மாதொரு பாகம் கொண்டான் 31 – 1

MPK 31
ஆட்டோவின் திறந்திருந்த இரு பக்கங்களும் காற்றையள்ளி வாரி உள்ளே இறைத்துக் கொண்டிருக்க, அதன் பயனாய் முகத்தில் வந்து விழுந்த முடிகளை ஒதுக்கி விட்டபடியே A9 ரோட்டில் பயணப்பட்டுக் கொண்டிருந்தாள் சாதனா.

பிள்ளைகளைப் பாடசாலையில் இருந்து அழைத்து வர சென்று கொண்டிருக்கிறாள்.

கழுத்தின் முன்புறம் வந்து விழுந்த முடிகளை எல்லாம் ஒதுக்கிப் பின்புறம் தள்ளி விடுகையில் தற்செயலாய் தாலிக்கொடி கையில் தட்டுப்பட்டது.

மறுமுறை அவளாகவே முடியை ஒதுக்குவது போல் பாவனை செய்து அழுத்தமாக அதை ஒருமுறை வருடிக் கொண்டாள். தன்னால் அவள் இதழ்கள் புன்னகையை சூடிக் கொண்டன.

தன் வசதிக்கு வஞ்சகம் வைக்காமல் நல்ல கனமாகவே தாலிக் கொடியை செய்திருந்தான் ஆதித்யன்.

திரைப்படங்களில் காட்டுவது போல் தினமும் தாலிக்கொடி போட்டுக்கொள்ளும் வழக்கம் இலங்கையில் இருந்திருந்தால் சாதனா ரெகுலர் பேஷண்டாக அவனிடமே ட்ரீட்மெண்ட் எடுத்துக்கொள்ள வேண்டியதுதான்.

பரமேஸ்வரியின் அன்புக் கட்டளைக்கு அடிபணிந்து வெள்ளிக்கிழமைகளில் மாத்திரம் அதைப் போட்டுக் கொள்வதுண்டு சாதனா.

அவள் கழுத்துக்குக் கனம் தரும் பொருளால் உண்டான உறவுதான் அவள் நெஞ்சில் நீண்ட வருடங்களாக சுமந்திருந்த பாரங்களை அடியோடு அகற்றி மனதை லேசாக்கி இருக்கிறது என்ற உணர்வு அவளுக்கு ஒரு ஆழ்ந்த அமைதியைக் கொடுக்கும்.

அந்த நன்றிக்கடனுக்காகவே அவர்கள் காலில் செருப்பாய் தேயலாம் என்று தோன்றும். இந்த எண்ணம் மட்டும் பரமேஸ்வரிக்கோ ஆதித்யனுக்கோ தெரிந்தால் பார்வையாலேயே இவளை எரித்து விடுவார்கள்.

ஆதலால் மெய்யன்பின் வழி நின்றும் தான் ஏற்றுக் கொண்ட பாத்திரத்துக்குண்டான பொறுப்புணர்ந்தும் தன் கடமைகளைத் திறம்பட ஆற்றி வந்தாள். பிள்ளைகளுக்கும் பரமேஸ்வரிக்கும் மாத்திரமே!

ஆதித்யனோடு அவள் உறவு எப்படி என்றால், சொல்லத் தெரியவில்லை.

இதுவரை கீழ்தளத்தில் பிள்ளைகள் மற்றும் பரமேஸ்வரியின் அறை, சமையலறை தாண்டி அந்த வீட்டைப் பார்த்திராதவள் திருமணமான அன்றுதான் மேல்தளத்தையே முதன் முதலில் பார்த்திருந்தாள்.

கீழே வீட்டின் பாதியிடத்தைக் கிளினிக்கிற்கு எடுத்துக் கொண்டதால் பெரிதாக ஒன்றும் தெரியவில்லை. ஆனால் மேல் தளத்தில் மூன்று பிரம்மாண்ட படுக்கையறைகள் இரண்டு சின்ன அறைகள் அதோடு சுவாமியறை என்று வீடு இவர்கள் தேவைக்கு அதிகமாகவே இருந்தது. அதையெல்லாம் பார்க்க அவளுக்கு உண்மையில் மலைப்பாக இருந்தது.

