அத்தியாயம் 16
அன்று சனிக்கிழமை. மூவரும் ரேகாவின் வீட்டுக்குப் போவதற்காகப் புறப்பட்டனர். அவள் வாங்கிக் கொடுத்த ஜீன்ஸ், ஷேர்ட்டை அணிந்துகொண்டு வந்த பாலமுரளியின் விழிகள், எதிர்பார்ப்புடன் அவளை நோக்கிற்று. அதை உணர்ந்தாலும் காட்டிக்கொள்ளாமல், “வெளிக்கிடுவமா?” என்றாள் பல்லவி.
‘இவள!’ என்று பல்லைக் கடித்தான் பாலமுரளி. திமிர் பிடித்தவள்! வாயைத் திறந்து ஒரு வார்த்தை சொல்கிறாளா பார்! மூண்ட சினத்துடன், “போவம் போவம். போகாம நிக்கவா வேலைய விட்டுட்டு வந்து நிக்கிறன்!” என்று கடுகடுத்தபடி புல்லட்டை எடுத்தான்.
சிரித்துவிடாமல் இருக்கப் பெரும் பாடுபட்டாள் பல்லவி. இனி இந்த வியாக்கியானம் எல்லாம் கதைப்பானா? இல்லைதானே. நல்ல பிள்ளையாக முகத்தை வைத்துக்கொண்டு ஏறி அமர்ந்துகொண்டாள்.
போகிற வழியெங்கும் அவளை முறைத்துக்கொண்டு வந்தான் அவன்.
ரேகா வீட்டில் அவர்களுக்கு மிக நல்ல வரவேற்புக் கிடைத்தது. பாலமுரளியைப் பார்த்ததுமே, “அண்ணா! உடுப்பு நல்ல வடிவ இருக்கு. ஆரு வாங்கித் தந்தது? அண்ணியா?” என்று விசாரித்தாள் ரேகா.
“ஏன் எனக்கு வங்கத் தெரியாதா? என்னவோ இவ்வளவு நாளும் உன்ர அண்ணிதான் வாங்கித் தந்தமாதிரிக் கேக்கிறாய்? நான்தான் வாங்கினான்!” பல்லவியிடம் இருந்த கோபத்தை அவளிடமும் காட்டினான் அவன்.
அதையெல்லாம் ரேகா பொருட்டிலேயே கொள்ளவில்லை. பதிலாக, “நீங்க வாங்கினனீங்க? இத நாங்க நம்போணும்? ஏன் எண்டால் எனக்கு உங்களப் பற்றித் தெரியாதுதானே.” என்று கேலி செய்து சிரித்துவிட்டு, அடுத்த நிமிடமே அன்னைக்கு அழைத்துச் சொன்னாள்.
கலாவதிக்கும் மகிழ்ச்சி. “இவ்வளவு நாளும் நாங்க சொன்னதைக் கேட்டானா? மனுசி எண்டு ஒருத்தி வந்து எடுத்துக் குடுத்ததும் போடுறான் பாத்தியா. இதுக்குத்தான் அவன் அவ்வளவு சொல்லியும் கேக்காம ஒரு கலியாணத்தச் செய்து வச்சனான்.” என்றார் அவர்.
மலர்ந்திருந்த மகனின் முகம், பயம், பதட்டம், ஒதுக்கம் என்று எதுவுமற்று சிரித்த முகமாக இருந்த பல்லவி, ரேகாவின் மூன்று பிள்ளைகளோடும் விளையாடிய விதுரன் என்று, அவர்கள் மூவரையும் பார்த்தபோது வெகு திருப்தியாக நிறைவாக உணர்ந்தார்.
‘அடக்கடவுளே! ஒரு உடுப்புப் புதுசா போட்டதுக்கு இந்தப் பாடா?’ என்று அலுத்தான் பாலமுரளி. ஒன்று மட்டும் புரிந்தது. இவ்வளவு நாட்களும் இப்படிப் பார்த்ததுமே வித்தியாசமாகத் தெரிகிற அளவில்தான் அவனுடைய ஆடைகள் இருந்திருக்கின்றன. அதைக் கவனித்துவிட்டுத்தான் பல்லவியும் புதிது எடுத்திருக்கிறாள்.
