பல்லவி – 15

அத்தியாயம் 15

நிறைய நாட்களாகவே ரேகா அவர்களை விருந்துக்கு அழைத்துக்கொண்டிருந்தாள். பப்பாசித் தோட்டத்தில் அறுவடை ஆரம்பித்துவிட்டதில் அசைய மறுத்தான் பாலமுரளி.

கடைசியில் பொறுமை இழந்துபோன கலாவதி அம்மா, “தம்பி, அவள் உன்ன எத்தின தரம் கூப்பிட்டுட்டாள். ஒருக்கா போய் எல்லாருமா தலையக் காட்டிப்போட்டு வாங்கோவன். பிறகு, மனுசின்ர ஆக்களின்ர வீட்டுக்குப் போறதுக்கு மட்டும் அண்ணாக்கு நேரம் இருக்கு, என்ர வீட்டை வரத்தான் நேரமில்லை எண்டு அதை ஒரு குறையா பிடிச்சுக்கொண்டு நிப்பாள். போயிட்டு வாப்பு.” என்று அவனிடம் சொன்னவர், “அவன் என்ன சொன்னாலும் விடாம, மூண்டு பேருமா இந்தச் சனிக்கிழமை போயிட்டு வாங்கோம்மா. சமைக்கச் சொல்லி அவளிட்டச் சொல்லிவிடுறன்.” என்று, அவனை அழைத்துச் செல்லும் பொறுப்பைப் பல்லவியிடம் ஒப்படைத்தார்.

இதைக் குறித்து ரேகா பல்லவியிடமும் பலமுறை பேசியிருக்கிறாள். ஆயினும், இதில் அவள் செய்ய எதுவும் இல்லை என்பதில், இத்தனை நாட்களும் எப்படியோ சமாளித்திருந்தாள். இன்றைக்குக் கலாவதி அவனின் முன்னேயே அவளிடமும் சொல்லவும் கேள்வியோடு பாலமுரளியைப் பார்த்தாள்.

“போறமாம் எண்டு சொல்லு.” என்றான் அவன். “ஆனா நிறைய நேரம் நிக்கேலாது. சாப்பிடுறதும் திரும்புறதும்தான்.” என்றான் முடிவான குரலில்.

கூடப்பிறந்தவளின் வீட்டுக்குப் போவதற்கு ஏன் இவ்வளவு கெடுபிடி? அவளின் பெரியப்பா வீட்டுக்குச் சென்றபோதும் நேரத்துக்கே திரும்ப வேண்டும் என்றானே தவிர, இப்படிச் சாப்பிடுவதும் திரும்புவதும்தான் என்று சொல்லவில்லை. மனத்தில் கேள்வி எழுந்தாலும் கேட்கவில்லை பல்லவி.

இப்படியாவது அவனை நகர்த்த முடிந்ததில் கலாவதிக்குச் சந்தோசமே. ரூபாவைப் போல் ரேகா சமாளித்துப்போகிறவள் இல்லை. வீட்டில் கடைசி என்பதாலோ என்னவோ சின்னதற்கும் முகத்தைத் தூக்கிவிடுவாள். இப்போதே, ‘என்னம்மா, அண்ணா என்ர வீட்டை வருவாராமோ?’ என்று கேட்க ஆரம்பித்திருந்தாள். அதை வளரவிட்டு மனக் கசப்பாக மாற்றிவிட வேண்டாம் என்பது அவருக்கு.

அனுபவம் கற்றுத்தந்த பாடமாக, அன்றைக்கு விதுரனை நேசரிக்கு விட்டுவிட்டு வரும்போது, பாலமுரளிக்கும் விதுரனுக்கும் அளவுடைகளைக் கொண்டுபோய், ஆளுக்கொரு ஜீன்ஸும் ஷேர்ட்டும் எடுத்துக்கொண்டு வந்தாள் பல்லவி. விதுரனுக்குப் போட்டுப்பார்க்க அளவாகப் பொருந்தியது. பகல் உணவை முடித்தவனிடம் அவனுடையதை நீட்டினாள்.

