பல்லவி 18 – 1

அத்தியாயம் 18

பாலமுரளி கட்டிவந்தவள் விதுரனுக்கு அடித்துவிட்டாளாம் என்று ஊர் முழுக்கப் பரவிற்று. என்னவோ அவள் கொடுமைக்காரி என்கிற அளவுக்கு வெளியில் தலைகாட்டவே வெட்கினாள் பல்லவி. ‘என்ன இருந்தாலும் பெத்தவளா? இல்லத்தானே.’, ‘தாய் இல்லாட்டி இப்பிடித்தான்.’ என்கிற வார்த்தைகள் காதில் விழுந்ததில் துடித்துப்போனாள்.

தினமும் பேசும் கலாவதி, கடந்த இரண்டு நாட்களாக அழைக்காததிலேயே, அங்கு வரைக்கும் செய்தி போய்விட்டது புரிந்தது. பாலமுரளிதான் சொல்லவேண்டும் என்று அவசியமில்லை. அயலட்டை மனிதர்கள் ஏதோ ஒரு வகையில் உறவு அல்லது நெடுங்காலத்து நண்பர்கள். அவர்கள் அவரின் பேரன் பற்றிய செய்தியை அவரிடம் கொண்டு போகாமல் இருப்பார்களா?

அவரும் நிச்சயம் பாலமுரளியை விசாரித்திருப்பார். அவனும் அவர் கேள்விப்பட்டது உண்மைதான் என்று சொல்லியிருப்பான்.
எல்லாம் சரிதான். அவர் கூடவா அவளைத் தவறாக நினைக்கிறார்?

விதுரனுக்குக் கால்களில் இருந்த தடிப்பு இன்னும் மறையவில்லை. காய்ச்சல் குறைந்திருந்தாலும் முற்றிலும் விடவில்லை என்பதில் நேசரிக்கு விடவில்லை. கங்காரு குட்டியைக் காவுவதுபோல், அவனைத் தன்னுடனேயே வைத்துக்கொண்டான் பாலமுரளி. அதுவேறு அவளைக் குத்தியது.

விதுரனோடு பேசி, அவனைச் சமாதானம் செய்வோம் என்றால் அதற்கான சந்தர்ப்பத்தை பாலமுரளி அவளுக்குக் கொடுக்க மறுத்தான். விதுரனும் அவளின் முகம் பார்ப்பதே இல்லை.

முதலும் தகப்பன் செல்லம். இப்போதோ இன்னும் அவன் கழுத்திலேயே தொங்கினான். அவனும் சேர்ந்து அவளை விலக்கி வைக்கிற ஒவ்வொரு பொழுதுகளிலும் தனக்குள் அழுதுகொண்டிருந்தாள் பல்லவி.

அன்று, சமைத்துக்கொண்டிருந்தவளிடம், “வெளிக்கிடு!” என்றபடி வந்து நின்றான் பாலமுரளி.

திடீரென்று வெளிக்கிடு என்றால் எங்கே? புருவம் சுருக்கிக் கேள்வியாக ஏறிட்டாள்.

“அது…” என்று தயங்கி, பின் சொல்லாமல் விடமுடியாது என்று முடிவெடுத்து, “உன்ர அப்பாக்கு கல்லீரல்ல ஏதோ பிரச்சினையாம். மயங்கி விழுந்து ஹொஸ்பிட்டல்ல சேர்த்திருக்காம். கான்சர் போல. சீரியசாம். வா போய்ப் பாத்துக்கொண்டு வருவம்.” என்றான் அவன்.

இதற்குத்தானா இந்த ஆர்ப்பாட்டம் என்பதுபோல் பார்த்துவிட்டுத் திரும்பி அடுப்பில் கிடந்த கறியை நிதானமாகக் கிளறினாள் பல்லவி.

அவளின் அந்த அலட்சியம் அவனுக்கு எரிச்சலை உண்டாக்கிற்று. “என்ன நீ? நான் என்ன சொல்லிக்கொண்டு இருக்கிறன். நீ என்ன செய்றாய்?” என்றான் சற்றே சூடாகிவிட்ட குரலில்.

