பல்லவி 18 – 2

சுதாவும் மேலே தூண்டவில்லை. முற்றத்தில் நின்ற குரோட்டன்களின் மீது விழிகளைப் படரவிட்டபடி பேசினாள். “சின்ன வயதில இருந்தே எல்லாருக்கும் எல்லாத்தையும் பாத்துப் பாத்து செய்த முரளி அண்ணான்ர ஒரே சந்தோசம் விதுரன் மட்டும்தான் பல்லவி. அதுதான் அவனுக்கு நீ அடிச்சதால நல்லா கோவம் வந்திட்டுது போல.”

பல்லவிக்கும் அது புரிந்துவிட்டதுதான். அதுவும், விதுரனின் கால்களில் இருந்த தடிப்பைப் பார்த்தபோதே தன் தவறை நன்றாக உணர்ந்துவிட்டாள். என்ன இருந்தாலும் குழந்தை அவன். எப்படித் துடித்திருப்பான்? பெற்ற மகனின் அந்த நிலையைப் பார்த்த எந்தத் தகப்பனுக்குத்தான் கோபம் வராது?

“இந்த வீட்டுக்கே அவன்தான் செல்லம். ரூபா இருந்த காலத்திலயும் அவன் சொல்லுறது மட்டும் தான் நடக்கும். ரேகா வீட்டிலேயும் என்ன நடந்தாலும் ஒரு குறை கதைக்க மாட்டினம். வெளிப்படையா முரளி அண்ணா சொல்லாட்டியும் மகனை ஒரு வார்த்த சொன்னா அவருக்குப் பிடிக்காது எண்டு எல்லாருக்கும் தெரியும்.”

அது அவளுக்கே தெரியும் என்பதில் பேசாமல் இருந்தாள் பல்லவி.

“தாயில்லாப் பிள்ளை எண்டு ஊர்ச் சனமும் அவனோட பாசமாவும் பரிவாவும்தான் நடக்கிறவே. கலா மாமிக்கும் வயது. பேரனை ஒரு சொல்லுச் சொல்லமாட்டா. அவன் என்ன சொல்லுறானோ அதுதான். எத்தனையோ நாள் குளிக்காமையே நேசரிக்குப் போயிருக்கிறான். வீட்டில சாப்பிடாட்டி மாமியே ஃபோன போட்டு முரளி அண்ணாவ ஏதாவது கடையில வாங்கிக்கொண்டு வரச் சொல்லுவா. நேரம் காலம் பாக்காம விளையாடுவான். ரோட்டில வந்து நிண்டு பேரனுக்குக் காவல் காப்பாவே தவிர, அவனைப் பேச மாட்டா.” என்றுவிட்டு அவள் முகம் பார்த்தாள் சுதா.

அதனால்தான் இப்படியாகிப்போயிருக்கிறான் என்று உள்ளே ஓடினாலும் ஒன்றும் சொல்லவில்லை அவள்.

“இப்பிடி இருக்கேக்கதான் திடீரெண்டு நீ வந்தாய். மாமியும் போய்ட்டா. அவன் சின்ன பிள்ளை. வெளில காட்டிக்கொள்ளத் தெரியாட்டியும் அதுவே அவனை மனதளவில நிறையப் பாதிச்சு இருக்கும். இதுல நீ வேற வந்ததும் வராததுமா விடிய எழும்பு, குளி, சாப்பிடு, படி எண்டு கண்டிப்ப காட்ட அவனுக்கு அதெல்லாம் பிடிக்கேல்ல. அதுல கோபம் வருது. சும்மாவே சின்னப்பிள்ளைகளப் பிடிக்காததைச் செய்ய வைக்கிறது கடினம். இதுல, புதுசா வந்த நீ அவன்ர மனதில இடம் பிடிக்க முதல் இப்பிடி நடக்க அவனுக்கு நீ பொல்லாதவளாத்தான் தெரியிறாய். அதுதான் வெறுப்பைக் காட்டுறான்.” என்று அவள் சொன்னபோது, அதிலிருந்த உண்மை சுட்டதில், இவள் கன்னத்தில் கோடு இழுத்துக்கொண்டு ஓடியது கண்ணீர்.

