“என்ன அடி அடிச்சிருக்கிறாய். நீ எல்லாம் பொம்பிளையாடி? ஈவு இரக்கம் மருந்துக்கும் இல்லை என்ன? உனக்கு நான் ரெண்டு போடவா? சொல்லு போடவா? தாங்கிறியா எண்டு பாப்பமா?” பல்லைக் கடித்தபடி அவளை நெருங்கினான்.
அச்சத்தில் விரிந்த விழிகளோடு பின்னால் சரிந்தாள் பல்லவி. உண்மையில் அடித்துவிடுவான் போலிருந்தது அவன் தோற்றம்.
“நான் தொட்டா பிடிக்காது, என்ர பிள்ளையைப் பாக்கேலாது எண்டா என்னத்துக்கு என்னைக் கட்டி இங்க வந்தனி? பிடிக்காதவள இழுத்து வச்சிருக்க எனக்கும் விருப்பம் இல்ல. நீ எழும்பு! எழும்பி நடையக் கட்டு!” என்றான் எந்த இரக்கமுமற்று.
அவளுக்கு முகம் கன்றியது. விழிகள் தளும்பிப் போயிற்று. “பிளீஸ்… ஏன் இப்பிடி எல்லாம் கதைக்கிறீங்க? நான் அந்த அர்த்தத்தில சொல்லேல்ல.” தழுதழுத்த குரலில் இயம்பினாள்.
“நீ எந்த அர்த்தத்தில சொல்லி இருந்தாலும் எனக்குத் தேவை இல்ல! உனக்கு இப்ப ரெண்டு சொயிஸ் தாறன். ஒண்டு, இப்பவே நீ போகலாம். உன்ன நான் தடுக்கமாட்டன். ரெண்டாவது, நீ இங்கயே இருக்கிறன் எண்டு சொன்னா என்ர பிள்ளையை ஒழுங்கா வளத்துத் தரவேணும். நீ அவனைப் பாத்துத் தாறதுக்குப் பதிலா உனக்கு மூண்டு நேரமும் சாப்பாடு போட்டு, உடு புடவைக்குக் குறையில்லாம வச்சிருப்பன்.” என்றான் கறார் குரலில்.
எவ்வளவு அடக்க முயன்றும் முடியாமல் விம்மிவிட்டாள் பல்லவி. அவனை மணந்துதான் இங்கு வந்தாள். அவனானால் என்னவோ வேலைக்கு ஆள் எடுத்ததுபோல் பேசுகிறானே. “நீங்க ஒண்டும் எனக்குச் சோறு போடத் தேவையில்லை. இப்ப நினைச்சாலும் எனக்கு வேல கிடைக்கும். என்னை நானே பாப்பன்.” என்றவளிடம், “அப்பிடி எண்டா இப்பவே நீ வெளில போகலாம்!” என்றான் அவன் முகத்தில் அடித்தாற்போல்.
துடிதுடித்துப்போய் அவனைப் பார்த்தாள் பல்லவி. எவ்வளவு இலகுவாகப் போ போ என்கிறான். அதுவும் திரும்ப திரும்ப. போக்கிடமற்றவள் என்பதால் வந்த துணிச்சலா இது? எதுவாயினும் அதுதானே உண்மை. எல்லையற்ற துயரால் நனைந்த விழிகளோடு அப்படியே அமர்ந்திருந்தாள்.
