுக்கு என்று இருந்த அறைக்குள் காயத்ரி நுழைய, அவளை பின்னிருந்து கட்டிக் கொண்ட ஸ்ரீதர் அவள் கழுத்தில் முத்தம் வைத்து “ஓய் சிங்காரி!.. ஹாப்பியா?…” என்று கேட்க

அவன் ஸ்பரிசத்தில் உடல் சிலிர்த்தவள் “ம்ம்!” என்று சொல்ல

“என்னடி சுருதியே இல்லாம ம்ம் என்ற.. நாளைக்கு அமிர்தானு ஒரு பொண்ணு வரும்.. இன்டீரியர் டிசைனிங், பர்னிச்சர்ஸ் என்ன வேணுமோ உன் விருப்பத்துக்கு சொல்லு.. பக்காவா பண்ணி கொடுத்துடுவா…” என்றவன்

அவளை திருப்பி அவளின் நெற்றி பொட்டில் அழுத்தி முத்தம் வைத்து “ரொம்ப டயர்டா இருக்கு.. தூங்கலாமா…” என்று கேட்க

அவன் நெற்றி முத்தத்தில் இமை மூடி, நெகிழ்ந்து நின்றவள் மனமும் உடலும் மேலும் அவன் இதழ் அச்சாரங்களும் இறுகிய அணைப்பும் வேண்டும் என்று ஏங்க, அவனோ தூங்கலாமா என்று கேட்க மனம் சற்று வாட்டமானது. இங்கு வந்ததிலிருந்து அவளோடு ஸ்ரீதர் ஆத்மார்த்தமாக கூடியது இரண்டு தடவைகள் தான்.

புது வீடு வாங்கியது, விடுபட்ட வேலைகள், கிரகப்பிரவேசம் என்று அவன் சுமைகள் புரிந்ததால் அதை பெரிதாக எடுக்கவில்லை.

ஆனால் இன்று எல்லாம் முடிந்து விட்டது தானே என்று தோன்றினாலும், அவளுக்கும் களைப்பாகத்தான் இருந்தது. அவளை விட ஓடி ஆடி அனைத்தையும் பார்த்தது அவன் என்பதால் மென்புன்னகை பூத்தவள் “ம்ம் தூங்கலாம்…” என்று சொல்ல, எப்போதும் போல் தன் பிரியமானவளை கட்டிக்கொண்டு உறங்கினான்.

இருவரும் அணைத்து கொண்டு தூங்கி ஒரு மணி நேரம் கடந்திருக்கும். ஸ்ரீதரின் தொலைபேசி அலறியது. தூக்கத்தில் இருந்து முழித்தவன் அழைத்தது யார் என்று பார்க்க, அது மாளவிகா. இந்த நேரத்தில் எடுக்கிறாள் என்றால் முக்கிய விடயம் என்று உணர்ந்தவன், அழைப்பை ஏற்று பேச, அவன் அலுவலக வேலை சம்மந்தமாகதான் மாளவிகா அழைத்திருந்தாள்.

ஸ்ரீதரும் அவளுடன் உரையாடிக்கொண்டே, தனது லேப்டாப் எடுத்தவன் அறையை விட்டு வெளியேறி, பக்கத்து அறைக்கு சென்று, வேலை செய்ய தொடங்கிவிட்டான். மாளவிகா அழைப்பிலேயே இருந்தாள்.

இவற்றையெல்லாம் பார்த்திருந்த காயத்ரிக்கு ‘என் கூட கொஞ்சிக்க நேரமில்ல.. டயர் தூங்கலாம்னு சொல்லிட்டு ஆஃபீஸ் வேலை என்கவும் உடனே போயாச்சு.. அதுவும் அந்த மாளவிகா என்றாலே தனி கவனிப்பு தான்.. பகல் முழுவதும் ஆஃபிஸ்ல தானே இருக்காரு, அப்போ இந்த வேலைகள செஞ்சா என்ன…’ என்று நிறைய ஆதங்கம். அவற்றை யோசித்தபடி மீண்டும் உறங்கிப் போனாள். காயத்ரி உறங்கும் வரை ஸ்ரீதர் அறைக்கு வரவில்லை. அதன் பின் வெகு நேரம் கழித்து வந்து தூங்கினான்.