அதைக் கவனித்துவிட்டு அவளைத் தட்டிக்கொடுத்தாள் சுதா.

“என்னத்துக்கு அழுறாய் பல்லவி? உன்ன நான் குறை சொல்லேல்ல. நீ செய்ததும் பிழை இல்ல. ஒரு பிள்ளைய அப்பிடித்தான் வளக்கோணும். என்ன, நீ அவனைப் பெத்து, பாத்து பாத்து வளத்து அம்மா ஆகேல்ல. அதால அவனுக்கு உன்னில எந்தப் பாசமும் இல்ல. அதாலேயே உன்ர கண்டிப்பு வெறும் கண்டிப்பா மட்டும்தான் அவனுக்குத் தெரியுது. அதுக்குப் பின்னால இருக்கிற அக்கறை, பாசத்த ஆராஞ்சு நடக்கிற வயசும் அவனுக்கு இல்ல. அதால, நீ கண்டிப்ப காட்ட அவனுக்குக் கோபம் வருது. நீ சொல்லுறதுக்கு எதிரா நடக்க வைக்குது.” என்ற சுதா பல்லவியைப் பார்த்து,

“நான் பாக்க பிறந்து வளந்த பிள்ளை அவன் பல்லவி. சத்தியமா சொல்லுறன், அண்டைக்கு மாதிரி ஒரு மூர்க்கத்த அவனிட்ட நான் பாத்ததே இல்ல. திகைச்சுப் போனன். என்ன நடந்தது, ஏன் விதுரன் இப்பிடி ஆகிட்டான் எண்டு யோசிச்சுப் பாக்கத்தான் எனக்கு இது விளங்கினது.” என்றவளிடம் புரிந்தது என்பதுபோல் தலையை ஆட்டினாள் பல்லவி.

“அவன் சின்னப்பிள்ளை. அவனிட்ட போய் பாத்து நடவப்பு, பாசமா இரு தம்பி, அவள் உன்ர அம்மா எண்டு சொல்ல ஏலாது. சொன்னா விளங்கவும் மாட்டுது. அந்த மாற்றம் அவனுக்கு இயல்பா நடக்கோணும். அதுக்கு நீ கொஞ்சம் கூடுதலா கவனமா இருக்கோணும். அதுதான் எனக்குத் தெரிஞ்சதை உன்னட்ட சொல்லுறன். முதல் நீ ஒரு அம்மாவா இல்லாட்டியும் அவனுக்குப் பிடிச்ச ஒருத்தியா அவன்ர மனசில இடம் பிடிக்கோணும். உன்னில அவனுக்குப் பாசம் வரோணும். அப்பதான் நீ சொல்லுறதை அவனும் கேப்பான்.” என்றபோது தான் எங்கே தவறினோம் என்று அவளுக்குப் புரிந்தது.

“உனக்கும் பிள்ளை வளத்து முன்பின் அனுபவம் இல்ல. திடீரெண்டு அஞ்சு வயசு பிள்ளைக்கு அம்மாவா இரு எண்டா உனக்கும் என்ன தெரியும், சொல்லு? ஒரு பிள்ளை பிறந்த பிறகு அந்தப் பிள்ளை மட்டும் வளருறேல்ல. அந்த அம்மாவும் பிள்ளையைப் பற்றின சின்ன சின்ன விசயங்களைத் தெரிஞ்சுகொண்டு ஒரு அம்மாவா வளருவா. அப்பதான் அவவுக்கு அந்தப் பிள்ளையை எப்பிடி ஹாண்டில் பண்ணுறது எண்டு தெரியவரும். அது உனக்கு விதுரன்ர விசயத்தில நடக்கேல்ல. அதாலதான் நீயும் அவனும் முட்டிக்கொண்டு நிக்கிறீங்க. அதுக்காக நீ இன்னுமின்னும் ஒதுங்கிப் போகாத. அப்பாவும் மகனும் விறைச்சுக்கொண்டு திரிஞ்சாலும் பாவப் பட்டதுகள். நீதான் ரெண்டு பேரையும் பாக்கோணும். முரளி அண்ணாக்கும் உன்ன விட்டா ஆரு இருக்குச் சொல்லு?” என்றவளின் கேள்வியில் அவளுக்குக் கண்ணீர் மல்கியது.