“இங்க பார், நீ என்ன நினைக்கிறாய், இல்ல, உனக்குள்ள என்ன ஓடுது எண்டு எனக்கு ஒண்டும் விளங்கேல்ல. ஆனா, உன்ன நான் ஏமாத்திக் கட்டேல்ல. எனக்கு ஒரு மகன் இருக்கிறான், வீட்டில இருந்து அவனை நல்லா பாக்கோணும், அதுக்குத்தான் உன்னக் கட்டுறன் எண்டு சொல்லித்தான் கட்டினனான். நீயும் ஓம் எண்டு சொன்ன பிறகுதான் இந்தக் கலியாணம் நடந்தது. சொன்ன சொல்லு மாறி நடக்கிறது நீ. உன்ன நம்பி ஏமாந்துட்டனே எண்டு அழவேண்டியது நான். ஆனா, பிள்ளையை வச்சுக்கொண்டு இருக்கிறன் எண்டுறதால அமைதியா போகவேண்டி இருக்கு. அதுக்காக இனியும் அவனில கைய வச்சியோ, எதைப் பற்றியும் யோசிக்காம இழுத்துக்கொண்டு போய் உன்ர பெரியப்பா வீட்டிலேயே தள்ளி விட்டுட்டு வந்திடுவன். எனக்கு என்ர பிள்ளை முக்கியம். ” என்றுவிட்டுப் போனான் அவன்.
தரையிலேயே ஒடிந்து கிடந்தாள் பல்லவி. யாரோ அடித்துத் துவைத்துக் காயப்போட்டது போல், உடலில் இருந்த அத்தனை சத்துக்களும் வெளியேறிய உணர்வு. இரவு வரைக்கும் அப்பாவையும் மகனையும் காணவில்லை. அவர்களும் அந்த வீட்டில் ஒருத்தி தனியாகக் கிடக்கிறாள் என்கிற அக்கறையற்றவர்கள் போன்று, ஒன்பது மணிபோல்தான் வீடு திரும்பினர்.
விதுரனைத் தூக்கிக்கொண்டு வந்தான் பாலமுரளி. அவன் முகம் சிவந்து, சோர்ந்து கிடந்தது. ஏன் இப்படி என்று புருவம் சுருக்கிக் கவனித்தபோதுதான், அவன் கால்களில் வரி வரியாகத் தடித்துச் சிவந்து கிடப்பது பட்டது. கடவுளே, எப்படித் துடித்திருப்பான். மளுக்கென்று சூடான கண்ணீர் அவளின் கன்னத்தில் இறங்கிற்று. ஓடிப்போய்த் தூக்கிக்கொள்ள மனம் பரபரத்தது. பாலமுரளிக்குப் பயந்து அப்படியே நின்றாள்.
“சா…ப்பாடு போடவா?”
ஏற்கனவே இறுகியிருந்த முகம் இன்னும் பாறையாக இறுக அமர்ந்திருந்தான் அவன். கலங்கிய விழிகளைத் துடைத்துக்கொண்டு உணவுத் தட்டையும் செம்பையும் அவன் முன் கொண்டுவந்து வைத்தாள். விதுரன் அவன் மடியிலேயே இருந்ததில், ஓடிப்போய் ஒரு கிண்ணத்தில் தண்ணீரைக் கொண்டுவந்து நீட்டினாள். அவனும் அதில் கையைக் கழுவிக்கொண்டான். அப்போதுதான், விதுரனை நெருக்கத்தில் கவனித்தாள் பல்லவி. கண்கள் சிவந்து, நல்ல காய்ச்சல் என்று பார்க்கவே விளங்கிற்று.
“பனடோல் தரவா?”
சரக்கென்று நிமிர்ந்து அவளைத் தன் விழிகளாலேயே எரித்தான் பாலமுரளி. “இல்ல… தம்பிக்கு காய்ச்சல் மாதிரி…” மேலே சொல்ல வரவில்லை அவளுக்கு.
மடியில் இருந்த ஒரு பையைத் தூக்கி அவளின் முன்னே போட்டான் அவன். வைத்தியரிடம் போயிருக்கிறான். அதற்கான மருந்துகள் அதற்குள் கிடந்தன. அந்தளவில் அடித்துவிட்டாளே. இப்போது அவள் நெஞ்சே அவளைக் குத்தியது.
