அத்தியாயம் 29, 30 & 31

  • நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.

    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

ரோசி கஜன்

Administrator
Staff member
Nov 11, 2018
1,719
1,113
113

திட்டமிட்டபடியே, வெள்ளி காலை புறப்பட்டு டொரோண்டோ வந்தவர்கள் மறுநாள் காயுவின் அன்னையின் இறுதிக்கிரிகைகளை நெருங்கிய உறவுகளோடு முடித்துவிட்டு, அடுத்தநாள் காலையில் நியுயோர்க் புறப்பட ஆயத்தமானார்கள்.

“பத்துமணி போல சாப்பாடு கொண்டு வருவினம், சாப்பிட்டுப்போட்டே போகலாம் அத்தான்.” என்றாள், காயுவின் தங்கை.

"அதெல்லாம் தேவேல்ல சுயோ, சின்னாக்களோட போறது நேரத்துக்கே போனா நல்லம்."

"அதும் சரிதான், இன்னும் கொஞ்ச நேரம் தானே, சாப்பாடு வர கட்டிக்கொண்டு போங்க. இந்த நேரத்தில வெளில சாப்பிடுறதும் ஏலாது." சுயோ சொல்ல, "அதான் தம்பி" என்றபடி வந்த சரசு,"ம்ம் சரி." என்றவனருகில் அமர்ந்து கொண்டார்.

தமக்கையின் மரணம் அவரை நன்றாகவே உலுக்கி விட்டிருந்தது.

"சாகிறா வயதா எண்டு அழவும் முடியேல்லயே! இளம்பிள்ள காயு, அவளையே கொண்டு போன கடவுளிட திருவிளையாடல் இது எண்டு எடுக்கிறதா? கண்ணில்லாக் கடவுள் செய்யிற கொடுமை எண்டு எடுக்கிறதா தெரியேல்லயே!" புலம்பியபடி இருந்தவர் மிகவும் சோர்ந்திருந்தார்.

"தம்பி...நான் முப்பதியொண்டுவரைக்கும் நிண்டு போட்டு வரலாம் எண்டு நினைக்கிறன்; உங்களுக்குப் பிரச்சின இல்லையே!" தளர்வும் யோசனையுமாகக் கேட்டார்.

பூபாலன் இதைக் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை.

“உன்ர பிள்ளைகளக் கவனிக்க ஆள் இல்ல எண்டு நீ யோசிக்கவே வேணாம் ராசா; இனி நான் உன்னோட தான் இருப்பன்.” என்று, அவர் சொன்ன போது உண்மையில் பெரும் ஆறுதல் அடைந்திருந்தான். நல்ல சுகதேகியான சரசுவின் துணையோடு பிள்ளைகளை வளர்க்க முடியும் என்று முழுமையாக நம்பிக்கையும் கொண்டிருந்தான்.

இப்போது ஏற்பட்டது எதிர்பாராதது தான். இருந்தாலுமே எட்டுச் செலவு முடிய வருவார் என்று எண்ணியிருந்தான். இப்போதுதான் பிள்ளைகள் இருவருமே அவரோடு கொஞ்சம் சேரத் தொடங்கியிருக்கிறார்கள். இடையில் இல்லை என்றால்? முதலில் இருந்து ஆரம்பிக்க வேண்டுமே! அதுமட்டுமா?

கயல் இலங்கை செல்ல வேண்டிய நாள் கண் மூடித் திறக்கையில் வந்துவிடுமே! என்ன செய்யப் போகிறானோ? அதுமட்டுமின்றி, கயல்விழியின் அம்மம்மா கதைத்ததும் நினைவில் வந்திட்டு.

அவன் பார்வை, சற்றே தள்ளியிருந்த சமையலறைக்குள் நின்று பிள்ளைகளுக்குப் பயணத்தில் வேண்டிய உணவுகளை எடுத்து வைத்துக் கொண்டிருந்த கயல்விழியில்.

அவள் வேலையில் கவனமாகவிருந்தாள்.