அதை விளங்கிக்கொள்ளாமல் ஏன், எதற்கு என்று குறுக்கு விசாரணை செய்தால் சும்மா விடுவாளா? அதுதான் சத்தமே இல்லாமல் அவனை வைத்து வாங்குகிறாள். சிறு சிரிப்புடன் அவளைப் பார்க்க, அவளும் அவனைத்தான் பார்த்தாள். சொல்லத் தெரியாத இதம் ஒன்று அவன் மனத்தில் பரவியது. பார்வையை அகற்ற முடியாமல் நின்றான்.
வீடியோ கோலில் ரூபாவும் நல்ல மாதிரியே எல்லோரோடும் உரையாடினாள். குழந்தைகள் வெகு விரைவில் பிறந்துவிடுவார்கள் என்று பார்த்தாலே தெரியும் தோற்றத்தில் இருந்தாள் அவள்.
விருந்தும் மிகத் திருப்தியாக முடிந்தது. இது அவனுடைய தங்கை வீடு என்பதில், விதுரனைப் பற்றிய பயமற்று இலகுவாகவே இருந்தாள் பல்லவி. அதற்கு மாறாக உணவை முடித்ததுமே புறப்படவேண்டும் என்றான் பாலமுரளி.
“என்ன அவசரம் முரளி? வாங்க ஒருக்கா எங்கட தென்னந்தோப்புக்குப் போயிட்டு வருவம். இந்த வருசம் வச்ச கண்டுகள் சிலதுக்குப் புதுவிதமான பூச்சி வந்திருக்கு. என்ன செய்யலாம் எண்டு பாத்துச் சொல்லுங்கோ.” என்றபடி ரேகாவின் கணவன் கதிரவன், முரளியை அழைத்துக்கொண்டு போனான்.
ரேகா பாத்திரங்களை ஒதுக்க, அவளுக்கு உதவி செய்துகொண்டிருந்தாள் பல்லவி.
“உங்கட இந்த சாறி பிளவுஸ் நல்லாருக்கு அண்ணி. ஆர் தச்சுத் தந்தது? நானும் ஒவ்வொரு முறையும் ஒவ்வொருத்தரிட்ட எண்டு குடுத்துப் பாக்கிறன். ஒருத்தர் கூட எனக்குப் பிடிச்ச மாதிரித் தைக்கினம் இல்ல. ”
“நான்தான் தச்சனான்.” சின்ன சிரிப்புடன் சொன்னாள் பல்லவி.
“உண்மையாவா அண்ணி?” கைவேலையை நிறுத்திவிட்டு இவளைப் பார்த்து வாயைப் பிளந்தவளின் விழிகள், இவளையும் இவளின் சாறி பிளவுசையும் மாறி மாறிப் பார்த்தன.
“இதென்ன பார்வை? அந்தளவுக்கு நம்பேலாமயா இருக்கு?” அவளின் பாவனையில் முறுவல் விரியக் கேட்டாள் பல்லவி.
“அப்பிடி எண்டு இல்ல. நீங்க தைப்பீங்க எண்டு எதிர்பாக்கேல்ல. அதுதான். இனி நானும் உங்களிட்டயே தாறன்.” நன்றாகத் தைக்கக்கூடிய அண்ணி கிடைத்துவிட்ட துள்ளல் அவள் குரலில் தெரிந்தது.
“அது, அம்மா நல்லா தைப்பா. விசேச நாள் எண்டா ஓடர் கூட வரும். அப்ப விருப்பம் இல்லாமத்தான் அம்மாக்கு ஹெல்ப் பண்ணுவன். அந்த நேரம் பழகினது.” என்றவள் அதற்கு மேல் அதைப் பற்றிப் பேசமுடியாமல் நிறுத்திவிட்டாள்.
