பல்லவி 17 – 1

அத்தியாயம் 17

ரேகா வீட்டுக்குச் சென்று வந்ததிலிருந்து அவள் விளங்கிக்கொண்டதெல்லாம் ஒன்றே ஒன்றுதான். விதுரனை எங்கும் கூட்டிக்கொண்டு செல்ல முடியாது. அடம் பிடித்து, குழப்படி செய்து, ஆட்களுக்கு அடித்து, பொருட்களை உடைத்து என்று போகிற இடமெங்கும் பிரச்சனையை இழுத்துவைத்தான். இப்போது யோசிக்கையில் அவளின் பெரியப்பா வீட்டில் சின்னவர்கள் யாரும் இல்லை என்பதில் தடையற்று வந்த பாலமுரளி, தங்கை வீட்டில் ஒன்றுக்கு மூன்று சிறுவர்கள் இருக்கிறார்கள் என்றுதான் வரத் தயங்கியிருக்கிறான் என்று தோன்றியது.

பாலமுரளிக்கு மகனைக் கண்டிப்பது பிடிப்பதில்லை. இருந்தாலும் கூட, அன்றைக்குப் பிறகு வார்த்தைகளால் சொன்னதில்லையே தவிர, விதுரனை அவள் பொறுப்பில் முழுவதுமாக விட்டிருப்பதை உணர்ந்துதான் இருந்தாள் பல்லவி. அதனாலேயே, விதுரனை மையப்படுத்தி அவளும் பாலமுரளியும் முட்டிக்கொள்வது இப்போதெல்லாம் பிடிப்பதில்லை. மூவரையும் பாதிக்காமல் விதுரனை எப்படி வழிக்குக் கொண்டுவருவது என்று யோசித்துக்கொண்டிருந்தாள்.

இப்படி இருக்கையில்தான் அன்று மாலை பல்லவிக்கு அழைத்தார் விதுரனின் ஆசிரியை. “நீங்க வந்த பிறகாவது விதுரன் திருந்துவான் எண்டு நினைச்சன். எந்த மாற்றத்தையும் காணேல்ல. இப்பிடியே போனா இந்த வருசம் ஸ்கூல் சேர்க்காம இருக்கிறதே பெட்டர் எண்டுதான் சொல்லுவன்.” என்றவரின் பேச்சில் என்ன நடந்தது என்று கேட்கவே பயந்தாள் பல்லவி.

அந்தளவில் சூடான குரலில் சொல்லிக்கொண்டிருந்தார் அவர்.

“இப்பதான் ஒரு அம்மா கோல் எடுத்து என்னைப் பேசிப்போட்டு வச்சவா. அவவின்ர மகனின்ர தலை வீங்கி இருக்காம். என்ன எண்டு கேட்டதுக்கு விளையாடேக்க விதுரன் தள்ளி விட்டவனாம். இதுல ஆரிட்டயும் சொல்லக்கூடாது எண்டு வெருட்டி இருக்கிறான். அந்தப் பெடியன் என்னட்டயும் சொல்ல இல்ல, தாய்ட்டயும் சொல்ல இல்ல. இப்ப குளிக்க வாக்கேக்க கண்டுட்டு கேட்டிருக்கிறா. இதெல்லாம் என்ன எண்டு சொல்லுங்கோ? உங்கட மகனின்ர பிரச்சினைகளைத் தீத்து வச்சே எனக்கு ஒவ்வொரு நாளும் ஓடுது. நடக்கக் கூடாத எதுவும் நடந்த பிறகுதான் கவனிப்பீங்களா பல்லவி? இது இப்பிடியே போனா ஹெட்டோட நான் கதைக்கவேண்டி வரும். நீங்க வேற நேசரி பாக்கவேண்டி வரும்.” என்றுவிட்டு அவர் அழைப்பைத் துண்டித்தார்.