“எனக்கு ஆரையும் பாக்க விருப்பம் இல்ல.”

குழப்பத்துடன் அவளைப் பார்த்தான் பாலமுரளி. இவளுக்கு அவன் சொன்னது விளங்கவில்லையா? அல்லது, வேண்டுமென்றே செய்கிறாளா? திருமணம் பேசும்போது விசாரித்ததில் அவள் வீட்டு விடயங்கள் அவனுக்கும் தெரியும். அவள் அவளின் தகப்பனோடு கதைப்பதில்லை என்பதையும், அதனால் அவர் திருமணத்துக்கு வரவில்லை என்பதையும் அறிந்துதான் இருந்தான்.

அந்த நேரம், அது அவளின் விருப்பம் என்று எண்ணி, அதைப் பற்றிப் பெரிதாக அலட்டிக்கொள்ளவில்லை. ஆனால், இன்றைய அவரின் நிலையை அறிந்தும் அசையாமல் இருந்தவள் அவனுக்குக் கோபமூட்டினாள்.

“உங்களுக்க ஆயிரம் பிரச்சினை இருக்கலாம், அவர் பிழை செய்திருக்கலாம். எண்டாலும் அவர் உன்னப் பெத்த அப்பா. உயிருக்கே ஆபத்தான நிலையில இருக்கேக்கையுமா உனக்கு மனம் இரங்க இல்ல?”

“இல்ல! இரங்க இல்ல! இண்டு வரைக்கும் நான் படுற பாடெல்லாத்துக்கும் காரணம் அந்த ஆள்தான். வெளில போ எண்டு நீங்க சொல்லியும் போக்கிடம் இல்லாம இஞ்சயே இருக்கிறனே. இதுக்குக் காரணமும் அந்த ஆள்தான். அப்பிடியான அந்தாள கடைசி வந்தாலும் பாக்க நான் வரமாட்டன்!” அழுத்தம் திருத்தமாக அறிவித்தாள் அவள்.

“தப்பித்தவறி நடக்கக் கூடாத எதுவும் நடந்திட்டா?”

“செத்திட்டாலும் எண்டு கேக்கிறீங்களா? என்னைப் பொறுத்த வரைக்கும் எண்டைக்கு அம்மா தூக்குல தொங்குறத என்ர ரெண்டு கண்ணாலயும் பாத்தனோ அப்பவே அந்தாள் செத்திட்டார்.” என்றாள் அப்போதும் உறுதியான குரலில்.

திகைப்புடன் அவளைப் பார்த்தான் பாலமுரளி. அவர் செய்தது பெரும் தப்புத்தான். அவளின் கோபத்திலும் நியாயம் இருக்கிறதுதான். இருந்தாலும் இந்த நேரத்திலுமா இப்படிப் பேசுவது? என்ன பெண் இவள்? அதுவும் பெற்ற தகப்பனைப் பற்றி.

மனதில் கசப்பு மேலிட, “நீ பெறாத பிள்ளையிலதான் பாசமில்ல எண்டு பாத்தா, உன்னைப் பெத்த தகப்பனிலயும் உனக்குப் பாசம் இல்லை என்ன? உன்ர மனம் ஆருக்காகவும் இரங்காதா? அந்தளவுக்கு அரக்கியா நீ?” என்றான் வெறுப்புடன்.

சுருக்கென்று நெஞ்சைத் தைத்தது அவன் வார்த்தைகள். விழிகளை ஒருமுறை மூடித் திறந்தாள். பின், நிதானமாக அவனை ஏறிட்டு, “ஓம், நான் அரக்கிதான்!” என்றாள்.

அதற்குமேல் அவளிடம் பேசப் பிடிக்காமல் விருட்டென்று அங்கிருந்து போனான் பாலமுரளி. கடைசியில் அவனும் விதுரனும் மாத்திரமே அவரைச் சென்று பார்த்துவிட்டு வந்தனர். பிறகும், எப்படி இருக்கிறார் என்று கூட அவனிடம் விசாரிக்காதவளின் முகம் பார்க்கவே பிடிக்காமல் போயிற்று.