அடுத்த நாள் ஸ்ரீதர் எவ்வளவு சொல்லியும் கேட்காமல் கமலமும் பத்மினியும் ஐங்கரனுடன் திண்டுக்கல் கிளம்பி விட, அவனும் வழக்கம் போல காயத்ரியை அவள் அலுவலகத்தில் இறக்கி விட்டவன், தனது அலுவலகத்திற்கு சென்றான்.

***********

மேலும் ஒரு வாரம் கடந்திருந்தது. ஸ்ரீதர் வேலை வேலை என்று ஓட, காயத்ரி தனது வேலை, அதன் பின் புதிய வீட்டை மாற்றி அமைப்பது என்று இருக்க, வெறுத்து போன காயத்ரி “மாமா இன்னைக்கு ஈவினிங் வெளிய போகலாமா?…” என்று அலுவலகம் செல்ல தயாரானவனிடம் கேட்க

தன் கைக்கடிகாரத்தை அணிந்து கொண்டிருந்தவன் தன்னவளின் இடை வளைத்து, தன்னுடன் இறுக்கிக் கொண்டு, அவள் கன்னத்தில் முத்தம் வைத்து “சாரிடி இன்னைக்கு ஈவினிங் மாளு கூட ஒரு முக்கியமான மீட்டிங்.. அடுத்த வாரம் போகலாம்…” என்று சொல்ல

அவனை ஆழ்ந்து பார்த்தவள் “ம்ம்!” என்று சொல்ல

அவள் பார்வையின் அர்த்தம் புரியாதவன் ம்ம் என்ற அவள் குரலின் பேதம் உணர்ந்து “கோச்சிக்காதடி.. என் சிங்காரில!…” என்று செல்லம் கொஞ்சி, முத்தங்கள் கொடுத்து, சமாதானம் செய்ய

அவனுக்காக புன்னகைத்தவள் “சரி மாமா! கிளம்பலாம்…” என்று சொல்ல

“காயூ குட்டி உனக்கு கேப் புக் பண்ணியிருக்கேன்.. நீ அதுல கிளம்பிடு..நான் மாளுவ பிக்கப் பண்ணனும்…”என்று ஸ்ரீதர் சொல்ல, அதற்கும் எதுவும் சொல்லாதவள் சரி என்று தலையை ஆட்டினாள்.

இப்போது காயத்ரியை புதிதாக ஒரு விடயமும் உறுத்துகின்றது. மாளவிகாவிடமிருந்து அழைப்பு வந்தால் தனியாக சென்று பேசுகின்றான். அதற்காக ஸ்ரீதரின் மேல் சந்தேகம் என்று இல்லை, தனக்கு தெரியாத விடயம் அவளுக்கு தெரிகின்றது, தன்னிடம் சரியாக பேசாதவன் அவளிடம் அலுவலக விடயமாக இருந்தாலும் மணிக்கணக்கில் பேசுகின்றான் என்ற பொஸசிவ்னஸ் வந்துவிட்டது.

அதற்கு இன்னும் வலுச் சேர்க்கும் விதமாக அன்று மாலை காயத்ரி அலுவலக தோழிகளுடன் ரெஸ்டாரன்ட் செல்ல, அங்கு ஏற்கனவே ஒரு மேஜையில் அமர்ந்து வெகு தீவிரமாக பேசிக் கொண்டிருந்தனர் ஸ்ரீதரும் மாளவிகாவும்.

தோழிகளுடன் ஓர் இடத்தில் அமர்ந்து கொண்டாலும் கண்கள் அவர்கள் மீது தான் இருந்தது. மாளவிகா மிஞ்சுவதும், ஸ்ரீதர் கெஞ்சுவது போலவும், பின் யோசனையுடன் அமைதியாக இருக்கும் மாளவிகாவின் கையைப் பிடித்து ஸ்ரீதர் எதுவோ நம்பிக்கையாக கூறுவது போலவும் என்று, அவர்கள் இடையேயான தீவிரமான உரையாடல் கேட்கவில்லை என்றாலும் அது நிச்சயமாக அலுவலக விடயம் இல்லை என்பது மட்டும் புரிந்தது.