தன்னை அறிந்தவர்களால் தன்னை இங்கே பொருத்திப் பார்க்க நிச்சயம் முடியாது. குப்பையைக் கொண்டுவந்து கோபுர மேட்டில் வைத்ததாகத்தான் சொல்வார்கள்.

ஆனால் இவர்களுக்கு இந்த வசதியெல்லாம் குப்பை போலத்தான். அதைப் பெரிதாகப் பார்க்காததால்தானே தன்னைப் போல் ஒருத்தியை மருமகளாக ஏற்றுக் கொண்டார்!

முதல்நாள் இவள் சுவாமியறையில் விளக்கேற்றுவதைப் பார்க்கவென்று மிகவும் கடினப்பட்டு படியேறி வந்த பரமேஸ்வரியின் அன்பைப் பண்பை எல்லாம் என்னவென்று சொல்ல?

இப்படி மாமியாருக்கே அதிகம் யோசித்தவள் கணவன் என்று ஒருவன் உள்ளானே! அவனுக்கும் சேர்த்துக் கொஞ்சம் கவலைப்படுவோமே என்று யோசிக்க மறந்திருந்தாள்.

அன்று விளக்கேற்றிய கையோடு கீழே வந்தவள் பரமேஸ்வரி அறைக்குப் பக்கத்தில் இருந்த பிள்ளைகளின் அறையில் நித்திலனோடு தங்கிக் கொண்டாள்.

அதற்குப் பரமேஸ்வரியோ ஆதித்யனோ ஒன்றுமே சொல்லவில்லை. அவளுக்கும் சில சங்கடங்கள், சங்கோஜங்கள் இருக்கலாம். அதை அவளே கடந்து வரட்டும் என்று விட்டிருந்தனர்.

அடுத்து பழைய வீட்டில் இருந்த அவர்களின் பொருட்களும் அந்த அறைக்கே மாற்றப்பட்டிருந்தது.

“அப்பாக்கு வேலை நிறையக் கிடக்காம். நாங்களும் அம்மாவோடையும் அண்ணாவோடயும்தான் நித்திரை கொள்ளப்போறம்.”

மான்குட்டிகள் இரண்டும் வந்து இவர்களுடன் இணைந்து கொண்டதில் அந்த அறையின் சுவர்கள் மகிழ்ச்சியின் வண்ணத்தைப் பூசிக் கொண்டன.

ஆனால் ஆதித்யன் அறைச் சுவர்களோ கருமையைப் பூசிக் கொண்டது போல் அவனை வெறுப்பாக்கிப் பார்த்துக் கொண்டன.

வேலை அதிகமுள்ள நாள் தவிர்ந்த நாட்களில் மகள்கள் அவனுடன் உறங்குவதுதான் வழக்கம். இதுபோல் தொடர்ந்து நீண்ட நாட்கள் தனியாக உறங்கிப் பழக்கமில்லை அவனுக்கு.

திருமணம் செய்து இருவரை இணைத்துக் கொண்டோம் என்றில்லாமல் மழலை மொழியில் அவன் மனதுக்கினிய இசை மீட்டும் மகள்களையும் அவர்களிடம் இழுத்துக் கொண்டு விட்டார்களே என்று சமயங்களில் தோன்றி விடும் அவனுக்கு. கோபமாக எல்லாம் இல்லை, சிறு செல்லச் சலிப்பு!

ஒருமாதம் முடிந்தும் அந்த நிலை மாறவில்லை என்றதும் சாதனாவுடன் பேசவேண்டும் என்று அவன் முடிவெடுத்திருந்த நேரம் அவனுக்கு வேலை நெட்டி முறித்தது.

கிழமைக்கு ஒருமுறை செமினார் என்று கொழும்பு செல்ல வேண்டி இருந்தது. இதில் கெஸ்ட் லெக்சர்ஸ் எடுப்பதற்காக யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவபீடத்திற்கும் இரண்டு மூன்று முறை சென்று வந்திருந்தான்.

வழமையாக இப்படி அழைப்பு ஏதும் வந்தால், சென்று தனக்குத் தெரிந்ததை நான்கு மாணவர்களுக்கு சொல்லிக் கொடுக்கும் ஆசை இருந்தாலும் தான் இன்றி சிரமப்படும் தாய், பிள்ளைகளை நினைத்து வாய்ப்பை மறுத்திடுவான்.