அவனும் மகனும் முற்றிலுமாக அவளிடமிருந்து விலகியே இருந்தனர்.

அன்று காலை, பல்லவி வெற்றிலைகளைப் பிடுங்கிக் கட்டிக்கொண்டிருக்க, பாலமுரளி மாடுகளுக்கு வைக்கோல் போட்டுக்கொண்டிருந்தான். தன் வளவுக்குள்(காணிக்கும்) நின்ற சுதா இவர்களைக் கண்டுவிட்டு, “என்ன முரளி அண்ணா, கற்கண்டுதான் தரேல்ல, நாலு டொஃபியாவது வாங்கித் தந்திருக்கலாம்தானே? நீங்க இந்தளவுக்குக் கஞ்சனா இருப்பீங்க எண்டு நான் எதிர்பாக்கவே இல்ல.” என்று குரல் கொடுத்தாள்.

“மனுசன் சாப்பாட்டுக்கே வழி இல்லாம இருக்கிறான். இதுக்க உனக்குக் கற்கண்டு கேக்குது. உன்னட்ட இருந்தா எனக்கும் தா! அது இனிப்பா புளிப்பா எண்டே மறந்து போச்சு.” என்று அவளுக்கு இணையாகப் பதில் கொடுத்தான் அவன்.

“பாத்தியா பல்லவி உன்ர மனுசன? ஆணும் பெண்ணுமா ரெண்டு மருமக்கள் பிறந்து மூண்டு நாளாச்சு. ஒரு ரூபா செலவழிக்காம ஆள் தப்பி ஓடுது.” என்று பரிகசித்தாள் அவள்.

“ஆருக்கு பிள்ளை பி…” என்று ஆரம்பித்தவள் வேகமாக ஓடிப்பிடித்து, “ரூபா மச்சாளுக்கா?” என்றாள் திகைப்புடன்.

அவளின் கேள்வியில் இப்போது அவர்கள் இருவரும் திகைத்தனர். “உனக்குத் தெரியாதா?” என்றனர் ஒன்றாக.

பெரும் அவமானமாக உணர்ந்தாள் பல்லவி. முகமே சிவந்து போயிற்று. பதில் சொல்லாமல் உதட்டைக் கடித்தபடி வெற்றிலைகளைக் கட்டுவதுபோல் பாசாங்கு செய்தாள். ‘என்ன அண்ணா இது?’ என்று சிறு கண்டனத்துடன் அவனைப் பார்த்துவிட்டுப் போனாள் சுதா.

“பிள்ளைகள் பிறந்தது உனக்குத் தெரியாதா?” என்றான் பாலமுரளி மீண்டும்.

அவனைப் பாராமல் மறுத்துத் தலையசைத்தாள்.

“அம்மா எடுத்துச் சொல்லேல்லையா?” அவனால் இன்னுமே நம்ப முடியவில்லை. அன்னை அப்படிச் செய்திருக்க மாட்டாரே.

“இல்ல.” என்றாள் அடைத்த குரலில்.

பாலமுரளிக்கு ஒருமாதிரி ஆகிப்போயிற்று. என்ன இருந்தாலும் வீட்டுப் பெண்ணிடம் சொல்லாமல் விட்டது தவறாயிற்றே. அவனாவது சொல்லியிருக்கலாம். “நான் அம்மா சொல்லியிருப்பா எண்டு நினைச்சன்.” என்றான் தடுமாறி.

அவன் முன்னே அழுதுவிடுவோமோ என்று பயந்து, விறுவிறு என்று வீட்டுக்குள் ஓடினாள் பல்லவி. அந்த நொடியில், அந்த வீட்டில், தன் நிலையை மிக மிக மோசமாக உணர்ந்தாள். அன்றைய பாலமுரளியின் பேச்சிலேயே அவன் வீட்டில் இருப்பதையும், அவன் பணத்தில் உண்பதையும் மிகுந்த அவமானமாக உணர்ந்தவள், கலாவதியின் செய்கைக்குப் பிறகு இனியும் இப்படி இருக்கக் கூடாது என்று முடிவெடுத்தாள்.