சிறிது நேரம் கழித்து இருவரும் புறப்பட்டு சென்ற பின்னர் தான், காயத்ரியும் வீடு வந்து சேர்ந்தாள்.

ஆனால் ஸ்ரீதர் வீட்டுக்கு வரவே இரவு 11 மணியானது. அவன் வரும் வரை அவனுக்காக காத்திருந்தவள், ஆரம்பத்தில் எதுவும் கேட்காமல் அவன் சாப்பிட்டு விட்டு படுக்கைக்கு வரும் வரை அமைதியாக இருந்தாள்.

“மாளவிகா கூட மீட்டிங் *** ரெஸ்டாரன்ட்லயா?…” என்று கேட்க

“ஆமா.. உனக்கு எப்படி தெரியும்?…” என்று ஸ்ரீதர் கேட்க

“நானும் என் கொலீக்ஸ் கூட வந்திருந்தேன்…” என்று அவள் சொல்ல

“ஹேய் நீயும் வந்திருந்தியா.. நான் பாக்கவே இல்ல.. நீ வந்து பேசி இருக்கலாமே…” என்று அவன் சொல்ல

“நீங்க தான் ரொம்ப தீவிரமா மாளவிகா கூட பேசிட்டு இருந்தீங்களே என்ன பாத்திருக்க வாய்ப்பில்ல தான்.. ரொம்ப நேரம் பேசிட்டு இருந்தீங்க என்ன விஷயம்?…” என்று கேட்க

காயத்ரியின் கேள்வியில் ஒரு நொடி தடுமாறியவன் “அது ஆஃபீஸ் விஷயம்தான்…” என்று சொல்ல

அவனின் ஒரு நொடி தடுமாற்றத்தை குறித்துக் கொண்டவள் “ஓ.. நீ ரொம்ப மாறிட்ட மாமா…” என்று காயத்ரி சொல்ல

அவள் கன்னம் தாங்கியவன் “ஏய் சிங்காரி! அதெல்லாம் எதுவும் இல்லடி.. கொஞ்சம் கமிட்மெண்ட்ஸ் கூட அவ்வளவுதான்.. எனக்கு ஒரு வாரம் டைம் கொடு, உன்ன வெளியே கூட்டிட்டு போறேன்.. உன் கூட டைம் ஸ்பென்ட் பண்றேன்…” என்று சொல்ல

“ம்ம்!” என்று கேட்டுக் கொண்டவள் கணக்கில் புலி அல்லவா, சரியாக ஒரு வாரம் பொறுமையாக இருந்தாள்.

அதன்பின் ஒவ்வொரு நாட்கள் செல்ல செல்ல, காயத்ரியின் பொறுமையும் காற்றில் பறந்து சென்றிருந்தது.

ஸ்ரீதர் கூறியது போல் இல்லாமல் பத்து நாட்களாகியும் அவன் அப்படியேதான் இருந்தான். சொல்லப்போனால் இரண்டு நாட்களாக காயத்ரியின் முகம் பார்த்து பேசக்கூட அவனுக்கு நேரம் கிடைக்கவில்லை.

இதோ மணி நல்லிரவு ஒன்று. இன்று ஸ்ரீதரை சும்மா விடுவதில்லை என்ற கோபத்துடன் அவன் வருகைக்காக காத்திருந்தாள் காயத்ரி.

ஸ்ரீதரும் களைத்து சோர்ந்து போய், சற்று இறுக்கமான முகத்துடன் வீட்டினுள் நுழைந்தான்.