“நீங்களுமே செலவு மட்டும் சரி நிண்டு போட்டுப் போறது நல்லம். இங்க இந்த முறதழைகளை எல்லாம் பாக்கவா முடியும்? நினைச்சதும் வந்து போறதும் ஒரே சிக்கல். அதான் ஒரேதா நிண்டுபோட்டு வர நினைச்சன். அங்க அந்தப் பிள்ள கயலுக்கும் வேலை. சின்னாக்களோட சமாளிக்க ஏலுமா? இல்லை எண்டா இப்பவே வரட்டோ!" மீண்டும் சரசு தான்.

“பிரச்சினை இல்ல சித்தி..." வேறுவழியில்லாது ஆரம்பித்துவிட்டு எப்படித் தொடர்வதென்று யோசித்த பூபாலன் பார்வை மீண்டும் கயல்விழியிடம்.

“பரவாயில்ல ஆன்ட்டி, நாங்க சமாளிச்சுக் கொள்ளுறம், நீங்க முப்பதியொண்டு முடிய வரலாம்." வேலையில் கவனமாக இருந்தவள் இங்கே கேட்டுக் கொண்டுதான் நிற்கிறேன் என்றாள்.

“அப்பச் சரியம்மா, நீர் எல்லாம் பாப்பீர், சின்னவனப் பிராக்காட்டத்தானே ஆள் வேணும்." என்ற சரசு, என்னவோ கயல்விழி இங்கேயே தொடர்ந்து இருக்கப் போவது போலவே கதைத்தார்.

பூபாலன் மனதுள் எரிச்சல் உருவாகிற்று. தம் முக்கிய தேவைகளுக்கு இன்னொருவரில் தங்கியிருக்க நேர்ந்தால்.... பார்வை அங்கு சட்டத்துள் அடங்கியிருந்தவளுள்.

‘உன்ர புருசனுக்கும் பிள்ளைகளுக்கும் இப்பிடியொரு அநாதரவான நிலை வரும் எண்டு நினைச்சே இருக்க மாட்டியல்லா?’ கண்கள் கலங்கிற்று அவனுக்கு.

“அது எல்லாம் சமாளிக்கலாம் ஆன்ட்டி யோசியாதீங்க!” என்ற கயலிலும் கோபமே உருவாகிற்று.

“நீங்க முப்பதொண்டுக்கு வருவியள் எல்லா? அப்பவே கூட வாறன் என்ன ஆச்சி?" அவர்கள் இருவருமே கதைத்து முடிவெடுத்துக் கொண்டார்கள்.

“உமக்குப் பிரச்சினை இல்லையே? பிறகு உம்மட அம்மம்மா அங்க நெஞ்சிடியோட இருப்பா அதான்." குடித்த தேநீர் கோப்பையை அலம்பியடி அடிக்குரலில் கேட்டவனை, முறைத்தாள் கயல்.

“ஒட்டுக் கேக்கிறது சரியான நல்ல பழக்கம்.” நக்கலோடு நகர்ந்து, “இந்த பாக்ஸ் காருக்க வச்சு விடலாம்." எடுத்து வைத்தாள்.

“இங்க ஆரும் ஒட்டுக்கேக்கேல்ல. காதுக்க பஞ்சி வச்சிப் போட்டுத்தான் இனி வீட்டில இருக்க வேணும்.” பைகளை எடுத்துக்கொண்டு நகர்ந்தான், அவன்.



சொன்ன நேரத்துக்கு உணவு கொண்டு வந்திருந்தார், இவர்களின் தூரத்து உறவுப் பெண்மணியொருவர்.

நெருங்கியிருந்தவர்களை பிரித்தே தீருவேன் என்று கொரோனா முழு மூச்சாகச் செயற்படுவதன் பயனாய், உணவை வாசலில் வைத்துவிட்டு அழைப்பு மணியை அழுத்திய வேகத்தில் விரைந்து தள்ளிச் சென்று நின்றுகொண்டார்.

"இதென்னக்கா இவ்வளவு?"

