பல்லவி 16 – 2

ரேகாவுக்குமே பெரிய மகன் மீது இரக்கம் வந்தது. அந்த ஷேர்ட் அவனுக்கு மிகவும் விருப்பமானது. இவர்கள் வருகிறார்கள் என்றுதான் போட்டுவிட்டாள். “சரியப்பு. அதுக்கு அடிக்கிறதா? நீ பெரிய பிள்ளை எல்லா. அம்மாட்ட வந்து சொல்லியிருக்கலாம்தானே?” என்றபடி அவனை அணைக்கப்போக, அவளின் கைகளைத் தட்டி விட்டான் அவன்.

“நீங்க என்னோட கதைக்காதீங்க. எப்ப விதுரன் வந்தாலும் எனக்குத்தான் அடிக்கிறீங்க. இனி இவன் எங்கட வீட்டை வரவேண்டாம். எனக்குப் பிடிக்கேல்ல!” என்றவனின் பேச்சில் அதிர்ந்துபோனாள் ரேகா.

பட்டென்று அவன் வாயில் சுண்டி விட்டாள். “என்னடா கத பேச்சு இது? மாமா கேட்டா எவ்வளவு கவலைப்படுவார்? நீ வளந்த பிள்ளை, எல்லாரையும் சேர்த்து விளையாடோணும் எண்டு சொன்னா இப்பிடித்தான் கதைப்பியா? ” என்றபடி அவனுக்கு இன்னுமே அடிக்கப்போக வேகமாக வந்து தடுத்தாள் பல்லவி.

“அச்சோ ரேகா! சும்மா சும்மா அடிக்காதீங்கோ. விடுங்கோ பாவம்!”

“அண்ணி பிளீஸ். பிழையா நினைச்சுப் போடாதீங்கோ. பத்து வயசாகுது. எண்டாலும் என்ன கதைக்கோணும் என்ன கதைக்கக் கூடாது எண்டு இன்னும் வடிவா தெரியேல்ல. அதுதான் அவன் கோபத்தில என்னென்னவோ சொல்லிப்போட்டான்.”

இவள் ஏதும் நினைத்து, அதை பாலமுரளியிடம் சொல்லி, சின்னவர்களின் சண்டை பெரியவர்களிடையே மனக்கசப்பை உண்டாக்கிவிடுமோ என்று பயந்து மன்னிப்புக் கேட்டாள் ரேகா.

“இதென்ன கத ரேகா? சின்னப்பிள்ளைகளின்ர பேச்ச தூக்கிப் பிடிச்சுக்கொண்டு வாற அளவுக்கு நான் குழந்தை இல்ல. ஆனா, விதுரன்லதான் பிழை போல இருக்கு. அதால நீங்க அவரைப் பேசாதீங்கோ. பாவம்!” அவளின் பயத்தை உணர்ந்து சொன்னாள் பல்லவி.

இவர்கள் ஒருவழியாக எல்லோரையும் சமாளித்து முடிக்க வந்து சேர்ந்தனர் ஆண்கள்.

பெண்களின் முகம் சரியில்லை என்றதும் கேள்வியாகப் பார்த்தனர். யாரும் சொல்லும் தேவையே இல்லாமல், கதிரவனின் குரல் கேட்டதும் அறைக்குள் இருந்த பெரியவன் ஓடிவந்து நடந்தவற்றைச் சொல்லி, அன்னையைப் பற்றிப் புகாரும் வாசித்தான்.

பாலமுரளியையும் வைத்துக்கொண்டு என்ன கதைக்க? அதைவிட, விதுரன் எப்போதெல்லாம் இங்கே வருகிறானோ அப்போதெல்லாம் நடப்பதுதான் இது. அதில், “விடு, அப்பா பிள்ளைக்கு வேற ஷேர்ட் வாங்கித் தாறன்.” என்றான் கதிரவன்.

“என்னடா இதெல்லாம்?” விதுரனை அருகழைத்து விசாரித்தான் பாலமுரளி.

“அவன் விளையாட கார் தரேல்ல அப்பா.” என்றான் விதுரன்.