“இப்ப எதுக்கு இது?” அதை வாங்கிப் பிரித்துப் பார்த்தபடி வினவினான் அவன்.

“ரேகா வீட்ட போகேக்க போடுறதுக்கு.”

“அவளிட்ட போறதுக்கு எதுக்குப் புது உடுப்பு? சும்மா காச வீணா செலவு செய்யாத.”

அவன் குரலில் தொனித்த கண்டிப்பில் பல்லவியின் முகம் சுருங்கிப் போனது. திருமணமாகி வந்த இத்தனை நாட்களில் அப்படி எத்தனை வீண் செலவுகளைச் செய்தாளாம்? சினம் துளிர்த்துவிட, “அப்ப, மாட்டுச் சாணம் அள்ளுறதுக்குப் போடுற அந்த ஊத்த உடுப்போட வரவேண்டியதுதானே!” என்று வாய்க்குள் முணுமுணுத்தாள்.

அவனுக்குச் சரியாகக் கேட்கவில்லை போலும். “சொல்லுறதை சத்தமா சொல்லு!” என்றான் புருவத்தைச் சுருக்கி.

“நான் ஒண்டும் உங்களிட்ட காசு கேக்கேல்லையே. வீட்டுச் செலவுக்கு எண்டு தந்த காசிலதான் வாங்கினான். பிறகும் என்ன?” அவன் காட்டிய அந்த முகபாவம் பிடிக்காமல் போனதில் வெடுக்கென்று சொன்னாள் அவள்.

“பிறகு வீட்டுச் செலவுக்கு என்ன செய்யப் போறாய்?”

“உங்களிட்ட கேக்க மாட்டன். போதுமா?” ஒரு ஷேர்ட்டும் ஜீன்சும் வாங்கியதற்கு இத்தனை கேள்வியா என்று இருந்தது பல்லவிக்கு.

“சரியான கஞ்சன்! என்னவோ இப்பிடி மிச்சம் பிடிச்சுக் கோட்டை கட்டி வச்சிருக்கிற மாதிரி!” இந்த முறை அவனுக்குக் கேட்கிற மாதிரி முணுமுணுத்தாள். அதற்குமேல் அங்கு நின்று அவனோடு மல்லுக்கட்டப் பிடிக்கவில்லை. நன்றாக இருக்கிறது என்று சொல்லாவிட்டாலும் பரவாயில்லை, ஒன்றும் சொல்லாமலாவது வாங்கிக்கொண்டிருக்கலாம். அவனுக்கென்று பார்த்து பார்த்து எடுத்த அவளுக்கு இது தேவைதான்.

எரிச்சலுடன் அறைக்குள் சென்று, தான் என்ன அணியலாம் என்று, அலமாரிக்குள் தன் ஆடைகளைக் கிண்ட ஆரம்பித்தாள். பின்னோடு வந்து அவளின் கையைப் பற்றித் தன்னைப் பார்க்குமாறு திருப்பினான் அவன்.

“இப்ப என்ன? வீண் செலவு எண்டு சொன்னா சொல்லுங்கோ, திருப்பிக் கொண்டுபோய்க் குடுத்திட்டுக் காச வாங்கிக்கொண்டு வாறன்!” என்றாள் அவள் அவனை முந்திக்கொண்டு.