சின்னதாகவேனும் ஒரு உழைப்பும், அதனால் கிடைக்கிற வருமானமும் ஒரு பெண்ணுக்குத் தருகிற தெம்புக்கு எதுவும் இணையில்லை என்பதை அன்று மீண்டும் உணர்ந்தாள்.

என்ன செய்வது என்று சிந்தித்தவள், பாலமுரளி பால் கான்களுடன் வெளியேறியதும் தவகணேசனுக்கு அழைத்து எப்படியாவது அவளின் தையல் மெஷினைக் கொண்டுவந்து தரச் சொன்னாள்.

சற்று நேரத்திலேயே கலாவதி அழைத்தார். யாரால் என்று தெரியாதா? ஏற்றாள். அவரும் என்னென்னவோ சொல்லிச் சமாளித்தார். ரூபாவதியும் பேசினாள். இருபக்கமும் மனத்தளவில் மற்றவரிடமிருந்து விலகியே நின்றனர். ஆனாலும், எதையும் காட்டிக்கொள்ளாமல் பூசி மெழுகிப் பேசிவிட்டு அழைப்பைத் துண்டித்தனர்.

பக்கத்து வீட்டில் இருந்தாலும் நடப்பதையெல்லாம் கவனித்துக்கொண்டுதானே இருக்கிறாள் சுதா. அன்று மாலை, “பல்லவி!” என்று குரல் கொடுத்தபடி கேட்டைத் திறந்துகொண்டு வந்தாள்.

“வாங்க அக்கா.” வீட்டுக்குள் இருந்த பல்லவி
வாசலுக்கு வந்து வரவேற்றாள்.

“என்ன வெக்கை என்ன? போற போக்கில எல்லாரும் கருவாடாத்தான் அலையப்போறம் பார்.” என்றபடி வெளிக் கட்டிலேயே அமர்ந்துகொண்டாள் சுதா.

“சமையல் முடிச்சிட்டியா?”

“இன்னும் இல்லை. இரவுச் சாப்பாட்டுக்கு நேரம் இருக்குத்தானே. இடியப்பம் அவிப்பம் எண்டு இருக்கிறன்.”

வெளிக்கட்டில் இருந்து பார்க்கும்போதே விறாந்தையில் ஒரு கரையாக இருந்த தையல் மெஷின் தெரிந்தது. அதைப் பார்த்துவிட்டு, “என்ன புதுசா மெஷின் எல்லாம் வீட்டுக்கு வந்திருக்கு.” என்று வினவினாள் சுதா.

“இப்ப கொஞ்சத்துக்கு முதல்தான் பெரியப்பா கொண்டுவந்து இறக்கிப்போட்டுப் போறார் அக்கா. நான் நல்லா தைப்பன். வீட்டு வேல முடிஞ்ச பிறகு சும்மாதானே இருக்கிறன். அதான், சாறி பிளவுஸ், சட்டை எண்டு தச்சா பிரயோசனமா இருக்கும் எண்டு நினைச்சன்.” விழிகளை எட்டாத முறுவலோடு சொன்னாள் பல்லவி.

அவளை ஒருமுறை பார்வையால் அளந்துவிட்டு, “முரளி அண்ணாவோட இன்னும் சமாதானம் ஆகேல்லையா பல்லவி?” என்று மென் குரலில் வினவினாள் சுதா.

மளுக்கென்று விழிகளில் நீர் கோர்த்தது அவளுக்கு. மனத்தில் இருப்பதை எல்லாம் கொட்டி அழுதால் நன்றாக இருக்கும் போலிருந்தது. அப்படிச் சொல்வதும் பிடிக்கவில்லை. இதுநாள் வரையில் அது பழக்கமும் இல்லை. அதில், ஒன்றும் சொல்லாமல் அமர்ந்திருந்தாள்.

error: Alert: Content selection is disabled!!