“அதுக்கு இப்பிடித்தான் அடிபடுவியா? இனி இங்க கூட்டிக்கொண்டு வரமாட்டன், பார்!” என்று அவன் சொல்லும்போதே, “விடுங்கோ அண்ணா. அதெல்லாம் முடிஞ்சுது. நாங்க இப்ப சமாதானம் ஆகிட்டோம்.” என்று சமாளித்தாள் ரேகா.

வீடு வந்து சேர்ந்த பிறகும் கூட இதைப் பற்றி எதுவும் கதைக்கவில்லை பல்லவி. கதைக்கக் கூடாது என்கிற பிடிவாதத்துடன் இருந்தாள். பாலமுரளி அடிக்கடி அவள் முகம் பார்ப்பது தெரிந்தாலும் அசையவில்லை.

விதுரனை விடவும் அவளுக்கு அவன் மீதுதான் கோபம். அவன் கொடுக்கிற அளவுக்கதிகமான இடமும் செல்லமும்தானே இதற்கெல்லாம் காரணம். அவன் சரியாக இருந்தால் விதுரன் இந்தளவில் முசுடனாக மாறமாட்டான். இதை இப்படியே விட்டால் நிச்சயம் பெரும் பிரச்சனையில்தான் கொண்டுவந்து விடும் என்று மட்டும் நன்றாகப் புரிந்தது.

அன்று இரவும் விதுரன் உறங்கியபிறகு அவளிடம் வந்தான் பாலமுரளி. உடலும் மனமும் இறுக அமைதியாகவே இருந்தாள் பல்லவி. அவள் எண்ணியதுபோல் அவன் அவளை நாடவில்லை. தலைக்குக் கைகளைக் கொடுத்து, முகட்டைப் பார்த்தபடி எதையோ சிந்தித்தபடி படுத்திருந்தான்.

பின் என்ன எண்ணினானோ, தானும் திரும்பி அவளையும் தன்புறமாகத் திருப்பி, “ஏன் ஒரு மாதிரி இருக்கிறாய்?” என்று வெளியே கேட்காத மெல்லிய குரலில் வினவினான்.

“ஒண்டுமில்ல.”

“என்ன பதில் இது? என்ன எண்டு சொன்னாத்தானே தெரியும்? தம்பி செய்தது பிழையா?”

விதுரனில்தான் பிழை என்று அவள் சொல்லித்தான் தெரியவேண்டும் போல் கேட்கிறானே. மெல்லிய சினம் பொங்கியதில் பதிலிறுக்கவில்லை பல்லவி.

“சொல்லு பல்லவி. அங்க இருந்து வந்ததில இருந்து நீ என்ர முகம் பாத்துக் கதைக்கவே இல்ல.” அவளின் இந்த அமைதி அவனை வெகுவாகத் தொந்தரவு செய்தது. அதில், பேசத் தூண்டினான்.

“என்ன கதைக்கிறது எண்டு எனக்குத் தெரியேல்ல. விதுரன்லதான் பிழை. எனக்கு அங்க வச்சே கோபம் வந்தது. ஆனா, உங்கட மகனைத் திருத்தினாலோ கண்டிச்சாலோ உங்களுக்குப் பிடிக்காது. நீ பெத்த பிள்ளையா இருந்தா இப்பிடி நடப்பியா எண்டு கேப்பீங்க. அதுதான் வாய மூடிக்கொண்டு இருக்கிறன்.” என்றாள் அவள்.

சற்று நேரம் அவளையே பார்த்தான் பாலமுரளி. பல்லவியும் அசைந்து கொடுக்கவில்லை. ஒன்றும் சொல்லாமல் திரும்பிப் பழையபடி தலைக்குக் கைகளைக் கொடுத்தபடி மல்லாந்து படுத்துக்கொண்டான். அவள் சொன்னது அவனுக்குப் பிடிக்கவில்லை என்று புரிந்தது. அதற்கென்று சொல்லாமலா இருக்க முடியும்?