“எனக்கு இப்ப முப்பத்திரெண்டு வயசு. என்ர பதினாறு வயசில அப்பா தவறினவர். அவர் சரியான குடி. அதால, அவர் இருந்த காலத்திலயே வயல் வேலைக்கு, தோட்ட வேலைக்கு எண்டு போகத் தொடங்கிட்டன். இந்தப் பதினாறு வருசத்தில நாலு கலியாணம், ரெண்டு செத்தவீடு, ரெண்டு தங்கச்சிக்கு முடிஞ்சளவு சீதனம், ரூபா வெளிநாட்டுக்குப் போன செலவு எல்லாம் பாத்திருக்கிறன். இப்ப, அம்மா சுவிஸுக்குப் போன செலவில கூட அரைவாசி நான்தான் போட்டனான். நான் ஒண்டும் பெரும் தொழில் செய்ற முதலாளி இல்ல. சாதாரணச் சின்ன விவசாயி. அந்த விவசாயம் பாத்து, நாளாந்த செலவோட இவ்வளவும் செய்றது சும்மா இல்ல. சிக்கனமா இருந்தபடியாத்தான் இவ்வளவு செஞ்சும் இன்னும் சொந்தக் காணி நிலத்தோட வாழுறன்.” என்றான் அவன் இறுக்கமான குரலில்.

திகைப்புடன் அவனைப் பார்த்தாள் பல்லவி. வெளியே காட்டிக்கொள்ளாதபோதும் பார்த்து பார்த்துத் தனக்குப் பிடித்ததாக அவனுக்கு எடுத்துக்கொண்டு வந்திருந்தாள். அதைப் பற்றி ஒரு வார்த்தை சொல்லாமல் கேள்விக்கு மேல் கேள்வியாகக் கேட்ட கோபத்தில்தான் கஞ்சன் என்றாள். அது அவனை இந்தளவில் பாதிக்கும் என்று எதிர்பார்க்கவில்லை.

கூடவே, அவன் சொன்னவை வேறு மனத்தைப் பாதித்தது. வயதை மீறிய மூப்புக்கும், இறுக்கம் மட்டுமே விரவிக்கிடக்கும் முகத்துக்கும் பின்னால், இளம் பிராயத்திலிருந்து ஒரு குடும்பத்தைத் தாங்கிய சுமை இருந்திருக்கிறது. அதை உணராமல் போனாளே. பெற்றவர்கள் பொறுப்பற்றுப்போனால் என்னாகும் என்பதற்கு உதாரணமாக அவனும் அவளும். நெஞ்சுக்குள் என்னவோ செய்தது. “சொறி!” என்று வாய்க்குள் முணுமுணுத்தவள் கலங்கிய விழிகளை அவனுக்குக் காட்டாமல் மறைத்தாள்.

அவனும் இந்த மன்னிப்பை எதிர்பார்க்கவில்லை போலும். சிறு திகைப்புடன் அப்படியே நின்றான்.

இருவருக்குமே அடுத்து என்ன பேசுவது என்று தெரியாத நிலை. மற்றவரின்பால் மனம் தடுமாறி நின்றனர். அவனுக்கு அவளைச் சமாதானம் செய்யவேண்டும். அதற்கு என்ன செய்வது என்று யோசித்தான். அவள் தன் உடைகளை எடுத்து வைத்துவிட்டு அறையை விட்டு வெளியேறப்போனாள்.

அதைத் தடுக்கும் முகமாக, “போட்டுக் காட்டவா?” என்றான் வேகமாக.

“உங்கட விருப்பம்!”

“வாங்கேக்க நீயா வாங்கிப்போட்டு அதென்ன இப்ப மட்டும் என்ர விருப்பம்?”

அவனுடைய கேள்வியில் மீண்டும் அவள் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்தது.

அறை வாசல்வரை போனவள் வேகமாகத் திரும்பி வந்து, அவன் கையில் இருந்த உடைகளைப் பறிக்க முயன்றாள். கொடுக்காமல் தனக்குப் பின்னே மறைத்தான் அவன்.

“இருக்கிறது எல்லாம் பழசா இருக்கே எண்டு ஒரு உடுப்பை வாங்கினதுக்கு என்ன பாடு படுத்துறீங்க? மரியாதையா தாங்க! நாளைக்கே கொண்டுபோய்த் திருப்பிக் குடுக்கிறன்!” என்று மீண்டும் மீண்டும் பறிக்கப் பார்த்தாள்.