வாயைத் திறக்கமாட்டேன் என்று அழுத மகனுக்கும் கொடுத்து, தானும் சாப்பிட்டு முடித்தான் பாலமுரளி.
வீதியில் விழுந்தபோது பல்லவியின் பின்பக்கத் தலையில் கல்லுக் குத்தியிருந்தது. அந்த இடத்தில் இப்போதும் சுளீர் சுளீர் என்று இழுத்து இழுத்து வலித்தது. பரசிட்டமோல் போடுவதற்குச் சாப்பிட வேண்டும். போ போ என்று துரத்தியவனின் வீட்டில், அவன் பிள்ளையைப் பார்ப்பதற்குக் கூலியாக உணவும் உடையும் தருகிறேன் என்றவனின் காசில் சாப்பிடப் பிடிக்கவில்லை. கூடவே, விதுரனின் நிலையும் சேர்ந்து, நீ இப்படி நடந்திருக்கக் கூடாது என்று குத்தியது.
ஆனால், எத்தனை நாட்களுக்குச் சாப்பிடாமல் இருக்க முடியும்? நிரந்தரமாகச் செயல்படுத்த முடியாத ஒரு முடிவை ரோசத்தில் எடுத்துக் காணப்போவது என்ன? படுமோசமாகத் தோற்பது மட்டும்தானே. ஒரு பிடிவாதத்துடன் உணவை அள்ளி வாயில் வைத்தாள். தன்மானம் தொண்டைக்குள் நின்று வழிவிட மாட்டேன் என்றது. கண்ணீரும் தண்ணீருமாக இரண்டு வாய் விழுங்கிவிட்டு, பரசிட்டமோல் போட்டுக்கொண்டு படுத்தாள்.
அப்போதும் உறக்கம் வரவில்லை. விதுரனின் நினைவாகவே இருந்தது. அதுவும் வரி வரியாகத் தடித்திருந்த பிஞ்சுக் கால்களை நினைக்க நினைக்க,நெஞ்சில் வலித்தது.
கைப்பேசியில் நேரத்தைப் பார்த்தாள். பன்னிரண்டு தாண்டியிருந்தது. எப்படியும் அப்பாவும் மகனும் உறங்கியிருப்பார்கள். எழுந்து, அவன் வாங்கி வந்திருந்த கிறீமை எடுத்துக்கொண்டு, கைபேசியின் வெளிச்சத்தைப் பயன்படுத்தி, அவர்களின் அருகே சென்று அமர்ந்தாள்.
விதுரனின் கால்களைப் பார்க்க மீண்டும் கண்ணீர் பெருகியது. அடக்கிக்கொண்டு டியூபை மெதுவாகப் பிதுக்கி, ஒற்றை விரலில் கிறீமை எடுத்து, அவன் விழித்துவிடாதபடிக்கு மென்மையாகத் தடவினாள்.
திடீரென்று எழுந்து அமர்ந்தான் பாலமுரளி. இதை எதிர்பாராத பல்லவி மிகுந்த அச்சத்துடன் அவனைப் பார்த்தாள். அவன் அவளையும் அவள் கையில் இருந்த டியூபையும் பார்க்க, “அது கிறீம்… காயத்த காயவிடாம பூசினா நல்லம்…” என்று திக்கித் திணறினாள் அவள்.
அவன் ஒன்றும் சொல்லாமல் இருக்க வேகமாகப் பூசிவிட்டு, “சொறி!” என்றாள் அழுகுரலில். அவன் தேகம் விறைப்புற்று நிமிர்வது அந்த இருட்டிலும் தெரிந்தது. அவளுக்கே இப்படி வலிக்கிறதே. அவனைப் பெற்றவனுக்கு எப்படி இருக்கும்? கண்களில் கண்ணீர் பெருக, “சத்தியமா இனி கைவைக்க மாட்டன்!” என்றுவிட்டு எழுந்து அறைக்குள் ஓடினாள்.