"என்ன நீர்? இதே போதுமோ எண்டு யோசிச்சுக்கொண்டு வந்தன். சின்னாக்களுக்கு உறைப்பு இல்லாமல் கிழங்கு ரொட்டி கிடக்குப் பாரும். கொஞ்சம் கொத்தும் செய்தன். சோறு கறிகளும் இருக்கு." என்றவர், “மறக்காமல் அம்மாக்குப் படைச்சிட்டுச் சாப்பிடுங்க. எல்லாத்திலும் எப்பன் எப்பன் (கொஞ்சம் கொஞ்சம்)கிள்ளிப் படைச்சிப்போட்டுக் காக்காக்கு வச்சிருங்க என்ன?"

"ஒரு ரெண்டு கறியும் சோறும் செய்திருக்கப் போதும் கா; விடியவே நல்ல வேலை"

"இதெல்லாம் பெரிய வேலை பாரும்."

"படைச்சதச் சாப்பிடலாம் தானே? அப்பிடித்தான் சித்தி சொன்னவா." பைகளை எடுத்துக்கொண்டே கேட்டாள், காயுவின் சகோதரி.

"ஒவ்வொருவர் ஒவ்வொரு முறை சொல்லுவினம். நாங்க சாப்பிடுறேல்ல. முப்பத்தியொண்டுக்குப் பிறகு சாப்பிடலாம். நீங்க வெளில வையுங்க, காக்கா குருவி சாப்பிடட்டும். விளக்குப் போட மாறக்காதீங்க. தண்ணியும் தேத்தண்ணியோ கோப்பியோ அம்மாக்கு விரும்பினதும் வையுங்க என்ன?" என்றவர் பார்வை, நியூயோர்க் இலக்கத்தகடோடு நின்ற காரில். கறுப்புக் கண்ணாடி போட்டிருந்த காரினுள் இருந்த பூபாலன் அவர் பார்வையில் படவில்லை.

சட்டென்று கொஞ்சம் முன்னால் வந்து நின்றார்.

“சுயோ, உம்மட அத்தார் ஆக்கள் வந்தவே என்ன? செத்த வீட்டு நேரம் வந்திருந்தா பாத்திருக்கலாம். நீங்களும் லங்கா சிறியில லைவ் கூட போடேல்ல!"

"வந்தவே கா..." குரல் கமறியது சுயோக்கு. ‘லைவ் போட்டு? அம்மாவே இல்லையாம் பிறகு என்னத்துக்கு இந்த ஆட்டம்? ஊருக்கு விடுப்புக் கதைக்கிறதுக்கு நாங்க காசு குடுத்துப் படம் போடுறம்’ மனதின் எரிச்சலை மேவி, “அக்கா வந்திருக்கிறா என்ன?” என்று கேட்டவர்கள் இப்போ...? என்றதில் துவண்டிட்டு.

'அக்கா இருந்திருக்க அம்மா இவ்வளவு வெள்ளனப் போயிருக்கா!' கண்களும் கலங்கிற்று.

"ம்ம்... எல்லாம் விதி பிள்ள. நாம என்ன செய்யலாம் சொல்லும்? பிள்ள மகராசி கொஞ்ச நாள் வாழ்ந்தாலும் சிறப்பா வாழ்ந்தவா!" என்றவர், இன்னும் இரண்டடி முன்னால் வந்தார்.



 

Author: ரோசி கஜன்
Article Title: அத்தியாயம் 29, 30 & 31
Source URL: NithaniPrabu Novels-https://nidhaniprabunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.

Shameem @ Sumithra

Well-known member
Nov 24, 2025
745
652
93
Pondicherry
பிள்ளைகள் விஷயத்தில் பூபாலன் படும் பாடு ஒரு விதம் என்றால் கயல் பாடு ஒரு விதம்.. இருவரும் இணைந்து வாழ்ந்தால் நன்றாக இருக்கும் 💜💛.. ஆனால் இருவருக்கும் அப்படி ஒரு எண்ணம் இல்லை..