ஆனால் இப்போது அந்தக் கவலை இல்லையே! தன்னிடத்தில் நின்று தன் குடும்பத்தைக் கொண்டு நடத்த… தனக்குத் தோள் கொடுக்கவென்று ஒரு துணைவி வந்துவிட்டாளே என்று அவளுக்குத் தேவையான எல்லாவற்றையும் அமைத்துக் கொடுத்துவிட்டு இவன் பறந்து திரிந்தான்.

மான்குட்டிகளும் அம்மா அம்மா என்று தங்கள் உலகுக்கு வந்த புது உறவைக் கொண்டாடித் திரிந்ததில் தந்தையைப் பெரிதாகத் தேடவில்லை.

நிலன்தான் அவனை அதிகம் தேடினான். இடையிடையில் வீட்டில் ஆதித்யன் நிற்கக் கிடைத்தால் “அப்பா!” என்ற சொல் கீறு விழுந்த ரெக்கோர்டிங்காக வீடு முழுதும் ஒலித்துக் கொண்டே இருக்கும். அவனை விட்டு ஒரு இஞ்சி விலக மாட்டான். அதன் காரணத்தால் அவனில்லாத பொழுதுகளில் அவனை அதிகம் மிஸ் செய்வான்.

அவன் வெளி மாவட்டத்தில் தங்கி இருக்கும் போது எவ்வளவு வேலை இருந்தாலும் தினமும் இரவு எட்டு மணி தாண்டி வீட்டுக்கு அழைத்து விடுவான்.

அந்த அழைப்புக்காக லேசாக இருட்ட ஆரம்பித்ததுமே தாயின் ஃபோனை அருகில் வைத்துக் கொண்டு காத்திருப்பான் நிலன். அடித்த முதல் ரிங்கிலேயே அவன்தான் எடுப்பவன் தான் பேச வேண்டியது எல்லாம் பேசிவிட்டு மற்றவர்களுக்குப் பாவம் பார்த்துக் கொஞ்ச நேரம் கொடுப்பான்.

அப்படி சாதனாவின் கையிலும் இரண்டு மூன்று நிமிடம் ஃபோன் கிடைக்கும்.

அந்த நேரத்தில் வீட்டின் தேவைகள், பிள்ளைகளின் தேவைகள், பள்ளியில் அவர்களின் நடவடிக்கைகள் என்று பொதுவானவை சில பகிரப்படும் அவ்வளவே!

இப்படியே மூன்று மாதங்கள் கடந்து விட்டிருந்தன. பாதிக்குப் பாதி வீட்டிலும் வெளியிடத்திலும் என்று ஆதித்யனின் நாட்கள் ஓடியிருக்க, சாதனா வீட்டோடு நன்றாகப் பொருந்தி விட்டாள்.

வீட்டின் தேவைகள், பணப் பரிமாற்றம் என்று ஆதித்யனும் பரமேஸ்வரியும் பங்கிட்டு செய்ததை இப்போது இவள்தான் ஒற்றையாளாகப் பொறுப்பேற்றிருக்கிறாள்.

சில இடங்களில் அவள் பிழை விட்டாலும் ஆதித்யனும் சரி பரமேஸ்வரியும் சரி அவளைக் கடிந்து கொள்வதே இல்லை. விழுந்து எழக் கற்றுக் கொள் என்று தட்டிக் கொடுத்து செல்ல, இவளுக்கும் அவர்கள் மத்தியில் எந்த சங்கோஜம் ஏற்படுவதில்லை. வாழ்க்கை நிறைவானதாகவே உணர்வாள்.

சாவகச்சேரியில் இருந்து மகனின் உயிரைக் காக்கவென்று அவனைப் பிடித்துக் கொண்டு இந்த ஊருக்கு வந்த அன்று யோசித்திருப்பாளா, இந்த ஊர் தனக்கு இப்படி ஒரு அதிசயத்தை நிகழ்த்தக் காத்திருக்கிறது என்று!