அப்போதும் கொடுக்காமல், அவளின் கைகள் இரண்டையும் பற்றிப் பிடித்து, “இப்ப ஏன் உனக்கு இவ்வளவு கோவம் வருது? கொஞ்சம் பொறுமையா இரன்.” என்றான் சிறு சிரிப்புடன்.

“ப்ச்! விடுங்க நீங்க! கதைக்கிறதை எல்லாம் கதைச்சிப்போட்டு ஏன் கோவமோ?” அவன் பிடியிலிருந்து தன்னை விடுவித்துக்கொள்ள முயன்றவளை விடவில்லை அவன். மாறாக, “என்ர மனுசி எனக்கெண்டு முதல் முதல் வாங்கிக்கொண்டு வந்திருக்கிறாள். அத திருப்பிக் குடுக்கிறதா? போட்டுக் காட்டுறன், எப்பிடி இருக்கு எண்டு சொல்லு!” என்றுவிட்டு அவற்றை அணிந்த.

“எப்பிடி இருக்கு? நல்லாருக்கா?” என்றான் அவள் முன்னே வந்து நின்று.

கச்சிதமாகப் பொருந்தியிருந்த உடையைக் காட்டிலும், கண்களில் ஆர்வம் மின்ன, முகத்தில் தெரிந்த சிறுபிள்ளையின் மலர்ச்சியோடு அவன் கேட்டதுதான் அவளின் மனத்தைத் தொட்டது. நெஞ்சம் அவன்பால் கசிந்தாலும் காட்டிக்கொள்ளவில்லை. அவ்வளவு வியாக்கியானம் பேசியவனைச் சும்மா விடுவதா? “அளவு சரியா இருந்தா சரிதான்!” முகத்தைத் திருப்பிக்கொண்டு விறைப்புடன் நின்றபடி சொன்னாள்.

இப்போது அவன் அவளை முறைத்தான். “அண்டைக்கே சொன்னனான், எப்ப பாத்தாலும் முறைக்காம கொஞ்சம் சிரிக்கவும் பழகு எண்டு.” என்றுவிட்டு, “எனக்கும் புதுசு போட்டுக்கொண்டு திரிய விருப்பம்தான். என்ன, எனக்கு எண்டு காச குடுத்து வாங்க மனம் வராது. அதவிட, புதுசு போட்டுக்கொண்டு எங்க போக? சரி சொல்லு, எப்பிடி இருக்கு?” என்று மீண்டும் கேட்டான்.

எப்படியாவது நன்றாக இருக்கிறது என்று அவளைச் சொல்ல வைத்துவிட முனைகிறான் என்று புரிந்தது. அதில், “இப்ப என்ன? வடிவா இருக்கு எண்டு சொல்லோணுமா?” என்றாள் ஒன்றுமே தெரியாதவள் போன்று.

அவனுக்கோ பற்றிக்கொண்டு வந்தது. “சொல்லாத போடி! எனக்கே தெரியும், வடிவாத்தான் இருக்கு!” என்றுவிட்டு ஷேர்ட்டை கழற்றினான். சிரிப்பை மறைக்க முகத்தைத் திருப்பிக்கொண்டாள் பல்லவி. சற்று நேரத்தில் அவன் கைகள் அவளைப் பின்னிருந்து இறுக்கமாக அணைத்தன. “திமிர் பிடிச்சவளே, அளவெல்லாம் சரியா பாத்து வாங்கிக்கொண்டு வந்திட்டு, எப்பிடி இருக்கு எண்டு சொல்லாம கெஞ்ச வைக்கிறாய் என்ன?” என்றவன் அவளைத் திருப்பி ஆசையோடு இதழ்களைச் சிறை செய்தான்.

முதன் முறையாக விலக விரும்பாமல் இசைந்துநின்றாள் பல்லவி.

error: Alert: Content selection is disabled!!