இவளுக்கு அவமானத்தில் முகம் சிவந்து போயிற்று. இதெல்லாம் அவள் கையாண்டிராத சூழ்நிலைகள். என்ன செய்வது என்றே தெரிய மறுத்தது. அவனிடம் சொன்னால் சின்ன பிள்ளைகள் என்றால் அப்படித்தான் என்பான். கூடவே, சின்னவயதில் அவன் என்னவெல்லாம் செய்தான் என்பதையும் சேர்த்துச் சொல்லி, இதெல்லாம் ஒன்றுமே இல்லை என்பான்.

விதுரன் வீதியில் விளையாடிக்கொண்டிருந்தான். இப்போதே கேட்டு, பேச்சுக் கொடுப்போமா என்று தோன்றினாலும் உடனேயே தன் எண்ணத்தை மாற்றிக்கொண்டாள்.

அவனின் அருமைத் தகப்பன் வரட்டும். அவன் முன்னால் கேட்டு அவனுக்கும் நன்றாகக் கொடுத்தால்தான் சரியாக வரும். கோபத்தோடு உடைகளை எல்லாம் கழுவிப் போட்டுவிட்டுக் குளிக்க ஆரம்பித்தபோது, “ஐயோ பல்லவி, ஓடி வா!” என்று சுதாவின் உரத்த குரல் கேட்டது.

இன்றைக்கு என்னவோ? அரக்கப்பரக்க ஈர உடலின் மேலேயே உடையைப் போட்டுக்கொண்டு வீதிக்கு ஓடினாள்.

அங்கே கண்ட காட்சியை அவளால் நம்பவே முடியவில்லை. இன்னொரு பெடியனோடு மண்ணில் உருண்டு புரண்டு சண்டையிட்டுக்கொண்டிருந்தான் விதுரன்.

“விதுரன்! என்ன செய்றாய்? விடு!” ஓடிப்போய் இழுத்தாள். அவனுடையது மெல்லிய தேகம் என்பதாலோ என்னவோ அவளால் அவனைப் பிரித்தெடுக்க முடியவில்லை. ஈரக் கை வேறு வழுக்கியது. அவன் வெறி வந்தவன் போன்று மற்றவனின் தலைமுடியைப் பிடித்து இழுத்து அடித்துக்கொண்டிருந்தான். “ஐயோ! என்ர பிள்ளையை அடிக்காத, விடடா!” என்று அவனின் அன்னை பதறியும் இவன் விடுவதாக இல்லை.

அவனின் மூர்க்கம் கண்டு பல்லவிக்குக் கைகால்கள் எல்லாம் நடுங்கின. “விதுரன்! வா இந்தப் பக்கம்!” என்று பிடித்து இழுத்தவளையும், “என்ன விடு!” என்று காலால் உதைத்தான்.

அதை எதிர்பாராத பல்லவி வீதியில் விழுந்தாள். தலையின் பின்பக்கம் எதிலோ மோதியது. உடலும் உடையும் ஈரமாக இருந்ததில், மணல் அப்படியே அவளில் ஒட்டிக்கொண்டது. சிறுவர்கள், சுதா, மற்ற பெடியனின் அன்னை என்று ஒரு சிலர்தான் என்றாலும் எவ்வளவு அவமானம்? வந்த ஆத்திரத்துக்கு எழுந்து, வேலியில் தடி ஒன்றை முறித்து எடுத்து, அவன் காலுக்குக் கீழே விளாசு விளாசு என்று விளாசிவிட்டாள்.

“ரவுடியாடா நீ? ரோட்டில விழுந்து கிடந்து சண்டை பிடிக்கிற? இவ்வளவு கோவம் இந்த வயசில உனக்குத் தேவையோ?” அத்தனை நாட்களும் அடக்கி அடக்கி வைத்திருந்த கோபத்தை எல்லாம் அடித்துத் தீர்த்தாள்.

கடைசியில் சுதாதான் ஓடி வந்து, “காணும், விடு பல்லவி. உள்ளுக்குக் கூட்டிக்கொண்டு போ!” என்று தடுத்தாள்.