உள்ளே வந்தவன் உறங்காமல், நடு ஹாலில் சோஃபாவில் தீவிர முகபாவினையோடு அமர்ந்திருந்த காயத்ரியை பார்த்து அதிர்ந்து, பின் கனிவாக “காயூகுட்டி! நீ ஏன் இன்னும் தூங்கல?…” என்று கேட்க

“எப்படி தூங்க சொல்ற மாமா.. கட்டுன புருஷன் வீட்டுக்கு வாரதும் தெரியல, போறதும் தெரியல.. ஆனாலும் நான் நிம்மதியா தூங்கணும்ல…” என்று அடக்கப்பட்ட சீற்றத்துடன் காயத்ரி கேட்க

“ப்ச்!” என்று சலித்துக் கொண்டவன் “ஏய் சிங்காரி! என்னடி…” என்று அவளை நெருங்கப் போக

ஒற்றை கையை நீட்டி அங்கே நிற்கும்படி அவனை தடுத்தவள் “நீ எந்த சமாதானமும் சொல்லாத.. இப்படி இருக்கத்தான் உனக்கு பிடிச்சிருக்குனா என்ன எதுக்கு கல்யாணம் பண்ணி இங்க கூட்டிட்டு வந்த..? பேருக்கு பொண்டாட்டின்னு நான் இங்க இருக்கனும், நீ உன் வேலைய பாத்துட்டு சந்தோஷமா இருப்ப, அதுதானே…” என்று கேட்க

அவனின் கஷ்டம் அவனுக்கு தானே தெரியும். இவள் என்னவென்றால் அவன் சந்தோஷமாக வேலை வேலை என்று ஓடுவதாக கூற, இருந்த களைப்பிலும் அழுத்தத்திலும் “நானும் அதத்தான் நினைச்சேன்.. உடனே கல்யாணம் பண்ணிக்கிற ஐடியாவுலேயே நான் வரல.. அக்காவால தான் அவசரமா கல்யாணம் பண்ணி.. உன்னையும் கூட்டிட்டு வந்து, அவஸ்தபடுறேன்…” என்று வார்த்தையை விட்டு விட

காயத்ரிக்கோ உன்னை திருமணம் செய்து கொண்டதால் அவஸ்தை படுகின்றேன் என்று அவன் கூறியதாக புரிய, கண்கள் கலங்கி, அவனை அடிபட்ட பார்வை பார்த்தாள்.

அதை கவனிக்கும் மன நிலையில் ஸ்ரீதர் இருக்கவில்லை. அவன் நினைத்த காரியத்தில் ஒன்று கடைசி நொடியில் சிக்கலில் இருக்க, அந்த அழுத்தத்தில் வாய்க்கு வந்ததை கூறியவன், கோபமாக விறுவிறுவென அறைக்குள் சென்று, கதவை அறைந்து சாத்திக் கொண்டான்.

படார்! என்ற சத்தத்தில் விழி மூடி திறந்த காயத்ரியின் கண்களில் தங்கிய கண்ணீர் கன்னத்தில் வழிந்தது.

எத்தனை நேரம் அங்கேயே சிலையாக நின்றாளோ, ஒரு கட்டத்தில் வேறொரு அறைக்குள் நுழைந்து கொண்டாள்.

ஸ்ரீதரோ கட்டிலில் அமர்ந்து தலையை இரு கைகளிலும் பிடித்துக் கொண்டவனுக்கு காயத்ரியை பற்றிய சிந்தனை ஓடினாலும், அதையும் தாண்டி தான் நாளை செய்ய வேண்டிய வேலைகளை யோசித்து திட்டப்படுத்தியவன், ஒரு முடிவுக்கு வந்த பின்னர் தான் தானாக விழிகள் தூக்கத்திற்கு கெஞ்ச, படுத்து தூங்கினான்.

*********

அடுத்தநாள் காலை ஏழு மணி போல்தான் தொலைபேசி அழைப்பில் தான் கண்விழித்தான் ஸ்ரீதர். மாளவிகா தான் எடுத்திருந்தாள்.

சரியான தூக்கம் இல்லாததால் சிவந்து எரிந்த விழிகளை மூடி திறந்து, எழுந்து அமர்ந்தவனுக்கு தலைவலி வேறு, அதை பொருட்படுத்தாதவன் அழைப்பை ஏற்று மாளவிகாவிடம் பேச, அவள் சொன்ன செய்தியில் மகிழ்ந்தவன் “இப்போ தான் நிம்மதியா இருக்கு.. எங்க நினைச்ச நாள்ல பிளான் பண்ணுனது நடக்காம போயிடுமோனு ரொம்ப டென்ஷன் ஆகிட்டேன்…” என்று சொல்ல

“உங்க பிளான் படி எல்லாமே நடக்கும் ஸ்ரீ.. நான் மத்த விஷயத்த பாத்துக்கிறேன், நீங்க ரெஸ்ட் எடுங்க…” என்று சொல்லி அழைப்பை துண்டித்தாள் மாளவிகா.