“அண்டைக்கு நான் கேட்டது பிழைதான். ஆனா உண்மையைச் சொல்லு, உன்ர பிள்ளையா இருந்திருந்தாலும் இப்பிடித்தான் நடந்திருப்பியா?” என்றவனை ஒன்றும் சொல்லாமல் பார்த்தாள் பல்லவி. ஆக, இன்னும் விதுரனை அவள் நன்றாகக் கவனித்துக்கொள்வாள் என்று நம்பஅவன் தயாராயில்லை.

“சொல்லு பல்லவி!” அவளுக்குள் ஓடுவதை உணராமல் பதில் சொல்ல வற்புறுத்தினான் அவன்.

“பளார் எண்டு ரெண்டு கன்னத்திலயே போட்டிருப்பன்!” என்றாள் அவள்.

நம்பாமல் பார்த்தான் அவன்.

“கடவுள் சத்தியமாத்தான் சொல்லுறன். முதல், என்ர பிள்ளையை இப்பிடி நான் கடைசி வந்தாலும் வளத்திருக்க மாட்டன். அதையும் தாண்டி அவன் அப்பிடி நடந்திருந்தா கட்டாயம் அடிச்சிருப்பன். நாலுபேருக்கு முன்னால என்ன செய்தாலும் அம்மா மானத்துக்கு அஞ்சி வாய மூடிக்கொண்டு நிப்பா எண்டுற எண்ணத்த, அவனுக்குக் குடுத்தே இருக்க மாட்டன்.”

நிச்சயமாக இப்படி ஒரு பதிலை அவன் எதிர்பார்க்கவில்லை.

“தெரியாம கை பட்டு ஒரு பொருள் உடையிறது வேற. அது ஆருக்கு வேணுமெண்டாலும் நடக்கும். ஆனா அண்டைக்கு நடந்தது கோபத்தில. அவன் சின்ன பிள்ளை. அவனுக்கு அவ்வளவு கோபம் வாறதே கூடாது. இதுல ஒரு பொருளைத் தூக்கி எறிஞ்சு இன்னொரு பொருளை உடைக்கிறது என்ன பழக்கம்? அவனுக்கு அவன் நினைக்கிற மாதிரி எல்லாம் நடந்தா நல்லபிள்ளையா இருப்பான். இல்லை எண்டால் எதையாவது அடிக்கிறன் உடைக்கிறன் எண்டு நிக்கிறான். அது என்ன பழக்கம்? அதைத்தான் கண்டிச்சனான். அது விளங்காம, ‘நான் உடைச்சிருந்தாலும் இப்பிடியா நடந்திருப்பாய். வாய மூடிக்கொண்டுதானே நிண்டிருப்பாய்’ எண்டு கேக்கிறீங்க நீங்க.”

“அவன் தாயில்லாத பிள்ளை.” அவளின் பேச்சில் நியாயம் இருந்தாலுமே மகனை விட்டுக்கொடுக்க மனமில்லை அவனுக்கு.

“அதுக்காக தறுதலையா வளக்கேலாது!” என்றாள் பட்டென்று.

“ஏய்!” நொடியில் அவன் சீற, “இப்பிடியே விட்டா அப்பிடித்தான் வந்து நிப்பான். அப்பவும் வந்து நீ பெத்த பிள்ளையா இருந்தா இப்பிடி வளத்திருப்பியா எண்டு என்னத்தான் கேப்பீங்களா இருக்கு.” என்றாள் அப்போதும் பயப்படாமல்.

“பிள்ளை நல்லா படிக்கோணும், பெரியாளா வரோணும், நல்ல உத்தியோகம் பாக்கோணும் எண்டு ஆசைப்பட்டா மட்டும் காணாது. பிள்ளையை ஒழுங்கா வளக்கோணும்! அப்பதான் ஆசைப்படுறதும் நடக்கும், பிள்ளையும் நல்லபிள்ளையா இருப்பான்.” என்றுவிட்டு அவனுக்கு முதுகு காட்டிப் படுத்துக்கொண்டாள் பல்லவி.

error: Alert: Content selection is disabled!!