குடியும் கூத்தும் என்று திரிந்தவருக்கு மனைவியான பாவத்துக்கு அவர்களின் குடும்பத்துக்கே சோறு போட்டது அந்தத் தையல்தான். அன்றைக்கு அவளுக்கு அதெல்லாம் விளங்கியதே இல்லை. நாள் முழுக்க நாரி உளைய உளைய(வலிக்க வலிக்க) தைத்த அன்னையைக் காட்டிலும், மாலையில் வரும்போது அவளுக்குப் பிடித்த ஐஸ்கிறீமையோ, மிக்ஸரையோ மறக்காமல் வாங்கிக்கொண்டு வந்து தரும் அந்த மனிதர்தான் பாசமானவராகத் தெரிந்தார். ஒரு ரூபாய் செலவழிப்பதற்கும் கணக்குப் பார்த்து, கண்டித்து, அதட்டி உருட்டும் அன்னையை வில்லியாகத்தான் எண்ணியிருந்தாள்.
ஆனால் அதன்பிறகு… கசந்து வழிந்த எண்ணங்களை வலுக்கட்டாயமாக உதறித் தள்ளிவிட்டு, “என்ர தையல் மெஷின பெரியம்மா வீட்டில விட்டுட்டு வந்திட்டன். இல்லாட்டி நானே தச்சுத் தருவன்.” என்று ரேகாவிடம் சொல்லும்போதே பிள்ளைகளின் சத்தம் கேட்டது.
“ஆரம்பிச்சிட்டாங்கள்! பொறுங்க அண்ணி, என்ன எண்டு பாத்துக்கொண்டு வாறன்!” என்றபடி விறாந்தைக்கு நடந்த ரேகா, “டேய்! என்ன செய்றாய்? விடு அவனை!” என்று பதறியடித்துக்கொண்டு ஓடவும் இவளும் பின்னால் விரைந்தாள்.
அங்கு, விதுரனின் கையில் ரேகாவின் கடைசி மகன் அகப்பட்டிருக்க, தன் தம்பியைக் காப்பாற்றுவதற்காக விதுரனைப் பிடித்து இழுத்துக்கொண்டிருந்தான் மூத்தவன். ரேகா அவர்களைப் பிரிக்க முயன்றுகொண்டிருந்தாள்.
பார்த்ததும் பயந்துபோனாள் பல்லவி. “விதுரன், விடுங்கோ! என்ன பழக்கம் இது?” என்றபடி தானும் ஓடிவந்து விதுரனிடம் இருந்து சின்னவனை விடுவித்தாள்.
மூவரையும் பிரித்து முடிப்பதற்குள் பெரியவர்களுக்கு மூச்சு வாங்கியது.
மூத்தவனின் முதுகிலேயே ஒன்று போட்டாள் ரேகா. “என்னடா இது? அவே ரெண்டு பேரும் சின்ன பிள்ளைகள் எண்டா நீயும் இப்பிடித்தான் அடிபடுவியா? விதுரன் வந்தா சண்டை பிடிக்கக் கூடாது எண்டு சொல்லியிருக்கிறனா இல்லையா?” என்று அதட்டினாள்.
அவனுக்குக் கோபத்தில் முகம் சிவந்தது. “நான் அடிக்கேல்ல. அவன்தான் தம்பிக்கு நிகத்தால விறாண்டினவன். அவன்ர கைய பாருங்க. காயம் இருக்கு. அப்பிடிச் செய்யாத எண்டு சொன்னதுக்கு எனக்கு அடிக்க வந்தவன். நான் விலக என்ர ஷேர்ட்ட பிடிச்சு இழுத்துக் கிழிச்சிட்டான். அதுதான் அடிச்சனான்.” என்று கண்ணீருடன் சட்டையைக் காட்டினான்.
நெஞ்சின் மேல் இருக்கும் பொக்கெட் கிழிந்து தொங்கிக் கொண்டிருந்தது.
“அப்பா என்ர பேத்டேக்கு வாங்கித் தந்தது. விடுடா விடுடா எண்டு சொல்ல சொல்ல கேக்கவே இல்ல.” அவனுக்கு மூக்கு விடைத்துக்கொண்டு அழுகை வந்தது. பல்லவிக்குப் பார்க்கப் பாவமாயிற்று. விதுரன் மீது மிகுந்த கோபம் கொண்டு முறைத்துப் பார்த்தாள். அவன் அசையாமல் நின்றான்.