“வாடா! இனிமேல் விளையாட வெளில வந்து பார். கால முறிச்சுக் கைல தாறன்!” அவன் கத்தி அழுவதைப் பொருட்படுத்தாமல், கையைப் பிடித்துத் தரதர என்று இழுத்துக்கொண்டு வந்து, வீட்டுக்குள் தள்ளினாள்.

“என்னடா பழக்கம் உனக்கு? பொய் சொல்லுறது, ஆக்களுக்கு அடிக்கிறது, வெளில சொல்லக்கூடாது எண்டு வெருட்டுறது. என்ன ரவுடியா வரப்போறியோ? கொப்பர் நீ படிப்பாய் கிழிப்பாய் எண்டுகொண்டு திரிய, நீ இங்க வீடு வீடா சண்டைக்குப் போவியா?”

பல்லவிக்குக் கோபம், ஆத்திரம், படபடப்பு என்று எல்லாம் சேர்ந்து மூச்சு வாங்கியது. ஆறு வயதாகப்போகிற ஒரு பிள்ளைக்கு இந்தளவில் முரட்டுத்தனமும் மூர்க்கமும் இருக்குமா? மெய்யாகவே அவளுக்குத் தெரியவில்லை.

அடிக்குப் பயந்தாலும் அவன் அடங்கவே இல்லை. “நீ போ! நீதான் கூடாது! அப்பாட்டச் சொல்லிக்குடுப்பன்! போ போ போ!” அவளை நெருங்கவே விடாமல் கைகளாலும் கால்களாலும் அடித்தான்.

அவளுக்கு மீண்டும் சினம் பெருகிற்று. முற்றத்தில் வீசியிருந்த தடியை எடுத்து மீண்டும் விளாசினாள். அந்த நிமிடத்தில் வீட்டுக்குள் புகுந்தது பாலமுரளியின் புல்லட். ஆத்திரம் அடங்கியிராததில் அவனையும் முறைத்தாள் பல்லவி. இன்றைக்கு ஏனோ அவனைக் கண்டு பயம் வர மறுத்தது. “என்னால உங்கட மகனைப் பாக்கேலாது! நீங்களே என்னவாவது செய்ங்கோ!” என்றாள் பட்டென்று.

“அப்ப நீ வெளில போகலாம்!” என்றான் அவனும் உடனேயே.

அதிர்ந்துபோனாள் பல்லவி. அவளின் செவிகள் கேட்டதைத்தான் சொன்னானா என்று நம்ப முடியாத திகைப்புடன் அவனைப் பார்த்தாள்.

விழிகள் இரண்டும் கோபத்தில் கொவ்வைப் பழம் போன்று சிவந்திருக்க, பாராங்கல்லைப் போன்று இறுகிய முகத்தோடு, “அப்பா!” என்று அழுதபடி ஓடிவந்து தாவிய மகனைத் தூக்கிக்கொண்டு, அவன் கிணற்றடிக்கு நடப்பது தெரிந்தது.

அப்படியே வெளி வாசலிலேயே அமர்ந்துவிட்டாள் பல்லவி. விதுரனின் குழப்படிக்கு அவனை வைத்துத் தன்னால் பார்க்க முடியாது என்பதைத்தான் சொன்னாள். அதற்கு அவன் சொன்னது?

எல்லோருக்குமே அவள் பாரம்தான் போலும்! விழிகளை ஒருமுறை இறுக்கி மூடித் திறந்தாள். தலை விண் விண் என்று வலித்தது. உடை, உடல் என்று எங்கிலும் மண் அப்பியிருக்க அது எதையும் உணரும் நிலையில் அவள் இல்லை.

திடீர் என்று அவளின் முன் வந்து நின்றான் அவன். திடுக்கிட்டு நிமிர்ந்து பார்த்தாள். விதுரனைக் காணவில்லை.

error: Alert: Content selection is disabled!!