அவளுக்கு ஆறுதலுக்கு எப்படி யாரும் இல்லையோ, அப்படித்தான் பாலமுரளிக்கும். மகனுக்கு அவன் இருக்கிறான். அவனுக்கு? தாய் சகோதரிகளிடம் தன் மனக்குறையைச் சொல்வான் என்கிற நம்பிக்கை அவளுக்கில்லை. அவன் வார்த்தைகள் அவளைக் காயப்படுத்தியிருந்தாலும் அவனிடத்தில் இருந்து யோசிக்கையில் அவனது கோபம் சரியாகவே பட்டது.

“இவ்வளவு நாளும் யோசிச்சதுல எனக்கே என்ர பிழை என்ன எண்டு விளங்கிட்டுது அக்கா. என்ன, இவர்தான் அண்டைக்குப் பிறகு தம்பிய என்னட்ட விடுறாரே இல்ல.” மனக்குறையோடு சொன்னாள் அவள்.

“விடு! இந்த ஆம்பிளைகளே இப்பிடித்தான். என்னவோ பெரிய இவே மாதிரி நாலு நாளைக்கு முகத்தைத் திருப்பிக்கொண்டு திரிவினம். பிறகு, ஒண்டுமே நடக்காத மாதிரி எங்களிட்டத்தான் வந்து நிப்பினம். அண்ணாவும் வருவார் கொஞ்சம் பொறு.” என்றாள் அனுபவம் வாய்ந்தவளாக.

“மணி அண்ணாவும் இப்பிடியா அக்கா?” என்று அவளின் கணவனைப் பற்றி விசாரித்தாள். உண்மையில் அவளுக்கு அது தெரியவேண்டியிருந்தது. இல்லறத்தின் சூட்சுமங்களையும் சூத்திரங்களையும் இப்போதுதானே அறிய ஆரம்பித்திருக்கிறாள்.

“பின்ன? என்னவோ அவே மட்டும்தான் பிள்ளைகளில பாசம் மாதிரியும், நாங்க வில்லிகள் மாதிரியும் நடிப்பினம். ஆனா, பிள்ளைகள் ஒரு பிழை செய்தா மட்டும் என்ன வளப்பு வளத்து வச்சிருக்கிறாய் எண்டு எங்களோட மல்லுக் கட்டுறது. பேசக் கூடாது, திட்டக் கூடாது, கண்டிக்கக் கூடாது, அடிக்கக் கூடாது எண்டா எப்பிடி பிள்ளை வளக்கிறது, சொல்லு? இதுல இவே வேற செல்லம் குடுத்துக் கெடுக்கிறது. உனக்கு இப்பதானே கலியாணம் நடந்திருக்கு. அதுதான் ஒரு சின்னப் பிரச்சினைக்கே மூக்கை உறிஞ்சிக்கொண்டு திரியிறாய். நான் எல்லாம் நீ சொல்லுறதச் சொல்லு நான் செய்றதத்தான் செய்வன் எண்டுபோட்டுப் போயிடுவன்.” என்றவளின் பேச்சில், பல்லவியின் முகத்தில் மெய்யாகவே முறுவல் மலர்ந்தது.

error: Alert: Content selection is disabled!!