ஆனால் நடத்தி விட்டதே! ஒற்றைப் பிள்ளையை ஆளாக்கும் வழி தெரியாது நின்றவள் கையில் இன்னும் இரண்டு பிள்ளைகளைக் கொடுத்து அவர்களையும் கண்ணுக்குள் வைத்துப் பார்த்துக்கொள் என்று பொறுப்பைக் கொடுத்திருக்கிறது.

கணக்குக்குப் பார்த்தால் சுமை கூடி விட்டது போல்தான். ஆனால் இவளுக்கு சுமக்கும் உணர்வே இல்லை. இவளையும் சேர்த்து ஒருவன் சுமக்க இருக்கிறான் என்கையில் எங்கிருந்து சுமை தெரியும்?

மனநிறைவில் எதிர்ப்படும் தார் சாலைக்கும் சாலையோர மரங்களுக்கும் கூட மனதார நன்றி கூறிக் கொண்டே பாடசாலையை அடைந்தாள்.

நேரம் சரியாக ஒன்று இருபத்தைந்து. இன்னும் பள்ளிக்கூடம் முடிய ஐந்து நிமிடங்கள் இருந்தன. பாடசாலை நேரம் முடிவதற்கான இறுதி மணியோசை ஒலித்து, அதைத்தொடர்ந்து பாடசாலைக் கீதமும் இசைக்கப்பட்டு முடிந்ததும் பிள்ளைகள் ஒவ்வொருவராய் வெளியே வந்தனர்.

“ஸ்கூல் முடிஞ்ச உடன எல்லாரோடையும் ஓடி அடிபட்டு முந்தி வரக்கூடாது. அதே மாதிரி எல்லாரும் போனாப் போலயும் வெளிக்கிடக் கூடாது. கொஞ்சம் கிரவுட் குறையிற நேரம் மற்றப் பிள்ளையளோட சேர்ந்து வரோணும். வெளியில கிரவுடா இருந்தா கொஞ்சம் நிண்டு வெயிட் பண்ணி அம்மாவோ அப்பாவோ வெளியில நிக்கிறதைக் கண்டாத்தான் வெளியில வரோணும். கொஞ்சம் வளரும் மட்டும் நாங்கள் இல்லாம தனியா ரோட் குரோஸ் பண்ணக் கூடாது.

மயூ, மகி நீங்க ரெண்டு பேரும் உங்கட கிளாஸ் பிள்ளையளோட வெளிக்கிட்டு வெளியில வந்து, நிலன் அண்ணான்ர கிளாஸ் அடில நிண்டு அவரோட சேர்ந்து வரோணும் என்ன?” தந்தையானவன் எடுத்த பாடத்தை மூவரும் தட்டுவதே இல்லை.

இன்றும் அதன்படி மான்குட்டிகள் இருவர் கைகளையும் பிடித்தபடி நடுவே நிலன் நடந்து வர, தொலைவில் நின்று பார்த்த சாதனாவின் இதழ்களில் பூரிப்பான புன்னகை.

பொறுப்புகளைக் கொடுத்தாலே சிறுவர்கள் பொறுப்பான பிள்ளைகளாக மாறி விடுவார்கள் என்ற தத்துவத்தை ஆதித்யன் எங்கு படித்தானோ தெரியவில்லை.

நித்திலன் இருக்கும் இடத்தில் மகள்கள் இருக்க நேர்ந்தால் அவர்களின் பொறுப்பு அவனது என்று நன்றாகப் பதிய வைத்திருக்க, அவனும் தன்னை நம்பி ஒப்படைத்த பொறுப்பை சிறப்பாக செய்யவென்று ஆனது எல்லாம் செய்தான்.

காலையில் அவர்கள் வகுப்பு வரை சென்று விட்டு விட்டுத் தன் வகுப்பிற்கு செல்வது. இடைவேளை நேரம் சாப்பாட்டுப் பெட்டியுடன் ஓடி வந்து அவர்களுடனே உண்ணுவது. பாடசாலை நிறைவுற்றதும் ஓடிச் சென்று அவர்கள் வகுப்பறை வாசலில் நின்று அவர்களைக் கூட்டிக் கொண்டு வருவது என்று கண்ணும் கருத்துமாக அவர்களைப் பார்த்துக் கொண்டான்.

error: Alert: Content selection is disabled!!