என்னதான் நினைத்தது நடக்க போகும் சந்தோஷம் இருந்தாலும், காஃபி குடித்தால் நன்றாக இருக்கும் என்று தோன்ற, தினமும் காலை காஃபி கொடுக்கும் அவன் சிங்காரியை காணவில்லை என்பதே அப்போதுதான் புரிந்தது.

அதனோடு இரவு அவன் கோபித்துக் கொண்டு வந்தது நினைவு வர, “ச்சே! இருந்த டென்ஷன அவகிட்ட காட்டிட்டேன்…” என்று தலையில் அடித்துக் கொண்டவன் எழுந்து “காயூக்குட்டி!…” என்று அழைத்தவாறு சமையல் அறை உட்பட வீடு முழுவதும் தேடியவனுக்கு, உள்ளம் சொன்ன செய்தியில் தூக்கி வாரி போட்டது.

உடனே தன் தொலைபேசியை எடுத்து காயத்ரிக்கு அழைக்க, அழைப்பு போகவில்லை. அணைத்து வைத்திருப்பதாக கணினி பெண் கூற, தலையை பிய்த்துக் கொள்ளலாம் போல இருந்தது ஸ்ரீதருக்கு.

கோபித்துக் கொண்டு எங்கேயோ சென்றுவிட்டாள் என்பது மட்டும் புரிந்தது. ஆனால் எங்கே என்பது மட்டும் தெரியவில்லை. ஊருக்கு சென்றிருக்கக் கூடுமோ என்று யோசனை வரவும், எப்போது கிளம்பினாள் தெரியாதே, இப்போது வீட்டிற்கு சென்று சேர்ந்தாளா தெரியாது, அதனால் அம்மா அக்காவுக்கு அழைத்து கேட்க முடியாது.

ஒருவேளை ஊருக்கு செல்லாமல் வேறு எங்காவது சென்றிருந்தால், நினைக்கவே உள்ளம் பதைபதைத்தது.

பக்கத்தில் கோயிலுக்கு எங்காவது சென்றிருப்பாள் என்று யோசித்தவன், கார் சாவியை தேட, அது ஹாலில் இருந்த டீபாயில் இருந்தது. அதற்கு கீழ் ஒரு காகிதம். நெற்றி சுருக்கி அதை பார்த்தவன், எடுத்துப் பிரித்துப் பார்க்க

“யோவ் மாமா நீ உன் பிசினஸையே கட்டிக்கிட்டு குடும்பம் நடத்து.. நான் அம்மா வீட்டுக்கு போறேன்.. சிங்காரி பொண்டாட்டின்னு வந்து நின்ன வாய ஒடச்சிடுவேன்… என்று ஆரம்பித்து “என்னால இனி உனக்கு அவஸ்தையா இருக்காது மாமா…” என்று உருக்கமாக முடித்து, அந்த மாமாவிற்கு பக்கத்தில் அவள் நெற்றியில் இருந்த சிவப்பு நிற பொட்டை ஒட்டி வைத்திருந்தாள்.

அவன் விட்ட வார்த்தை அவளை எவ்வளவு பாதித்திருக்கின்றது என்பது புரிந்து கஷ்டமாக இருந்தாலும், தலையை ஆட்டி சிரித்தவன் “சின்ன குட்டி! படுத்துறடி…” என்று சொல்லிக் கொண்டவன்

அந்த கடிதத்தில் இருந்த பொட்டை எடுத்து தன் ஃபோனில் ஒட்டிக்கொண்டு, வெளியே வந்து காரை எடுத்தவன் திண்டுக்கல் நோக்கி பயணமானான்.

error: Alert: Content selection is disabled!!